திங்கள், 1 ஜூலை, 2024

விழாவும் நாமும் … தந்தை பெரியார் …

 

விழாவும் நாமும் … தந்தை பெரியார் …


 பெரியார் பேசுகிறார் ஜுலை1-15-2024

நம் நாட்டு விழாக்கள் இன்று பெரும்பாலும் அர்த்தமற்ற சடங்குகளாகவே இருந்து வருகின்றன. மேலும், இவைகள் பெரும்பாலும் எந்தக் காலத்திலோ, யாருடைய நன்மையைக் கருதியோ, யாராலோ, எதனாலோ ஏற்படுத்தப்பட்டவைகளாக இருக்கின்றனவே ஒழிய, பெரிதும் நம்முடைய முன்னேற்றத்திற்கு ஏற்றனவாக அமைந்திருக்கவில்லை. உதாரணமாக, ஒவ்வொரு விழாவும் மதச் சம்பந்தமானதாகவும், அவை பெரிதும் பார்ப்பான் மேன்மைக்கும் பிழைப்புக்கும் பயன்படத்தக்க ஒரே தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவுமே நாம் காண்கிறோம். அந்தந்த விழாவையொட்டிய சடங்குகளும் பெரும்பாலும் துவக்ககாலம் தொட்டு ஒரே மாதிரியாக இருந்து வருகின்றனவே யொழிய, நாளுக்கு நாள் எவ்வித முன்னேற்ற மாறுதலும் அடைந்து வரக் காணோம். மக்களுடைய அறிவு வளர்ச்சிக்கும், விழாச் சடங்குகளுக்கும் எவ்வித முன்னேற்ற மாறுதலும் அடைந்துவரக் காணோம். முன்பு விளக்கெண்ணெய் விளக்கு என்றால், இன்று காஸ்லைட், எலக்ட்ரிக் லைட்- இதுதான் மாறுதல்.

மேல்நாடுகளில் விழாக்கள்

நான் இதுபற்றிக் கவலை எடுத்துக்கொண்டு, மேல் நாடுகளில் நடக்கும் விழாக்களைப் பற்றியும், அவைகளின் முறைகளைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறேன். அவர்களது விழாக்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது புதிய படிப்பினை இருக்கும். முற்போக்கு உணர்ச்சிப் பெருக்கத்திற்கான வசதியிருக்கும்.

மற்ற நாடுகளில் இம்மாதிரியான விழா நாட்களைக் கண்காட்சி மாதிரி நடத்துவார்கள். அக்கண்காட்சிச் சாலைகளில் பல புதிய கற்பனைகள் மலிந்திருக்கும். வாழ்க்கை வசதிக்கான பல புதிய கண்டுபிடிப்புக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். சுருங்கக் கூறின், கலாசாலை சென்று பல ஆண்டுகள் படித்துப் பெறவேண்டிய அறிவு வளர்ச்சியை அவன் அந்தக் கண்காட்சி மூலம் ஒரு சிலமணி நேரத்திலேயே பெற்றுவிடுகிறான். கண்காட்சி மூலம் புதிய புதிய பொருள்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். தமது வாழ்க்கையையே பொதுமக்களின் நன்மைக்காக அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

விழாக் கண்டு நாம் பெற்ற பயன் என்ன?

அம்மாதிரி பொதுநல உணர்ச்சியே நம்மிடம் இருப்பதில்லை. நம் நாட்டிலும், பெரிய பெரிய பண்டிகைகளும் விழாக்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பழையபடி பல சாமான் கடைகளையும் பல சில்லறை வேடிக்கைகளையும்தான் பார்க்கிறோமே ஒழிய, வேறு ஒன்றும் இல்லை. “என்னப்பா விழாவில் விசேஷம்?” என்று கேட்டால், அவன் என்ன கூறுவான்? நிறையக் கூட்டம் இருந்தது; அலங்காரம் அழகாயிருந்தது; கூட்டத்தில் பலர் நசுக்கப்பட்டார்கள்; புதுவாத்தியக்காரன் நன்றாக வாசித்தான்; வாத்தியத்திற்கு மட்டும் ஆயிரம் ரூபாயாம்” என்று இப்படித்தான் கூறுவார்களே அல்லாது, இந்த விழாவுக்குச் சென்றதால் நான் இன்ன பலன் பெற்றேன். அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட ஆகாய விமானத்தையும், அரைமணி நேரத்திற்குள் 50 கஜம் ஆடை நெய்யும் அதிசயக் கருவியையும் கண்டேன்” என்று கூறமாட்டானல்லவா?

அழகிய அலங்காரத்தாலும், அற்புத வாத்தியத்தாலும் அவனுக்கு ஏதாவது பயன் உண்டா? நம் பெருமை எல்லாம், “நான் ஒரு வருஷத்தில் புரட்டாசி சனிக்கிழமை கூட திருப்பதி செல்லத் தவறியதில்லை.” “ஒரு வருட மேனும் திருவண்ணாமலைத் தீபச் சேவைக்குச் செல்லாமல் இருந்தது இல்லை” என்பதோடு அடங்கிவிடுகிறதேயல்லாது வேறு என்ன இருக்கிறது நாம் பெருமைப்பட? பாடுபட்டுத் தேடிய பணத்தை ரயில்வேக்காரருக்கும், பார்ப்பன அர்ச்சகர், ஓட்டல்காரர் முதலியோருக்கும் அழுவதைத் தவிர, வேறு என்ன பயன் கண்டோம்? தலைமுறை தலைமுறையாக நமது சமுதாய வாழ்க்கை முறை ஒரே அளவில்தானே இருந்து வருகிறது?

“ஒவ்வொரு விழாவும்
மதச் சம்பந்தமானதாகவும்,
அவை பெரிதும்
பார்ப்பான் மேன்மைக்கும்
பிழைப்புக்கும்
பயன்படத்தக்க ஒரே
தத்துவத்தை அடிப்படையாக
வைத்து ஏற்பாடு
செய்யப்பட்டிருப்பதாகவுமே
நாம் காண்கிறோம்”. 

மனிதனும் மிருகமும்

மனிதன் ஒரு காரியத்தை எப்போதும் ஒரே மாதிரி செய்துகொண்டு வருபவன் அல்லவே! மனிதன் பகுத்தறிவு சிந்தனை உடையவனாதலால், அவன் ஓர் வளர்ச்சிப் பிராணி. அதனால்தானே அவன் மிருகங்களுக்கு மாறுபட்டவனாக இருக்கிறான். இருந்தும், நாம் எத்தகைய முன்னேற்றமும் அடையாமல் இருக்கக் காரணம் என்ன? நமது அறிவு வளர்ச்சி, அத்தகைய துறைகளில் செல்லாமல் தடைபடுத்தப்பட்டிருப்பதே காரணமாகும்.
மனிதன் தன் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கச் சிந்திக்க அவனுடைய ஆசாபாசங்களும் வளர்ச்சி அடைகிறது. அதற்கேற்ப அவனது முயற்சியும் வலுக்கிறது. வெற்றியும் பெறுகிறான். இதற்கு அடிப்படைச் சிந்தனையும், அறிவும்தான் காரணம். Progress என்பதும், வளர்ச்சி என்பதும், பரிணாம முன்னேற்றம் என்பதும் இதுதான். எனவே, அறிவுக்கு நாம் சுதந்திரம் கொடுத்தாக வேண்டும். அந்தப் போக்கில் நம்முடைய விழாக்கள் இருக்கவேண்டும்.

( நூல் ஆதாரம் : 1974இல்  பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடான ‘நவமணிகள்’ எனும் நூல் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக