செவ்வாய், 2 ஜூலை, 2024

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பக்தர்களைப் புண்படுத்தவா?

 

ஏடுகளில் வந்தவை எடை மேடையில் : தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பக்தர்களைப் புண்படுத்தவா?

ஆகஸ்ட் 01-15 2019

மஞ்சை வசந்தன்

அறிவுடையவனை அறிவாளி, கொள்ளை அடிப்பவனை கொள்ளையன், போராடு கின்றவனைப் போராளி என்பது போல,  தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்களும் காரணத்துடன் கூடிய தத்துவ வரிகளே!

காரணமின்றி ஒரு செயல் செய்கிறவனை பைத்தியக்காரன் என்றுதானே அழைப்போம்! சர்வசக்தியுள்ள கடவுள் என்றால் அதைக் காப்பாற்ற பூட்டு போடுவதேன்? அதைக் கடத்திச் செல்கிறான் என்றால் அதற்குச் சக்தியில்லையென்றுதானே பொருள்? அப்படிச் சக்தியில்லாத ஒன்றைக் கடவுளாகக் கற்பித்தவன் முட்டாள்தானே?

இப்படிப்பட்ட மூடத்தனத்தை சுயநலத்திற்காக ஒருவன் பரப்புகிறான் என்றால் அவன் அயோக்கியன்தானே?

கடவுளுக்காக பெற்ற பிள்ளையை பலி கொடுக்கிறான்; கடவுள் பெயரால் மோதிக்கொண்டு, வெட்டிக் கொண்டு சாகிறான் என்றால் அவன் காட்டுமிராண்டிதானே! இவையெல்லாம் சரியென்றால், பெரியார் சொல்வதும் சரிதானே?

ஆனால், ஒரு பார்ப்பன ஏடு, பக்தர்களை பெரியார் புண்படுத்துகிறார் என்று எழுதியுள்ளது.

பிராமணன் என்று ஒருவன் தன்னைக் கூறிக் கொண்டு பூணூல் போட்டுக் கொள்கிறான் என்றால், மற்றவர்களை அவன் சூத்திரன் என்று இழிவுபடுத்தும்போது மற்றவர்கள் மனம் புண்படாதா? மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் பூணூலை அவன் அகற்றாமல் அணிவது சரி; உள்ளதை உள்ளபடி கூறினால் அது தப்பா? சிந்திக்க வேண்டாமா?

நீதிமன்றத் தீர்ப்பு

பெரியார் சிலையின் அடியில் உள்ள கடவுள் பற்றிய வாசகங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன தெரியுமா?

தந்தை பெரியார் சிலையின் அடிபீடத்தில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை எதிர்த்து, துணை மேயராக இருந்த டி.ஜி.கிருஷ்ணசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போட்டிருந்தார்.

11.10.1973 பகல் 1:30 மணியளவில் ‘ரிட்’ மனுவை அனுமதிப்பதா இல்லையா என்பது பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது-.

நீதிபதி மனுதாரர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டபடி இவ்வாசகங்கள் பொது ஒழுக்கத்தைப் பாதிப்பதாகக் கருத இடமில்லை என்றும் இ.பி.கோ 295-25(1) பிரிவின் கீழ் இது வராது என்று சுட்டிக்காட்டி ரிட் மனுவை தள்ளுபடி செய்தார்.

பெரியார் தந்த விளக்கம்:

‘‘கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள்; துள்ளிக் குதிக்கிறார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள். பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகப் பூச்சண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரச்சார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான்.

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே, நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டும்? “உண்டாக்கியவன் முட்டாள்’’ என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே, நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா?

கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்? ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு; அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். “அன்பும் கருணையும், ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்’ யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான மக்களை, ஆண்களை, பெண்களைக் கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும், விபசாரம் செய்ததாகவும், நடப்பில் நடத்திக்காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர்கள் அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு, இதற்கு இரையாகிறவர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்குகிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன்.

இப்படி நான் எழுதுவதில் “சிலர் மனம் புண்படாதா? என்று கேட்கலாம். அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்!

ஏனெனில், எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத்தைத்தான், மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிக மிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, அய்ந்து தலை, ஆறு தலை, ஆயிரம் தலையும் அவை போன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை_மனிதன், உடல்_மிருகம் முதலிய உருவங்கள் கொண்ட சிலைகளையும் வணங்குகின்றான் என்றால் இது முட்டாள் _ காட்டுமிராண்டித்தனமானது அல்லவா என்றுதான் கேட்கிறேன்.

கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான். மற்றவனைக் கொன்றான். மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான். பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன் என்று விளக்கினார் பெரியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக