சனி, 26 டிசம்பர், 2015

ஆபாச சரஸ்வதிக்கு ஆண்டு தோறும் பூசையா? - தந்தை பெரியார்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது. அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது- மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகின்றது. அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைபட்டபோது, வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள், எனவே சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் கூடி பார்ப்பனப் புராணப்படி மொத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமான தாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு,படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவை-0களையும் தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்-களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியக்-காரர்கள் வாத்தியக்கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவரும் அவரவர் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும் போறாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றையதினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜைகள் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கிறார்கள். அதுபோலவே புத்தகங்களையும் பொன் சிலையும் கிழிந்த காகிதக்குப்பை-களையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கின்றார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க்கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம்.
பூஜைக்குப் பயன் உண்டா?
வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் ஒழுக்கத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையி-லேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்கு-மானால் பூஜை செய்பவர்களை தற்குறிகளா-கவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்-களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்விவான்களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்றவர்-களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!
-ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல்வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜு ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப்பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர்களும் கணக்கு பார்ப்பதே இல்லை.
- குடிஅரசு - சொற்பொழிவு -20-10-1929
உண்மை இதழ்,16-31.10.15

வியாழன், 24 டிசம்பர், 2015

பெரியார் எனும் கல்வியாளர்!


ஏன் என்று கேள்வி கேட்பதிலிருந்தே கல்வி கற்றல் தொடங்குகிறது

- பூ. மணிமாறன்

பாவ்லோ பிரையரின் கல்விச் சிந்தனைகள் தந்தை பெரியார் எனும் கல்வியாளரை பளிச்சென்று அடை யாளம் காட்டுபவை. பெரியாரைப் பற்றிய கட்டுரையில் இந்த இடத்தில் பாவ்லோ பிரையரை நான் கொண்டு வரக் காரணம், வெறும் கல்விச் சிந் தனையாளர் மட்டுமே அல்ல அவர்; பெரியாரைப் போலவே அவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்ககாகத் தங் களது இறுதிமூச்சு வரை பேசினார், அவர்களுக்குக் கற்பித்தார் என்பதுதான்.
பெரியாரும் பிரையரும்
கல்வி என்பது வெறும் பாடத்தை மட்டுமே படிப்பதல்ல; உலகை, மக்களை, தமது சூழலை, இயற்கையை, இருத்தலைக் கற்பித்தலும் கல்வியே. ஏன் என்று கேள்வி கேட்பதிலிருந்தே கல்வி கற்றல் தொடங்குகிறது எனும் முறைமையையே பெரியாரும் பிரை யரும் பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். பாவ்லோ பிரையர் உள்ளிட்ட அனைத்து விடுதலைக் கல்வியாளர்களையும் போலவே பெரியாரும், மக்கள் அனைத்து அடிமைத்தளைகளிலிருந் தும் விடுதலை அடைவதற்கான வழி முறை கல்வி என்றே வலியுறுத்து கிறார். ஆனால், நமக்குக் கொடுக்கப் படும் இன்றைய கல்வியானது சிந்தித் தலுக்கு எதிராகவே உள்ளது. சிந் தனையை மறுக்கும் விதமாகவே கல்விமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலை மாற்றியமைக்கும் புள்ளியில்தான் பெரியாரும் பிரை யரும் தங்களது பணியினைத் தொடங்குகின்றனர்.
பெரியார் கல்வி நிலையங்களின் வழி தன்னை வளர்த்துக்கொண்டவர் அல்ல. நான்காவது வரை மட்டுமே அவர் படித்ததை அவருடைய வர லாறு நமக்குச் சொல்கிறது. அப்போதும் கூடப் படிப்பு வரவில்லை என்றே அவருடைய ஆசிரியர்கள் சொல்லியி ருக்கின்றனர். தொடர்ந்து, வணிகத்தை நோக்கி அவரை அவருடைய குடும்பத் தார் நகர்த்தியிருக்கின்றனர். பின் எங் கிருந்து பெரியார் கல்வியைப் பெற்றார்? அலைந்து திரிந்தே அவர் கல்வியைப் பெற்றார். அப்படிப் பெற்ற அறிவைத்தான் மக்களிடம் பரப்பினார்; கல்வியாக்கினார்.
பெரியார் தனது கருத்துக்களுக்கு என்றைக்கும் இறுதி வடிவம் கொடுத்த வரல்ல. அவர் உரையாடல்களில் மிக முக்கியமான வேண்டுகோள், தனது எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்க வேண்டாம்; சிந்தித்து சரியெனப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் கூறியது.
முரண்பட்ட கூறுகள்
நமது மரபுரீதியிலான கல்வி முறை, ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்விமுறை, நமது இந்திய அரசு நடைமுறைப்படுத்திவரும் கல்விமுறை எல்லாவற்றிலுமே பெரியார் சில முரண் பட்ட கூறுகளைக் காண்கிறார். அவற்றில் சில விஷயங்களை அடையாளப்படுத் தவும் செய்கிறார். 1. சமூகங்களிடையே கல்வி சமமாகச் சென்றடையவில்லை; ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர்; 2. சரி, படிக்கும் வாய்ப் புப் பெற்றவர்களாவது அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் எனச் சொல்ல முடிவதில்லை; 3. எந்தத் துறை சார்ந்த படிப்பானாலும் மூடநம்பிகையுட னேயே புகட்டப்படுகிறது. பெரியார் கல்வி தொடர்பாகப் பேசிய/எழுதியவற்றில் அதிகம் குறிப்பிடும் குறைகள் இவை.
சரி, இப்போது பாவ்லோ பிரையர் கல்வி தொடர்பாக வரையறுக்கும் சில அளவுகோல்களைப் பார்ப்போம். ஒன்று, இருக்கிற சமூக அமைப்புக்குத் தக்கவராக மனிதர்களை மாற்றுதல் அல்லது இருக்கிற ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பைக் கவிழ்த்து, முற்றிலும் மாற்றி மனிதரின் விடுதலைக்கு வழிவகுப்பது ஆகியவை மட்டுமே கல்வியாக இருக்க முடியும். இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை யிலிருக்கும் கல்வி என்று ஒன்று இல்லவே இல்லை என்கிறார் பிரையர். கல்வியில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக் கிறது என்கிறார்.
கல்வியும் அரசியலும்
இந்திய அரசியலில் அதைச் செயல் படுத்திய மிகச் சிலரில் பெரியாரும் ஒருவர். அரசியல் அதிகாரத்தை அடையும் வழியாகவே கல்வியை பெரியார் வலியுறுத் துகிறார். மனிதர்கள் இவ்வுலகில் சக மனிதர்களுடன் தொடர்ச்சியாக தேடல் தொடங்குவதன் விளைவே அறிவு உற்பத்தி ஆகிறது என்கிறார். அறிவு என்பது அறிவாளிகளால் அறிவற்றவர் களுக்கு அளிக்கப்படும் வரம் என்று நாம் பார்ப்பது, கற்பவர் மீது அறியாமை யைச் சுமத்தும் ஒடுக்குமுறையாகவே அமையும். இம்முறையில், அறிவையும் கல்வியையும் தேடலாக அணுகும் முறை ஒழிக்கப்படு கிறது. ஆனால், பெரியார் வழிக் கல்வி யானது பாவ்லோ பிரையர் சொல்லும் கல்வி வரையறைகளோடு அனுசரித்துப் போவது.
ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது பிரச்சினையை எடுத்துக்கொண்டு, ஆரோக் கியமான கலந்துரையாடல் வழியாக இலக்கு மாறாமல் அடுத்தடுத்த கட்டத் துக்கு முன்னேறிச் செல்வதே பிரையர் முன்வைக்கும் உரையாடல். கூடவே, எழுதுதல், வாசித்தல், மறுவாசிப்பு செய்தல், எழுதியதை மீண்டும் திருத்தி எழுதுதல் ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தவர் பாவ்லோ பிரையர்.
மவுனமும் மனித விரோதமே
மனித இருப்பு எப்போதும் மவுனமான தாகவே இருக்க முடியாது. உலகையும் சமூகத்தையும் மாற்றி அமைக்காத பேச்சும்கூட மவுனமே. சமூக அக்கறை யுடன் பேசுவது என்பதோ, சமூகத்தை மாற்றி அமைப்பதோ ஒரு சில மனிதர் களின் தனிமனித உரிமையல்ல. அது ஒரு ஒட்டுமொத்த சமூக உரிமை. ஆகவே ஒரு மனிதனின் பேச்சு ரிமையைப் பறிப்பது - அதாவது அவன் எந்த ஒரு காரணத் தினால் பேச முடியாத நிலைக்குத் தள்ளப் படுவதும் - மனித விரோதச் செயலே. ஆகையால்தான், பெரும்பான்மை யான மக்களை ஒடுக்கும், ஏற்றத் தாழ்வான சமூக அமைப்புக்குள் பெரும் பாலும் உரை யாடல்கள் நிகழ்வதில்லை. ஆகை யால்தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் முதலில் மக்களைக் கேள்வி கேட்கவைப்ப தையே பிரதான கல்வியாக நினைக்கின்றனர்.
உலக அளவில் கல்வி முறை என்பது ஆதிக்க சக்திகளுக்கு உரிய வையாக உள்ளதைக் கண்டு வெகுண் டெழுந்தவர் பாவ்லோ. பெரியார் இந்தியக் கல்வி முறையில் ஆதிக்கத் தின் இடத்தை சாதி ஆக்கிரமித் திருப்பதற்கு எதிராகக் கிளர்ந்தெழு கிறார். கல்வி, சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத் தளங்கள் என அனைத் திலும் மாற்றுகளைத் தேடியவர் பெரியார். தனது கருத்துகளே தனக்குப் பின் வரும் காலத்தில் பிற்போக் கானவை என ஒதுக்கத்தக்கதாகப் போய்விடும் எனக் கூறி, முற்போக் கான மாற்றுகளை முன்மொழிந்தவர். கல்வி என்பது எந்த ஒரு விஷயத் தையும் திணிப்பது என்பதை விடுத்து, ஏற்கெனவே மக்கள் மத்தியில் கடவுளின் பெயரால், மதத்தின் பெய ரால், சாதியின் பெயரால் பண்பாட்டுக் கூறுகளின் பெயரால், பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆதிக்கக் கருத்தாக்கங் களிலிருந்து ஒருவரை விடுவித்து நிர்வாணமாக்கு வதே சரியான கல்வியாகும் என்று நினைத்தவர். எத்தகைய முன்முடிவுக ளோடும் பிணைத்துக்கொள்ளாமல், ஒன்றை அணுகும்போது மட்டுமே ஒரு சரியான முடிவுக்கு வர முடியும்; எனவே, முன்முடிவுகளைத் துறந்து நிர்வாணமாக்கிக்கொள்வது கற்றலின் முதற்படி என்று நினைத்தவர். பெரி யாரியக் கல்வியில் பற்றற்றுப்போவது முக்கிய மானது. பற்றற்றுப்போதலே அனைத்திலுமான விடுதலைக்கு வழி வகுக்கிறது!
- பூ.மணிமாறன்,
பெரியாரிய எழுத்தாளர்,
மனித உரிமை ஆர்வலர்
நன்றி: ‘தி இந்து’ 24.12.2015
-விடுதலை,24.12.15

புதன், 23 டிசம்பர், 2015

சிவராத்திரியின் யோக்கியதை - தந்தை பெரியார்


சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்பேல சைவர் கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரதவிழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ள படியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன் றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் பேன்ற வயிற்றுக்கோளாறு உண்டாகும்.
ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமைப்பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளே அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு-பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!
முன்னெரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலைமுதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில் லையாம். இரவு நெருங்கும் நேரமான தால் விலங்குகள் நடமாட்டம் ஆரம் பித்தது. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்கு கிறானா என்று பார்த்துகொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக்களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலை களைக் கொத்து கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழை யின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.
(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டுசென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம் தான்) அவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல் , அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது பேல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிடவேண்டும் என்ற எண்ணமில்லாமல் பேனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற் றாம். புலியை விரட்ட மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச் சனை செய்ததுபேல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந்தானாம்.
அடுத்த கதை
ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயேக்கியனும் ஒழுக்கக் கேடனும் ஆவானாம். இதனால் ஊரை விட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்த கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன் பலகாரங் களை மூட்டை கட்டுவதைக் கண்டு. ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப்பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களை பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்க சிலைக்கு தீபாராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப் பட்டதும் நேராக சிவலோகம் சென்றா னாம். சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதே? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை.
மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வெருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரிகள் விரதங் களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல் , மனித ருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்று தான் நாம் கேட்கின்றோம். இந்தபாழும்அர்த்தமற்ற-பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைகளுக்கும், உற்சவத் திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும் பணத்தையும் விரயப் படுத்துவது மக்களின் அறியாமையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகி தர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.
-விடுதலை,15.2.15

செவ்வாய், 22 டிசம்பர், 2015

பார்ப்பான் உருவில் கடவுள்


தோழர்களே! நான் கூறுகிறேன்! ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.
சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி.
பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ண மாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடையாது.  பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும்  பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள்.
பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப் பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்;
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித் திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக்கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள்ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?
எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ  இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத் தனையும் பித்தலாட்டமென்பதுவும் புலனாக வில்லையா?
-விடுதலை,11.7.14

பிராமணன் வந்தானா? (சித்திர புத்திரன்)


குடித்தனக்காரன்:- அய்யா ஆ ஆ ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கின்றது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளை குட்டிகளுக்கு புண்ணி யமாகும்
சித்திரபுத்திரன்: அய்யய்யோ ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?
குடி: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா !
சித்தி: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணன் இருக்கின்றார்களா?
குடி: ஆம் அய்யா, காலையில் ஒரு பிரா மணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொண மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில்தான் போனார்.
சித்தி: சரி, சரி, உங்க வீதி வீடுகள் வெந்து போனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.
குடி: என்ன அய்யா, எனக்கு தெரிய வில்லையே !
சித்தி: இது தெரியாதா உனக்கு; பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்ட தில்லையா?
குடி: நான் கேட்டதில்லையே !
சித்தி: அட பயித்தியமே, பிராம ணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில தூக்குகிறார்களே ! அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய்விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.
குடி: அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர்களை அந்த வீதியிலேயே நடக்க விட்டு இருக்கமாட்டேனே, ஏமாந்து போய் விட்டேன்.
சித்தி: அது மாத்திரமா! _ பிராமணாள் வாயிலும் நெருப்பு வயிற்றிலும் நெருப்பு: இது உனக்கு தெரியாதா?
குடி: தெரியவில்லையே! சற்று தெரியும்படியாய் சொல்லுங் களேன்.
சித்தி: பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய்ப் போய்விடுவாய் என்று சொல்லுகின்றார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்பதால்தானே அவர்கள் அப்படிச் சொல்லுவது. தவிரவும், பிராமணாள் நம்மைப்பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின் றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவ தாயிருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லாவிட்டால் முடியுமா?
குடி: இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு. இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழுவது. இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவதானால். இந்த நாலு பிராமணாளாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய்விடும் போலிருக்கிறதே.
சித்தி: பின்னே தெரியாமலா நம்முடைய பெரியவாள் பிராம ணர்களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின் றார்கள்.
குடி: ஓ ! ஹோ !! இதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல்லு கின்றார் களா ! சரி இனி புத்தியாய் பிழைத்துக் கொள்ளுகிறேன். இந்த நெருப்பை எப்படியாவது அணைத்து விடுங்களய்யா.
குடிஅரசு 18.3.1928

தந்தை பெரியார் பொன்மொழி
நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங் களோடு இருக்கிறவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகுநாளாக இருந்து வருபவர்கள்;
இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டியவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமான மானவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்.

ஒரு பார்ப்பனரின் கணிப்பு!
தீண்டாமை என்பது சமய சம்பந்தப்பட்டிருக்கிறது. அதை சமய சம்பந்தத்தினால் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகிறேன்.
நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்பொழுது சங்கராச்சாரி பீடத்தில் அமருகின்றாரோ அப்பொழுதுதான் தீண்டாமை ஒழிந்த தாக கருதமுடியும்.
-காகா கலேல்கார்
ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய புதிய மனிதன் என்ற நூல்


.-விடுதலை,11.7.14

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பயிற்சிப்பள்ளி மாணவ ஆசிரியர்களுக்கு பெரியார் அறிவுரை


பயிற்சிப்பள்ளி மாணவ ஆசிரியர்களுக்கு பெரியார் அறிவுரை
திருச்சி-புத்தூர் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மாணவ ஆசிரியர் இலக்கிய மன்றத்தின் சார்பாக மேற்படி பள்ளி நிறுவனர் தந்தை பெரியார் அவர்களின் 77-ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு 22.9.1955 ஆம் தேதி காலையில் நடைபெற்ற பாராட்டுக்கூட்டத்தில் பல பெரியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை புகட்டியும் பேசினார்கள்.
விழாவின் மாலை நிகழ்ச்சியானது பெரியார் அவர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டு சீரும் சிறப்புமுறக் கொண்டாடப்பட்டது. பெரியார் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை நிகழ்த்தினார்கள்.
தேநீர் விருந்துக்குப்பின் நாடகம்
மாலை 4.30 மணிக்கு தேநீர் விருந்தளிக் கப்பட்டபின், தமிழ் வணக்கப்பாடலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. மாணவத் தோழர் ஆறுமுகம் ஆசனப்பயிற்சிகள் செய்து காண்பித்தார். பள்ளி மாணவர் களால், அவ்வையார், பணமும் பண்பும் என்ற இரு நாடகங்கள் திறம்பட நடித்துக் காண்பிக்கப்பட்டன.
பெரியாருக்குப் பாராட்டு
பின்னர் தலைமை ஆசிரியர் கே.பிரம் மச்சாரி எம்.ஏ.எல்.டி., பெரியார் அவர்களின் பெருமைகளை விளக்கி வாழ்த்துரை கூறுகையில், பெரியார் புத்தரைப்போன்று பகுத்தறிவு நிலவ பெரும்பாடுபட்டவர்; அவருடைய கொள்கையைக் கேட்கும் சிலர் பயமும் வெறுப்பும் கொள்கின்றனர். பகுத்தறிவின்மையால் அவ்விதம் நடக்கும் காட்டுமிராண்டிகள் சிறிதளவு அறிவு கொண்டு ஆராய்ந்தாலும் பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கும் முடி வுக்கே வந்து தீருவார்கள்.
அப்படிப் பட்டவரின் பெருமுயற்சியால் நிறுவப்பட்ட இப்பள்ளியின் மூலம் அநேகர் நல்வாழ்வு வாழ வகை கிடைத்திருப்பதை அருமை யான வாய்ப்பென்றே கொள்ள வேண்டும்.
இப்பள்ளி மாணவர்கள் அவருக்குச் செய்ய வேண்டிய கைம்மாறு எல்லையற்றதென் றாலும், அவரவர்கள் தங்கள் கல்வியிலேயே நோக்கத்தைச் செலுத்தி இப்பள்ளியின் நற்பெயருக்கென்று பாடுபட்டு மேன்மேலும் இதுபோன்ற பள்ளிகளையும் இன்னும் ஏற்படுத்த இருக்கும் தொழிற்பயிற்சிப்பள்ளி போன்றவைகளையும் ஏற்படுத்த அவருக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக் கும் முறையில் நடந்துகொள்ள வேண்டு மென்று கேட்டுக்கொண்டு பெரியார் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து நாமெல்லோரும் அவரின் சேவையைப் பெறும் வாய்ப்பை அடைய வேண்டு மென்று வாழ்த்தி பள்ளி மாணவ ஆசிரியர் இலக்கிய மன்றத்தின் சார்பில் பெரியார் அவர்களுக்கு மலர் மாலை சூட்டி வாழ்த்து மடல் வாசித்தளித்தார்.
பெரியார் அறிவுரை
பின்னர், பெரியார் அவர்கள் பேசுகை யில் பள்ளி ஆசிரியர்களும், மாணவர் களும் தமக்களித்த மகத்தான வரவேற்புக் கும், வாழ்த்துக்கூறி பெருமைபடுத்திய மைக்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு, பள்ளி மாணவர்கள் பிற்கால வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறைகளைப் பற்றியும் விளக்கி அறிவுரை நிகழ்த்தினார்கள்.
அன்புள்ள ஆசிரியர்களே! அருமை மாணவர்களே! தாய்மார்களே!
இன்று என்னை என்றுமில்லாமுறையில் ஒரே மூச்சில் உயரத்தூக்கி, வானளாவப் புகழ்ந்து விட்டீர்கள் தினமும் உங்கள் முன்னாலேயே இருக்கிறேன். எண்ணற்ற தடவைகள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டும் இருக்கிறோம். அப்படி இருந் தும், ஏதோ புதிதாக எங்கிருந்தோ வந்த வனைப் போன்று என்னை நினைத்து நான் வெட்கப்படும் அளவில் பாராட்டிப்பேசியும், நாடகங்கள் நடத்தி மகிழ்ச்சியூட்டியும், வாழ்த்துமடல் கொடுத்து வாழ்த்துரைகள் கூறியும் பெருமைப்படுத்தினீர்கள். இதன் முலம் உங்களுக்கு என் மீதுள்ள அன் பையும், ஆதரவையும் தெரிந்து கொள்ள வாய்ப்பேற்படுகிறது. நீங்கள் வாழ்த்திப் புகழ்வதன் மூலம், என்னுடைய ஆயுள் விருத்தியடைவது எப்படியிருந்தாலும், என்னுடைய தொண்டில் மேன்மேலும் ஈடுபடப்போதிய உற்சாகத்தையும் ஊக் கத்தையும் அளிக்கிறது.
கடவுளைப் பற்றிய கருத்துக்கள்
இங்கு நடத்தப்பட்ட நாடகக் காட்சி களில் சிலவற்றை சிலர் விரும்புவர், சிலர் வெறுப்பர், விரும்புகிறவர்கள் இதன் நோக்கங்களின் உயரிய கருத்துக்களைப் பின்பற்ற ஆசை கொண்டவர்கள், வெறுப் பவர்கள் இக்கருத்துக்களை ஜீரணிக்க போதிய மனோதைரியமும், ஊக்கமும் அற்றவர்கள் அவர்கள் தான் கடவுள் இல்லை என்ற சொல்லையும், கடவுள் உண்டு என்ற சொல்லையும் உண்டாக்கிய வர்கள்.
கடவுள் இல்லை என்றோ, உண்டு என்றோ யாரும் கவலைப்பட வேண்டியதே இல்லை. கடவுள் இல்லை என்று சொல்லு வதால் இருக்கும் கடவுள் அழிந்து போகாது. கடவுள் உண்டு என்று சொல்வதால், இல் லாத கடவுளை உண்டு பண்ணப் போவதும் இல்லை. ஏனெனில் கடவுள் என்ற சாதனத்திற்கு அப்பேர்ப்பட்ட குணங்கள் உள்ளதாகக்கூறப்படுகிறது.
எனவே கடவுளைப் பற்றிய விஷயமெல்லாம் அவரவர்களின் சொந்த விஷயம். அந்த கடவுளை ஒருவன் தன்னளவில் உண்டு என்றோ இல்லை என்றோ வைத்துக் கொள்வதில் தடை ஒன்றும் இல்லை.
பொது இடங்களில் கடவுளுக்கு வேலையில்லை
ஆனால், அந்தக் கடவுளைப் பொது வான இடத்தில் கொண்டுவரும்பொழுது தான், அதன் விஷயத்தில் கவலை கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒருவன் உண்மையில் கடவுள்பால் பக்தியும், நம் பிக்கையும் உடையவனாக இருப்பானாகில் அது அவனுடைய சொந்த நலனுக்கே அன்றி பிறருடைய நலனைக்கோரிதான் பக்தியும் நம்பிக்கையும் கொள்ள வேண் டியதில்லை.
அதைப் போன்றே கடவுளிடம் அவநம்பிக்கையும், பக்தி இன்மையும் உடையவன். அதனால் ஏற்படும் கஷ்டங் களுக்கும், கெடுதிகளுக்கும் ஆளாகக் கூடியவன், அப்படி இருந்தும், கடவுள் பக்தர்கள் என்பவர்களோ மற்றவன் கடவுள் இல்லை என்று கூறுகிறானே என்று அலறி அடித்துக்கொண்டு, அதனால் தனக்கு ஏதோ நஷ்டம் ஏற்பட்டதைப்போல் எண்ணிக்கொண்டு கடவுள் பிரச்சாரம் செய்கின்றனர்.
இதனால் என்ன விளங்குகிற தென்றால், உண்மையறியா, பகுத்தறிவற்ற வர்களின் செயல்தான் கடவுள், பக்தி, மோட்சம், நரகம் என்பவைகள் என்ற உண்மைகள் விளங்குகின்றன. எனவே மனிதனிடம் பக்தி வளர வளர மற்றவர் களுக்குகேடு விளைகிறதென்றே கொள்ள வேண்டும்.
மாணவர் கடைப்பிடிக்க வேண்டியவை
மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அருங்குணங்கள் ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை பயத்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருத்தல் முதலியவைகளாகும். இவைகள் நமக்குக் கடவுளை விட மேலானது. இவைகளைக் கொண்டவன், உலகத்தில் போற்றப்படு வான், எல்லாவித செல்வத்தையும் அடைந்த வனாகிறான்.
பிறருக்குத் தீங்கு செய்யாதிருத்தலே ஒழுக்கம்
ஒழுக்கமெனப்பட்டது பிறருக்கு இன்னல் விளைவிக்காமல் இருத்தல், நம்முடைய மனம் நோகாமலிருக்க பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதே போல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும் அதைப்போன்றே பிறர் நம்மிடம் நடந்து கொள்வதைக்கண்டு நாம மனவேதனை அடைவோமாகில், அதைப்போன்றே பிறரிடம் நாம் நடந்துகொள்வது பிறருக்கு கேடு விளைவித்தல் என்பதாகும்.
ஒழுக்கமே முக்கியமாகும் எனவே மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தொழுக வேண்டும். மற்ற வர்க்கு நன்மை செய்யாமல் இருந்தாலும் பாதகமில்லை ஆனால் தீமை செய்யாமல் இருப்பதே மேலாகும்.
பள்ளிக்கட்டுப்பாட்டுக்கு அடங்க வேண்டும்
மற்றும் மாணவர்கள் இப்பள்ளியைப் பொறுத்தமட்டிலும் முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டியது அரசாங்கத் திட்டங் களுக்கு ஏற்ற வண்ணம் எங்களால் நடத் தப்படும் இப்பள்ளியின் சட்ட திட்டங் களுக்கு அடங்கியே நடக்க வேண்டும் தனிப்பட்ட கொள்கைகளையும், தனிப்பட்ட விஷயங்களையும் இங்கு காண்பிக்கக் கூடாது அவரவர்கள் மனத்திற்குப் பட்ட கருத்துக்களை வெளியுலகில் உபயோகித் துக் கொள்ளலாமே தவிர அவற்றை இப்பள்ளியை பொறுத்த மட்டிலும் உபயோ கிக்கக்கூடாது குறிப்பாக கூறுமிடத்து இப்பள்ளி மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வெளியில் சென்று உத்தியோகங்கள் வகிக்கும்பொழுதும்,
இப்பள்ளிக்கு எவ்வித கெட்ட பெயரையும் உண்டாக்காத முறையிலும், பிறர் இப்பள்ளியைப் பற்றி தவறாக எண்ணாத முறையிலும் நடந்து கொள்ள வேண்டும். நான் மேன்மேலும் இதுபோன்ற பள்ளிகள் ஏற்படுத்துவதற்கு உங்களின் நற்குணமும், நல்லொழுக்கமும் தான் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத் தையும் கொடுக்கும்.
பள்ளி பிரச்சார சாதனமல்ல
என்னுடைய கொள்கைகளைப் பரவச் செய்வதற்கு நான் இதை ஒரு சாதனமாக பயன்படுத்திக் கொள்ளுபவன் அல்ல, என் கழகக் கொள்கைகளுக்கும் இப்பள்ளிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அன்றியும் என் கழகக் கொள்கைகளை பரவச் செய்வதற்கு தமிழ்நாட்டில் பரந்த இட மெல்லாம் இருக்க இப்பள்ளியின் மூலம் தான் கழகக் கொள்கைகளை நிலவச்செய்ய வேண்டும் என்ற அவசியம் சிறிதளவும் கூட இல்லை.
கழகப்பற்று பள்ளிக்கு வெளியிலே இருக்கட்டும்
எனவே, மாணவர்களாகிய நீங்கள் என்னை இப்பள்ளி நிறுவனர் என்ற முறையில் மட்டும் பாராட்டினால் போதும். அதுதான் எனக்கு மகிழ்வூட்டும் செய்தி என்றும் கூறுவேன். நான் ஒரு கழகத்தின் தலைவன் என்ற முறையில் இங்கு உங்கள் முன் பாராட்டப்படுவேனாகில் அது முற்றிலும் எனக்கும் இப்பள்ளிக்கும் இழுக்கைத் தேடித்தரும் செயல் என்று தான் கொள்ள நேரிடும். எனவே என் கழகப் பற்றுடையவர்கள் என் கொள்கையைப் பின்பற்ற விரும்புவார்களானால், அவை களை பள்ளியைவிட்டு வெளியில் சென்ற பிறகுதான் உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
மற்றும் தொடர்ந்து பேசுகையில் என்னுடைய கடந்த சுமார் 35 ஆண்டு களாக என் சொந்த காரியம் என்பதை விட்டொழித்தவன் எனக்கு சொந்த காரியம் என்பதே இன்றைய நிலையில் அடியுடன் மறைந்துவிட்டது சொந்தக்காரியம் இல்லை யேல், மற்றப்படி பிறரைப் பொறுத்தே எதுவும் இருக்கும் அவசியம் ஏற்படுகிறது எனவேதான். என் முயற்சியெல்லாம் பொதுத்தொண்டிற்கென்றே பெரிதும் செலவாகிறது என்று கூறினார்கள்.
பின்னர் பள்ளி இலக்கியமன்ற செய லாளர் தோழர் கே.வேணுகோபால் நன்றி கூறியதும் விழா இனிது முடிந்தது.
-விடுதலை,22.6.14

லஞ்சம்


- தந்தை பெரியார்
நமது நாட்டிடை இது காலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடை இவ்வித வழக் கங்களை இழிவாய்க் கருதும் மனப்பான் மையும் மாறி விட்டது. அரசாங்க ஊழியர்கள் என்போர் ஓர் ஊரினின்றும் மற்றொரு ஊரிற்கு மாற்றப்பட்டு வந்தால் முதன் முதலாகஅந்த ஊரில் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களைத் தேடுவதுதான் அநேகமாய் அவர்களது வேலையாய் இருக்கின்றது.
பொது மக்களும், அரசாங்க நீதிமன்றங்களிலோ நிர்வாக மன்றங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அலுவல்கள் ஏற்பட்டால் லஞ்சம் வாங்கிக் கொடுக்கத் தரகர்களைத் தான் முதலில் நாடுகிறார்கள். இவ்விரு கூட்டத்தாரிடையினும் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தற்காலம் பெரும்பாலும் வக்கீல் கூட்டங்களிலிருந்தே தரகர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர்.
இதனால் நியாயமன்றங்களில் விவகா ரங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய கட்சிக்காரர்கள் நியாயாதிபதிகளுக்குத் தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ, அவர்களிடமே அதிகம் செல்லுகின்றனர் சில வக்கீல்களும் தங்களுக்கு இவ்வளவு நியாயாதிபதிக்கு இவ்வளவு என்று பேசியே தொகை வாங்குகின்றனர்.
சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்று சொல்லிக்கொண்டு சிற்சில வக்கீல்களிடம் சிநேகமாகவும் தாட்சண்ய மாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொண்டு அதன் மூலமாக வக்கீல்களுக்கு வரும்படி செய்து வைத்து அவர் களிடம் பணமாக அல்லாமல் வேறு வழிகளில் தாங்கள் லாபம் அடைகின் றனர்.
இதை வழக்கத்தில் லஞ்சம் என்று சொல்லாவிடி னும், இது போன்ற செயல்கள் உண்மை யான லஞ்சத்தின் பலனையே உண்டாக்கு கின்றது. தாட்சண்யம் காட்டப்படும் வக்கீல்கள் இதன் பலனாய் லஞ்சம் என்கிற பெயரால் இல்லாவிடினும்,வேறு வழியில் கட்சிக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்றனர். இதனால் அநேகமாய் இவ்வழக்கமுள்ள வக்கீல் களிடம் தான் கட்சிக்காரர்கள் செல்லு கின்றனரே அன்றி, கெட்டிக்காரர்களாக வும் யோக்கியமாகவுமுள்ள வக்கீல்களி டம் செல்லுவதில்லை.
அரசாங்க ஊழியர் என்று சொல்லும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதில் பலவித தத்துவங் களை உபயோகிக்கின்றனர். சிலர் இரண்டு கட்சிக்காரரிடம் வியாபாரம் பேசுவது போல் பேசி, அதிக தொகை கொடுத்த வனுக்கு அனுகூலமாகவே தங்கள் தீர்ப்பைக் கொடுக்கின்றனர். சில சமயங் களில் இரண்டு பேரிடமும் வாங்கிக் கொண்டு இருவரையும் திருப்தி செய்யும் படி ராஜி செய்து அந்த ராஜிக்கு ஏற்ற விதமாய் தங்கள் தீர்ப்பை அளித்து விடு கின்றனர்.
சில தருணங்களில் ஒரு கட்சிக்கார ருக்குத் தெரியாமல் மற்றொரு கட்சிக்கார ரிடம் இவ்வளவிற்குக் குறைவில்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும், இன்னொரு கட்சியாரிடம் இவ்வளவுக்கதிகமல்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும் இருவரிடமும் வாங்கிக் கொள்ளுவதும், சில தருணங் களில் பெரிய தண்டனை செய்ய வேண்டி யதையோ, பெரிய தொகைக்குத் தீர்ப்புச் செய்ய வேண்டியதையோ குறைந்த அளவிற்குச் செய்வதாய்ச் சொல்லி வாங்குவதும், இன்னும் சில சந்தர்ப்பங் களில் தங்களிடமுள்ள விவகாரங்களில் நியாயம் இன்னாருக்குத்தான் என்று தெரிந்து அந்தக் கட்சியாரிடம் வாங்கிக் கொள்ளுவதும் இப்படி இன்னும் அநேக விதமாய் வாங்கப்படுகின்றன.
இப்படி வாங்கப்படும் லஞ்சங்கள் பெரும்பான்மை யாய் முழுவதும் தாங்களே அடைவ தில்லை. மேல் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க நேரிட்டு விடுகின்றது. அந்தப் பங்கு என்பது தொகையாகவோ, சப் ளைகள் மூலமாகவோ, சாமான்களாகவோ, வேறுவிதமாய் அவரைத் திருப்தி செய் வதன் மூலமாகவோ பங்கு செலுத்தி யாகிவிடுகின்றது.
அப்படிச் செலுத்தி மேலதிகாரிகளுக்கு நல்லவனாய் நடந்து கொண்ட இவ்வதிகாரிகள் வெகு தைரியமாய் தங்களுடைய தீர்ப்புகளைக் கடைவைத்து வியாபாரம் செய்வது போல் விற்று வருகின்றனர். பொது ஜனங்களும் கடைகளில் கத்தரிக்காய், வாழைக்காய் விலைபேசி வாங்குவதுபோல தீர்ப்பை விலைக்கு வாங்குகின்றனர்.
இவை பெரும்பாலும் வெளிப்படையான ரகசியங் களாய் விளங்குகின்றன. வியாஜ்யங்களும், விவகாரங்களும் அதிகமாகிக் கொண்டு வருவதற்கு நமது நாட்டு வக்கீல்கள் முக்கியக் காரண மென்று சொல்லுவது ஒரு பக்கமிருந்த போதிலும், இந்த லஞ்சம் வாங்கலும் கொடுக்கலும் அதற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்லவென்றே சொல்லலாம்.
மேல் அதிகாரிகள் என்று சொல்லப்படு வோர் லஞ்சம் வாங்கும் கீழ் அதிகாரி களிடம் பங்கு வாங்காவிட்டாலும் குருட்டுத்தனமான அபிமானத்தாலோ, வேறு சிபாரிசின் காரணங்களாலோ, தங்கள் இஷ்டம் போல் நடக்கிறார்கள் என்பதினாலோ, அல்லது நாம் தாம் வாங்குவது போலவே அவரும் வாங்கி விட்டுப் போகட்டும் என்று கருணை காட்டுவதினாலோ, தம்முடைய  மேல் அதிகாரிக்கு வேண்டியவராகவும் இருக் கிறார்கள் என்ற காரணத்தினாலோ, அன்றியும் ராஜீய விஷயங்களில் சர்க்காருக்கு அனுகூலமாய் அவரது மனசாட்சிக்கு விரோதமாய் அநேகம் பேரைத் தண்டனை செய்துள்ளார் என்றோ, வெள்ளையருக்கும் இந்தியருக் கும் நடந்த விவகாரங்களில் வெள்ளைக் காரருக்கு அனுகூலமாகத் தீர்ப்புச் செய்துள்ளார் என்றோ இத்தியாதி காரணங்களால், எவ்வளவு வெளிப் படையாயும், எவ்வளவு மக்கள் வருந்தும் படியாயும், லஞ்சம் வாங்கினாலும் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்.
லஞ்சம் என்று சொல்லுவது சாதாரணமாய் போலீஸ், ரிவனியூ, இஞ்சினியர், வைத்தியம், பார்ட், சால்ட் முதலிய இந்த இலாகாக் களுக்குப் பிறவிக்குணமாய் இருந்து அரசாங்கத் தாலும் பொதுமக்களாலும் சகஜந்தான் எனக்கருதி கவனிக்காமலே அனுமதிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், ஜனங்களின் வாழ்வு -  தாழ்விற்குப் பெரிதும் காரணமாயிருக்கிற சிவில், கிரி மினல் இலாகாக்களில் கூட தலைவிரித் தாடி வருகின்றன.
இவர்களில் சிலர் பணமும், நோட்டும் வாங்கினால்தான் லஞ்சமென்றும், வேறுவித காரியங்கள் என்ன செய்தாலும் லஞ்சம் இல்லை என்கிற எண்ணத்துடனேயே தங்கள் காரியங்களைச் செய்கின்றனர். சாதாரணமாய் உத்தியோகஸ்தரில் லஞ்சம் வாங்காதவரை மற்ற அதிகாரிகள் முட்டாள் என்றே கருதுகின்றனர்.
அநேக மாய் அவர்களுக்கு மேல் உத்தியோகமும் கிடைப்பதில்லை. தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்கிற அகம்பாவத் தால் மேல் அதிகாரிகளை இவர்களும் இலட்சியம் செய்யாதிருந்துவிடுவது. அதனால் மேல் அதிகாரிகள் இவர்களைக் கெடுத்து விடுகின்றனர். இவை இப்படி யிருக்க, அதிகாரிகளிலேயே சிலரும், படித்தவர்களில் சிலரும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யாமல் உத்தியோகமும் மேல் உத்தியோகமும் சம்பாதிப்பதற்கா கவே ஆயிரம் பதினாயிரக்கணக்காக வும் கொடுக்க வேண்டி ஏற்பட்டுப் போய் விடு கின்றது.
சில உத்தியோகஸ்தர்கள் வாங்க இஷ்டப்படாதவர்களாயிருந் தாலும் மேல் உத்தியோகஸ்தர்களுக்குக் கொடுக்கவும், செலவு செய்வதற்கும் என்றே லஞ்சம் வாங்க வேண்டியவர்களாய் விடுகிறார் கள். சில இலாகாக்களில் லஞ்சம் மாமூ லாகவே கருதப்பட்டு வருகின்றது. சில அதிகாரிகள் தாம் வாங்காதிருந்தால் போதும் என்று, மற்றவர்கள் வாங்குவது நன்றாகத் தெரிந்திருந்த போதிலும் கவனியாமலே இருந்து விடுகிறார்கள்.
இவ் விதமாக அதிகாரிகளின் யோக்கியதை கவனிக்கத் தகுந்த அளவிற்குப் பெருகி வருகிறது. எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தால் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று சொல்லுவதற்கு ஒரு தொகையே இல்லாமல் போய் விட்டது.
சில்லரை உத்தியோகஸ்தர்கள் வாங்கும் லஞ்சம் அவ்வளவு கெடுதியை உண்டாக் காவிட்டாலும், அதன் விவரங்களைப் பற்றிப் பின்னர் எழுதுவோம். கவுரவ உத்தியோகஸ்தர்களும் லஞ்சம் வாங்கு வது சகஜமாகி விட்டதல்லாமல், அரசாங் கமும் அனுமதித்து விடும் போலிருக்கிறது. லஞ்சம் விஷயமாய் ஒரு பெரிய அதிகாரிக்கும், ஒரு பெரிய மனிதருக்கும் நடந்த சம்பாஷணையை மாத்திரம் எழுதிவிட்டு இதை முடிக்கிறோம்.
- குடிஅரசு, கட்டுரை, உரையாடல் 26.07.1925
-விடுதலை,26.7.14