புதன், 26 ஏப்ரல், 2017

பார்ப்பனர்களின் தேசியம் - சித்திரபுத்திரன் -

19.03.1933 - குடிஅரசிலிருந்து...



பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப்பற்றிப் பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறோம். தேசியம் என்ற சூழ்ச்சிகள் கண்டுப் பிடிக்கப்பட்டதற்குக் காரணமே பார்ப்பனியமான சனாதன தர்மங்களைப் பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. தேசியம் என்கின்ற வார்த்தைக்கு அநேகமாய் மக்கள் மனதில் இத்தேசத்திய பழைய நாகரிகம், சனாதன தர்மம், பழைய பழக் வழக்கம் என்பவைகளையே பிரதானமாக் கொள்ளும்படிப் பிரச்சாரம் செய்து வந்ததும் அதற்காக இந்திய புராண இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இந்தக் கருத்தைக் கொண்டேதான் கராச்சி காங்கிரஸ் சுயராஜ்ஜிய திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றும் இந்திய நாட்டை பாரத மாதா (பூமிதேவி) என்று அழைப்பதும் பாரத தேசம் என்று  சொல்லுவதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாய்க் கொண்டதே ஒழிய வேறில்லை. தேசியம் என்பதற்கு அரசியலை சம்பந்தப்படுத்திய கருத்தும், இந்தியாவின் பழைய நாகரிகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் ஏற்ற அரசியலை ஸ்தாபிக்கச் செய்த சூழ்ச்சியே தவிர வேறில்லை.

இன்று கூட ஆங்கில ஆட்சியானது சனாதன தர்மப் படி - மனுதர்மப்படி ஆட்சி நடத்தப்படுவாதாய் இருந்தால் இன்றைய தேசியமும் சட்ட மறுப்பு, ஒத்துழையாமையும் எல்லாம் பறந்தோடிப் போகும்.

இந்தக் காரணத்தினாலேயேதான் தோழர் காந்தியும் மகாத்மாவாக்கப்பட்டார். ஆனால் இதுசமயம் காந்தியின் செல்வாக்கு வேறுவழியில் ஒரு அளவு குறைந்து போன காரணத்தினால் அதைப் புதுப்பிக்கவும் காந்தியின் பிரயத்தனமோ, தயவோ சிறிதும் இல்லாமல் தீண்டாமை விலக்கும், ஆலயப்பிரவேசமும்  கிளர்ச்சி பெற்றதன் காரணமாய் காந்தியார் இதில் பங்குபெற கருதி வலிய வந்து கலந்துகொள்ள வேண்டியேற்பட்டதாலும், தேசியவாதி களான பார்ப்பனர்களுக்கு இப்போது சிறிது கஷ்டம் ஏற்பட்டுவிட்டது.  சென்னை தேசியப் பார்ப்பனர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. தோழர்கள் சத்தியமூர்த்தி, ஏ, ரங்கசாமி அய்யங்கார், கே. பாஷ்யம் மற்றும் எத் தனையோ சென்னை பார்ப்பனர்களுடைய பேச்சையும், மூச்சையும் காணோம். தோழர் சத்தியமூர்த்தியின் விலாசமே கண்டுபிடிப்பது கஷ்டமாய் இருக்கிறது. அவருடைய முழுசேவையும் தோழர் ராஜா சர். அண்ணாமலையின் குடும்பத்தாருக்கு கண்ராக்ட்டாய் (சோல் ஏஜன்ஸி) விட்டுவிட்டார்; அவரைப் பற்றிக் கவி பாடவும் அவர் கோரும் பொது வாழ்வுக் காரியங்களை காங்கிரஸ் பிரதிநிதியாய் இருந்து நிறைவேற்றிக் கொடுக்க முன்னோடும் பிள்ளையாய் இருப்பதுமே அவருடைய சுயராஜ்யதபசாயும், அவரது பிறப்புரிமையாயும் ஆகி விட்டது. ஆனால் தோழர் ராஜா சர். அண்ணாமலை கொடுக் கும் பணங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கே சேர்ந்தது. தோழர் ஏ. ரங்கசாமி அய்யங்காரோ சங்கராச்சாரி கூட்டத்தினர்களை ஆதரித்து அவர்களை மேன்மைப் படுத்துவதன் மூலமும், மற்றும் சில பணக்ககாரர்களையும் விளம்பரப்படுத்துவதன் மூலமும் பெருமையும், பணமும் சம்பாதிப்பதே அவருடைய காங்கிரஸ் பிரச்சாரமாகவும், தேசிய பிரச்சாரமாகவும் ஆகிவிட்டது.

தோழர் கே. பாஷியம் அடுத்த சட்டசபை தேர்தல் வரை தலை நீட்டமாட்டார். குட்டி  தேசியவாதிகளான ஒரு கூட்டம் அதாவது தோழர் எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் மேல் குறிப்பிட்ட தேசியவாதிகளின் உத்திரவுக்கு இணங்க காந்தியின் செல்வாக்கை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதற்கு உதாரணம் 07-03-1933ஆம் தேதி தமிழ் நாட்டில் பிரசுரித்து இருக்கும் தோழர் எம். எஸ். சுப்பிரமணிய அய்யர் பிரசங்கத்தைப்படித்துப் பார்த்தால் தெரியவரும். இந்த அவசரத்தில் தோழர் ராஜகோபாலாச் சாரி, டாக்டர் ராஜன் கூட்டத்தை நான்மறந்துவிட்டதாக சிலர் சொல்லக்கூடும். ஒரு நாளும் மறக்கவில்லை. முன்கூறிய கூட்டமும், இந்தக் கூட்டமும் சகோதரர்களே ஆவார்கள். முன் கூறிய கூட்டம் வாதிக்கு வக்கீலாக இருந்து கொள்ளை அடித்தால், பின் கூறிய கூட்டம் பிரதிவாதிக்கு வக்கீலாய் இருந்து கொள்ளை அடிப்பவர்

களாவார்கள். வரும்படியை சமமாக பங்கிட்டுக் கொள்ளுவார்கள். தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும், ராஜனும் எந்த அளவில் சீர்திருத்தக்காரர்கள் என்பதை கவனித்தால் யாவருக்கும் சுலபத்தில் உண்மை விளங்கிவிடும்.

ராஜகோபாலாச்சாரியும், ராஜனும் அவர்களது ஜாதி உயர்வுக்கு உரிய ஏதாவது ஒரு சின்னத்தை விட்டு இருக்கிறார்களா? என்பதைக் கவனித்துப்பாருங்கள். 1. உச்சிக்குடுமி, 2. வடகலை, தென்கலை பிரிவுப்படி நாமம், 3. பூணூல், 4. பஞ்சகச்சம், 5. சந்தியா வந்தனம், 6. நன்மை தீமைகளில் பார்ப்பனர்க்குரிய சடங்குகள் முதலிய காரியங்களை எவ்வளவு ஜாக்கிரதையாய் அனுஷ்டிக் கிறார்கள் என்பதும் இவர்கள் பிரசங்கங்களில் பாரதம், ராமாயணம், நாலாயிரப்பிரபந்தம், முதலிய வைணவமத சாஸ்திர பிரச்சாரங்கள் எவ்வளவு நடை பெறுகின்றன என்பதும் கவனித்துப் பார்த் தால், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிப் பிரச்சாரத்துக்கு ராஜகோபா லாச்சாரி, ராஜன் கோஷ்டி பிரச்சாரம் ஏதாவது கடுகள வாவது இளைத்ததா? என்பது விளங்கும். நம் தென் னாட்டில் இன்றைய பொது வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற ஒருவனுக்கோ அல்லது விளம்பரம் பெறவேண்டும் என் கின்ற ஒருவனுக்கோ அல்லது அதிகாரம், பதவி, சட்டசபை, ஸ்தல ஸ்தாபனங் களில் அங்கத்தினர் முதலியவை பெறவேண்டும் என்பவர்களுக்கோ, அவர்கள் பார்ப்பனராயிருந்தாலும், முஸ்லீம்களாய் இருந்தாலும் கிறிஸ்தவர்களாய் இருந் தாலும், பார்ப்பனரல்லாதார்களாய் இருந்தாலும், ராஜா சர்களாய் இருந்தாலும், ஜமீதன் தாரர்களாய் இருந்தாலும், பெரும் பணம், பூமி படைத்த செல்வான்களாய் இருந்தாலும், இந்த இரண்டு கூட்டத்தில் ஏதாவதொரு கூட்டத்திற்கு அடிமையானாலொழிய அல்லது வாய் பூசினாலொழிய வேறு மார்க்கமில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட இவர்கள் சங்கதியே இப்படியானால் மற்றபடி வயிற்றுச்சோற்றுக்கு வேறு வழியில்லாமல் எப்படி நடந்தாவது வயிறு வளர்க்கலாம் என்ற சில தேச பக்தர்களைப்பற்றி நான் சொல்ல வேண்டுமா, என்று கேட்கின்றேன். ஆகவே இன்றைய நிலைமையைப் பார்த் தால் பார்ப்பனர்களின் தேசியம் ஓரளவுக்கு வெற்றிபெற்று வருகின்றது என்று தான் சொல்லவேண்டும். காரணம் என்னவென்றால் பார்ப்பனரல்லாத மக்களுக்குள்  தலைவர்கள் என்பவர்கள் முதல் வாலர்கள் என்கின்ற வரை சுயமரியாதையில் போதிய கவலை இல்லாமல், எப்படியாவது அவரவர்கள் தனித்த முறையில் வாழ்ந்தால் போதும் என்கின்ற சுயநலத்தன்மையானது. அவர்களை மறுபடியும் கீழ் நிலைக்குக் கொண்டு வரும்படிச் செய்கின்றது.

இதற்கு நான் என்ன செய்யமுடியும்? இந்தக் காரணங் களால்தான் பார்ப்பான் ஜாதித்திமிரும், பார்ப்பனரல்லாத வர்களில் பணத் திமிரும், மொத்தத்தால் உள்ள படிப்புத் திமிரும், உத்தியோக அதிகாரத்திமிரும் எல்லாம் ஒருங்கே அழியவேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் சொல்லு கின்றதுபோல் தோன்றுகின்றது.

-விடுதலை,8.4.17

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்


04.11.1934 - பகுத்தறிவிலிருந்து..

சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.

மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமுகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்,

இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமுக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜடி கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப் படவோ வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர் களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று நாட்டிலுள்ள பொருள்களை யெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்துவிட்டாலும் நமது மக்களிடம் உள்ள கடவுள், மூடநம்பிக்கையால், ஜாதிமுறைகளால், மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாடுகளில் மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்படுவது அங்கு ஜாதிபேதம் இல்லாத காரணமே.
- தந்தை பெரியார் பொன்மொழிகள்
-விடுதலை,8.4.17

இராமனுக்கு சீதை தங்கை  இராவணனுக்கு சீதை மகள் இராமனுக்கு பல பெண்டாட்டிகள்


03.03.1929 - குடிஅரசிலிருந்து...

இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமா யணம் என்னும் பெயரால் பல நூற்றுக் கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்த தாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டனவென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததா அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமா யண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப் பட்டு 1928-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப் படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புதகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புகத்தின் விலை ரூ.1) அவையாவன :- ஜைன ராமா யணம், பவுத்த ராமாயணம், யவன ராமா யணம், கிறைஸ்தராமாயணம் என்பவை களாகும்.

இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ் தராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாய ணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர் களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப் பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலிய வைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயி, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்த தாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்த தாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதுபோலவே சீதையை ஜனகராஜ்னுடைய மகள் என்றும், வில்லை வளைப்ப வனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சுமணனுக்கு 18 பெண் சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனக னுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப் பட்டா ளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டி ருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

பவுத்த ராமாயணத்திலும், தசரதராஜ னுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சு மணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக் கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவ ளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப் பட்டிருக்கின்றது.

இவைகளை மெய்ப்பிக்க திரு. அய் யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோ தரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின் தென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதார மாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதி யிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவா சய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனக னுக்குத் தானம் கொடுத்தார் என்றும் அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜன கனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லையென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் கண் டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்தி ருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் ராவணன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவண னுக்கு உண்மையில் ராமன் தன்தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்தி ருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட் டிருக்கின்றார்.

மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டு போய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண் டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாக வும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும் போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்ட தாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல் லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார். எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 - ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என் பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக் கின்றன. இன்னமும் மற்ற ராமா யணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்கு மென்பது ஊகிக்கக் கூடவில்லை.

-விடுதலை,15.4.17

இது ஓர் அதிசயமா?  பகுத்தறிவும் அதன் விரோதிகளும் 


- சித்திரபுத்திரன் -



03-02-1929 - குடிஅரசலிருந்து...

மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிர்ம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.

உதாரணமாக, மேல் நாட்டில் ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு பெரிய  பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத் தறிவைக் கொண்டு ஒவ் வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உப தேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாதிகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம். கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லு கின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிதவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உப யோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அதிவாரமே ஆடிப் போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டு மானால் நம்பிக்கை இருக்க வேண்டும். பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத் தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாதிகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கியங்களைப் பின் வாங்கிக் கொண்டு நாம் சொன்ன மகாபாதகமான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப்படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு 1  பெண்களும் படித்திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங் களுக்கும் வேதங்களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்குமென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாதிகன் என்று எழுதிவைத்திருப்ப தையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாதிகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?
-விடுதலை,15.4.17

திங்கள், 24 ஏப்ரல், 2017

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பேட்டி


என்னால் ஜாதிகள் வளர்ச்சி தடைப்பட்டது...
மாறன்: உங்களுடைய சுயநலமற்ற சேவை யினாலேதானே எல்லாரும் முன்னேறியிருக்காங்க...
பெரியார்: முன்னேறினாங்களோ என்னவோ - இல்லாட்டா ஜாதிகள் இன்னும் வளர்ந்திருக்கும்.

அவ்வளவு தான் நான் சொல்லுவேன். அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாத்தினேன் - ஜனங்கள் எண்ணத்திலே...
தர்மமும் - வியாபாரமும் - ஜாதியும்
மாறன்: நானறிய 30, 40 ஆண்டுகளுக்கு முன்னாலே, “தீண்டாதவன் - தூர எட்டிப்போ” -ன்னு சொல்லக்கூடிய நிலைமையெல்லாம் இருந்தது.

பெரியார்: அய்யா - நாங்களே தண்ணிப் பந்தல் வைப்போம் - வெய்யில் காலத்திலே. அப்போ அது ஒரு பெருமை. தர்மம்ன்னு பேரு. என்ன தர்மம்? அதிலே திருடறது எங்களுக்குத் தெரியும். நானே வியாபாரியாயிருந்து எவ்வளவு திருடியிருக்கே னென்று எனக்குத் தெரியும்.

ஆனால் தண்ணிப் பந்தல் வைக்கிறது ஒரு பெருமை. அப்படி தண்ணிப் பந்தல் வைத்தால் ஜாதிக்குத் தகுந்தபடி மூங்கில் குழாய் வைப்போம். அதிலே குடிச்சிட்டுப் போக ணும்ன்னு ஜாதிக்குத் தகுந்தபடி டம்ளரை வைப்போம்.

பிராமணாள் - சூத்திரன் - 
ஜாதிப் பெயர்கள் அழிப்பு
மாறன்: இப்போ அதைக் கற்பனைக் கூட பண்ண முடியலியே...

பெரியார்: தடையில்லே. இப்படி கொடுமை யெல்லாமிருந்தது. இதையெல்லாம் அழிக்கிறதுன்னு ஆரம்பிச்சோம். அப்புறம் - ரயில்வே ஸ்டேஷ னுக்குப் போய் “பிரா மணாள் - சூத்திரன்” - போர்டை அழிக்கிற துன்னு ஆரம்பிச்சோம். ஓட்டலிலே ஜாதிப் பெய ரெல்லாம் இருக்கக் கூடாதுன்னு சொன் னோம்.

மாறன்: எவ்வளவு துணிச்சலான காரியம் அதெல்லாம்.

பெரியார்: ஏதோ செய்தோம்.

மாறன்: பிறராலே முடியவில்லையே.

பெரியார்: முடியுதோ முடியவில்லையோ... அவ்வளவு ஆசை இருந்தது. அவ்வளவு ஆத்திரம் இருந்தது.

மாறன்: ஆசை மட்டும் இருந்தால் போதாதில்லே - துணிச்சலும் வேண்டுமல்லவா?அது உங்களிடத் திலே மாத்திரம்தான் இருந்தது. அதனாலேதான் நாடு முன்னேறிச்சு.

பெரியார்: முன்னேறனும் முன்னேறிச்சின்னு சொல்றதுக்கில்லே. இல்லாட்டா இன்னும் இப்பவும் எவ்வளவோ ஆகியிருக்கும். 
சமுதாயத்திலே எனக்கு எதிர்ப்பு

மாறன்: அப்போது தங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப் புகள் என்னென்ன வெல்லாம்? சில முக்கியமான எதிர்ப்பெல்லாம் சொல்ல முடியுமா?
பெரியார்: எல்லாம் தான்.

பெரியார் சிந்தனைத் திரட்டு 3, ப: 158.
-விடுதலை ஞா.ம.,22.4.17

சுயமரியாதைக்காரருக்கும் புராண மரியாதைக்காரருக்கும்

சம்பாஷணை 

- சித்திரபுத்திரன் - 

07.09.1930- குடிஅரசிலிருந்து... 

சுயமரியாதைக்காரன்:- அய்யா இவ்வளவு கஷ்டப் பட்டு இந்தப் பண நெருக்கடியான காலத்தில் கடன் வாங்கிக் கொண்டு இத்தனை அவசரமாய் காசிக்குப் போகின்றீர்களே என்ன காரியம்?

புராண மரியாதைக்காரன்:- ஒரு காரணமும் இல்லை. இந்தப் பாழாய்ப் போன சுயமரியாதை இயக்கம் வந்து பிள்ளைகளையெல்லாம் கெடுத்து விட்டது. அதனால் தான் இவ்வளவு கஷ்டத்துடன் காசிக்குப் போக வேண்டி இருக்கிறது.

சுயமரியாதைக்காரன்:- சுயமரியாதை இயக்கத்திற்கும் தாங்கள் காசிக் குப் போவதற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லையே?

புராண மரியாதைக்காரன்:- என்ன சம்பந்தம் என்றா கேட்கின்றீர்கள்? நானோ வயது முதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துப்போய் விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்கு கர்மம் செய்வார்களா? திதி செய் வார்களா? .... எள்ளுந் தண்ணீர் இறைப்பார்களா? பிண்டம் போடுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். இந்த நாசமாய்ப் போன சுயமரியாதைக் காரர்களால் எவ்வளவு தொல்லை?

சுயமரியாதைக்காரன்:- சரி. அதைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்காக நீங்கள் காசிக்கேனையா போகின் றீர்கள்? என்றால் அதற்கு ஒன்றும் பதில் இல்லாமல் சும்மா சுயமரியாதைக்காரரையே வைகின்றீர்களே?

புராண மரியாதைக்காரன்:-  சொல்லுகிறேன் கேளுங் கள். முதலாவது காசியில் செத்தால், திதி பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் பிண்டம் போட் டாலும் போடாவிட்டாலும் மோட்சம் கிடைக்கும். இரண்டாவது அதில் ஏதாவது கொஞ்ச நஞ்சம் சந்தேகமிருந்தாலும் கயாவுக்குப் போய் நமக்கு நாமே பிண்டம் போட்டுக் கொண்டு விட்டால் பிறகு எவனுடைய தயவும் நமக்கு வேண்டியதில்லை. ஆதலால் இப்போது நேரே கயாவுக்குப் போய் எனக்கே நான் பிண்டம் போட்டு விட்டுப் பிறகு காசிக்குப் போய் சாகப் போகின்றேன். அப்போது இந்த சுயமரியாதைகள் என்ன பண்ணுமோ பார்ப்போம்.

சுயமரியாதைக்காரன்:-சரி. அப்படியானால் நீங்கள் மறுபடியும் இங்கு திரும்பி வருவதில்லை போல் தோன்றுகிறதே.

புராண மரியாதைக்காரன்:-  ஆம். இனி இங்கு எனக் கென்ன வேலை? பாடுபட்டு சம்பாதித்தேன். கடவுள் செயலால் ஒன்றும் குறைவில்லை. பிள்ளைகளையும் நன்றாய் செலவு செய்து படிக்க வைத்தேன். அதிர்ஷ்டக் குறைவால் அதுகள் படிக்கவில்லை. கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதுகள் திரியறதைப் பார்த்தால் எனக்கு எள்ளுந் தண்ணீர் கூட இறைக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஆதலால் நான் வந்த காரியத்திற்கு நான் போக வேண்டாமா?

சுயமரியாதைக்காரன்:- என்ன காரியமாய் வந்தீர்கள். அதற்கு எங்கு காரியமாய் போகின்றீர்கள்.

புராண மரியாதைக்காரன்:- மனிதன் எதற்காகப் பிறந்தான்? அந்த ஸ்ரீமந் நாராயணனை வணங்கி அவன் பாதார விந்தம் போய்ச் சேருவதற்குத் தானே.

சுயமரியாதைக்காரன்:- ஸ்ரீமந் நாராயணன் பாதார விந்தம் தாங்கள் சேருவதற்கும் உங்கள் பிள்ளைகள் எள்ளும் தண்ணீர் இறைப்பதற்கும் நீங்கள் கயாவுக்கும் காசிக்கும் போவதற்கும் என்னையா சம்பந்தம்? எனக்கு சற்று விளங்கும்படியாய் சொல்லுங்களே! நானும் தங்கள் கூடவே வந்து விடுகின்றேன்.

புராண மரியாதைக்காரன்:- இதெல்லாம் உங்களுக்கு சுலபத்தில் சொன்னால் புரியாது.

சுயமரியாதைக்காரன்:-  பின்னை எப்படிப் புரியும்?

புராண மரியாதைக்காரன்:- நல்ல குரு கடாட்சம் வேண்டும், பெரியோர்கள் சாவகாசம் வேண்டும். முன்னோர்கள் நூல்களில் பரிட்சை இருக்க வேண்டும், புராணங்களை மரியாதை செய்ய வேண்டும், பக்தி சிரத்தையுடன் அவைகளைப் படிக்க வேண்டும், எதற்கும் பிராப்த கர்மமும் இதற்கு அனுகூலமாய் இருக்க வேண்டும். பகவான் கிருபையும் வேண்டும்.

சுயமரியாதைக்காரன்:- அப்படியானால் அவைகளில் எனக்கும் ஆசையாய் தான் இருக்கின்றது. இனிமேல் நான் சுயமரியாதைக்காரர்களுடன் சேருவதில்லை. தாங்கள் சொன்னபடியே நடந்து நானும் ஸ்ரீமந் நாராயண னுடைய பாதத்தை அடைய முயற்சிக்கிறேன். தாங்களே எனக்கு நல்ல குருவாயிருந்து கடாட்சம் செய்து மற்ற விஷ யங்களைச் சற்று உபதேசம் செய்யுங்கள். அதாவது பெரியோர்கள் என்று சொன்னீர்களே அவர்களில் ஏதாவது ஒரு நாலைந்து பேர்களுடைய பெயர்களைச் சொல்லுங்கள். ஒருவரிடமாவது சாவகாசம் வைத்துக் கொள்ளப் பார்க்கிறேன். பிறகு முன்னோர்கள் நூல்கள் என்றீர்களே அதிலும் முன்னோர்கள் யார்? அவர்களுடைய நூல்கள் எவை? என்பனவற்றைச் சொன்னால் அதையும் அடைய முயற்சிக்கிறேன். பிறகு புராணங்களை மரியாதை செய்ய வேண்டுமென்கிறீர்களே எந்தப் புராணங்கள்? அவைகளின் பெயர்கள் என்ன? எப்படி மரியாதை செய்வது? என்பதையும் பக்தி சிரத்தையுடன் படிக்க வேண்டுமென்றால் பக்தி காட்ட வேண்டிய விதம் என்ன? சிரத்தை என்றால் பணம் கொடுத்து வாங்கிப் படித்தால் போதுமா? அல்லது யாருக்காவது பணம் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்க வேண்டுமா? என்கின்ற விஷயத்தையும் தயவு செய்து சொல்லுங்கள். அன்றியும் பிராப்தகர்மம் இதற்கு அனு கூலமாய் இருக்கா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இவ்வளவுக்கும் மீறி பகவான் கிருபை வேண்டுமென்று வேறு சொல்லுகிறீர்கள். அது எப்படி சம்பாதிப்பது ஆகிய காரியங்களைச் சற்று விளக்கித் தாருங்கள். இதோ நானும் கூடவே புறப்படுகிறேன்.

புராண மரியாதைக்காரன்:- சரி, சரி. உம்மைப் பார்த்தால் சரியான சுயமரியாதைக்காரராய்த் தெரிகிறதே! அவர்கள் தான் இப்படி எல்லாம் கேட்கின்றார்கள். அவர்களுக்குத் தான் இந்தக் குயுக்தி எல்லாம் தோன்றும்.

சுயமரியாதைக்காரன்:- என்ன அய்யா இவ்வளவு சந்தேகப்பட்டு விட்டீர்கள். தெரியாததினால்தானே நான் தங்களைக் கேட்டேன். தாங்கள் பெரியவர்கள் மோட்சத் திற்குப் போகிறவர்கள் என்று கருதித்தானே தங்களையே குருவாய்க் கேட்கின்றேன். தாங்கள் இப்படிச் சொல்ல லாமா?

புராண மரியாதைக்காரன்:-  வேண்டாமய்யா உம்ம சவகாசமே நமக்கு வேண்டாம். நீர் சரியான சுயமரியாதைக் காரர் என்பது தெரிந்துவிட்டது. உம்ம சங்கார்த்தமே நமக்கு வேண்டாம். நான் உமக்கு குருவாகவும் இல்லை. நம்ம கூட நீர் வரவும் வேண்டாம். போம் போம் இங்கே நில்லாதேயும்.

சுயமரியாதைக்காரன்:- சரி. உங்களுக்கு கோபம் வருவதானால் நான் பேசவில்லை போகிறேன். எனக்குப் பிராப்தகர்மம் உதவி செய்ய வில்லையோ? அல்லது பகவான் கிருபை இல்லையோ தெரியவில்லை. தங்களைப் போன்ற பெரியாரை குருவாக அடைந்தும் பிரயோஜன மில்லை. ஆனாலும், ஒரே ஒரு சந்தேகம் அதை மாத்திரம் நிவர்த்தி செய்து விடுங்கள்.

புராண மரியாதைக்காரன்:- என்ன சங்கதி?

சுயமரியாதைக்காரன்:- இவ்வளவு தீர்மானத்துடனும் பிடிவாதத்துடனும் இந்த முதிர்ந்த வயதில் போகின்றீர்களே ஒரு சமயம் தாங்கள் வழியில் செத்துப் போய் விட்டால் என்ன செய்வீர்கள்? அப்புறம் கயாவும், காசியும் எப்படி தங்களுக்கு உதவும்?

புராண மரியாதைக்காரன்:- செத்துப் போய்விட்டால் நல்ல காரியமாச்சுது. உம்மைக் கேட்க வரவில்லை. போ வெளியே புறப்படும் போது சகுனத்தடை மாதிரி வாயில் வருகின்ற வார்த்தைகளைப் பாருங்கள்!

சுயமரியாதைக்காரன்:- சரி. நான் போய் வருகிறேன். நீங்களும் உங்கள் புராணங்களும், அதற்கு நீங்கள் செய்யும் மரியாதைகளும் நன்றாயிருக் கின்றன. இனி உங்களைப் போன்ற புராண மரியாதைக்காரர்களே உலகத்தில் இருக்கட்டும். நான் போகின்றேன். 

-விடுதலை,22.4.17