புதன், 26 ஏப்ரல், 2017

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்


04.11.1934 - பகுத்தறிவிலிருந்து..

சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.

மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமுகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்,

இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமுக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜடி கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப் படவோ வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர் களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று நாட்டிலுள்ள பொருள்களை யெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்துவிட்டாலும் நமது மக்களிடம் உள்ள கடவுள், மூடநம்பிக்கையால், ஜாதிமுறைகளால், மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாடுகளில் மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்படுவது அங்கு ஜாதிபேதம் இல்லாத காரணமே.
- தந்தை பெரியார் பொன்மொழிகள்
-விடுதலை,8.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக