திங்கள், 26 ஜூன், 2017

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை


- சித்திரபுத்திரன் -
16. 03. 1930 - குடிஅரசிலிருந்து...
மகா விஷ்ணுவான சிறீரங்க ரங்கநாதர்:- அடி என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் உள்ளவர் களுக்கெல்லாம் அய்ஸ்வரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?
லட்சுமியான சிறீரங்கநாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தயிரும் சாப் பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால்தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம்கூட கைவைத்துவிட்டீர். இப்படிப்பட்ட உம்மைச் சாப் பாட்டுக்கே லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது?
விஷ்ணு:- அய்யய்யோ! அதனாலா இப்படிச் செய்துவிட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படிச் செய்வதும் ஒரு லட்சுமி கடாட்சம் என்றுதானே நினைத்திருந்தேன். உனக்குக் கோபமாயிருந்தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டி அடித்து விடுகிறேன்.
லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.
விஷ்ணு:- பின்னயேன் லாட்டரி சீட்டு போடச்செய்தாய்?
லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்ப தற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தைச் சேர்ப்பதற்கு இப்படிச் செய்யச் சொன்னேன்.
விஷ்ணு:- அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் சிறீரங்கம் ரங்கநாதர் லாட்டரிச் சீட்டு, ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?
லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசியென்று பெயரும் செய்து கண்டகண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே, அதிலில்லாத அவமானம் தானா  உமக்கு லாட்டரி சீட்டில் வந்துவிட்டது? பக்தர்களின் பெண்களைத் தாங்கள் கைப்பற்றுவதும், தங்கள் தாசிகளைப் பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள பந்துத்து வமாகும்.
விஷ்ணு:- அதெல்லாம்தான் இப்போது நமது உண்மை பக்தர்களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும், குடியரசு மூலமும் நிறுத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அப்புறம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.
லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்தக் காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்குச் சோறுபோடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டுவிடும் கவலைப்படாதீர்கள், இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும். 


-விடுதலை,16.6.17

சைனா - சைவம்



09.02.1930 - குடிஅரசிலிருந்து...
சைவன் : - அய்யா தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்மைதானா?
வைணவன் : - ஆம் அய்யா, நான் நாலுகால் பிராணிகளில் கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவைகளையும், இரண்டுகால் பிராணிகளில் ஏணி வகையறாவும், ஆகாயத்தில் பறப்பவைகளில் பட்டம், ஏரோபிளேன் வகையறாக்களையும், நீரில் வாழ்பவைகளில் கப்பல், படகு, கட்டுமரம் முதலியவைகளையும், பூமியில் நகருபவைகளில் வண்டி, மோட்டார் கார் முதலியவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. இவைகளைச் சாப்பிடுவது பாவம் என்று எனக்குப் பட்டதினாலும் சைனாக்காரர்களைப் பின்பற்றுவ தாலும் இம்மாதிரி முடிவு செய்துவிட்டேன்.
சைவன் : - அப்படியா இது நல்ல சைவம்தான். எனக்குச் சற்று வேலை இருக்கின்றது. சீக்கிரம் போகவேண்டும். நான் போய்விட்டு வருகிறேன். (என்று சொல்லிக் கொண்டே தன்னை எங்கு சாப்பிட்டு விடுவானோ? என்று நினைத்து ஓடிவிட்டார்.)

உதிர்ந்த மலர்கள்
16. 02.1930 - குடிஅரசிலிருந்து... 
1.  புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் என்ன வென்றால் அவை  எவ்வளவு ஆபாசமாகவும் காட்டு மிராண்டித் தனமாகவும் எழுதி இருந்தாலும் முதலிலும் கடைசியிலும் இப் புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக்  கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்கையில் பணமும் பொருளும் சேருமென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறுஜென்மம் எடுக்கப்படும் என்னும் எழுதி வைத்ததே காரணமாகும்.
2. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்றும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட யோக்கியதை அற்றவனாவான்.
3. புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லுவதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்னவென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாஸ்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்து விடுவார்கள் என்கின்ற பயம்தான். ஜாதி மத வித்தியாசங்களும், அவற்றின் உயர்வு தாழ்வு நிலைகளும், சிறிதும் அழியாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் ஜாதிகளின் பேராலும், மதங்களின் பேராலும் கேட்கப்படும் விகிதாச்சார உரிமைகளை ஏன் ஆட்சேபிக்கின்றார்கள் என்றும் அப்படி ஆட்சேபிப்பதில் ஏதாவது நல்ல எண்ணமோ, நாணயமோ, நியாயமோ இருக்க முடியுமா என்றும்தான் கேட்கின்றேன்.


-விடுதலை,16.6.17

வெள்ளி, 23 ஜூன், 2017

பகுத்தறிவு களஞ்சியம்


இவ்வளவு தானா?
20.11.1932  - குடிஅரசிலிருந்து...

இவ்வளவு மாத்திரம் தானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும் மதமும் செல்வந்தர்களுக்கும், மிராசு தாரர்களுக்கும் மற்றும் உத்தியோகம் வியாபாரம், லேவாதேவி என்னும் பேர்களால் ஏழைகளிடமிருந்து பெரும் பணம் கொள்ளை கொண்டு மற்றவர்களைப் பட்டினி போட்டு பெரும் பணம் சேர்க்கும் பணக்காரர் களுக்கும் போதிப்பது என்ன என்பதைப் பார்த்தாலோ அது, ஓ பிரபுக்களே! செல்வவான்களே!! ஏராளமாக மேலும் மேலும் பணம் சேர்க்கும் பணக்காரர்களே!!! லட்சபுத்திரர்களே!! நீங்கள் முன்ஜன்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால் கடவுள் உங்கள் மீது வைத்து கருணையினால் இவ்வுயர் நிலையை அடைந்திருக் கிறீர்கள்.

இவ்வேராளமான பண வருவாய்கள் உங்களுக்கு ஏற்பட்டி ருக்கும் இச்சுக போகம் உங்களுக்குக் கிடைத் ததற்குக் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால் நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும் கடவுளுக்குக் கோயில் கட்டுவதன் மூலம் கடவுள் பக்தர்களான பாதிரிகுரு, பிராமணர் முதலியவர்களுக்கு மரியாதை செய்து சத்திரம் மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி இந்நிலையை நிலை நிறுத்திக் கொள்ளுவதுடன் மோட்சலோகத்திலும் சுலபமாக  இடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்  என்ப தேயாகும். ஆகவே தோழர்களே! இந்த காரணங் களாலேயே மக்களில் உயர்வு - தாழ்வும், எஜமான் - அடிமையும், முதலாளி - தொழிலாளியும், அரசன் - குடிகளும், குரு - சிஷ்யனும் ஏற்பட்டிருக்கின்றன  என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூ னிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிர பந்தங் களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்து கொண்டு பூசை புனஸ்காரங்களுடன் திரிகின்ற வனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.   - தந்தை பெரியார்

தலைவிதி
20.11.1932  - குடிஅரசிலிருந்து...



கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், யோக்கியமாய் நாணயமாய் நடந்து இழிவாய் கீழ் மக்களாய்க் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன் ஜென்மகர்ம பலன் - தலை விதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக் கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலைமையைப் பற்றி சிறிதும் அதிருப்திக் கூட அடைய கூடாதென்று கருதி தங்கள் நிலையைப் பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்ளுகிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப் படுகிறார்கள். ஏனெனில் கஷ்டப்படுகின்ற மக்களுக்குக் கடவுள் உணர்ச்சி யும் மதமும் இதைத்தான் போதிக்கின்றது. எப்படி என்றால்,

ஓ கஷ்டப் படுகின்ற மனிதனே! கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே!! நீ உனது முன்ஜென்மம் பாவகர்ம பலத்தினால் தலை விதியால் - கடவுள் சித்தத்தால், இம் மாதிரி துன்பத்தை அனுபவிக் கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்த ஜென்மத்தில் சுகப் படுவாய் மேலான பிறவி பெறுவாய் அல்லது மேல் உலகில் மோட்சம், என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேச மேயாகும்.

இந்தப் பொறுமை உபதேசமும் சாந்த உபதேசமும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழைகளாகவும், முற்போக்கற்றவர்களாகவும், செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும், விடுபட முடியாமலும் சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும் படி செய்து வந்திருக்கிறது. 

ஆதியில்....
20.11.1932  - குடிஅரசிலிருந்து...

ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமையாய் சுயேச்சையாய்த் திரிந்த - இயற்கை  வாழ்க்கையிலிருந்து சமுக கூட்டு வாழ்க்கைக்கு வரும் போது அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து கொண்டும், அவசியமான பரபர  உதவிகளை வழங்கிக் கொண்டும் ஒரே சமுகமாய், சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணினானே ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப் படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலை யையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து, அவனை உலக சுகபோகங்களில்  பட்டினிப் போட்டு தான் மாத்திரம் சோம் பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு எல்லா சுகபோகங் களையும் தானே அனுபவித்துக் கொண்டு இருப்பதற்கோ அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டு விட்டு தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்க விஷயமாகும்.

ஆனால், நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும் அரசனுக்குக் குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலை நிறுத்தி ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள், ஆகியவைகளைக் கற்பித்து பிறகு அவைகளின் மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம், பின் ஜென்மம், கர்மம், பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ்உலகம், தீர்ப்பு நாள், மோட்சம், நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது. இந்த கற்பனைகளின் பயன் தான் பெரும்பான்மையான மக்கள் பாமரர்களாகவும் ஏமாற்றப்படவும், கொடுமைக்குள்ளாகவும் மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும் உழைத்தும் சரியான கூலி கிடைக்காமல் பட்டினிக் கிடந்துழல்வதைப் பொருமையுடன் பொருத்துக் கொள்ளவுமான காரியங்கள் நடந்து வருவதுடன் அவை எங்கும் என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் இந்த நிலை அடியோடு அழிபட வேண்டும்.  அதற்காக அதன் காப்புகளான மேற் குறிப்பிட்ட கடவுள், மதம், தேசியம், ஜாதியம் என்பவை களும் அவற்றின் பேறுகளான ஆத்மா, முன் ஜென்மம், கர்மம், தீர்ப்பு, மோட்ச நரகம், பாவ புண்ணியம், ஆகியவை களாகிய போலி உணர்ச்சிகளும் அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத் தெரியப் பட வேண்டும்.

கடவுள்
20.11.1932  - குடிஅரசிலிருந்து...

கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும் அது மனித சமுகத்தில் 100க்கு  99 மக்களை பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி  ஆதிக்கம்  செலுத்தி வருகின்றது.

கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான  வருஷங்கள் ஆயிருந்த  போதிலும்கூட, கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்திய வர்களோ  உணர்ந்த வர்களோ இது வரையில்  காணக் கிடைக்கவில்லை.

பொதுவாக  அந்தப் படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்தி வைக்க  வேண்டும் என்கின்ற  அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத் தையும், பாவ புண்ணிய பயனையும் மோட்ச நரகத்தையும், கற்பித்து அதை பரப்ப பலவித தாபனங்களைச் உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட்டதால் வெகு சுலபமாகவும்,  செல்வாக்காகவும் அதன் பிரசாரம் நடக்கவும்,  மக்களை தன் வயப் படுத்தவும்  ஆன காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன. கடவுள் என்றால் என்ன, என்றாலும், கடவுள் என்றால் என்ன, என்பதை உணருவதற்கில்லாமலும், உணர வேண்டும் என்று  நினைப்பதற்கு இல்லாமலும் இருந்து வருகிறது.

யாராவது  கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையும், செய்கை களையும் கொண்டிருப்பதும் ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அறிதாகவேயிருக்கிறது. கடவுள் என்பது சர்வ  வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ சக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப் பட்டு விட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம் இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது.

கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறு பாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத் தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.

-விடுதலை,23.6.17


நம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும் -தந்தை பெரியார்

தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,  நம்மை யார் ஆளவேண்டும்,  ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும்.

அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்சியாக இருந்தாலும், எவ்வளவு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருந்தாலும், இந்த ஆட்சியானது ஒழிக்கப்பட்டுத் தங்கள் ஆட்சியானது வரவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் ஆசையாகும்.

வெள்ளைக்காரன் இந்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரன் ஆட்சியானது ஒழிக்கப்பட வேண்டும், சுய ஆட்சி வரவேண்டும் என்று (காங்கிரஸ்காரர்கள்) பார்ப்பனர்கள் முயன்ற போது, சத்தியமூர்த்தி அவர்களிடம் வெள்ளைக்காரர் ஆட்சியின் சிறப்பையும், சுய ஆட்சி ஏற்படுவதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்து விளக்கிச் சொன்னபோது, சத்திய மூர்த்தி அவர்கள் சுய ஆட்சியால் எவ்வளவு கேடு ஏற்படும் என்பது எனக்கும் தெரியும்; என்றாலும் சுய ஆட்சிதான் இந்நாட்டிற்கு வேண்டும் என்று சொன்னாரே ஒழிய, அத னால் இன்ன நன்மை என்று அவரால் சொல்ல முடிய வில்லை.

பல ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இருந்து வரும் தீண்டாமை, வெள்ளையன் ஆட்சி செய்த போதும் ஒழிக்கப்படவில்லை; ஜனநாயகம், சுதந்திரம் வந்து 22 ஆண்டு காலமாகியும் இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப் படவில்லை என்றால், இந்த ஆட்சியில் நாம் எதற்காகத் தீண்டப்படாத மக்களாக இருந்து கொண்டிருக்க வேண்டும்? அதற்கென்ன அவசியம் என்று சிந்திக்க வேண்டு கின்றேன்.

நம் ஜனநாயகம், சுதந்திர ஆட்சி யின் மூலம் இந்தத் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கின்ற இந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலமும் ஒழிக்க முடியாது என்பதால், அயல்நாட்டுக்காரன் ஆட்சி வந்தாவது இந்த இழிவை, தீண்டாமையை ஒழிக்க முன்வர மாட்டானா? அவனாலாவது நம் மக்களின் இழிவு தீண்டாமை ஒழிக்கப் படமாட்டாதா? என் பதால் அயல்நாட்டுக்காரன் அந் நியன் ஆட்சி அது எவனுடையதாக இருந்தாலும், நம் இழிவைப் போக்க முன் வருகின்றவனை ஆதரிப்ப தோடு அவனை வரவேற்க வேண்டி யது நம் கடமை என்கின்றோம்.

அந்நியன் ஆட்சி என்றதும் நம் மக்களுக்கு ஏதோ வேண்டாத உணவைத் தின்பது போல் இருக் கிறது.  நம் மக்கள் மீன், ஆடு, கோழி,  பன்றி இவற்றின் மாமிசங்களை உணவாக உட்கொள்ளுகின்றனர். ஆனால், மாட்டு மாமிசத்தை உட் கொள்ள மறுக்கின்றனர். மற்ற கோழி, பன்றி, மீன் ஆகிய இவற்றைப் போன்று அசிங்கமானவற்றை மாடு உண்ணவில்லை. என்றாலும், மதம் காரணமாக, மதத்திற்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம் என்று மாட்டு மாமிசத்தை உட்கொள்ள மறுக்கின்றார்களோ, அதுபோல இழிவு ஒழிய வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொள்கிற மக்கள்- தேசபக்தி என்கின்ற காரணத்தால், அயல் நாட்டுக்காரன் ஆட்சி என்றதும் பயப் படுகின்றனர். இத்தனை காலமாக நமக்கிருந்த தேசபக்தியால், தேசாபி மானத்தால் நம் இழிவு நீக்கப்படவில்லை; தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்னும் போது, இந்த தேசபக்தியாலும், தேசாபிமானத்தாலும் நாமடைந்த பயன் மானமற்றவனாக, இழிமகனாக இருப்பது தானா? என்று சிந்திக்க வேண்டு கின்றேன்.

இந்தத் தீண்டாமையானது அறவே ஒழிய வேண்டு மானால், நமக்கிருக்கிற இந்தக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்பட வேண்டும்; சாஸ்திர, சம்பிரதாயங்கள் ஒழிக் கப்பட வேண்டும்; இதிகாச, புராண தருமங்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவை இருக்கிற வரையிலும்,  இந்த டில்லி ஆட்சி இருக்கிற வரையிலும் தற்போதிருக்கிற இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கிற வரையிலும், இந்தப் பார்ப்பான் இருக்கிற வரை, பார்ப் பானின் சித்திரம் இருக்கிறவரை இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப் படவே முடியாது.

இன்று இங்கு இருக்கின்ற இந்த ஆட்சி நம் நாட்டு ஆட்சி; நம் தமிழர் களின் ஆட்சி. என்றாலும், இந்த ஆட்சியால் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதோடு, தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று சட்டம் கூடச் செய்ய முடியாதே! அப்படிச் சட்டம் செய்வதற்கு இந்த மந்திரி களுக்கு உரிமை இல்லையே? மீறிச் செய்தால் அரசமைப்புச் சட்டப்படி இந்த ஆட்சியை மாற்றக்கூடிய அதிகாரம் டில்லி யிடம் இருக்கிறதே! எனவே இந்த ஆட்சியால் இதனைச் செய்ய முடியாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் உங் களுக்கு ஒரு மகிழ்ச்சியான வெற்றிச் செய்தியைச் சொல்ல வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற 73 நகரசபைத் தேர்தல்களில் 56 நகரசபைகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மீதி 9 நகர சபைகள் அப்படியும், இப்படியுமாக இருக்கின்றன. பொதுவாகப் பார்த்தால் காங்கிரஸ் மிகக் கீழ்நிலைக்கு,  இழிதன்மைக்குப் போய் விட்டது; அது மாற்றமடைய வேண்டும்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சி நகர சபையில் வருவது தான் நல்லது; ரகளை இல் லாமல் காரியம் நடக்கும்; அப்படியில் லாமல் வேறு கட்சி நகர சபையில் வந்தால், ரகளைக்குதான் நேரம் இருக்குமே தவிர, காரியம் ஒன்றும் நடைபெறாது; எனவே நடக்க வேண் டிய முறைப்படிதான் நடந்திருக்கிறது.  என்றாலும், நம் மக்கள் ஊர் தோறும் பாராட்டுக் கூட்டம் போட்டு ஓட்டுப்போட்ட மக்களைப் பாராட்டுவதோடு, தி.மு.க., ஆட்சியைப் பாராட்ட வேண்டும்.

அத்தோடு இந்த ஆட்சியிடம் நாம் எதிர்பார்ப்பது, செய்யச் சொல்ல வேண்டியது, நம் மக்களுக்குரிய ஜாதி, மத விகிதாச்சாரப்படிப் பதவிகள்,  உத்தியோகங்கள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தானாகும்; இவற்றை வலியுறுத்த வேண்டும்.

இந்த மந்திரி லஞ்சம் வாங்கினான்;  அந்த மந்திரி குடித்தான்;  அவன் பொம்பளையோடு போனான் என்ப தெல்லாம் சாதாரணமானது. ஜனநாய கத்தில் லஞ்சம் என்பது சாதாரணம்; இதுவரை இலஞ்சம் வாங்காமல் இருந்தவன் எவன்? பணமாக வாங்க வில்லை என்றால் ஓட்டாவது லஞ்சம் வாங்கித்தானே இருப்பான்? எனக்கு ஓட்டுப் போட்டால் இன்னது கொடுக்கின்றேன், இன்னது செய் கிறேன் என்று உத்தரவாதம் கொடுத் துத் தான் ஓட்டுப் பெற்றிருப்பான்.  பதவிக்கு வந்ததும் ஓட்டுப் போட்ட வன் தயவு வேண்டும் என்பதால், அவனுக்கு ஏதாவது வசதி செய்து கொடுத்திருப்பான். இது ஜனநாயகத்தில் சாதாரண மாக நடக்கக் கூடியதே யாகும். இதை ஒரு பெரிய குற்ற மாகவோ, குறையாகவோ கருத வேண்டிய அவசிய மில்லை. இந்த ஆட்சி யால் நன்மை என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்த அரசாங்கம் மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்று மேலே பார்க்காமல், எந்த மக்களுடைய ஆதரவு அதிகமிருக்கிறதோ, அந்த மக்களுடைய உரிமையைக் கொடுக்க முன்வர வேண்டும்; எந்த மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்களோ,  அவர்களு டைய பங்கு விகிதாச்சாரம் கொடுக்க முன்வர வேண்டும்; சிறுபான்மை யான சைவனும், பார்ப்பானும், கிறிஸ் தவனும் தனது விகிதாச்சாரத்திற்கு மேல் அனுபவிக்கவும், ஆதரவு கொடுக்கிற பெரும்பான்மையான மக்கள் தங்கள் விகிதாச் சாரத்திற்குப் பல மடங்கு குறைவாக அனுபவிக் கவுமான நிலையை மாற்ற வேண்டும். அவரவர்கள் விகிதாச்சாரத் திற்கு ஏற்பப் பதவி, உத்தியோகங்கள், உரி மைகள் வழங்க முன்வரவேண்டும். இது தான் யோக்கியமான ஜனநாயகப் பண்பாகும்.

நம் நாட்டிலிருக்கிற போலீஸ் வேலை அத்தனையையும் சப்-இன்ஸ்பெக்டர் வரை, ஆதிதிராவிடர் களுக்கே கொடுக்க வேண்டும். மற்ற எவனையும் அதில் உள்ளே நுழைய விடக் கூடாது. அப்படிச் செய்தால் தீண்டாமை இழிவு தானே நீக்கப் படும். உயர் சாதிக்காரன் என்பவன் தானாகவே மரியாதை கொடுக்க ஆரம்பித்து விடுவான்.

அரசாங்கம் வெற்றி பெற்றதற்கு நீதி செலுத்த வேண்டுமானால் ஓட்டளித்த மக்களுக்கு நீதி காட்ட வேண்டும். காங்கிரஸ் ஏன் தொலைந்தது? ஏன் சாகிற மாதிரி இழுத்துக் கொண்டு கிடக்கிறது என்றால், அது பதவியில் இருக்கும்போது மிக ஆணவத்தோடு, பதவி- உத்தியோகங்களை எல்லாம் தனக்கு ஓட்டளித்த பெரும் பான்மையான மக்களுக்குக் கொடுக்காமல், சிறுபான்மை யான பார்ப்பான், சைவன், கிறிஸ்தவன் என்று தேடிப் பார்த்துக் கொடுத்ததாலேயே ஆகும். அத்தோடு ஓட்டுப் போட்ட பெரும்பான்மையான மக் களை மதிக்காததாலேயே ஆகும்.

இந்த ஆட்சியும்  அதுபோல் நடந்து கொள்ள முன் வந்தால்,  அதன் கதிதான் இதற்கும் ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டுமென்று கேட்டுக் கொள் கின்றேன்.

மற்றொரு  மகிழ்ச்சிக்குரிய சேதி என்ன வென்றால், நம் இன்றைய ஆட்சியானது சென்னை அய்க் கோர்ட்டுக்கு இப்போது ஒரு தமிழரை சீஃப் ஜட்ஜாக- பிரதம  நீதிபதியாகப் போட்டிருக்கின்றது. இது பாராட்டக் கூடியதாகும். அவர் எப்போதோ வந்திருக்க வேண்டியவர்; முன்னிருந்த ஆட்சியினால் இவர் வேண்டுமென்றே புறக்கணிக்கப் பட்டவர் ஆவார். தமிழ்நாட்டில் அய்க்கோர்ட் ஏற்பட்டு 107 வருடங்கள் ஆகின்றன. அதற்கு இப்போதுதான் ஒரு தமிழர் சீஃப் ஜஸ்டிஸ் ஆக வரமுடிந்தது! இதுவரை இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். இல்லாவிட்டால் மலையாளி,  கிறிஸ்தவர், முஸ்லிம் , கன்னடக்காரர்,  ஆந்தி ராக்காரர் என்று இருந்தார்களே ஒழிய, தமிழர் எவரும் சீஃப் ஜஸ்டிஸாக இருந்தது கிடையாது.  நம் நாட்டிற்கு ஒரு தமிழர்-  தமிழ் நாட்டினர் அய்க் கோர்ட் தலைமை நீதிபதி யானது பாராட்டுக்கு உரியதாகும்.

நம் கோர்ட்டுகளின் நீதி நிலை மிகமிக மானக் கேடானதும், கொடு மையானதுமாகும். ஒரு கேஸ் முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. என்னுடைய கேஸே 4, 5, ஏழுட்டு வருஷங்களாக முடிவு பெறாமல் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மற்றச் சாதாரண ஏழை, எளிய,  பாமர மக்களுடைய நிலை எப்படி இருக் கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் நீதி கெட்டதற்கும், புரட்டு, பித்தாலட்டம் அதிகமானதற்கும் மக்களிடையே நாணயம், ஒழுக்கம் கெட்டதற்கும் காரணம் இந்தக் கோர்ட்டுகளே ஆகும்.

நம் கோர்ட்டுகள் குச்சுக்காரி வீடுகளை விட,  சூதாடும் இடங்களை விட மகாமோசமானவை ஆகும். இந்தக் கோர்ட்டு களில் யோக்கியனுக்கு நீதிக்கு இடமில்லை; அவை அயோக்கியர்களுக்கே வெறும் புகலிடமாகி விட்டன.

மற்றும் இந்த நாடு 4 கோடி மக்களைக் கொண்ட, தென்மேற்கில் சுமார் 500 மைல் நீளமுள்ள நாடாகும். இப்படிப்பட்ட இந்த நாட்டிற்கு ஒரே இடத்தில் ஒரே அய்க்கோர்ட் இருப் பது, மக்களுக்குப் பெரிய அசவுகரிய மாகும்; குறைந்தது இரண்டு அய்க் கோர்ட்டுகளாவது வைக்கவேண்டும். அதாவது மற்றொரு அய்க்கோர்ட் மதுரையிலாவது, திருச்சியிலாவது, கோவையிலாவது வைக்க வேண் டும்; ஒரே ஒரு அய்க்கோர்ட் சென்னையில் மட்டும் இருப்பதால், கன்னியாகுமரியிலே இருக்கிறவன் நீதிபெற வேண்டுமானால், 450 மைல் கடந்து போக்கு வரத்துக்கு 75 ரூபாய் செலவு, செய்து 2 நாள்,  4 நாள் மெனக்கெட்டுக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. இது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 5, 6 தடவையாகும். இது ஏழை, எளிய, பாமர மக்களால் எப்படி இவ்வளவு தூரம் செலவு செய்து கொண்டு வர முடியும்?

வக்கீல்கள் இடித் தொல்லை,  பீசு தொல்லை, குமாஸ் தாக்கள்- அபிடவிட்கள் தொல்லை வேறு; பணக்கார னுக்குக் கவலையில்லை அவனால் எவ்வளவு தூரமானா லும், செலவானாலும் முடியும். ஏழைகளால் எப்படி முடியும்?

நமக்கு இன்னொரு கேடு என்ன வென்றால், சுப்ரீம்கோர்ட் டில்லியில் இருப்பதாகும். 2000 மைல்களுக்கு அப்பால் சென்று நீதிபெற வேண்டுமானால், அது பணக்காரன் ஒரு வனால் தான் முடியும். அதுவும் பெரிதும் அயோக்கியர்களுக்குத் தான் வசதி அளிப்பதாகும். ஏழை களால் முடியாது. எனவே பணக்காரனுக்கும், அயோக் கியனுக்கும் அனுகூலமானதாகத்தான் இருக்கிறதே ஒழிய, ஏழை, எளிய, பாமர மக்களுக்கு நீதி கிடைக்க வழி யில்லை. இதை உணர்ந்து இந்த அய்க்கோர்ட் தலைமை நீதிபதி ஏதாவது செய்வார் என்று நினைக் கின்றேன்.

இன்னொரு காரியம் என்ன செய்ய வேண்டும் என்றால், செய் வார்களோ- செய்யமாட்டார்களோ, ஆனால் செய்ய வேண்டியது அவசியமாகும் என்பது எனது கருத்து. அதாவது ஒரு ஊருக்கு ஒரு கோர்ட் தான் இருக்க வேண்டும்.  ஒரு கோர்ட்டுக்கு மேல் ஒரு ஊரில் இருக்கக் கூடாது. எதற்காக ஒரே ஊரில் 2, 3 சப்-கோர்ட்டுகள், 2, 3 முனுசீஃப் கோர்ட்டுகள்,  அடிஷனல் கோர்ட்டுகள், சப்-கோர்ட்டுகள் என்று ஒரே ஊரில் பல கோர்ட்டுகள் இருக்க வேண்டும்? வெளியூரில் இருப்பவன் இதற்காகச் செலவு செய்து கொண்டும் மற்ற ஊருக்கு வரவேண்டும்? இவை அந்தந்த தாலூக்காக்களில் மத்திய இடங்களில் கோர்ட்டு இருந்தால், குறைந்த செலவில், எளிதான போக்குவரத்தில் நீதி கிடைக்கும். ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் வசதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பதால் பணக்காரன் செலவு செய்து கொண்டு வந்து விடுகின்றான்; ஏழையால் அவ்வளவு செலவு செய்து கொண்டு வரமுடியாமல் போவதோடு, அவர் களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. மற்றும் ஒரு கேடு  என்னவென்றால் வெளி ஊர்களில் இருக்கும் வக்கீல் களுக்குப் பீசு கொடுப்பதோடு, அப்பீல் கோர்ட்டில் உள்ள வக்கீல் களுக்கும் பீசு கொடுக்க வேண்டியிருக்கிறது. வெளியூர் வக்கீலுக்கு, கிடைக்க வேண்டிய பீசு, அப்பீல் கோர்ட்டு உள்ள ஊர் வக்கீல்கள் அடைகிறார்கள். இது மொபசல் வக்கீல்களுக்கு அநியாய நட்டமாகும்.

உடனுக்குடன் வழக்கு முடிவ டையாததற்கும் இது ஒரு காரண மாகும். வக்கீல்களின் சூழ்ச்சி தான் வெளி இடங் களில் கோர்ட்டுகள் ஏற்படாததற்குக் காரணமாகும்.

குறைந்தது மூன்று மாதத்திற்குள் கேசு பைசல் செய்யப் பட வேண்டுமென்று சட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்றப்படி விசாரணை முறை அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லாததால் ஒருவன் கேஸ் போட் டால், அதை எடுக்க 2 மாதமாகிறது. பிறகு ஸ்டேட்மென்ட் இஷூ கொடுக்க 3 மாதம்; அதில் வாய்தா வேறு; இப்படி இழுத்துக் கொண்டே போவதால், இந்த முறைகள் சில வக்கீல்கள் பிழைப்பதற்கு உதவியாக இருக்கிறதே ஒழிய,  நீதி கிடைக்க வழி இல்லாமல் போகிறது. நீதி கிடைக்க நாளாவதால் மக்களுக்குக் கோர்ட்டுகளின் மீது பயமில்லாமல் போய் விடுகிறது. நீதி சீக்கிரம் கிடைத்தால்,  மனிதனுக்குப் பயம் இருக்கும். நாளாவ தால் எந்தக் காரி யத்தையும் துணிந்து செய்துவிட்டு, கோர்ட்டுக்கு போ, ``கோர்ட்டில் போடு பார்த்துக் கொள்ளலாம் என்கின்றான். நீதி கிடைக்க நாளாவதால் மக்களிடையே ஒழுக்கம், நாணயம், நேர்மை என்பது இல்லாமல் போய் விடுகிறது. எந்த ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான, நேர்மைக் கேடான காரியத்தையும் செய்ய மனிதன் பயப்படுவது கிடையாது. இதையெல்லாம் இப்போது வந்திருக் கிற புதிய ஜட்ஜ்- பார்ப்பனரல்லாத தமிழ் ஜட்ஜ் கவனிப்பார் என்று கருதுகின்றேன்.

1.5.1969  அன்று சென்னை - திருவல்லிக்கேணியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

-விடுதலை,18.6.17