வெள்ளி, 23 ஜூன், 2017

பகுத்தறிவு களஞ்சியம்


இவ்வளவு தானா?
20.11.1932  - குடிஅரசிலிருந்து...

இவ்வளவு மாத்திரம் தானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும் மதமும் செல்வந்தர்களுக்கும், மிராசு தாரர்களுக்கும் மற்றும் உத்தியோகம் வியாபாரம், லேவாதேவி என்னும் பேர்களால் ஏழைகளிடமிருந்து பெரும் பணம் கொள்ளை கொண்டு மற்றவர்களைப் பட்டினி போட்டு பெரும் பணம் சேர்க்கும் பணக்காரர் களுக்கும் போதிப்பது என்ன என்பதைப் பார்த்தாலோ அது, ஓ பிரபுக்களே! செல்வவான்களே!! ஏராளமாக மேலும் மேலும் பணம் சேர்க்கும் பணக்காரர்களே!!! லட்சபுத்திரர்களே!! நீங்கள் முன்ஜன்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால் கடவுள் உங்கள் மீது வைத்து கருணையினால் இவ்வுயர் நிலையை அடைந்திருக் கிறீர்கள்.

இவ்வேராளமான பண வருவாய்கள் உங்களுக்கு ஏற்பட்டி ருக்கும் இச்சுக போகம் உங்களுக்குக் கிடைத் ததற்குக் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால் நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும் கடவுளுக்குக் கோயில் கட்டுவதன் மூலம் கடவுள் பக்தர்களான பாதிரிகுரு, பிராமணர் முதலியவர்களுக்கு மரியாதை செய்து சத்திரம் மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி இந்நிலையை நிலை நிறுத்திக் கொள்ளுவதுடன் மோட்சலோகத்திலும் சுலபமாக  இடம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்  என்ப தேயாகும். ஆகவே தோழர்களே! இந்த காரணங் களாலேயே மக்களில் உயர்வு - தாழ்வும், எஜமான் - அடிமையும், முதலாளி - தொழிலாளியும், அரசன் - குடிகளும், குரு - சிஷ்யனும் ஏற்பட்டிருக்கின்றன  என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூ னிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிர பந்தங் களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்து கொண்டு பூசை புனஸ்காரங்களுடன் திரிகின்ற வனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.   - தந்தை பெரியார்

தலைவிதி
20.11.1932  - குடிஅரசிலிருந்து...



கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், யோக்கியமாய் நாணயமாய் நடந்து இழிவாய் கீழ் மக்களாய்க் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன் ஜென்மகர்ம பலன் - தலை விதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக் கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலைமையைப் பற்றி சிறிதும் அதிருப்திக் கூட அடைய கூடாதென்று கருதி தங்கள் நிலையைப் பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்ளுகிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப் படுகிறார்கள். ஏனெனில் கஷ்டப்படுகின்ற மக்களுக்குக் கடவுள் உணர்ச்சி யும் மதமும் இதைத்தான் போதிக்கின்றது. எப்படி என்றால்,

ஓ கஷ்டப் படுகின்ற மனிதனே! கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே!! நீ உனது முன்ஜென்மம் பாவகர்ம பலத்தினால் தலை விதியால் - கடவுள் சித்தத்தால், இம் மாதிரி துன்பத்தை அனுபவிக் கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்த ஜென்மத்தில் சுகப் படுவாய் மேலான பிறவி பெறுவாய் அல்லது மேல் உலகில் மோட்சம், என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேச மேயாகும்.

இந்தப் பொறுமை உபதேசமும் சாந்த உபதேசமும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழைகளாகவும், முற்போக்கற்றவர்களாகவும், செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும், விடுபட முடியாமலும் சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும் படி செய்து வந்திருக்கிறது. 

ஆதியில்....
20.11.1932  - குடிஅரசிலிருந்து...

ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமையாய் சுயேச்சையாய்த் திரிந்த - இயற்கை  வாழ்க்கையிலிருந்து சமுக கூட்டு வாழ்க்கைக்கு வரும் போது அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து கொண்டும், அவசியமான பரபர  உதவிகளை வழங்கிக் கொண்டும் ஒரே சமுகமாய், சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணினானே ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப் படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலை யையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து, அவனை உலக சுகபோகங்களில்  பட்டினிப் போட்டு தான் மாத்திரம் சோம் பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு எல்லா சுகபோகங் களையும் தானே அனுபவித்துக் கொண்டு இருப்பதற்கோ அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டு விட்டு தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்க விஷயமாகும்.

ஆனால், நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும் அரசனுக்குக் குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலை நிறுத்தி ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள், ஆகியவைகளைக் கற்பித்து பிறகு அவைகளின் மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம், பின் ஜென்மம், கர்மம், பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ்உலகம், தீர்ப்பு நாள், மோட்சம், நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது. இந்த கற்பனைகளின் பயன் தான் பெரும்பான்மையான மக்கள் பாமரர்களாகவும் ஏமாற்றப்படவும், கொடுமைக்குள்ளாகவும் மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும் உழைத்தும் சரியான கூலி கிடைக்காமல் பட்டினிக் கிடந்துழல்வதைப் பொருமையுடன் பொருத்துக் கொள்ளவுமான காரியங்கள் நடந்து வருவதுடன் அவை எங்கும் என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் இந்த நிலை அடியோடு அழிபட வேண்டும்.  அதற்காக அதன் காப்புகளான மேற் குறிப்பிட்ட கடவுள், மதம், தேசியம், ஜாதியம் என்பவை களும் அவற்றின் பேறுகளான ஆத்மா, முன் ஜென்மம், கர்மம், தீர்ப்பு, மோட்ச நரகம், பாவ புண்ணியம், ஆகியவை களாகிய போலி உணர்ச்சிகளும் அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத் தெரியப் பட வேண்டும்.

கடவுள்
20.11.1932  - குடிஅரசிலிருந்து...

கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும் அது மனித சமுகத்தில் 100க்கு  99 மக்களை பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி  ஆதிக்கம்  செலுத்தி வருகின்றது.

கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான  வருஷங்கள் ஆயிருந்த  போதிலும்கூட, கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்திய வர்களோ  உணர்ந்த வர்களோ இது வரையில்  காணக் கிடைக்கவில்லை.

பொதுவாக  அந்தப் படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்தி வைக்க  வேண்டும் என்கின்ற  அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத் தையும், பாவ புண்ணிய பயனையும் மோட்ச நரகத்தையும், கற்பித்து அதை பரப்ப பலவித தாபனங்களைச் உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட்டதால் வெகு சுலபமாகவும்,  செல்வாக்காகவும் அதன் பிரசாரம் நடக்கவும்,  மக்களை தன் வயப் படுத்தவும்  ஆன காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன. கடவுள் என்றால் என்ன, என்றாலும், கடவுள் என்றால் என்ன, என்பதை உணருவதற்கில்லாமலும், உணர வேண்டும் என்று  நினைப்பதற்கு இல்லாமலும் இருந்து வருகிறது.

யாராவது  கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையும், செய்கை களையும் கொண்டிருப்பதும் ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அறிதாகவேயிருக்கிறது. கடவுள் என்பது சர்வ  வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ சக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப் பட்டு விட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம் இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது.

கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறு பாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத் தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.

-விடுதலை,23.6.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக