செவ்வாய், 24 ஜூலை, 2018

பகுத்தறிவும் - மதமும் 27.09.1931 - குடிஅரசிலிருந்து....

தற்கால நிலை மையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தைக் கைகொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்குக் காரணம் சொல்லுவ தாய் இருந்தால். அவன்  பூமியுடையவும், சூரியனுடையவும் நடப் பைக்கொண்டு கணக்குப் போட்டு பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான்.

இதே விஷயத்தைப் பற்றி மத சாதிரியை கேட்டால் அவன் சூரிய சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் ராகு, கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.

இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்ன வென்றால், ஒரே ஆசாமி வான சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும் போது பூமியின் நிழலால் மறைக்கப் படுகின்ற தென்றும், மதசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர் களை ராகு, கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.

இது மாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதட்சயப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்துவிட்டு வீட்டுக்குப் போனவுடன் ராகு கேது பாம்புகள் விழுங்குகின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷபரிகாரத்திற்கு நானம் செய்யவும் தற்பணம் செய்யவும் சங்கல்பம் செய்துகொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான்.

ஆகவே, கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான  நிலைமைக்கு வந்துவிட்டது என்பதை நினைத்துப்பாருங்கள்.

அதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங்களும், குறிப்புகளும் மிக மிகப் பழமையான தினால் காட்டு மிராண்டித்தனமான காலத்து எண்ணங்களையும் அதன் முடிவுகளையும் இன்று எவ்வளவோ தெளிவான காலத்தில் கட்டிக்கொண்டு அழுவதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வியையே பாழ்படுத்தி விட்டோம்.

-  விடுதலை நாளேடு, 20.7.18

கோவில்களின் பேரால் பார்ப்பனியத் தொல்லை

தந்தை பெரியார்



 

"பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை "  என்பதுபோல் நாம் கட்டின கோவிலைக்காத்து வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை வெளியில் தள்ளி கதவு சாத்தவும், உள்ளே தள்ளி கதவு சாத்தவும் ஏற்பட்டுவிட்டார்கள் என்றால் நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?

நமது நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அரசியலின் பெயராலும், மதத்தின் பெயராலும், மதச்சடங்கின் பெயராலும் நமக்கு இழைத்துவரும் கேடுகளுக்கும், தொல்லைகளுக்கும் அளவேயில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் இக்கொடுமைகளிற் சிக்கிச்சீரழிந்து சுயமரியாதை, மானம், வெட்கமற்று அல்லற்படுகிறோம். இவைகளில் இருந்து வெளியேற நாம் பிரயத்தனப் படுமிக்காலத்திலேயே மேலும் மேலும் நமக்கு இழிவை உண்டாக்கித் தொல்லைப் படுத்துகிறார்களென்றால் மற்றபடி நாம் சும்மா இருந்தோமேயானால் நம் கதி யென்னவாகும்? 'அன்ன நடைக்கு ஆசைப்பட, உள்ள நடையும் போயிற்று' என்பதுபோல் கோவில்களில் நமக்கென்று தனி இடமும், பார்ப்பனர்களுக்கென்று தனி இடமும் கூடாது என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு கோவிலுக்குள் நீ வரவேகூடாது என்று சொல்லவும், கோவிலை மூடிக் கதவைத் தாழ்போட்டுக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கில் ஒரு பழமொழியுண்டு. 'காலானிக்கி வேஸ்தே மூலானிக்கி வஸ்த்துடு' என்பார்கள். அதன் அர்த்தம் 10-க்கு அடிபோட்டால் 5-க்கு வருவான் என்பது; அது போல் கோவிலுக்குள் வரவேண்டாம் என்பதாகவே சொல்லி விட்டால் கும்பிட்டு  விட்டாவது போய்விடுகிறேன் என்று சொல்ல வருவான்; இல்லாவிட்டால் சம உரிமை கேட்பான் என்று நினைத்து போகிறபட்சமெல்லாம் கதவைச் சாத்துகிறார்கள். கோவிலுக்குள் போக உரிமை கிடைத்தவருக்குச் சுவாமி கும்பிட உரிமை உண்டா இல்லையா? சுவாமி கும்பிட உரிமையுள்ளவனுக்கு சுவாமிக்கு தேங்காய் பழம் உடைத்து வைக்க உரிமை உண்டா இல்லையா? இந்த உரிமைகளைக் கூட இப்பார்ப்பனர்கள் அபகரிப்பார்களேயானால் இவர்களை விட வெள்ளைக் காரர்கள் எந்த விதத்தில் கெட்டவர்கள்? நமது நாட்டுப் பார்ப்பனர்களை விட தென் ஆப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள்  ஆயிரமடங்கு யோக்கியர்கள் என்று சொல்லுவோம்.


இந்தப் பார்ப்பன ஆட்சியிலும், அடக்கு முறையிலும் இருப்பதைவிட அந்த வெள்ளையர்கள் ஆட்சியே மேலென்பதாகக்கூடச் சொல்லி விடலாம். வரவர இந்தப் பார்ப்பனர்கள் எவ்வளவு அக்கிரமங்கள் செய்யத் துணிந்து விட்டார்கள் என்பதை நினைக்கும் போது நமது ரத்தம் கொதிக்கின்றது! குலை நடுங்குகின்றது! "பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை "  என்பதுபோல் நாம் கட்டின கோவிலைக்காத்து வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை வெளியில் தள்ளி கதவு சாத்தவும், உள்ளே தள்ளி கதவு சாத்தவும் ஏற்பட்டுவிட்டார்கள் என்றால் நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்? சுவாமியைத் தொட்டுக் கும்பிடுவதும் சுவாமி பக்கத்தில் போய் கும்பிடுவதும், பார்ப்பனரும் தாமும் சரிசமமாய்க் கும்பிடுவதும் ஆகிய விஷயங்கள் இருக்கட்டும்; வெளியிலிருந்து தேங்காய் பழம் உடைத்து வைத்துக் கும்பிடுவதில் இந்தப் பார்ப்பனர்களுக்கிருக்கும் ஆட்சேபணை என்ன? இது பார்ப்பனர்களின் எந்த வேதம் சாஸ்திரம் ஆகமங்களுக்கு விரோதம் என்று சொல்லக்கூடும்? கை வலுத்தவன் காரியமாயிருக்கிறதேயல்லாமல் இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? நாம் தேங்காய் உடைப்பதால் கோவிலின் வரும்படி குறைவதா யிருந்தால் அவர்கள் கேட்பதைத் தரத் தயாராயிருக்கிறோம்.

பார்ப்பனர்களின் வரும்படி குறைந்துபோகும் என்று சொல்வதானாலும் அவர்களுக்கும் கொடுக்கவேண்டியதைக் கொடுக்கத் தயாராயிருக்கிறோம். மற்றபடி இவர்கள் ஆட்சேபிக்கக்காரணம் என்ன? மதுரைக்கோவிலில் ஸ்ரீமான் இராமநாதனை உள்ளே வைத்தடைத்ததும், அவரைத் தேங்காய் உடைக்காமல் தடுத்ததும் எதைக் காட்டுகின்றன? திருவண்ணாமலைக் கோவிலில் ஸ்ரீமான் கண்ணப்பரையும் மற்றவர்களையும் உள்ளே விடாமல் கதவை மூடிய விஷயம் கோர்ட்டிலிருப்பதால் அது முடியட்டும், மற்றபடி மதுரை விஷயத்தைப்பற்றி நமக்கு ஏற்பட்ட அவமானம் பொறுக்கக் கூடியதல்ல.

இதுபோலவே கொஞ்ச நாளைக்கு முன் தென்காசி கோவிலிலும் தேவாரம் படித்த பிறகு பிரசாதம் வாங்குவது தங்களுக்கு அவமானம் என்பதாகக்கருதி அங்குள்ள பார்ப்பனர்கள் கோவிலைவிட்டு போய்விட்டதுமல்லாமல் சுவாமி எழுந்தருளும் போது கதவை மூடிக்கொண்டார்களாம். தேவாரம்  படிக்கக் கேட்பதும், அதன் பிறகு பிரசாதம் வாங்குவதும் இந்தப் பார்ப்பனர்களுக்கு அவமானமாய்த் தோன்றினால் நம்மைத் தேங்காய் பழம் உடைத்து வைத்து சுவாமி கும்பிட வேண்டாம் என்றால் அது எவ்வளவு பெரிய இழிவு என்பதை அவர்களே சொல்லட்டும்.

ஒவ்வொரு அர்ச்சகனுக்கும் சுவாமி பூஜை  செய்ய சம்பளம் உண்டு. அது கோவில் கட்டினவர்களே இத்தனை வேளை பூஜையென்றும், அதற்கு இன்ன சம்பளம் என்றும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மற்றவர்கள் செய்யும் பூஜைக்கும், இவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அநேக இடங்களில் பக்தர்களே பூஜை செய்கிறது இன்னும் வழக்கமாகத்தான் இருக்கிறது. பிள்ளையார், மாரியம்மன், காளியம்மன் மற்றும் ரதோற்சவ காலங்களில் ரதத்தில் சுவாமி இருக்கும்போதும், கோவிலிலும் பக்தர்கள் தாங்களே தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்வதும் வழக்கமாகவே இருந்துவருகிறது.

இதுவரையில் இவ்வித வழக்கத்தை யாவரும் ஆட்சேபித்ததே கிடையாது. இதை இப்படியே விட்டுவிட்டால் பம்பாயில் புரோகிதர் சட்டம் வந்ததுபோல் அதாவது பார்ப்பானுக்குப் பணம் கொடுத்துத்தான் திதிசெய்ய வேண்டும் என்று சொன்னது இங்கும் ஆகிவிடுமென்றே சொல்லலாம். அங்காவது பார்ப்பானுக்குப் பணம் கொடுத்துவிட்டுத் தாங்களாகவே திதி செய்து கொள்வதில் ஆட்சேப மில்லை என்பதாக ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இங்கு பார்ப்பானுக்கு பணம் கொடுத்தாலும் நாம் செய்து கொள்ள பாத்திய மில்லை என்கிற சட்டம் இருக்கிறதுபோல் இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டு மதுரைத் தலைவர் ஸ்ரீமான், வி.ஜி. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் மறு உத்தரவுவரை தேங்காய் உடைக்கக்கூடாது என்று பொது ஜனங்களுக்கு 144 உத்திரவு போட்டாரோ தெரிய வில்லை. ஒரு சமயம் இதனால் கலகம் உண்டாகுமென்று நினைத்து மறு உத்தரவு வரை யாரும் கோவிலுக்குப் போகாதீர்கள் என்று உத்தரவு போட்டிருந்தால் அது சுயமரியாதையைக் காப்பாற்றப்போட்ட உத்திரவாகும். அதில்லாமல் பார்ப்பன ருக்குப் பயந்துகொண்டு போட்ட உத்திரவானது நமது சுயமரியாதையை பாதிக்கத் தக்கதென்றே சொல்லுவோம். இதனால் என்ன கலகம் எப்படி நடந்து விடக்கூடும். நாம் தேங்காய் உடைத்தால் மீனாட்சியம்மனும், சொக்கலிங்க சுவாமியும் கோவிலைவிட்டு ஓடிவிடுவார்களா? அல்லது உலகம் முழுகிப் போகுமா? அல்லது பாவமூட்டை ஏற்பட்டுவிடுமா? என்பது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லா மக்களுக்கும் சமத்துவ உரிமை வேண்டுமென்றும் யாவரும் கோவிலுக்குள் போய் சுவாமி தரிசிக்கும் உரிமை வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கு மிக்காலத்தில் ஏற்கனவே உரிமையுள்ள காரியங் களையும் விட்டுக் கொடுப்பதானால் நாம் சம உரிமை அடைய யோக்கிய முடையவர்களாவோமா? தேங்காய் உடைப்பதால் என்னதான் ஏற்பட்டுவிடும்? பார்ப்பனர்கள் சர்க்காரிடம் போய்த்தான் 144 உத்தரவு வாங்கி வரட்டுமே அதையும் பார்த்துவிட்டிருக்க வேண்டுமே அல்லாமல் அதைத் தடுத்தது நமக்குத் திருப்தியளிக்கவில்லை.

கலகம் நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நாம் சொல்லவரவில்லை.  நாம் சரியென்று நமது மனப்பூர்வமாய் யோசித்து தீர்மானித்துச் செய்யும் காரியங்களுக்கு ஒரு சிறு தடை ஏற்பட்டால் உடனே பின்வாங்கிக் கொள்கிற தென்று ஆரம்பித்து விட்டால் எப்படி முன்னேற முடியும்?   நமக்குப் பின்னால் யாராவது பிரயத்தனப்படுபவர்களுக்கு இது பெருத்த குந்தகமாய் வந்து முடியும் என்றுதான் பயப்படுகிறோம்.  ஒரு காரியத்துக்குப் போகக் கூடாது.  சிரமம் என்று நினைத்து தலையிட்டு விட்டால் அதைச் சுலபத்தில் விட்டு விட்டு ஓடவும் கூடாது;  ஆதலால், ஸ்ரீமான் முதலியார் அவர்கள் யோசித்து சீக்கிரத்தில் ஏதாவது ஒரு வசதி செய்யக் கோருகிறோம்.  இன்னும் மற்ற ஊர்களிலும் இவ்விதமான தடைகள் இல்லாமல் அவரவர்கள் தங்கள் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறோம்.

-  'குடிஅரசு' - தலையங்கம் - 13.02.1927

- விடுதலை நாளேடு, 22.7.18

சனி, 21 ஜூலை, 2018

இரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -

.10.1931 - குடிஅரசிலிருந்து...


ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.

1. கைபலம் (பலாத்காரம்)

2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)

மொகலாயர் கை பலத்தில் ஆண்டார்கள்.

வெள்ளையர் புத்தி பலத்தில் ஆண்டார்கள்.

இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை, ஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் அவ்வப்போது சில்லரை சில்லரையாய் ஆண்டிருப்பார்கள்.

ஆனால், ஆரியர்களுடைய (பார்ப்பன) சூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார் களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை

திரு. காந்திக்குப் பலமும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால், ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்குவதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயன ளிக்ககூடியதாகும். மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான் களையும் தங்க ளுடன் சேர்த்துக் கொள்ளுவார்கள்.


ஆகவே, இந்தியப் பொதுமக்களுக்கு வெற்றி, அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டு மானால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும், ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.

பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும், கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம்  என்னும், பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும். இரண்டும் இல்லாமல், காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமுகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.
- விடுதலை நாளேடு, 14.7.18
 

தீண்டாதார் கல்வி



22.11.1931 - குடிஅரசிலிருந்து....

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதிகளும் தேசியப் பத்திரிகைகளும் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப்பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.  இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப்பள்ளிக்கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்த நமது தேசநிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம். இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத்தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். பரோடா அரசாங்கத் தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக் கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்திரவு பிறப்பித்திருக்கின்றனர். ஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டா தார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்திரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும்  கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ள வர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங் களிலும், நகரங்களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செல வைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.

நாமெல்லாம் ஒருவர் என்கின்ற இன உணர்ச்சி பெற வேண்டும். நாய் நல்ல விசவாசமுள்ள பிராணிதான் என்றாலும் அது அதை (நன்றியை) மனிதனிடம்தான் காட்டுகிறதே ஒழிய, தன் இனத்தைத் சார்ந்த வேறொரு நாயைக் கண்டால் குலைக்கும். அது போலத்தான் நம் தமிழர்கள் நிலை இருக்கிறது. தங்கள் இனத்தை மாற்றானுக்குக் காட்டிக் கொடுப்பதையும், தங்கள் இனத்திற்குத் துரோகம் செய்வதையுமே கடமையாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

- தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 21.7.18

வெள்ளி, 20 ஜூலை, 2018

இந்து மதமே நம்மை தீண்டாதார் ஆக்கியது


25.10.1931 - குடிஅரசிலிருந்து....

சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப் படுவதற்கும், தீண்டாதவர் களாய் நடத்தப்படுவதற்கும் முக்கிய காரணமென்ன என்பதை யோசித்துப்பாருங்கள், வெள்ளைக் காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீன, ஜப்பான் காரர்களிலாவது தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ்ஜாதியாராகவும் நடத்து கின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப் பட வேண்டும்? நாமும் ஏன் வெகு காலமாகவே அதற்கு இணங்கி நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும்? என்பன, போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.

அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவனாவது, முகமதியானாவது நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின் றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பௌத்தர் களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே. மற்றபடி யார்  நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள்.

நம் நாட்டிலே பிறந்து, நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள் தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள்? என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல மற்றெதற்காக என்றால் நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல் வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும் நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து எல்லோரும் இந்துக்கள் என்றும் இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை, பெரிதும் வேறு நாட்டாரும் வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பௌத்தரையும், கிறிஸ்துவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லு கின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும் சுயமரியாதையே பிரதானமானதினாலும் அவர்களையாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே புத்தி கற்பித்து விடுவார்கள். ஆதலால் நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் இந்து என்னும் மதம் தான் நம்மை தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதேயொழிய வேறு எந்தக் காரணத்திலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா?

ஆகவே நம்மில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான் பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகுகால மாக நமது முன்னோர்கள் காலந்தொட்டு நாம் சண்டாளப் பறையராய் தீண்டாதாராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன்மூலம் நாமே நம்மைத் தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக் கின்றோம். அப்படி இருக்க இன்றுநாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது என்று சொன்னால் அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?

 

கழுதைக்கும் எருமைக்கும் 1000 வருஷங்களுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது... மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்தச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.

 

பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்ற வனல்ல; ஒழுக்கக் கேடானவனல்ல; சூழ்நிலை, சற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக்கியனாகவும் மடையனாகவும் ஆகின்றான்.          - தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 13.7.18