திங்கள், 29 அக்டோபர், 2018

கவலையில்லை (உலக உற்பத்தி)



20.11.1932 - குடிஅரசிலிருந்து...


உலக உற்பத்திற்கும் இயற்கை தோற்றங்களுக்கும், நடப்புக்கும் ஏதாவது ஒரு காரணப் பொருள் இருக்கவேண்டாமா என்று கேட்பதின் மூலம் எப்படியாவதுஒரு சக்தி உண்டு என்பதை ஒப்புக் கொள்ளச் செய்துஅதிலிருந்தே ஒரு கடவுளைக் கற்பிக்க முயற்சிகள்செய்யப் படுவதையும் அத்தோடேயே சர்வசக்தி, சர்வவியாபக கடவுள் நம்பிக்கைக்காரர்கள் திருப்திஅடைந்து விடுவதையும் பிறகு அதை அதிவாரமாகவைத்து பெரிய ஆகாய கோட்டைகள் கட்டு வதையும்பார்த்திருக்கிறேன்.

உலக உற்பத்திக்கும் அதில் காணப்படும் தோற்றங்களுக்கும் நடப்புகளுக்கும் விஞ்ஞானம் என்னும்சைன்சைத் தொடர்ந்து கொண்டே போனால் என்றும்சமாதானம் கிடைக்கலாமானாலும் பிறகு சைன்சுக்குயார்கர்த்தா என்கின்ற கேள்வியும் பிறக்கும். அதைஇதுவரை எந்த அறிவாளியும் கண்டு பிடிக்க வில்லைஎன்று பதில் சொன்னால் அதுதான் கடவுள் என்றுசொல்லி திருப்தி அடைவார்கள். அப்படியானால்அந்த கடவுளுக்கு யார் அவர் எப்படி உண்டானார், அவரின் நடவடிக் கைக்கு என்ன காரணம்? என்பதான கேள்விகளை முன்னையவிஷயங்களுக்குப் போடப்பட்ட கேள்வி களைபோலவே, போட்டோமானால் அப்படிபட்ட கேள்விகேட்க கூடாது என்றும், கடவுளும், சக்தியும் தானாகஉண்டான தென்றும் அதற்குக் கால வரைஇல்லையென்றும் சொல்லுவார்கள்.

அச்சமாதானத்தால் நாம் திருப்தியடையா விட்டால்அல்லது இது உங்களுக்கு எப்படி தெரிந்தது என்றுகேட்டால் (அல்லது கடவுள் தானாக உண்டாகும் போதுஇயற்கை தானாக உண்டாகாதா என்று கேட்டால்) உடனே நம்மை நாதிகன் என்று சொல்லிவிடுவார்கள். இந்த மாதிரி நிலையில் தான் ஏதோயூகத்தின் மீது அதுவும் ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டாமா என்கிற யூகத்தின் மீது இதுவாயிருக்கலாம் அல்லது அது வாயிருக்கலாம்என்கின்ற பொறுப்பற்ற நிலையில் கற்பிக்கப் பட்டஒரு கடவுள் என்பதைப் பற்றி நாம் சிறிதும்கவலைப்படுவதில்லை.

பொறுப்பு ஏற்றுவது

ஆனால் அப்படிப் பட்டதின் மீது மனித வாழ்க்கையின்பொறுப்புகளைச் சுமத்துவதும், அதைவணங்குவதும், தொழுவதும், பிரார்த்தனை செய்வதுஎன்பதும், அதை வணங்கினால் பிரார்த் தித்தால், தொழுதால் அதற்காக நேரத்தையும் அறிவையும்பணத்தையும் செலவு செய்தால் பயன் பெறலாம்என்பதும் பிரதிபலன் உண்டென்பதும் பாவங்கள்மன்னிக்கப்படுமென்பதும், மற்றும் மனித னால் தன்சுய நலத்திற்காகவும் சோம்பேறி வாழ்க்கைபிரியத்திற் காகவும் பிறர்க்குச் செய்யப் படும்சூழ்ச்சிக்கும் அக்கிரமத்திற்கும் கடவுள் செயலேகாரணம் எனச் சொல்லி ஏமாற்றுவதைப் பார்த்தால்பிறகு எப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சி யானாலும் அதுஎங்கிருந்த போதிலும் அதை அழித்தே தீரவேண்டியிருக்கிறது.

திருடனுக்கும் கடவுள்

அன்றியும் திருடப் போகிற ஒரு திருடன்தான் திருடப்புறப்படு முன் தனக்கு நல்ல திருட்டுக் கிடைக்கவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்து விட்டுபுறப்படுகிறான். நல்ல திருட்டு கிடைத்தவுடன் அதில்ஒரு சிறு பாகத்தைக் கடவுளுக்கும் அதன் திருப்பணிகளுக்கும் செலவு செய்து கடவுள் உணர்ச்சியைஅனுபவிக்கிறான். இது போலவே ஒருகொலைகாரனும் தான். விடுதலை அடையக்கடவுளைத் துதித்து விடுதலையடைந்த உடன்கடவுளுக்குப் பூசை அபிஷேக முதலியன செய்துநன்றி செலுத்துகிறான்.

இதுபோலவே சொத்துக்களை வைத்திருக்கும்உடமைதனும் தனது சொத்துக்களை திருடர்கள்கொள்ளை கொள்ளக் கூடாது என்று கடவுளைப்பிரார்த்தித்து நன்றி செலுத்துகிறான். இது போலவேகடவுள் நம்பிக்கை உள்ள சில சோம்பேறிகளும்செல்வவான்களும் கடவுள் பிரார்த்தனையின் மீதேதங்கள் வியாபாரத்தை நடத்துகின்றார்கள்.

ஆகவே கடவுள் செயலும் கடவுள் கருணையும்எவ்வளவு ஒழுக்க குறைவுக்கும் அநீதிக்கும் இடம்தருகின்றது என்று பாருங்கள். அவை இதைத் தவிரவேறு எதற்காவது பயன்படுகிறதா என்று பாருங்கள்.

 - விடுதலை நாளேடு, 26.10.18


மதம்

20.11.1932 - குடிஅரசிலிருந்து...


மதம் என்பதும் சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் உள்ளதாகச் சொல்லப் படும் கடவுள் உணர்ச்சியை மக்களிடம் பெருக்கவும், அதை நிலை நிறுத்தவும் ஏற்பட்ட ஸ்தாப னங்களாய் இருந்து வரு கின்றனவே யொழிய மற்றபடி எந்த மதத்தாலாவது, அதைச் சேர்ந்த உலக மக்கள் வாழ்க்கையிலோ பொருளா தாரத்திலோ சுதந்திரமோ, சமத்துவமோ பெற்று, கேவலம் ஜீவனத்திற்காக மற்ற மனிதனுக்கு அடிமையாகாமல் வாழ் வதற்கு  இடமளிப்பதாய் காண முடியவில்லை. ஒரு மதக் காரனே தன் மதத்தைச் சேர்ந்த மற்றொருவனை அடிமைக் கொண்டிருக் கிறான். ஆனால் அவன் மத நம்பிக்கை யென்பது மக்கள் யாவரும் கடவுள் பிள்ளைகள் எல்லோரும் சமமானவர்கள் என்று போதிப்பதாகத்தான் சொல்லு கிறான். ஆனால் ஏழை, பணக்காரன், கூலிக்காரன், எஜமான் என்கின்ற வித்தியாசம் எப்படி ஏற்பட்டது என்பதை மாத்திரம் உணரும்போது எல்லாம் வல்ல கடவுள் சக்தியையும், சமத்துவ மத போதனையையும் மறந்து விடுகின்றான்.

மதம் என்பது ஒரு போதை (தரும் - வெறி உண்டாக்கும்) வது என்று பல அறிஞர் கூறியிருப்பது போல் மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருப்ப வர்களுக்கு ஆவேசமும், வெறியும் உண்டாவது  தான் முக்கிய பலனாக இருக் கிறதேயொழிய அது கஷ்டபடுகின்ற, ஒரு பாவமுமறியாத பாமர மக்களுக்குக் காரியத்தில் இன்று என்ன நன்மை செய்திருக் கிறது? செய்கிறது? மதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டிருக்கிறது? என்ற கேள்விக்கு (இது மதத்துரோகமான கேள்வி என்று சொல்லு வதல்லாமல் வேறு) எவ்வித மான பதிலும் சொல்லுவதற்கு இடம காண வில்லை. எல்லா மதங்களும் கடவுள் அரு ளால், கடவுள் அம்சம் பெற்றவர்களால், அவரால் அனுப்பப்பட்டவர் களால் ஏற்பட்ட தாகச் சொல்லப்பட்டாலும் ஒரு மதத்திற்கும் மற்றொரு மதத்திற்கும் நடப்பு, வேஷங்கள், சடங்குகள் ஆகியவைகளுடன் மற்றும் பல முக்கிய விஷயங்களில் பெருத்த மாறுபாடும், துவேஷமும், வெறுப்பும் சிறிதாவது காணப்படுவானேன் என்பதைப் பார்த்தால் ஒன்றா? பத்து மதங்கள் இருந்தால் அதில் ஒன்று உண்மை போக பாக்கி ஒன்பது மதங்கள் பொய்யாகத் தான் இருக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு மதமும் வெவ்வேறு கடவுள் அருளால் ஏற்பட்டதாயிருக்க வேண்டு மேயொழிய ஒரே கடவுள் அருளால் ஏற்பட்ட தாயிருக்காது. எப்படியிருந்தாலும் சர்வசக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள ஒரு கடவுள்  அருளால் எந்த மதமாவது ஏற்பட்டது என்று சொல்வது பகுத்தறிவுக்கும், விவகாரத் திற்கும்  நிற்காத காரியமேயாகும். அன்றியும் ஒரேமதத்தை அனுசரிக்கிற மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி நடக்கிறார்கள் என்று சொல்லு வதற்கோ, அல்லது மதசக்தி யானது மக்கள் யாவரும் ஒரே மாதிரி நடத்தப்பட பயன்படு கின்றது. என்று சொல்லுதவற்கோ இடமில்லாமல் தான் எல்லா மதங்களும் இருந்து வருகிறது. ஏனெனில் ஊருக்கு ஒரு விதம் வகுப்புக்கு ஒரு விதம் நடப்பதுடன் வெளிப்படையாகவே ஒரே ஊரில் ஒரே மதக் கொள்கைக்கு பல வித வியாக்கியானங்களும் ஏற்பட்டு இருப்பதுடன் நடப்புகளும் எண்ணங்களும் வேறுபட்டிருக் கின்றன. ஒரு சமயம் இப்படி மாறுபட்டு நடப்பவர்கள் எல்லோரும் மூட மக்கள் என்றும், மதத்தைச் சரிவர உணராதவர்கள் என்றும் சுலபமாய்ச் சொல்லி விடலாம். ஆனாலும் அந்த மதத்தை நம்பி அதைத் தலைமுறை தலை முறையாக பின்பற்றி வந்த மக்களின் கதி அது தானா என்பதும் அம்மதத்திற்கு உள்ள சக்தி அவ்வளவுதானா? என்பதுமாவது யோசிக்க வேண்டிய முக்கிய விஷயமல்லவா? என்று கேட்கின்றேன்.

-  விடுதலை நாளேடு, 26.10.18

இதுதான் தீபாவளி

தந்தை பெரியார்


தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழ னுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின் றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டி கையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள் என்றா லும், இன்னமும் பல தமிழ் மக்கள் இழிநிலையை, மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்.

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திர மல்ல. தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர் என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றித் தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு, உற்சவங்களாக, நல்ல நாள், தீய நாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையில் ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும், ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறு அளவு ஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) - பித்தலாட் டத்தாலும், வஞ்சகம், துரோகம், மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தை யரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல், தமிழ்ப் பண்டிதர்கள் - அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால், தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங் களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்கவில்லை யென்றால், இக்கல்விக் கூடங்கள் மடமையையும், மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர் களுக்கு எந்தவிதத்தில்தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன?


(புராணம் கூறுவது)


1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று, உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி, பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமி நூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட் டினால், தூக்கிக் கட்கத்திலோ, தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந் திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லு வது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங் காளத்தில் அசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்லுகிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், இந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் - இதை என்னவென்று சொல்வது?

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

- விடுதலை நாளேடு, 26.10.18

வெள்ளி, 26 அக்டோபர், 2018

தந்தை பெரியாரும், வரவு-செலவு கணக்கும்(1)& (2)

தந்தை பெரியாரும், வரவு-செலவு கணக்கும் (1)

'ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு' என்பது பழமொழி.


எதையும் அளவிட்டு, அளவறிந்து, திட்டமிட்டு வாழ்வில் செய்தால் நமது வாழ்க்கை பயனுள்ள தாகவும், பிறகு வருந்தத்தகாததாகவும் கூட அமையக்கூடும்!

செலவழிப்பதில்கூட திட்டமிட்டு, கணக்குப் பார்த்துச் செலவழிப்பது, செலவழித்ததை மறந்து விடாமல் செலவு கணக்கில் ஒரு சிறு குறிப்பில் எழுதி வைப்பதும் நம்மை மேலும் செம்மையுறச் செய்யும்!

நம்மில் பலரும் செலவழித்துப் பழக்கப்பட்ட வர்களே! திட்டமிட்டு செலவழித்தோ அல்லது முன்னுரிமை எதற்கு - எந்த அளவு இதற்கு நம்மிடம் உள்ள நிதியை ஒதுக்கிட முடியும் என்று ஆழ்ந்து யோசித்துச் செலவழிப்பதில்லை. அப்படிப்பட்ட வர்கள் வாழ்க்கை கடனாளி வாழ்க்கையாகவும், வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்த இயலாமல், சாக்குப் போக்கு கூறி ஓடி ஒளியும் தலைமறைவுக்காரராக ஆக்கி, தமது நாணயத்தை இழந்தவர்களாகிவிடும் மிகப் பெரிய சமூக அவலத் திற்கு ஆளாகி விடும் விரும்பத்தகாத நிலையும்கூட உள்ளது!

பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் படித்த ஷேக்ஸ்பியரின் ஒரு வரி அறிவுரை வசனத்தை, அவர் படைத்த ஒரு பாத்திரம் கூறுவதாக நமக்குக் கற்பித்தார் நமது பேராசிரியர்!

'Neither a lender nor a borrower be' 

கடனும் கொடுக்காதே, கடனும் வாங்காதே'

- இந்த அறிவுரையை பெரிதும் - நான் அறிந்த வகையில் - வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகிய தலைவர் தந்தை பெரியார் அவர்களாவார்கள்!

'மண்டிக்கடை ஈ.வெ.ராமசாமி நாயக்கராக' இருந்த காலத்திலேயே அவர் இதனைக் கற்றவர் என்றாலும் தொழில் வாழ்க்கைக்குப் பொருந்தாது; தனி வாழ்க்கைக்கு மட்டும்தான் என்பதையும் நன்கு புரிந்தவர்!

அய்யா தந்தை பெரியார் அவர்களிடம் யாராவது கடன் கேட்டால் - கூடுமானவரை மறுத்து விடுவார் - முகதாட்சண்யம் பார்க்காமலேயே கூட. இப்படி தன்னிடம் வந்து கேட்பவர்களிடம் முகத்திற்கு நேரே சொல்வார்.

"என்னிடம் கடனாக நீங்கள் பெற்று, உறுதி யளித்தபடி திருப்பிக் கொடுக்க இயலாது போகும் போது உங்களுக்கும் தர்மசங்கடம்; எனக்கும் மன வேதனை - இரண்டும் வேண்டாம்! இதோ ஒரு சிறு தொகை - இதை நான் தங்களுக்கு நன்கொடை யாகவே தந்துவிடுகிறேன்; பெற்றுக் கொள்ளுங்கள். இதை எனக்குத் திருப்பித் தர வேண்டாம்" என்றே கூறுவார்கள்!

தனது நண்பர்களின் வேண்டுகோள் காரணமாக, சில மில்களில் முதலீடு செய்து அந்த வட்டித் தொகையைப் பெருக்கி, இயக்கப் பணத்தில் சேர்த்துப் பெருக்கியே மகிழ்ந்திருக்கிறார்!

அந்த மில் நிர்வாகத்திடமிருந்து, குறிப்பிட்ட (3 மாத வட்டித்தொகை) தேதியில் டி.டி.யாக வரவில்லை என்றால் ஓரிரு நாள் பொறுப்பார்; உடனே கடிதம் எழுதி உடன் தொகையை அனுப்ப நினைவூட்டுவார்; அதன் மேலும் தாமதமானால், சிக்கனத்திற்கே பேர்போன தந்தை பெரியார் அந்த 'பாக்கியாளருக்கு' தந்தியே அனுப்புவார். (இதில் தந்தி செலவு பார்க்க மாட்டார்) அவர் வியாபாரப் பாரம்பரியத்தில் வந்ததால், வந்த வட்டித் தொகையை உடனே வங்கியில் போட்டு வைத்து, அதன்மீது வட்டி இழப்பு ஏற்படாமல் பெருக்க வேண்டுமென்றே விரும்புவார்!

பலருக்கு உதவும் போது கூட, சிறுதொகை ரூ.50, ரூ.100 போன்றவைகளுக்குக்கூட, 'செக்' காசோலை யாகவே கொடுப்பார். செலவு கணக்குப் பார்ப்பதற்கு அது வசதியாக இருக்கும். என்றாலும் அதையும் மறக்காமல் தனது டைரியில் குறித்து வைப்பார்.

வழிச்செலவுக்குப் பணத்தை (50 ரூபாய்தான் அப்போது) வாங்கி - சுருக்கெழுத்தில் கொடுத்தவர் முன் எழுத்தைப் போட்டு - வீ(ரமணி) க(டலூர்) கூட்டத்திற்கு அழைத்து அய்யாவிடம் 25 ரூபா தந்து 25 ரூபாய் பாக்கி என்பதையும் மற்றொரு பக்கத்தில் (கடைசிப் பக்கத்தில்) குறித்து வைத்து, நினைவாக அவ்வூரில் கூட்டம் முடித்தோ, முன்போ கேட்பார் - இப்படிச் சிக்கனமாகச் சேர்த்துத்தான் மக்களுக்கே விட்டுச் சென்றார்.

Time Management என்பது எவ்வளவு முக் கியமோ அவ்வளவு முக்கியம் பணத்தை சேமிப் பதும், செலவழிப்பதும் Money Management ஆகும்!

ஒரே ஒரு வேறுபாடு இரண்டிற்கும் எது என்றால் பணத்தைச் செலவழித்தால் மீண்டும் சம்பாதிக்க முடியும்; நேரத்தைச் செலவழித்து விட்டால் செல வழிக்கப்பட்ட நேரத்தை - காலத்தை - மீண்டும் வாழ்நாளில் திரும்பப் பெறவே முடியாது!

தந்தை பெரியாரின் பொது வாழ்க்கையிலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் அநேகம்; அதைவிட அய்யாவின் தனி வாழ்விலிருந்தும் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. அவர்களைப் பொறுத்த வரை தனிவாழ்வு - பொது வாழ்வு என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை; இரண்டறக் கலந்தவையாகும்!

என்றாலும் இப்படி எதையும் கணக்கிட்டுச் செலவழிப்பது,  வரவு-செலவுகளைப் பதிய வைத்து அசைபோட்டுப் பார்ப்பது ஒவ்வொருவரின் வாழ்க் கையிலும் உயர்வைத் தரும்!

அய்யா தந்தை பெரியாரின் 'டைரிக் குறிப்பு' எப்படி வருமான வரித்துறை கீழமை அமைப்பு அவர்மீது சாட்டிய ஆதாரமற்ற குற்றம் - "வரு மானத்தை மறைத்தார்" என்பது! (அவரால் ஆளாக் கப்பட்டவர்கள் ஆதாரமற்ற புகார்களை எழுதிப் போட்டதன் விளைவு) அழிக்கப்பட வொன்னாத சரியான மருந்தாகி, வழக்கை வென்றது எப்படி என்பதை நாளை பார்ப்போம்!

- நாளையும் வரும்
- விடுதலை நாளேடு, 25.10.18

தந்தை பெரியாரும், வரவு-செலவு கணக்கும் (2)



மத்திய அரசின் வருமானவரித் துறையினர் - அவர்களுக்கு, கழகத்தை விட்டுவெளியேறிய தி.பொ. வேதாசலம் அவர்களும், குத்தூசி க. குருசாமி அவர்களும் எழுதியனுப்பிய கடிதம், பெரியாரிடம் உள்ள பணம் பற்றியும், அதற்கு உரிய கணக்கு வரி முதலியன போடவும் தூண்டி எழுதப்பட்டதை வைத்தே 1956-57 முதல் 1963-64; 1965-66, 1966-1967, 1967-68 இப்படி பல ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்தவில்லை - வருமானத்தை மறைத்தார் என்று குற்றஞ் சுமத்தி பெரியார் அறக்கட்டளையான, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்பதற்கும், அதே தொகை ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் என்று தனிப்பட்ட நபர்  ஹோதாவிலும் என்று வரி, அபராத வட்டி இப்படி அய்யா காலத்தில் 15 லட்சம் ரூபாய்; அம்மா பொறுப் பேற்ற பிறகு 60 லட்சம் ரூபாய்;  எனது பொறுப்பில் வந்த வழக்கு I.T. Tribunal என்ற மேல் முறையீட்டு டிரிபியூனல் நடுவத்தில் 80 லட்சம்  ரூபாய் என்றும் வந்தது. இவ்வழக்கு விசாரணையில் நிறுவனம் சார்பில் வாதாடிய பிரபல வழக்குரைஞர் உத்தம்ரெட்டி (ஏற்கெனவே வருமான வரித்துறை பெரிய அதிகாரியாக இருந்து பிறகு வழக்குரைஞர் தொழிலை மேற்கொண் டவர்) "பெரியார் எந்தத் தொழிலையும் 1919க்குப் பின்  செய்யவே இல்லை; பொது வாழ்வில் தான் இருந்தார். அவருக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட அன் பளிப்புகள், நன்கொடைகளைக்கூட, அவர் சொத்துக்கள்  மூலம் வந்த வருமானம் உட்பட வங்கியில் தான் போட்டு நிறுவனத்திற்குத்தான் அளித்து வந்துள்ளார்!

அவர் வருமானத்தை மறைத்தார் என்பது சரியல்ல.

வழிச் செலவிற்குக் கொடுக்கப்பட்ட - ஒரு கூட்டத்திற்கு 50 ரூபாய் என்றால் அதைத் தோழர்கள் கொடுத்தபோதுகூட பெயருடன், தேதியுடன் வங்கிக் கணக்கில் போட்டு, டைரியில் குறித்து வைத்துள்ளார். இதோ அந்த சில டைரிகள்" என்று இரண்டு நடுவர்களுக்கும் காட்டினார்.

அய்யாவின் எழுத்துக் குறிப்புகளை சரியாக விளங்கிக் கொண்டு படித்துக் காட்ட, நடுவர்கள், நீதிபதிகள் என்னையே படித்துக் காட்டச் சொன்னார்கள். நான் படித்து முன் எழுத்து -சுருக்கியுள்ளதையும் அவர்களுக்கு விளக்கியபோது தந்தை பெரியாரின் பொறுப்பு மிகுந்த நிதி மேலாண்மையைக் கண்டு வியந்து, இதில் வருமானத்தை மறைத்தார் என்ற குற்றச்சாற்றுக்கு ஏது இடம் என்றே கேட்டார்கள். பிறகு தீர்ப்பு ஆணையும், எழுதி, அந்த வரி விதிப்பு முழுவதையும் தள்ளுபடி செய்து, அறக்கட்டளைத் தகுதியை வழங்கினார்கள்!

அய்யா பெரியார் அவர்களுக்கு லெட்ஜர், குறிப்பு, பேரேடு எல்லாம் அவரது பையில் உள்ள டைரியும், 'செக்  புத்தகங்களின் அடிக்கட்டையும்' (Counterfoil) தான். அதில் யாருக்கு இந்த காசோலை கொடுக்கப்பட்டது - என்பதற்கான குறிப்பை அவரது கையிலேயே எழுதி வைத்திருப்பார்கள். அந்த பழைய 'செக்' புத்தகங்களை, அடிக்கட்டைகளையும்கூட அந்த நீதிபதிகளான நடுவர்கள் பார்த்து வியந்தனர்.

சில நேரங்களில் அவருக்கு அவரது டைரிக் குறிப்பின் முன் எழுத்துள்ள நபர் யார் என்பது நினைவுக்கு வராவிட்டால் வலிந்து அதை நினைவூட்டிக் கொள்வார்; முடியாதபோது அன்னை மணியம்மை யாரையோ, தனிச் செயலாளர் புலவர் இமயவரம் பனையோ, எங்களைப் போன்றவர்களையோ கேட்பார். நாங்கள் "அய்யா, இன்னார் இந்த ஊருக்கு தேதி கேட்டு முன் பணமாக பாதி 25 ரூபாய் தந்தார். மற்ற 25 ரூபாய் தங்களைப் பார்க்க வந்த இந்த ஊர் கழகப் பொறுப்பாளர் இன்னார் கொடுத்தார்" என்றவுடன் திருப்தி அடைவார்!

சில்லறை நோட்டுகள் ரூபாய் 90, 95 சேர்ந்தவுடன் அதை 100 ரூபாய் நோட்டாக மாற்றிடவே விரும்புவார். சிக்கனம் சேமிப்புக்காக அவர் கடைப்பிடித்த வழி அது! பக்கத்தில் அம்மாவிடம் கேட்பார். "ரூ.5 இருந்தால் கொடு" என்று! 95+5 = ரூ.100 நோட்டு வாங்கி வா என்பார். மற்றவர் எவரும் வந்து புதிதாக பணம் கொடுத்தால் நினைவு தப்பிய - வாங்கிய 5 ரூபாய், 10 ரூபாய் கடனை அம்மாவிடம்கூட பைசல் செய்து விடுவார்!

100 ரூபாய் நோட்டை சேமிப்பாக்கி வங்கிக் கணக்கில் போடுவார்.

இப்படித்தான் நண்பர்களே, தந்தை பெரியாரின் சிக்கனம் தமிழ் நாட்டின் பொக்கிஷம் ஆகியது. இன்று குழந்தைகள் விடுதி,  ஏராளமான கல்வி நிலையங்கள், நூலகம், படிப்பகம், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி, ஏடுகள் என்றெல்லாம் மக்களுக்கே திருப்பி (அவை மூலம்) தரப்படுகின்றன!

எளிமை, சிக்கனம், ஆடம்பரத்தை இயல்பாகவே ஏற்காத மனம் - அவருடைய வாழ்வியல்!

திருச்சியில் மாளிகையில் தங்கியிருந்து  சாப்பிடும் உணவுகூட மிகவும் எளிமை,  ஏராளம் பல காய்கறி வகைகள் சமைக்காது - ஒன்று இருந்தாலே போதும் என்ற நோக்கு!

இப்படிப்பட்ட எளிய, மக்கள் தலைவரை எங்கே காண முடியும்?

விளம்பரப்படுத்திக் கொள்ளாத எளிமை, விரும்பி வாழ்ந்த சிக்கனம், வெறுக்கப்பட்ட ஆடம்பரம் - இவைதாம் பெரியார்! நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்கூட! இல்லையா?

- விடுதலை நாளேடு, 26.10.18

கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றி பெரியார்...

கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து
என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா? இது
போலத்தானே
இஸ்லாம் மதம் என்பதும்
சொல்லப்படுகிறது? முகம்மது
கடவுளுக்கு (கடவுளால்
அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத்
தூதர் எதற்கு? குரான் கடவுளால்
தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட
செய்தியாம்.கடவுள் மக்களுக்குச்
செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு
மனிதர் (தூதர்) வாயினால் தான்
சொல்லச்
செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா
மனிதருக்கும் ஏககாலத்தில்
தெரியும்படிச்
செய்ய முடியாதா? உலகில் மனிதன்
தோன்றி எத்தனையோ இலட்சம்
ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு
சிலருக்கு மாத்திரம் சொல்லும் படி ஏன்
சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன்
தெரிவிக்கவில்லை? முகமது நபி
என்பதை
ஏற்றுக் கொண்டு, அவரை
நம்பினவர்களுக்குத்தானே குரான்?
மற்றவர்கள் அதை
ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப்
பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள்
சொல்,
அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு
மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும்
எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி
இருக்கிறது! இதுதான் கடவுள்
தன்மையா?
இவையெல்லாம் மனிதத் தன்மையா?
மனிதக் கற்பனையா?
தெய்வத்தன்மையா? ஒரு
சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை
வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
--------------14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-6