திங்கள், 29 அக்டோபர், 2018

மதம்

20.11.1932 - குடிஅரசிலிருந்து...


மதம் என்பதும் சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் உள்ளதாகச் சொல்லப் படும் கடவுள் உணர்ச்சியை மக்களிடம் பெருக்கவும், அதை நிலை நிறுத்தவும் ஏற்பட்ட ஸ்தாப னங்களாய் இருந்து வரு கின்றனவே யொழிய மற்றபடி எந்த மதத்தாலாவது, அதைச் சேர்ந்த உலக மக்கள் வாழ்க்கையிலோ பொருளா தாரத்திலோ சுதந்திரமோ, சமத்துவமோ பெற்று, கேவலம் ஜீவனத்திற்காக மற்ற மனிதனுக்கு அடிமையாகாமல் வாழ் வதற்கு  இடமளிப்பதாய் காண முடியவில்லை. ஒரு மதக் காரனே தன் மதத்தைச் சேர்ந்த மற்றொருவனை அடிமைக் கொண்டிருக் கிறான். ஆனால் அவன் மத நம்பிக்கை யென்பது மக்கள் யாவரும் கடவுள் பிள்ளைகள் எல்லோரும் சமமானவர்கள் என்று போதிப்பதாகத்தான் சொல்லு கிறான். ஆனால் ஏழை, பணக்காரன், கூலிக்காரன், எஜமான் என்கின்ற வித்தியாசம் எப்படி ஏற்பட்டது என்பதை மாத்திரம் உணரும்போது எல்லாம் வல்ல கடவுள் சக்தியையும், சமத்துவ மத போதனையையும் மறந்து விடுகின்றான்.

மதம் என்பது ஒரு போதை (தரும் - வெறி உண்டாக்கும்) வது என்று பல அறிஞர் கூறியிருப்பது போல் மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருப்ப வர்களுக்கு ஆவேசமும், வெறியும் உண்டாவது  தான் முக்கிய பலனாக இருக் கிறதேயொழிய அது கஷ்டபடுகின்ற, ஒரு பாவமுமறியாத பாமர மக்களுக்குக் காரியத்தில் இன்று என்ன நன்மை செய்திருக் கிறது? செய்கிறது? மதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டிருக்கிறது? என்ற கேள்விக்கு (இது மதத்துரோகமான கேள்வி என்று சொல்லு வதல்லாமல் வேறு) எவ்வித மான பதிலும் சொல்லுவதற்கு இடம காண வில்லை. எல்லா மதங்களும் கடவுள் அரு ளால், கடவுள் அம்சம் பெற்றவர்களால், அவரால் அனுப்பப்பட்டவர் களால் ஏற்பட்ட தாகச் சொல்லப்பட்டாலும் ஒரு மதத்திற்கும் மற்றொரு மதத்திற்கும் நடப்பு, வேஷங்கள், சடங்குகள் ஆகியவைகளுடன் மற்றும் பல முக்கிய விஷயங்களில் பெருத்த மாறுபாடும், துவேஷமும், வெறுப்பும் சிறிதாவது காணப்படுவானேன் என்பதைப் பார்த்தால் ஒன்றா? பத்து மதங்கள் இருந்தால் அதில் ஒன்று உண்மை போக பாக்கி ஒன்பது மதங்கள் பொய்யாகத் தான் இருக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு மதமும் வெவ்வேறு கடவுள் அருளால் ஏற்பட்டதாயிருக்க வேண்டு மேயொழிய ஒரே கடவுள் அருளால் ஏற்பட்ட தாயிருக்காது. எப்படியிருந்தாலும் சர்வசக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள ஒரு கடவுள்  அருளால் எந்த மதமாவது ஏற்பட்டது என்று சொல்வது பகுத்தறிவுக்கும், விவகாரத் திற்கும்  நிற்காத காரியமேயாகும். அன்றியும் ஒரேமதத்தை அனுசரிக்கிற மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி நடக்கிறார்கள் என்று சொல்லு வதற்கோ, அல்லது மதசக்தி யானது மக்கள் யாவரும் ஒரே மாதிரி நடத்தப்பட பயன்படு கின்றது. என்று சொல்லுதவற்கோ இடமில்லாமல் தான் எல்லா மதங்களும் இருந்து வருகிறது. ஏனெனில் ஊருக்கு ஒரு விதம் வகுப்புக்கு ஒரு விதம் நடப்பதுடன் வெளிப்படையாகவே ஒரே ஊரில் ஒரே மதக் கொள்கைக்கு பல வித வியாக்கியானங்களும் ஏற்பட்டு இருப்பதுடன் நடப்புகளும் எண்ணங்களும் வேறுபட்டிருக் கின்றன. ஒரு சமயம் இப்படி மாறுபட்டு நடப்பவர்கள் எல்லோரும் மூட மக்கள் என்றும், மதத்தைச் சரிவர உணராதவர்கள் என்றும் சுலபமாய்ச் சொல்லி விடலாம். ஆனாலும் அந்த மதத்தை நம்பி அதைத் தலைமுறை தலை முறையாக பின்பற்றி வந்த மக்களின் கதி அது தானா என்பதும் அம்மதத்திற்கு உள்ள சக்தி அவ்வளவுதானா? என்பதுமாவது யோசிக்க வேண்டிய முக்கிய விஷயமல்லவா? என்று கேட்கின்றேன்.

-  விடுதலை நாளேடு, 26.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக