செவ்வாய், 9 ஜூலை, 2024

கன்னடத் திரைப்படங்களில் பெரியார் சிந்தனை!

 

விடுதலை நாளேடு

கன்னடத் திரைப்படங்களின் பரிதாப நிலை கருநாடக மாநில எல்லைக்கு வெளியே அவற்றுக்கு வியாபாரமே இல்லை என்பதுதான். அவ்வப்போது எழும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளாலும் மற்ற மாநிலங்களில் திரையிட இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பல சிறந்த கன்னடப் படங்கள் பற்றி நமக்குத் தெரிவதே இல்லை. தொழிற்நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட பிறகு சில வலைதளங்களில் சிலவற்றைப் பார்க்க முடிகிறது என்றாலும் குறை முழுமையாகத் தீரவில்லை. அற்புதமான சில கன்னடப் படங்களில் பெரியார் சிந்தனை பளிச்சிடுகிறது. மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு போன்ற பல அம்சங்கள் அவற்றில் புதைந்துள்ளன. “அடடே! தந்தை பெரியாரும் இதைத்தானே சொன்னார்!” என்று சில படங்கள் வியக்க வைக்கின்றன. மூன்று முத்தான திரைப்படங்கள் – “கடஷ்ரத்தா” (1977), “வம்ச விருஷா” (1971), “சம்ஸ்காரா” (1970) ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போமா?

கடஷ்ரத்தா

படம் வெளிவந்த ஆண்டு 1977. உடுப்பா என்ற பார்ப்பனர் வேத பாடசாலை நடத்தி வருகிறார். மகள் யமுனா ஒரு கைம்பெண். சமூக எதிர்ப்புகளை மீறி மறுவாழ்வு தேடிக் கொள்ள முடிவு செய்கிறாள். ஒரு பள்ளி ஆசிரியரைக் காதலித்து ரகசியமாக உறவு கொள்கிறாள். வேதப் பாடசாலைக்கு நன்கொடை திரட்ட ஊர் ஊராகச் செல்லும் உடுப்பாவுக்கு இது தெரியாது. யமுனா கருவுற்றிருக்கும் நிலையில் பார்ப்பனர் கூட்டம் அவளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அவளை விரட்டியடிக்கிறது. யமுனாவிற்கு கருக்கலைப்பு நிகழ்கிறது. ஊர் திரும்பி வரும் உடுப்பா நடந்தவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பின் உயிருடன் வாழும் மகளுக்கு ஈமச் சடங்குகள் (கடஷ்ரத்தா) செய்கிறார். உயர்ஜாதி வெறியர்களால் யமுனாவின் சிரம் மழிக்கப்பட்டு ஓர் ஆலமரத்தடியில் அவள் அனாதையாக விடப்படுகிறாள். வேதப் பாடசாலையில் பயின்ற ஒரு சிறுவன் நானி அவளுக்காக பரிதாபப்பட்டு ஆறுதலாக இருக்கிறான். அதுவும் நீடிக்கவில்லை. அவனை இழுத்துச் சென்று விடுகிறார்கள்.

தந்தை பெரியாரால் சமூகச் சீர்திருத்தம் ஏற்படுவதற்கு முன்பு இருந்த அவல நிலையை இந்தப் படம் சித்தரிக்கிறது. பெரியார் ஏன் எல்லா காலத்திற்கும் தேவைப்படுகிறார் என்பதையும் புரிய வைக்கிறது.

வம்ச விருஷா

1971இல் வெளிவந்து பல விருதுகளைப் பெற்ற படம். மூலக்கதை எஸ்.எல்.பைரப்பா எழுதிய நாவல். இயக்குநர் கிரீஷ் கர்னாட். கதையின் காலக்கட்டம் 1924.

சிறீனிவாஸ ஷ்ரோத்திரி ஆச்சார அனுஷ்டானங்களில் மூழ்கிப் போன பார்ப்பனர். மகன் நஞ்சுண்டன் ஒரு குளத்தில் நீரில் மூழ்கி இறந்துவிடுகிறான். மருமகள் கார்த்தியாயினி தலையை மழித்துக் கொள்ளாமல், விதவைக் கோலம் பூணாமல் வாழ முடிவு செய்கிறாள். மகன் சிறீனி தாத்தாவின் பெயருடன் வாழ்கிறான். கார்த்தியாயினி உயர் கல்விக்காக கல்லூரிக்குச் செல்கிறாள். ராஜா ராவ் என்ற கல்லூரிப் பேராசிரியரை நேசித்து மறுமணம் செய்து கொள்கிறாள்.

சிறீனிவாஸ ஷ்ரோத்திரிக்குத் தான் பார்ப்பனரே அல்ல என்ற உண்மை ஒரு நாள் தெரிய வருகிறது. ஆண்மை இழந்த தந்தை மனைவியை ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞனுடன் உறவு கொள்ள வைத்து, அப்படிப் பிறந்தவர் இவர் என்ற உண்மை தெரிய வருகிறது. வம்சம் என்ற மரம் (விருஷம்) தழைக்கவும், சொத்து பங்காளிகளுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காகவும் அந்த மனிதர் செய்த கொடுமை அது. சில பார்ப்பனர்களின் வேர் உண்மையில் எது என்று யாருக்குத் தெரியும் என்பதே இந்தப் படம் மறைமுகமாகக் கேட்கும் கேள்வி.

சம்ஸ்காரா

நம் பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில இரண்டு ஆண்டுகளுக்கு முன் திரையிடப்பட்ட படம் இது. 1970இல் வெளிவந்தது. மூலக்கதை யு.ஆர்.அனந்தமூர்த்தி. தேசிய விருது பெற்ற படம்.

துர்வாசபுரா என்ற கிராமத்தில் நாராயணப்பா எனும் பார்ப்பன இளைஞன் எல்லா பார்ப்பனிய கோட்பாடுகளையும் நிராகரித்து வாழ்பவன். அவன் இறந்த பின் இறுதிச் சடங்குகள் செய்ய பார்ப்பனர் எவரும் முன்வராத நிலை ஏற்படுகிறது. ப்ரானேஷாச்சார்யா என்ற பார்ப்பனர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வதே படத்தின் இறுதிக் கட்டம். பார்ப்பனர் அல்லாத எவரும் சடங்கைச் செய்யவும் கூடாதாம். இறுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் ரகசியமாக சடங்கைச் செய்தே விடுகிறாள். உயர் ஜாதியினரின் ஆணவப் போக்கையும், பிற்போக்குத்தனத்தையும் வெளிப்படுத்திய படம் “சம்ஸ்காரா”.

அறிவியல் சாதனை

‘இனிவரும் உலகம்’ தந்தை பெரியார் எந்த அளவுக்கு அறிவியல் சாதனைகளை உறுதியாக நம்பினார் என்பதை நமக்குப் புரியவைத்தது, அவருடைய அடிச்சுவட்டில் பயணித்து வந்துள்ள நம் ஆசிரியர் அறிவியலின் சிறப்பைப் பற்றி எக்கச்சக்கமாக எழுதிக் குவித்துள்ளார். அறிவியலின் சமீப கால சாதனை காலத்தால் அழியாதவை என்று எல்லோரும் நம்பியும் அழிந்துப் போன பல இந்தியத் திரைப்படங்களுக்கு மீண்டும் உயிரூட்டி புதிய வடிவம் தந்த அதிசயம்தான்.

பல பழைய படங்களின் நெகடிவ்கள் புழுதி படர்ந்து கிடக்கின்றன. National Film Archive of India (NFAI) மற்றும் Film Heritage Foundation (FHF) எனும் நிறுவனங்கள் பல நவீன தொழிட்நுட்பங்களைப் பயன்படுத்தி அத்தகைய படங்களைப் புதுப்பித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 46 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த “கடஷ்ரத்தா” என்ற கன்னடப் படம் இவர்களால் மீண்டும் உயிர் பெற்றுள்ளது. ஷ்யாம் பெனகலின் “மன்தன்” புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பல தமிழ்ப் படங்களும் காணாமல் போய்விட்டன. உதாரணமாக – “வேலைக்காரி”. 1980இல் வெளிவந்த திரைப்படம் “நதியைத் தேடி வந்த கடல்” வலைதளங்களில் கூட இல்லை. அதன் இயக்குநர் லெனின் “நானே தேடிக்கிட்டிருக்கேன்.

கிடைச்சா சொல்லுங்க” என்கிறாராம். அவருடைய சகோதரர் இருதயராஜும் தேடும் பணியில் உள்ளார்.

திராவிட இளைஞர்களின் சீற்றம் களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள் காரியமாற்ற நாங்கள் தயார் – தந்தை பெரியார்


விடுதலை நாளேடு

 பார்ப்பனிய ஆதிக்கம் திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, “நமக்குள்ளே மறைவாக நாசமடைவதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப் படையாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா?” என்று திராவிட இளைஞூர்கள் சீற்றத்துடன் கேட்டனர்,

போராட்டம்

“போராட்டம்! போராட்டம்! என்ற உங்களின் பேரொலியைக் கேட்டுப் பொறுங்கள்! பொறுங்கள்!! எனக் கையமர்த்தினேன். இனியும் நான் அவ்வாறு செய்ய நமது சர்க்கார் இடங்கொடுக்கவில்லை! இனிப் போராட்டந்தான் என்று சர்க்கார் சொல்லும்போது நான்தான் என்ன செய்வேன்! எதிர் நடவடிக்கை வேண்டும் என்கிறீர்கள்! எனக்கு ஒன்றும் ஆட்சே பனையில்லை! இனித்தடை செய்ய வேண்டும் என்பதும் என் விருப்பமில்லை! இதை நீங்கள் தெளிவாய் அறிந்து கொள்ளுங்கள்! ஆனால் மற்றொன்றை நீங்கள் மறத்தலாகாது! சிறிதாவது நியாயத்திற்குச் செவி சாய்க்கும் வெள்ளையன் ஆட்சி இப்போதில்லை! இப்போது நம்மை ஆளுபவர்கள் அகிம்சாவதிகளான நம்மவர்கள்! ஜீவகாருண்யம் என்று பெரும் பேச்சாய் பேசிக் கொண்டு “விதையை” கரைத்தே ஆட்டினையும், மாட்டினையும், அதைப் போன்ற மற்றும் பல ஜீவன்களையும் அழித்து யாக வேள்வி நடத்தும் அகிம்சாவாதிகள் நடத்தும் ஆட்சியில் நாம் இருக்கிறோம்! இதை நீங்கள் மறக்கக் கூடாது. இந்த ஆட்சியில் நேரடி நடவடிக்கையென்றால் எந்த இழப்புக்கும், எப்போதும் நீங்கள் தயாராயிருக்க வேண்டும்! தொழிலைக் கருதாமல், தொந்தரவை எண்ணாமல், வாழ்வை மதியாமல், மனைவி மக்களை விலங்கு என்று கொள்ளாமல், ஒழிப்போம் இழிவை! ஒடுக்குவோம் அடக்கு முறையை! வாழ்வோம் மனிதர்களாக! இன்றேல் மடிந்தொழிவோம் வீரர்களாக! என்ற முடிவுக்கு வந்திருப்பவர்கள் எத்தனை பேர்? இதை நான் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு என்ன?” இவ்வாறு கேட்டார் படைத்தலைவர், தந்தை பெரியார்.
அடக்குமுறையை எதிர்த்து

“எனக்கு வயது 70 ஆகிவிட்டது. அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியது சுடுகாட்டில்தான். அதற்குள் ஒரு கை பார்த்துவிடத் தான் போகிறேன்.”
இந்தக் கர்ஜனையைக் கேட்டு எந்த மந்த மதியினர்க்குத்தான் உணர்ச்சி உண்டாகாதொழியும்! “இந்த ஆணவ மந்திரிசபை ஒழிக! கட்டாய ஹிந்தி ஒழிக! என்ற பேரொலியோடு, கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் “அடக்கு முறை ஆயுதங்களை எதிர்த்தொழிப்போம்” என்று கைதூக்கித் தங்கள் தங்கள் உடன்பாட்டை அறிவித்த கண்கொள்ளாக் காட்சிகள்” எப்படி உண்டாகாமலிருக்கும்?
இதுவரை சுற்றுப் பிரயாணம் செய்த ஒவ்வொரு ஜில்லாவிலும் 500 பேர், 1000 பேர், 1000க்கு அதிகமான பேர் என்று சொல்லத்தக்க வகையில் “எப்பொழுதும் நாங்கள் போராட்டத்திற்குத் தயார்” என்று பெரியார் அவர்களிடம் நேரில் வந்து உறுதி கூறிய காட்சியையும், “இன்னும் சில நாள் பொறுங்கள்” என்று படைத்தலைவர் பகர்ந்து வரும் காட்சியையும் கேட்டுக்கேட்டு நாம் பூரிப்படைகிறோம்.
நமக்கு வரும் கடிதங்களைக் குறித்து இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
“எதற்காக இந்தக்கால தாமதம்? நம்முடைய வலிமையை நம் தலைவர் அறியமாட்டாரா? இப்பொழுது எதற்காக ஒவ்வொரு ஜில்லாவுக்குமாக செல்லவேண்டும்? இந்தத் தள்ளாத வயதில், நெருக்கடியான நேரத்தில் இந்த மாதிரியான ஒரு முயற்சி செய்யத்தான் வேண்டுமா? களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள்! காரிய மாற்ற நாங்கள் தயார்! எப்பொழுது? எப்படி? இதுதானே இப்பொழுது வேண்டும்” என்று துடி துடிப்போடு எழுதியிருக்கிறார் ஒரு தோழர்.

வீரத்திற்கு எடுத்துக்காட்டு

“நான் ஒரு தொழிலாளி. எனக்கு நான்கு குழந்தைகள் உண்டு. என் மனைவிக்கு இது ஆறாவது மாதம். இருந்தாலும் தாங்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தில் நான் பங்கு எடுத்துக் கொள்ளுகிறேன்; நான் மட்டுமல்ல என் வாழ்க்கைத் துணைவியும்தான். குழந்தைகளை அதனதன் இயற்கைக்கு விட்டுவிடவேண்டிய தாயிருக்குமே என்பதைப் பற்றி நாங்கள் கவலைப் படவில்லை. எப்பொழுது உங்கள் உத்தரவு? இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று எழுதியிருக்கிறார் இன்னொரு தோழர்.

“அய்யா! முந்திய போராட்டத்தி லேயே கலந்து கொண்டவன் நான். இப்பொழுது ஆரம்பிக்கவிருக்கும் போராட்டத்தில் எனக்கும் முதலிடம் தரவேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். எக்காரணம் கொண்டும் இதை மறுக்கக் கூடாது” இவ்வாறு உரிமையை நிலை நாட்டிப் பாத்தியதை கேட்கிறார் இன்னொரு தோழர்.
வந்த கடிதங்களில் இங்கு நாம் இரண்டொன் றைத்தான் குறிப்பிட்டிருக்கின்றோம். சில தோழர்கள் வஞ்சினங்கூறி எழுதி, ரத்தத்திலேயே கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார்கள்.
சுருக்கமாகக்கூறவேண்டுமென்றால், இக்கடி தங்கள் இந்நாட்டு மக்களின் வீரத்திற்கு ஒரு எடுத் துக்காட்டாய், என்றும் அழிவுறாத இலக்கியமாக விளங்கத் தகுந்த பெரும் பொக்கிஷமென்று கூற வேண்டும்.
ஈவு இரக்கமற்ற, வன்கண்மையும் குரூரமே உருவான இப்போதைய அகிம்சா மூர்த்திகளின் சுயரூபத்தையும், அவர்களின் அட்டூழியமான அக்கிரமப் போக்கையும் கண்டபிறகே, பெரியார் அவர்களால் இக்கொடிய சூழ்நிலையை நன்றாக விளக்கிக் கூறப்பட்ட பிறகே இத்தனை ஆயிரம் தோழர்கள் கச்சையை வரிந்து கட்டி எங்கு? எப்பொழுது? எப்படி? என்ற கேள்விகளைப் போட்டு முழக்கஞ் செய்கின்றார்கள் என்பதைக் கேட்கும் போது எந்தத் திராவிடன் தான் மகிழ்ச்சியடையாதிருப்பான்?

இன இழிவைத் துடைக்க

ஆதிக்கத்தை முறியடிக்க, பார்ப்பனியச் சுரண்டலை படுகுழியில் புதைக்க, முன்னேற்றப் பாதையில் எடுத்து அடிவைத்து நடக்க முடியாத இன இழிவைத் துடைக்க, இந்தத் திராவிட இன உணர்ச்சியுடைய இளைஞூர்கள் மட்டுமோ, எத்தனையோ காங்கிரஇ திராவிடத் தோழர்களும் கலந்து அய்க்கியமடையக் காத்திருக்கிறார்கள் என்பதையும் நாமறிகிறோம்.

வீர முழக்கம்

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என்று ஆண்டவனுக்கும் உலக மக்கள் நிகழ்ச்சிக்கும் தத்துவம் காட்டும் மெய்யன்பர்களின் போக்கை மறுத்து, ஆட்டுவிப்பவன் யார், அவன் எங்கிருந்து கொண்டு எப்படி எதனால் ஆட்டுகின்றான் என்று கேட்கும் எந்த பகுத்தறிவுவாதிதான், “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என்று இப்போதைய மந்திரி சபையைக் குறித்துக் கூறும் போது எப்படி மறுத்துவிட முடியும்? பார்ப்பனர்களும் – பனியாக்களும் ஏவியபடியெல்லாம் ஏவல் கேட்கும் இந்த மந்திரி சபை. இந்த மந்திரி சபை அமைவதற்கு என்ன அடிப்படையோ அந்த அடிப்படை அழிந்தொழிய, இந்த நாட்டு ஆட்சியின் அமைப்பு வேறு எவரின் தலையீடுமற்ற நிலையில் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிமைப் போராட்டம், மந்திரி சபையின் வெற்றிகரமான பின் வாங்கும் நடத்தையால் சிலநாள், கால தாமதமானால் ஆகுமே தவிர, எப்படியும் போராட்டம் நடந்துதானே தீரும்! நடந்துதானே ஆக வேண்டும்! இந்த உறுதியும் உரமும் பெற்ற உணர்ச்சி வெள்ளத்தைத்தான், திராவிடர்களின் வீர முழக்க பேரொலியைக் கேட்டுக் கண்களுள்ள எவரும் காணவேண்டும்.
நிற்க, தொண்டர்களுக்கு இந்த நேரத்தில் நாம் இவைகளைக் கூற வேண்டுமென்று ஆசைப்படு கிறோம். இன இழிவைத் துடைப்போம்! எவர் தடுப்பினும் எதிர்ப்போம்! எப்பொழுது போராட்டம்? இப்போதே நாங்கள் தயார்! என்று தினவெடுக்கும் தோள்களையுடைய செந்தமிழ் வீரர்களே! இப்போராட்டத்தில் எங்கள் பங்கு என்ன குறைச்சலா என்று மனம் புழுங்கும் தாய்மார்களே! இளைஞர்களே!
போராட்ட முறையில் நீங்கள் கைக்கொள்ள வேண்டிய முதல் பாடம் கட்டுப்பாடு. கட்டுப்பாட்டுக் கடங்கிப் போர்த்தலைவன் குறித்த வேளையில், குறித்த இடத்தில், குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும்! உங்களுடைய சக்தியைச் சிதறடிக்க பார்ப்பனியம் பல வலைகளை வீசும்! ஏமாந்து விடாதீர்கள்! எழுச்சியையே ஆயுதமாகக் கொண்டு, வேறு எந்தக் கொலைக் கருவியையும் கைக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் உங்களை, தவறான பாதையைக் காட்டி சரிந்து விழுவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யும் பார்ப்பனிய அதிகாரவர்க்கம்! அதற்கு ஒத்துழைத்து பின்பாட்டுப் பாடி ஒத்து ஊதி தாளம் போடும் பணக்கார வர்க்கம்! உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு உலுத்தர்களின் ஏமாற்றத்திற்கு உள்ளாகாதீர்கள்!
உங்களுடைய சக்தியனைத்தும் கட்டுப்பாடாய் ஒருமுகமாக ஒரு முனையிலே செலுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்! கட்டுப்பாட்டோடு கூடிய எழுச்சியே, நம் காரியத்தை வெற்றிபெறச் செய்யும் என்பதை நினைவில் வையுங்கள்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 10.07.1948

 

பார்ப்பனர்களும் – பனியாக்களும் ஏவியபடியெல்லாம் ஏவல் கேட்கும் இந்த மந்திரி சபை. இந்த மந்திரி சபை அமைவதற்கு என்ன அடிப்படையோ அந்த அடிப்படை அழிந்தொழிய, இந்த நாட்டு ஆட்சியின் அமைப்பு வேறு எவரின் தலையீடுமற்ற நிலையில் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிமைப் போராட்டம், மந்திரி சபையின் வெற்றிகரமான பின் வாங்கும் நடத்தையால் சிலநாள், கால தாமதமானால் ஆகுமே தவிர, எப்படியும் போராட்டம் நடந்துதானே தீரும்! நடந்துதானே ஆக வேண்டும்! இந்த உறுதியும் உரமும் பெற்ற உணர்ச்சி வெள்ளத்தைத்தான், திராவிடர்களின் வீர முழக்க பேரொலியைக் கேட்டுக் கண்களுள்ள எவரும் காணவேண்டும்.

 

திங்கள், 8 ஜூலை, 2024

பேச்சுத்திறத்தினால் அல்ல தலைமைத்துவத்தால்தான் தலைவனாகலாம்

 



இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களி லும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந்து கல்வி துறையில் வேலை செய்து வருகின்றன.
பேசப் பழகுவோர் எதையும் சிந்தித்துப் பேச வேண்டும். கேட்பவருடைய சிந் தனையைக் கிளரும் விதத்தில், தான் எடுத்துச் சொல்லும் கருத்துகள் அவர்கள் மனதில் நன்கு பதியும் விதத்தில் பேச வேண்டும் சிந்தனை யற்ற பேச்சு பிறர் சிந்தனையைத் தூண்டாத பேச்சு எவ்வளவு அழகாக அடுக்காக இருந்தாலும் ஒரு போதும் நல்ல பேச்சாகாது. அதனால் ஒரு பயனும் விளையாது.

பேச்சின் மூலம் நல்லதைக் கெட்டதாக வும், கெட்டதை நல்லதாகவும் சாதிப்பதே பேச்சுத் திறமை என்று சிலர் நினைக்கலாம். பேச்சுக்கு அந்த திறமையுண்டு என்றாலும் அந்தப்படியான பேச்சு பேசுவதில் இளை ஞர்கள் பழகக் கூடாது. பழக ஆசைப்பட வும் கூடாது. திரித்துக் கூறுவதில் சாதுர்யம் காட்டுதல் என்பது விரும்பக் கூடாத தாகும். வெறுக்கத்தக்கதாகும் தவறுமாகும். அது கெட்டிக்காரத்தனமாகுமே தவிர யோக்கியமோ, நாணயமோ ஆகாது.

வயிற்றுப் பிழைப்பு

சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பேச்சை ஒரு தொழிலாக ஜீவன் மார்க்கமாக வைத் திருக்கிறார்கள். உதாரணமாக அப்படிப் பட்டவர்களை தேர்தல் சம யத்தில் பார்க்க லாம். யார் யார் தம்மைக் காசு கொடுத்து அழைக்கிறார்களோ, அவர்களுக்காகப் பரிந்து பேசி, எதிரிகளை குறை கூறி கண்டபடி வைவார்கள். தங்களுக்குக் கூலி கொடுத்தவர்களைப் புகழ்வார்கள். அந்தப் படியான பேச்சாளியாவதற்கு இளைஞர்கள் விரும்பக் கூடாது. நல்ல யோக்கியமான பேச்சாளி தனது பேச்சுக்களை அப்படிப் பட்ட காரியத்துக்குப் பயன்படுத்த மாட்டான்.

பொதுநலத் தொண்டுக்காகப் பேசப் பழகுவதுதான் விரும்பக் கூடியதாகும். போற்றக்கூடியதுமாகும். நல்ல கருத்து களை எடுத்துச் சொல்லவே இளைஞர்கள் பழக வேண்டும். மக்களை நல்வழியில் திருப்பக்கூடிய நல்ல கருத்துகளையே எடுத்து சொல்ல வேண்டும். நல்ல கருத் துகளை எடுத்துக் கூறி – உண்மையைக் கூறி – குறைப்பாடுகளைக் கூறி – உண்மை தேவைகளைக் கூறி மக்களைத் தன்வயப் படுத்துவோனே நல்ல பேச்சாளியாவான்.

சிலர் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாம் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு பெரு மையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். பண்டிதர்களில் வெகுவாசி பேர் அப்படித்தான். சிலர் தம்மை மக் களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதற் கென்றே, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கென்றே பொதுக் கூட்டங் களில் பேச முன்வருவார்கள். அத்தகை யோருக்கு கொள்கை பற்றிய கவலையே இராது. பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று துடியாய்த் துடிப்பார்கள். சிலர் எதைப் பேசினால் சிரிப்பு வருமோ, அதையே பேசுவார்கள்.

தாம் பேச வேண்டும், மக்கள் அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் விஷயம் உண்டோ, இல்லையோ அது பற்றிக் கவலையில்லை. சிலர் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டுவிட்டு தமக்கு யார் விரோதியோ அவரை வைய அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள் வார்கள். சிலர் யாரையாவது புகழ்ந்துக் கூறி பலன் பெறவே பேச்சைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய பேச்சாளிக ளெல்லாம் விரும்பக் கூடாத பேச்சாளிகள் ஆவார்கள்.
விட்டு விலகாமல்

எடுத்துக்கொண்ட விஷயத்தை விட்டு விலகாமலும், சம்பந்தமில்லாத சங்கதிகளை அதில் கொண்டு வந்து புகுத்தாமலும் அனாவசியமாக பொருளற்ற சொற்களால் நீட்டாமலும் பேசுவதுதான் நல்ல பேச் சாகும். அப்படிப் பேசுவது சிறிது கஷ்ட மாகத்தான் இருக்கும் என்றாலும் அந்தப் படி பேசப் பழகுவதுதான் நலமாகும். பேசுவதில் ஒரு சொல்லை எடுத்து விட் டாலும் கருத்து கெட்டு விடும்படியாகவும், ஒரு சொல்லை சேர்த்தாலும் மிகுதியாகும் படியாகவும் நிறுத்தி அளவறிந்து பேச வேண்டும்.

அடுக்கு அடுக்காகப் பேச வேண்டு மென்றும், அலங்காரமாய்ப் பேச வேண்டு மென்றும், மோனை எதுகையாய் பேச வேண்டுமென்றும், சிலர் இன்னும் ஆசைப்படு கிறார்கள். இதற்கு ஆக பல கருத்துகளையும் பல பயனற்ற சொற்களையும் கொண்டு வந்து குவித்தும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து பாழாக்கு கின்றனர்.

இந்த நோய் இன்று மாணவருக்கு அதிகம் உண்டு என்றாலும் இது பேச்சுக்கு வந்த பெருநோய் என்றே நான் சொல்லுவேன். அலங்காரமாகவும், அடுக்கடுக்காகவும் பேச விரும்புவோன் அடுத்து வரும் வார்த்தை எதுவாயிருந்தால் அலங்காரமாய் இருக்கும் என்று யோசிக்கும்போதே கருத்து வேறு பக்கம் ஓடிவிடும். அது பேச்சின் பலனையே கெடுத்துவிடும்.

சிலர் பேச ஆரம்பித்து விட்டால் மக்கள் தமது பேச்சை விரும்புகிறார்களோ, இல்லையோ பேசிக்கொண்டே இருப்பார்கள். தலைவர் நிறுத்தும்படி ஜாடை காட்டி னால்கூட நிறுத்த மாட்டார்கள். கையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்கும் வரையில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

மக்கள் ஆதரவு

பேச்சுக்கு ஒரு நோய் வருவதுபோல் பேச்சா ளர்களுக்கும் ஒரு நோய் வருவதுண்டு. அந்த நோயில் 100க்கு 95 பேச்சாளிகளுக்கு மேல் சிக்கிக் கொண்டு விடுவார்கள். அந்த நோய் வந்தால் அதிலிருந்து அவர்கள் தப்பவே மாட்டார்கள். நாலு வார்த்தைகள் காதுக்கினி மையாய் பேசத் தெரிந்து விட்டால் போதும். ஒரு நாலு கூட்டங்களில் பேசிவிட்டால் போதும். நாலைந்து தடவை கூட்டத்தில் உள்ள மக்களின் கை தட்டல்கள் கிடைத்து விட்டால் போதும்.

உடனே தன்னை பேச்சில் வல்லவன் என்று நினைத்துக் கொண்டு, தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, இனி அடுத்தபடியாக நான் ஒரு தலைவன் ஆகவேண்டும் என்று தோன்றும். இந்த நோய் வந்தவர்கள் 100க்கு 90 பேர் உருப்படுவதில்லை. அநேகர் அந்த எண்ணம் கொண்டதன் பயனாய் அடைந்த தோல்வி யால் பொது வாழ்க்கை விட்டே விலக வேண்டி ஏற்பட்டு விடும். அந்த ஆசையும் அப்படிப் பட்ட நினைப்பும் பேச்சாளன் ஒருவனுக்கு வரவே கூடாது.

தன் பேச்சை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற நினைப்பால் தலைவனாக ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் பைத்தியக்காரனே ஆவான். தன்னைத் தற் கொலை செய்து கொள்பவனேயாவன். பேச் சுக்கும் தலைமைப் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது; சம்பந்தம் வைக்கவும் கூடாது.

தலைமைத் துறை வேறு; பேச்சுத் துறை வேறு; தலைமைத் துறை காரணமாக சிலர் பேச்சாளிகளாக ஆகலாம். பேச்சுத் துறை காரணமாக யாரும் தலைவராக முடியாது. அனேகர் இந்தக் கருத்தை உணராது மோசம் போய் இருக்கிறார்கள். பேச்சாளி என்று ஒருவனை மதித்தால் அவனைத் தலைவ னென்று அவர்களே அதாவது மதித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். உதாரணமாக சத்திய மூர்த்தி அய்யர் தலைவராகவே முடியவில்லை. பொதுவாகவே இதுவரை எந்தப் பேச்சாளியும் தலைவராகவில்லை. தலைவர்கள் பேச்சாளி களாகி விடுகிறார்கள்.

ஆபாசப் பேச்சு

ஆபாசப் பேச்சுக்கள் உபயோகிக்கக் கூடாது; பாமர மக்கள் கை தட்டுதலைப் பார்த்து, அது நல்ல பேச்சென்று பேச்சாளிகள் கருதிக் கொள்ளக் கூடாது. ஆயிரம் பாமர மக்கள் ஆதரிப்பதைவிட நூறு அறிஞர்கள் வெறுப்பது மிக மோசமான பேச்சென்றுதான் ஆகும். சங்கீத வித்வான் நன்றாகப் பாடினால் சபையில் கொஞ்சம் பேர்தான் ரசிப்பார்கள். சில்லரைப் பாட்டு, தில்லாலே பாட்டு, துக்கடா பாடினால் வெகு பேர் ரசிப்பார்கள். ஆனால், வித்துவானுக்கு மதிப்பு சங்கீதப்பாட்டினால் தான் உண்டாகும். அதுபோல் பாமர மக்கள் திருப்தியாலும் பாமர மக்கள் ஏமாறும்படி பேசுவதாலும் பேச்சுக்காரன் மதிக்கப்பட்டு விடமாட்டான்.

சிலர் மக்களிடையே சிறிது செல்வாக்கு ஏற்ப டுத்திக் கொண்டதும், தாம் எந்த மேடை முகமாக அறிமுகப்படுத்தப்பட்டோம், எந்த கொள்கை பேசி செல்வாக்கு பெற்றோம் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்கு எதிர் கொள்கைக்கோ அல்லது அக்கொள் கையை அழிக்கவோ அந்த செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள். தனது சொந்த அறிவு இப்படிக் கூறுகிறது. தன்னுடைய சொந்தக் கருத்து இது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள். சொந்த அறிவு, சொந்தக் கருத்து இவற்றின் பேரால் தாம் அதுவரைக்கும் எடுத்துக் கூறி வந்ததையே மறுக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும்போது மக்கள் கை தட்டல்தான் செய்வார்கள். எதிர்ப்பை வரவேற்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் எப்போதும் ஏமாந்து போய் விடமாட்டார்கள்.

அவர்களின் ஆதரவை நம்பிச் சொந்தக் கருத்து பேசிய பேச்சாளத் தோழருக்குத்தான் பிறகு மேடை கிடைக்காமற் போகும். பெருத்த ஏமாற்றம் அடைவார். பொது வாழ்க்கைக்கும் தமக்கும் வெகு தூரம் என்று கருதிக் கொண்டு வேறு வேலைக்குப் போய் விடுவார். இது எனது அனுபவம்.

மேடையில் பேச வருவோர் மிகவும் பயத்தோடும் கவலையோடும் பேச வேண்டும். வார்த்தைகள் நிறுத்திப் பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். தெளிவுடனும் பேச வேண்டும். தனது தகுதியை கவனத்தில் இருத்தியும் பேச வேண்டும். தனக்குத் தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு எவனும் என் கருத்து இது. நான் சொல்கிறேன் இப்படி என்று பேச்சாளி பேசக் கூடாது. நல்ல பேச் சாளியாவதற்கு இலக்கணமோ, இலக்கியமோ படித்திருக்க வேண்டும் என்பதில்லை. தெளிவுடன் பேசத் தெரிந்தால் போதும். கொஞ்சம் அறிவு நுட்பம் இருந்தால் போதும். தன் கருத்தைப் புரியும்படி கொள்ளும்படி பேசினால் போதும். பிறரை வைகிற பேச்சு பேச்சாளிகளுக்கு கூடவே கூடாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் கூட மிகவும் கணக்காகவே மிக்க மறைமுகமாகவே கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும். எனக்கு 70 வயது ஆகிவிட்டது. நான் சற்று தவறான வார்த்தை – சற்று அசிங்கமானது என்று கருதும்படியான வார்த்தை உபயோகப் படுத்தினாலும் யாரும் கோபித்துக் கொள்ள வும் மாட்டார்கள். தவறான எண்ணம் கற்பிக் கவும் மாட்டார்கள். ஆனால், அதே சங்கதியை ஒரு இளைஞன், மாணவன், வயிற்றுப் பிழைப்புக்கு ஆக பேசுபவன் பேசுவானாகில் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே தப்பென்று ஆண்கள், பெண்கள் எல்லோரும் கருது வார்கள். எழுந்து போய்விடுவார்கள். ஆகவே, தனது தகுதி, நிலை, வயது, அனுபவம் இவற்றைப் பொறுத்துதான் தனது பேச்சும் சில மணியாகும் என்பதை ஒவ்வொரு பேச்சாள னும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். தனது பேச்சுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால் பேச்சாளி அடங்கி ஒடுங்கிப் பேச வேண்டும். தனது தாழ்மையான கருத்து இது. தனது பணிவான அபிப்பிராயம் இது. தனது பணிவான அபிப்பிராயம் இது என்கிற தன்மையில் தனது அபிப்பிராயத்தை எடுத் துச் சொல்ல வேண்டும். எதிர்ப்பாளிகளும் அக்கருத்தை விரும்பாதவர்களும் கூட ஐயோ பாவம் உண்மையிலேயே அவருடைய கருத்து அதுவாக்கும் என்று பரிதாபப்படும் அளவுக்கு பணிந்து பேச வேண்டும். வீட்டி லிருந்து கொண்டே எழுதிக் கொண்டிருப்ப வன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பேச்சாளி அப்படிப்பட்டவனல்ல, அடிக்கடி மக்கள் முகத்தில் விழிக்கக் கூடிய வன் அவன். எனவே தவறாகப் பேசி கெட்ட பேர் எடுத்துவிட்டால் மக்கள் மதிக்க மாட் டார்களே என்கிற அச்சத்தோடு தான் பேசவேண்டும்.

பெயர் கெட்டு விடும்

ஒரு இயக்கத்தின் சார்பில் மேடைக்குப் பேச வருபவர்கள் சிரிப்புக்காகவும், வெறும் விளை யாட்டிற்காகவும், தனக்குக் கெட்டிக்காரப் பட்டம் வர வேண்டும் என்பதற்காக வும் தம் பேச்சைப் பயன்படுத்தக் கூடாது.

அப்படிப் பயன்படுத்தினால் அவரு டைய பேர் கெட்டுப் போவதோடு இயக்கத் தின் பேரும் கெட்டுப் போய்விடும். இயக்கத்தின் மரியாதையும் யோக்கியதை யும் வெகுவாகக் குறைந்துவிடும்.

பேச்சு ஒரு அருமையான கலை பண்டைக் காலத்தில் வசன நடைப் பேச்சே கிடையாது. எல்லாம் பாட்டு மயம். இன்று நிலைமை மாறிவிட்டது. பாட்டுக்காரனுக்கு இருந்து வந்த மதிப்பு தற்போது போய் விட்டது. இனி பாட்டுக்காரனை விட நாடகக்காரனை விட பேச்சுக்கா ரனுக்குத் தான் அதிக மதிப்பு ஏற்படப் போகிறது. நாடு இன்றுள்ள நிலையில் பேச்சு மிக மிகத் தேவை யாகவும் இருக்கிறது. நாடகம், சினிமா காலட்சேபங்களில்கூட இன்று பேச்சாளிக்கு இருக்கும் மதிப்பு, பாட்டுப் பாடுபவர்களுக்கு பண்டிதர்களுக்கு கிடை யாது. எவரும் பேச்சு பயன்படுகிற மாதிரி பாட்டு நடிப்பு பயன்படுவது இல்லை. நல்ல தொண்டுக்கு நல்ல பேச்சுத்தான் தேவை. பேச்சாளி ஒரு ஆசிரியராவான். ஒரு வழி காட்டியாவான்.

பொறுப்புடன்

அப்படிப்பட்ட பேச்சுக்காரர்களாக இருக்க வேண்டியவர்கள். பேச்சு படித்ததும் தாங்கள் விளம்பரமாக வேண்டும் என்பதற் காக கூட்டத்தை கண்ட மாத்திரத்தில் சிலர் பேச வேண்டும் என்கின்ற ஆத்திரம் கொண்டு சீட்டு அனுப்புவது சிலர் தனக் காக சிலரைக் கொண்டு சீட்டு அனுப்புவது, தலைவர்கள் பேசுவதற்கென்று ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் தங்களுக்குப் பேச இடம் தரவேண்டும் என்பதாகப் பல்லைக் கெஞ்சிப் புகுந்து கொண்டு, பின்னால் பேசுகிறவர்களுக்கு சங்கடம் வரும்படி பேசுவது, இவைகளையெல்லாம் நல்ல பேச்சாளிகள் கவனித்து ஒதுக்க வேண்டும்.

சிலர் பேசி பெற்ற செல்வாக்கால், கிடைத்த மக்கள் அறிமுகத்தால் உடனே பத்திரிகை ஆரம்பித்துக் கொள்ளுவது. அது கண்ணியமாய் நடத்தக் கட்டாவிட் டால் நன்கொடை வசூலிக்க அதைப் பயன்படுத்துவது, கொடுத்தவர்களைப் புகழவும் கொடுக்காதவர்களை வையவு மாக எழுதுவதற்கும் தம் பேச்சு பழக்கத்தை உபயோகிப்பது பணம் கிடைக்காவிட்டால் கொள்கையை மாற்றிக் கொள்வது. இப்படி யெல்லாம் பல காரியங்கள் பேச்சுப் படிப்பதால் ஏற்படுவது உண்டு.

ஆகவே, தகுதி அற்றவன், பொறுப்பும் நாணயமும் அற்றவன் பேச்சாளியாக ஆகிவிட்டால் அது ஒரு பெருந் தொல்லை யாகவும் முடிவதுண்டு. இப்படிப்பட்டவர் களை பேச்சாளியாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டி ஏற்பட்டாலும் ஏற்படும். ஆதலால் தக்கவர்களையே சேர்த்து வையுங்கள். தக்க பொறுப்புடன் பழ குங்கள். உங்கள் பேச்சு உங்களுக்கு, உங்களைவிட மக்களுக்குப் பயன்படும்படி இருக்கட்டும் என்பதாகப் பேசினார்.

– ‘விடுதலை’, 6.11.1949

தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை!

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : 

ஏப்ரல் 16-30 2019

நேயன்

திரு.ஜெயகர் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை பம்பாய் சட்டசபையில் சமீபத்தில் கொண்டு வரப் போவதாகவும் அறிந்து மகிழ்கிறோம். அந்தத் தீர்மானத்திற்கு டாக்டர் அம்பேத்கர் போன்ற பிரமுகர்கள் உதவியாயிருந்து வேலை செய்வார்களெனவும் தெரிகிறது. இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்று சட்டமும் செய்யப்படுமேயானால், பெண்கள் சமூகத்திற்கு சாரதா சட்டம் எவ்வித பலத்தை அளிக்கின்றதோ அதே மாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில், இந்தச் சட்டமும் பெரிய பலமாக இருக்கும் என்பதற்கு அய்யமில்லை.

                                                              (‘குடிஅரசு’ 22.12.1929)

இதனால்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சென்ற 4.1.1945ஆம் தேதி கல்கத்தாவில் தாழ்த்தப்பட்டோர் வாரப் பத்திரிகையான ‘பீப்பிள் ஹெரால்டை’ திறந்து வைக்கையில் ‘ஹிந்துக்கள் புல்லுருவிகள். நாம் உழைக்க அவர்கள் உறிஞ்சித் தின்கிறார்கள். இந்தச் சுரண்டலை நிலைநாட்டும் சுதந்திரம் வந்தாலும் ஒன்றுதான், வராதொழிந்தாலும் ஒன்றுதான்’ என்ற வயிறெரிந்து கூறியிருக்கிறார். இதைக் கண்டு பிறர் இரத்தத்தை உறிஞ்சி வந்த கூட்டம், நகத்தில் அழுக்குப்படாமல் வாழ்ந்து வந்த கூட்டம், கிழிச்ச பஞ்சாங்கத்தையும் காய்ந்த தர்ப்பைப் புல்லையும் கை முதலாகக் கொண்டு வாழ்க்கை நடத்திவரும் கூட்டம் வயிறு எரியத்தான் செய்யும். சீறி விழத்தான் செய்யும்.                                  

    (‘குடிஅரசு’ 6.1.1945)

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, ‘இன்றைய நிலையில் நமக்கு சுயராஜ்யம் வந்தால் இன்றைய ஆட்சிபோல ஆளும் ஜாதியார்தான் ஆளுவார்களே தவிர, நம் போன்ற அடிமை ஜாதியார் அடிமைகளாகவே ஆளப்படுபவர் களாகவேதான் இருப்போம். ஆதலால், சுயராஜ்ய ஆட்சி இன்றைய ஆட்சியைவிட மேலானதாக இருக்க முடியாது’ என்று சொன்னார். அதாவது, ஒற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள ஜாதிதான் எந்த சுயராஜ்யத்திலும் ஆட்சி புரியுமென்றும் அதில்லாத மக்கள் எப்படிப்பட்ட சுதந்திர ராஜ்யத்திலும் ஆளப்படும் அடிமை ஜாதியாகத்தான் இருக்க வேண்டியதாகும் என்றும் அருமையாகச் சொன்னார்.

                                                   (‘விடுதலை’ – 26.3.1950)

கோவில்கள் திறக்கப்படுவதாலும், ஓட்டல்கள் தடை நீக்கப்படுவதாலும் மாத்திரம் ஜாதி ஆணவமும், ஜாதி ஆதிக்கமும் ஒழிந்துபோகும் என்ற நினைப்பவர்கள் வடிகட்டிய பைத்தியக்காரர்களே ஆவார்கள். இது ஒரு பித்தலாட்டகரமான காரியம் என்பதோடு பெரிதும் டாக்டர் அம்பேத்கர் கூட்டமாகிய வாயில்லாப் பூச்சிகளை ஏமாற்றும் வித்தையாகும். 15 வருடத்துக்கு முன் ஏமாந்து தனித் தொகுதியை விட்டுக்கொடுத்த அம்பேத்கர் கோஷ்டி இப்போதும் ஏமாந்து போகக்கூடும் என்ற கருதி அம்பேத்கரை வசப்படுத்த வேறு என்ன என்னவோ சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இவர்கள் சூழ்ச்சிகள் எல்லாம் இதுவரை முஸ்லீம்களை என்ன செய்ய முடிந்ததோ, அந்த அளவுக்கத்தான் திராவிடர்களையும், ஆதி திராவிடர்கள் என்பவர்களையும் செய்ய முடியுமே தவிர, ஏமாற்ற முடியும் என்பது இனி நடக்காத காரியமாகும். அம்பேத்கரை சரிப்படுத்திக் கொண்டாலும் அதனால் வடநாட்டு ஷெடியூல்டு வகுப்பார்தான் ஏமாறக்கூடுமே தவிர தென்னாட்டவரை ஏமாற்ற முடியாது.                                                              

    (‘குடிஅரசு’ 25.1.1947)

இந்து மதத்தைச் சாராதவர்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்களும், இந்து மதப் பற்றுடைய மக்களால் அந்நியர்கள், மிலேச்சர்கள் என்று இழித்துக் கூறக் கூடியவர்களுமாகிய வேற்று மதத்தினர்கள் உயர்சாதி இந்துக்களுடன் தீண்டாமையென்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நீண்ட காலமாக இந்துக்கள் என்றே மதிக்கப்பட்டு வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்களோ உயர்சாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாதவர்களாகவும் சண்டாளர்கள் என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.

(‘குடிஅரசு’, 8.5.1932)

நான் காங்கிரசிலிருக்கும் போதும்  தீண்டாதார் விஷயத்தைப் பற்றியே அதிகம் உழைத்திருக்கிறேன். வைக்கம் சத்தியாக்கிரகம் என்பதும் தீண்டாமை விலக்குக்காகத்தான் ஏற்பட்டதே தவிர வேறில்லை. 3 வருடத்திற்கு முன் நடந்த ஈரோடு கோவில் பிரவேசம் என்பதும் அது சம்பந்தமான வழக்கும் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக ஏற்பட்டதே தவிர வேறில்லை.

(‘குடிஅரசு’ 4.12.1932)

உலகம் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டு வருகின்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும்.

(‘குடிஅரசு’ 4.12.1932)

சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதிதிராவிடரைக்கூட காங்கிரஸ் நிறுத்தவே இல்லை என்பதையும் தானாக எந்தக் கட்சியையும் சேராமல் நிற்கிறவர்களையும் ஆதரிக்காமல், எதிர்த்து தோற்கடித்தார்கள் என்பதையும் முன்னமே எழுதி இருக்கிறோம். ஆகவே காங்கிரசுக்காரர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது சட்டசபைக்கு நின்ற ஆதிதிராவிடரைக் காங்கிரஸ் திட்டத்தில் கையொப்பமிடும்படியாக யாராவது கேட்டு அவர் மறுத்தாரா? அல்லது அவர் மறுத்திருந்தாலும் வேறு ஆதிதிராவிடர் கிடைக்கவில்லையா?

(‘குடிஅரசு’ 3.2.1935)

ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர்களாகவும் மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழிமக்கள் என்ற பெயருடன் இருந்து வருகிறார்கள் என்றால் இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராஜ்யம் யாருக்கு வேண்டும்?

(‘குடிஅரசு’ 23.6.1935)

உலகம் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டு வருகின்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில் அழிந்துதான் தீரும்.

திராவிடர் -_ ஆதிதிராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய 4 கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நால்வரும் ஒற்றுமையாய் இருந்து ஆரியத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.

(‘குடிஅரசு’ 8.9.1940)

திராவிட நாட்டில் திராவிடப் பெருங்குடி மக்கள் அறிவிலும் ஆண்மையிலும் வீரத்திலும் தலைசிறந்து இருந்த மக்கள் இன்று சமுதாயத்தில் நான்காம் ஜாதி, பஞ்சமர் என்றும் ஐந்தாம் ஜாதி என்றும் அதாவது சூத்திரர், அல்லது பிறவி அடிமை ஜாதி என்றும், சண்டாளர் அல்லது ஈகை ஜாதி என்றும் அழைக்கப்படுவதோடல்லாமல், அந்தப்படியே நடத்தப்படுகிற மக்களாகவும் இருந்து வருகிறோம்.

(‘குடிஅரசு’ 12.4.1941)

மதுரைக் கோவிலில் பறையர் முதலியவர்கள் செல்ல சட்டம் அனுமதிக்கப்படுகிறது. அக்கோயிலில் பறையர்களுக்குப் பள்ளிக்கூடம் வைத்தார்களா? பறையரை மேளக்காரராக, பூக்கட்டுபவர்களாக வெளித்துறை சிப்பந்திகளாக நியமித்தார்களா? அனுமதித்த கோவில்களுக்கெல்லாம் பறையர்களை டிரஸ்டியாகப் போட்டார்களா?

(‘விடுதலை’ 29.6.1943)

தீண்டப்படாதார், தாழ்ந்தவர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டுத் துன்புறும் மக்களுக்கும், உயர்ந்த ஜாதியார், கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் குணத்தினாலும் உருவத்தினாலும் அறிவினாலும் ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா என்று கேட்கிறேன்.

(‘குடிஅரசு’ 6.1.1945)

(தொடரும்…)

புரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை

 


ஏப்ரல் 16-30 2019

ஒரு சிலர் பகுத்தறிவைப் பற்றி பாடி இருக்கிறார்கள். என்றாலும் அதோடு மூடநம்பிக்கைக் கருத்துக்களும் கலந்து இருக்கின்றன. அவர்கள் வீட்டில் இருந்து சொன்னார்களே தவிர வெளியில் வந்து தொண்டு செய்யவில்லை. இந்நாட்டின் பாரதிதாசனைப் போன்றவர்களை ஏன் பாராட்டுகிறோமென்றால் துணிந்து வெளியே வந்து கருத்துக்களை எடுத்துரைத்தார். நேற்று நாம் இராமனையும் கந்தனையும் செருப்பாலடி என்று சொன்னோம். 40 வருடங்களுக்கு முன்பே அவர் சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளந்தெறிய வேண்டுமென்று பாடி இருக்கிறார். செருப்பாலடித்தால் கடவுள் உருவம் இருக்கும். அந்த உருவமே தெரியாத வகையில் பீரங்கி வைத்து உடைத்தெறிய வேண்டுமென்றார். “இல்லை என்பான் யாரடா தில்லையிலே வந்து பாரடா’’ என்று எவனோ ஒரு ஆஸ்திகன் பாடினான்.

அதற்குப் பதிலாக “இல்லை என்பவன் நானடா தில்லை கண்டுதானடா’’ என்று துணிந்து பதில் சொன்னார்.

நம் நாட்டில் புலவர்கள் பலர் இருக்கிறார்கள். என்றாலும் அவர்களெல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்காக புலவர்களாக இருக்கிறார்களே தவிர, பழமைகளுக்கு உரை எழுதக் கூடியவர்களாக இருக்கிறார்களே தவிர, தங்கள் கருத்துக்களை புதுமை கருத்துக்களை எடுத்துச் சொல்வது கிடையாது. நாடு முற்றும் கோயில்கள் ஆவதற்கு சாஸ்திரங்கள் சம்மதிக்கும். பள்ளிகள் வைத்து அறிவை வளர்க்க சாஸ்திரங்கள் இடம் தராது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிதாசனுக்கு விழாக் கொண்டாடுகிறோம் என்றால், அது நமது வளர்ச்சிக்கு விழாக் கொண்டாடுகிறோம் என்பதே அதன் பொருள்.

– தந்தை பெரியார்

(4.5.1971 அன்று மாயூரத்தில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழாவில் ஆற்றிய உரையிலிருந்து.)

முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை

 

பெரியார் பேசுகிறார் : 

ஏப்ரல் 16-30 2019

தந்தை பெரியார்

“அன்புத் தோழர் பாரதிதாசன் அவர்களே! மற்றும் நடிகையர், நடிகர், பண்டிதர், ஆசிரியர், சொந்தக்காரர் அவர்களே!’’

இன்று உங்கள் மத்தியில் இருக்கவும், உங்கள் சங்கத்தின் கருத்துகளையும், நோக்கங்களையும், வேலை முறைகளையும் உணரவும் வாய்ப்பு கிடைத்தற்கு நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது பாடப்பட்ட பாட்டுகளும் அவற்றிற்கு நடித்த நடிப்புகளும் எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியும் திருப்தியும் அளித்தன. இவை எனது நோக்கத்துக்கும் எதிர்பார்த் திருப்பவற்றிற்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. நீங்கள் செய்திருக்கும் இந்த மாதிரி ஏற்பாடு உண்மைத் தமிழர்களால் மிகவும் வரவேற்கப்பட வேண்டியதும் ஆதரவளிக்கப்பட வேண்டியதும் ஆகும். பாட்டுகளும், நடிப்புகளும், கடவுள்களையும், கலவித் துறையையும் பற்றி இருப்பது காட்டுமிராண்டிக் காலத்தைக் குறிப்பதேயாகும். இன்றைய காலத்தையும் குறிக்கும் என்று சொல்லப் படுமானால் அது ஊரார் உழைப்பில் வாழும் வஞ்சகக் கூட்டமான பார்ப்பனர் (பூதேவர்)களுக்கும் பாமர மக்களைச் சுரண்டி போக போக்கியமனுபவிக்கும் கொள்ளைக்காரக் கூட்டமான (லட்சுமி புத்திரர்களான) செல்வ வான்களுக்கும் மாத்திரமே சொந்தமானதாகும்.

பார்ப்பனியக் கொடுமையும் பணக்காரத் திமிர் தொல்லையும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதுபவர்கள் கடவுள்களையும், கலவியையுமே உள் விஷயமாய்க் கொண்ட கதை, காவியம், கலை, சங்கீதம், நாட்டியம், இலக்கண இலக்கியம் முதலியவை கண்டிப்பாய் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

நம்முடைய இந்த இரண்டு வேலைக்கும் மேற்கண்ட இரண்டு கூட்டமும் தடையாகவே இருக்கும் என்பதோடு நமக்குள் புகுந்து கொண்டே நம் முயற்சி வெற்றி பெறாமல் போக சூழ்ச்சி செய்வார்கள். இதை நான் 26.11.28இல் சென்னையில் ழி.றி.ஆலில் என் தலைமையில் கூட்டப்பட்ட சீர்திருத்த மகாநாட்டுத் தலைமை சொற்பொழிவில் தெளிவாய்ச் சொல்லி இருக்கிறேன்.

நம் கலைகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பவை இன்று நமக்குக் கேடாகவும் நம் இழிவுக்கும், மடமைக்கும், அடிமைத்தன்மைக்கும் ஆக்கமும், ஊக்கமும் தருவனவாகவும்  இருப்பதற்குக் காரணம் அவை பார்ப்பனர்களாலும் மதவாதிகளாலும் இராஜாக்கள், செல்வவான்கள் ஆகியவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டதும், கையாளப்பட்டதுமேயாகும்.

மற்றும், இவர்களைப்பற்றிய விபரங்களையும் நாம் செய்ய வேண்டியவைகளையும் ஒரு மாதத்திற்குமுன் குடிஅரசில் நான் எழுதி இருப்பதுபோல் சமீபத்தில் கூட்டப்படப் போகும் முத்தமிழ் நுகர்வோர் அதாவது இசை நுகர்வோர், நடிப்பு நுகர்வோர், பத்திரிகை வாசிப்போர் ஆகியவர்கள் மகாநாட்டில் தெளிவுபடுத்த இருக்கிறேன்.              நீங்கள் ஆரம்பித்து இருக்கும் இந்தக் காரியத்திற்கு தமிழினிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும், தமிழர்களும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மைக் கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவராவார்கள்.

உங்களுக்கு நண்பர் பாரதிதாசன் அவர்கள் கிடைத்திருப்பது உங்கள் நல்வாய்ப்புக்கும் உங்கள் வெற்றிக்கும் அறிகுறியாயிருக்கும். இன்று இந்த நாட்டில் தமிழும், தமிழ்க்கவியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்திற்கும் தன்மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, உழைக்க ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில்தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது. உங்கள் கழகம் வெற்றி அடைய தளரா முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டு இளைஞர்களும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப்பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமை ஆகும்.

(02.01.1944 அன்று சென்னை சென்தோம் அய்ரோட்டில் முத்தமிழரங்கு பாராட்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 08.01.1944

ஞாயிறு, 7 ஜூலை, 2024

சமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே!

 


செப்டம்பர் 16-30 2019

தந்தை பெரியார்

இந்த நாட்டின் இன்றைய கஷ்ட நிலைகளையும், அடிப்படைகளைப் பற்றியும் விளக்கினேன். இந்த நாட்டு மக்கள் மனதில் அறிவுத் தெளிவும், பகுத்தறிவும், இன்றைய சமுதாயத்திலே இருக்கிற பிறவி, உயர்வு _ தாழ்வு நிலைமை ஒழிகிற வரையில் இந்த நாட்டில் இருக்கிற கஷ்டங்களுக்குப் பரிகாரம் காண முடியாது என்பதை விளக்கினேன்.

அது மட்டுமல்ல; சிலர் கருதுகிறார்கள், சொல்லவும் செய்கிறார்கள் _ அரசியல் மாறுதல் ஏற்பட்டு விட்டால் இந்த நிலைமை மாறிவிடும் என்று.

நான் சொல்லுகிறேன்: அரசியல் மாறுதல் ஏற்பட்டு விட்டால் மட்டுமே இந்த நிலைமை மாறிவிடாது; முடியாது.

500 வருட காலம் போல இந்த நாட்டை முஸ்லிம் ஆண்டான்; அந்த ஆட்சியின் காரணமாகப் பல கோயில்களை இடித்து உதவி பண்ணினான். 6 கோடி மக்களை இந்தக் கேடுகெட்ட இந்து மதத்திலிருந்து விலக்கி இஸ்லாத்தில் சேர்த்தான். இதனாலே என்ன லாபம் என்று கேட்டால், ஓர் இந்து எனப்படுபவன், இந்து சமுதாயத்தின்படி  பிறவி கீழ் ஜாதி மகனாக, சூத்திரனாக, பஞ்சமனாக சட்டத்திலும் நடப்பிலும் கருதப்படுகிற மகன் ஒரு முஸ்லிமாகவோ, கிறிஸ்துவனாகவோ மாறிவிட்டானேயானால், அவனுடைய கீழ் ஜாதித் தன்மை, சூத்திரப்பட்டம் ஒழிந்து அவனும்  மற்றவர்களைப் போல் மனிதன்  என்கிற பட்டியலில் இடம் பெறுகிறான். இந்த ஞான பூமி என்கிறதிலே தோன்றிய ஞான மதம் என்கிற  இந்து மதத்தைத் தவிர, வேறு எந்த  நாட்டிலும், எந்த மதத்திலும் இந்தப் பிறவி ஜாதி, பேதம், உயர்வு தாழ்வு கிடையாதே!

அதுபோலவே முஸ்லிமுக்குப் பிறகு வெள்ளைக்காரன் வந்தான். அவனுடைய ஆட்சியினாலும் மக்களுக்குச்  சமுதாயத்துறை விழிப்பு உணர்ச்சியும், நாகரிகமும், மேல்நாட்டு அறிவும், விஞ்ஞான வளர்ச்சியும் ஏற்பட்டன. ஏதோ 30, 40 லட்சம் பேர்கள் பிறவி பேதமில்லாத கிறிஸ்துவர்களாக மாறினார்கள்.

இப்போது என்ன ஆயிற்று? வெள்ளையன் ஆட்சியில் பெரிய அரசியல் புரட்சி ஏற்பட்டு, பெரிய அரசியல் மாற்றத்தைச் செய்தோம். வெள்ளைக்காரன் நமக்கு அரசன் மட்டுமல்ல; அரசர்க்கெல்லாம் அரசர் என்று சொல்லப்படுகிற சக்கரவர்த்தியாக இருந்தார். அதாவது Emperor of India  ஆக இருந்து  வந்தார். இதை நாம் நமக்கு ஒரு அவமானகரமான காரியமாகக் கருதினோம். ராஜாகூட அல்ல சக்கரவர்த்தியே நமக்குக் கூடாது என்பதாகக் கருதி, அதற்கு ஆகப் போராடினோம். சக்கரவர்த்தியை ஒழித்தோம். அது மட்டுமல்ல; இந்தியாவிலே இருந்த 563 சுதேச சமஸ்தானங்களும் அவற்றின் ராஜாக்களும் அவர்களின் அதிகாரங்களும் ஒழிக்கப்பட்டு, அவர்கள் வெறும் இஸ்பேட் ராஜாக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று இந்த நாட்டில் மருந்துக்குக் கூட அரசன் இல்லை.

உலகம் தோன்றிய காலந்தொட்டு நீங்கள் எடுத்துக் கொண்டால் இந்த அரசர்கள்  என்பவர்கள் இருப்பார்கள்; எந்தக் கதை, இலக்கியத்தைப் பார்த்தாலும் ஒரு நாடு, நாட்டு மக்கள், அதை ஆளுகிற அரசன் என்பதாகத்தான் இருக்கும். இப்படி உலக வரலாறு  ஆரம்ப காலத்திலிருந்து  இருந்துவந்த அரசர்கள் இந்த ஒரு 50 வருடகால உணர்ச்சிக்குள் ஒழிக்கப்பட்டார்கள். இன்று இந்நாட்டில் அரசர்களே கிடையாது. இது விளையாட்டான காரியமல்ல; 563 சமஸ்தானங்களுக்குமேல் இருந்த அரசர்கள் ஒழிக்கப்பட்டார்கள். சக்கரவர்த்தி ஒழிக்கப்பட்டார். தனிமனித ஏகாதிபத்தியமான அரசும், அரசுரிமையும் ஒழிக்கப்பட்டு, மக்கள் ஆட்சி அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறதே. அவ்வளவு மகத்தான புரட்சி நடைபெற்றும் இந்த நாட்டில் நமக்கு ஏதாவது காரியம் நடைபெற்றதா? நடைபெற்றது என்னமோ பெரிய அரசியல் புரட்சியாக இருந்தாலும் மக்களுக்கு இன்ன காரியம் ஏற்பட்டது  என்று எதையாவது சொல்லக்கூடிய முறையில் ஏதாவது  பலன் ஏற்பட்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமானால் வெள்ளைக்காரன்  காலத்தில், முஸ்லிம்கள் காலத்தில் இந்த நாட்டில், நாட்டுக்கு என்னென்ன நன்மைகள், லாபகரங்கள் ஏற்பட்டனவோ, சமுதாய உரிமைகள் கொடுக்கப்பட்டனவோ, அவைகள் எல்லாம் இன்று ஒழிக்கப்பட்டு வருகின்றன. பழையகால மனு, மாந்தாத காலத் தன்மைக்கு நிலைமை போய்க்கொண்டிருக்கிறது.

563 சமஸ்தானங்களையும் ஒழித்து, கொடி பறக்க விட்டிருக்கிறோம். பார்ப்பான் ஒழிந்தானா? பறையன் ஒழிந்தானா? அதற்கு மாறாக வாழவைக்கப்படுகிறதே இந்தச் ஜாதி அமைப்பு முறை?

இதிலிருந்து என்ன தெரிகிறது? அரசியல் மாறுதல் ஏற்பட்டாலும், அரசன், சக்கரவர்த்தி என்பவர்கள் ஒழிக்கப்பட்டால் மட்டுமே போதாது. அதனால் மட்டுமே இந்தப் பேதமும், தொல்லையும் ஒழிந்துவிடமாட்டா. இந்தப் பேதங்கள் எந்த அஸ்திவாரங்களின் மேல், ஆதாரங்களின் மேல் கட்டப்பட்டு, நிலைநிற்கின்றனவோ, அந்த அஸ்திவாரங்களான கடவுளையும் மதத்தையும், சாஸ்திரத்தையும் அடியோடு ஒழித்து ஒரு மாபெரும் சமுதாயப் புரட்சி செய்தால்தான் இன்றைய பேதங்கள், அவைகளின் காரணமான தொல்லைகள் தீரும்; ஒழியும்.

இன்றைய சமுதாயத்தின் 100க்கு 97 பேருக்கு அவர்களின் வாழ்வுக்கு, நலத்திற்கு, உயர்வுக்குச் சமுதாயப் புரட்சி மிக மிகத் தேவைப்படுகிறது.

– விடுதலை  7.5.1953