திங்கள், 8 ஜூலை, 2024

புரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை

 


ஏப்ரல் 16-30 2019

ஒரு சிலர் பகுத்தறிவைப் பற்றி பாடி இருக்கிறார்கள். என்றாலும் அதோடு மூடநம்பிக்கைக் கருத்துக்களும் கலந்து இருக்கின்றன. அவர்கள் வீட்டில் இருந்து சொன்னார்களே தவிர வெளியில் வந்து தொண்டு செய்யவில்லை. இந்நாட்டின் பாரதிதாசனைப் போன்றவர்களை ஏன் பாராட்டுகிறோமென்றால் துணிந்து வெளியே வந்து கருத்துக்களை எடுத்துரைத்தார். நேற்று நாம் இராமனையும் கந்தனையும் செருப்பாலடி என்று சொன்னோம். 40 வருடங்களுக்கு முன்பே அவர் சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளந்தெறிய வேண்டுமென்று பாடி இருக்கிறார். செருப்பாலடித்தால் கடவுள் உருவம் இருக்கும். அந்த உருவமே தெரியாத வகையில் பீரங்கி வைத்து உடைத்தெறிய வேண்டுமென்றார். “இல்லை என்பான் யாரடா தில்லையிலே வந்து பாரடா’’ என்று எவனோ ஒரு ஆஸ்திகன் பாடினான்.

அதற்குப் பதிலாக “இல்லை என்பவன் நானடா தில்லை கண்டுதானடா’’ என்று துணிந்து பதில் சொன்னார்.

நம் நாட்டில் புலவர்கள் பலர் இருக்கிறார்கள். என்றாலும் அவர்களெல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்காக புலவர்களாக இருக்கிறார்களே தவிர, பழமைகளுக்கு உரை எழுதக் கூடியவர்களாக இருக்கிறார்களே தவிர, தங்கள் கருத்துக்களை புதுமை கருத்துக்களை எடுத்துச் சொல்வது கிடையாது. நாடு முற்றும் கோயில்கள் ஆவதற்கு சாஸ்திரங்கள் சம்மதிக்கும். பள்ளிகள் வைத்து அறிவை வளர்க்க சாஸ்திரங்கள் இடம் தராது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிதாசனுக்கு விழாக் கொண்டாடுகிறோம் என்றால், அது நமது வளர்ச்சிக்கு விழாக் கொண்டாடுகிறோம் என்பதே அதன் பொருள்.

– தந்தை பெரியார்

(4.5.1971 அன்று மாயூரத்தில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழாவில் ஆற்றிய உரையிலிருந்து.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக