பெரியார் பேசுகிறார் :
தந்தை பெரியார்
“அன்புத் தோழர் பாரதிதாசன் அவர்களே! மற்றும் நடிகையர், நடிகர், பண்டிதர், ஆசிரியர், சொந்தக்காரர் அவர்களே!’’
இன்று உங்கள் மத்தியில் இருக்கவும், உங்கள் சங்கத்தின் கருத்துகளையும், நோக்கங்களையும், வேலை முறைகளையும் உணரவும் வாய்ப்பு கிடைத்தற்கு நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது பாடப்பட்ட பாட்டுகளும் அவற்றிற்கு நடித்த நடிப்புகளும் எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியும் திருப்தியும் அளித்தன. இவை எனது நோக்கத்துக்கும் எதிர்பார்த் திருப்பவற்றிற்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. நீங்கள் செய்திருக்கும் இந்த மாதிரி ஏற்பாடு உண்மைத் தமிழர்களால் மிகவும் வரவேற்கப்பட வேண்டியதும் ஆதரவளிக்கப்பட வேண்டியதும் ஆகும். பாட்டுகளும், நடிப்புகளும், கடவுள்களையும், கலவித் துறையையும் பற்றி இருப்பது காட்டுமிராண்டிக் காலத்தைக் குறிப்பதேயாகும். இன்றைய காலத்தையும் குறிக்கும் என்று சொல்லப் படுமானால் அது ஊரார் உழைப்பில் வாழும் வஞ்சகக் கூட்டமான பார்ப்பனர் (பூதேவர்)களுக்கும் பாமர மக்களைச் சுரண்டி போக போக்கியமனுபவிக்கும் கொள்ளைக்காரக் கூட்டமான (லட்சுமி புத்திரர்களான) செல்வ வான்களுக்கும் மாத்திரமே சொந்தமானதாகும்.
பார்ப்பனியக் கொடுமையும் பணக்காரத் திமிர் தொல்லையும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதுபவர்கள் கடவுள்களையும், கலவியையுமே உள் விஷயமாய்க் கொண்ட கதை, காவியம், கலை, சங்கீதம், நாட்டியம், இலக்கண இலக்கியம் முதலியவை கண்டிப்பாய் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.
நம்முடைய இந்த இரண்டு வேலைக்கும் மேற்கண்ட இரண்டு கூட்டமும் தடையாகவே இருக்கும் என்பதோடு நமக்குள் புகுந்து கொண்டே நம் முயற்சி வெற்றி பெறாமல் போக சூழ்ச்சி செய்வார்கள். இதை நான் 26.11.28இல் சென்னையில் ழி.றி.ஆலில் என் தலைமையில் கூட்டப்பட்ட சீர்திருத்த மகாநாட்டுத் தலைமை சொற்பொழிவில் தெளிவாய்ச் சொல்லி இருக்கிறேன்.
நம் கலைகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பவை இன்று நமக்குக் கேடாகவும் நம் இழிவுக்கும், மடமைக்கும், அடிமைத்தன்மைக்கும் ஆக்கமும், ஊக்கமும் தருவனவாகவும் இருப்பதற்குக் காரணம் அவை பார்ப்பனர்களாலும் மதவாதிகளாலும் இராஜாக்கள், செல்வவான்கள் ஆகியவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டதும், கையாளப்பட்டதுமேயாகும்.
மற்றும், இவர்களைப்பற்றிய விபரங்களையும் நாம் செய்ய வேண்டியவைகளையும் ஒரு மாதத்திற்குமுன் குடிஅரசில் நான் எழுதி இருப்பதுபோல் சமீபத்தில் கூட்டப்படப் போகும் முத்தமிழ் நுகர்வோர் அதாவது இசை நுகர்வோர், நடிப்பு நுகர்வோர், பத்திரிகை வாசிப்போர் ஆகியவர்கள் மகாநாட்டில் தெளிவுபடுத்த இருக்கிறேன். நீங்கள் ஆரம்பித்து இருக்கும் இந்தக் காரியத்திற்கு தமிழினிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும், தமிழர்களும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மைக் கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவராவார்கள்.
உங்களுக்கு நண்பர் பாரதிதாசன் அவர்கள் கிடைத்திருப்பது உங்கள் நல்வாய்ப்புக்கும் உங்கள் வெற்றிக்கும் அறிகுறியாயிருக்கும். இன்று இந்த நாட்டில் தமிழும், தமிழ்க்கவியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்திற்கும் தன்மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, உழைக்க ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில்தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது. உங்கள் கழகம் வெற்றி அடைய தளரா முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டு இளைஞர்களும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப்பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமை ஆகும்.
(02.01.1944 அன்று சென்னை சென்தோம் அய்ரோட்டில் முத்தமிழரங்கு பாராட்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 08.01.1944
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக