வியாழன், 27 ஏப்ரல், 2017

சமதர்மம் எங்கே இருக்கின்றது?

02.04.1933 - குடிஅரசிலிருந்து...

தோழர் இராமசாமி சிவகங்கையில் பேசியதாவது

தலைவரவர்களே! தோழர்களே! சமதர்மம் என்பது நமக்கொரு புதிய வார்த்தை அல்ல, எல்லாச் சமுகத்தாரும் எல்லா மதஸ்தர்களும் விரும்புவதும் அந்தப்படியே யாவரும் நடக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதும், ஒவ் வொரு சமுகத்தானும் ஒவ்வொரு மதஸ்த்தனும் தங்கள் தங்கள் சமுகங்களிலும், மதங்களிலும் இருக்கின்றதென்று சொல்லி பெருமை பாராட்டிக் கொள்ளுவதுமான வார்த் தையேயாகும்.

ஆனால் காரியத்தில் மாத்திரம் உண்மையான சமதர்ம தத்துவங்களை எடுத்துச் சொன்னால், இதுசாத்தியப்படு மாவென்று பேசுவதாகவும் இது நாஸ்திகமென்றும், துவேஷமென்றும் சொல்லு வதாகவே இருக்கிறது. எச்சமதர்மக்காரனையாவது அழைத்து உங்கள் சமுகத்தில் மதத்தில் சமதர்மம்  இருக்கிறது என்றாயே நீ ஏன் இப்படியிருக்கிறாய்? அவன் ஏன் அப்படியிருக்கிறான்? நீ ஏன் எஜமானனாய் இருக்கிறாய்? அவன் ஏன் அடிமையாயிருக்கிறான்? நீ ஏன் பிரபுவாய் செல்வந்தனாயிருக்கிறாய்? அவன் ஏன் ஏழையாய், தரித்திரனாய், பிச்சைக்காரனாய், பட்டினிக்கிடப் பவனாயிருக்கிறான்?  உனக்கு ஏன் மூன்றடுக்கு மாளிகை? அவனுக்கு ஏன் ஓட்டைக் குடிசைக் கூடயில்லை? நீ ஏன் வருஷம் 10000 கணக்காய் லாபம் பெருக்கி ராஜபோகம் அனுபவித்து லட்சாதிபதியாய் விளங்குகின்றாய்? அவன் ஏன் நஷ்டப்படடு, கைமுதலை இழுந்து கடன் கார னாகிறான்? நீ ஏன் பிச்சை கொடுக்கத் தகுந்தவனானான்? அவன் பிச்சை வாங்கத் தகுந்தவனான்? நீ ஏன் பாடுபடாமல் வேதத்தையும், மந்திரத்தையும் சொல்லிக் கொண்டு நோகாமல் வயிறு வளர்க்கின்றாய்? அவன் ஏன் பாடுபட்டு இடுப்பொடிந்து, கூன்விழுந்து இளைத்துப் போகிறான். உன் பிள்ளை ஏன் பி.ஏ.எம்.ஏ., அய்.சி.எஸ். பாரிஸ்டர் படிக்க முடிந்தது? அவன் பிள்ளை ஏன் கையெழுத்தப் போடகூடத் தெரிந்து கொள்ள முடிய வில்லை என்பன போன்ற சாதாரணமான பொதுக் கேள்விகளைக் கேட்டால் சமதர்ம மதக்காரர்கள் என்பவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

முட்டாள்தனமானதும், போக்கிரித் தனமானதுமான பதிலைத்தான் சொல்லுவார்கள். அதென்ன பதிலென்றால் அய்ந்து விரல்களும் ஒன்றுபோல் இருக்கின்றனவா? ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு ஆகத்தானே கடவுள் சிருஷ்டியின் இயற்கை இருக்கின்றது என்று சொல்லு கிறார்கள்.  இந்தப்பதிலைப் படித்த மேதாவிகளான பி.ஏ., எம்.ஏ., பண்டிதர்களும், சாஸ்திரிகளும், குருமார்களும், பாதிரிகளும், மவுலானாக்களும், தத்தவஞானி என்பவர் களும், மகாத்மாக்கள் என்பவர்களும் அரசியல் ஞானிகள், சீர்திருத்தக்காரர்கள், பரோபகாரிகள். ஆஸ்திகர்கள், பிரமஞானிகள், ஆரிய சமாஜக்காரர்கள் முதலாகிய எல்லாப் பொறுப்பு வாய்ந்த கனவான்களும் சொல்லு கின்றார்களென்றால் இந்தக் கூட்ட மக்களோ, மதமோ, அரசியலோ, ஞானமோ, சமதர்மமாகுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஏழை பணக்காரக் கொடுமைக்கும், சோம்பேறி உழைப்பாளி தன்மையில் உள்ள வித்தியாசத்திற்கும் அய்ந்து விரல்களும் ஒன்று போலிருக்கின்றனவா? என்கின்ற உதாரணத்திற்கும் ஏதாவது பொருத்தமிருக் கிறதாவென்று யோசித்துப் பாருங்கள். இந்த பதிலை ஒன்று முட்டாள் தனம் அல்லது போக்கிரிதனமான பித்தலாட்டத் தனம் என்று தானேசொல்ல வேண்டும். இன்னும் வெளிப்படையாகப் பேசவேண்டுமானால் இன்று காணப்படும் மதம், ஜாதி, சமுகம், அரசாங்கம், ஞானம், தத்துவ சாஸ்திரம் முதலியவை களையெல்லாம் சமதர்மத் துக்கு விரோதமான சூழ்ச்சி எண்ணத்தின் மீது கட்டப் பட்டவையென்றுதான் சொல்ல வேண்டும்.

இதுமாத்திரமல்லாமல் இவைகளெல்லாவற்றிற் கும் ஆதராமாய்க் கொள்ளப்படும் கடவுள் என்ற தன்மையும் இந்த உண்மை சமதர்மத்திற்கு விரோதமான தன்மைகளை நிலைநிறுத்தவும் அதன் குற்றங்களை உணராமலிருக்கவும், திருத்தப்பாடு செய்யாமலிருக்கவும் தந்திரக்காரர்கள் செய்த சூழ்ச்சியேயாகும்.

அல்லவென்றால் இச்சூழ்ச்சிகளைக் கண்டுபிடிக்க முடியாத திருத்தப் பாடு செய்து கொள்ளமுடியாத மூட மக்களின் அறியாமை உணர்ச்சியேயாகும். இன்றையத் தினம் வார்த்தையில் சமதர்மமேயொழிய காரியத்தில், வாழ்க்கைத் தத்துவத்தில் எங்கே சமதர்மம் இருக்கிறது?

ஒருவனுக்கு மகிமையில், சம்பாதனையில் அல்லது சொத்தில் இத்தனையில் ஒரு பங்கு என்று பிச்சை கொடுத்துவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா? ஒருவனை தொட்டுக் கொண்டால் அது  சமதர்மமாகிவிடுமா? ஒருவன் கூட இருந்து சாப்பிட்டுவிட்டால் அது சம தர்மமாகிவிடுமா? ஒருவனைக் கோவிலுக்குள் விட்டு விட்டால் அது சமதர்மமாகி விடுமா? ஒருவன் கூட இருந்து கடவுளைப் பிரார்த்தனை செய்தால் அது சமதர்மமாகி விடுமா? ஒரு சத்திரம் கட்டி வைத்துவிட்டால் அது சமதர்மமாகி விடுமா? ஒருவன் கஞ்சித் தொட்டி வைத்து எல்லோருக்கும் கஞ்சி ஊற்றினால் அது சமதர்மமாகி விடுமா? எல்லோரையும் ஒன்றாய் உட்கார்ந்து படிக்கச் சொன்னால் சமதர்மமாகி விடுமா? எல்லோரும் ஒன்றாயிருந்து ஒன்றாய் உட்கார்ந்து கும்பிட ஒரு கோவில் கட்டி விட்டால் சமதர்மமாகிவிடுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

இவற்றால் இதை செய்கின்ற மனிதனுக்கோ, இதை அனுபவிக்கின்ற மனிதனுக்கோ, முறையே நஷ்டமென்ன? லாபமென்ன? இவையெல்லாம் வெறும் பித்தலாட்ட சமதர்மங்கள்.

உலகம் பொது, உலகத்திலுள்ள செல்வம் போக போக்கியம் பொது, உலகத்தில் மனித வாழ்க்கைக்கு  வேண்டிய காரியத்திற்காக மனிதன் செய்ய வேண்டிய வேலைகளெல்லாம் பொது, அதனால் ஏற்படும் பலன்களெல்லாம் எல்லா மக்களுக்கும் பொது, சரிபாகம் பிரித்துக் கொள்ளத்தக்கது.

இதற்கு மீறி நடந்தால் குற்றம் - தண்டிக்கத்தக்கது என்று எந்தமதம். எந்த சமுகம், எந்த அரசாங்கம், எந்த அரசியல் ஞானம், எந்த மத தத்துவஞானம் எந்த மகாத்மா முதலியவைகள் கூறுகின்றன? என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். மதவெறிக் காரணமாக தன்தன் மதம் சமதர்மமதம் என்பதும், சமயவெறிக் காரணமாக  தன்தன் சமயம் சமதர்ம சமயமென்பதும் அரசியல் வெறி - சூழ்ச்சி காரணமாக தன்தன் அரசியல் முறை சமதர்மம் என்பதுமான பித்தலாட்டங்கள் தான் நடைபெறு கின்றனவேயல்லாமல் உண்மை சமதர்மம் எங்கே இருக்கின்றது? எதில் இருக்கின்றது? என்பதை நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.
-விடுதலை,7.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக