வெள்ளி, 30 ஜூன், 2017

கடவுள்


20.11.1932  - குடிஅரசிலிருந்து...

கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும் அது மனித சமுகத்தில் 100க்கு  99 மக்களை பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி  ஆதிக்கம்  செலுத்தி வருகின்றது.

கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான  வருஷங்கள் ஆயிருந்த  போதிலும்கூட, கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்திய வர்களோ  உணர்ந்த வர்களோ இது வரையில்  காணக் கிடைக்கவில்லை.

பொதுவாக  அந்தப் படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்தி வைக்க  வேண்டும் என்கின்ற  அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத் தையும், பாவ புண்ணிய பயனையும் மோட்ச நரகத்தையும், கற்பித்து அதை பரப்ப பலவித தாபனங்களைச் உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட்டதால் வெகு சுலபமாகவும்,  செல்வாக்காகவும் அதன் பிரசாரம் நடக்கவும்,  மக்களை தன் வயப் படுத்தவும்  ஆன காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன. கடவுள் என்றால் என்ன, என்றாலும், கடவுள் என்றால் என்ன, என்பதை உணருவதற்கில்லாமலும், உணர வேண்டும் என்று  நினைப்பதற்கு இல்லாமலும் இருந்து வருகிறது.

யாராவது  கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையும், செய்கை களையும் கொண்டிருப்பதும் ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அறிதாகவேயிருக்கிறது. கடவுள் என்பது சர்வ  வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ சக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப் பட்டு விட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம் இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது.

கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறு பாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத் தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.

-விடுதலை,23.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக