வெள்ளி, 30 ஜூன், 2017

ஆதியில்....


20.11.1932  - குடிஅரசிலிருந்து...

ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமையாய் சுயேச்சையாய்த் திரிந்த - இயற்கை  வாழ்க்கையிலிருந்து சமுக கூட்டு வாழ்க்கைக்கு வரும் போது அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து கொண்டும், அவசியமான பரபர  உதவிகளை வழங்கிக் கொண்டும் ஒரே சமுகமாய், சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணினானே ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப் படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலை யையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து, அவனை உலக சுகபோகங்களில்  பட்டினிப் போட்டு தான் மாத்திரம் சோம் பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு எல்லா சுகபோகங் களையும் தானே அனுபவித்துக் கொண்டு இருப்பதற்கோ அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டு விட்டு தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்க விஷயமாகும்.

ஆனால், நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம்பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும் அரசனுக்குக் குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலை நிறுத்தி ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள், ஆகியவைகளைக் கற்பித்து பிறகு அவைகளின் மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம், பின் ஜென்மம், கர்மம், பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ்உலகம், தீர்ப்பு நாள், மோட்சம், நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது. இந்த கற்பனைகளின் பயன் தான் பெரும்பான்மையான மக்கள் பாமரர்களாகவும் ஏமாற்றப்படவும், கொடுமைக்குள்ளாகவும் மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும் உழைத்தும் சரியான கூலி கிடைக்காமல் பட்டினிக் கிடந்துழல்வதைப் பொருமையுடன் பொருத்துக் கொள்ளவுமான காரியங்கள் நடந்து வருவதுடன் அவை எங்கும் என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் இந்த நிலை அடியோடு அழிபட வேண்டும்.  அதற்காக அதன் காப்புகளான மேற் குறிப்பிட்ட கடவுள், மதம், தேசியம், ஜாதியம் என்பவை களும் அவற்றின் பேறுகளான ஆத்மா, முன் ஜென்மம், கர்மம், தீர்ப்பு, மோட்ச நரகம், பாவ புண்ணியம், ஆகியவை களாகிய போலி உணர்ச்சிகளும் அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத் தெரியப் பட வேண்டும்.
-விடுதலை,23.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக