வெள்ளி, 30 ஜூன், 2017

ஆரியப் பார்ப்பனர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பீர்களானால்,

நானுஞ் சொல்லுகிறேன் (சு.ம.வின் சீடன்)
13.11.1943 - குடிஅரசிலிருந்து... 

நான் சொல்லுகிறேன் என்ற தலைப்பில் சென்ற வாரக் குடிஅரசின் 13-ஆம் பக்கத்தில் சு.ம. அவர்கள் ஆஸ்திகர்களுக்கு ஒரு சவால் விடுத்திருந்தார். அதில் அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கும் மதம், கடவுள் இவைகளின் குணங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று சில நிபந்தனைகளை வெளியிட்டிருக்கிறார். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் இவையிரண்டுக்கும் சிருஷ்டி கர்த்தர்களாயுள்ளவர்கள் ஆரியர்-பார்ப்பனர் ஆகையால் அவர்களைப் பற்றி சில விஷயங்களைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆரியப் பார்ப்பனர்களே! அவர்களது கால்வருடும் கண்ணிய வான்களே! நாங்கள் ஆரியப் பார்ப்பனர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பீர்களானால், அவர்களைத்துவேஷிக்கக் கூடாதென்பீர் களானால், அவர்களைப் பகைக்கக்கூடாதென்பீர்களானால், அவர் களையும் உடன்பிறந்தார்களைப் போல் (1)பாவிக்க வேண்டுமென் பீர்களானால், அவர்கள் தன்மானத் தமிழர்களாகிய நாங்கள் விரும்புகிறபடி, அதாவது அறிவு உலகம் ஒத்துக்கொள்கிறபடி இருந்தால், அவசியம் ஏற்றுக்கொள்கிறோம்.

(1.) ஆரியர் தங்களது ஜாதியைக் குறிக்கும் அடையாளத்தை நெற்றியிலோ, உடலிலோ அளிக்ககூடாது. உடையைக் கொண்டோ, தலைமயிரைக் கொண்டோ, பேச்சைக் கொண்டோ அவர்கள் தமிழர்களுக்குப் புறம்பானவர்கள் என்று கண்டுகொள்ள முடியாதபடி இருக்கவேண்டும்.

(2) கோவில்களிலுள்ள கல்லையும் செம்பையும் கழுவி வயிறு வளர்க்கும் வேலையை அடியோடு விட்டுவிட வேண்டும். அதாவது கோவில்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கக் கூடாது. அவைகளை வேறு நல்ல காரியங்களுக்குப் பயன் படுத்துவதை இவர்கள் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தடுக்கவோ எதிர்க்கவோ கூடாது.

(3) தாங்களே ஊட்டிய நஞ்சைத் தாங்களே எடுக்கவேண்டு மென்ற நீதிப்படி எல்லாத் தமிழர்களுடனும் கலப்பு மணஞ் செய்து கொள்ளச் சம்மதிக்கவேண்டும். இதற்கு இடையூறாக உள்ள சட்ட திட்டங்களை ஒழித்துவிட வேண்டும்.

(4) வண்டியோட்டுதல், ரிக்ஷா முதலிய வண்டிகளை இழுத்தல், விறகு வெட்டுதல், உழுதல், தண்ணீர் இறைத்தல், சுமை தூக்குதல், வீடு கட்டுதல், தெருப்பெருக்குதல், அசுத்தத்தை அள்ளுதல், சவரஞ் செய்தல், துணி வெளுத்தல், மாடு மேய்த்தல் முதலிய இன்னும் பல்வேறு தொழில்களை ஏழைகளாயுள்ள தமிழர்கள் எவ்வாறு செய்து வருகிறார்களோ, அதே மாதிரி, அதே நிலையிலுள்ள ஆரியப் பார்ப்பனரும் செய்ய வேண்டும்.

(5) அங்காடி விற்றல், நெல்குத்துதல், நடவு நடுதல், சிறு சுமைகள் தூக்குதல், பாத்திரம் தேய்த்தல் முதலிய தொழில்களையும் இன்னும் பல்வேறு தொழில்களையும் ஏழைகளாயுள்ள தமிழ்ப் பெண்கள் எவ்வாறு செய்து வருகிறார்களோ அதே மாதிரி, அதே நிலையிலுள்ள ஆரியப் பார்ப்பனப்பெண்களும் செய்யவேண்டும்.

(6) ஆயுள் ஹோமம், கலியாணம், கருமாதி, திதி, புண்ணியாதானம், புது வீடு புகுதல், சீமந்தம், சோதிடம், அமாவாசை, அர்ச்சனை, அபிஷேகம், கும்பாபிஷேகம், தேர், திருவிழா, கோவில் கட்டுதல் முதலிய எந்த விதமான காரணத்தைக் கொண்டும் தமிழர்களிடமிருந்து ஒரு பைசாவோ, வேறு ஒரு சிறு துளியோ வாங்கவே கூடாது. இவைகளெல்லாம் முழுப்புரட்டு என்பதையும், தமிழர்களை முழு முட்டாள்களாக ஆக்குவதற்காகவே சைவம், வைஷ்ணவம், வழக்கம், சாஸ்திரம் என்ற வேறு பெயர்களால் தங்களால் உண்டாக்கப்பட்டவை என்பதையும் கண்ணியமாக ஒத்துக்கொண்டு பிரசாரம் செய்யவேண்டும்.

(7) ஜாதிவேற்றுமையையும், மதப் பூசல்களையும், மூட எண்ணங்களையும், அடிமைத் தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும், கோழைத் தனத்தையும் தமிழர்களிடம் உண்டாக்குவதற்காகவே கற்பிக்கப்பட்டுள்ள எல்லா இதிகாசங்களும், எல்லாப் புராணங்களும், கட்டுக் கதைகள், நாவல்கள், மறக்கப்பட வேண்டியவைகள், ஒழிக்கப்பட வேண்டியவைகள் என்பதைக் கண்ணியமாக ஒப்புக் கொள்ளவேண்டும். (தமிழர்களிலேயே எவ்வளவோ பேர் இவ்வாறு சொல்ல மாட்டார்களே என்று வீண் சாக்குக் கூறக்கூடாது. ஆணிவேரை அறுத்துவிட்டால் சல்லி வேர்கள் மறுநாளே மடித்துப் போகும்.)

(8) ஆரியரை (பார்ப்பனர்)க் குறிக்கக்கூடிய அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா, ராவ் முதலிய பட்டங்களை எந்த சந்தர்ப்பத்திலும் உபயோகிக்கக் கூடாது.

(9) உலக வாழ்க்கைக்கோ, மனிதர்களின் நல்லொழுக்கத்திற்கோ உதவாத வேதபாராயணம், யாகம், பூஜை, அர்ச்சனை முதலியவைகளும், சங்கராச்சாரியர், மாதவாச்சாரியார், ஜீயர் முதலியஅமைப்புக்கள் உடனே ஒழிக்கப்பட வேண்டும்.

செத்து மடிந்துபோன சமஸ்கிருதத்தை விட்டொழித்து உயிருள்ள மொழிகளைப் பயில வேண்டும்.

10.தீபாவளி, சரஸ்வதி பூஜை, விநாயக சதுர்த்தி, ஸ்ரீ ராம நவமி, அறுபத்து மூவர் விழா, கந்தர் சஷ்டி, சிவராத்திரி, கிருஷ்ண ஜயந்தி முதலிய பண்டிகைகள் மூடத்தனத்தையும், மத வெறியையும், சமுகச்சண்டையையும், அறிவீனத்தையும் தமிழர்களிடம் வளர்ப்ப தற்காகவே தங்களால் ஏற்படுத்தப்பட்டவைகள் என்பதைக் கண்ணிய மாக ஒப்புக்கொண்டு இவைகளை அடியோடு நிறுத்திவிட வ்ண்டும்; நிறுத்தும்படியாக அடிமைகளாக்கப்பட்ட தமிழர்களிடம் பிரச்சாரஞ் செய்யவேண்டும். (இப்பண்டிகைகளுக்குப் பதிலாக என்ன விழாக்களைக் கொண்டாட வேண்டுமென்பது பிற்காலத்தில் ஏற்படும் திராவிடநாட்டு சர்க்காரால் நிர்ணயிக்கப்படும்.)

இப்போதைக்கு இந்த நிபந்தனைகள்போதும். இவைகளின்படி நடக்கும் ஆரியர் பார்ப்பனர் திராவிடநாடு ஆட்சியில் ஏற்றுக் கொள்ளப்படுபவர்; அன்னியராகக் கருதப்படமாட்டார். எங்கே பார்க்கலாம்! எத்தனை ஆரியர்கள் முன்வருகிறார்கனென்று!

-விடுதலை,30.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக