தந்தை பெரியார்
மனித சமூகத்தில் பிராமணன் என்று ஒரு ஜாதி மேலாக இருந்து பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், சண்டாளன் என்று ஒரு ஜாதி கீழாக இருந்து பாடுபட்டு பாடுபட்டு இராப் பட்டினியாய் இருக்கவுமான காரியங்கள் கூடாது என்றால் சங்கராச்சாரி என்னும் மதத்தலைவன் அது பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அதற்கு ஆதாரம் பிராமணனுடைய ரத்தத்திலும் சண்டாளனுடைய ரத்தத்திலும் இருக்கின்றது என்றும் சொல்வாரானால் மிஸ். மேயோ நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் இந்த நாட்டில் பிறக்காததும் பிறந்த பெருமையை அடைய முடியாமல் போனதும் இந்தியாவுக்குப் பெருத்த நஷ்டமல்லவா என்று கேட்கின்றோம்.
மிஸ். மேயோ அம்மையார் இந்தியாவிற்கு வரப்போகின்றார் என்கின்ற சேதி எட்டியவுடன் இந்திய அரசியல்வாதி, தேசியவாதி, சீர்திருத்தவாதி என்கின்ற கூட்டங்களுக்குப் புலியைக்கண்ட ஆட்டுக்கூட்டங்கள் போல் நடுக்கங்கள் ஏற்பட்டுவிட்டதைப் பத்திரிகைகளில் காணலாம்.
மிஸ். மேயோ யார்? அவர் புலிக்குச் சமமானவரா? அந்தம்மையாரைக் கண்டால் இந்தியர்கள் நடுங்க வேண்டியதுதானா என்பவைகளை முதலில் யோசிப்போம்.
மிஸ். மேயோ ஒரு ஆங்கில மாது. அவர் 4, 5 வருடங்களுக்குமுன் இந்தியாவுக்கு வந்து இந்துக்களின் நாகரிகம், பழக்க வழக்கம், மதச்சம்பிரதாயம், வாழ்க்கை முறை முதலியவைகளைப் பற்றி நன்றாய் அனுபவ ஆதாரங்களுடனும், தக்க சாட்சியங்களுடனும் ஆராய்ந்து விசாரித்து அறிந்த உண்மைகளை ஒரு சிறிய புத்தக ரூபமாக்கி இந்தியத்தாய் என்னும் பேரால் உலக மக்களுக்கு வெளியிட்டவர்.
அந்தம்மையார் வெளியிட்ட உண்மைகளை இதுவரை எவரும் அடியோடு பொய் என்று யாரும் மறுத்துக்கூற முன்வரவில்லை. அரசியல் பிழைப்புவாதிகளும் அரசியல் பிழைப்புப் பத்திரிகைகளும் அம்மையைத் தூற்றின. சில கண்டன உரைகள் பகர்ந்தன. ஆனால் அவை பொய் என்று கூறயெவருக்கும் தைரியம் வரவில்லை.
தோழர் காந்தியார் அப்புத்தகம் இந்திய சீர்திருத்தவாதிகளுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டியதொரு ஆதாரம் என்றார்.
தோழர் ரவீந்தரநாத் டாக்கூர் மத சம்பந்தமான காரியங்களுக்கு இந்தியர் மாட்டுச் சாணியைச் சிறிது சாப்பிடுகின்றார்களே ஒழிய வேறில்லை என்றார்.
தோழர் லாலாலஜபதிராய் அவர்கள் அமெரிக்கா மாத்திரம் வாழுகின்றதா என்று சொன்னார். தென்னாட்டு தேசபக்தர்களுக்குத் தலைவராய் வாய்த்த தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் வேதம், சாஸ்திரம் ஆகியவைகள்தான் எல்லோரும் படிக்கக்கூடாது என்கின்ற நிர்பந்தம் இருந்து வருகின்றதே ஒழிய மற்றப்படி ஒன்றுமே படிக்கக்கூடாது என்கின்ற நிர்பந்தம் இல்லை என்று சொன்னார்.
மகாகாருண்ணியமும், நீதியும், நாகரிக ஞானமும், பகுத்தறிவும் கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிரிட்டிஷ் அரசாங்கமோ குழந்தைகளைக் கல்யாணம் செய்யக் கூடாது என்ற சட்டம் செய்ய ஏற்பாடு செய்தாகி விட்டது என்று உலகத்துக்குத் தெரிவித்து விட்டார்களே ஒழிய அதைச் சரியானபடி நீதி செலுத்தாமலே இருந்து வருகிறார்கள்.
மேயோ அம்மையார் இந்தியாவுக்கு வந்து இந்திய மக்கள் அவிவிவேகத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும், மிருகத்தனத்தையும் வெட்டவெளிச்சமாய் ஆதாரங் களோடு விளக்கிக்காட்டி விட்டுப்போய் இன்றைக்கு 4, 5 வருஷங்களாகியும் அவை வெளியான புத்தகங்கள் பல பாஷைகளிலும் பதினாயிரக்கணக்காகச் செலவாகியும் நாளதுவரை அவ்வாபாசமானதும், காட்டுமிராண்டித்தனமானதுமான விஷயங்களில் 100க்கு 10 வீதம்கூட அரசியல்வாதிகளாலோ, தேசியவாதிகளாலோ, சீர்திருத்தவாதி களாலோ, அரசாங்கத்தாராலோ ஒழிக்க முடியவில்லை என்றால் இந்தப் பாழாய்ப்போன இந்திய நாட்டுக்கு ஒரு மேயோ - அதுவும் 5 வருஷத்திற்கு ஒரு தடவை வரும்படியான மேயோ போருமா? என்று கேட்கின்றோம்.
குழந்தை மணம் இன்றும் 4 வயது பெண் குழந்தைக்கு 25 வயது தடி ஆணை மணம் செய்கின்றார்கள். உள்நாட்டில் அந்த சட்டத்தை மீறினால் கேள்வியே இல்லை. வெளிநாட்டுக்குப் போய் அங்கே மணம் செய்து கொண்டு வந்துவிட்டால் பேச்சே இல்லை என்கின்ற முறையில் இன்று நம் நாட்டில் குழந்தை மணம் தடுப்பு இருந்து வருகின்றது. இதைக் கண்டு நம் தேசபக்தர்கள் வெட்கமடைய வேண்டியிருக்க மேலும் மிஸ். மேயோவைக் கண்டு எங்கள் யோக்கியதையைப் பற்றி நீ காகிதத்தில் எழுதினது போராதம்மா தயவு செய்து கல்லில் எழுதிவையம்மா என்று கேட்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.
கல்வி விஷயத்தைப் பற்றி இந்தியாவில் வெள்ளைக்கார நாகரிக அரசாங்கம் வந்து 200 வருஷமாகிய இன்றும் 100-க்கு 8 பெயரே அதுவும் மேல்ஜாதிக்காரர்களுக்குள்ளாகவே கல்வி பெரிதும் நின்றுவிடும் மாதிரியான முறையில் இருக்குமானால் மிஸ். மேயோவை மேளதாளம் வைத்து அழைத்து ஊர்வலம் செய்து வரவேற்பு வாசித்து நமது அரசாங்க ஆட்சியின் யோக்கியதையை உலகெல்லாம் பரப்பும்படி காணிக்கை வைத்துக் கேட்டுக்கொள்ள வேண்டாமா என்று கேட்கின்றோம்.
மனிதத்தன்மை விஷயத்தில் - ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் விஷயத்தில் இன்ன ஜாதியார் இவ்வளவு இன்ன ஜாதியார் இவ்வளவு தூரம்தான் போகலாம். இன்ன ஜாதியார் போகவே கூடாது என்கின்ற காட்டுமிராண்டி வழக்கத்தை நிறுத்த சட்டம் செய்யவேண்டும் என்று சொன்னால் சர்க்காரார் அது வெகுஜனங்களுக்கு இஷ்டமில்லை. ஆனதால் அதை எதிர்க்கிறோம் என்று சொல்லுவதும், காங்கிரசுக்காரர்கள் வெகுஜனங்களுக்கு விரோதமான காரியத்தைச் செய்யக்கூடாது என்று சொல்வதும், வைதீகர்கள் மதத்தில் அரசாங்கமோ, பொதுஜனங்களோ, காங்கிரசோ, சீர்திருத்தவாதிகளோ பிரவேசிக்கக்கூடாது என்று சொல்லுவதும், கடைசியாக அச்சட்டம் வாபீசு வாங்கிகொள்ள நேர்ந்ததும், அதுவும் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியாரும் செய்த துரோகத்தினால் இச்சட்டம் வாபீசு வாங்கிக்கொள்ள நேர்ந்தது என்று சொல்ல நேர்ந்தது என்றால் மிஸ். மேயோ அம்மையாரின் விஜயம் இந்நாட்டுக்குஒரு தடவை அவசியமா, பலப்பல ஆயிரம் தடவை அவசியமா என்று கேட்கின்றோம்.
ஜீவகாருண்ய விஷயத்தில ஆடுமாடுகளை உயிருடன் கட்டிப்போட்டு அதன் வாயையும், மூக்கையும் பிடித்து அமிழ்த்திக் கொண்டு வெதரை நசுக்கி சரீரத்தில் சதை சதையாய் அறுத்து மாமிசத்தை எடுப்பதும், அந்த விதமான கைங்கரியத்துக்கு மதகைங்கரியம் என்ற சொல்லுவதுடன் தான் சித்திரவதைக் கொலையைப் பற்றி வேறுயாருக்கும் பேச உரிமையில்லை என்று சொல்லுவதுமான காரியங்கள் நேற்றும், இன்றும், நாளையும், முக்காலத்தலும் நடந்து வரக்கூடியதாய் இருக்கும்போது மிஸ். மேயோவை இந்தியாவுக்கு வரும்படி இதுவரை அழைக்காமல் இருந்தது இந்நாட்டு மக்கள் அவிவிவேகமல்லவா என்று கேட்கின்றோம்.
மனித சமுகத்தில் பிராமணன் என்று ஒரு ஜாதி மேலாக இருந்து பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், சண்டாளன் என்று ஒரு ஜாதி கீழாக இருந்து பாடுபட்டு பாடுபட்டு இராப் பட்டினியாய் இருக்கவுமான காரியங்கள் கூடாது என்றால் சங்கராச்சாரி என்னும் மதத்தலைவன் அது பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அதற்கு ஆதாரம் பிராமணனுடைய ரத்தத்திலும் சண்டாளனுடைய ரத்தத்திலும் இருக்கின்றது என்றும் சொல்வாரானால் மிஸ். மேயோ நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் இந்த நாட்டில் பிறக்காததும் பிறந்த பெருமையை அடைய முடியாமல் போனதும் இந்தியாவுக்குப் பெருத்த நஷ்டமல்லவா என்று கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட, குறைகள் கொடுமைகள், அவிவிவேகத்தனங்கள், மூர்க்கத்தனங்கள், காட்டுமிராண்டித்தனங்கள் இன்னமும் வண்டிவண்டியாய் இருக்க அவைகளைப்பற்றி சரியாய் பேசாமல் அவைகளை ஒழிக்க யோக்கியமாய் முயற்சிக்காமல் மிஸ்.மேயோ வருகிறாள், மீண்டும் மிஸ்.மேயோ, குப்பைக்காரி மேயோ வருகை என்றெல்லாம் தலைப்புக் கொடுத்து மேயோவை வைவதென்றால் இக்கூட்டத்தாருக்கு மனிதத் தன்மையோ, சுயமரியாதை உணர்ச்சியோ இருக்கின்றதா என்று கேட்கின்றோம்.
மிஸ். மேயோ அம்மையாரின் இந்திய விஜயத்துக்கு அரசாங்கத்தார் உதவி புரிந்ததாகவும் உள்உளவாய் இருந்ததாகவும் இனியும் அப்படிச் செய்வார்களா என்றும், இந்திய சட்டசபையில் கேள்விகள் கேட்கப்பட்டதாகப் பார்த்தோம். இதற்கு அரசாங்கம் வெண்டைக்காய் பதில் சொன்னதையும் பார்த்தோம்.
அரசாங்கத்தார் மேயோ அம்மையாருக்கு உதவி செய்ததற்காகவும், உள்உளவாய் இருந்ததற்காகவும் உண்மையான தேசியவாதிகள் மகிழ்ச்சி அடைய வேண்டுமே யொழிய அதற்காக குற்றம் கூறக்கூடாது என்பதே நமதபிப்பிராயம். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து 200-வருஷமான பிறகும், இந்திய மக்களது உழைப்பின் பயனை-அவர்களது ரத்தத்தைக் காய்ச்சி இறக்கிய சத்தை சமாதானமும் நீதியுமான அரசாட்சி என்னும் பெயரால் மாதம் 1க்கு 1000, 2000, 5000, 10000, 20000, 30000 ரூபாய்கள் என்பதாக லட்சக்கணக்கான பிரிட்டிஷார் அனுபவித்தும் இன்னமும் இந்தியா மிருகப் பிராயத்திலேயே இருந்து வருகின்றது என்றால் உலகோர் முன் இந்தியர்களுக்கு அவமானமா? பிரிட்டிஷ் ஆட்சி முறைக்கு அவமானமா என்பதை நன்றாய் நடு நிலைமையில் இருந்து பொதுநோக்குடன் ஆராய்ந்து பார்க்கும்படி தேசியத் திருக்கூட்டத்தாருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.
தோழர் காந்தி, ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களே பெரும்பான்மையான ஜன அபிப்பிராயத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்யக்கூடாது என்றும் மேல் ஜாதிக்காரர்கள் சம்மதமில்லாமல் மத சம்மந்தமான பழக்க வழக்கங்களைப் பற்றி பேசக் கூடாது-தொடக்கூடாது என்றும் சொல்லி விடுவார்களேயானால் மேயோ போன்ற - அல்லாவிட்டால் லெனின் போன்ற - கமால் பாட்சா போன்ற அமானுல்கான் போன்ற வெளிநாட்டார்களால்தான் மதசம்பந்தமான ஆபாசங்களும் - கொடுமைகளும் குப்பைகளும் சாக்கடைகளும் ஒழிந்து இந்திய நாடு மனிதத் தன்மையை அடைய முடியுமே தவிர வேறில்லை என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது.
ஆகவே, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் இந்த மாதிரியான கூச்சல்களுக்குப் பயப்படாமல் மேயோ அம்மையாரை மறுமுறை அழைத்து வந்து இங்கு சமுகத்தின் பேராலும் மதத்தின் பேராலும் ஆட்சியின் பேராலும் இருந்து வரும் கொடுமைகளையும் குற்றங்களையும் உண்மையாய் அறிய அவகாசம் கொடுத்து அவைகள் சீக்கிரத்தில் ஒழிய உதவி செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.
- 'பகுத்தறிவு', கட்டுரை - 02.09.1934
-விடுதலை,20.8.17