நமது நாட்டில் நம்மால் வணங்கப்படும் கடவுள்கள் எல்லாமுமே ஆரியக் கடவுள்கள் என்பதைப் பற்றிய உண்மையில் யாருக்குமே மறுப்பு இருக்காது.
இந்தக் கடவுள்கள் ஆரியக் கடவுள்கள் என்பது மாத்திரமல்லாமல், இக்கடவுள்கள் _ ஆண் பெண் கடவுள்கள், அவர்களது மனைவி மக்கள், அவதாரங்கள், மூர்த்தி கரங்கள் யாவுமே ஒழுக்கக் கேடு, நாணயக் கேடு, கற்புக் கேடு ஆகிய இழிவான குற்றங்களுக்கு உட்பட்டவையாகவே இருந்து வருகின்றன.
இந்த விஷயங்களில் ஆரியர்களுக்கு மானம், வெட்கம், இழிவு இல்லையானதால், அவர்கள் அந்த நடத்தைகளையே நமக்கு உற்சவங்களாகக் கொண்டாடும்படியும் செய்து விட்டார்கள்.
இந்தப்படியான கடவுள் உற்சவங்கள், பண்டிகைகள் ஆகியவைகளைப் பற்றி ‘குடிஅரசு’விலும், ‘விடுதலை’யிலும் மற்றும் புராண ஆபாசம், கடவுள் நடத்தைகள் முதலிய புத்தகங்களிலும் விளக்கி வருகிறோம்.
இப்போது இந்தக் கோடைக்காலப் பருவத்தில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் பண்டிகை என்பதாக ஒரு பண்டிகை நடந்து வருகிறது. மாரியம்மன் கடவுள் _ கிராம தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி, ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகா தேவி, மாரி ஆகிவிட்டாள். இந்த மாரி இல்லாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. மாரி, கிராம தேவதையாதலால், பாமர மக்கள் எல்லோருக்கும் கடவுளாகி விட்டாள்.
இந்த இரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத் தக்கதாகும்.
இந்த இரேணுகை என்னும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி. அவள் ஒரு அன்னிய புருஷன்மீது இச்சைப்பட்டு _ அதாவது, அவள் நீராடக் கங்கைக்குச் செல்லும்போது, எதிர்ப்பட்ட சித்ரசேனனைக் கண்டு மோகித்துக் கற்புக் கெட்டுவிட்டாள். அதை அறிந்த கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்றுவிடும்படி தன் மகன் பரசுராமனுக்குக் கட்டளையிட்டார். பரசுராமன், இரேணுகையை வேறு யார் தடுத்தும் கேளாமல் கொன்று விட்டான். கொன்றுவிட்டு வந்து, தாயைக் கொன்று விட்டோமே என்று துக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் _ தகப்பன் ஜமதக்கினி அதை அறிந்து மகனுக்காக மாரியைப் பிழைப்பிக்க இசைந்து, மந்திர நீர் தந்து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினார்.
தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களத்துக்குச் சென்று தாயின் தலையை எடுத்து முண்டத்துடன் ஒட்டவைக்கையில் _ கொலைக் களத்தில் பல முண்டங்கள் வெட்டுப்பட்டுக் கிடந்ததால் அடையாளம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல், ஏதோ ஒரு முண்டமாகக் கிடந்த உடலை எடுத்துத் தலையுடன் ஒட்டவைத்து அழைத்து வந்து தகப்பனிடம் விட்டான். கணவன் அவளைப் பார்த்து, ‘நீ இங்கு இருக்க வேண்டாம்; கிராமங்களுக்குப் போய், அங்கு வாசம் செய்து, கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டு இரு’ என்று
கூறி அனுப்பி விட்டார்.
அதுமுதல், மாரி கிராமங்களில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷயமறிந்து மாரியம்மன் தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன்வந்து, தங்கள் ஊர்களில் மாரிக்குக் கோயில் கட்டி _ மாரியின் தலையை மாத்திரம் வைத்து வணங்கி வருகிறார்கள். இது ஒரு புராணம்.
மற்றும் சிவ புராணத்தில், அந்த மாரி, கார்த்தவீரியனை மோகித்துச் சாபமடைந்தாள் என்று காணப்படுகிறது.
மற்றொரு புராணத்தில், அவள் புருஷன் ஜமதக்கினி கொல்லப்பட்டதால் அவள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். இதை இந்திரன் ஒப்புக்கொள்ளாமல் மழை பெய்யச் செய்ததும் அவளது உடல் அரை வேக்காட்டுடன் நின்றுவிட்டது. அதனால் அவள் எழுந்து பக்கத்தில் உள்ள பஞ்சமத் தெருவில் நிர்வாணத்தோடு வேப்பிலையால் மானத்தை மறைத்துக்கொண்டு ஓடினாள். அதைக் கண்ட பஞ்சமர்கள் பச்சை மாவும், பழமும், இளநீரும் கொடுத்து உபசரித்தார்கள்; ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரித்தாள். இந்த அய்தீகம்தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகிறது. பூசை, உருவம், உணவு முதலியவை எப்படி இருந்தாலும் _ இந்த மாரியம்மன் மீது இரண்டு விபச்சாரக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
1. சித்திரசேனனை மோகித்துக் கற்பு இழந்தது;
2. கார்த்தவீரியனை இச்சித்துக் கற்பு இழந்தது.
இரண்டிலும் புருஷன் ஜமதக்கினியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவள் தண்டிக்கப்-பட்டிருக்கிறாள்.
இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.
நமது கடவுள் நம்பிக்கையிலும், கடவுளை வணங்குவதிலும் நமக்குள் எவ்வளவு மடமை இருந்தாலும் _ நாம் வணங்கும் கடவுள்களை இவ்வளவு மோசமான _ நாணயம், ஒழுக்கம், நாகரிகம் என்பவை இல்லாமல், இவை யாவும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பது பற்றிக் கவலைப்பட வேண்டாமா? என்றுதான் கவலைப்படுகிறேன்.
(‘விடுதலை’ - கட்டுரை - 25.3.1960)
- தந்தை பெரியார்
-உண்மை இதழ்,1-15.8.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக