வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

காலத்திற்கேற்ப வாழுங்கள்


தந்தை பெரியார்




இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில்களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறுமான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டிருக்குமா?
நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, நாலாஞ் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன். இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?


நம் கழகமும், நமது முயற்சியும், பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.

பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற் றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம்.
இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது மூளை எப்படி இருக்கிறது? மிக மிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?

நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமையானவர் களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிக மிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம்.

இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந்திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால் நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படியிருக்கிறது.

நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணரவேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம் நம்மில் 100க்கு 10 பேருக்குக்கூட கல்வி இல்லை. நாம் 100க்கு 90 பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம்.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும் கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இலலை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்பட வேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.

நம்மிடத்தில் எந்தவிதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கலைப்படு வதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித்தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர் களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய் விட்டது. நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. நம் வாழ்வுக்கு, நமக்கு, பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக்கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வது தான் நம்மைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து விட்டது.

நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடானதாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.

நம் மதம் நம்மை என்றைக்குமே முன்னேற்றாததாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடை ஜாதியாக இருக்கிறோம்.

நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது.

நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாத வர்களாக ஆக்கிவிட்டன.

ஆகையால், நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களையடைய வேண்டும்.

நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்ன வென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்கு ஆக வீடு வாசல், (கோவில்) பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேல்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ் டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக் கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம். இதனால் நம்மை நாமே கீழ்மைப் படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றதனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?

இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவை களுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துகள்? அவை களுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவை  மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும், நட்டமும் அடைகின்றவர்கள் யார்?

நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்!

இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில் களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறு மான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டி ருக்குமா?

நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, நாலாஞ் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன்? இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?

நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள் தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம் சொத்து போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணரு கின்றீர்களா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானைப் பிராமணனாகவும் ஆக்கியிருக் கிறதா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தர்மங்கள் என்று சொல்லப் படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக் கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா?

ஆகவே நமது இழிவுக்கும் ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல் லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்ற மடைந்தாக வேண்டும்.

நமது கடவுள்கள் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப் பட்டவை, அல்லது கண்டுபிடிக்கப்பட்டவை, அல்லது நமக்குத் தெரிய வந்தவை. நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போதுள்ள அநாகரிக மக்களால் உண்டாக் கப்பட்டதாகும். நமது ஒழுக்கம் நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக் கேற்ப ஏற்பட்டவையாகும்.

இன்று காலம் மாறிவிட்டது, இயற்கை கூட மாறிவிட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறிவிட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டன. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20ஆம் நூற்றாண்டுக்கு 4000ஆம் 5000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா? ஆகவே இன்றைக்கு ஏற்றபடியாக இவை மாற்றப்பட்டாக வேண்டும். இன்று எந்த ஒருஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள் மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண் டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக் கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிட மாவது உண்டா? நான் மதத்தின் மீது, கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில் அப்படிப்பட்ட அறிவுள்ள வர்களால் அவை சிருஷ்டிக்கப் பட்டவையாகும். காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும்.

இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத்தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய்வப் பிறவிகள் - தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்பதான அந்த மகான்களே இன்று இருப்பார்களேயானால், உடனே மாற்றி விட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வர வெட்கப்படு கிறார்கள்.

உதாரணமாக இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள். மாடு, பருந்து முதலிய வாகனங்கள், பெண்டாட்டி பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள், மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.

இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி. இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.

இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப்பட்டிருக் கும் நீதி - ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனு நீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே அக்காலத்தில் கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா?

கட்டை வண்டிப் பிராயணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் - ஆகாயக்கப்பல் பிராயணத்தை நீங்கள் விரும்பவில்லையா?

ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதி கால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப் பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றதுபோல் நடந்து கொள்ளுங்கள்.

காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்.

தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு,
(குடிஅரசு 15.1.1949

-விடுதலை,30.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக