பொது மக்களில் பெண்கள், தீண்டாதார்கள் என்ப வர்கள் மிக மோசமாக அழுத்தப்பட்டிருக்கிறார்கள் - புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் - பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் - ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை எனக் கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரானால் முதலிலேயே அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும். அய்யோ பாவம்! ஏழைக் கடவுள் மீது எத்தனை பழிதான் போடுவது என்று தோன்றினாலுங்கூட, அந்தக் கடவுளுக்கு இவ்வளவையும் சகித்துக் கொண்டு உயிர் வாழும்படியான அவசியம் என்ன வந்தது என்பது நமக்குத் தெரியவில்லை, கஷ்டமாயிருந்தால் ஒழிந்து தொலையட்டுமே என்றுதான் தோன்றுகின்றது.
உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் எல்லாவற்றையும் விட பெண்கள் நிலையே மிக மோசமானது. அதிலும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பதிவிரதைத் தன் மையை நினைக்கும்போது மனம் குமுறுகின்றது. அதாவது பதிவிரதம் என்கின்ற கற்புதான் அவர்களுடைய கடமை யாம். அதுவும் எத்தகைய பதிவிரதம் என்றால் தன்னைக் கொண்டவனாகிய புருஷன் பழைய சாதமும் சுடுகிறது என்றால் விசிறி எடுத்து விசிற வேண்டுமாம் - தண்ணீர் சேர்ந்தும் போது கணவன் கூப்பிட்டால் அப்படியே கயிற்றை விட்டுவிட்டு ஓடிவர வேண்டுமாம் - ஓடி வந்தால் மாத்திரம் போதாதாம் - அந்தக் கயிறும் பாத்திரமும் கிணற்றின் நடுவே திருப்பி வருமளவும் இராட்டினத்தில் தொங்கி கொண்டிருக்க வேண்டுமாம் - இல்லாவிடில் அந்தப் பெண் கற்புடைய பதிவிரதை அல்லவாம். எனவே, சகோதரர்களே! பெண்களுடைய நிலைமைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? அன்றியும் ஆண்கள் பிறவி மூர்க்கப் பிறவி அல்லது தூர்த்தப் பிறவி என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? உங்கள் கடவுள்கள் தங்கள் மனைவிகளை இப்படியா நடத்துகின்றன? தலையிலும், நாக்கிலும், மார்பிலும், தோளிலும், தொடைகள் மீதும் தங்களது மனைவிகளை வைத்துக் கொண்டிருக்கிற கடவுள்களைக் கற்பித்துக் கொண்ட உங்கள் புத்தி இவ்விதம் சென்றதற்குக் காரணம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. பெண்கள் அடிமைகளாய் ஆக்கியதின் பலனாய் மக்கள் அடிமை களால் வளர்க்கப்பட்டார்கள். அடிமைகளால் வளர்க்கப் பட்டதன் பலனாய் மக்கள் சகலத்திற்கும் அடிமைகளா னார்களெனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டுமானால் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் அடிமை என்பதாகும் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! முக்காலமும் பெண்கள் அடிமை நீக்க வேண்டும்.
பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால் முதலா வதாக அவர்களைக் கற்பு என்னும் சங்கிலியில் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும்; கட்டுப் பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலமும் கூடாது! கூடாது!! கூடவே கூடாது!! வாழ்க்கை ஒப்பந்தத் திற்காகவும், காதல் - அன்பிற் காகவும் இருவர்களையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டப்படட்டும்; அதைப் பற்றி நமக்குக் கவலை யில்லை. ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு அடிமைப் படுத்துவதில் ஆசை கொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவும் யோக்கியமும் பொறுப்பும் இல்லை.
இந்த விஷயங்களில் பெண்களுக்கு ஆண்கள் உதவி புரிவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலையே ஆகும். வீரப்பெண்மணிகள் தாங்களாகவே தான் முன் வந்துழைக்க வேண்டும். அரசாங்கத்திலும் அநேகம் செய்யப்பட வேண்டிய இருக்கின்றது. ஆனால் பெண் அரசாட்சியால் (விக்டோரியா மகாராணி) ஆகாத காரியம் ஆண் அர சாட்சியால் ஆகுமா? என்பது சிலருக்கு சந்தேகமாயிருக் கலாம். பெண்களின் உறுதியான ஊக்கமும், உழைப்பும் இருந்தால் கண்டிப்பாய் முடியும். ஆனாலும் சமுதாய சீர்திருத்தக்காரர்கள் இதை மிகவும் முக்கியமாய்க் கருத வேண்டியது என்பதாக முன்னமேயே சொன்னேன். பழக் கத்தையோ, வழக்கத்தையோ, மதத்தையோ, வேதத் தையோ கருதிக் கொண்டு பயப்பட்டுவிடாதீர்கள்; காலதேச வர்த்தமானத்தைப் பாருங்கள். துருக்கியையும், ஆப்கானிஸ் தானத்தையும், சைனாவையும் பாருங்கள்! சைனாப் பெண் களுடைய காலுக்கு விடுதலை ஏற்பட்டுவிட்டது என்பதை நினையுங்கள்.
விதவைத் தன்மை
அடுத்த விஷயமாக உலக வாழ்க்கையில் இருந்து உயிருடன் பிரிக்கப்பட்ட சகோதரிகளான விதவைகள் என்பவர்களைப் பற்றி சில வார்த்தைகள் குறிப்பிட விரும்பு கின்றேன்.
ஜீவ சுபாவத்திற்கே பொருந்தாததான ஒரு நிபந் தனையை நமது சகோதரிகள் மீது சுமத்திக் கொடுமைப் படுத்துவதான விதவைத்தன்மை என்பது எந்த விதத்தி லாவது. பொருத்தமுடையதா என்பதை ஆலோசித்து பாருங்கள். இந்நிலை பெண்களை அடிமைகளாய் நடத்துகின்றோம் என்பது மாத்திரமல் லாமல் நம்மை போன்ற மக்களிடத்தில் நாம் எவ்வளவு அறிவீனமாய் நடந்து கொள்ளும் சுபாவமுடையவர்களாய் இருக்கின் றோம் என்பதற்கு அறிகுறியாகும்.
உலகத்தையும், நதியையும், சக்தியையும் பெண்ணாய் கருதும் இரண்டு பெண்டாட்டிக்கும் கம்மியில்லாத கடவுள் களையுடையதும் 1000, 10000, 60000 பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்ட ராஜாக்கள் ஆண்டதுமான இந்த நாட்டில் பெண்கள் வதைக்கப்படுகின்றார்கள்!! உதைக்கப்படுகிறார் கள்! அதிலும் விதவைத் தன்மையால் மிகவும் வதைக்கப்படுகின்றார்கள்!.
பெண்கள் சம்பந்தமான வேறு எந்த காரியத்திற்காவது ஆண்கள் தங்கள் சுயநலத்தைக் கொண்டு கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்லுவதானாலும் இந்த விதவைத் தன்மையை எதற்காக கற்பித்தார்கள் என்பதே நமக்கு விளங்க மாட்டேன் என்கிறது.
இதில் எவ்வித அறிவுடைமையும் இருப்பதாக நமக்கு விளங்கவில்லை இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்பதும் அறியக் கூடவில்லை. ஒரு சமயம் சந்நியாசி களையும் அதிதிகளையும் உத்தேசித்து இப்படி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதாகக் கருதினார்களா அல்லது பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது ஆதலால் இம்மாதிரி செய்வதன் மூலம்; மற்றப் பெண் களுக்கு புருஷன் கிடைக்கட்டும் என்று செய்தார்களா அல்லது வேறு என்ன காரணத்திற்காக இப்படிச் செய்தார் கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கே முடியாததா யிருக்கின் றது. எப்படி இருந்தாலும் இதைப் போன்ற முட்டாள்தனமும், சித்திர வதைக் கொப்பான கொடுமையானதும், இனி அரைகணமும் பொறுத்துக் கொண் டிருக்க முடியாததுமான காரியம் வேறு இல்லை என்றே சொல்லவேண்டும்.
இந்த விதவைத் தன்மை ஒழிய வேண்டுமானால் பெண்கள் மிக்க தைரியமாகப் பாடுபடவேண்டும்; இது விஷயத்தில் மானம் இன்னது அவமானம் இன்னது என் பதாகவோ, அவர்கள் என்ன சொல்லுவார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் வெளிக்கிளம்பிவிட வேண்டும்; தங்களுக்கு இஷ்டமான கணவன்மார்களைத் தாங்களே தெரிந்தெடுத்துக் கொண்டதாய் வெளிப்படுத்திவிட வேண்டும்; இவ்விஷயத்தில் சற்று சவுகரியக் குறைவு இருந்தாலும் அதை வலிமையுடன் பொறுத்துக் கொண்டால் அடுத்து வரும் சகோதரிகளுக்கு மிகுதியும் பலனளிக்கும்; அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருந்து வருகின்றது. நமது நாட்டிலேயே இவ்வழக்கம் நடைபெறுகின்றது. ஆகையால் இதில் இனி தாட்சண்யம் பார்ப்பதென்பது சற்றும் பொருந் தாதெனவே சொல்லுவேன். இதற்கு விதவைகள் அல்லாத ஸ்திரீகளும், கொடுமைப் படுத்தப்பட்ட ஸ்தீரிகளுக்குப் புருஷன் சம்பாதித்துக் கொடுப்பதிலும், அவர்களுக்குத் தைரியமூட்டி கொடுமைப்படுத்தப்பட்ட குடும்பங்களி லிருந்து வெளிப்படுத்தி தனியாகவும் சுயேச்சையாகவும் வாழச் செய்யத் தக்க வழியில் கவலை எடுத்துக் கொண்டு உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகின் றேன். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று கண்டதால்தான்.
ஜாதி வித்தியாசம்
ஜாதி வித்தியாசம் என்பது கற்பிக்கப்பட்டதே ஒழிய வேறில்லை. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைப்பது ஆகும். இது இன்னும் நிலைத் திருப்பது என்றால் இந்த நாடு மிருகப் பிராயத்தில் இருந்து மனிதப் பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா? பிறவி யிலாவது வாழ்க்கை யிலாவது ஒழுக்கங்களில்லாவது அறி விலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றதா? ஒன்றுமே இல்லையே! அப்படி ஏதாவது ஒரு வழியில் பிரித்திருந் தாலும் அதற்குச் சமாதானமானது சொல்ல முயற்சிக்கலாம். ஒரு காரணமும் இல்லாமல் பிற மாத்திரத்தில் எதேச் சதிகாரமாய் செய்யப்படும் கொடுமையாகத்தானே விளங்கு கின்றது. இந்த முறை மக்களின் ஒழுக்கத்திற்கே நேர் விரோதமாக இருக்கவில்லையா?
சகோதரர்களே! இந்தக் கொடுமையை ஒப்புக் கொள் ளாதவர்கள் இதை ஒழிக்க வேண்டுமென்று சொல்லாத வர்கள் யார்? இதற்காக எத்தனை காலமாக முயற்சி செய் யப்பட்டு வருகின்றது? ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கூடாது, அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சொல்லாத பெரியார் யார்? ஆயினும் ஏதாவது பலன் ஏற்பட்டிருக் கின்றதா? ஒரு சிறிதும் காணப்படவில்லையே! இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆகவேண்டும். இதற்குச் சரியான வழி அறிவினாலோ ஞானத்தினாலோ போதனை யினாலோ ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை. எனக்கு இல்லை. இது பெரிதும் அரசாங்கச் சட்டத்திலும், அரசியல் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தினாலும் தான் இதை (அதாவது இந்த உயர்வு- தாழ்வு வித்தியாசத்தை) ஒழிக்க முடியும்.
ஆனாலும் இது அரசியல் கூட்டமல்ல. இங்கு நான் அரசியலைப் பற்றிப் பேசப்போவதில்லை. அரசாங்கத்தில் நமது முன்னேற்றத்திற்குப் பலவித சட்டம் வேண்டும் என்பதுபோல எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்றோம். இதையும் ஏன் வேண்டும் என்கிறோம் என்றால் வலுத்தவன் இளைத்தவனை நசுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான். இது சமுதாய சீர்திருத்தத்தின் பாற்பட்டதா இல்லையா என்பதைத் தாங்களே யோசித்துப் பாருங்கள். இன்னும் ஓர் அவசியமும் சொல்லுகின்றேன். அரசியல்காரர்கள் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் கேட்கும்போது எதற்காக வகுப்பு வித்தியாசத் தைக் கற்பிக்கவேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாமே என்கின்றார்கள். இதை நம்பி, இந்தப்படியே சமுதாய வாழ்க்கையில் இருக்கலாம் என்றாலோ மத இயல்காரர்கள் அது மதத்திற்கு விரோதம் என்கின்றார்கள் அம்மதத் தடையை நீக்க சட்டம் செய்யலாம் என்றாலோ மத ஆச்சாரியர்கள் மதத்தில் சர்க்காரோ சட்டசபையோ பிரவேசிக்க கூடாதென் கிறார்கள். எனவே இப்போதாவது ஒவ்வொரு வகுப்புக்கும் பிரதிநிதித்துவ உரிமை அளிக்க வேண்டிய அவசியம் என்று சொல்லுவது சரி என்று தோன்ற வில்லையா? அடுத்தபடியாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது என்ன வென்றால் ஜாதி வித்தியாசம் என்பதற்குள் தீண்டாமை என்பதாகும்.
- ‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 02.12.1928
-விடுதலை நாளேடு, 22.10.17