புதன், 25 அக்டோபர், 2017

நம் அரசியல் கொள்கை 


நமக்குப் பிரிட்டிஷ் ஆட்சி ஒழியவேண்டும். ஆனால் கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சியோ மத்திய அரசாங்க ஆட்சியோ கூடவே கூடாது. திராவிட நாட்டு ஆட்சியே வேண்டும். திராவிடநாட்டு ஆட்சிக்கு திராவிட நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களுடைய சம்பந்தமே கூடாது.

திராவிட நாட்டுக்குள் காந்தியார் வருவதானாலும், ஜவகர்லால் பண்டிதர் வருவதானாலும், ஜின்னா சாயபு வருவதானாலும், அம்பேத்கார் வீரர் வருவதானாலும் பாஸ்போர்ட் (அனுமதிச் சீட்டு) வாங்கிக்கொண்டுதான் வரவேண்டும். அப்படிப்பட்ட ஆட்சிதான் உண்மையான சுயேச்சை நாட்டுக்கு அறிகுறியாகும்.

அப்படிப்பட்ட ஆட்சி கிடைக்கவில்லையானால் காங்கிரஸ் தவிர வேறு எந்த ஆட்சி இருந்தாலும் நமக்கு ஒன்றுதான்.

மேல் ஜாதி கீழ் ஜாதி என்கின்ற உயர்வு தாழ்வு நிலைக்க இடம் வைத்துக் கொண்டு மேல் ஜாதிப்பெண்கள் எல்லாம் கீழ் ஜாதி ஆண்களைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும், மேல் ஜாதியார் எல்லாம் கீழ் ஜாதியாருக்கு சூத்தி ரர்களாய் இருக்கவேண்டும் என்றும், இராணுவ உத்தரவு போட்டு ராணுவ அமல்நடத்துவதாக வாக்குக் கொடுக்கிற ஆட்சியாய் இருந்லும் கூட நாம் ஒரு நாளும் ஒப்ப மாட்டோம். வாழ்வில், பொதுவில், எப்படிப்பட்ட அடிமைத் தன்மை இருந்தாலும் சரி, பிறவியால் மேல், கீழ் ஜாதி இல்லாத ஆட்சியே நமக்கு முதலில் வேண்டும்.

அது திராவிட நாடு சுயேச்சை ஆட்சி கிடைத்தால் தான் முடியும். மற்றபடி வேறு எந்த ஆட்சியிலும் கனவு கூடக் காண முடியாது.
இந்தியா சுயேச்சை ஆட்சி என்பது கிடைக்குமானால் சர்.ராமசாமி முதலியார் வங்காள கவர்னர் ஆகலாம். சர்.சண்முகம் பம்பாய் கவர்னர் ஆகலாம். குமாரராஜா சர். முத்தைய செட்டியார் வைசிராய்சபை வியாபார மெம்பர் ஆகலாம். இன்னும் மேலேயும் போகலாம். ஆனால் இவர் கள் மூவரும் சூத்திரர்கள் ................. என்கின்ற பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களாக ஆகமாட்டார்கள் என்பது உறுதியாகும்.

ஆகவே நமக்கு எந்த ஆட்சி வேண்டும்? என்று கேட்டால் ஆச்சாரியாரே முதல் மந்திரியாக வருவதானா லும் நமக்கு திராவிட நாடு சுயேச்சை ஆட்சிதான் வேண் டும் என்போம்.

'குடிஅரசு'  துணைத்தலையங்கம், 30.10.1943

-விடுதலை நாளேடு, 16.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக