வெள்ளி, 8 நவம்பர், 2019

கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது (1)

குடிஅரசு, 2.6.1935லிருந்து...

தோழர்களே! இன்று பொதுவாகவே மனித சமுகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடு களையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டி யதில்லை.

குறிப்பாக நமது நாட்டு மக்களிடையே உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன. நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளு வதில்லை. அரசியலானது சமுதாயக் கொள்கை யையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது. அரசியல் கொள்கைகளை, சமுகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமுகத்துக்கு ஆதாரம் முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளைகளுமே ஆகும்.

எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம். நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங்கத்தாராவது, சமுக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக்கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை.

நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப் பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்துவிட்டு ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா?  இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும், சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திர வாதம் கொடுத்துவிட்டே (கிளர்ச்சியும், முயற் சியும்) நடை பெறுகின்றது. இன்றைய தினம் தோழர் ராஜகோபலாச்சாரி யாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித் திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்திரவாதம் கல்லுப்போல் உறுதிப்படுத்தப்பட்டிருக் கிறது. காங்கிரசு முயற்சி செய்யும் சுயராஜ்ஜியத்தில்

1)    The article in the constitution relating to fundamental rights, shall include a guarantee to the communities concerned of protection of their culture, language, scripts, education, profession, practice religion and religious endowments.


2)    Personal Laws shall be protected by specific provision to be embodied in the constitution.

1)            சுயராஜ்ஜிய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப்பாருடையவும் அவர்களது கலைகள், நாகரிகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவைகளைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திரவாத மளிக்கப்படும்.

2)            ஒவ்வொரு சமுக தனிப்பட்ட உரிமை களையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும் படியான திட்டத்தையும் சேர்க்கப்படும் - என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது.

அந்நிய அரசராகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதிகளின் பயனாகவே சமுக வாழ்வில் ஜாதிமதக் கொடுமையில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது.

சாரதா சட்டம்கூட அதனாலேயே சுயமரியா தையற்று பிணமாகக் கிடக்கிறது. இப்படியிருக்கும் போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமுகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தனமும், உத்தரவாதமும், வாக்குறு தியும் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவைகளில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?

ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன்றைய அரசியல் மாறுபட்டு விடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம் இருந்த காலத்திலும் இருந்து வந்தது தானே ஒழிய முகமதியர் ஆட்சியிலோ, பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது.

மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப் படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப் படுத்திய குணமும், ராமராஜ்ஜியம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது.

உண்மையை யோக்கியமாய் வீரமாய்ப் பேச வேண்டுமானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓரளவு பழைய கொடுமைகளும், இழிவுகளும், குறைவுகளும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம்.

இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 97 பேர்களாகும். ஜாதியால் அடிமைப் படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 25 பேர்களாகும். மதத் தால் இழிவுபடுத்தப் பட்ட மக்கள் 100-க்கு 100 பேர் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருதுகின்றான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான். பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ் ஜாதி என்பது இந்து மத சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலைமை மாற வேண்டுமானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?

பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழி வுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பனன் பட்டினி கிடக்கின்றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்குகின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகின்றானா?அது போலவே பறையர் பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக் கூட்டத் தாரின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே, ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகர் களுக்கு இழிவும், தரித்திரமும் மக்களிடம் நிலவு கின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அந்நிய அரசாலும், சுயராஜ்ஜியத்தாலுமா நிலவு கின்றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப் புரியப் போகும் சுயராஜ்ஜியம் நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன். மனிதனுடைய அவமானத்தையும், இழி வையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராஜ்ஜியம் பித்தலாட்டச் சூழ்ச்சி ராஜ்ஜியமாகுமே ஒழிய, யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது.

******

மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச்சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது.

மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு, காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவது தான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

- தந்தை பெரியார்

 - விடுதலை நாளேடு 1.11. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக