திங்கள், 11 நவம்பர், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்!

தந்தை பெரியார்

உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்...

உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனு டைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடை முறைகளையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன்.

ஏன் திருக்குறள் தோன்றியது?

ராமாயணம், பாரதம், கீதை இன்னோரன்ன ஆரிய நூல்கள் யாவும் திராவிடப் பண்புகளை மறுக்க இயற்றப் பட்ட நூல்கள்தான் என்பதை ஆராய்ச்சி அறிவுள்ள எவரும் ஒப்புக் கொள்வார்கள். இவ்வாரிய நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ள ஆரியப் பண்புகளுக்கு திராவிட நாடு ஆட்பட்டிருந்த சமயத்தில், திராவிடர்களை அதனின்று விடுவிக்கத் திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்.

வள்ளுவர் குறளும் ஆரிய நூல்களும்

மக்கள் யாவரும் ஒரே ஜாதி என்கிறது குறள். மக்கள் 4 ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பாகுபடுத்திக் கூறு கின்றன இராமாயணமும் கீதையும். அறிவுக்கு மாறான, இயற்கைக்கு மாறான, பல காட்டுமிராண்டித்தனமான கருத் துக்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கு கின்றன ஆரிய நூல்கள். அறிவினால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.

ஆரிய நூல்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் பெரும் பாலும் நடந்திருக்கக் கூடாததாகவும், இன்று நடத்திக் காட்ட முடியாதனவாகவும், சாத்தியமற்றதாகவும் இருக் கின்றன. திருக்குறளில் காணப்படும் நீதிகள் அறிவுரைகள் யாவும் நடந்தால் உற்ற பலன் தரக் கூடியதும், ஏற்கக் கூடியதாகவும், இன்றும் நம்மால் நடத்திக் காட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.

நாட்டையாளும் மந்திரிகளுக்கு

ராமாயணக் காலட்சேபமா?

நாம் ராமாயணத்தைக் கொளுத்த வேண்டுமென்று திட்டம் போட்டால், அத்திட்டத்தை இன்றும் நம்மவரைக் கொண்டுதான் எதிர்க்கிறது ஆரியப் பார்ப்பனியம். நம்மவர்கள் ஆரியத்தின் கையாட்களாகத்தான் நமக்குத் தொல்லை கொடுக்க முன்வருவார்களே ஒழிய, தாமாக ராமாயணம் கொளுத்தப்படுவது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ராமாயணப் பிரசாரமும் கம்பர் விழாவும் முதலில் துவக்கப்பட்டதே நம்மிடமிருந்து. சுயநலத்துக்காக ஆரியருக்கு அடிமையான திரு.டி.எம் நாரா யணசாமி பிள்ளையால் ராமாயணப் பிரசாரம் செய்யப் பார்ப் பனர்கள் முன்வந்தார்கள்.

பிறகு இப்போது மந்திரிகளே முன் வந்து விட்டார்கள். இதில் ரெட்டியார் முதன்மை யானவர். ரெட்டியார் ராமாயணத்தைப் பற்றி பிரசாரம் செய்யட்டும், மற்றொரு ஆழ்வாராக ஆக இஷ்டமிருந்தால். ஆனால், மந்திரியாக இருந்து கொண்டு அவ்வேலையைச் செய்வது தவறு என்றுதான் நான் சொல்கிறேன். நீங்களும் சிந்தித்துப் பாருங்கள், இது தவறல்லவா என்று.

என்னே ஆரிய சூழ்ச்சி!

கலியாணங்களில் காலட்சேபங்களின் மூலமும், நாடக மேடைகளில் நாடகங்களின் வாயிலாக சினிமாக்களில் படக்காட்சிகளின், பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகத்தின் மூலமும் இந்த ராமாயண, பாரதக் கருத்துக்கள் வலியுறுத் தப்பட்டுவிட்டதன் பயனாய், இன்றும் வலியுறுத்தப்பட்டு வருவதன் பயனாய், நாடாளும் அரசன் முதற்கொண்டு, காட்டிலேயே இருந்து மாடு மேய்த்துப் பிழைக்கும் மாட் டுக்காரப் பையன் வரையும், எல்லோருக்கும் ராமனையும் சீதையையும் தெரிந்திருக்கக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.

காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலைச் செட்டி யாருக்குக்கூட குறள் தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்படியாக உயர் தத்துவங்களும் அறிஞர்க்கான அறிவுரை களும் அடங்கிய நூல் பொது மக்களுக்குள் பரவவிடாமல் மறைக்கப்பட்டு, ராமாயணமும் பாரதமும் எல்லோருக்கும், கக்கூஸ்காரி வரைக்கும் கூடத் தெரியும்படி விளம்பரப்படுத்தப்பட்டு விட் டது. திராவிடர்களை இழிமக்களென்று வலி யுறுத்தும் நூல்கள் போற்றத்தக்க தன்மையைப் பெற்றுவிட்டன. திராவிடர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும் நூல்கள் மறைந்திருக்கும்படி செய்யப்பட்டு விட்டன. என்னே ஆரிய சூழ்ச்சி! என்னே நம்மவர் விபீஷணத் தன்மை!

ஆரியத்தின் முதல் நூல்

ராமாயணத்தையும் பாரதத்தையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் பாரதந்தான் முந்திய நூலாக இருக்க வேண்டும் என்று நான் கருது கிறேன். சிலர் ராமாயணந்தான் முந்தியது என்று கருதுகிறார்கள். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பாரதத்திற்கு முந்திய நூல் தான் கந்தபுராணம். கந்தபுராணத்தையொட்டிச் சற்று சிறியதாக தொகுக்கப்பட்டதுதான் பாரதம் என்று நான் நினைக்கிறேன்.

கந்த புராணந்தான் ஆரியத்திற்கு ஏற்பட்ட முதல் நூல். கந்தபுராணத்தில் காணப்படும் இழிதன்மைகளை சற்று அதிகப்படுத்தியும், மனித வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைச் சற்று அதிகமாகச் சேர்த்தும் எழுதப்பட்டது தான் பாரதம். கந்தபுராணம் சைவ முறையின்பாற்பட்டது. பாரதம் வைணவ முறையின்பாற்பட்டது. கந்தபுராணத்தில் பாரதத்திலுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இயற்கைக்கு மாறான பிறவிகள் காணப்படுகின்றன. அநாகரிகமும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இவையிரண்டிற்கும் பிறகு சில காலம் பொறுத்து எழுதப்பட்ட நூல்தான் ராமாயணம். எனவே, தான் மேல் இரண்டு நூல்களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படுகின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபுராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

இப்படியா கடவுள் பேரால்?

கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட் டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித் தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படு கின்றன. அதில்தான் வைக்கப் புல்லிலிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தை தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுள் பேரால் எதை வேண்டு மானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம் போல் எதை எதையோ புளுகிவைத்து விட்டார்கள்.

பாரதமோ இன்னும் மோசம், ஒருத்திக்கு 5 புருஷர்கள் இருந்ததாக எழுதிவிட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்துவிட்டார்கள். அந்த புருஷர்களும் அதாவது பஞ்ச பாண்டவர்களும் யார் யாருக்கோ எந்தெந்தவிதமாகவோ பிறந்ததாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதை யில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலான வற் றிற்குத் தகப்பன்மாரைக் கண்டறிவது கஷ்டமாகவே இருக்கிறது. அக்காலத்திய ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்தது போலும்.

கந்தபுராணமும் ராமாயணமும்

கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப் படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதப்பட்டவை என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புராணத் தில் சுப்பிரமணியன் கடவுளாகவும், ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே காட்டில் கண் டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யாரென்று தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால் யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத் தக்கவைகள். ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் அவர்களை அசுரர் ராட்சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக் கும் விரோதிகள் சூரனும், ராவணனும் ஆகிய அசுரர் கள்தான். (அசுரர்கள் என்றால் மது அருந்தாதவர்கள், ராவணன் என்றால் கருத்தவன்) இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின் தம்பிமாரால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனு மார் கிடைத்தது போல், கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டது போல், சூரனுடைய நகரமும் எரிக்கப்பட்டிருக்கிறது. சூரன் தேவேந்திரன் மனைவியைச் சிறைபிடிக்க ஆசைப்பட்டு அவன் மகனைச் சிறையில் வைத்தான். ராவணன் ராமன் மனைவியைச் சிறை பிடித்தான். இன்னும் பல நடப்புகள் ஒன்று போலவே பேர்தான் மாறியிருக்கின்றனவே ஒழிய, கதைப்போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப் படவில்லை. கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமய மாகவே காட்டப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு, அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப்படுகிறான். சில இழி தன்மையையும் சுமத்தப்படுகிறான்.

ஆண்டவனைப் படைத்ததில்

ஆரியரும் வள்ளுவரும்

திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும் தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்றார். பிறப்பு, இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத்திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை. ஆரிய நூல்களில் சிருஷ்டிக் கப்பட்டுள்ள கடவுள் தன்மையிலுள்ள ஆபாசக் கேட் டிற்கோ அளவு சொல்ல வேண்டியதில்லை. கீதை போற்றும் கிருஷ்ணனைப் போன்ற விபசாரக்காரனை வஞ்சகனை, கீழ்மகன் தன்மையை ஆரியர்கள் தவிர்த்த வேறு யாரும் கடவுளாக, நீதியாக சிருஷ்டித்திருக்க மாட்டார்கள். அவன் ஒரு விபசாரிக்கல்ல, லட்சக் கணக்கான பெண்களைக் கெடுத்து விபசாரிகளுக்கும், குடிப்பெண்களுக்கும் காமுகனாய், காதகனாய் சிருஷ்டிக் கப்பட்டிருக்கிறான். பிறந்தது முதற்கொண்டு சாகும் வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒழுக்கமாக நடந்து கொண்டிருப்பதாக யாராலும் காட்ட முடியாது. அவன் நடத்தைகள் லீலைகளாக்கப் பட்டிருக்கின்றன.

விஷ்ணுவின் விரக வெறி!

ராமனை எடுத்துக் கொண்டால் அவன் யாருக்கோ பிறந்ததாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே ஒழிய, தசர தனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பெண்டாட்டியை இழந்து அலைவதற்குக் கூறப்படும் காரணமோ, அதை விடப் படுமோசம். மகாவிஷ்ணு எந்தப் பெண் மீதோ மோகங்கொண்டாராம்; மோகத்தைத் திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம்.

எனவே, அம்மகாவிஷ்ணு அவளுடைய புருஷன் இறக்கும் தருவாயைப் பார்த்துக் கொண்டேயிருந்து இறந்ததும் அவனுடலில், தான் புகுந்துகொண்டு அப் பெண்டை அடைந்து கூடி இன்புற்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண் எப்படியோ தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை செய்வது என்று அறிந்த உடனே உண்மையைக் கேட்டுணர்ந்து, "மறு ஜென்மமெடுத்து மகாவிஷ்ணு தன் மனைவியை பிற கையில் விட்டுத் தன்னைப் போல் கற்பும் கெட்டவளாக வேண்டுமென்று சாபம் கொடுத்தாளாம்." அதையொட்டித்தான் ராமன் அவதாரம் ஏற்பட்டுச் சீதையை ராவணனுக்குப் பறி கொடுக்க வேண்டி ஏற்பட்டதாம். என்னே தெய்வத் தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப் பட்ட தெய்வத்தன்மைகள். ஆண்கள் தன்மை இப்படி என்றால், ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால் நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.

மற்றொரு கதை!

ராமாயணத்துக்கு கூறப்படும் மற்றொரு கதையைப் படித்தால் இன்னும் அசிங்கமாயிருக்கும். ஒரு நாள் நண்பகலில் மகாவிஷ்ணு தன் மனைவியான லட்சுமியிடம் கூடிக் கலவி செய்து கொண்டிருந்தாராம். அதைத் துரதிர்ஷ்டவசமாக துவாரபாலகர்கள் பார்க்க நேர்ந்து விட்டதாம். உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவர்களை அசுரர்களாகப் பிறக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சாபம் கொடுத்து விட்டாராம். இவர்கள் பகலில் படுத்து இன்புற்றதற்காக துவாரபாலகர்களா தண்டனை அடைவது? அப்படித்தான் பகலில் கூடுவதா யிருந்தாலும் காவல்காரர்கள் வெளியில் இருக்கிறார்களே ஏதாவது அசந்தர்ப்பத்தில் வந்துவிடப் போகிறார்கள் என்று கதவையாவது மூடிக்கொண்டு இருக்க வேண் டாமா? அவ்வளவு அறிவு கூடவா இல்லை அந்த ஆரியக் கடவுள்களுக்கு? இவ்வளவு முட்டாளையா தெய்வ மென்று கூறுவது, என்னே மடத்தனம்.

தசரத மகாராஜாவின் தர்பார்!

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்ட தட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவி களுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர் பாரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக் கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப் பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்கு பவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?

எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கையைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத்திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத்தையே அப்பெண்ணுக்கு (கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.

இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண் டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார்களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோச லையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய் கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடைய இந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும் போது.

கம்பனின் கடைகெட்ட போக்கு!

இவ்வளவு வஞ்சக நெஞ்சம் படைத்த ராமனைக் கடவுள் அவதாரமென்று புகழ்கிறானே கம்பன், சற்றும் மானம் வெட்கமின்றி, பரதனின் வேலைக்காரி இதில் தடையிடாதிருந்தால் பட்டம் சூட்டிக் கொண்டிருப்பானே ராமன். பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய தினத்தன்று காலை தனக்குப் பட்டமில்லை என்று ராமன் அறிந்ததும், தலையில் அடித்துக் கொண்டு அழுகிறானே, இது வேண்டாம், அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளு கிறானே, விதி தவறுமா என்று அழுகிறானே, காட்டுக்கு விரைந்து சென்றுவிட்டால் பரதன் அழைத்ததும், பிறகு தந்திரமாகத் திரும்பி வந்துவிடலாம் என்று தாயாருடன் மறுபடியும் சூழ்ச்சி செய்கிறானே, இவ்வளவையும், கூலிக்காசுக்காகப் பாடிய கம்பன் மறைத்து விட்டானே. அரசு கிடையாது என்று கேட்டதும் "அன்றலர்ந்த செந் தாமரையை வென்றதம்மா அவன் முகம்" என்று பாடி விட்டானே; கூலிக்காரக் கம்பன்; இனத்துரோகி கம்பன்.

மறுக்க முன்வரட்டுமே!

பார்ப்பனரின் பிச்சைக் காசுக்காக ராமாயணப் பிரசாரம் செய்யத் துவங்கிய தோழர்கள் துணிவிருந்தால் இவற்றை மறுக்கட்டுமே, பார்ப்போம். எதையாவது தவறு என்று காட்டட்டுமே நாங்கள் புத்தகங்களில் எழுதி யிருக்கிறோமே, இவ்வுண்மைகளை விளக்கமாக ஏதோ ஒரு கம்ப பக்தன் கூட முன்வரக் காணோமே எங்கள் கூற்றை மறுக்க. மற்றொரு ஆரிய இதிகாசங்களாகிய பாரதத்தில் ஒருத்திக்கு அய்ந்து கணவன்மார் இருக்க, ராமாயணத்தில் ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற நியதி காணப்படுவானேன். இடையில் குறள் வந்து குறுக்கிட்டது தானே குறளுக்குச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் தான் கம்பனுக்குக் கூலி கொடுத்து கவிபாடும்படி செய்து விட்டனர் ஆரியப் பார்ப்பனர்கள். வால்மீகி ராமா யணத்தைத் தன் இஷ்டம்போல் மாற்றி விட்டான் கம்பன். எனவேதான், அவனைச் சாட வேண்டியிருக்கிறது.

வால்மீகியின் ராமாயணம்!

வால்மீகி ஒரு "அரேபியன் நைட்" கதையைப் போல்தான் ராமனுடைய கதையையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரணமான குடும்பமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். அவன் வீட்டுப் பெண்டிர்களை மீன்கண்டம் விற்கும் பெண்டிர்களை போன்றுதான் வர்ணித்துள்ளார். மேலும் சீதையின் கற்பில் சந்தேகம் கொள்வதற்கான பல கருத்துக்களை, அவள் ஒரு கீழ்த்தர பெண், சாஸ்திரப்படியான கற்பு அற்றவள், என்று கொள்வதற்கான பல கருத்துக்களை அவர் ராமாயணத்தில் இடை இடையே கொடுத்துள்ளார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு கர்ப்ப காலத்தில் அவளைக் காட்டிற்குக் கொண்டு போய் விட்டு வருவது போன்ற, அதாவது சாதாரண மனிதன் கூட வெட்கங் கொள்ளக் கூடியதான பல சேதிகளை அவர் கொடுத் துள்ளார்.

திருக்குறள் சுயமரியாதையின் ஊற்று!

திருவள்ளுவர் கூறிய கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள் ளவர் யாரும் மறுக்க முடியாத, வெறுக்க முடியாத கருத் துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

(24.10.1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக 19ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாட்டில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு.)

'குடி அரசு' - சொற்பொழிவு - 13.11.1948

- விடுதலை நாளேடு, 10.11 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக