சனி, 8 பிப்ரவரி, 2020

ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்துவிடுமா?- ஓர் சமதர்மி

21.04.1935 , குடிஅரசிலிருந்து...

சென்ற  வாரத் தொடர்ச்சி...

சூத்திரன் பிராமணனோடு சமமாக உட்கார எத்தனித்தால் இடுப்புக்குக் கீழ் சூடு போட்டு தேசத்தை விட்டு  துரத்திவிட வேண் டும். அல்லது அவனுடைய பின் பாகத்தை வெட்டி விட வேண்டும். இந்தப்படியான விதிகளும், இன்னும் இதுபோன்ற ஆயிரக் கணக்கான விதிகளும் பிராமணனுக்கு உயர்வைக் கொடுத்தும், மற்ற ஜாதிக்கு தாழ்வையும் இழிவையும் கொடுத்து விதிகள் உண்டாக்கி தர்மநூல்கள் எழுதப் பட்டிருக்கின்றன.

புராணங்களில் இதைவிட மோசமாக பறையன், சக்கிலியன், பள்ளன் முதலிய ஜாதிகளை கற்பித்தும் அவர்களைத் தொடக் கூடாது என்றும், பார்க்கக்கூடாது என்றும் நிழல் படக் கூடாது என்றும் வரிசைக் கிரம மாக ஒன்றுக்கொன்று மேல் கீழ் என்கின்ற முறையில் பல ஜாதிகளைக் கற்பித்தும், மற்றும் திருடுவதற்கு ஒரு ஜாதியும் விபசாரித்தனத்துக்கு ஒரு ஜாதியும், கொலைத் தொழில் செய்ய ஒரு ஜாதியும் இப்படியாக பல ஜாதிகளும் இன்னும் அனேக ஜாதிகளையும் கற்பிக்க ஆதாரமாய் இருந்தது புராணங்களேயாகும்.

இன்றைய நிலையில் மக்கள் பெரும் பகுதியோர் புராணங்களை கற்பனை என்றும் அவைகளை நம்பக் கூடாதென்றும் சொல்லி வருவதும், அந்தப் பிடிகளினின்றும் விடுபட்டு வருவதும் வெகு சாதாரணமான காலமாகவும் ஆகிவிட்டது. இதை இனி யாராலும் தடுக்க முடியாதென்பதும் நிரூபிக்கப்பட்டும் வருகின்றது. ஆகவே, இந்தக் கற்பனையான இடைக்காலத்தில் தோன்றிய ஜாதி அழிந்து போவதனால் உண்மையான மதத்திற்கு எந்த ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை என்று துணிந்து சொல்லலாம்.

ஆனால் பார்ப்பனர்கள் சனாதனிகள், ஜாதி வகுப்புக் கிரமங்களில் கை வைத்தால் மதம் அடியோடு ஒழிந்துவிடும் என்றும் ஜாதியில் கை வைப்பது மதத்தில் கை வைப்பதாகும் என்றும், மகாராணியார் அளித்த வாக்குத் தர்மத்தை மீறியதாகும் என்றும் கூப்பாடு போடுவதெல்லாம் தங்களுடைய சோம்பேறி வாழ்க்கைக்கும் ஊரார் உழைப்பில் உண்டு களிக்கும் மானங்கெட்ட வாழ்க்கைக்கும் ஆபத்து வந்துவிடுமே என்கின்ற பேராசைச் சுயநலம் காரணமே அல்லாமல் மற்றபடி மதத்துக்கும் ஜாதிக்கும் சம்பந்தமில்லை என்பது நமது அபிப்பிராயமாகும்.

ஜாதிப் பாகுபாடுகள் இந்திய நாட்டின் மேன்மைக்கும், சுயமரியாதைக்கும் மாத்திரம் கேடாயிருப்பதல்லாமல் மனித சமுகத்தின் சமாதானத்திற்கும், சாந்திக்குமே விரோதமாய் இருக்கிறது. ஜாதிக் கொடுமையானது இந்த நாட்டிலுள்ள பார்ப்பானைத் தவிர மற்ற ஒவ்வொரு மனிதனையும் கவலைக்கும், இழிவுக்கும் உள்ளாக்கி இம்சித்து வருகிறது. கிறிஸ்தவர்களும், துலுக்கர்களும் இந்துக்கள் அல்லவானாலும் அவர்களும் தீண்டத்தகாதவர் களாகவே அநேக இந்துக்களால் சிறப்பாக சனாதனிகளால் மதிக்கப்படுகிறார்கள்.

ஆதலால் இந்த மாதிரியான கொடுமையும் அறிவீனமும் ஆபாசமுமான ஜாதிப் பாகுபாட்டை அழித்தெறிய வேண்டியது சமதர்மவாதிகளின் முதற் கடமையாகும்.

 - விடுதலை நாளேடு 24 .1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக