வெள்ளி, 20 மார்ச், 2020

நான் சொல்லவில்லை இதை! (சு.ம.)

20.11.1943 - குடிஅரசிலிருந்து.....

பார்ப்பன மாந்தர்காள் - பகர்வது கேள்மின்,

இறந்தவராய உமை-இல்லிடை இருத்தி,

பாவனை மந்திரம், பலபட உரைத்தே,

உமக்கவர் புத்திரர்-ஊட்டின போது,

அருபசியாற் குலைந்து-ஆங்கவர் மீண்டு,

கையேந்தி நிற்பது-கண்டதார் புகலீர்,

அருந்திய உண்டியால்-ஆர் பசிகழிந்தது?

(உன் பசியா அவர் பசியா பார்)

என்ற இது கபிலரால் சொல்லப்பட்டது.

இப்படி இருக்க நீ திதி கொடுப்பது பார்ப்பனனுக்கு நீ மகன் என்பதை உறுதிப் படுத்தத்தானே பயன்படுகிறது?

உன் புத்தி கொண்டு பார் கபிலர் சொன்னதையும் தள்ளிவிட்டு என்னையும் மறந்து விட்டு உன் சொந்தப் புத்தியைக் கொண்டு சிறிது நன்றாய் ஆலோசித்துப் பார் அய்யா. ஓ! திதி கொடுக்கிறவனே! செத்துப்போனது உன் அப்பன். 100-க்கு 99 பாகம் அதிலே உனக்கு சந்தேகமிருக்காது.

அவன் இப்போது எங்கிருக்கிறான் என்பதும் உனக்குத் தெரியாது.

அவன் உடல் கட்டையில் வைக்கப்பட்டு, உன் கையாலேயே நெருப்பு வைக்கப்பட்டு, அது உன் கண்கள் முன்னாலே வெந்து சாம்பலாகி அதுவும் தண்ணீர் விட்டு கரைத்துவிடப்பட்டு விட்டது.

அல்லது உன் அப்பன் பிணத்தை நீயே பணங்கொடுத்து குழி வெட்டி குழிக்குள் போட்டு உன் கையாலேயே மண் தள்ளி புதைத்து மேலே கல் நாட்டியும் ஆகிவிட்டது. ஆகவே செத்துப்போன உன் அப்பனுக்கு இப்போது உடல் இல்லை. இது நிச்சயம்தானே? இனி திதி நீ யாருக்குக் கொடுக்கிறதாகச் சொல்லுகிறாய்,

என் அப்பனுடைய ஆத்மாவுக்குக் கொடுக்கிறேன் என்கிறாயா? அதாவது என் அப்பன் சரீரத்துக்கு அல்ல, உயிருக்குக் கொடுக்கிறேன் என்கிறாயா? சரி

அந்த உயிரை நீ பார்த்தாயோ? அதுவும் இல்லை.அது எங்கிருக்கிறது என்பதும் எப்படிப் போயிற்று என்பதும் உனக்குத் தெரியுமோ? அதுவும் தெரியாது. அந்த உயிர் எது எப்படி இருக்கும் என்பதும் உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியது. தெரியவும் தெரியாது. ஆனால் பார்ப்பான் சொல்லுகிறான் அந்த உயிர் வேறு ஒருவர் கண்ணுக்குத் தெரியாத(சூட்சும) சரீரத்தோடு மேல்லோகத்தில் இருக்கிறது என்கிறான். அவன் சொல்லுகிற மேல் லோகத்தை நீயும் பார்த்ததில்லை; அவனும் பார்த்ததில்லை. அந்தப்படியான மேல்லோகம் ஒன்று இருப்பதாக எந்த பூகோள புத்தகத்திலும் இல்லை. வானசாஸ்திரத்திலும் இல்லை, அன்றியும் எத்தனையோ வித சயன்சு படிக்க சௌகரியமிருக்கிற வெள்ளைக்காரன் பிளானை வைச்சிக்கிட்டுக் கூட கண்ணில் தெரிகிற இமய மலையையே சரியாய்ப் பார்க்க முடியவில்லை. இந்த அன்னக் காவடிப் பார்ப்பான், டுஸ் இன்னா ஒரு காதம் ஓடிப்போய் திரும்பிப் பார்க்கிறவன், மேல்லோகம் ஒன்று இருக்கிறது,என்றால் நீ அதை எப்படி நம்பமுடியும் ?

அதுதான் இருக்கட்டும்

அதுதான் இருக்கட்டும் - செத்தவனெல்லாம் உடனே மறுஜென்மமாக இந்த பூமியிலேயே பிறக்கிறான். பிறக்கிறவனெல்லாம் பிறக்கு முன் ஒரு ஜன்மமாக இருந்து செத்த பிறகுதான் உடனே மறுஜன்மாய்ப் பிறக்கிறான் என்றும் இதே பார்ப்பான்தானே சொல்லி இருக்கிறான்!

மேலும் மேலும் இதே பார்ப்பான்தான் இன்னொரு சமயத்தில் உனக்கு என்ன சொன்னான் தெரியுமா? நீ அடுத்த ஜன்மத்தில் நல்ல (மேலான ஜாதி) ஜன்மமாகப் பிறந்து மேன்மையாகப் பிழைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் எனக்குப் பணம் கொடு என்று சொல்லி உங்கப்பனிடமும் உன்னிடமும் எவ்வளவோ பணம் வாங்கிக் கொண்டு போயிருப்பதோடு அதற்காக அந்த ஊருக்குப் போ, இந்த ஊருக்குப் போ, அதிலே முழுகு, இதிலே முழுகு, அதைச் செய், இதைச் செய் என்று உன்னை நாயாட்டமா அலையவெச்சிப் பிச்சிப் பிடுங்கித் தின்றிருக்கிறான்.

இவ்வளவோடு விட்டானா? அன்றியும் அவன் உன்னை இவ்வளவோடும் விடவில்லையே. மற்றும் பலவிதமாய் அதாவது மேல்லோகத்திலே மோஷம் இருக்கிறது,  நரகம் இருக்கிறது என்றும் மோட்சத்தில் லட்டு மாதிரி நல்ல நல்ல பெண்கள் இருக்கிறார்கள், காமதேணு இருக்கிறது.சுடச்சுட அருமையாகச் சாப்பாடு போடும் கற்பக விருட்சம் இருக்கிறது, அது நீ எதைக் கேட்டாலும் நினைத்த மாத்திரத்திலேயே உடனே கொடுக்கும் என்றும், மேல் லோகத்தில் நரகம் இருக்கிறது, அந்த நரகத்திலே மலம் இருக்கிறது. அந்த மலத்திலே பாம்பு இருக்கிறது, தேள் இருக்கிறது. அதற்குள்தான் செத்தவன் உயிர் இருந்து அந்த மலத்தைச் சாப்பிட்டுக்கொண்டு பாம்பினிடமும், தேளினிடமும் சதா கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும், ஆதலால் நீ மோட்சம் போக வேண்டுமானால் எனக்கு பணம், பொம்பளே, அரிசி, உப்பு, புளி, வேஷ்டி, துணி, பருப்பு கொடை இன்னம் என்னென்னமோ கொடுத்தாகணும் கொடுக்காவிட்டால் நரகம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி, ஆசைகாட்டியும் பயப்படுத்தியும் எவ்வளவோ வாங்கிக் கொண்டும்போய் இருக்கிறான்.

இன்னொரு சங்கதி

இவைகளையெல்லாம்விட இன்னொரு சங்கதி என்னவென்றால். அவனவன் பாவ புண்ணியம் அவனவனுடன்தான் கூடவே இருக்கும். அதை அவனவனே அனுபவித்துத் தீரவேண்டும் என்றும் அதற்குப் பேரேடு,குறிப்பு, சிட்டா கணக்கு இருக்கிறது. ஆதலால் அதற்காக வேண்டி மனிதன் நல்லதையே செய்ய வேண்டுமே ஒழிய கெட்டதைச் செய்யக்கூடாது என்றும் சொல்லி, நல்லது இன்னது (அதாவது தனக்குக் கொடுப்பதுதான் நல்லது என்றும்) கெட்டது இன்னது (அதாவது தனக்குக் கொடுக்காவிட்டால் பாவம் அது கெட்டது) என்றும் ஏற்பாடு செய்து வைத்துக்கொண்டு அதனாலும் பயனடைந்து வருகிறான்.

இத்தனை எழவு குழறுபடிகளில் நீ எதை நம்பி இந்தப் பார்ப்பாரப் பய்யனுக்குத் தெவசம், திதி கொடுக்கிறாய் என்று கேட்கிறேன்.

நீ இதுவரை கொடுத்ததற்கு ஏதாவது ரேடியோ சேதியோ போஸ்டல் ரசீதோ வந்ததா?

நீ கொடுத்த பண்டங்களைப் பார்ப்பான் வாங்கி மூட்டைகட்டிக் கொண்டு போய் உங்கப்பனுக்கு அனுப்பினானா? அல்லது குச்சிக்கார தேவடியா வீட்டுக்கு அனுப்பினானா என்பதையாவது பார்த்தாயா? இந்தப் பஞ்ச காலத்தில் எத்தனையோ சாமான்களை மூட்டை கட்டி அவன் கையில் கொடுத்து காலில் விழுந்து கும்பிட்டு அவனை அனுப்பிக் கொடுத்ததைத் தவிர வேறு சங்கதி உனக்கு என்னவாவது தெரியுமா? இவ்வளவு முட்டாளாக இருந்து கொண்டு திவசம் கொடுக்கிறாயே, இது உன் (தலையில் மூளை இல்லாத) தலைவிதி வசம்தானே.

அட முட்டாளே! உனக்குச் சுயராஜ்யம் வேறு கேடு. அடி முட்டாளே! உனக்கு சமதர்மம் வேறே அழுகுது. நாயிக்குப் பேரு நவநீத கிருஷ்ணனாம். விளக்குமாத்துக்குப் பேருவீட்டு லச்சுமியாம்

இப்படித்தானே இருக்கிறது. உன் சங்கதி.

ஒரு பரீட்சையாவது பாரு

ஒரு பரீட்சை பார்க்கிறாயா - நீ 2 நாளைக்கு சாப்பிடாமல் பட்டினியாய் இரு. 3-ஆம் நாள் ஒரு பாப்பானைக் கூப்பிட்டு நீ உனக்கே திதி கொடுத்துக் கொள்ளப் போவதாக (அதாவது பிரயாகை முதலிய இடங்களில் தனக்கே பிண்டம் போட்டுக்கொண்டு வருகிறார்களே அதுபோல்) சொல்லி உனக்கு வேண்டியதை அவன் வசம் கொடுத்து அனுப்பி விடு. 2நாள் வரை பொறுத்துப்பாரு உனக்கு ஏதாவது பசி ஆறுதா அல்லது அதிகப்பசியும் களைப்பும் ஏறுதா என்று பாரு. உன் பசி தீராவிட்டால் இந்த ஊரில் இருக்கிறவனுக்கு திதி கொடுத்தே பசி ஆறாமல் இருக்கும்போது இனி மேல் லோகத்தில் இருப்பவனுக்கு திதி கொடுத்தால் போய்ச் சேருமா என்று யோசித்துப் பாரு. தொட்டுக்கிட்டுத்

தொட்டுக்கிட்டுத் தின்பேன் நீ என்ன கேட்கிறது என்றால் சரி மகராஜனாக அப்படியே செய் என்பதைத் தவிர வேறு என்னால் உன்னை என்ன செய்ய முடியும் ?

- விடுதலை நாளேடு, 20.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக