ஞாயிறு, 29 மார்ச், 2020

ஒழுக்கக் கேட்டுக்குக் காரணம்

- ,தந்தை பெரியார்

இன்று நம் நாட்டில் பெரும் ஒழுக்கக்கேடு நிலவிவருகிறது. இனியும் வளரும்போல் தெரிகிறதேயொழிய குறைகிற வழி காணப்படவில்லை.

இதன் காரணம் நமது மதம் என்னும் இந்து (ஆரிய) மதந்தான்.

உலகத்தில் இந்து மதத்தில் மத, வேத, சாஸ்திர, புராண, இதிகாச ஆதாரங்களில், மதக் கடவுள்களிடத்தில், மத சம்பந்தமான கற்புக்கரசிகள் முதலிய பெண்களிடத்தில் காணும்படியான பொய், பித்தலாட்டம், ஏமாற்றம், வியாபாரம், பலாத்காரம் ஆகிய காரியங்கள், நடப்புகள் வேறு மதத்தில் – மத ஆதாரங்களில் காணப்படுவதில்லை.

ஒழுக்கக்கேடான, முட்டாள்தனமான காரியங்களை எல்லாம்கூட மதம் என்பதன் பெயரால் பாராட்டுகிறோம்; பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்: விரதமாக அனுஷ்டிக்கிறோம்; புண்ணிய சரித்திரங்களாகக் கொள்கிறோம்; நடிப்பு, நாடகம், சினிமா, சங்கீதம், ஓவியம், இலக்கியம் ஆகிய துறைகளில் கையாண்டு ரசிக்கிறோம். இவற்றை வெறுப்பதைக்கூட வெறுக்கிறோம். கடவுள், மதம் போய்விட்டதே, ஒரு வகுப்பாரைத் தூஷிக்கிறோமே, என்று கூப்பாடு போடுகிறொம். இந்த நிலையிலுள்ள மக்கள் எப்படி ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க முடியும்?

மனிதனை மனிதன், ‘ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும்”

என்று சொல்லுவதற்கு, மனிதத் தன்மை அல்லது மத, சமுதாய அனுபவங்கள், ஆதாரங்கள் முதலியவைகளைக் கொண்டாவது சொல்ல வேண்டும்.

நமது மனிதத் தன்மை, மனிதனை மனிதன் ஏமாற்றுவதே, அதாவது, மேல்சாதி, கீழ்சாதி, மோட்சம் – நரகம் – சடங்கு முதலியவையாகும். நமது அனுபவ ஆதாரங்கள் என்று சொல்லப்பட்டவைகளோ, ஆண் – ஆண் புணர்ச்சி, மனித – மிருகப் புணர்ச்சி, முறைகேடான, உரிமைக்குக் கேடான புணர்ச்சி ஆகிய இவைகளைக் கண்டு, கேட்டு, படித்து, ரசித்து உழல்பவருக்கு எப்படி ஒழுக்கம் ஏற்பட முடியும்? அதிலும், எவ்விதமான அயோக்கிய, ஒழுக்கமற்ற தன்மைக்கும் மிகமிக எளிதான பிராயச்சித்தமும் இருந்துவிட்டால், எப்படி மனிதனுக்கு ஒழுக்கத்தில் கவலையோ, பயமோ, ஒழுக்கமற்ற தன்மையில் வெறுப்போ இருக்க முடியும்?

அதிலும் நம் நாட்டுச் சாதி அமைப்பானது ‘‘கீழ்ச் சாதியை” மடையனாகவும், கல் நெஞ்சனாகவும், ஏமாற்றித் தீர வேண்டியவனாகவும் ஆகிகிவிடுகிறது. ஒரு முஸ்லிமிடமோ, ஒரு கிறிஸ்தவனிடமோ இருக்கின்ற ‘மன இளக்கம்” – மனிதனை மனிதனாக மதிக்குந் தன்மை, இன அன்பு, உதவி – இந்து என்பவனிடம் இல்லை, அதிலும் ஆரியன் என்பவனிடம் அவன் மதக்காரனுக்குக் காட்டுவது கூட இல்லவே இல்லை.

பழிவாங்க நினைக்கிறான், அதிலும் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கீழ்ப் பிறவியாகக் கருத வேண்டும் என்றும், ஒரு பிறவியை மற்றொரு பிறவி ஏமாற்றலாம் என்றும், ஒரு பிறவியின் உழைப்பை, மற்றொரு பிறவி உழைக்காமல்ஏமாற்றி, வஞ்சித்துப் பிழைப்பது தர்மம் என்றும் கருதி நடப்பதனால் ஒழுக்கம் எப்படி இருக்க முடியம்? குறைந்த அளவாவது இத்தன்மைகளை மக்கள் வெறுக்காமலும், வெறுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டாலும், தடை செய்யாமலாவது இருக்காமலும்; தடை செய்தாலும் அதை ‘ஒரு மாபெரும் பாதகச் செயல்” என்று சொல்லாமலாவது, எண்ணாமலாவது இருக்க வேண்டாமா?

மனிதனை மனிதன், ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்று சொல்வதற்கு அரசாங்கம் தண்டனையிடுவது தவிர, ஆதாரம் இல்லை, அரசாங்கம் இடும் தண்டனையும் இலஞ்சம், சிபாரிசு, வரும்படி – ஆகியவைகளுக்கு அடிமை, பிறகு ஒழுக்கம் எங்கிருந்து குதிக்கும்?

                (‘விடுதலை” – கட்டுரை – 3.8.1956)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக