நேயன்
தமிழ் இனத்தின் பின்னாளைய பிரிவுகளான கன்னடர், தெலுங்கர், மலையாளிகளைத் தமிழர்களுக்கு எதிரிகளாகக் காட்டி, தமிழர்களின் பரம்பரை எதிரிகளான ஆரிய பார்ப்பனர்களை அரவணைத்து அவர்களும் தமிழர்களே என்னும் அறியாமை அல்லது கயமை அண்மைக் காலத்தில் தலைகாட்டுகிறது. நாம் முன்னமே சொன்னது போல், இனப்பகைக்கும், இனத்தவர்க்குள் இருக்கும் உரிமை மோதலுக்கும் வேறுபாடு அறியாத அறியாமை அல்லது அறிந்தே செய்கின்ற கயமை இது. இப்படிப்பட்டவர்களுக்கும் அவர்களை நம்பிப்பின் செல்கின்றவர்களுக்கும் பார்ப்பனர்கள் தமிழர்களா? என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதுப்பற்றி நாம் விளக்கங்களை வைப்பதற்குமுன், இவர்கள் மதிக்கும் பெருஞ்சித்திரனார் இது குறித்து என்ன கூறுகிறார் என்பதை முதலில் பார்ப்போம்.
பொது வாழ்க்கையில் இவர்களின் கட்டுப்பாடு தனி. இவர்கள் வாழும் பகுதிகளில் வேறு இனத்தவர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு வீடுகள் கிடைப்பதே அரிது. பல குடியிருப்புகள் கொண்ட பெரிய வீடுகளில் இவர்களைத் தப்பித் தவறிக் குடியமர்த்தினால் ஓரிராண்டுகளில் அங்குள்ள தமிழ்க் குடும்பங்களைச் சண்டையிட்டு வெளியேற்றிவிட்டுப் பார்ப்பனர் குடும்பங்களாகவே பார்த்துக் குடியமர்த்திக் கொள்ளுதல் இவர்கள் பழக்கம்.
சில வீட்டுப் பகுதிகளில் பிராமணர்களுக்கே வீடு விடப்படும். (To let only for Brahmins) என்று எழுதப்பட்ட பலகைகள் தொங்குவதைப் பார்க்கலாம். இவர்கள் வீடுகளில் பணியாற்றும் வேலைக்காரர்களை இவர்கள் என்றும் மதிப்பு வைத்தே அழைப்பதில்லை. அவர்களையும் சரி, பார்ப்பன அதிகாரிகளின்கீழ்ப் பணியாற்றும் பணியாட்களையும் சரி, அடே, அடி என்னும் சொற்களால்தாம் அழைக்கின்றனர். அவர்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களும்கூட அவர்களை வாய்கூசாமல் ‘அடே, அடி’ எனக் கூப்பிடுவதைக் கண்டு மனம் நோக வேண்டியுள்ளது.
நிலா மண்டலம் போகும் இக்காலத்திலும் பிற இனத்தவரைத் தொட்டால் தீட்டு என்று கடுமையாகக் கருதும் பார்ப்பனர்கள் பெரும் பகுதியும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் வீடுகளில் பிற இனத்தவரை உள்ளேவிட இன்றுகூட இசைவதில்லை.
இராசாசியின் தீண்டாமைப் போராட்டத்தைப் பாராட்டும் ‘தினமணி’ச் சிவராமன்கள் இவ்வகையில் எப்படி நடக்கின்றார்கள் என்பதைக் கண்டால், இவர்கள் பேசுவதும் எழுதுவதும் பொதுமக்களை ஏமாற்றுவதற்கே என்பது தெற்றெனப் புலப்படும். ‘துக்ளக்’கில் இவர்களுக்காகப் பரிந்து எழுதிவரும் அரைப் பிராமணனான செயகாந்தனுக்குப் பார்ப்பன இனத்தவரின் முழுக்கேடுகளும் தெரிய வழியில்லை. அவர்களின் நச்சுத்தனத்தை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அகற்ற வழியில்லையானால் அவர்களை எப்படித் தமிழ் இனத்தோடு ஒப்ப எண்ணுவது? தமிழ் பேசுவதால் மட்டுமே ஒருவன் தமிழன் என்று கருதப்பட வேண்டும் என்றால், ஆங்கிலம் பேசுகின்ற தமிழரை ஆங்கிலேயர் என்றன்றோ கருதுதல் வேண்டும்? ஆங்கிலம் பேசும் ஆப்பிரிக்கரைக்கூட ஆங்கிலேயர் என்று அவர்களே ஒப்புக்கொள்ளாத போது, தமிழ் பேசும் எவரும் எப்படித் தமிழர் ஆவார்? வேண்டுமானால் செயகாந்தன் என்னுடன் வரட்டும்; எனக்குத் தெரிந்த ‘சமசுக்கிருத’ஆசிரியர் பலர் தமிழர்களாய் உள்ளனர். அவர்களை ‘பிராமணர்கள்’ என்று அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா என்று பார்ப்போம். சமசுக்கிருதம் பயிற்றும் ஆசிரியர் ஒருவர் தமிழராகவிருந்தார் என்பதற்காக, அவரிடம் அம்மொழியைக் கற்க விரும்பாத பார்ப்பன மாணவர்கள் அத்தனை பேரும் இந்தி வகுப்புக்குச் சென்றதை நானறிவேன்.
இப்பொழுதும் நிலை மாறிவிடவில்லை. அண்ணாமலையில் தமிழ்ப் பேராசிரியராகவிருந்த ஒருவர், வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தும் பார்ப்பனர் அவரைப் போற்றவில்லை.
பார்ப்பனப் பெண்களில் சிலர் நம் தமிழ் இளைஞர்களை வறிதே வந்து மணந்து கொள்கின்றனர். பார்ப்பன வீடுகளில் பணியாற்றும் தமிழ் இளைஞர் சிலர் பார்ப்பனப் பெண்களை விரும்பி மணந்து கொள்வதையும் பார்க்கின்றோம். எனினும் பார்ப்பன இளைஞர்கள் தமிழ்ப் பெண்களை மணந்து கொண்ட செய்தி மிகவும் அரியது. தமிழ் இளைஞர்கள் பார்ப்பனப் பெண்களை மணந்து கொள்ளும் வகையில் பல அடிப்படைக் கோளாறுகளே கரணியங்களாக இருக்கின்றன. அவ்வாறு மணந்து கொண்ட பெண்களும் அவ் விளைஞர்களின் கொள்கைகளையும் போக்குகளையும் அறவே திசைதிருப்பி விட்டு விடுகின்றனர். இவற்றிற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும்.
பார்ப்பனத்தமிழினக் கலப்பு தவிர்க்க முடியாததே! அதனால் பார்ப்பனர்கள் தமிழர்களைத் தழுவிக் கொண்டனர் என்று கூற முடியாது. மக்களினம் எல்லாம் ஒன்றுதான். அதை வரவேற்கவே செய்வர். ஆனால் கொள்கை வேறுபாடு போன்றவையே இன, மொழி வேறுபாடுகள் இனத்தாலும் மொழியாலும் ஒன்றினாலன்றி ஒரு நிலத்தில் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தை ஓரினத்தவர் என்று கூறிவிட முடியாது.
பார்ப்பனர்களை நாம் தமிழர்கள் என்று ஒப்பினாலும் அவர்கள் தம்மைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. இன்னும் சமசுக்கிருதத்திற்கு அவர்கள் மதிப்பு வைப்பது போல் தமிழ் மொழிக்கு வைப்பதில்லை. எங்கோ ஒரு பாரதியார், பரிதிமாற் கலைஞர் இருந்தார் என்பதற்காகப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிவிட அவர்களே அணியமாக இல்லை. சமசுக்கிருதத்தைக் கலக்காத தமிழை அவர்கள் ஒப்புக்கொள்வதேயில்லை! பார்ப்பனர்களில் தமிழுக்காக உழைத்தவர்கள் போல் ஆங்கிலேயர்களிலும், பிரஞ்சுக்காரரிலும், செரிமானியரிலும், அரபியர்களிலும், தமிழுக்குழைத்தவர்கள் ஏராளமான பெயர்கள் உளர். அவர்களெல்லாரும் தமிழர்கள் என்று கூறி விட முடியாது. இதை செயகாந்தன்கள் உணரவேண்டும்.
ஒரு மொழியில் புலமை பெறுதல் வேறு. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கருதுதல் வேறு. ஒரு பெண் வேறொரு குழந்தையைத் தன் குழந்தைப் போலவே கருதி வளர்க்கலாம். ஆனால் அக்குழந்தை அவளைத் தன் தாய் என்று கருத வேண்டும். பார்ப்பனர்கள் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொள்ளாதவரை அவர்களைத் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது; அவர்களும் தங்களைத் தமிழர்களாகக் கருதிக் கொள்ளவும் மாட்டார்கள்.
அவர்கள் அவ்வாறு தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கருதினால் அதில் கலப்பு நேர்வதைப் பொறுக்கமாட்டார்கள். சமசுக்கிருதத்தில் ஆங்கிலச் சொற்களையோ பிரஞ்சுச் சொற்களையோ கலந்து பேச விரும்பாத ஒருவன், தமிழில் அவ்வாறு கலப்புச் செய்வதை விரும்புகின்றான் எனில், அவன் தமிழைத் தாய்மொழியாகக் கருதுகிறான் என்று எப்படி ஒப்புக்கொள்வது? செயகாந்தன் போன்றவர்களுக்குத் தமிழ்மொழியைத் தூய்மையாக எழுதத் தெரியாத காரணத்திற்காக அவர் எழுதுவதுதான் தமிழ் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அவ்வாறு ஒப்புக் கொண்டால் சென்னையில் உள்ள ஓர் உயர் விடுதியில் பரிமாறுபவர் பேசும் ஆங்கிலத்தையும் ஆங்கிலம் என்றுதானே ஒப்புக் கொள்ள வேண்டும். ‘காவிரி ஜலம், கலாச்சார பலவீனம்’, ‘பாரத ஞானபூமி’ என்பவற்றைத் தமிழாகக் கொள்ள வேண்டுமானால், ‘பானை வாட்டர்’ ‘இருதய வீக்னசு’ ‘பாரத நாலெட்ச் பூமி’ என்பவற்றை ஆங்கிலமாகக் கொள்ளவும், ‘வாய்மை மேவ் செய்தா’ ‘பண்பாட்டு ஞானீபட’ என்பவற்றைச் சமசுக்கிருதமாகக் கொள்ளவும் முன்வரவேண்டும்!
தமிழ்மொழியை மட்டும் அவர்கள் வந்து ஒண்டுதற்குரிய குட்டிச் சுவராக்கலாம். அவர்கள் மொழியான சமசுக்கிருதத்தை மட்டும் சிதைக்கக்கூடாது என்பதில் என்ன நடுநிலை உள்ளது? மொழித் தூய்மையும் இனத் தூய்மையும் எல்லா மொழிக்கும் இனத்துக்கும் தானே. மொழியிலும் இனத்திலும் தூய்மை பார்க்க வேண்டா என்பதும் எல்லா மொழிக்கும் இனத்துக்குமான பொது அறமாகத் தானே இருத்தல் வேண்டும். பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்குச் சார்பானவர்களும் தங்கள் தங்கள் கருத்துகளைத் தங்களுடைய மனம் போனவாறு எழுதவும், மக்களிடையே எளிதில் பரப்பவும் ஏராளமாக வாய்ப்பு உள்ளது என்பதற்காகவே பிறர் கருத்து வலுவிழந்து போய் விட்டதாகக் கருதிவிட முடியுமா?
(தொடரும்...)
- உண்மை இதழ், 16.6-15.7.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக