இப்போது போலத்தான் 80 ஆண்டுகளுக்கு முன்பும் அவர்கள் அப்படியேதான் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘திராவிடத்தை ஒழித்துவிட்டோம்’ என்று அவர்களுக்-குள்ளாகவே பேசி கிச்சுகிச்சு மூட்டி சிரித்துக் கொண்டார்கள். பிரிட்டிஷார் ஆட்சியில் 1937இல் நடந்த சென்னை மாகாண (சட்டமன்ற) தேர்தலில் திராவிட அரசியல் அமைப்பான நீதிக் கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. “1000 அடி குழி தோண்டி, ஜஸ்டிஸ் பார்ட்டியை (நீதிக்கட்சி) புதைத்துவிட்டோம்’’ என்றார் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி. அவரது எதிர்க்-கோஷ்டித் தலைவரான ராஜாஜி முதலமைச்சர் (பிரிமியர்) ஆனார்.
நீதிக்கட்சித் தலைவர்கள் படுதோல்வி-யடைந்த நிலையில்தான், அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார், சுயமரியாதை இயக்கத்தை நடத்தி வந்த பெரியார். ராஜாஜி அரசு திணித்த இந்தியை எதிர்த்து, 1938இல் தமிழறிஞர்களுடன் இணைந்து நடத்திய போராட்டத்தில் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெரியாரை, நீதிக்கட்சி தன் தலைவராகத் தேர்வு செய்தது. இரண்டாண்டுகள் கழித்து 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24, 25 ஆகிய நாள்களில் திருவாரூரில் நீதிக்கட்சியின் 15வது மாகாண மாநாடு நடைபெற்றது. கொடிக்கால்பாளையம் அருகில் உள்ள தைக்கால் திடலில், பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடிய மாநாட்டில் பெரியாரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது, திராவிட நாடு கோரிக்கை. 28வது தீர்மானமான அதில், “திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்ற-மடைவதற்கு-_பாதுகாப்பதற்கு திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், (பிரிட்டிஷ் அரசின்) இந்தியா மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அடிப்படையிலான இடஒதுக்-கீட்டில் திராவிடர்கள்-_ஆதிதிராவிடர்-களுக்கான அளவை அதிகரிப்பது-அகில இந்திய சர்க்காரிலும் இதே போல பிரதிநிதித்துவம் வழங்குவது.
கல்லூரி போன்ற உயர்படிப்புகளில் திராவிட மாணவர்களுக்கான வாய்ப்புகள் சரியாக வழங்கப்படும் வகையில் காலேஜ் கமிட்டி அமைத்தல்.
புனே ஒப்பந்தத்தால் ஆதி திராவிட சமுதாயத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனதால் இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும் அவர்களுக்கான தனித் தொகுதி முறையை ஏற்படுத்துதல். (அப்போது) கிறிஸ்துவ-_முஸ்லிம் சமுதாயத்தினருக்கு இருப்பது போல இதர திராவிடர்களுக்கும் தனித் தொகுதிகளை உருவாக்குதல்.
விஞ்ஞானம்_-பூகோளம்_-சரிதம் போன்ற பாடங்களில் வடமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களுடன் பாடப் புத்தகங்களைத் தயாரித்தல், ஒருவரின் பெயருக்கு முன்னால் மரியாதைக்காக ‘ஸ்ரீ’ என்ற வடமொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து ‘திரு’ என்பதைப் பயன்படுத்த அரசுக்கு வலியுறுத்தல்.
ஆண்களைப் போலவே பெண்களும் சகல உரிமைகளும் பெற்று மேம்பாடு அடையப் பாடுபடுதல்.
யுத்த சூழல் கட்டுப்பாடுகளால் வேலை இழந்து பட்டினியால் தவிக்கும் மில் தொழிலாளர்களுக்கு வாழ்வாரத்தை ஏற்படுத்தும் வகையில் மில்களையும் யுத்தத் தேவைக்கானப் பணிகளுக்குப் பயன்படுத்தி, தொழிலாளர்களுக்கு வேலை அளித்தல். -என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஜாதி-மதம்-, மொழி, -இனம்-, நிலம்-பாலினம் என எந்த வகையில் மக்கள் ஒதுக்கப்பட்டாலும்-ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் தீர்மானங்-களாகவே அவை இருந்துள்ளன. முக்கிய தீர்மானமான திராவிட நாடு கோரிக்கை பிரிட்டிஷாரால் ஏற்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் முன்னெடுத்த போதும் பலன் தரவில்லை. ஒரு கட்டத்தில் அந்தக் கோரிக்கையையே கைவிட நேர்ந்தது. பிரிட்டிஷாருக்கு பயந்து கம்யூனிஸ்ட் கொள்கையை பெரியார் கைவிட்டுவிட்டார் என அவரை விமர்சித்து விலகிய பொதுவுடைமைத் தலைவர்கள், திராவிடர் கழகம் எனப் பெயர் வைத்ததை ஏற்காமல் நீதிக்கட்சியாகவே நீடிக்க வேண்டும் என ஒதுங்கிய தலைவர்கள், கம்பராமாயணம்-_பெரியபுராணம் ஆகியவற்றை எரிக்கச் சொல்கிறார் என பெரியாரிடமிருந்து விலகிய தமிழறிஞர்கள், இயக்கத்தின் தளபதியாக இருந்த அண்ணாவே தன் தம்பியருடன் தனிக் கட்சி தொடங்கிய நிகழ்வு என திராவிட இயக்கம் சோதனைக் களத்தை எதிர்கொண்டது.
அரசியல் களத்தில் அண்ணாவுக்கும் நெருக்கடிதான். இந்திய ஒன்றிய அரசின் பிரிவினைத் தடைச்சட்டத்தால் 1963இல் திராவிட நாடு கோரிக்கையை கட்சியின் விதிகளிலிருந்தே எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அண்ணாவை அவரிடமிருந்து பிரிந்த ஈ.வெ.கி.சம்பத் போன்றவர்கள் எள்ளி நகையாடினர். தி.மு.க வெற்றிபெறக்கூடாது என காங்கிரஸ் தனது அதிகாரபலம்-_பணபலம்_-ஆட்சி பலம் அனைத்தையும் பயன்படுத்தியது என இத்தனை எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்-களுக்கும் நடுவேதான், ‘திராவிட நாடு’ கோரிக்கையை கைவிட்ட நான்கே ஆண்டுகளில் (1967) ‘தமிழ்நாட்டை’ தேர்தல் மூலம் பெற்றது தி.மு.கழகம்.
எதிரிகள் பலவகைகளில் பலமாக இருக்கலாம். நம்மிடம் கொள்கை வலுவாக இருக்கிறது என அண்ணாவும் அவரது தம்பிகளும் நம்பினர். அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியைப் போல மாறுவேடம் போட்டுக்கொள்ள மேக்கப் சாதனங்களைத் தேடவில்லை. ஜனநாயகத்தின் எஜமானர்-களான மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து-அறிந்து அதனைத் தங்களால் வழங்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தினார்கள்.
திருவாரூர் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட, சென்னை மாகாணத்தை திராவிட நாடு எனப் பிரிக்கும் முயற்சி நிறைவேறவில்லை. ஆனால், அந்த சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆதிதிராவிட மக்களுக்கான தனித்தொகுதியை சுதந்திர இந்திய அரசு வரையறை செய்து அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கிவிட்டது. இதர திராவிடர்களுக்கான தனித் தொகுதிகள் அமையவில்லை என்றாலும் அவர்களை அரசியல்மயப்படுத்தி தேர்தல் களமிறக்கி ஜாம்பவான்களையும் வீழ்த்திடச் செய்த ஜனநாயக அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது திராவிட இயக்கம்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற இந்திய அரசியல் சட்டத்தையே திருத்தச் செய்யும் வலிமையுடன் போராடியவர் பெரியார். அந்தப் போராட்டம்தான் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்து, சமூகநீதிப் பயணத்தை உறுதியாகத் தொடரச் செய்து, 69% விழுக்காடு இடஒதுக்கீட்டினை நிலைநாட்டி, விளிம்பிலும் விளிம்பான நிலையில் உள்ள மக்களுக்கும் வாய்ப்புகளைக் கிடைக்கச் செய்தது.
காலேஜ் கமிட்டியை வலியுறுத்திய நீதிக்கட்சி எனும் திராவிட அரசியல் இயக்கத்தின் நீட்சிதான், உயர்கல்விக்கான வாய்ப்புகளையும் அதற்கேற்ற கல்லூரிகளையும் நிறுவி ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகளை, பொறியாளர்களை, மருத்துவர்களை உருவாக்கியது.
அரசுப் பணி, ஆசிரியர் பணி, போக்கு-வரத்துக் கழகம், -மின்வாரியம் ஆகியவற்றில் வேலை, கூட்டுறவு சங்கங்கள் வாயிலான உதவி என ஒவ்வொரு குடும்பத்திலும் அவர்களின் உறவுகளிலும் அரைச் சம்பளமானாலும் அரசாங்கச் சம்பளம் என்ற கனவை நனவாக்கியது.
பெண்களுக்கான சொத்துரிமை, வேலை-வாய்ப்பு, சுயஉதவிக்குழு என ஆண்களுக்கு இணையான உரிமைகள் கிடைக்கப் பெற்றன.
திருவாரூரில் 80 ஆண்டுகளுக்கு முன், பெரியாரைத் தலைவராகக் கொண்டு நடந்த நீதிக் கட்சி மாநாட்டில், திராவிட சமுதாயத்திற்குப் புறம்பாக இந்து லா இருக்கிறது என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணா ஆட்சியில், இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட ஏற்பு அளிக்கப்பட்டு, அதனைப் பெரியாருக்குக் காணிக்கை என அறிவிக்கப்-பட்டது.
பஸ் வரி உயர்வு குறித்தும்_-அதனால் பொதுமக்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்-படுவது குறித்தும் _ நீதிக்கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் ஆட்சியில் இந்தியாவிலேயே பேருந்துகள் முதன்முறையாக நாட்டுடைமையாக்கப்பட்டு, கிராமங்கள் வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர், குக்கிராமங்கள் வரை மினிபஸ்கள் விடப்பட்டதும் திராவிட இயக்கமாம் தி.மு.க. ஆட்சியில்தான்.
தொழிலாளர் நலன்_-விவசாயிகளுக்கான திட்டங்கள்_-கட்டமைப்பு வசதிகள் என ஒருங்கிணைந்த வளர்ச்சியுடன் கூடிய மாநிலமாக தமிழ்நாடு உயர்த்தப்பட்டதால் பட்டினிச் சாவு இல்லாத நிலை உருவானது.
நீதிக்கட்சி மாநாட்டில், ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளும் சென்சஸ் அலுவலர்கள், ”என்ன மதம்?’’ என்று கேட்டால், ‘திராவிட சமயம்’ என்று சொல்லுங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் உட்பொருள் அறிந்த தலைவர்களால்-தான் மேலே குறிப்பிட்ட தனித்துவமிக்க தமிழ்நாடு உருவானது. திராவிட நிலத்தில் ஊன்றப்பட்ட விதைகள், மரங்களாகி, பழங்கள் தந்தன.
அண்ணா, கலைஞர் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரும் தன்னை திராவிடன் என்றே குறிப்பிட்டார். ‘திராவிட மதம்’ என மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்தார். ஜெயலலிதாதான் இதிலிருந்து மாறுபட்டு, தன் கட்சியினரையும் மடைமாற்றி, இந்துத்வா சக்திகளுக்கு வழியமைத்தார். இப்போது அம்மையார் ஜெயலலிதா இல்லை. ஆனால், திராவிடத்தின் உண்மையான எதிரிகள் பலமாக இருக்கிறார்கள்.
எதிரிகளுக்குக் கைக்கூலிகளும் கிடைக்-கிறார்கள். அவர்களைக் கொண்டு பெரியார் சிலைகளை உடைக்கிறார்கள். தந்தை பெரியாருக்குத் தமிழ்நாட்டில் சிலைகள் உண்டு. ஆனால், சிலைகளில் மட்டுமே பெரியார் இருக்கிறார் என நினைப்பவர்கள் மூடர்கள். அவர் தத்துவமாக இருக்கிறார். வரலாறாக இருக்கிறார். தமிழ்நாட்டின் அரசியலாக இருக்கிறார். திராவிட இயக்கங்களைக் கடந்து ஒடுக்கப்பட்டோர் உரிமை _- பொதுவுடைமைச் சிந்தனை-_ மதச்சார்பின்மை -_ பெண்கள் விடுதலை _- மனித உரிமை என அனைத்துவகை முற்போக்கு இயக்கங்களிலும் பெரியார் கலந்திருக்கிறார். அவர், செயற்கரிய செய்தவர்.
- உண்மை இதழ், 16- 31 .9 .20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக