பெரியார் பேசுகிறார்:
இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களை இப்பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. முற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாராயிருக்கிறார்கள்.
இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக்கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல் 'கல்லென்றாலும் கணவன்; புல்லென்றாலும் புருஷன்' என்று சொல்லுவது போல கணவனுடைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது. இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரிகம், இந்நாகரிகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப்போகும், அவர்களுடைய பதிவிரதாதர்மம் அழிந்து போகும், இதனால் இந்திய நாகரிகமே மூழ்கிவிடும். ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும் என்று பிற்போக்கான அபிப்பிராயமுடையவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், ஆண்கள் இவ்விதமான அபிப்பிராயத்தை வெளியிடுவதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர்கள் தங்கள் சுயநலத்தைக் கருதுகின்ற பொழுது, இதற்குமேல் தீவிரமான அபிப்பிராயத் திற்குச் செல்ல முடியாது. சென்றால் அவர்களுடைய சுயநலத்திற்கு நிச்சயமாக ஆபத்து உண்டாகிவிடும். ஆனால், பெண்கள் இம்மாதிரியான அபிப்பிராயத்தை வெளியிட்டால் அது ஆச்சரியப்படத் தக்கதேயாகும். அன்றியும், அதில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கவும் வேண்டும்.
சில தினங்களுக்கு முன் லண்டனில், விசியம் கிளப்பில், பம்பாய் சர்வகலாசாலைப் பெண்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில், சென்னை கிறிஸ்துவப் பெண்கள் கலாசாலைத் தலைவரான திருமதி. மெக்டாக்கல் என்பவர் ஒரு பிரசங்கம் செய்தார். அப்பொழுது அவர்,
"பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோவுறுதியிலும் சிறந்தவர்கள். அவர்களுக்குக் குடும்பத்தில் மிகவும் சம்மந்தமும், பற்றுதலும் உண்டு. அவர்கள் குடும்பத்திலுள்ள பற்றுதலிலிருந்து நீங்குவார்களானால் இந்திய சமுக வாழ்க்கைக்கு மிகுந்த பாதகம் ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்களுக்குப் போதிக்கும் உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். இன்றேல், உயர்தரக் கல்வியால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தே உண்டாகும்''. என்று பேசியிருக்கிறார். திருமதி. மெக்டாகல் அவர்கள் நாகரிகம் பெற்ற மேல் நாட்டுப் பெண் மணியாயிருந்தும் இவ்வாறு பேசியிருப்பதைக் கண்டு உண்மையில் நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை. ஆனால், இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையைப்பற்றி இந்த அம்மாளுக்கு இவ்வளவு கவலை தோன்றியிருப்பதைப் பற்றி ஆராயும் போது நிச்சயமாக அதில் ஒரு சூழ்ச்சியிருக்க வேண்டுமென்ற முடிவுக்கே வரலாம். அச்சூழ்ச்சியும் அந்த அம்மாளின் சொற்களிலேயே காணப்படுகின்றது. அச்சூழ்ச்சி, உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும் என்பதேயாகும். ஆகவே, இது கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரவ வைப்பதற்குச் செய்யப்படும் பிரசாரத்தைத் தவிர, வேறொன்றுமல்ல என்றுதான் நாம் கூறுவோம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த திருமதி. மெக்டாகல் அவர்கள் எப்படி கிறிஸ்துவ மதக்கல்வி உயர்தரக்கல்வி கற்கும் பெண்களுக்கு அவசியம் என்ற அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ இதைப் போலவே இந்திய வைதிகர்களும் பெண்களுக்கு இந்து மதக்கல்வி அவசியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால், இவ்வபிப்பிராயங்களை நாம் அடியோடு மறுக்கிறோம். பெண்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் அடிமையாயிருந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருப்பது ஒன்றுதான் ஏற்றது என்ற அபிப்பிராயமே தவறாகும். இத்தகைய கட்டுப்பாடு இருக்கின்ற வரையிலும் பெண்கள் அடிமைகளாகத்தான் - அதாவது ஆண்களுடைய உதவியை நம்பித்தான் வாழ முடியும் என்பது நிச்சயம். உண்மையில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக வாழ வேண்டுமானால், அவர்களும் ஆண்களைப் போலவே தாங்கள் விரும்பிய கல்விகளைக் கற்கவும், தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும், விருப்பத்திற்கும் இசைந்த எத்தொழில்களையும் தடையின்றிச் செய்யவும் உரிமை வேண்டியது அவசியமாகும்.
அல்லாமலும் மதக்கல்வி என்பது அவர்கள் காதில் கூட விழக்கூடாது என்பதே நமதபிப்பிராயம். மதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிற ஆண் மக்களே இன்று அடிமைப் புத்தியினாலும், மூட நம்பிக்கைகளாலும் கிடந்து சீரழிகின்ற செய்தியைப் பற்றி நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். மதம் என்பதுதான் மக்களிடத்தில் அடிமைப் புத்தியையும் பயங்கொள்ளித்தனத்தையும், தன்னம்பிக்கையின்மையையும், மூட நம்பிக்கை களையும் உண்டாக்கக் காரணமாயிருக்கிறது. ஆதலால் மதத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரஞ் செய்து வருகின்றோம். இந்த நிலையில் பெண்களுக்கு மதக் கல்வியளிக்க வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சாதாரணமாக மதக்கல்வி கற்காவிட்டாலும், கேள்வி மூலமும், பழக்கவழக்கங்களின் மூலமும் மத விஷயமாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கும் நமது பெண் மக்களின் நிலையை ஆராய்ந்தால் அதன் மோசத்தை அறியலாம். நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமைப் புத்தியும், கோழைத்தனமும், மூட நம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாப்பிடிவாதமும் நிறைந்திருப்பதற்குக் காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.
பெண்களும் ஆண்களைப் போல் உடல் வலிமையிலும் சிறப்படைய வேண்டும், தேகப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். தங்களை மானபங்கப்படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறிகொண்ட ஆண்மக்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். சமயம் நேரும்போது, படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்களுக்கும் இருக்க வேண்டும். என்பதே நாகரிகம் பெற்ற மக்களின் அபிப்பிராயம். பெண்மக்களும் இவ்வபிப்பிராயத்தை முழு மனத்தோடு ஆதரிக்கிறார்கள். உலகத்தின் போக்கும் அபிப்பிராயமும் இப்படி இருக்க பெண் மக்களுக்கு உயர்தரக் கல்வி கற்பிப்பதனால் பயனில்லை என்று சொல்வதை யார் ஒப்புக் கொள்ளமுடியும்?
ஆனால், தற்காலத்தில் உள்ள கல்வி முறை மிகவும் மோசமானதென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். வெறும் குமாஸ்தா வேலைக்குப் பழக்கக் கூடிய கல்விதான் இப்பொழுது கற்பிக்கப்படுகிறதேயொழிய, வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி கற்பிக்கப்படவில்லை என்பது உண்மையாகும். ஆகையால் தற்காலத்திலுள்ள கல்விமுறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய முறையிலும், சிறிதும் மதநம்பிக்கைகளும், கோழைத்தனமும், அடிமைப் புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித் திட்டத்தை ஏற்படுத்தி பெண்களுக்கும், ஆண்களுக்கும், சமத்துவமான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம்.
- 'குடிஅரசு' தலையங்கம், 17.07.1932
- உண்மை இதழ், 16-31.10.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக