சனி, 24 ஏப்ரல், 2021

பெரியார் மேளா சாதனை படைத்தவர் கன்சிராம்


கி.வீரமணி

இந்தியத் தலைநகர் புதுடில்லி, ரஃபி மார்க், மாவ்லங்கர் அரங்கில் தந்தை பெரியாரின் 117ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை 19.9.1995 அன்று திராவிடர் கழகம், சமூகநீதி மய்யம், டில்லி தமிழ்ச்சங்கம், தலித் சேனா, சமதா கட்சி அமைப்புகள் இணைந்து நடத்தியது. நிகழ்வில் கலந்துகொள்ள வரும் சிறப்பு விருந்தினரை பெரியார் சமூகக் காப்பு அணியினர் அணிவகுத்து வரவேற்றனர். விழாவிற்கு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், நாடாளுமன்ற சமதா கட்சித் தலைவர் சந்திரஜித் யாதவ் எம்.பி., எழுத்தாளர் டாக்டர் பிரிஜ்லால் வர்மா, லக்னோ நகர முன்னாள் மேயர் தாவுஜி குப்தா, முன்னாள் மத்திய கல்வியமைச்சர் டி.பி.யாதவ், உ.பி. மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிகேவல் பிரசாத், டாக்டர் அண்ணல், நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் சிங், சையத் சகாபுதீன் எம்.பி., என பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூகநீதித் தலைவர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் இன்றைய தேவைகளையும், தொடர்ந்து செய்ய வேண்டிய சமூகநீதிப் பணிகளையும் குறித்து விரிவாகப் பேசினார்கள்.

அந்த விழாவில் எனது உரையில், “ஈரோட்டுப் பெரியார் என்னும்  மருந்தே இன்றைக்கு   சர்வதேச பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு. லக்னோவில் ‘பெரியார் மேளா’ கொண்டாடியமைக்காக கன்ஷிராம் அவர்களுக்கும், முதல்வர் மாயாவதி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுடில்லியிலும் தந்தை பெரியார் சிலையை நிறுவ அனைத்துத் தலைவர்களும் முன் முயற்சி எடுக்க வேண்டும். ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள் ‘All roads lead to Rome’’ என்பது போல இன்று எல்லாச் சாலைகளும் பெரியாரை நோக்கியே செல்லத் துவங்கி விட்டன. ‘All roads lead to Periyar’. உலகெங்கும் இப்போது பெரியார் பவனிவந்து கொண்டிருக்கிறார். அண்மையில் ஆங்கிலத்தில் ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. “Periyar E.V.Ramasamy messiah of the backward classes, invades north India” என்னும் பெயரில் வந்திருக்கிறது. பெரியாரின் நுழைவு என்பது போர் முறை நுழைவல்ல; அமைதியான முறையில் உங்களுக்குள் நுழைகிறார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்ற உயிர்தான் விலை என்றால் சாவையும் சந்திக்கத் துணிவோம்! எந்தத் தியாகத்தையும் செய்து அய்யா கொள்கையை நிலைநாட்டுவோம், நன்றி’’ என உணர்ச்சி மேலிட பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

நிகழ்வில், நிறைவுரை ஆற்றிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் தமது உரையில், “தந்தை பெரியாரின் தத்துவம் என்பது மனிதனின் சுயமரியாதையை உணர்த்துவது. ஜாதி முறையை ஒழிக்கவும், மூடநம்பிக்கைகளை அகற்றவுமே பெரியார் புரட்சிகரமான கருத்துகளை முன்வைத்துப் போராடினார். டில்லியில் மட்டுமல்ல; மாபெரும் தலைவரான பெரியாருக்கு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிலைகள் நிறுவப்பட வேண்டும். கட்சிகள் நம்மைப் பிரிக்கும் கட்சிகளை சமூகநீதிக்காக ஒருங்கிணைக்கும் ஆற்றல் நண்பர் திரு.கி.வீரமணி அவர்களுக்கே உண்டு. ஒரு தலைமைக் கொறடா  (Chief Whip) போல் இருந்து ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என கழகப் பணிகளைப் பாராட்டிப் பேசினேன். அரங்கம் நிரம்பி வழிந்தது. சமதா கட்சி முன்னணிப் பிரமுகர் அசோக் யாதவ் நன்றி கூறினார். விழாவினையொட்டி தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவின் மாட்சிமைக்குரிய செய்தி இந்தியாவில் பரவி விடக் கூடாது என்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் கிளப்பி விடப்பட்ட செய்தி “பிள்ளையார் பால் குடித்தார்’’ என்ற புரட்டுச் செய்தி என்பது நினைவு கூரத்தக்கது.

திருச்சி வெல்லமண்டியில் தந்தை பெரியார் 117ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், உ.பி. மாநில முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கன்சிராம் ஆகியோருக்குப் பாராட்டு விழாவும் 10.10.1995 அன்று மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது. முன்னதாக விமானம் மூலம் வருகை தந்த உ.பி. முதல்வர் செல்வி மாயாவதி அவர்களையும், கன்சிராம் அவர்களையும் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களோடு விமான நிலையும் சென்று வரவேற்றோம்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் அவர்கள் மறைவுற்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்து, பெருங்கூட்டமும் ஒரு நிமிடம் எழுந்து நின்று இரங்கலைத் தெரிவித்துக்கொண்டோம்.

மற்றொரு நிகழ்வாக சேலம் மாவட்டம், மேட்டூர் பொன்னகர் எம்.பி.இராமசாமி _குஞ்சம்மாள் ஆகியோரின் செல்வன் பாலகிருட்டினன், பெரியார் மாவட்டம் அத்தானியைச் சேர்ந்த ஆறுமுகம்_விஜயா ஆகியோரின் அருமைச் செல்வி கனகவல்லி ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்கள் தலைமையில், முதல்வர் மாயாவதி அவர்கள் மணமக்களுக்கு மாலை எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார்கள்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக உ.பி. முதல்வர் மாயாவதி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, வீரவாள் ஒன்றினை பரிசளித்தோம். வீரவாள் கொடுத்தபோது மக்கள் சமுத்திரம் ஆர்ப்பரித்து பெரு முழக்கம் செய்தது. “அவாளின்’’ ஆதிக்கத்தை வீழ்த்த இவ்“வாள்’’ பயன்படும் என்று நான் கூற, கூடியிருந்த மக்கள் எரிமலையாய் உணர்ச்சியை வெளிப் படுத்தினார்கள்.

உ.பி. மாநில முதல்வர் தமது உரையில், “தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் பார்ப்பனியத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் போரிட்டார்கள். இங்கே நடைபெறும் சுயமரியாதைத் திருமணத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் எந்த மதத்துக்கும் நாங்கள் கடுமையான எதிரிகள்’’ என கொள்கை விளக்கி உரையாற்றினார்.

தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் _ மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரிக்கு உ.பி. அரசு சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

கன்சிராம் உரையாற்றுகையில், “1956இல் லக்னோவில் பெரியாருக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள். எனவேதான் நானும், நண்பர் வீரமணியும் பெரியாரை அவரை எதிர்த்த இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்தோம்.

லக்னோ விழாவில் நீங்கள் கலந்துகொண்டு நடந்துகொண்ட விதமும் உ.பி. மக்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. இங்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். நான் காணும், கலந்துகொண்ட முதல் சுயமரியாதைத் திருமணம் இது. இந்தச் சிந்தனை தந்தை பெரியாரின் புரட்சி வடிவம். இதுபோன்ற திருமணங்கள் இந்தியா முழுமைக்குமே தேவை’’ என பல்வேறு கருத்துகளைக் கூறி மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

நிகழ்வில் தலைமை உரையாற்றுகையில், “பெரியார் மேளா என்ற ஏ.கே.47 துப்பாக்கியை ஆரியத்துக்கு எதிராகத் தாங்கிக் காட்டியவர் கன்சிராம். 1956இல் தந்தை பெரியார் லக்னோ வந்தபோது கறுப்புக்கொடி பிடித்தவர்கள் அதே லக்னோவில் இந்தியாவே குலுங்க பெரியாருக்கு விழா எடுத்தீர்களே! அதற்கான நன்றித் திருவிழா இது. முதல்வரின் நன்கொடையை விட வடக்கு தெற்குக்கு அளித்துள்ள அங்கீகாரம். சகோதரத்துவத்தின் சங்கநாதம்! எங்கள் அன்பின் அடையாளம்!’’ என நன்றி உணர்வுடன் உரையாற்றினேன். திருச்சியே குலுங்குமளவுக்கு பல்வேறு கட்சி அமைப்பினரும், பொதுமக்களும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி பாராட்டும் விழாவினையடுத்து, 11.10.1995 அன்று உ.பி. முதல்வரும், கன்சிராம் அவர்களும் வல்லம் _ பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வருகை தந்தனர். மாணவியர்கள் இருமருங்கிலும் வரிசையாக நின்று விருந்தினர் பெருமக்களை மகிழ்ச்சியோடு கைதட்டி வரவேற்றனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் ச.ராஜசேகரன் விருந்தினருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் காட்சியை கன்சிராம் திறந்து வைத்தார்.

முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள், நாகம்மையார் விடுதியின் இரண்டாம் பகுதியை பலத்த கர ஒலிக்கிடையே திறந்துவைத்து வாழ்த்தினார். சமூகநீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறித்து அவர்கள் பெரிதும் மகிழ்ச்சியோடு உரையாற்றுகையில், “தென்னிந்தியாவில் இரண்டு மாமனிதர்கள் _ தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் ஆவார்கள். அவர்களின் பெயரால் பெண்களுக்குத் தொழில்நுட்பக் கல்லூரி நடத்துவது சரியானது _ சிறப்பானது! உங்களது சமூகநீதி வளர்ச்சிக்கான நிறுவனங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என பாராட்டி உரையாற்றினார்.

கட்டட எழிற்கலை பட்டப்படிப்புப் பிரிவை (B.Arch.,) துவக்கி வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்கள் உரையாற்றுகையில், “தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை சகோதரர் கி.வீரமணி சிறப்பாகச் செய்து வருகிறார். இந்தியா முழுவதும் இந்தப் பணியினை எடுத்துச் செல்ல வேண்டும்’’ என வாழ்த்தி உரையாற்றினார். 10 லட்சம் ரூபாய்  உ.பி. அரசு சார்பில் வழங்கினார்.

இவ்விழாவினையொட்டி, “பெரியார் டெக்மேக் 95’’ என முதல் மலரை கல்லூரி தலைவராக நான் வெளியிட, கல்லூரி தாளாளர்கள் கோ.சாமிதுரை, வீகேயென் கண்ணப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவினையொட்டி ஏராளமான பேராசிரியர்களும், கழகப் பொறுப்பாளர்களும் பெரும் அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

-உண்மை இதழ் மார்ச் 16-31.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக