1973, டிசம்பர் 24_ந்தேதி மரணம் அடைந்த பெரியாரின் உடல், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான மக்கள், "கியூ" வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். `கியூ' வரிசை வளைந்து, வளைந்து அண்ணா நினைவிடம் வரை (சுமார் 2 மைல் தூரம்) நீண்டிருந்தது.
முதல்_அமைச்சர் கலைஞர் கருணாநிதியும், அமைச்சர்களும், காலையிலேயே ராஜாஜி மண்டபத்துக்கு வந்து, பெரியார் உடல் அருகே அமர்ந்து இருந்தனர். பெரியாரின் மனைவி மணியம்மை சோகமே உருவாக இருந்தார். சிறு வயது முதல் பெரியாருடன் இருந்தவரான வீரமணி, கண்ணீர் வடித்தவாறு பெரியார் உடல் அருகே இருந்தார்.
குன்றக்குடி அடிகளார், ராஜாஜி மண்டபத்துக்கு வந்து பெரியார் உடல் மீது பொன்னாடை போர்த்தினார். மற்றும் தலைவர்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினர் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் நடத்த முதல்_அமைச்சர் கலைஞர் கருணாநிதி விரும்பினார்.
ஆனால், "பெரியார் அரசுப் பொறுப்பு எதிலும் இல்லாத காரணத்தால், அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்த விதிமுறைகளில் வழி இல்லை" என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். உடனே கலைஞர் கருணாநிதி, "காந்தியடிகள் எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்? தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆகவேண்டும்.
அதனால், அரசாங்கமே கலைக்கப்படக்கூடிய நிலை ஏற்படுமானால், அதைவிட பெரியபேறு எனக்கு வேறு இருக்க முடியாது. எனவே, விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல், நடக்க வேண்டியதை கவனியுங்கள்" என்றார். அதன்படி, அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடந்தது. 3 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட "டிரக்" வண்டியில் பெரியார் உடல் வைக்கப்பட்டது.
வண்டியில் ஏற்றுவதற்காக பெரியார் உடலை எடுத்தபோது, பெரியாரின் காலைப் பிடித்தபடி மணியம்மை கதறி அழுதார். திராவிடர் கழக பொதுச்செயலாளரும், மாணவப்பருவம் முதல் பெரியாரின் நிழலில் வளர்ந்தவருமான கி.வீரமணி, பெரியார் உடல் மீது விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். "இனி எங்களுக்கு கட்டளையிடுவதற்கு யார் இருக்கிறார்கள்அய்யா! இந்த அடிமையை விட்டு பிரிந்துவிட்டீர்களே அய்யா!" என்று அவர் கதறினார்.
பெரியார் உடல், டிரக் வண்டியில் ஏற்றப்படுவதற்கு முன், முதல்_அமைச்சர் கலைஞர் கருணாநிதி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி, ஈ.வெ.கி.சம்பத், காமராஜர், வி.ராமையா ஆகியோர் மலர் வளையம் வைத்தனர்.
நடிகர் சிவாஜிகணேசன் பெரியார் உடல் மீது மலர் வளையம் வைத்து விட்டு கதறி அழுதார். சிலர் வந்து அவரை அழைத்துச் சென்றனர். கவர்னர் கே.கே.ஷா சார்பில் அதிகாரி ராமசாமி மலர் வளையம் வைத்தார். பெரியார் உடல் வைக்கப்பட்டிருந்த டிரக் வண்டியில் கலைஞர் கருணாநிதி, மணியம்மை, சம்பத், வீரமணி, அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன் ஆகியோரும் இருந்தனர்.
3.10 மணிக்கு பெரியாரின் இறுதி ஊர்வலம் ராஜாஜி மண்டபத்தில் இருந்து புறப்பட்டது. வண்டி நகர்ந்தபோது கூடியிருந்த பெரும் கூட்டம், "அய்யா அய்யா, பெரியார் வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள். சுற்றி இருந்த மரங்கள், கட்டிடங்கள் முழுவதிலும் ஏராளமானவர்கள் ஏறி நின்று பார்த்தார்கள். பெரியாரின் உடலைப்பார்த்து கதறிய சிலர் மயங்கி விழுந்தார்கள்.
ஊர்வலத்தின் முன் பகுதியில் போலீஸ் ஜீப் கார் வந்தது. இதைத்தொடர்ந்து குதிரைப் படை அணிவகுத்து வந்தது. அமைச்சர்கள் நடந்தார்கள் அமைச்சர்கள் அன்பழகன், ப.உ.சண்முகம், மாதவன், சாதிக் பாட்சா, சி.பா.ஆதித்தனார், அன்பில் தர்மலிங்கம், ராசாராம், ஓ.பி.ராமன், ராமச்சந்திரன், கண்ணப்பன் மற்றும் பிரமுகர்கள், சட்டமன்ற _ பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து சென்றார்கள்.
பிறகு, தலைவர்கள், பிரமுகர்களின் கார்கள் சென்றன. தொடர்ந்து, பெரியார் உடல் வைக்கப்பட்ட "வேன்" சென்றது. அண்ணா சாலையில், "ரவுண்டாணா" அருகில், கூட்டம் அலை மோதியது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள், சாலைகளின் இருபுறமும் நின்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
பாடிகார்டு ரோடு, பூந்தமல்லி ஐரோடு (தற்போதைய ஈ.வெ.ரா.பெரியார் சாலை) வழியாக வேப்பேரி ரண்டல் ரோட்டில் (தற்போதைய ஈ.வெ.கி.சம்பத் சாலை) உள்ள பெரியார் திடலை மாலை 4_45 மணிக்கு ஊர்வலம் அடைந்தது. பெரியார் உடல் வைக்கப்பட்டு இருந்த டிரக் வண்டி, திடலுக்குள் நுழைந்தபோது, கூடி இருந்தவர்கள் "அய்யா" என்று கதறிய படி கண்ணீர் வடித்தனர்.
பெரியாரின் உடல் டிரக் வண்டியில் இருந்து இறக்கப்பட்டு, அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட தேக்கு மரப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அந்த பெட்டியின் மீது, "பெரியார் ஈ.வெ.ராமசாமி" என்று எழுதப்பட்டு அவர் பிறந்த தேதி, இறந்த தேதி ஆகியவை எழுதப்பட்டு இருந்தன. பெரியார் உடல், பெட்டிக்குள் வைக்கப்பட்டதும், தலைவர்களும், அமைச்சர்களும் வாசனை தைலத்தை தெளித்தனர்.
4_57 மணிக்கு, போலீசார் துப்பாக்கியை தலைகீழாகப் பிடித்தபடி இறுதி மரியாதை செலுத்தினார்கள். பிறகு, 36 குண்டுகளை வானத்தை நோக்கி சுட்டு, அஞ்சலி செய்தனர். அப்போது போலீஸ் பாண்டு வாத்தியக் குழுவினர் சோக இசை முழங்கினர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பெட்டி மூடப்பட்டது. பிறகு தயாராக வெட்டி வைக்கப்பட்டிருந்த குழிக்குள், பெட்டி இறக்கப்பட்டது. பெட்டி இறக்கப்பட்டதும் குழி மூடப்பட்டது.
அப்போது கலைஞர் கருணாநிதி வாய் விட்டு கதறி அழுதார். அவருக்கு காமராஜர் ஆறுதல் கூறினார். அடக்கம் நடந்தபோது பெரியாரின் மனைவி மணியம்மை துயரம் தாங்காமல் குமுறி அழுதார். தொண்டர்கள் ஆறுதல் கூறி அவரை அழைத்துச் சென்றனர். கலைஞர் கருணாநிதி துயரத்தை அடக்கிக் கொண்டு "பெரியார்" என்று குரல் எழுப்ப, கூடி இருந்தவர்கள் "வாழ்க" என்று முழக்கமிட்டார்கள். இந்த வாழ்த்தொலி முழக்கத்துடன், பெரியார் உடல் அடக்க நிகழ்ச்சி முடிவுற்றது.
முன்னதாக, இறுதி ஊர்வலம் சென்னை மாநகராட்சி அருகே வந்தபோது, கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிற்று. பலர் நெரிசலில் சிக்கித் தவித்தனர். போலீசார் அமைதியை நிலை நாட்ட முயன்றபோது, அவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால், கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பெரியார் திடலை ஊர்வலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, பூந்தமல்லி ஐரோட்டில் கிறிஸ்தவ தேவாலயம் அருகே, கூட்டம் அலை மோதியதால், பலர் நெரிசலில் சிக்கினர்.
அமைதியை நிலைநாட்ட முயன்ற போலீசார் மீது கற்களும், செருப்புகளும் வீசப்பட்டன. எனவே, அங்கும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். கூட்டத்தினர் சிதறி ஓடினர். கல் வீச்சு, நெரிசல் காரணமாக 16 போலீசார் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர். போலீசாரில் 2 பேர் அதிகாரிகள்.
நெரிசலில் சிக்கி நசுங்கி, ஆஸ்பத்திரிக்கு படுகாயத்துடன் கொண்டு போகப்பட்ட ஒருவர் வழியிலேயே மரணம் அடைந்தார். அவர் பெயர் மருதமுத்து (வயது 53). திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர். பெரியார் இறுதி ஊர்வலத்தைக்காண அவர் குடும்பத்துடன் சென்னை வந்திருந்தார். மறைந்த சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜியும், ஈ.வெ.ரா.பெரியாரும் அரசியலில் இரு துருவங்களாக இருந்தவர்கள்.
ஆயினும் நெருங்கிய நண்பர்கள். பெரியாரைவிட ராஜாஜி ஒரு ஆண்டு மூத்தவர். அவர் தனது 95_வது வயதில் 1972 டிசம்பர் மாதம் 25_ந்தேதி மரணம் அடைந்தார். சரியாக ஒரு ஆண்டு கழித்து பெரியார் 1973 டிசம்பர் 24_ல் மரணம்😢 அடைந்தார். ராஜாஜி 94 ஆண்டுகளும் 14 நாட்களும் வாழ்ந்தார். பெரியார் 94 ஆண்டுகளும் 96 😢 நாட்களும் வாழ்ந்தார். வாழ்க 👍 அவர் தம் கொள்கை 💐 🎂 G.k
கோ. கோட்டைக்கருப்பன் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக