சித்திரபுத்திரன்
“புண்ணிய ஸ்தலம்” என்னும் தலைப்பின் கீழ் புண்ணிய ஸ்தலங்கள் என்பவைகளைப் பற்றி ஏன் எழுதிக் கொண்டு வரப்படுகின்றது என்பது பற்றி முந்தின வியாசத்தில் முதல் பகுதியிலேயே தெளிவாய் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தவிர முந்தின வியாசத்தில் பண்டரிபுரம் என்னும் “புண்ணிய ஸ்தலத்தின்” யோக்கியதையையும் விளக்கி இருக்கின்றது.
பண்டரிபுரம் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான ஸ்தலம். அந்த ஸ்தல புராணத்தில் ஒரு சமயம் அந்த முக்கியத்துவத்திற்கு ஏற்ற காரணம் ஏதாவது குறிப்பிட்டிருக்கக்கூடுமோ என்பதாக சந்தேகப்பட கூடுமானாலும் வைணவ பக்தர்களின் சரித்திரத்தைப் பற்றிச் சொல்லும் பக்த விஜயம் என்றும் புத்தகத்தின் சுருக்கமாகிய பக்தலீலாமிர்தம் என்னும் புத்தகமானது. சைவர்களுக்கு எப்படி சைவர் பக்தர்களின் சரித்திரதைக் சொல்லக் கூடியதான சைவபுராணமாகிய பெரிய புராணமோ? அதுபோல் ஏன்? ஒரு விதத்தில் அதைவிட முக்கியமான தென்று கூட சொல்லலாம்.
எப்படி எனில், பெரியபுராணம் என்பது சுந்தர மூர்த்தி சுவாமி என்கிற ஒருவர் பாடிய ஒரு பாட்டிலிருந்து பக்தர்களின் பெயரைத் தெரிந்து அதற்கு ஆதாரமாக நம்பியாண்டார் நம்பி என்பவர் பாடிய ஒரு சில – அதாவது ஒரு நூறு பாட்டைக் கொண்டு நாலாயிரத்துச் சில்லறைப் பாட்டுகளாக்கி அவற்றிற்கு வேண்டிய சங்கதிகளை தமது சொந்த அபிப்பிராயமாக நுழைத்துப் பாடிய புத்தகமாகும். அதுவும் சமணர்களுக்கு விரோதமாய் அவர்கள் மீதும் அவர்களது குற்றமற்ற நூல்களின்மீதும் உள்ள துவேஷத்தாலும் தமது சமய வெளியாலும் கற்பிக்கப் பட்டது என்று கூடச் சொல்ல இடமுள்ளதாகிய நூல். பக்த விஜயமோ அப்படிக் கில்லால் ஏதோ ஒரு முனிவர் ஏதோ ஒரு ஆசாமிக்கு எல்லா சங்கதிகளும் சொன்னதாகவும் சிவன் பார்வதிக்கு சொன்ன தாகவும் – எழுதிய புத்தகம் . ஆனதால் சேக்கிழார் என்கின்ற ஒரு மனிதன் சொன்னதைவிட சிவன் முனிவர்கள் என்கின்றவர் களுக்குச் சொன்னது என்பது உயர்ந்தது என்பதில் இவற்றை நம்பும் பக்தர்களுக்குச் சிறிதும் சந்தேகமிருக்க நியாயமில்லை.
எனவே இப்பேர்ப்பட்ட புத்தகத்தில் உள்ளதையே தான் எடுத்து எழுதி இருக்கிறதே ஒழிய மற்றபடி நமதபிப்பிராயம் என்பதல்ல. அதாவது:-
தேவர்களுக்கு அரசனான தேவேந்திரன் பெண் ஜாதியான இந்திராணி திருமால் என்கின்ற சாமியின் பேரில் காதல் கொண்டதாகவும், சாமியும் அதற்குச் சம்மதித்து பூலோகத்திற்குப் போய் அங்கு 60000 வருடம் தவம் செய்யச் சொன்னதாகவும், அதற்குப் பிறகு சாமி கிருஷ்ணனாக அவதரித்ததாகவும், இந்திராணியும் ராதையாகப் பிறந்ததாகவும், பிறகு இருவரும் கூடினதாகவும், இதைக் கண்ட கிருஷ்ணனின் சொந்தப் பெண் ஜாதியாகிய ருக்குமணி கோபங் கொண்டதாகவும் அதன் நிமித்தம் ராதை கிருஷ்ணனைத் தனக்கே புருஷனாக்கிக் கொள்ள காட்டிற்குத் தவத்திற்குப் போனதாகவும், இந்தச் சமயத்தில் கிருஷ்ணன் ராதையைப் பிரிய நேர்ந்ததால் துறவி வேஷம் பூண்டு காடு காடாய் திரிந்து ஏதோ ஒரு காட்டில் ராதையைத் தவக்கோலத்தில் கண்டு பிடித்ததாகவும், ராதை கிருஷ்ணனைப் பார்த்து, “நீ ஒரு வஞ்சகன். என் முன் நில்லாதே” என்று கோபித்த தாகவும், கிருஷ்ணன் மதிமயங்கி மூக்கில் கை வைத்துக் கொண்டு 28 துவாரபரயுக காலாய் நின்று கொண்டிருக்கின்றதாகவும், அந்தக் காட்சியைப் பள்ளிநாதன் என்றும், இதுபோல சில ஆபாசக் கதை களும் எழுதப்பட்டு பண்டரிபுரத்திற்கு ஆதாரமாக சொல்லப்படுகிறது.
எனவே, இம்மாதிரி ஆபாசமும் புளுகும் கொண்ட தான பண்டரிபுரத்தை ஒரு பெரிய புண்ணியஸ்தலமாகக் கருதி மக்கள் ஏராளமாக பணம் செலவு செய்து கஷ் டப்பட்டு யாத்திரை போவதுடன் பட்டை பட்டையாய் நாமமும் போட்டுக் கொண்டு, பண்டரிநாதா விட்டல்லே! பாண்டுரங்கா விட்டல்லே! என்று கூப்பாடு போட்டுக் கொண்டு குதித்துக் கொண்டு போவதையும் கருதினால் எவ்வளவு பைத்தியக்காரத்தனமாகவும் கஷ்டமாகவும் இருக்கும் என்பது சுலபத்தில் வெளிப்படுத்தக் கூடியதாயில்லை என்பது பற்றியும் முன்னமேயே எழுதப் பட்டிருக்கின்றது.
ஜகநாதம்
ஜகநாதம் என்பது இந்தியாவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் மிக முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. இந்துக்கள் என்போர்களில் தென் னாட்டில் உள்ள சைவர்களில் யாரோ ஒரு சிலரால் மதத்துவேஷம் காரணமாக ஜகநாதம் ஒருசமயம் அலட்சியமாகக் கருதப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலோரான இந்துக்கள் என்பவர்கள் எல்லோ ராலுமே முக்கியஸ்தலமாகக் கருதப்படுவது. அந்த ஸ்தலத்தின் முக்கியத்துவத்திற்கு உதாரணம் என்ன வென்றால், அந்த ஜகநாதம் என்கின்ற ஊரின் எல்லைக்குள் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லுவார்கள்.
அதற்கு உதாரணமாக அந்த கோவில் பூஜை பண்ணுகின்றவர்கள் அந்தப் பக்கத்திய நாவிதர்கள். அவர்கள் குளத்தருகில் அடைப்பதத்துடன் நின்று கொண்டு சவரம் செய்வார்கள். பிறகு கோவில் பூசாரிகளாகவும் இருப்பார்கள். அந்த கோவிலில் பூசை செய்யும் உரிமையே அந்த ஊரிலுள்ள நாவித வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உண்டு என்கின் றார்கள். அங்கு சுவாமிக்கு முன்னால் சாப்பாட்டை மலைபோல் குவித்து ஆராதனை செய்வார்கள். அந்தச் சாதத்தைப் பூசாரிகள் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டு வெளியில் வந்து விற்பார்கள். யாத்திரிரைக் காரர்கள் யாராயிருந்தாலும் அதை வாங்கிச் சாப்பிட வேண்டும். மற்றபடி கடைகளிலும் சாதத்தைத் சட்டியில் வைத்து விற்பார்கள். ஜாதி வித்தியாசம் என்பதில்லாமல் யாரும் வாங்கிச் சாப்பிடுவார்கள். தவிர அந்தஸ்தல எல்லைக்குள் எச்சில் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பார்கள். இலையில் உள்ள சாப்பிட்ட மீதியை எடுத்து திரும்பவும் சட்டிக் குள்ளேயே போட்டுக் கொள்ளுவார்கள். கடைகளில் விற்பனைக்காக வைத்திருக்கும் சாதத் சட்டியில் யாரும் கைவிட்டு சாதத்தை எடுத்து வாயில் போட்டுப் பார்த்து மீதியை சட்டியிலேயே போட்டுவிடலாம். அதையாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள்.
ஜெகநாதத்திலுள்ள அந்த ஜெகநாதன் கோவி லுக்குள் யாரும் போகலாம். சாமியைத் தொடலாம்; சாமியைச் சுற்றலாம். காலைத் தொட்டுக் கும்பிடலாம். இது மாத்திரமில்லாமல் அந்த எல்லைக்குள் யாரும் திதி, விரதம், தர்ப்பணம் முதலிய அனுஷ்டானங்கள் ஒன்றும் செய்யக்கூடாதாம். செய்தால் பாவமாம். அன்றியும் அங்குள்ள சாமிகள் கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகிய மூவர்கள். அதாவது மற்ற இடங்களைப்போல் சாமி புருஷன் பெண் ஜாதியுடன் இல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை ஆகிய மூன்று பேர்களும் தங்கையாகிய சுபத்திரையை நடுவில் வைத்து அண்ணன்மார் இருவர்களும் இருபக்கத்தில் நிற்கின்றார்கள். இதுவும் மரக்கட்டையில் அரை குறையாய் செய்த உருவங்கள்தான் விக்கிரகங்கள்.
இந்த ஊரைப் பற்றிச் சொல்லும்போது “சர்வம் ஜகநாதம்” என்று சொல்லுவது ஒரு வழக்கம். அதாவது எந்த விதமான வித்தியாசமும், அதாவது ஜாதி, மதம், எச்சில், விரதம் முறை முதலிய வித்தியாசம் அந்த எல்லைக்குள் இல்லை என்பதை காட்டுவதற்காகச் சொல்லுவது. இதற்கு ஆதாரமாக இரண்டு விதமான கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒன்று, இப்படி விஷ்ணு என்னும் முழு முதற் கடவுளின் அவதாரமாகிய கிருஷ்ணன் என்னும் கடவுள் இறந்த பிறகு அந்தக் கடவுளின் பிணத்தை துவாரகைச் சுடுகாட்டில் வைத்து தகனம் செய்ய அது எரிந்து கொண்டிருக்கையில் திடீரென்று சமுத்திரம் பொங்கியதால் துவாரகை முழுவதும் தண்ணீருக்குள் ஆழ்ந்தவிட்டபோது இந்த கடவுளின் பிணமும் எரிந்து கொண்டிருந்த சுடுகாடும் தண்ணீருக்குள் மூழ்க நேரிட்டதால் அரை குறையாய் வெந்த பிணக்கட்டையானது தண்ணீரில் மிதந்து கரைஓரமாய் ஒதுங்கியதாகவும், அந்த ஊருக்கு ஜகநாதம் என்று சொல்லப் பட்டதாகவும், அந்த ஊரார் அந்த குறைபிணத்தை எடுத்து அதன் சக்தியை ஒரு மரக்கட்டையில் ஏற்றி அம்மரக்கட்டையில் இருந்து குறை பிணம் போலவே ஒரு உருவம் செய்து அதை வைத்து பூசித்து வருவதாகவும் அந்தஸ்தலத்தின் சரித்திரம் சொல்லு கின்றது.
மற்றொன்று, கிருஷ்ண பகவானின் விநோதங்களில் ஒன்றாகிய கோபி களுடன்கூடிக் குலாவி வருவதைக் கிருஷ்ண பகவானின் தங்கையாகிய சுபத்திரை பார்த்து பொறாமைப்பட்டு ஸ்ரீ கிருஷ்ணபகவானிடம் சென்று ஓ அண்ணாவே! நீ எவ்வளவோ அழகாகவும் பெருமை உள்ளவனாகவும் இருக்கின்றாய். உன்னுடன் கூடி அனுபவிக்கும் பெருமை கோபிமார்கள் எல்லோரும் பெற்று அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் நானோ உனக்கு தங்கையாக பிறந்து விட்ட காரணத்தால் அந்த சுகபோகத்தை அடைய யோக் கியதை இல்லாதவளாய்ப் போய் விட்டேனே என்று துக்கப்பட்டதாகவும், கிருஷ்ண பகவான் பார்த்து, “உலகத்திலேயே மிகவும் புண்ணிய பூமியாகிய ஜகநாதம் என்கின்றதாக ஒரு ஸ்தலம் இருக்கின்றது; அங்கு எந்த விதமான வித்தியாசமும் கிடையாது; எந்த விதமான செய்கைக்கும் பாவம் கிடையாது. ஆதலால் அந்த ஜெகநாதத்திற்குப் போய் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம்” என்பதாகச் சொல்லி ஜகநாதத்திற்கு வந்து கிருஷ்ணன் சுபத்திரை பலராமர் ஆகிய சகோதர சகோதரிகள் ஒன்று சேர்ந்திருப்ப தாகவும் ஒரு கதையை ஜெகநாத பண்டாக்கள் ஸ்தல மகிமையைச் சொல்லும் முறையில் சொல்வதுண்டு.
எனவே இந்தக் கதையும் பொருத்தமானதா யிருக்கலாம் என்கின்ற மாதிரியில்தான் அங்கு மற்ற விஷயங்களும் இருக்கின்றன. அதாவது தீட்டு இல்லை. ஜாதி வித்தியாசமில்லை. விரதாதி அனுஷ் டானம் இல்லை; எச்சில் வித்தியாசமில்லை என்பது போன்ற பல விஷயங்கள் இருப்பதுடன் அண்ணன் மாரும் தங்கையும் ஒன்றாய் இருந்தாலும் இருக்க லாமாம். அன்றியும் அந்த ஸ்தலத்திற்கு அதிகமான யோக்கியத்தை கொடுக்கவேண்டும். என்கின்ற எண்ணத்தின் பேரில் இப்படி ஒரு கற்பனை செய்து இருந்தாலும் இருக்கலாம். சாதாரணமாக சைவ சமயத்திலும் ஒருஸ்தலத்தையோ தீர்த்தத்தையோ ஒரு சாமியையோ பெருமைப்படுத்துவதில் இது போன்ற அல்லது இந்த தத்துவம் கொண்ட கதைகள் சொல் லப்படுவதையும் பார்க்கின்றோம். அதாவது திருவிளையாடல் புராணத்தில் ஒருவன் தன் தாயைப் புணர்ந்தவுடன் தகப்பன் கண்டு கோபித்ததற்கு தகப்பனையும் கொன்றுவிட்ட பாவத்தை சிவன் போக்கியிருப்பதாகவும் அந்த ஸ்தலத்திற்கும் தீர்த்தத் திற்கும் அந்த கடவுளுக் கும் இன்னமும் அந்த சக்திகள் இருப்பதாகவும் கருதும்படி சொல்லப்படுகிறது. ஆதலால் இப்படிப்பட்ட கதைகள் கட்டுவது ஒரு அதிசயமல்ல. எனவே இந்தக் கதை எப்படி இருந்தாலும் முதல் கதையைப் பற்றியோசிப்போம்.
கடவுள் அவதாரமாகிய கிருஷ்ண பகவான் எவ்வளவோ அற்புதங்களைச் செய்தவர். கடவுளான அவர் செத்துபோனார் என்பதும், அவர் பிணம் கொளுத்தப் பட்டதும், நெருப்பில் வெந்து கொண்டி ருக்கும்போது ஜலப்பிரளயமேற்பட்டு அந்தப்பிணம் சரியாய் வேகாமல் தண்ணீரில் மிதந்து கொண்டு வந்து ஜெகநாதத்தைச் சேர்ந்த கடற்கரையில் ஒதுங்கியது என்பதும் ஆகிய விஷயங்களை யோசித்துப் பார்த்தால் கிருஷ்ணனிடத்தில் கடவுள் தன்மை இருந் திருக்கும் என்று நம்ப இடம் உண்டா? நம்புவதானால் செத்த பிறகு அந்தப் பிணத்திற்கு அதுவும் நெருப்பில் கருக்கப்பட்ட அரைகுறை பிணத்திற்கு ஏதாவது சக்தி இருந்திருக்குமா? அந்தச் சக்தியை மரக்கட்டையில் ஏற்ற முடியுமா? அந்த மரக்கட்டையும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்ற போதெல்லாம் அந்த சக்தி மாறி மாறி அதில் வருமா?
தவிர மற்றும் ஒரு அதிசயம் சொல்லுகிறார்கள். அதாவது கோவிலில் இருக்கும் மரக்கட்டைக்குச் சக்தி குறைந்து போனால் அந்த சமயம் அதாவது 10 அல்லது 20 வருஷத்திற்கு ஒருமுறை மறுபடியும் சமுத்திரத்தில் ஒரு கட்டை முன்பு பிணம் மிதந்து வந்தது போல் மிதந்து வருமாம். அதை எடுத்து மறுபடியும் விக்கிரகம் செய்து வைத்து விடுவதாம். இதன் யோக்கியதைகளை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்கவேண்டும்.
முன்பு வந்த குறைப்பிணம் ஜலப் பிரளயத்தால் வந்தது என்று சொல்லப்படுகின்றது. அதுபோல் இப்போது வந்து கொண்டிருக்கும் இரக்கட்டைக்கும் ஏதாவது ஜலப்பிரளயம் கற்பிக்கப்படுகிறதா? எனவே புண்ணியஸ்தலங்களில் எல்லாம் புண்ணியஸ்தலமான ஜகநாதத்தின் நிலையை அந்த ஸ்தல சரித்திரப்படியே எல்லாம் யோசித்துப் பாருங்கள். இந்த லட்சணத்தில் அங்கு ஒரு தீர்த்த மகிமையும் சொல்லப்படுகிறது. அதைப்பற்றி பின்னால் ஆராய்வோம்.
இவ்வளவையும் ஒப்புக்கொண்டு அந்தஸ்தலத் திற்கு யாத்திரை போகின்றவர்களுக்கு ஏதாவது விசேஷ ஞானம் ஏற்படுகிறதா? அல்லது அந்தஸ்தல சரித்திரத்தின் யோக்கியமான கற்பனையையாவது மதித்து ஏதாவது ஒழுக்கத்தைப் பெறுகின்றார்களா? ஒன்றுமேயில்லாமல் ரயில் சார்ஜு செலவும், பூசாரி, பார்ப்பான் முதலியவர்களுக்குச் செலவும் செய்த தல்லாமல் வேறு பலன் என்ன என்பதுதான் இது எழுதியதின் கருத்து.
– ‘குடிஅரசு’ – கட்டுரை – 23.09.1928
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக