2023 பெரியார் மார்ச் 1-15,2023

தந்தை பெரியார்

நம் பெண்மக்கள்பற்றிப் பெண் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர்களுக்குமாகச் சிறிது பேச அவா கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற, நம் சமுதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் விமோசனம் இல்லை; ஆகையால், பெண்கள்பற்றிப் பேசுகிறேன்.

நம் பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல் மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பு உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன். நாமும் அவர்களைச் சிசு, குழந்தைப் பருவ முதல் ஓடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்துப் பலவிதத்திலும் பேத உணர்ச்சியே அற்று ஒன்று போலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன். அவர்களைப்பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி, கடைசியாக ஒரு பொம்மையாக்கிப் பயனற்ற ஜீவனாக மாத்திரமல்லாமல் அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக் கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாய்ச் செய்துகொண்டு அவர்களைக் காப்பாற்றவும் திருப்திப்படுத்தவும், அலங்காரப்படுத்தி, திருப்தியும் பெருமையும் அடையச் செய்ய வேண்டியதான ஓர் அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்டபேர் வந்து விடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு? ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும் ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஓர் ஆணின் கண் அழகிற்கும், மனப்புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய, அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்_ பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி,பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்’ என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா? என்று பாருங்கள். இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே, ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாய் நடத்தலாமா? என்று கேட்கிறேன். ஓர் ஆண்-ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே, எதனால்? துணியாலும் நகையாலும்தானே’ பெரிதும் கம்பி இல்லாத தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருப்பதா? என்று கேட்கிறேன்.

நான் சொல்லுவது இங்குள்ள பல ஆண்களுக்கும், ஏன் பெண்களுக்குக் கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாதபடியாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழை அடித்துப் பாடம் மந்திரம் போடுவதாலும், பூச்சுப் பூசி பத்துப் போடுவதாலும் விலகக்கூடிய வியாதி அல்ல. இது கூர்மையான ஆயுதத்தால் ஆழம்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல்) மருந்து போட்டுப் போக்கடிக்க வேண்டிய வியாதி. அழுத்திப் பிடித்து, கண்டித்து, அதட்டி, அறுத்துத் தீர வேண்டியதாகும். நான் வெறும் அலங்காரப் பேச்சைத் தொண்டாகக் கொண்டவனல்ல. அவசியப்பட்ட வேலை நடக்கவேண்டும். என் ஆயுளும் இனி மிக மிகச் சொற்பம். இதையாவது செய்தாக வேண்டும். ஆதலால், கோபிக்காமல், ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்.

நம் பெண்கள் உலகம் பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்குப் படித்த பெண், படிக்காத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்களது (பெண்களை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள், பெருமை அடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும், துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பதுமையாக்கி விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
பெண்கள் பெருமை, வருணனை ஆகியவற்றில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவற்றைப்பற்றி அய்ம்பது வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமைபற்றி ஒரு அய்ந்துவரிகூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறாள் என்று சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.

பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாது ஏன் என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவன், அவர்களிடம் வேலை வாங்கிப் பயன் அடைகிறவன் காப்பாற்ற மாட்டானா என்பதுதான். அதற்கேற்ற நகை, துணி ஆகியவையே போதும்.

அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது, பெற்றோராவது “கட்டின”வராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக்கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தம்மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் ‘போகப் பொருள்’ என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.

­ ­ ­‘‘பெண்களைப் படிக்கவைப்பது வீண் பணச்செலவு, நாட்டு வரிப்பணத்தின் ‘வீண்’ என்று ஒரு சமயத்தில் ஈரோட்டில் மணியம்மை” சொன்னதுபோல் உண்மையில் பெரிதும் வீணாகவே ஆகிறது. கோபிக்காதீர்கள்; இந்தக் கீழ் உதாரணத்தைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது ஒரு குடும்ப வாழ்க்கைப் பெண்ணுக்கு அவள் தாய், தகப்பன் பாட்டு, பிடில், வீணை, நாட்டியம் ஆகியவை கற்றுக்கொடுத்து. அவற்றில் வெற்றியாய்த் தேற வைத்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள். (பலர் இதை இன்னும் செய்கிறார்கள்). அவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்த பின்பு_ அதாவது திருமணம் ஆன பின்பு_ அந்தப் பாட்டு, பிடில், வீணை யாருக்கு என்ன பயன் கொடுக்கிறது? என்று கேட்கிறேன்.

புகுந்த வீட்டில் சங்கீதம் பாடினால், “இது என்ன குடித்தன வீடா? வேறு வீடா?” என்று மாமி கேட்பாள். பிடில், வீணை தூசி அடையும்.
ஆகவே, இந்தப் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஒரு அட்வர்டைஸ்மெண்ட்டாகப் (விளம்பரம்) பயன்பட்டது. தவிர, மற்றபடி வீணாகப் போய்விட்டதல்லவா? செலவும் கண்டதுதானே என்கிறேன். அதுபோல் ஒரு பெண்ணை ஒரு தாய் தகப்பன் பி.ஏ. படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால் பி.ஏ. படிக்கவைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காகச் சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப்பணமும் வீண்தானே? இது தேசியக் குற்றமாகாதா?

இந்தத் துறையில், எந்த அறிஞர் சீர்திருத்தவாதியும் கவலை செலுத்தாமல், எவராலும் இனப்பெருக்கத்திற்கே பெண்கள் ஆளாக்கப்பட்டு விட்டார்கள்.
­ ­ ­
ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும் ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும்; உறுதியாய் முடியும் என்பேன். ஆனால், நகைப் பைத்தியம் துணி அலங்காரப் பைத்தியம் அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை இழிவு, சுயமரியாதை அற்ற தன்மைப் பைத்தியம் ஒழிய வேண்டும்.
­ ­ ­
எனவே, பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல், ஆண் என்றே அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப்போலக் கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா, பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் கீர்த்தி, புகழ்பெறும் பெண்மணியாக்க வேண்டும். பெண்ணும் தன்னைப் பெண் இனம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாகவே நடக்கக்கூடாது. ஒவ்வொரு பெண்ணும் நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு – தாழ்வு? என்ற எண்ணம் எழ வேண்டும். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆகப்படாது; அவர்கள் புது உலகைச் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து, இந்தப்படி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான்.

15.09.1946 அன்று திருப்பத்தூரில் (வடஆர்க்காடு மாவட்டம்) நடைபெற்ற சம்பத் -_ சுலோச்சனா மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை – ‘குடி அரசு’ – 21.09.1946
­ ­ ­

இந்தியப் பெண்கள் கல்வி, சொத்து, திருமண வாழ்க்கை ஆகிய எந்தத் துறையிலும் சுயேச்சையில்லாதவர்களாயிருக்கின்றனர். நவீன நாகரிகம் என்றால், பிரிட்டிஷ் பெண்களைப் போலவும், அமெரிக்க சிங்காரிகளைப் போலவும் உடை உடுத்துவதும், அலங்கரித்துக் கொள்வதும்தான் எனக் கருதியிருக்கிறார்களே தவிர, இரஷ்யப் பெண்களைப்போலவும், துருக்கிப் பெண்களைப்போலவும், போலீஸ், இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற காரியங்களையும் ஆண்களைப் போலவே செய்ய வேண்டும் என்ற நினைப்பே நமது படித்த பெண்களுக்குக்கூட இருப்பதில்லை.

தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிகளாகவும்,வெறும் புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கிவிட்டதோ, அதைப்போலவே நம் பெண்மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.
உயர் படிப்புப் படித்துப் பட்டமும் பெற்ற பெண்கள், “ஆண்டாள் அன்பு” பற்றியும், “காரைக்காலம்மையாரின் சிவ பக்தி” பற்றியும் பேசிப் பொழுது போக்குகிறார்களென்றால், நம் பெண்களுக்கு நவீன மேல் நாட்டுக் கல்விகூட ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லையென்பது கண்கூடு.

நம்முடைய ஆட்சிமுறையில் அடிப்படையான, புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டாலொழிய, இந்தியப் பெண்களைச் சுயேச்சையுள்ள ஜீவன்களாக ஆக்குவது முடியாத காரியமேயாகும்.இந்நாட்டிலும் போலீஸ் வேலை செய்யும் துணிவும், திறமையும், ஆசையும் உள்ள பெண்கள் ஆயிரக்கணக்கிலிருக்கின்றனர். பெண்கள் படிப்பதே பெரிய அதிசயமாகவும், சைக்கிள் விடுவதை வேடிக்கையாகவும் கருதப்
பட்டதுபோலவே, போலீஸ் உத்தியோகமும் சில ஆண்டுகள்வரையில் அதிசயமாகத் தோன்றலாம். பிறகு, நாளடைவில் அதுவும் இயற்கைக் காட்சியாகவே போய்விடும்.எனவே, பெண்கள் முன்னேற்றத் துறையில் இரஷ்யா, துருக்கி போன்ற பெண் இனப்புரட்சி நாடுகளை இந்தியா பின்பற்றினாலொழிய, நம் பெண்கள் என்ன கல்வி கற்றாலும், எவ்வளவு சொத்துரிமை பெற்றாலும், வெறும், “நகை பீரோவாகவும்” “உடை ஸ்டாண்டாகவும்” தான் இருப்பார்கள். பெண் உலகில் தலைகீழான புரட்சி ஏற்படக்கூடிய முறைகள் நமக்குத் தேவை. அதுவரையில் திரவுபதையைப் பற்றியும், சீதையைப்பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்ற ஆமைத் தன்மைதான் இருக்கும். “பெரோவிஸ்காயா” போன்ற இரஷ்ய வீரப்பெண்கள் நம் நாட்டில் தோன்றவே முடியாது. நளாயினிகள் போன்ற தன்மானமற்ற அடிமைகள்தான் தோன்ற முடியும்.

 

– ‘விடுதலை’ தலையங்கம், 18.11.1946