தந்தை பெரியார்
திராவிட மக்கள் உள்ளத்தில் பெருங்குறையாய் இருந்ததும், திராவிட மக்கள் முற்போக்குக்கே பெருந்தடையாய் இருந்தது-மான குறை நீங்கும்படியாக -_ இன்று, ‘விடுதலை’ வெளியாகிவிட்டது. இனி இதை ஆதரித்து வளர்த்து நலனடைய வேண்டியது திராவிட மக்களின் கடமையாகும்.
திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும் இன்றுள்ள இழி நிலைகளுக்குத் தலையாய காரணங்களுக்குள் முக்கியக் காரணம் என்னவெனில் _ திராவிடர்களுக்கு என்று, திராவிடரிடத்தில் தினசரிப் பத்திரிகை ஒன்றாவது இல்லாததேயாகும்.
திராவிட நாட்டில் உள்ள தினசரிப் பத்திரிகைகள் யாவும் திராவிடர் அல்லாதவர்-களிடமும், திராவிடர்களின் மாற்றார்களான பிறவி எதிரிகளிடமும், அவர்களின் அடிமை-களிடமுமே இருந்து வருகின்றன. குறிப்பாக, ஆரியர்கள் வெகு தந்திரமாக, வெகு முன்னெச்சரிக்கையுடன் பத்திரிகை உலகைத் தங்கள் கைவசத்தில ஏகபோகமாக ஆக்கிக் கொண்டதோடு, வேறு ஒருவரும் அத்துறையில் தலை எடுக்காதபடியும், வேறு ஒருவரும் தினசரிப் பத்திரிகைகள் நடத்திச் சமாளிக்க முடியாதபடியும் செய்து வந்திருக்கிறார்கள்; செய்தும் வருகிறார்கள்………
மற்றும் சொல்லுவோமானால், ஆரியர்கள் திராவிட நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா என்னும் உபகண்டத்திலும் மற்ற நாடுகளிலும் உள்ள பத்திரிகைகளையும் தங்கள் ஆதிக்கத்திலேயே வைத்து, இந்தியாவில் எங்கணுமே திராவிட மக்களை இழிமக்களாகக் கருதும்படியாக, மானம் _ மரியாதை அற்ற மக்களாக இருக்கும்படியும் செய்து வருகிறார்-கள். பொதுவாகச் சுருங்கச் சொல்ல வேண்டுமானால், பத்திரிகை உலகம் முழுவதும் ஆரிய ஆதிக்கத்தில் இருப்பதாலேயே இந்த ஆயுதத்தைக் கொண்டு ஆரியர் திராவிடர்களை அவர்களது வாழ்வில் இவ்வளவு கொடுங்-கோன்மையான அடக்குமுறையில் _ இராணுவ ஆட்சிபோல் ஆதிக்கம் செலுத்தி அடக்கி ஆண்டு நசுக்கி வருகிறார்கள். இந்தக் காரியத்தில் ஆரியர்கள் இவ்வளவு வெற்றி பெற்று இருப்பதாலேயே, ஆங்கில அய்ரோப்பிய ஆரியர்களும் கூட, இந்த இந்திய ஆரியர்களுக்கு இணங்கி அவர்களது நலனுக்கு ஏற்றவண்ணம் நடந்து, இந்நாட்டில் ஆட்சி செலுத்த வேண்டியவர்களாகவும், வாழ வேண்டியவர் களாகவும் இருந்து வருகிறார்கள்.
இதற்கு முன் எப்படி இருந்தாலும், இப்போது சிறிது காலமாய்த் திராவிட மக்களுக்குள் நல்ல உணர்ச்சியும் எழுச்சியும் முயற்சியும் இருந்து வந்தும், தொடர்ந்து கிளர்ச்சியும் தொண்டும் நடந்து வந்தும், குறைந்த பட்சம் ஒரு 50 வருட காலத்தில் இல்லாத அளவுக்குத் திராவிடர்களிடமும் சிறப்பாகத் திராவிட இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியவர்கள் உள்ளத்திலும் தீப்பொறி பறக்கத் தகுந்த அளவு தீவிர உணர்ச்சி கொண்ட பிரச்சாரத் தொண்டாற்றி வந்தும், வேறு எக் கூட்டத்-தாரையும்-விடக் குறைந்ததாயில்லாத அளவுக்கு உண்மை அங்கத்தினர்களும் அமைப்புகளும் ஸ்தாபனங்களும் ஏற்பட்டு _ கூட்டங்கள் மாநாடுகள், விழாக்கள் நடந்து வந்தும், அவைகளுக்கும் சிறிதும் பயனில்லாமல் போய்விடுவதும், மதிப்பில்லாமல் போய் விடுவதுமான தன்மைகள் ஏன் ஏற்படுகின்றன வென்றால், பத்திரிகைகள் ஆரியர்களுடைய தாகவும் அதன் நிருபர்கள் ஆரியர்களாகவும், அவற்றைக்கொண்டு அவர்கள் செய்யும் வன்னெஞ்சமான நீதியும் _- ஒழுக்கமுமற்ற அட்டூழியமும்தான்………
இந்தப் பத்திரிகை ஆயுதம் இந்தத் தன்மையில் அவர்களிடம் இருந்துவரும் வரையில் திராவிட மக்களின் அடிமைத் தன்மையும் சூத்திரத்தன்மையும் அதாவது, சமுதாயத்தில் இழிமக்களாகவும், சமயத்தில் நான்காம் அய்ந்தாம் மக்களாகவும், கல்வியில் 100க்கு 90 பேர் தற்குறி (கைநாட்டு)களாகவும், பொருளாதாரத்தில் தினக்கூலித் தொழிலாளி களாகவும், அரசியலில் அடக்குமுறை ஆட்சிக்குட்-பட்டுத் தவிக்கும் மானமற்ற ஒற்றுமையற்ற ஈன இன மக்களாகவும் ஆக்கப்பட்டிருக்கும் தன்மையிலிருந்து மீள முடியவே முடியாது என்பது கல்லுப்போன்ற உறுதியாகும். உண்மையாகவே திராவிடருக்குள் இன்று ஒற்றுமை எங்கே? இன உணர்ச்சி எங்கே? கட்டுப்பாடு எங்கே? ஒன்றுபட்ட இலட்சியம் எங்கே? ஆனால், திராவிடர்களுக்கு அவர்களது வாழ்வில், முற்போக்கில் எதில் குறையில்லாமல்_-தடைகளில்லாமல் இருக்கின்றது? அதே தன்மையில் ஆரியர்களைப் பார்த்தோமானால், அவர்களுக்கு எவ்விதக் குறை இல்லாவிட்டாலும் _- எவ்வளவு கட்டுப்பாடு! எவ்வளவு இன உணர்ச்சி! எவ்வளவு ஒன்றுபட்ட இலட்சியம்! எவ்வளவு ‘கூட்டுத் தொண்டு’ இருந்து வருகின்றன!
இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதற்கு முதற்காரணம், நாம் மேலே காட்டியதுபோல், அவர்கள் கைவசம் பத்திரிகை உலகம் இருந்து வருவதும், நமக்கு அது இல்லாததுமே முக்கிய-மென்பதல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்? குறைந்த அளவு நாம் (திராவிடர்கள்) ஆரியர்களின் பத்திரிகை அட்டூழியங் களையாவது சமாளிக்கத்தக்க ஒரு தன்மையை அடையாவிட்டால், மற்றபடி அவர்களுடைய வலிமை பொருந்திய ஆயுதங்களான _ மதம், கடவுள்கள், ஆத்மார்த்தம், தெய்விகம், கலை, தேசியம், சுதந்தரம், சுயேச்சை என்னும் ‘இருபுறமும் பதமுள்ள வச்சிராயுதங்களால்’ நடத்தும் சித்திரவதைகளில் இருந்து எப்படி மீள முடியும்?………
திராவிட மக்கள் சற்றேறக்குறைய தெளிவான இரு பிரிவுகளாகக் காணப்பட்டு விட்டார்கள். ஒன்று, திராவிடர்களின் இழிநிலையைப் பற்றி _ அவர்களது முன்னேற்றத்திற்கும் மனிதத் தன்மைக்கும் கேடாக இருக்கும் தன்மைகளைப் பற்றிக் கவலையற்று, தங்கள் நலனையே பார்த்துக் கொண்டு வாழ்வை நடத்துவது என்பது; மற்றொன்று, தங்களைப் பற்றிக் கவலை-யில்லாமல் இன்றைய இந்த இழிநிலையைப் போக்கத் தம்மாலானதைச் செய்வது, செய்யும் முயற்சியில் முடிவெய்துவது, அதனால் ஏற்படும் கஷ்ட நட்டங்களை ஏற்பது என்பதாகும். இவற்றுள் முன்னையவர்களில் இரண்டு பிரிவினர்கள் இருந்து வருகின்றனர். இவர்-களுள் ஒரு சாரார், எதிரிகளுடன் சேர்ந்து திராவிடர்கள் இடரையும் தடையையும் செய்யத் துணிந்து, ஆரியர்களுக்கு உடந்தையாயும் அடிமையாயும் இருந்துவரும் வழுக்கி விழுந்த திராவிட சகோதரர்கள்; மற்றொரு சாரார், அவர்களுடனும் சேராமல், நம்மோடும் சேராமல் நடுநிலைமை காட்டிக்கொண்டு, சமயம்போல் நடந்து, மற்ற இரு கூட்டத்தாரின் தொண்டிலும் பங்கு பெற்றுத் தங்கள் சொந்த வாழ்வை மாத்திரம் கவனித்து, அதற்காக எதுவும் செய்யத் துணிவு கொண்ட திராவிடர்கள். இவர்கள் தங்களை மற்ற யாரையும்விட மேதாவிகள் _- மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சுயநல வேட்டை ஆடுகிறவர்கள் ஆவார்கள். இத்தகைய எந்தப் பிரிவும் ஆரியர்களுக்குள் இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும்.
எனவே, திராவிட மக்கள் மேற்குறிப்பிட்ட தன்மைகளில் இருந்து மாறி-_மற்ற இனத்தவர், மற்ற நாட்டவர்போல் ஆகி, ஒரு மனிதத் தன்மை கொண்ட சமுதாயமாக ஆவதற்கு மிக்க எதிர்நீச்சல் போன்ற கஷ்டமானதும் _- தன்னலத்தை வெறுத்ததுமான தொண்டு செய்ய வேண்டியது மிக அவசியமாகுமென்பதல்லாமல், இந்தச் சமயம் மிகவும் அவசரமானது என்போம். அதற்கு முக்கியமான -_ இன்றியமையாத ஆயுதம் பத்திரிகையாகும்.
அதை உத்தேசித்தே இந்தக் காரியத்திற்கும்-கூட நமக்குள் இருக்கும் பலவித வேற்றுமை, உதவியற்ற தன்மை, நிதியற்ற நிலை, வேறு பல தடைகள், கஷ்ட நட்டங்கள் ஆகியவைகளைக் கூட இலட்சியம் செய்யாமல் _- ‘விடுதலை’யைத் துவக்கி விட்டோம். பெரிதும் பாமர, பொது மக்களையும் இளைஞர்களையும் நம்பியே இதில் இறங்கி இருக்கின்றோம். இது நீடித்து நடந்தாலும் சரி, அல்லது முன்பே சில நாள்களில் ஒழிந்தாலும் சரி; நம் கடமையைக் கருதியும் இச்சில செல்வர், அறிஞர்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக்கையுடனும் இறங்கிவிட்டோம். இச்சமயம் நம் எதிரிகளின் ஏகபோக ஆதிக்கத்தில் அரசியலும் இருக்கும்-படியான சமயமாகும்.
அதனால், அவர்கள் ‘விடுதலை’ எப்போது வேண்டுமானாலும் -_ என்ன வேண்டுமானாலும் செய்துவிடக் கூடும் என்றாலும், நமக்குள்ள ஆசை – நமது முக்கிய கடமை – நம் மக்களிடம் உள்ள நம்பிக்கை – நம் இளைஞர்கள், நம் மாணவர்கள், நம் தாய்மார்கள் நமக்கு ஊட்டிவரும் ஊக்கம், உள நம்பிக்கை, ஒத்துழைப்பைத் தருவதாய்க் காட்டும் அறிகுறி, அவர்களது வாக்குச் சுத்தம் ஆகியவைகளைக் கொண்டும் தொடங்கி விட்டோம்! இதே தொண்டில் இதற்குமுன் இரண்டு மூன்று முறை முயன்று தோல்வி-யுற்றாலும் அதைப்பற்றிச் சிந்தியாமல், மறுமுறையும் துணிந்து இறங்கி விட்டோம். ஆகவே தோழர்களே! தாய்மார்களே! செல்வர்களே! அறிஞர்களே! இளைஞர்களே! மாணவர்களே! இனி உங்கள் கடமை என்ன?
(‘விடுதலை’ – 6.6.1946)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக