ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

அதிக பலமுடையது ஜாதியே!

 விடுதலை நாளேடு

மாற்றக் கூடியது மதம் மாற்ற முடியாதது ஜாதி

தந்தை பெரியார்

 

நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படிப் பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும்பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று எண்ணிக் கொள்கின்றானோ அதுபோலவே மதமும் ஒரு மனிதனுக்குப் பிறவி காரணமாகவே கற்பிக்கப்பட்டு அவனும் அந்த மதத்தின் பேரால் அழைக்கப்பட்டு தானும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன மதத்தான் என்றே எண்ணிக் கொண்டு வருகின்றான். ஆனால், ஜாதியானது பிறவியின் காரணமாக ஏற்படு கின்றதென்று, ஜாதியைக் கற்பிக்கும் சாஸ்திரங்கள் என்பவைகளால் சொல்லப்பட்டு வருவதால், பிறவியின் காரணமாக ஜாதி நிர்ணயிக்கிறவர்களுக்கு மேல்கண்ட ஆதாரங்களைச் சொல்லிக் கொள்ள இடமுண்டு. ஆனால் மதமானது. பிறவி யின் காரணமாக ஏற்படுவதாக இன்றுவரை எந்த மதமும், அது சம்பந்தப்பட்ட சாஸ்திரமும் சொல்லவே இல்லை! மதம் என்பது கொள்கை என்றும், அந்தக் கொள் கையானது எந்த மனிதனாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவும், தள்ளவும், உரிமையுடையது என்றுமே தான் சொல்லப்பட்டு வருவதுடன், அந்தப்படியே அநேக மனிதர்கள் அடிக்கடி மதம் மாறிக் கொண்டும் வருகின்றார்கள்.

மதம் மாறலாம்
அதாவது இந்துக்கள் என்பவர்கள் கிறிஸ்தவர்களாகவோ, மகமதியர்களாகவோ, பவுத்தர்களாகவோ, பிரம்ம சமா ஜிகளாகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு கிறிஸ்தவர் மகமதியராகவோ, இந்துவாகவோ, பவுத்தராகவோ, நாஸ்திக ராகவோ மாறுவதும், ஒரு மகமதியர் கிறிஸ்தவராகவோ, இந்துவாகவோ, புத்தராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு பவுத்தர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்தவ ராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும் ஒரு நாஸ்திகர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்துவராகவோ, பவுத்தராகவோ மாறுவதும் இவர்கள் அடிக்கடி உள்பிரிவு மதக்காரர்களாக அதாவது சைவன் வைணவனாகவும், வேளாளன் சைவனாகவும், சைவன் சமணனாகவும், சமணன் சைவனாகவும், மற்றும் இதுபோலவே அடிக்கடி மாறுவதும், சர்வ சாதாரணமாய் பார்த்து வருகின்றோம். இந்த முறையில்தான் இன்றைய தினம், உலகத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதான, பவுத்தமதத்தில் 55 கோடி மக்களும், 2000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கிறிஸ்தவ மதத்திற்கு 50 கோடி மக்களும், 1300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மகமதிய மதத்திற்கு 23 கோடி மக்களும் காலமே குறிப்பிட முடியாததான அவ்வளவு பழைய இந்து மதத்திற்கு 20 கோடி மக்களும், பவுத்த, கிறிஸ்தவ, மகமதிய ஆகிய மதங்களுக்கு முன்னால் இருந்து வந்த யூத மதத்திற்கு ஒரே ஒரு கோடி மக்களும், மதம் குறிப்பிட இயலாத மக்கள் 17 கோடியுமாக இருந்து வருகின்றார்கள்.

இவர்கள் இந்தப்படி எப்படி உண்டாயிருக்க முடியும்? அநேகமாக இவ்வளவு ஜனங்களும் ஏதோ ஒரு மதத்திலிருந்தோ, அல்லது மதமே இல்லாதவர்களிடமிருந்தோ தான் புதிதாக ஏற்பட்ட மதப்பிரச்சாரங்களின் மூலமாக, அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இன்றைய தினம் இருக்கவேண்டும். இந்தக் கொள்கைப்படி பார்த்தாலே, மக்களுக்கு மதம் பிறவியின் காரணம் அல்ல வென்றும், அவரவர்கள் மனப்பான்மையும், மற்றவர்கள் பிரச்சாரமும் காரணமென்றும் விளங்கும். அன்றியும் இந்தக் கொள்கைப் படியே இனியும் உலகத்தில் எத்தனை மதம் வேண்டுமானாலும் உற்பத்தியாகலாம் என்பதும் அவைகளுக்கெல்லாம் இப்போதிருக்கும் மக் களே தான் பெரும்பகுதியும் போய் அப் புதுமதங் களில், சேர்ந்தாக வேண்டுமென்பதும் நன்றாய் விளங்கும். எனவே, மதத்தையும் ஜாதியையும் இரண்டையும் பார்க்கும்போது மதத்தைவிட ஜாதியே அதிக பலமுடையதாகும். ஏனெனில் ஜாதி பிறவியில் உண்டாவது, அது மாற்ற முடியாதது என்று சொல்லப்படுவது; ஆனால் மதமோ கொள்கையின் மூலம் ஏற்படுவது; அது மன உணர்ச்சிக்கும்; அறிவு உணர்ச்சிக்கும் தக்கபடி அடிக்கடி மாற்றிக் கொள்ள உரிமை உடையது என்பதாகும்.

பகுத்தறிவுக்கு ஒப்புகின்றதா?
ஆகவே, பிறவியினால் ஏற்படுகின்றது என்று சொல்லும் படியான ஜாதியை அடியோடு அழித்து, எல்லா மக்களையும் ஒன்று சேர்த்து, ஒற்றுமையையும் சகோதரத் தன்மையையும் உண்டாக்கவேண்டுமென்பதாகக் கூறப்படும் மக்களின் முயற்சியை ஒப்புக் கொண்டு ஆதரவளிக்கச் சம்மதிப்பதாகச் சொல்லும் மக்கள் கேவலம் கொள்கையாலும், அறிவு உணர்ச்சியாலும் இருக்கும் மதத்தை அழித்து, மக்களை ஒன்று சேர்க்க முயற்சிப்பதில் என்ன ஆட்சேபனை இருக்கக் கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. மனிதன் அறிவு வளர்ச்சியின் மூலமும், ஆராய்ச்சித் தெளிவின் மூலமும், அசவுகரியத்தின் மூலமும், சுயநலத்தின் மூலமும் அடிக்கடி மாற்றிக் கொள்ள சுதந்திரம் இருக்கும் மதத்தைப் பற்றிப் பிடிவாதம் காட்டுவதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதும் நமக்கு விளங்கவில்லை.

அநேகமாக மதங்களை இன்றைய தினம் வலியுறுத்துபவர்களில் அநேகர் தங்கள் மதத்திற்குச் சொல்லும் ஆதாரங்கள் எல்லாம், மதத்தை உண்டாக்கின மதத் தலைவர் பெரியார் என்றும், அவர்கள் அநேக அற்புதங்கள் செய்த பெரியார்கள் என்றும், தங்கள் தங்கள் மதம் இன்ன இன்ன பரீட்சைக்கு நின்று வெற்றிபெற்றது என்றும் சொல்வதின் மூலம் அவைகளைப் பெருமைப் படுத்திப் பேசுகின்றார்களே அன்றி, அவைகளில் ஏதாவது ஒன்று இன்றைய தினம் நடைபெற முடியுமா? என்பதைப் பற்றி கேட்போமானால் கோபித்துக் கொள்ளுகின்றார்களே ஒழிய வேறு சமாதானம் கிடையாது. அதுதான் போகட்டும் என்றாலோ, அம்மதக் கொள்கைகளைப் பற்றியும் அதே மாதிரி மதத்திற்கான கொள்கைகள் என்று சொல்லப்படுவதல்லாமல் கொள்கைகளுக்காக மதமென்றோ, சவுகரியத்திற்காகக் கொள்கைகள் என்றோ, பகுத்தறிவுக்கு ஒப்புகின்றதா? என்றோ ஒரு காலமும் சொல்ல முடியாதவை களாகவே இருக்கின்றது.

அளவிட முடியாத செலவுகள்
இந்த நிலையில் மதத்திற்காகக் கொலைகளும், கொள் ளைகளும், யுத்தங்களும், உயிர்விடத் தக்க வீரங்களும், நாட்டில் மலிந்து கிடக்கின்றன. அதுதான் போகட்டுமென் றாலோ மதத்திற்காகச் செலவாகும் பணங்களும், நேரங் களும், அறிவுகளும், ஊக்கங்களும், கணக்குக் கடங்காதவை யாகவே இருக்கின்றன.
இந்துமதம் என்பதைப் பொறுத்தவரை ஏற்படும் செலவுகள் சகிக்க முடியாததா யிருப்பதோடு அதனால் நாட்டிற்கு ஏற்படும் தொல்லைகள் அளவிடமுடியாததாய் இருக்கின்றன. மற்ற மதக்காரர்கள் எல்லாம் மதத்தின் பேரால் பணங்களை வசூல் செய்து, மதத்தில் உள்ள மக்களுக்கு ஒற்றுமை, கல்வி, தொழில், ஒழுக்கம், ஆகியவைகளை உண்டாக்குவதற்கும், மேற்கொண்டு அந்நிய மதத்தில் இருக்கும் மக்களை தங்கள் மதத்தில் சேர்ப்பதற்கும் உபயோகப் படுத்துகின்றார்கள். ஆனால் இந்து மதக்காரர்கள் என்பவர் களோ, மற்ற மதக்காரர்கள் எல்லாரையும் விட அதிகமானப் பணம் சம்பாதித்து ஒற்றுமையில்லாமலும், கல்வியில்லா மலும், தொழில் இல்லாமலும், ஒழுக்கமில்லாமலும் செய்து வந்திருப்பதுடன், அந்நிய மதத்தில் போய்ச் சேரவும் தாராளமாய் நிர்ப்பந்தமும் இடமும் தந்துவந்திருக்கின்றார்கள்.

உதாரணமாக இன்றைக்கு 50 ஆண்டு ஜனகணிதப்படி இந்துக்கள் 50 ஆண்டுக்கு முன்னுள்ள ஜனத் தொகைப்படி 100க்கு 10 பேர்கள் வீதம் ஜனத் தொகையில் குறைந்திருக் கிறார்கள். மற்ற மதக்காரர்களோ நூற்றுக்கு 25 முதல் 40 வரை உயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் யாரென்று பார்த்தால், தெய்வீகத் தன்மை பொருந்தியதும், ஆத்மார்த்தம் நிரம்பியதும், தெய்வத்தன்மை பொருந்திய ரிஷிகளாலும், முனிவர்களாலும், ஆச்சாரியர்களாலும், சமயக் குரவர்களா லும், அவதாரப் புருஷர்களாலும், கடவுள் அவதாரங்களாலும் உண்டாக்கப்பட்ட ஒப்புயர்வற்ற சனாதன வேத இந்து மதத்திலிருந்து, இதர மக்களால் இழைக்கப்பட்ட தங்களுடைய கொடுமைகளிலிருந்து தப்புவிப்பதற்காக என்றே ஓடிப்போனவர் களாவார்கள்.

எந்தமத ஆச்சாரியனும், மதபக்தனும், இது விஷயத்தைப் பற்றி கிஞ்சிற்றாவது ஆலோசித்து கடுகளவு கண்ணீராவது கொட்டினான் இல்லை. இப்படிப்பட்ட தானாகவே தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் மதத்திற்காக ஏற்படும் செலவுகளும், மெனக்கேட்டையும், அறிவுத் தடையையும் நீக்கவோ, கடுகளவாவது குறைக்கவோ எவனும் வெளி வந்தவனுமல்ல. ஆனால், இப்படிப்பட்ட, இந்து மதத்திலிருந்து இப்படிப்பட்ட இந்துக்களின் கல்நெஞ்சம் படைத்த ஒழுக்க ஈனங்களிலிருந்து விலகிக் கொள்ளக் கருதி, சென்ற காலத்தில் சிலர் மகமதியர் களாகி விட்டதாலும், கிறிஸ்தவர்களாகிவிட்டதாலும் அவற்றை நாம் பாராட்டியதாலும் சில நண்பர்களுக்கு மிக்க மனத்தாங்கல் ஏற்பட்டு நம் மீது காய்ந்து விழுந்து சுமார் 15 கடிதங்கள் வரையில் எழுதியிருக்கின்றார்கள்.

அவைகள் மலேயா நாட்டிலிருந்தும், பர்மா தேசத்திலிருந்தும், கொழும்புச் சீமையிலிருந்தும், இந்திய உள்நாட்டிலிருந்தும் வந்தவைகளாகும். அப்படி எழுதியிருப்பவர்களில் அநேகம் பேர் நீர்தான் மதம் வேண்டியதில்லை என்று பேசவும் எழுதவும் செய்கின்றீரே! அப்படியிருக்க மகமதிய மதத்தை ஏன் ஆதரிக்கிறீர்! அதில் போய்ச் சேர்ந்தவர்களை ஏன் பாராட்டுகிறீர்? என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் இப்படி எழுதியவர்கள் எல்லாரும் மதமே வேண்டாம் என்கின்ற கொள்கையை ஒப்புக் கொண்டு, நமக்குப் புத்திமதி கூறினவர்களா? அல்லது இந்து மதத்தை விட்டு மக்கள் வேறு மதத்திற்குப் போகின்றார்களே? என்கின்ற மதப்பித்துக் கொண்டு எழுதினார்களா? என்று பார்ப்போமேயானால் ஏறக்குறைய அதிகம் பேர் மதப் பித்துக் கொண்டு இந்துமதம் போய்விடுமே என்றோ அல்லது மகமதிய மதம் மாத்திரம் என்ன உயர்ந்த மதம் என்றோ, கருதித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பதாகவே நினைக்கின்றோம்.

சூரியனைக் கண்ட இருட்டு மறைவதைப் போல்…
அவர்களுக்கு ஒரு பதில் சொல்ல விரும்பு கின்றோம். அதாவது இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானது! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிரக ஆராதனை மறுப்பு ஆகிய வைகள் இருக்கின்றது. அந்த மதம் இன்று துருக்கி, ஆப்கானிஸ்தானம், எகிப்து முதலிய நாடுகளில் ஆட்சி செய்துகொண்டு வருகின்றது. துணிகர மான சீர்திருத்தத்திற்கு முனைந்து நின்று வெற்றி கொண்டு வருகின்றது. இவைகளை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுவ தானாலும், இந்துவாக இருக்கும் காரணத்தால் தீண்டப்படாதவராகவும், காணப்படாதவராகவும், தெருவில் நடக்கப்படாதவ ராகவும் கடவுள் சன்னி தானத்தில் நிற்கப் படாத வராகவும் இருக்கின்ற ஆறறிவு படைத்த ஆண்டவனுடைய தூய திருக்கோயிலாக உடைய சரீரத்தைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதன் இந்து மதத்தைவிட்டு மகமதியமதம் புகுந்தானா னால் அப்போதே சூரியனை கண்ட குமரி இருட்டுப் பறந்தோடுவதைப் போல் மறைந்து போகின்ற தென்பது மட்டும் உறுதி! உறுதி!! உறுதி!!!
இதை யாராவது மறுக்கின்றார்களா? என்று கேட்கின் றோம்.

மற்றபடி, மேல் லோகமும் ஆண்டவன் சன்னி தானமும், பாவமன்னிப்பும் இந்து மதத்தைவிட, மகமதிய மதத்தில் மிக்க சமீபமென்றோ? மிக்க சுலபமென்றோ? நாம் ஒப்புக்கொள்வதில்லை. தவிர இந்து மதத்திலிருக்கின்ற ஒரு சக்கிலியோ பறையனோ, பள்ளனோ, இன்றைய தினம் இந்து மதத்தை விட்டுவிட்டேன் என்று சொல்லு வானானால் அவனை ஒருக்காலமும் தொட்டுக் கொள்ளவோ, தெருவில் நடக்கவிடவோ, பக்கத்தில் வரச் சம்மதிக்கவோ எவரும் ஒப்புக் கொள்ளுவதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களிடம் தாழ்த்தப்பட்டவர்கள் மதத்தைவிட்டு விடுவதினால் மாத்திரம் எப்படி சுதந்திரமடையக் கூடியவர்களாகி விடுவார்கள்! ஆனால், மகமதியர்களாகவோ, கிறித்தவர் களாகவோ ஆகிவிட்டாமல் கண்டிப்பாக சட்டத்தில் ஆட்சேபனை இல்லை என்பதுடன் சிறப்பாக மகமதியர்களாகிவிட்டால் சட்டத்தில் ஆட்சேபனை இல்லாததோடு, அனுபவத்திலும் ஆட்சேபனை இல்லாமல் போய்விடுகின்றது.

பொதுவாக நமது லட்சியம் ஜாதி, மத வித்தியாசம் ஆகிய இரண்டும் ஒழிந்து அவைகளால் ஏற்படும் மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டுமென்பதாகும். மதவித்தியாசம் ஒழிகின்ற வரையிலும், ஜாதி வித்தியாசம் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால், மதவித்தியாசம் ஒழியப் பாடுபட்டுக் கொண்டிருப்பதுடன், ஜாதி வித்தியாசம் ஒழியச் செய்ய வேண்டிய காரியங்களையும் கூடச் செய்து கொண்டு தானிருக்க வேண்டி இருக்கின்றது. ஆகவே அம்முயற் சியிலொன்று தான், நாம் இப்போது மகமதிய மதத்தைத் தழுவியவர்களை ஆதரிப்பதும், பாராட்டு வதுமே ஒழிய வேறில்லை! பார்ப்பனர்கள் சமீப காலமாய்ச் செய்துவரும் சூழ்ச்சிகளை உணர்ந்தவர்கள், இன்று மதத்திற்காகவோ, இந்துக்கள் பிற மதம் புகுவற்காகவோ, சிறிதும் அதிருப்தி அடைய முடியாதென்பதே நமது நம்பிக்கை.

குழந்தை மணங்களைத் தடுக்கும் மசோதாவிற்கு இந்து மதத்தின் பேரால் ஆட்சேபனையும், சாஸ்திரத்தின் பேரால் சத்தியாக்கிரகமும் செய்வதற்கும் புதிய ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு, பிரச்சாரமும் பத்திரிகையும் நடத்தப் பணமும் சேகரித்து வருகின்றார்கள்.
இதுமாத்திரமல்லாமல், இந்துக்களுக்கு – சிறப்பாக – பார்ப்பனர்களுக்கு (தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமான (பர்) மதத்தைக் காப்பாற்ற காங்கிரசே நல்ல சாதனம் – திரு.எஸ்.சத்தியமூர்த்தி அய்யரவர்கள், பார்ப்பனர்களுக்குச் செய்திவிடுத்து எல்லாரையும் காங்கிரசில் சேரும்படி அழைக்கிறார். அதாவது, அவர் சர்க்காரை மத சம்பந்தமான காரியங்களில் பிரவேசிக்க ஒட்டாமல், செய்யவேண்டுமானால் காங்கிரசை, கைப்பற்றியாக வேண்டுமென்று வியாக்கி யானமும் செய்திருக்கின்றார். இதிலிருந்து என்ன விளங்கு கின்றது என்று பார்த்தால் மதத்தின் பேரால் உள்ள கொடுமைகளை ஒழிக்க சமூகத் துறையிலும், சம்மதிக்க மாட்டோம்! அரசியல் துறையிலும் சம்மதிக்க மாட்டோம்! என்று பார்ப்பனர்கள் வைதிகக் கோலத்துடனும், தேசியக் கோலத்துடனும், சொல்லுவதாக ஏற்படுகின்றதா? இல்லையா? என்று கேட்கின்றோம்.

தவிரவும், நாமும் இந்த ஜாதி வித்தியாசத்தைப் போக்க பிறமதம் புகுவது என்பதையே பிரதானமாகக் கொண்டிருக்க வில்லை. அப்படிச் செய்பவர்களை ஆதரிப்பது ஒருபக்கமும், கோயில் பிரவேசம் ஒரு பக்கமும், கோர்ட்டுகளில் விவகாரம் இன்னொரு பக்கமும், சமபந்தி ஒருபக்கமும், கலப்பு மணம் மற்றொரு பக்கமும், பிரச்சாரம் இன்னொரு பக்கமும், சட்டம் செய்ய முயற்சி இனி ஒரு பக்கமும், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமஉரிமையும் சமசந்தர்ப்பமும் கிடைக்க வேறொரு பக்கமும் இப்படிப் பல வழிகளிலும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இவைகளுக்கு இடையூறாக ஏற்பட் டுள்ள எதிர்ப்புகள், தொல்லைகள், விஷமப் பிரசாரங்கள், பழிசுமத்தல்கள், மிரட்டல்கள், ஆபத்துக்கள், மொட்டைக் காகிதங்கள், முதலிய தடைகளின் பக்கத்திலிருந்து கவனித் துப் பார்க்கின்றவர்களுக்குத் தெரியுமே ஒழிய தூரத்தி லிருந்து கொண்டு பத்திரிகைகளை மேல் வாரியாகப் பார்த்துக்கொண்டு குற்றம் சொல்லப் புறப்படுகின்றவர்களுக்கு அவ்வளவு நன்றாய் உண்மை விளங்கி விட முடியாதென்றே சொல்லுவோம். தவிர, கடைசியாக ஒன்று சொல்லி இதை முடிக்கின்றோம்.

அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு
இனி சமீப காலத்திற்குள், அதாவது கால் நூற்றாண்டு களுக்குப் பின், இப்போது இந்துக்களாயிருக்கின்றவர்கள், கண்டிப்பாய் இந்துக்களாக இருக்க முடியவே முடியாதென் பதை ஒவ்வொரு வரும் மனதில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் சூழ்ச்சிக்காரர்களும் சோம் பேறிகளும் இதை ஒப்புக் கொள்ளாமல் வெறும் வாய் வேதாந்தம் பேசக் கூடும். அதாவது புத்தரால் அழிக்க முடியாத இந்துமதம், மகமதியரால் அழிக்க முடியாத இந்து மதம், வெள்ளைக்காரர்களால் அழிக்க முடியாத இந்துமதம், எத்தனையோ ஆயிரம் வருடங்களாக எத்தனையோ ஆபத்துகளுக்கு தப்பி வந்த இந்துமதம் இனிதானா அழியப் போகின்றது? என்று பஞ்சகச்சத்தையும், உச்சிக்குடுமியையும், தொந்தி வயிற்றையும் கொண்ட ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும் சோம்பேறிகள், கால் மேல் கால் போட்டுக் கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டு, பேசலாம்! ஆனால் அதில் சிறிதும் உண்மை இருக்க முடியாது.

ஏனெனில் அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு; என்னவென்றால் அப்போதைய சவுகரியம் வேறு, இப் போதைய சவுகரியம்வேறு என்பதையும், அது மூடநம்பிக் கைக் காலம், இது அறிவு ஆராய்ச்சிக்காலம் என்பதையும் கவனித்தால் விளங்கும். அவ்வளவுக்குக் கூட நாம் போக வேண்டியதில்லை. நம்மில் அநேகர் இன்றைக்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன் 70, 50, 20 ஆண்டுகளாக என்ன மனப் பான்மையில் இருந்தோம்! படிப்படியாக 5,6 ஆண்டிற்குள் இன்றைக்கு என்ன மனப்பான்மையில் இருக்கின்றோம்? இந்த விகிதாச்சாரத்தை இன்னும் ஒரு இருபத்தைந்து வயதுக்குப் பின் வட்டியுடன் வட்டிக்கு வட்டியுடன் சேர்த்துப் பங்கிட்டுக் கொடுத்தால் என்ன பலன் ஏற்படும்? என்பதை யோசித்துப் பாருங்கள்! ஆகவே மதத்தை நேர்முகமாகக் கட்டிக் கொண்டழுதாலும், மறைமுகமாகக் கட்டிக் கொண்ட ழுதாலும், விளையும் பலன் ஒன்றேயாகும். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இதன் பின்னால் ஏற்படப் போகும் லாபத்தைப் பார்க்கச் சம்பவம் வாய்ந்தவர்கள் தாங்களுமே முயற்சி செய்ததற்கு வருந்துவார்கள் என்றே நம்புகிறோம்!

– ‘குடிஅரசு’ – தலையங்கம் – 03-11-1929