செவ்வாய், 27 ஜனவரி, 2026

கதவை சாத்திக்கொள் என்றால் ...

கதவை சாத்திக்கொள் என்றால் ...

-  தந்தை பெரியார்.

ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்கள் 6 கோடியாயிற்றே, இவர்களுக்கு மதம் வேண்டாமாவென்றும் கேட்டார். இவர்கள் வாழ்விற்கும். முன்னேற்றத்திற்கும், சுதந்திரத்திற்கும் மதம் அவசியமானால் இவர்கள் ' இந்துக்களல்லாதவர்கள்'

என்ற மதத்தை வைத்துக் கொள்ளட்டுமென்று சொல்லுகிறேன். இது எவ்வாறு பொருந்துமென்றும் கேட்கலாம். தற்போது அரசியல்துறையில் கொடுமைகளை ஒழித்துச் சுதந்திரம் பெறுவதற்கு பார்ப்பனரல்லாதார் என்ற பெயருடன் பெரிய சமூகம் வேலை செய்து பல நன்மைகளைப் பெறவில்லையாவென்றுதான் கேட்கிறேன். அவ்வாறிருக்க, சமுதாயக் கொடுமைகளை ஒழித்துப் பரிகாரம் தேடுவதற்கும், சுதந்திரமும் முன்னேற்றமுமடைவதற்கும் மதம் அவசியமெனத் தோன்றினால், அப்போது "இந்துக்களல்லாதவர்கள்" என்ற பெயர் வைத்துக் கொள்வதும் முற்றும் பொருத்தம்தான் என்றும், அன்றியும், சட்டசபைக்கு தேர்தல்களில் நின்று சட்டசபை மெம்பர்களான சீனிவாச அய்யங்கார்களும், வருணாசிரம ஆச்சாரிகளும், வைதீக இந்துக்களும், மகமதியர் அல்லாத தொகுதியின் பெயரால் நின்று சட்டசபைகளுக்குள் சென்றார்களேயன்றி, மற்றபடி முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் முதலானவர்களைப் போல் சட்டசபைக்குள் செல்லவில்லை என்பதையும் முக்கியமாய் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். 


இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தகைய சுதந்திரமுமில்லாதிருப்பதைவிட 

இந்துக்களல்லாதவராக கோயிலுக்குள் போகும் உரிமையும், குளத்தில் குளிக்கும் சுதந்திரமும் இருப்பது எவ்வளவோ சொல்லுவேன்.(கரகோஷம்), நான் சாவதற்குச் சில நிமிஷமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுக்களை ஒழிக்கப் போராடி, சாகுந்தருணத்தில் முஸ்லீமாகத்தான் சாவேன். (கரகோஷம்)


ஏனென்றால், நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுக்களால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிளீடுபடாமலுமிருக்கச் செய்யவும்தான், நான் அவ்வாது செய்ய தீர்மானித்திருக்கின்றேன். (கரகோஷம்).


நான் செத்த பிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பான் கலைக்கழுவிச் சாக்கடைத் தண்ணீரைக் குடிக்காமலிருக்கச் செய்ய வேண்டுமென்பதற்காகவும் தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன். (பெருத்த கரகோஷம்), 


சுமார் 20 வருஷங்களுக்கு முன், வெள்னைக் காரர்கள் தீண்டப்படாதார், அவர்களைத் தொட்டால் குளிக்கவேண்டுமென்ற ஒரு ஜாதியார் இன்று அவர்களைப் போல பிள்ளைகளைப் பெற்றால் போதும் என்கிறார்கள். (பெருத்த நகைப்பு) மதம், புராணம். முதலிய புரட்டுகளுக்கு ஆளாகி முட்டாள்தனத்திலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்திருப்பவர் யார் என்றால் இந்துக்கள்தான். என்று சொல்ல வேண்டும். அதிலும் இந்த நாட்டில் இழிவு படுத்தப்படும் மக்கள் யாரென்றால் நாம்தான். பிற மதங்களில் பலர் பாராட்டத்தக்க சீர்த்திருத்தங்களேற்பட்டு அவர்கள் நாளுக்குநாள் முன்னேறி இருக்கின்றனர். கிறிஸ்து மதத்தில் அவர்கள் கிறிஸ்துவைத் தூக்கிப் போட்டுவிட்டு சுதந்திரத்திற்கு வழியான விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். மதத்தையும் கடவுளையும் நம்பியிருந்தது போதுமென்று அவர்கள் சுயமுயற்சியிலும் ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்பதனால்தான் ஆகாச தந்திகளையும், இறந்தவர்களையும் எழுப்பி ஆறு மணிநேரம் நடமாடவைப்பதுமான பல அற்புதங்களைக் கண்டு பிடித்து வருகிறார்கள். அவர்கள் தற்போது கடவுள் செயலாகிய மனித சிருஷ்டியையும் செய்யத்தக்க வல்லமையுடையவர்களாயிருப் பது அவர்களுக்கிருந்த மத. புராண, மூடக்கொள்கைகளை ஒழித்து ஆராய்ச்சித் துறையிலிறங்கியதனாலல்லவா? (கரகோஷம்.)


அதுபோலவே, மகமதியர்களும் இந்துக்களை விட பல,வகையிலும்

மேலானவர்களாகத் தானிருக்கின்றார்கள். முஸ்லீம்களும் ஜாதி வித்தியாசமும் மனிதனுக்குள் மனிதன் உயர்வு தாழ்வு என்ற கேவல உணர்ச்சியும் காணப்படவில்லை. ஆலயத்தில் அரசனாயினும் சாதாரண மனிதனாயினும் சமத்துவமாகத்தானிருந்து தொழுகின்றார்கள். அவனுடைய மதம் அவனுக்குத் தைரியத்தையும் வீரத்தையும் கொடுப்பதாயிருக்கின்றது. தென்னாட்டைக் குறித்தமட்டில் மலையாளத்தில்தான் ஜாதிக் கொடுமை சகிக்க முடியாததாயிருக்கின்றது. அங்கு மற்ற உயர்ந்த வகுப்பாரிருக்குமிடத்திற்கு அரைமைல் தூரத்திற்கு அப்பால்தான் தாழ்ந்த வகுப்பார் எனப்படுவோரும். தீண்டாதாரும் இருக்கவேண்டும். அவர்களுக்குச் சர்க்கார் ரஸ்தாவில் நடக்கும் சுதந்திரமுமில்லை. அவர்கள் கழனிகளில் விழுந்துதான் போகவேண்டும். மலையாளத்தில் உள்ள 40. லட்சம் ஜனங்களில் 20 லட்சம் பேர் வேறு மதத்தினராயிருக்கின்றனர். மற்ற 20 லட்சத்தில் குறைந்தது 13 லட்சம் தாழ்த்தப்பட்ட வகுப்பார்தான். அங்கு ஆறு ஏழு லட்சம் பேர் இருந்து கொண்டு, தங்களை விட இரு மடங்கு ஜனத்தொகையுள்ள சமூகத்திற்கு மதம், புராணம், பழக்க வழக்கமென்பதன் பெயரால் செய்து வரும் கொடுமைகளுக்கு எல்லையில்லை. 


திருவாங்கூரில் இந்துக்களைவிட அதிகமாய்ப் படித்தவர்கள். கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரிமார்கள்

ஜாதிமதக் கொடுமைகளுக்குட்பட்டு துன்பமடைந்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆங்கு கிறிஸ்தவர்களாக்கி

கல்வியளித்து விசேஷ, முன்னேற்றமடையச் செய்து விட்டனர். அவர்கள் போல இன்றைக்கும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும், இன்றைக்கும் இந்துக்களென்று நினைத்துக் கொண்டுள்ளவர்களுமான ஏழை மக்களோ மதத்தின் பெயராலும் இன்னும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கொண்டு ரஸ்தாக்களில் வருவதற்கும் உரிமையின்றி மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்பட்டு வருகின்றனர். 


திருவாங்கூரில் இந்து ராஜ்யமிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஆங்கு பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள்தான். அதற்குக் காரணம் ஜாதிக் கொடுமையும், சமயப் புரட்டுகளும்தான். இன்னும் கொஞ்ச காலத்தில் திருவாங்கூரும் கிறிஸ்தவ ராஜ்யமாகி விடுமென்பது திண்ணம்.


 துருக்கியில் மதத்தையும் புராணத்தையும் மூட்டைக் சுட்டி கடலில் போட்டுவிட்ட பின் தற்போது எவ்வளவு முன்னேற்றமேற்பட்டிருக்கிற தென்பதைச் சொல்லவேண்டியதில்லை. மதத்தை நம்பி 'கிலாபத்'பாட்டுப் பாடிக் கொண்டிருந்தபோது வெள்ளைக்காரன் துப்பாக்கி முனைக்குப் பயந்திருந்த துருக்கி தற்போது


வெள்ளையரையும் நடுங்கள் செய்யும் நிலைமைக்கு வந்திருப்பதன் காரணமென்ன? இங்கு முஸ்லீம்கள் இன்னும் மதபித்து பிடித்து ஒன்றரை அங்குல தாடி வேண்டுமா அல்லது இரண்டங்குலமாவென்று அளவு பார்த்துத் தாடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கும்போது. துருக்கியில் முஸ்லீம்கள் மழுங்கச் சிரைத்து விடவேண்டுமென்றும், இல்லாவிட்டால் தண்டிக்கப்படுமென்றும் சொல்லப்படுகின்றது.


 இங்கு எந்த வர்ண லுங்கி கட்டுவது, எப்படி குல்லாய் போடுவது என்று விவாதித்துக் கொண்டிருந்தாலும் ஆங்கு வெள்ளைக்காரர்களைப்போல உடை தரிக்கா விட்டால் அபராதம் விதிக்கப்படுகின்றது. இங்கு கோஷா முறையின் கொடுமை மிகுதிப்பட்டு திரையை கனமாகப் போடப்படும்போது துருக்கியில் தங்க விக்கிரகம் போன்ற பெண்களைத் தனித்து அய்ரோப்பாவுக்குப் படிக்க அனுப்பிவருகிறார்கள். (கரகோஷம்.)


சுயராஜியம் பேச்சு வரும்போது மட்டும் ஒற்றுமை, சமத்துவம் முதலிய எல்லாம் வருகிறது. ஆனால், அது பெரும் பித்தலாட்டமென்பது தெருவில் நடக்க உரிமையிருக்க வேண்டுமென்னும்போது வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. மிருகங்களிலும் மிக இழிவான ஜந்துக்களுக்கு இருக்கும் உரிமையுமின்றி மனிதர்களும் ஒரு சாராருக்கு அம்மிருகங்களைப் போல தெருக்களில் போகும் உரிமையிருக்கக் கூடாதாவென்றால், மத விஷயத்தில் பிரவேசிப்பதா எனும் பித்தலாட்டத்தை என்ன அயோக்கியந்தனமென்று சொல்லுவது! பித்தலாட்டமான மதத்தில் சிக்கி இருப்பதனால் பல இழிவுக்கும். துன்பத்திற்கும் கொடுமைக்கும் முட்டுவதைவிட அம்மதத்தை ஒழிப்பதே மேலாகும். மதத்தை அழிக்க சுயமரியாதை இயக்கம் வந்ததாவென்று சிலர் கேட்கலாம். ஜாதிக் கொடுமைகளையும் விபரீத வித்தியாசங்களையும் நிலை நாட்டுவதாயிருந்தால், அம்மதத்தை ஒழிக்கத்தான் சுயமரியாதை இயக்கமிருக்கிறதென்றுதான் சொல்லுவேன். (கரகோஷம்.)


 உண்மையில் சுயமரியாதை உங்களுக்கிருக்குமானால், உங்கள் முன்னேற்றத்திற்கும், சுதந்திரத்திற்கும் தடையாயிருக்கும் மதக்கட்டுப்பாடுகளையும். சுவாமி, பூதமெதனையும் உடைத்தெறியப்பின்வாங்க மாட்டீர்களென்பது திண்ணம் (கரகோஷம்)


மிருகத்திலும் கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நீங்களும் மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப்போல சுதந்திரமும் சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்த்தெறியத்தயங்கக்கூடாது. உங்கள் சுதந்திரத்திற்கு எது தடையாயிருந்தாலும் அதனை ஒழிக்க முற்படுவீர்களானால், தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில் தானாய்ப் பறந்துவிடுமென்பது திண்ணம். (கரகோஷம்)


வடநாட்டில் மதம் ஒழிந்தாலும் மற்றென்ன ஒழிந்தாலும் ஒழியட்டும் சுதந்திரம்தான் பெரிதெனப் போராட முற்பட்டதனால்தான் நேற்றுகூட ஒரு ஆலயத்தில் சகல வகுப்பாரும் தாராளமாகச் சென்று கடவுளை வழிபடுவதற்குச் கதவுகள் திறந்துவிடப்பட்டன. உங்களுக்குக் கோயிலுக்குள் செல்லும் உரிமையும், குணங்களில் குளிக்கும் உரிமையும் கிடைத்துவிட்டால், அதனுடன் நீங்கள் திருப்தியடைத்துவிடவும் முடியாது. நீங்கள் சுதந்திரமடைய விரும்புவதுபோலவே, உங்கள் பெண்களுக்கும் சுதந்திரம்

அளிக்க நீங்கள் தயாராக முன்வரவேண்டும். அப்போதுதான், உங்களுன் உண்மையான முன்னேற்றமேற்படும். உங்கள் பெண்களுள் மறுமணத்தை விரும்பும் விதவைகளுக்கெல்லாம் மறுமணம் செய்யவேண்டும்.


இவ்வழக்கும் உங்களுள் இல்லாதிருக்கவில்லை. அறுத்துக்கட்டும் ஜாதி, இழிந்த ஜாதி என்று சொல்லப்பட்ட போதிலும், அறுத்துக்

கட்டுவதால் அறுத்துக் கட்டாத உயர்ந்த ஜாதியில் நடக்கும் பல கேவலமான சிசுக்கொலைகளும், கழுத்தைத் திருகி கள்ளியில் போடுவதான கொடுமைகளில்லாதிருப்பது எவ்வளவோ உசிதமல்லவா? (கரகோஷம்)


ஒழுக்கத்திலும், படிப்பிலும் முன்னேற்றமடைந்திருந்தால் உங்கள் பெண்களை நாங்கள் பெற்றுக்கொண்டு, குணமும் படிப்பும் ஒழுக்கமும் உள்ள பிள்ளைகளுக்கு எங்கள் பெண்களைக் கொடுக்கவும் பின்வாங்கமாட்டோம். இத்தகைய கலப்பு மணத்தின் மூலமாகத்தான் சாதி வித்தியாசப் பேய் சீக்கிரத்தில் ஒழியும் (கரகோஷம்).


ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லா கட்டுப்பாடுகளுமிருக்கவேண்டு மென்ற மூடஅறிவீனமான கொள்கைகளிருக்கும். வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டு கைகழுவினதும் கதவைச்' சாத்திக்கொள்ளென்று

கணவன் வெளியே சென்றால், சாப்பிடும்போதே மோர் விடுவதற்கு வேலைககைாரியைக் கூப்பிட்டு 'அய்யாவுக்கு மோர்விடு, நான் போய்விட்டு வருகிறேன்' என்று மனைவி சொல்லிலிட்டு வெளியேறினால்தான் ஆண்களுக்கு அறிவு வரும். (நகைப்பும், கரகோஷமும்)


ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண்களுக்குத்தான் பதிவிரதத்தன்மை அவசியமென்ற பல அர்த்தமற்ற கொள்கைகளினால்தான் ஆண்களுக்குள் ஒழுங்கீனங்கள். நாளுக்குநாள் அதிகரிக்கவும் இடமேற்படுகின்றது. மதத்தின் பெயராலும், மற்றதன் பெயராலும் செய்யப்படும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் ஒழிப்பதில் அம்மதங்களையே ஒழிக்கவேண்டுவதவசியமானா லும், அதற்கும் தயங்கக்கூடாது. மக்கள் சுதந்திரமடைந்து சுகமாய் வாழ்வதற்கு என்னவென்று எனக்குத் தோன்றியதைப் பிறர் புகழ்ச்சிக்கும். இகழ்ச்சிக்கும் அஞ்சாது உண்மையை எடுத்துச் சொன்னேன்.


உணர்ச்சிக்குட்பட்டதைச் சொன்னேனே தவிர, இவர் அவருக்குச் சொன்னார்: அவர் எனக்குச் சொன்னார்; நீங்கள் அதன்படி நடக்காவிட்டால் பாவம், நரகத்திற்குப் போவீர்களென்ற கட்டுப்பாடு ஒன்றும் சொல்லவில்லை. நாள் சொன்னவற்றை நீங்கள் ஆராய்ந்து, சரி எனப்படுவதைக் கொண்டு, சரியில்லாததை ஒதுக்கி என்மீது அனுதாபங் காட்டும்படிதான் கேட்டுக் கொள்கிறேன்.


(3-8-1929 சென்னை இராயப்புரத்தில் நடந்த கண்ணப்பர் வாசகசாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 3-8-1929 'திராவிடன்" நாளிதழில் வெளியானது.)


- உண்மை இதழ், 16.31.12.1989


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக