இந்து மதம் ஒழிக!
- தந்தை பெரியார்-

கேள்வி: சாதியை ஒழிக்க நீங்கள் என்ன வழி சொல்லுகிறிர்கள்?
பதில்: பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். சட்ட வரம்புக்கு உட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது.
இவற்றில் நீங்கள் எந்த வழியைப் பின்பற்ற தயாராக இருக்கிறீர்கள் என்பதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை தாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சி நடத்திக்கொண்டு வருகிறோம். நீங்கள் தம்முடைய கீழ்சாதித் தன்மை நீங்கவேண்டுமானால் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்றவேண்டும்.
1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் - பிற்படுத்தப்பட்ட கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது
2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது.
3. இந்துமதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது.
4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது.
5. உச்சிக் குடுமியை 'சோட்டி' யாரும் வைத்துக்கொள்ளக் கூடாது.
6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது.
7. எந்தவிதமமான சடங்குகள் நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது.
8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது.
9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச்சாலை சிற்றுண்டிச் சாலைகளுக்கு போகக்கூடாது'
கேள்வி: இந்துமதத்தை மதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டீர்களே; அதுசரி ஆனால், கலியாணம் முதலிய சடங்குகளுக்கு எப்படிப் பார்ப்பானை அழைக்காமலிருப்பது' உங்கள் பக்கத்தில் எவ்வாறு நடத்துகிறீர்கள்?
பதில்: எங்கள் பக்கத்தில் நாங்கள் எந்தவிதமான நிகழ்ச்சி களுக்கும் சடங்குளுக்கும் பார்ப்பானை அழைப்பதேயில்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் என்னன அழைப்பார்கள்: அல்லது எங்கள் கட்சித் தோழர்களை அழைப்பார்கள்: அல்லது அந்தந்த வகுப்பு பெரியவர்களை அழைப்பார்கள்; அவர் தலைமை தாங்கி மணமக்களின் சம்மதம் கொண்ட உறுதிமொழியைப் படிப்பார்கள், மாலை மாற்றிக் கொள்ளுவார்கள். சில இடங்களில் தாலியும் அணிவிப்பதுண்டு. அதுபோல நீங்களும் செய்யலாம். அல்லது உங்கள் குடும்பங்களிலுள்ள வயதான பெரியவர்களை வைத்து நடத்தலாமே!
கேள்வி: 'ரிபப்ளிகன் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா? எங்களுக்கு உதவி செய்ய முடியுமா?
பதில்: எந்த வகையான உதவியை நீங்கள் சாதியொழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ.எங்கள் மாகாணத்திலுள்ள எங்களால் முடித்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு சட்டசபையயும், பார்லி மெண்ட்டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.
கேள்வி: நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்தமதத்தையும் புறக்கணிக்கும் படியான பிரச்சாரம் செய்தால் வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?
பதில்: ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு: 10 வருடகாலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாத பிரச்சாரத்தில் மூலம் நாம் அந்த நிலைாயை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு. அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய முடியும்
கேள்வி: சாதியையொழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே; இது அரசியல் பிரச்சினையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையை தீர்க்கமுடியும்.
பதில்: நல்ல கேள்வி முதலாவது: அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன; அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்யவேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும் பாபாசாகேப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகி விடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.
இரண்டாவது இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று; அரசியல் சட்டத்தில் மாற்றமுடியாத வகையில் சாதிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்கக்கூடியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்னும் செய்யமுடியாது. சிலர் சொல்லுவார்கள். ஒன்னும் செய்ய முடியாவிட்டாலுங்கூட அங்கு போனால், 'இதை எடுத்துச் சொல்லலாம்' என்று, அதற்கு அங்கு போகவேண்டும் என்பது அவசியமில்லையே' பொதுக் கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்லுகிறது.
கேள்வி: நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே. கைப்பற்ற முடியாதா?
பதில்: அது முதுகில் மூன்றாவது கை முளைத்து, அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.
கேள்வி: நாமும் எலக்ஷனுக்கு நிற்கலாமே; எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறதே!
பதில்: ஏஎலெக்க்ஷனில் நின்று ஜெயித்து மெஜாரிட்டியாகி அரசாங்கத்தைப் பிடிப்பது என்பது நம்மால் ஆகாத காரியம், ஏனென்றால் பெரும்பாலான ஓட்டர்கள் முட்டாள்கள்; எதற்காக ஓட்டுப் போடுவது என்பது தெரியாதவர்கள், பெரும்பாலான அபேட்சகர்கள் பணம் செலவு செய்யாமல் எலெக்க்ஷனில் நின்று ஜெயிக்க முடியாது. ஒரு இடத்திற்கு நின்று போட்டி போட்டு ஜெயிக்க வேண்டுமென்றால் 10,000 20,000 30.000 ரூபாய்-சில சமயத்தில் இலட்ச ரூபாய்கூட செய்வு செய்யவேண்டும். நீங்களோ ஒற்றைக் காசும் கையிலில்லாத (Penniless People) மக்கள்; எப்படிச் செல்வு செய்ய முடியும்' பார்லிமெண்ட்டுக்குப் போகவேண்டும் மெஜாரிட்டி அடைய வேண்டுமென்றால் தலைக்கு 300,500- தேவை அதற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகும்? இந்த வசதி இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் இருக்கிறது. பெரிய முதலாளிகள், டாடா, பிர்லா, டால்மியா, முந்திரா போன்றவர்களிடம் சென்று கோடி கோடியாகப் பணம் வருவித்து பணத்தைத் தண்ணீர் பட்டபாடாகச் செலவு செய்து வெற்றியடைகிறார்கள்.
(விடுதலை - 16.2.1959)
விடுதலை - 17.8.1991
இந்து மதம் ஒழிக! (2)
-தந்தை பெரியார்-
அவர்களும் கேட்டவுடன் சர்க்கார் (ஆளுகிற) கட்சியாக இருப்பதை அனுசரித்துத் தங்களது சுயநலத்தை எண்ணி வாரி வாரிக் கொடுக்கிறார்கள்; அதுபோல் நம்மாலாகுமா?
அப்படியே மீறி காங்கிரசைத் தோற்கடித்து கேரளத்தில் (மலை யாளிகள் ராஜ்யம்) கம்யூனிஸ்ட்காரர்கள் ஆளுகிறார்கள் என்றால் அது பெயரளவிற்குத்தானே கம்யூனிஸ்ட் ஆட்சி? மீதியெல்லாம் டெல்லி அரசாங்கம் உத்தரவிடுவது படிதானே தடக்கிறது' ஒரு உதாரணம் - அந்த கேரள முதன்மந்திரி ஒரு கலப்புமண சங்கத்தில் பேசும்போது சொன்னார்; 'நான் எனது ஆட்சியில் சாதியை ஒழிக்கப் பாடுபடுவேன், தீவிரமாகப் பாடுபட்டுச் சாதியை ஒழிக்க வெண்டும்' என்பதாக, உடனே இந்து பத்திரிகையில் ஒரு பார்ப்பனர், ஆசிரியருக்கு கடிதங்கள் என்ற பகுதியில் எழுதினார், 'அரசியல் சட்டத்தில் சாதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது; அது மூலா தார உரிமை, அதையொழிக்க இந்த அரசாங்கத்தால் முடியாது; தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் நம்பூதிரிபாத் பேசலாமேயொழிய ஆட்சியையோ, அதிகாரத்தையோ இதற்குப் பயன்படுத்த உங்களால் முடியாது' என்று எழுதினார். அதற்கு நப்பூதிரிபாத் பதில் சொல்லவே இல்லையே!
கேள்வி: அதுபோல பல மாகாணங்களிலும் எதிர்த்து நாம் அரசாங்கம் அமைக்க முடியாதா?
பதில்: நான் ஒன்று உதாரணத்திற்குச் சொல்லுகிறேன்; சென்ற 1952 ஆம் வருட எலெக்க்ஷனில் எங்கள் நாட்டில் நான் முயற்சி செய்து காங்கிரசைத் தோற்கடித்தேன்; காங்கிரஸ் மைனாரிட்டியாக ஆயிற்று. காங்கிரஸ் அல்லாதவர் (மொத்தம் 500 பேரில்) சுமார் 300 பேர் இருந்தும் அவர்களால் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடிய வில்லையே!
திரு.இராசகோபாலளச்சாரியார் முதன் மந்திரியாக வந்தார். நாமினேஷன் மூலம் அப்போது அவருக்கு 200 மெம்பர்கள் தாம் இருந்தார்கள். வந்தவுடன் எதிரிகளில் சிலரை விலைக்கு வாங்கித் தன் ஆட்சியை மெஜாரிட்டியாக ஆக்கிக்கொண்டார். எப்படிப் பலரை எதிர்க் கட்சியிலிருந்து விலைக்கு வாங்கிக்கொண்டார்? தனக்கு நிலைமை வசதியானதும் தன்னிஷ்டப்படி, மனுதர்ம முறைப்படி காரியம் செய்ய ஆரம்பித்துப் பதவிகளையும் உத்தியோ கங்களையும் பார்ப்பனர்களுக்குக் கொடுத்தது மட்டுமின்றி. 'அவனவன், சாதித் தொழிலைத்தான் செய்யவேண்டும்" என்ற ஒரு வருணா சிரம தர்ம கல்வித் திட்டத்தையும் புகுத்தினார். நான் 30 நாள் தவணை கொடுத்து 'நீங்கள் அதை ஒழிக்கா விட்டால் பலாத் காரத்தில் இறங்குவோம்' என்று தெரிவித்த பிறகுதான், அவர் பதவியை விட்டுப்போனார். சட்டசபையால் அவரையொன்றும் அசைக்க முடியலில்லை. பிறகு காமராசர் அந்த இடத்திற்கு வந்து சாதிக் கல்வித்திட்டத்தை ஒழித்தார். அதனால்தான் அவர் காங் கிரசுக்காரராக இருந்தபோதிலும் அவரை ஆதரிக்கிறோம்.
கேள்வி: எப்படியும் நாமிந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித் தானே ஆகவேண்டும்!
பதில்: அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம் சாதியை யொழிக்க விருப்பாத - சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்க விரும்ப வில்லை. தனியே பிரிந்து செல்லுகிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால் நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக் காததால் விலகிவிடுகிறோம்' என்று, அதற்காகத்தான், 'சுதந்திரத் தமிழ் நாடு கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சிணையல்ல நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும் உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்றுவிடலாமே! நீங்களும் இந்த கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்துவிடலாம். அதற்குத்தான் பட எரிப்பு போராட்டம் நடத்தப் போகிறோம்.
கேள்வி: ஏன்இந்தியா பூராவும் அப்படி உணர்ச்சியை உண்டாக்கமுடியாதா?
பதில்: அதெப்படி தமிழ் நாட்டில் அந்த உணர்ச்சி பலமாக இருக்கிறது. இந்தியா பூராவும் பரவவேணடுமானால் அது ரொம்பவும் கஷ்டமான ஒன்றாகும். மேலும் சர்க்காரும் நம்மை அடக்குகிறார்கள். நான் போனமாதம் பெங்களூரில் ஒரு மாநாட்டிற்கு - இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது இதைத் தான் நான் அங்கு சொன்னேன். 'நீங்கள் இந்த ஆட்சியிலிருந்தே விலகிக்கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை' என்பதாகக் குறிப்பிட்டேன். அங்கு கூடியிருந்த பாதி பேர் அதைக் கைதட்டி வரவேற்றார்கள். பாதிப்பேர் அந்த உணர்ச்சியைப் பெறவில்லை.
கேள்வி: நீங்கள் கேட்டும் சுதந்திரத் தமிழ் நாட்டில் சிலோனையும் சேர்த்தா கேட்கிறீர்கள்?
பதில்: இல்லை நான் அப்படிச் சொல்லலில்லை. சுதந்திரத் தமிழ்நாடு இலட்சியத்திற்குப் பாடுபடும் 'நாம் தமிழர்' இயக்கத்தார் ஆரம்பத்தில் அப்படிச் சொன்னார்கள்; அவர்களிடமே அதை எதிர்த்து சொன்னேன்"அது வேறு ஒரு சர்க்கார், அதுபற்றி நமக்குச் கவலையில்லை' என்பதாக. அது தான் எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்றாகும்.
கேள்வி: நீங்கள் புத்த மார்க்கத்தில் சேரச்சொல்லுகிறீர்களோ?
பதில்: ஆம்; நேற்றே பொதுக்கூட்டத்தில் சொன்னேன். இன்னொரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் அம்பேத்கார் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு பாரத்தை நீட்டி பொடு கையெழுத்தை நாமிருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன். 'நீங்கள் சேருங்கள்; நான் மாறாமல் இருந்து' 'இந்து' என்பவனாகவே இருந்தால்; இந்து மத வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்' என்றேன். மேலும் இப்போது செய்கிற வேலையைத் தொடர்ந்து செய்ய வசதியாக இருக்கும்.
நான் புத்த மார்க்கத்தில் சேர்ததுவிட்டால், இப்போது கடவுள்கள் - உருவச் சிலைகள் முதலியவற்றை உடைத்துக் கிளர்ச்சி செய்தது போல் செய்யமுடியாததாகிவிடும் என்றேன்.
கேள்வி: ஒரு மனிதனுக்கு மதம் தேவையில்லையா?
பதில்: புத்த மார்க்கம் ஒரு கொள்கையே தவிர, அது ஒரு மதம் கிடையாது.
கேள்வி: புத்த மதம் அகிம்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறதே. அதுபற்றித் தங்கள் கருத்தென்ன?
பதில்: அது புத்திக்கு முக்கியம் தந்த ஒரு மார்க்கம். அவ்வளவு தான். அகிம்சை என்பது புத்த மார்க்கத்தின் கொள்கை (Principles); அது புத்தருடைய அபிப்பிராயமாய் இருக்கலாம் என்பது தான் என் கருத்து. ஆகவே நாம் புத்திக்கேற்ப நடக்கலாம், அதுதான் புத்த மார்க்கம் என்பது.
கேள்வி: நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?
பதில்: நாம். இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காக கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் 'வட்டச் சிவப்பு' இருப்பது - அந்த இழிவிலிருந்து நாம் நாளா வட்டத்தில் மீண்டுவருகிறோம் என்பதைக் காட்டுகிறது.
விடுதலை- (16. 02.1958)
விடுதலை- 18. 08.1991
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக