செவ்வாய், 3 நவம்பர், 2026

சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவு

மதமும், முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்
 - தந்தை பெரியார்

சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் சாஸ்திரங்களையும், சடங்கு களையும் ஒருவாறு கண்டித்ததோடு கூட அரசியலில் பார்ப்பனர்களைப் பலமாக எதிர்த்தும் போராடியது என்பது யாவரும் அறிந்ததாகும். இக்கார ணத்தால் பார்ப்பனர்களிடம் உள்ள உத் யோகங்களைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கமுடைய பார்ப்பனரல்லாதார்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பலமாக ஆதரித்து வந்தனர். பிறகு சுயமரியாதை இயக்கம் உண்மையான உருவத்தைக் காட்ட ஆரம்பித்தது. அதாவது மதத் தையும், சடங்குகளையும், கடவுளையும் கூட அடியோடு அழிக்க வேண்டு மென்னும் பிரச்சாரத்தில் இறங்கியது. இதனால் முதலில் ஆதரித்த சிலர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிக் கொள்ளாமலும், அதில் கலந்துகொள்ளாமலும், நடுத் தெருவில் நின்றனர். இதன் பின் சில மாதங்களாக, ஈரோடு வேலைத்திட்டத் தீர்மானங் களை மேற்கொண்டு, சமதர்மப் பிரசாரம் செய்து வந்தது. இதைக் கண்டும் அநே கர் பயந்து எங்கே சமதர்மப் பிரசாரத் தினால் தங்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்.
சிலர் சுயமரியாதை இயக்கம் முன்பிருந்தது போலவே அரசியலில் ஈடுபடாமல் பகுத்தறிவுப் பிரசாரம் மாத்திரம் செய்து கொண்டிருக்க வேண் டுமென அபிப்பிராயப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர். சிலர், ஈரோட்டுத் தீர்மா னங்களை ஒப்புக்கொண்டு, அரசியலிலும் தலையிட்டு சமதர்மப் பிரசாரத்திலும் ஈடுபடவேண்டும் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் பார்ப்பனர்களை மாத்திரம் வைதுகொண்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத் தால் போதுமென நினைக்கின்றனர். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவை வெளி யிடுகிறோம்.
முதலில் சுயமரியாதைச் சமதர்ம இயக்கமானது, ஒரு வகுப்பை மாத்தி ரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு மாகாணத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு தேசத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஆனால் ஓர் அகில உலக இயக்கமாகும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இக்கொள்கையை மனத்தில் வைத்துக்கொண்டே அதன் கொள்கைகளும், சட்ட திட்டங்களும், வேலை முறையும் அமைக்கப்பட வேண்டும்.
வகுப்பு பேதங்கள் ஒழிந்து, எல்லாம் ஒன்றாகவேண்டும் என்னும் எண்ணம் எல்லா மக்கள் மனதிலும் வேரூன்றி வருகிற இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மாத்திரம் ஆபாச முறையில் கண்டிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே நமது தாழ்மையான அபிப்பிராயமாகும். பார்ப்பனருக்கும், நமக்கும் எக்காலத் திலும் பகையில்லை. பார்ப்பனீயத்திற்கும், நமக்குமே போராட்டம். பார்ப்பனீயத்தை விடாப் பிடியாகப்பிடித்திருக்கும் பார்ப் பனரல்லாதாரே அதிகம். பார்ப்பனீயம் எங்கெங்கே இருக்கின்றதோ அங்கெல் லாம் நமது போராட்டம் சென்றுதான் தீரவேண்டும். வகுப்புத் துவேஷம் என்பது ஒரு வகுப்பினர் அடிக்கும் கொள்ளைத் தொழிலை இன்னொரு வகுப்பினர் கைப்பற்றிச் செய்யும் முயற்சியேயாகும். ஆதலால் நமக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை.
சுயமரியாதை இயக்கம் இதுவரை யிலும் செய்து வந்த மத ஒழிப்பு வேலையைச் சிறிதும் தளரவிட முடியாது. நமது கொள்கைகளுக்கெல்லாம் அடிப் படை இதுவேயாகும். இப்பொழுது மதத்திற்கு நெருக்கடி நேர்ந்திருக்கும் விசயத்தை மதவாதிகளும், முதலாளி வர்க்கத்தினரும் உணர்ந்து விழித்திருக் கின்றனர். இருவரும் கூடி மீண்டும் பாமர மக்களின் மனதில் மதவுணர்ச்சியை (அடிமை மூடத்தனத்தை)ப் புகுத்த பலமான முயற்சிகளைச் செய்து வருகின் றனர். தேசிய இயக்கங்களும் (முதலாளி இயக்கங்கள்) தேசியவாதிகளும் பலமான மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின் றனர். இதற்கு காந்தி அவர்களின் ஹரிஜன இயக்கமும், இந்து மகாசபைப் பிரச்சாரமும் போதிய சான்றாகும். ஆகை யால், நாம் முன்னிலும் அதிதீவிரமாக மதமறுப்புப் பிரச்சாரத்தை விடாமல் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.
சமதர்ம திட்டத்தை மேற்கொண்டு அரசியலில் தலையிட வேண்டுவது அவ சியம் என்பது ஆலோசிக்கத் தக்கதாகும். அரசாங்கத்தின் துணையில்லாமல், சட்டங் களின் ஆதரவில்லாமல், தேச மக்களிடம் உள்ள ஊழல்களை அடி யோடு போக்கி விடவோ புதிய காரி யங்களைச் செய்வதில் தேச மக்களை ஈடுபடுத்திவிடவோ எக்காலத்திலும் இயலாது. ஆதலால் சீர் திருத்தவாதிகளுக்குத் தங்கள் சீர்திருத்தக் கொள் கைகள் செயலில் நடைபெற வேண்டு மானால் அரசாங்கத்தின் துணையும், சட்டத்தின் துணையும் அவசியமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் நமது நாட்டில் இனி அமையப் போகும் அரசாங்கம் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கமாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சுயமரியாதை இயக்கமானது நேர்முகமா கவோ, அல்லது மறைமுக மாகவோ சமதர்ம திட்டமுடைய அரசியல் கொள்கையையும் ஒப்புக்கொண்டு தீர வேண்டிய அவசியத்தை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நமது சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு யாரும் அஞ்சவேண்டிய அவசிய மில்லை. அரசாங்க சட்டத்திற்குள் அடங்கியே நமது அரசியல் இயக்கம் வேலைசெய்து வரும். பலாத்கார முறை யையும் நாம் ஒப்புக்கொள்ளுவதில்லை. இத்தகைய சமதர்ம அரசியல் திட் டத்தைக்கண்டு ஏன் பயப்படவேண்டும்?
(5) சமூகச் சீர்திருத்த வேலையையும் அதை நிறைவேற்ற அரசியலைக் கைப் பற்றும் வேலையையும் சுய மரியாதை இயக் கத்தின் திட்டமாக வைத்துக் கொண்டு இரண்டையும் செய்து வர லாமென அபிப்பிராயப்படு கின்றவர்களும் பலருளர். ஆனால் இரண்டு வேலைகளை யும் ஒரே இயக்கம் அதாவது ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் செய்ய முடியுமா? என்பது ஆழ்ந்து ஆலோசிக்கத் தக்க விஷயமாகும். தற்பொழுது சமூக சீர்திருத்த வேலையென்பது, அரசாங்க விஷயங்களில் தலை யிடாமல் ஜன சமூகத்துக்கு இடையேயுள்ள மூடப் பழக்க வழக்கங்களைப் போக்குவதும், அப்பழக்க வழக்கங்களில் வைத் துள்ள நம்பிக்கையை ஒழிப் பதும், புதிய வாழ்க்கை முறையில் பற்றுக் கொள்ளச் செய்வதும் ஆகும். இதைப் பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி வருவதே சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய வேலையாகும். இவைகளைச் சட்டத்தின் மூலம் ஜன சமூகத் தில் புகுத்த அரசாங்கத்தைக் கைப்பற்ற வேலை செய்வது அரசியல் இயக்கமாகி விடும். இவ்வளவே தான் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும், அரசியல் இயக்கத் திற்கும் வித்தியாசம் என்று கூறலாமே தவிர, வேறு காரணம் கூறுவதற்கு நமக்குத் தோன்ற வில்லை. மற்றபடி சமூகச் சீர்திருத்தம் என்பதும், அரசியல் என்பதும் ஒன்றே தவிர வேறில்லை. சமூகம்தான் அரசியல், அரசியல் தான் சமூகம். இரண்டையும் வேறுபடுத்தி பிரிக்க முடியாது. ஆயினும் இருகாரியங்களையும் ஒரே ஸ்தாபனத் தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் தற்சமயம் செய்ய முடியாதென்பது நமது கருத்து. இத்தகைய இரு நோக் கத்தையும் கொண்டு தொடங்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியின் அக்காலநிலையை நோக்குவார் இதன் உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். பிரசாரம் பண்ணும் வேலையையும் காரிய நிர்வாகம் செய்யும் வேலையையும் எப்படிச் செய்ய முடியும். சமூகச் சீர்திருத்தத்திற்கும் நாட்டில் பலமான எதிர்ப்பு இருக்கின்றது. சமதர்ம அரசியலுக்கும் நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இரண்டையும் இயக்கம் செய்து முடிப்பது என்பது சாமானியமான காரியமல்ல. இவ்விரண்டு கொள்கைகளுக்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ளுகின்ற திறமை ஓர் இயக்கத்திற்குத் தற்கால நிலையில் ஏற்பட முடியாது. சமதர்ம அரசியல்வாதிகள் அரசாங்க அதிகா ரத்தை வகிக்க வரும் காலத்தில்தான் இரண்டையும் செய்ய முடியும். அது வரையிலும் சீர்திருத்த இயக்கம் தனித்து நின்று வேலை செய்ய வேண்டுவது அவசியமல்லவா? என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு வேண்டுகிறோம்.
பொருளாதாரத் திட்டத்தையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப் பதையும் வேலை முறையாகக் கொண்ட சமதர்ம அரசியல் கட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய கட்சி தற்பொழுது நமது நாட்டில் ஒன்றுகூட இல்லை. ஜனநாய கக் கட்சியென்றும், வகுப்புவாதக் கட்சியென்றும் சொல்லிக் கொண்டி ருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் முதலாளிக் கட்சிகளே என்பது வெட்ட வெளிச்சம். இக்கட்சியின் நோக்கத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் யாராயிருப்பினும் நிற வகுப்பு, மத வேற்றுமை பாராமல் அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசிய மாகும். இந்த அரசியல் கட்சி, சுயமரியாதை இயக்கத் தினால் பிரசாரம் பண்ணப்படும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் ஆதர வளித்து வர வேண்டுமென் பதையும் கட்சிக் கொள்கையில் முக்கியமான ஒன் றாகக் கொள்ள வேண்டும். இதற் கென்று ஒரு தனி ஸ்தாபனம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களைக் கொண்ட, அரசியல் கலப்பற்ற, தனி ஸ்தாபனம் ஒன்று வேண்டுவது அவசிய மாகும். இந்த ஸ்தாபனத்தில் அரசியல் நிறம் வகுப்பு முதலிய வேற்றுமை பாராட்டாமல் மதமற்றவர்கள் எல்லோ ரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சமதர்ம அரசியல் கட்சியாரை எப்பொழுதும் ஆதரித்து நிற்க வேண்டும். தற்பொழுது சுயமரியாதை இயக்கம் செய்து வரும் சமூக வேலையைச் செய்து வர வேண்டும்.
மேற்கூறிய இரு இயக்க ஸ்தாப னங்களின் உறுப்பினர்கள் அந்த ஸ்தா பனங்களின் கொள்கைகளுக்கு மாறு படாதவர்களாகவும், அக் கொள்கைகளை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு நடக் கின்றவர்களாகவும், அவைகளுக்காகத் தியாகஞ் செய்யப் பின் வாங்காதவர் களாகவும் இருக்க வேண்டும். மற்றபடி இயக்கப் பிரசாரத்தில் அதாவது மகா நாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். நமது பல கொள்கைகளுக்கு எதிரியாக இருந்து ஒரு கொள்கைக்குச் சாதகமா யிருப்பார்களாயின் அதைப் பொறுத்த வரையிலும் அவர்களை நம்மோடு அவரோடு ஒத்துழைப்பதிலே ஒரு தவறும் நேர்ந்துவிடாது. அதனால் இயக்கத் திற்கு லாபமே தவிர நஷ்டம் வந்துவிடாது. பிரசார நிலையில் கட்டுப்பாடு ஏற்படுத் தினால் இயக்கம் வளருவதற்கே வழி யில்லாமற் போய்விடும். நமது கொள் கைக்கு முரண்பட்டவர்களை நம்மோடு சேர்க்கக்கூடாது, நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்றால் அவர்களை எப்படி நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்யமுடியும்? ஆதலால் பிரசாரத்தின் பொருட்டு நம்மிடம் சிறிது அனுதாபம் உள்ள எவரையும் சேர்த்துக் கொள்ள மறுக்காமலிருப்பதே இயக்க வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.
மேலே கூறிய விஷயங்களைக் கவனித்துச் சுய மரியாதை இயக்கத் தையும், சமதர்ம இயக்கத்தையும் நடத்தி வந்தா லொழிய உருப்படியான வேலை எதையும் செய்துவிட முடியாது என்பதே நமது கருத்து. இன்னும் பார்ப்பனர்களை மாத்திரம் வைது கொண்டிருப்பதனால் ஒரு பயனுமில்லை. நாமறிந்தவரையில், நமது சமதர்மக் கொள்கைகளையும், சுய மரியாதை இயக்கக் கொள்கைகளையும் முழுதும் ஒப்புக்கொண்டு வேலை செய்வ தற்குத் தயாராக எல்லா வகுப்பினரில் வாலிபர்களும், அறிவுடையவர்களும், இருக்கிறார்களென்பதை நிச்சயமாகக் கூறுவோம். ஆதலால் இனி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இந்துக்கள், முஸ் லீம்கள், கிறிஸ்துவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், என்ற பிரச்சினைகள் நம்மிடம் தலைகாட்டாமல் ஒழிக்க வேண்டும்; முதலாளிக் கொடுமைகளை ஒழிப்பதையும், மதக்கொடுமைகளை ஒழிப்பதையுமே பிரச்சினையாகக் கொண்டு இப்பிரச்சினையை ஒப்புக் கொள்கின்றவர்களை எல்லாம் இயக்கத் திற்கு சேர்த்துக் கொண்டு இப் பிரச் சினைகளைத் தீர்க்க வழி கோலுவதே சிறந்ததாகும். மேற்கூறியவைகளையெல் லாம், விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவு செய்யும்படி சுயமரியாதைத் தோழர்களை வேண்டிக் கொள்கிறோம்.
- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை, (விடுதலை, 11.7.1950 
-விடுதலை,31.1.16

திங்கள், 2 நவம்பர், 2026

சூத்திரஜாதி இழிவு சுத்தத்தால் நீங்காது

 


இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிடர்களின் இழிவுகளையும் முன்னேற்றத்தையும் அடியோடு ஒழித்து அவர்களை மற்ற நாட்டு மக்களைப் போலும் இங்குள்ள திராவிடரல்லாத மக்களைப் போன்றும் சிறப்பாக நல்வாழ்வாக மனிதத் தன்மையுடன் நம்பும்படிச் செய்வதுதான் திராவிடர் சமூகத்தின் முக்கியமான நோக்கமும் வேலையுமாகும்.

 

இங்குக் கூடியுள்ள நீங்கள் 100_க்கு 90_பேர்கள் எனக்குப் பேசத் தெரிந்த காலமுதல் ஆதித்திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டு வருகிறோம். நீங்கள், நாங்கள் என்பது சற்று சேர்க்கப்பட வேண்டியதுதான். இந்த நாங்கள், நீங்கள் என்பவை ஒரே இனத்தவர்தான் என்றாலும் இந்தப் பிரிவு-களைத் தழுவி நிற்கும் மதத்தால் கட்டப்-பட்டிருக்கிறோமே யொழிய வேறு காரணமல்ல. உண்மையில் யாவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த, அதாவது திராவிட இனத்தைச் சேர்ந்த மக்கள்தாம்.

 

இந்நாட்டு சம்பிரதாயப்படி _ சட்டப்படி _ கருத்துப்படித்தான் நாங்கள் சூத்திரர்கள். அதாவது பார்ப்பனரின் அடிமைகள்; பஞ்சமர் சண்டாளர்கள், தீண்டக்கூடாதவர்கள், கண்ணில் தென்படக்கூடா இனத்தினால் நமக்கு இருந்துவரும் இழிவுகளும் ஒரே மாதிரிதான். இப்பிறவிப்படி இழிவுகளால் இருந்து வரும் முன்னேற்றத் தடைகள் மிக வலுவானவை. இந்து மதத்தை விட்டு வேறு மதத்துக்கு மாறினா-லொழிய நீக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வலுப்பெற்று நிரந்தரமாக இருந்து வரும் இத்தடைகளை ஒழிப்பது கஷ்டமாக இருந்து வருகிறது.

இந்நாட்டில் சைவ கழகமென்றும், வைணவர் கழகம் என்றும், தாழ்த்தப்பட்டோர் கழகம் என்றும், ஆதித்திராவிடர் கழகம் என்றும், சன்மார்க்க கழகம் என்றும், சுயராஜ்ய கழகமென்றும், காங்கிரஸ் கழகமென்றும் பல கழகம் இருந்தும் ஒன்றேனும் இப்படி இழிவு நீக்கத்திற்காகப் பாடுபடுவதில்லை. அதற்கு மாறாக இவ்விழிவுகளை நிறுத்தி வைக்கவே இவை பாடுபட்டு வருகின்றன.

உண்மையில் இப்பிறவி இழிவுகள் நிலை நீங்க, பாடுபட்டு வருபவர்கள் நாங்கள் என்றால் அது எங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ள நான் சொல்லவில்லை. எங்கள் கழகம் ஒன்றுதான் என்று கூறுகிறேன்.

எங்கள் கழகத்திற்குத்தான் ஏன் அந்த நோக்கம்? எங்கள் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெருமை? சில கொள்கைகள் தான் இவ்விழிவு நீக்கத்திற்காகப் பயன்பட்டு வருகின்றன என்று கூறுவோம். இதை எவராலும் மறுத்துக்கூற முடியாது.

ஒரு பொதுவுடைமைக்காரர் கூறலாம், இன்றைய நம் இழிநிலைக்கு நமது ஏழ்மைதான் காரணம்; பணக்காரன் பணத்தை ஏழைக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டால் இவ்விழிவு நீங்கிவிடும் என்று. ஆனால் நீங்கள் கேட்க வேண்டும் அவரைப் பங்கிட்டுக் கொடுப்பது பிறகு பார்த்துக் கொள்வோம். நம் அண்ணாமலைச் செட்டியார் ஏனப்பா சூத்திரராக இருக்கிறார்? என்று சிலர் கூறுவார்கள். நாம் கொஞ்சம் அசுத்தமாக இருப்பதால்தான் தாழ்த்தப்பட்டுத் தீண்டக்-கூடாதவர்களாக இருக்கிறோம்! நாம் நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக் குளித்து சலவை உடுத்திக்கொண்டிருந்தால் இழிவு போய்விடும் என்று அவர்களையும் நீங்கள் கேட்க வேண்டும்,

நாங்கள் குளிப்பதும் முழுகுவதும் பிறகு இருக்கட்டும். அன்றாடம் குளித்து முழுகி வாசனைத் திரவியம் பூசி வெள்ளையுடுத்தி வெண்ணீறு பூசி வெயிலே படாமல் வாழும் நம் ஸ்ரீலஸ்ரீ பண்டார சந்நிதிகள் ஏனப்பா இன்னும் சூத்திரர்களாக இருக்கிறார்கள்? என்று. மற்றும் சிலர் கூறுவார்கள் படித்துப் பட்டம், பதவி பெற்றால் நமது இழிவு நீங்கிவிடும் என்று. நீங்கள் கேட்க வேண்டும் அவர்களை, படித்துப் பட்டம் பதவி பெற்றுள்ள அம்பேத்கர் ஏனப்பா இன்னும் பஞ்சமராய் இருக்கிறார்? என்று.

ஆகவேதான் நாங்கள் கூறுகிறோம். இப்பிறவி இழிவுகள் படித்தாலும் நீங்காது; பதவி பெற்றாலும் நீங்காது; சுத்தத்தால் நீங்காது; சுயராஜ்யத்தில் நீங்காது என்று.

இன்றுள்ள மதமும், கடவுளும், சட்டமும் சன்மார்க்கமும், சாஸ்திரமும் சுதந்திரமும் சுயராஜ்யமும் இன்றுள்ள ஜாதி மதப் பிரிவினைகளை, உயர்வு தாழ்வுகளைக் காப்பாற்றி வைக்கத்தான் இருந்து வருகின்றன. இப்பிரிவுகள் ஒழிய வேண்டும் என்று ஒருவன் கூற வேண்டுமானால் அவனுக்கு இன்றுள்ள நிலையில் அதிகத் துணிவு வேண்டும். அதுவும் காந்தியாரைப்போல் சுட்டுக் கொல்லப்படவும் ஒருவன் துணிந்திருந்தால்தான் இக்கொள்கை-களை எடுத்துக் கூறமுடியும். எடுத்துக்கூற ஆரம்பித்தால் அவனுக்கு அரசியல் பங்கு கிடையாது. சட்டசபைக்குச் செல்ல முடியாது. மந்திரியாக முடியாது. மந்திரியானாலும் விரைவில் விரட்டப்பட்டுவிடுவார். இதுதான் உண்மை.

இன்றுள்ள நிலைமையில் எவ்வளவு மடையனான, திருடனான, கொலைபாதகனான பார்ப்பானும், தான் பிராமணன் என்ற எண்ணத்தால் ஒரு மகா புத்திசாலியான மகா ஒழுக்கசீலனான, ஒரு ஆதித்திராவிடத் தோழனை அவன் பஞ்சமன் என்று கருதி ஏன்டா பறப்பயலே என்று சொல்லலாம். அதைச் சட்டம் அனுமதிக்கும், சம்பிரதாயமும் அனுமதிக்கும். அது மானநஷ்டமானதாகாது. ஆனால் அந்த ஆதித்திராவிடத் தோழர் திருப்பி ஏன்டா பாப்பாரப்-பயலே, என்று கூறி-விட்டால் போதும், அவனை ஆட்சிபீடம் உடனே தண்டிக்கும். ஆட்சிபீடம் ஒரு வேளை சற்று நிதானித்தாலும் மற்ற மக்கள் அவனை அடித்துக் கொன்றுவிடுவர். அவனை இந்துமதத் தெய்வங்களும் தண்டிக்குமாம். அவை நாம் அடித்துவைத்ததுதான் என்றாலும் நம்மைத் தண்டிக்கும் என்பதை, நீங்கள் மறந்துவிடக் கூடாது.

(23.3.1948 கற்கத்தியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை 28.3.1948)

- உண்மை இத.ழ், 1-15.1.25

விஞ்ஞான உலகில் மூடநம்பிக்கைகளை விலக்க வேண்டும்!- தந்தை பெரியார்

 


தாய்மார்களே! தோழர்களே! நான் ஒரு பகுத்தறிவுவாதி. எப்படிப்பட்ட விஷயமானாலும் அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும்; அந்த முடிவுப்படி நடந்துகொள்ள வேண்டுமென்கிற பிடிவாதமான பகுத்தறிவுவாதியாவேன். நான் எதையும் தயவு தாட்சண்யமின்றி எடுத்துக் கூறுபவன். அதனால் எனது கருத்துக்கள் சிலருக்கு ஏற்புடையதாகவும் பலருக்கு மாறுபாடாகவும் இருக்கலாம் என்றாலும், எனக்குத் தோன்றியதை – சரியென்று பட்டதை எடுத்துக் கூறுகிறேன்.

தோழர்களே! நமது நாட்டிலே பண்டிகைகள் என்பது எந்த நாள் முதல் தெரிய வருகிறதோ அன்று முதல் பெரியவர்கள், அறிஞர்கள், படித்தவர்கள் எல்லோருமே வெகு நாட்களாக வகுத்து வருகிற வழக்கப்படி பெரியோர்கள் நடப்புப்படி, சாஸ்திரப்படி என்றுதான் கொண்டாடிக்கொண்டு வந்தார்களே தவிர, எவரும் அறிந்து கொண்டாடியது கிடையாது. யாராவது அப்படிச் சிந்தித்தார்களா என்பதும் எனக்குத் தெரியாது. பெரிய புலவர்களுக்குத் தெரியுமா என்னமோ!

நான் 35 வருடங்களுக்கு முன் இந்தப் பொங்கல் அறிவுக்கு ஒத்தது; தமிழர்களுக்கான பண்டிகை; தமிழர்கள் இதைத்தான் தங்கள் விழாவாகக் கொண்டாட வேண்டும்; இதைத் தவிர்த்து பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட்டு வரும் மதப் பண்டிகைகள் எல்லாம் முட்டாள் தனமான காட்டுமிராண்டித் தன்மையோடு மூடநம்பிக்கை நிறைந்தவைகளே ஆகும்; இது ஒன்றுதான் மூடநம்பிக்கையற்ற – முட்டாள்தனமற்ற அறிவுக்குப் பொருத்தமான விழாவாகும் என்று சொல்லி வருகின்றேன்.

மனிதன் உழவு செய்கிறான் அதற்கு முக்கியமாக மாட்டைப் பயன்படுத்துகிறான். நல்ல வெள்ளாமை எடுக்கிறான். பெரும்பாலும் இதுதான் அறுவடைக் காலம். பாடுபட்டு உற்பத்தி செய்தவன் தன் குடும்பம் – சுற்றம் – நண்பர்களோடு சேர்ந்து, தான் வெள்ளாமை செய்த பொருளைப் பொங்கி, பங்கிட்டு உண்டு மகிழ்ச்சியடைகின்றான். அதற்குப் பயன்படுத்தும் மாடுகளைச் சிறப்புச் செய்யும் பொருட்டு அதைக் குளிப்பாட்டி, அதற்கு நல்ல உணவும் ஓய்வும் கொடுத்து, அதற்கு நன்றி செலுத்திடும் வகையில் கொண்டாடப்படுவதே இந்த மாட்டுப் பொங்கல் விழாவாகும்.

இந்தப் பண்டிகைகளில் பார்ப்பனர்கள் பலவற்றைப் புகுத்தி நம் மக்களை மூடர்களாகவே ஆக்க வேண்டுமென்று இதை மூடநம்பிக்கைப் பண்டிகையாக்கிவிட்டார்கள். இது இந்திரனது பண்டிகை – இந்திரனுக்குச் செய்கின்ற பொங்கல்
என்று எழுதி இருக்கிறான். போகி என்றாலே அகராதியில் இந்திரன் என்கிற பொருளாகும். இதற்கு அவன் கட்டியிருக்கிற கதை வேடிக்கையானது. அதற்கு முன் இந்திரனுக்கே இந்தப் பண்டிகை நடந்து வந்தது. மக்கள் இந்திரனுக்குப் பொங்கல் வைத்துப் படைத்து வந்தனர். இதைக் கண்ட கிருஷ்ணக் கடவுளுக்கு பொறாமை வந்தது. நாம் கடவுள்; இவன் சாதாரண இந்திரன்;
இவனுக்கு மட்டும் பொங்கல் ஏன் எனக் கருதி மக்களை எல்லாம் அழைத்து இனி இந்திரனுக்கு விழா செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டான். மக்களும் அவன் சொல்லைக் கேட்டு இந்திரனுக்கு விழா கொண்டாடவில்லை.

உடனே இந்திரனுக்குக் கோபம் வந்து பெரு மழையைக் கொண்டு வந்து, வெள்ளத்தைப் பெருக்கி மக்களுக்குத் தொல்லை கொடுத்தான். மக்கள் கிருஷ்ணனிடம் போய் முறையிட்டனர். உன் பேச்சைக் கேட்டதால் தானே எங்களுக்கு இந்தக் கதி என்று. உடனே கிருஷ்ணன் மலையைத் தூக்கி மழையை மறைத்து மக்களைக் காப்பாற்றினானாம். பின் இந்திரன் கிருஷ்ணனிடம் வந்து நீ
எப்படி மழையைத் தடுக்கலாம் என்று கேட்டானாம்.

பின் இருவருக்கும் வாதம் ஏற்பட்டது, கடைசியில் இருவரும் சமாதானம் அடைந்து, இந்திரனுக்கு வழக்கம் போல விழா செய்வதென்றும் மறுநாள் கிருஷ்ணனுக்கும் விழா கொண்டாடச் செய்வதென்றும் ஏற்பாடு செய்துகொண்டார்களாம். அதன்படி போகி இந்திரனுக்கான விழாவாகவும் மறுநாள் பொங்கல் கிருஷ்ணனுக்கான விழாவாகவும் மக்கள் கொண்டாடப்பட்டு வருவதாகக் கதை எழுதி வைத்திருக்கிறார்கள். மற்றும் ஒரு கதை – இது சங்கராந்திப் பண்டிகை.

மூதேவியானவள், இந்த மாடுகளுக்கெல்லாம் கேடு செய்ய வேண்டுமென்று புலி உருவம் எடுத்து மாடுகளுக்கெல்லாம் தொல்லை கொடுத்தாளாம். அதனால்தான் இந்தப் பொங்கல் விழாவின்போது சேகண்டி அடித்துக் கொண்டு தாம்பாளத்தில் கம்பால் தட்டிக் கொண்டு பொங்கலோ பொங்கல்! புலியோ புலி! என்று கூவுகிறார்கள் என்று கருதுகின்றேன். இப்போது
அந்தப் பழக்கம் இருந்து வருகிறது. இங்கெல் லாம் உண்டோ என்னமோ எங்கள் பக்கம் நடந்து வருகிறது. இவை யாவும் மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கருத்துக்கள் – கதைகள் ஆகுமே தவிர, அறிவோடு
சிந்திப்பதற்கு இதில் ஒன்றுமே இல்லை.

நமது மக்கள் பண்டிகைகள் என்று நீண்ட நாட்களாக கொண்டாடி வருகிற தீபாவளிப் பண்டிகை, ஆயுதபூஜை, கோகுலாஷ்டமி இப்படி எந்தப் பண்டிகையை எடுத்துக்கொண்டாலும் எல்லாப் பண்டிகைகளும் பார்ப்பதை உயர்த்தவும் நம்மை இழிவுபடுத்தும் பண்டிகைகளே ஆகும்.

நாம் நம் இழிவு நீங்கவும் நம் மக்கள் பகுத்தறிவு பெறவும் வேண்டி இந்தப் பண்டிகைகளையெல்லாம் ஒழிக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் இந்தப் பண்டிகைகளுக் கெல்லாம் லீவு விட்டு மக்களைக் கொண்டாடச் செய்யத் தூண்டுகிறது. விநாயக சதுர்த்தி, இராமநவமி, கோகுலாஷ்டமி, தீபாவளி என்று இவைகளுக்கெல்லாம் விடுமுறை விடுவதன் மூலம் மனித சமுதாயத்தைக் காட்டுமிராண்டி களாக்கவே பாடுபடுகின்றனவே ஒழிய, மனிதன் பகுத்தறிவுவாதியாக வேண்டும் என்கிற கவலை
ஆட்சியிலுள்ளவர்களுக்கு இல்லை; நம்மிடையே கொண்டாடப்பட்டு வருகிற பண்டிகைகள் யாவும்
மக்களின் பொது நன்மையை உத்தேசித்தோ உண்மையை உத்தேசித்தோ அறிவை உத்தேசித்தோ எந்தப் பண்டிகையும் இல்லை.
இந்த ஒரு பண்டிகைதான் அறியும் உண்மைக்கும் பொருத்தமான பண்டிகை என்று சொல்லும்படியாக அமைந்திருக்கிறது.
நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் மக்களெல்லாம் பகுத்தறிவு மான உணர்வு பெற வேண்டும்; இழிவு நீங்க வேண்டும்; உலக மக்களைப் போல நம் மக்களும் அறிவில்; விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற்று உலக மக்களோடு போட்டிபோடக் கூடியவர்களாக ஆகவேண்டுமென்கின்ற எண்ணத்தாலேயே ஆகும்.

பொதுவாக உலகில் எடுத்துக் கொண்டால் இந்த ஒரு நூற்றாண்டிலேயே மிக வேகமாக பகுத்தறிவு பயன்படுத்தப்படுவதும், அதனாலேயே பல அதிசய அற்புத காரியங்களைச் செய்வதும் அந்த மனித சமுதாயத்திற்கு மிகப் பயன்படுவதுமாக இருக்கிறது.

நம் நாடு ஒன்றுதான் இந்த 1968ஆம் ஆண்டு வருடத்திலும் பின்னணியில் நிற்கிறது. நம்மைவிட காட்டுமிராண்டியாக இருந்த நாடுகள் எல்லாம்கூட வெகுவிரைவில் முன்னேறிவிட்டன.

பொதுவாக அதற்குமுன் மனிதன் ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலேயே இருந்தான். ஒரு 50 மைல் தூரம் பிரயாணம் கூட இல்லாமலே இருந்தான். எனவே, அவன் அறிவு வளர்ச்சியடையாமலே இருந்தது, காரணம், இன்று ரோடு, பஸ், ரயில், ஆகாய விமானம் இவைகள் தோன்றியபின் மனிதன் மணிக்கு 100, 200, 500 ஆயிரம் மைல் வீதம் பிரயாணம் செய்கிறான்.

இன்று விஞ்ஞானத்தின்மூலம் பல புதுமைகள் கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம் உலகம் மிகச் சுருங்கி விட்டது. மனிதன்தான் இப்போது நினைத்த உடன் நினைத்த இடத்திற்குப் போகக்கூடிய சக்தியையும் வாய்ப்பையும் பெற்றிருக்கின்றான். விஞ்ஞானத்
தின் மூலம் கிடைத்த அதிசய அற்புத சாதனங்கள் – கருவிகள் – பொருள்கள் இதையெல்லாம் அனுபவிக்கிறோமே தவிர, நாம் அதைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. சிந்திக்க ஆரம்பித்தால் நாமும் அவர்களைப் போலவே பல அதிசயங்களை அற்புதங்களைச் செய்ய முடியும். நாம் அறிவைத் தங்கு தடையின்றி விட்டுச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும். நமது சமுதாயம் முன்னேற்றமடைய முடியும். அதைவிட்டு, பின்னாலேயே 1000, 2000 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தானோ அப்படியே இருந்துகொண்டு போனால் நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாகத்தான் போவோம்.


- உண்மை இதழ், 16-31.01.25