வெள்ளி, 2 அக்டோபர், 2015

சித்திரகுப்தன் -வினா விடை-2


வினா: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?
விடை: நமது மதமும் ஜாதியும்.
வினா: நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள், இதற்கு காரணம் என்ன?
விடை: மதமும், ஜாதியும்
வினா: நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராகிக் கொண்டே வருவதற்குக் காரணமென்ன?
விடை: வினையின் பயன், அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்கு பணமும் கொடுத்துவந்த “பாவமானது” அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜிகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பராக்குகிறார்கள் அதற்கு யார் என்ன செய்யலாம்.
வினா: எந்த விதமான விபச்சாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?
விடை: வெளியார்க்கு தெரியும் படியாகச் செய்த விபச்சாரம் குற்றம் சொல்லத்தகுந்ததாகும்.
வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா: மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.
வினா: உண்மையான கற்பு எது?
விடை: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு
வினா: போலி கற்பு என்றால் எது?
விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ, பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாத வனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.
வினா: மதம் என்றால் என்ன?
விடை: இயற்கையுடன் போராடுவதும் அதைக்கட்டுப் படுத்துவதும் தான் மதம்.
-விடுதலை,4.9.15

விபச்சாரமும் ஜாதியும்



பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர் களுக்குள் ஆரியக்கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் களுக்குள் மாத்திரம் தான் கடவுளால் கிருஷ்டிக்கப்பட்டது என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இவை முறையே ஒன்றுக்கொன்று, தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பதுமிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாக குறிக்கப்பட்டிருக்கின்ற விபரம் யாவரும் அறிந்ததேயாகும்.
இப்படி இருந்தாலும் இப்போது அநேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போமானால் அதற்குக்கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணரலாம்.
அதாவது ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத் தாரும் தங்களில் ஜாதிமுறைதவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும் கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவுகளென்றும் அப்படிப்பட்ட பிரிவுகளுக்கு பஞ்சம ஜாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்ற தென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.
அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய், இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சமஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன. அந்த விபரத்தை தமிழ் அகராதியில் உள்ளபடி மற்றொரு பக்கம் பிரசுரித்திருக் கின்றோம்.
ஆகவே அதில், உதாரணமாக, இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும், என்று சொல்லில் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் என்னப்படுபவர்களே பஞ்சம் ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும் பிராமணன் சத்திரிய குலப்பெண்ணை சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இவர்களில் இந்தப் படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தால் அவர்களுக்கு காணியாளர் என்று பெயர் என்றும், மற்றபடி சிற்றரசு, மந்திரித்துவம் முதலிய பதவிகளில்  இருப்பவர்களாயிருந்தால்  அவர்களுக்கு வேளான் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும், குறிக்கப்பட்டிருப்பதுடன் இவற்றிற்காகாதாம், சுப்ரபோதகம், பிரம்ம புராணம் வைகாநசம், மாதவியம், சாதிவிளக்கம், என்கின்ற நூல்கள் என்றும், குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தவிர மேல்கண்ட பிராமாணஜாதி ஆண், சத்திரிய ஜாதி பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும் தெலுங்கர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவனேவரையும் குறிப்பிடத் தக்கதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும்  சோரத்தால் பிறந்த பிள்ளைகள்  குயவர் என்றும், நாவிதர் என்றும், குறிக்கப்பட்டிருக்கின்றது. அது போலவே பிராமணன். சூக்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை பரசவர், அதாவது செம் படவர் என்றும் சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக்காரர் அதாவது வேடுகர், என்றும், குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிராமணப்பெண்ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடபட்டி ருக்கின்றன.
பிராமண குலப்பெண்களுடன் சண்டாளர் கூடிப்பிறந்த பிள்ளைகள் சருமகாரர். அதாவது சக்கிலிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சத்திரியகுலப் பெண்ணுடன் சண்டாளர் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர், (அதாவது வேணுகானம் செய்பவர்களும்) கனகர் (அதாவது தங்கவேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய்வோர்களும்) ஆவார்கள் என்றும்  கூறப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரி கீழ்மேல் ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில், அயோவகச் சாதிப் பெண் இடம் நிடாதனுக்குப் பிறந்த, பிள்ளைகள் பார்த்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த படியே இப்போது உள்ள சாதிகளையெல்லாம குறிக்கும்படியாகவே இன்றும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.
இதுபோலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி அதாவது அபிதான கோசம் அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர்களாலும் ஆதாரமாய் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகயும் குறிக்கப்பட்டிருக்கின்றதோடு 4 ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல்கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும்,
விபச்சாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டடவர்கள் என்றே கூறப்பட்டிருக் கின்றன. செட்டியார் மார்களையும், ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது.
ஆகவே ஜாதியை கட்டிக்கொண்டு அழுவது இவ் விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.
உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொற்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவை கற்பித்து அதை நம்மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப்பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.
(குடிஅரசு, 1930)

மனிதன் தன் வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே. புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன்கூட இருக்க மாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சி செய்து புகழடைய விரும்புகிறான்... ஆனால், மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின்பற்றுகையில் மிகவும் தவறான முறையைப் பின்பற்றுகிறான்.
மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத் தேடுவதற்கு முயற்சிக்கும் அத்த னையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்துக்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவனுடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.

-விடுதலை-12.9.15

    வெட்கம், புத்தி இல்லையோ?


    குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழி யில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந் தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷ மாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளை களும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப்பிள்ளை களாகவா இருந்திருப்பார்கள்?
    20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா? - தந்தை பெரியார்
    -விடுதலை21.8.15

    ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

    கடவுளை நம்பும் முட்டாள்களே!


    அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார்; அவரன்றி ஓர் அணுவும் அசை யாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார். என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
    கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?
    கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்? பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?
    இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?
    கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்ற வனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடிவில்லையே. ஏன்?
    கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ்போடா மலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லை, ஏன்? மனிதன் எதனால் கெட்ட காரியங்களைச் செய்கின்றான்?
    ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் தீங்குகள் செய்யப்படுகின்றன?
    கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?
    மனிதரிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ் தர்கள் யார்?
    ஒரு மனிதனுக்கு அவன் கெட்ட காரியம் செய்த பிறகு, செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள், அந்த மனிதனைக் கெட்ட காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?
    கெட்ட காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்ப தானாலும், கெட்ட காரியம் செய்யப்பட்டதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்த வனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?
    மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம், துக்கம், திருப்தி, அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும், இருந்தும் வரவேண்டும்?
    மனிதன் படும் அவஸ்தைகள் கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திருவிளையாடலா?
    நரகத்தைப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டனை யாகச் சிருஷ்டித்த கடவுளை விட அயோக்கியன், கொடி யவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?
    இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?
    ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமுதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்தாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும், எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.
    ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, மறக்கிறானோ அவ்வளவுக் கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி. (14.7.1970 உண்மை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

    பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!
    ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண்ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது, அவர்களின் ஒருவனுக்குக்காலில் மிதியடியிருக்கிறதா இல்லையாவென்கிற சந்தேகமுண்டாகி மற்றொருவனை நோக்கி தம்பி, சுப்பு!
    என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,
    - மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்) தகவல்: ஆ.கணேசன், சென்னை -21 :

    யார் காரணம்?
    ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமா ரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள்,
    வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?
    ஈ.வெ.ரா. பகுத்தறிவு
    -விடுதலை,6.3.15

    மாமாங்கத்தின் அற்புதம் -சித்திரபுத்திரன்-


    புராண மரியாதைக்காரன் கேள்வி: அய்யா, சுயமரியாதைக்காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன்
    பதில்: என்ன அற்புதமய்யா?
    பு.ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும்,  கூழாய் இருந்தபோதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.
    சு.ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள்.
    ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும்.
    இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.
    பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?
    சு.ம: - இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில்மறைவே
    இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள்.
    எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும்.
    அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.
    பு.ம;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?
    சு.ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள்.
    ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள்.
    ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.
    குடிஅரசு - உரையாடல் - 26.02.1933

    காந்தியின் மிரட்டல்
    காந்தியவர்கள் உயிர்விடுகிறேன்! உயிர் விடுகிறேன் என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப் பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம், ஆனால், பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது.
    ஏனென்றால் இந்த மகாத்மா உயிர் விட்டால் அவருக்குச் சமாதி கட்டி குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்குப் பிழைப்பு ஏற்படுத்திக்கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர் களால் முடியும், ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர் களிடம் மாத்திரம் செல்லாது.
    ஆகையால் காந்திமகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன் என்று உப்புக்காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும் படி செய்யும் வேலைக்கோ,
    ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லாவிட்டால் எப்படியாவது ராஜி செய்துகொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்ல தாகும்.
    குடிஅரசு - துணைத் தலையங்கம் - 05.02.1993
    .விடுதலை,7.3.15

    மனிதன் செத்தால்... பிறகு? - தந்தை பெரியார்



    மனிதன் செத்துப் போனான் என்பதற் குப் பொருள் மனிதன் இயங்குவதற்கு ஆதாரமாகவுள்ள சுவாசம் அதாவது மனி தன் மூக்கால், வாயால் உள்ளே இழுத்து வெளியே விடும் காற்றுப் போக்குவரத்து நின்று விட்டால், அதாவது அந்தக் காற்றை இழுக்கும் சக்தி அந்த உடலுக்கு இல் லாமல் போனால் செத்துப் போனான் என்பது பொருள். உடனே மனிதன் பிண மாகி விடுகிறான். இந்தக் காற்றுப் போக்கு வரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய் விட்டால் சுவாசம் நின்று விடுகிறது.
    இந்த நிலையைத் தான் மதவாதிகள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய் விட்டது என்று சொல்லுகிறார்கள். ஆத்மா என் றாலே சுவாசம் (காற்று) என்றுதான் பொருள் அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை.
    உதாரணமாக, ஒரு மனிதனின் மூக்கை யும், வாயையும் காற்றுப் போகாமல் வரா மல் மூடி அழுத்திப் பிடித்துக் கொண்டோ மானால் அந்த மனிதன் துள்ளிக் குதித்து ஆடி அமர்ந்து செத்தே போகிறான். இப்படி ஆகி விடுவதில் ஆத்மா பிரிகிறது? எங்கே இருக்கிறது? ஆத்மாவைச் சொன்ன வன் ஆத்மாவிற்கு உருவமில்லை. அரூ பம் கண்ணுக்குத் தெரியாதது. சூட்சமம், கண்டுபிடிக்க முடியாதது என்றுதான் சொன்னானேயொழிய அதை ஒரு வஸ்து வாக்கவில்லை.
    இந்தப்படி முடித்து விட்டுப் பிறகு அது மேல் லோகத்திற்குப் போய் உரு வெடுத்து அதே மனிதனாகிக் காமத்தை அனுபவிக்கிறது என்று புளுகி இருக் கிறான். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இதில் கொஞ்சம் மாற்றம்  செய்து சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தாலும் விசாரணை - தீர்ப்புக்காலம் வந்தவுடன் பிரிந்த ஆத்மா மறுபடியும் சரீரத்திற்குள் வந்து,  புகுந்து தீர்ப்பை ஏற்கிறது (ஜட்ஜ் மென்ட் டே) என்பதாகக் கருதுகிறார்கள்.
    இப்படி எல்லாம் மதக்காரர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் கடவுளுக்கு மனிதன்மீது ஒரு அதிகாரம் (வேலை வேண்டுமென்பதற்காகவேயாகும்.
    மனிதன் செத்த பிறகு கடவுள் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றாகி விட் டால் கடவுளை எவன்தான் சட்டை செய் வான்? ஏன் எதற்காக? சட்டை செய்வான்?
    ஆனதினாலேயே  கடவுள் பெயரால் முட்டாள்களும் பிழைக்க வேண்டிய அயோக்கியர்களும் இந்த ஏற்பாடு செய்து விட்டார்கள். சரீரத்தை விட்டு ஆத்மா பிரித்தால் அது மோட்சத்திற்குப் போவதா? நரகத்திற்குப் போவதா? மறு ஜன்மம் எடுப்பதா? பிதிர் லோகத்தில் வாழ்வதா? பேயாய் அலை வதா? செத்தவனுக்காகச் செய்யப்படும் காரியங்களை அனுபவிப் பதா? இவற்றில் எந்தக் காரியத்திற்குச் செத்தவன் ஆளாவது?
    செத்தவனைப் புதைத்தால் உடல் முழுவதும் நிராகர மண்ணாக ஆகி விடு கிறது. நெருப்பில் கொளுத்தினால் சரீரம் முழுவதும் சாம்பலாக ஆகிக் காற்றில் பறந்து மறைந்து விடுகிறது. இரண்டு மில்லாமல் பூமியில் கிடந்தால் கழுகு, காக்கை, நரி, நாய், மற்றும் மாமிச பட்சிணி ஜீவன்கள் தின்று தீர்த்து விடுகின்றன.
    ஆகவே செத்த மனிதன் எப்படி இருப் பான் எதை அனுபவிப்பான் எங்கே இருப் பான் என்பவற்றையும் இந்த அனுபவம் எல்லாம் மனிதனுக்கு மாத்திரம்தானா மற்ற ஜீவன்களுக்கும் மற்றும் செத்துப் போன பட்டுப் போன மரம், செடி, கொடி புல், பூண்டுகளுக்கும்  உண்டா என்பதை யும் ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துப் பார்ப்பானாக.
    -விடுதலை,1.3.14

    சமுக சீர்திருத்தமும் - சமயக் கொள்கையும்

    - தந்தை பெரியார்

    தலைவர் அவர்களே! இளைஞர் களே!! சகோதரர்களே!!!  2 மணி நேரத் திற்கு முன்தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப்பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட் டார்.  இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப் பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி. ஆதலால் திடீரென்று என்ன பேசுவ தெனவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
    யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன்.  ஆனாலும் இதைப் பற்றிய என்னுடைய பழைய சங்கதிகளையே இந்தத் தலைப் பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர் களுமாய் இருப்பதால் நான் சொல்லு வதை திடீரென்று நம்பி விடாதீர்கள்.  நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு  வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
    நண்பர்களே சமுக சீர்திருத்தம் என்றால் எந்த சமுகம் என்பதும், சமயக் கொள்கை என்றால் எந்த சமயம் என் பதையும் முதலில் முடிவு கட்டிக் கொள் வது இங்கு  அவசியமாகும். நான் இப் போது பொதுவாக மனித சமுகம் என் பதையும் பொதுவாக மனித சமுகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங் களையும் எடுத்துக் கொள்ளுகிறேன்.  பிறகு அவசியமிருந்தால் தனிச் சமுகம், தனிச் சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன்.  பொதுவாக சம யங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்ப வைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமுகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற் படுத்தப்பட்டவையாகும். மனித வாழ்க் கைக்கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படு வதுமாகும்.
    ஒரு வாசக சாலையிலேயோ, உல் லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண் டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத் தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந் திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற் காகவும் ஏற்படுத்திக்கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கைகளாகும்.
    இதுவும் அந்தந்த காலதேச வர்த்தமானத்திற்கும், மக்கள் அறிவு நிலைமைக்கும், வளர்ச்சிக் கும் தக்கபடி செய்யப்படுவதேயாகும்.  ஆனால், அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்துகொள்ள முடியாத அறிவு  இல்லாத காலத்தில் மக்களைப் பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப்பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக் கருதி ஏற்படுத்திய கொள்கைக்கும் சேர்ந்ததே யாகும். அதாவது, எப்படி ஒரு குழந்தை யானது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியில்லாத தென்றும் அதைப் பற்றிய விபரங்களை எடுத்துச் சொன் னால் அதை அறிந்து கொள்ளமுடியா தென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக்குழந்தை வெளியில்போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப் படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒரு வித பயம் உண்டாகும்படியான பூச்சாண்டி பிடித்துக் கொள்வான் என்றும்,  பேய், பூதம்  பிடித்துக் கொள்ளும்  என்றும், துண்டித்தக்காரன் பிடித்துக் கொண்டு போய் அடைத்து விடுவான் என்றும், இன்னும் பலவகையாய்  சொல்லுவ தோடு கையையும், முகத்தையும் ஒருவித மாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாதபடி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற் கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களை உணர்ந்து அதன்படி ஒழுக முடியாத நிலையில் மனிதர்கள் இருக் கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப்போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும், மதக் கட்டுப் பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய் திருக்கிறார்கள்.  அந்த நிபந்தனை மிரட் டல்களும், கட்டுப்பாடுகளும்தான் இன் றைய மோட்சம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவைகளாகும்.  மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவைகளில் சொல்லப் பட்டவைகளுமாகும்.  அது மாத்திரமல் லாமல் மேற்கண்ட முறையில் சொல்லு பவைகளெல்லாம் சொல்லிவிட்டும் எழுதி விட்டும் ஆனபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பமாட்டார்கள் என்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும், அறி வுக்குப் பொருந்தாததுமாய் இருப்பதால்) அவை களையெல்லாம் கடவுள் சொன்னார்.  பகவான் சொன்னார், முனிவர் சொன் னார், ரிஷி சொன்னார் என்று அதாவது மனிதத்தன்மைக்கு மீறினவர்களால் சொல் லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோட்சம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்கவேண்டும் என்று சொல்லி நம்பச் செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக் கொள்கைகளை மக்களுக்குள் புகுத்தி இருக்கிறார்கள்.  இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங் களை முரட்டுப் பிடிவாதம், குரங்குப் பிடியாய் பிடித்து சிறிது கூட காலத்திற்கும், அறிவின் நிலைமைக்கும் ஏற்றமாதிரி திருந்துவதற்கு விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக்குத் தகுந்த படியும் காலத்திற்கு ஏற்றபடியும் பலபல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று. அன்றியும் திருந்த இடம் கொடுத்துக் கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருகவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று.  ஆகவே, இன்றைய தினமும் மக்கள் எந்தச் சமயமானலும் இந்த தத்துவத்தின் மேல் ஏற்பட்ட தென்பதையும் ஒத்துக்கொண்டு கால தேசவர்த்தமானத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சௌகரியமுமுடையது என்று சொல்லப்படுவதாயின் அது எந்த மதமா யினும் சமயமாயினும் (கொள்கையாயினும்) அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.
    அப்படிக்கில்லாமல், அதாவது மனித னின் உலக வாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக் குக் கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும், அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டியதே மனிதனின் கடமையென்றும், அது எப்படிப் பட்டதானாலும் அதைப்பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாய் இருந்தாலும் அதை அழித்துத் தீரவேண்டியது மனித சமுக சீர்திருத்தத் தைக் கோருகிற ஒவ்வொருவருடையவும் முக்கியமான கடமையாகும்.
    ஆகவே, அக்கடமைக்கு கட்டுப்பட்ட வைகள்தான் சமயக் கொள்கைகளாகும். இனி இந்திய சமுகத்தையும், இந்து சமயத் தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக் கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமுகம் பெரிதும் சமயத்தைக் காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டி ருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப் பதிலும் மற்றொரு சிரிப்புக்கு இடமான விஷயம் என்னவென்றால், மனித சமுக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள் கைகளையெல்லாம் விட்டுவிட்டு அக் கொள்கைகளை நிறைவேற்றவென்று பொய்யாகவும், கற்பனையாகவும், பயத்திற் காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கை களைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டு கட்டி அழுவதாய் இருக்கின்றது.
    காரணம் என்னவென்றால், மனிதனை அறிவு பெறுவதற்கு விடாமலும் விஷயங் களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந் தால் இந்திய மனித சமுகம் இன்றும் சுய அறிவற்று சமயத் தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது?  என்ப வைகளைக் கவனிக்காமல் கீழ் நிலை யிலேயே இருந்து கொண்டு சீர்திருத்த மடையவோ, முன்னேற் றமடையவோ முடியாமல் தவிக்கின்றன.  உதாரணம் வேண்டுமானால் பாருங்கள் எல்லா சமயக் காரர்களின் மனோபாவமும், குணமும் மற்றவனிடம் நடந்து கொள்ளும் பான்மை யும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண் கின்றோம்.  ஆனால், ஆண்களைப் பார்த் தால் இன்ன இன்ன சமயம் தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக் கிறார்கள்.  இவன் இஸ்லாமானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன்  இந்து, இவன் சைவன், இவன் வைண வன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டுபிடித்துவிடலாம்.  ஆனால், இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங்களைப் பார்த்தால் மாற்றமில்லாதபடி ஒரே மாதிரி யாகத்தான் இருக்கும். ஆகவே, மதம் என்ப தும் சமயம் என்பதும் யாருக்கும் அநேக மாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதே யொழிய, கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும், மக்கள் வேஷத்தைக்  கெட்டி யாகப் பிடித்துக் கொண்டு கொள்கைகளை அடி யோடு நழுவவிட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.
    இதற்குக் காரணம் என்னவென்றால், இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக் கொடுத்து அதைக் கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள்  பின்பற்றுகிறார்களா? இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை  வற்புறுத்தாததேயாகும்.  எந்த சமயத்திற்கும் இந்த மாதிரி வேஷந்தான்  பிரதானமான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான், எந்த சமய மக்களிடம் சமய உண்மைக் கொள்கை களைப் பார்க்க முடியாமால்  போனதோடு, சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள் கையைச் சொன்னாலும்  லட்சியம் செய் யாமல் போய் விட வேண்டியதாகிவிட்டது அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத் திலேயே அதாவது வேஷமாத்திரத் திலேயே சமயப் பிரதானம் கிடைத்து விடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம்  நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவித மாக பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோட்சம், கடவுள் அருள் அடுத்த ஜென்மத்தில் மேன்மையான பதவி  ஆகியவைகள் என்பவைகள்  எல்லாம் மேல்கண்ட வேஷ மாத்திரத்தாலே  கிடைத்து விடுவதாய் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டு விட்டதாலும் வெறும்  வேஷத்தை போடுகின்றதாலேயே மோட்சமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான  சமயக் கொள்கையை அலட்சிப்படுத்தி விடுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டுமானால், அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனை களையெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோட்சம், நரகம். தலை விதி, கடவுளின்  பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்ப்  பிறக்கலாம்  என்பவைகளையும்,  சமய வேஷங் களையும் அடியோடு அழித்தாக வேண் டும்.  அப்படிக்கில்லாத பட்சம் எப்படிப் பட்ட நல்ல கொள்கையுள்ள சமயம் என் றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக்காது. மேலும் கொள்கையையும், அறிவையும்,  பிரத்தியட்ச அனுபவத் தையும்   பொருத்திவிட வேண்டும் அதைக் கொண்டு அவரவர்களையே நடந்து  கொள்ளும்படி விட்டு விடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெறும்  பாட்டிக்கதைச் சமயங்கள்  இன்றைய சமுக முன்னேற்றத்திற்குப் பயன்படவே படாது  என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும். உதாரணமாக, முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக்கல்வி  அறிவு சௌகரிய மில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர்  பிரயாணம் போய் வரட்டு மென்று கருதி அந்த ஊருக்குப போனால் புண்ணியம்,  இந்த சாமியை தரிசித்தால்  மோட்சம், இந்தத் தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய்  பிறப்பான் என்றெல்லாம்   சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக்  கதைகள் எழுதி  வைத்ததுடன் ஜீவ காருண்யம் என்பதையும்  உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை, மனிதன் ஆகிய வைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்தரவு கொடுக் காமல் இருக்கட்டும் என்று  கருதி காலால் நடந்து போனால் அதிக மோட்சம் அவசியம்  கிடைக்கு மென்று  எழுதி வைத்து இருந்தால் இன்று வர்த்தமான பத்திரிகை ரயில், மோட்டார்,  ஆகாயக்  கப்பல் ஆகி யவைகள் ஏற்படுத்தப்பட்டு  மலிந்த பிறகுகூட நடந்து யாத்திரை போக  வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். இதுபோலவேதான் அநேக  விஷ யங்களை சமயத்தின்  பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி, மூடர்களாகவும், தரித்திரர் களாகவுமாகி  அடிமைகளாய்  கஷ்டப் படுகின்றனர். இக் கஷ்டத் தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டு மானால் சமயத்தின் உண்மை தத்து வத்தைத் தைரியமாய் எடுத்து ஓத வேண்டும்.  அதன் போலித் தத்துவங் களை தைரியமாக அழிக்க வேண்டும்,
    அதோடு போலிக்கற்பனை  நிபந்தனை களுக்கு  ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம் , புண் ணியம், மோட்சம், அடுத்த ஜன்மம் என் கின்ற உபத்திர வங்கள் எல்லாவற்றையும் அடியோடு ஒழித்தாகவேண்டும். இல்லா விட்டால் மக்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ, திருப்தியோ, மோட்சமோ இல்லவே இல்லை என்றுதான் சொல் லுவேன்.  இந்த உபத்திரவங்களும்  மடத் தனங்களும் இங்கு உலகில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக்கின்ற தென்று ஒரு சமயம் சொல்லலாம் ஆனாலும், இந்து  சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர்களிடமுமே அதிகமாக மிக்க கெடும்படியாக சிறிது கூட முன்றேற்றம் அடையமுடியாதபடி யாக சீர்திருத்தம் செய்ய சற்றும்  ஒன்று படாததாக இருந்து வருகின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்றமடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடைகளை அழித்து முன் னேற்றமும் விடுதலையும் அடைந்து வருகிறார்கள். ஆதலால், வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது  ஒரு முடிவுக்கு வந்து உங் களால் சமுகம் முன்னேறும்படியும் சமயக் கொள்கைகள் அதற்குப் பயன் படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.
    (சென்னை - பச்சையப்பன் கலாசாலையில் சமுக சீர்திருத்தமும், சமயக் கொள்கையும் என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
    குடி அரசு -சொற்பொழிவு - 25.01.1931
    -விடுதலை,27.9.15