சனி, 21 மே, 2016

சங்கீதமகாநாடு


ஈரோட்டில் மே மாதம் 24, 25 முதலிய தேதிகளில் நடக்கும் இரண்டாவது சுயமரி யாதை மகாநாட்டின் ஆதரவில் வேறு பல மகா நாடுகளும் நடைபெறும் என்பது நேயர்கள் அறிந்ததாகும். அவற்றுள் சங்கீத மகாநாடு என்பதும் ஒன்றாகும்.
சங்கீத மகாநாடு கூட்டம் விஷயத்தில் நமக்குள்ள ஆர்வமானது, சங்கீதம் என்னும் ஒரு கலையானது மிக்க மேன்மையான தென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமுகத்துக்கு அது மிக்க இன்றியமை யாத தென்றோ கருதியல்ல.
உலகத்தில் மக்களுக்குள்ள அநேக விதமான உணர்ச்சி தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் கிடையாதென்பதே நமதபிப்பிராயம். உதாரணமாக, சங்கீதம் என்பது தேசத்திற்குத் தகுந்த படியும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்த படியும் அவரவர்களது அறிவு வளர்ச்சிக்குத் தகுந்த படியும் இருப்பதே தவிர, ஒரே சங்கீத முறையானது உலகத்திற்கெல்லாம் பொருத்தமான தென்று சொல்ல முடியாது. ஒரு நாட்டு சங்கீத உணர்ச்சிக்காரனுக்கு இன்பமாயிருப்பது மற்றொரு நாட்டு வித்வா னுக்கு புரியாததாகவே இருக்கும். மேல் நாட்டு சங்கீத இன்பம் கீழ் நாட்டான் அனுபவிக்க முடியாது. அதுபோலவே, கீழ் நாட்டு சங்கீத இன்பம் மேல் நாட்டானுக்கு இன்பமாக இருக்க முடியாது. ஆனால் பொதுவில் சங்கீதம் என்னும் ஒரு கலை விஷயத்தில் உலக மக்களுக்கெல்லாம் ஒருவித போக் கிய அனுபவமிருக்கின்றதை மாத்திரம் காணலாம். ஆனாலும் அதை ஒருவர் அதிகமாக அனுபவிக்க ஆசைப்படுவார். மற்றொருவர் அதை சாதாரணமாகக் கருதுவார். எப்படி இருந்தாலும் உலகில் உள்ள பல கலைகளில் அதுவும் ஒன்றாய் இருக்கின்றது.
நம்மைப் பொறுத்தவரை, நாம் இம் மகாநாட்டில் கலந்து கொள்வதானது அக்கலையில் உள்ள மேன்மையை உணர்ந்தல்லவென்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றென்ன வெனில் சங்கீதத்துறையிலும் நமது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகவேதான், சுயமரியாதை மகாநாட்டை அனுசரித்து இதை நடத்த வேண்டுமென்று கருதி நாம் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டதாகும்.
எப்படி நமது நாட்டில் மற்ற எல்லாத் துறைகளையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள்ளாக்கி அத்துறையில் மற்ற மக்களைத் தலையெடுக்க ஒட்டாமல் அழுத்தி வைத்திருக்கிறார்களோ அதுபோலவே சங்கீதத்துறையும் முழுதும் பார்ப்பனராதிக்கமாகி அதன் மூலம் நமது பொருள்கள் கொள்ளை போவதுடன், அதைக் கொண்டிருக்கும் நமது மக்களின் சுயமரியாதையும் கொள்ளை போயிருக்கின்றது; போய்க்கொண்டும் வருகிறது. உதாரணமாக, நமது தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் தேர்ச்சியுள்ள பார்ப்பனரல்லாத வித்வான்கள் அனேகர் இருக்கிறார்கள். அதிலும் சங்கீத சம்பந்தமான பல கலைகளிலும் தமிழ் நாட்டிற்கே சிறந்தவர்கள் முதன்மையானவர்கள் - இணையில்லாதவர்கள்  - என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களே யாவார்கள். இப்படி இருந்தாலும் இவர்களது வாழ்வும், அந்ததும் பெரிதும் மிக்க சுயமரியாதையற்றத் தன்மையாகவே இருந்து வருகின்றது. பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்கள் - அதாவது வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங் குழல், பிடில், நாதசுரம், மிருதங்கம், தவில் முதலாகிய வாத்தியங்களில் முதன்மையான பார்ப்பனரல்லாத வித்வான்கள் தங்களிலும் எவ்வளவோ கீழ்த்தரப் பார்ப்பன வித்வான்களால் மிக்க இழிவாகவே நடத்தப் படுகிறார்கள். அது மாத்திரமல்லாமல், இதன் பயனாய் பிரபுக்கள் என்று சொல்லப்படும் பார்ப்பனரல்லாத பணக்காரர்கள் பலரும்கூட பார்ப்பன ரல்லாத வித்வான்கள் என்றால் மிக்க இழிவாகவே கருதும் உணர்ச்சியைக் கொண்டு இருக்கின்றார்கள்.
உதாரணமாக, சென்ற இரண்டு மூன்று வருஷத்திற்கு முன் நாட்டுக் கோட்டை நகரத்தில் ஒன்றான கானாடுகாத்தானுக்கு நாம் போயிருந்த காலத்தில் தென் இந்தியாவுக்கே முன்மையான நாதசுர வித்வான் திரு. பொன்னுசாமி  அவர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபா கொடுத்து ஒரு பிரபு வீட்டு விஷேசத்திற்கு வாத்தியத்திற்காக வரவழைக்கப்பட்டிருந்தார். அப்படிபட்ட அவர் நின்று வாசிக்கும்போது தனது வேர்வையைத் துடைத்துக் கொள்ள ஒரு சிறு வெள்ளைத் துவாலை தன் தோளின்மேல் போட்டுக் கொண்டு வாசிக்கத் தொடங்கினதும்  அவ்வூர் பிரபுக்கள் சிலர் மேளக்காரன் தோளில் துண்டுப் போட்டுக் கொண்டு வாசிக்கலாமா என்று குற்றம் சொல்லி வாசிப்பதைத் தடுத்தார்கள். அதற்கு அந்த வித்வான் பதில் சொல்லமாட்டாமல் விழித்தார். அப்போது சமீபத்தில் இருந்த நமது நண்பர் ஒருவர்  (பட்டுக் கோட்டை அழகிரிசாமி) அவ்வித் வானை நோக்கி நீங்கள் மேல் துவாலையை எடுக்காதீர்கள் அவர்களுக்கு கேட்கப் பிரியமில்லாவிட்டால் போய்விடட்டும் அல்லது நீங்களாவது போய் விடுங்கள்  என்று சொன்னார். இதைக் கேட்ட வீட்டுக்கார பிரபு தனது விஷேச காலத்தில் இந்தப்படி ஒருசம்பவம் நடந்தது, வாத்தியக்காரர் போய்விட்டார் என்கின்ற கெட்டபெயர் வருமே என்று பயந்து சீக்கிரத்தில் வாசிப்பை முடித்துக் கொண்டார். இம் மாதிரியான சம்பவம் அனேக இடங்களில் இன்றும் நடக்கின்றது. மற்றும் பார்ப்பனரல்லாதப் பெண் வித்வான்களாயிருந்தால் உட்கார்ந்து பாடும்போது சபைக்கு ஒவ்வொரு மனிதன் வரும் போதும் எழுந்து எழுந்து கும்பிட்டு விட்டுத்தான் உட்கார வேண்டியிருக்கிறது. ஆண் பாட்டுக்கார வித்வான்களோ பிரபுக்களிடம் பேசும்போதும் இடுப்பில் மேல் வேட்டியை எடுத்து சுருட்டிக் கட்டிக் கொண்டும், முழங்காலுக்கு மேல் இடுப்பு வேஷ்டியைக் கட்டிக் கொண்டும், இடக்கையை வலக்கக்கத்தில் வைத்து வலக்கையால் வாயைப் பொத்தி குனிந்து, மகாராஜா, எஜமான், வாமி, சமுகம் என்று மேல்மரியாதை வைத்து பேச வேண்டியிருக்கின்றது. இப்பிரபுக்களும், இவ்வித்வான்களிடம் பேசும்போது, நீ, அவன், டேய் என்கின்ற ஒருமை, அடிமை முறையில் பேசுவதும் வழக்கமாய் இருக்கின்றது.
இதே தொழிலிலிருக்கும் பார்ப்பனர்களும் தங்கள் சகோதரத் தொழிலாளிகள் பார்ப்பனரல்லாதவர்களாயிருந்தால் அவர்களிடமும் இப்படியேதான் நீ, அவன், அடே என்கிற வரிசை வைத்துதான் பேசுகிறார்கள். ஒரு இரண்டு மூன்று ஜாண் உயரம் உள்ள பையனாயிருக்கும் பார்ப்பன வித்வானும்கூட எட்டரை ஜாண் இருக்கும் பார்ப்பனரல்லாத வித்வானை ஒருமையிலேயேதான் அவன், நீ, அடே என்று பேசுகிறான். அந்தச் சிறு வித்வானிடம் இந்தப் பெரிய வித்துவான்கள் பேசும்போதும் வாமிகள் என்று மரியாதை வைத்துப் பேசுகின்றார்கள். நிற்க, நமது பிரபுக்கள் என்பவர்கள் பார்ப்பன வித்வான்களிடம் பேசும் போதெல்லாம் மரியாதையாகவே பேசுவதும், தாங்களாகவே முதலில் கும்பிடுவதும், இதற்கு பார்ப்பனர்கள் இடதுகையை தங்கள் இடுப்பிற்கு கீழாகக் காட்டி ஆசிர்வாதம் என்று சொல்லுவதுமான காரியங்கள் தினமும் நடந்து வருகின்றது.
ஆனால், சதுர் முதலிய கச்சேரிகளில் தாசிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு அவர்களை ஆட்டுவிப்பவராயிருந்தாலும், தாளம் போடுகிற வராயிருந்தாலும், அல்லது அப்பெண்களுக்கு மாமாக்களாய்கூட இருப்பவர்களாய் இருந்தாலும் அவர்களைக் கண்டால் நமது பிரபுக்கள் கும்பிடுவதும் சுவாமிகளே என்று கூப்பிடுவதும் ஆன காரியங்கள் முக்கியமாக எல்லா கிராமாந்திரப் பிரபுக்களிடமும் இன்னமும் பார்க்கலாம். இவைகள் ஒருபுறமிருக்க, பார்ப்பன பிரபுக்கள் தங்கள் வீட்டு விஷேசங்களுக்கும், சடங்குகளுக்கும் மேளம் வாசிப்பதற்குத் தவிர மற்றபடி சபைக்கச்சேரிகளுக்கு பாடவோ, கதைகள் செய்யவோ கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களை கூப்பிடுகின்ற வழக்கமே ஒரு சிறிதும் இல்லை. அதுமாத்திரமல்லாமல், பார்ப்பனரல்லாதார் பாடுவதையோ, கதை செய்வதையோ புராணம், உபன்யாசம் முதலியவை செய்வதையோ பார்ப்பனர்கள் கேட்பது மதசம்பிரதாயப்படி தோஷம் என்றே கருதி இருக்கிறார்கள். ஏனெனில், சூத்திரன் வாக்கைக் கேட்கக்கூடாதாம். அன்றியும் பார்ப்பன பக்க வாத்தியக்காரர்களில் அனேகர் பார்ப்பனரல்லாத வித்வான்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதையும் இழிவாய் கருதுகிறார்கள். பார்ப்பனரல்லாத பக்க வாத்தியக்காரர்கள்கூட ஒரு பார்ப்பனச் சிறு வித்வானுக்கு வாசிப்பதைப் பெருமை யாய்க் கருதுகின்றார்களேயொழிய பார்ப் பனரல்லாத வித்வான்களுக்கு வாசிப்பதைக் கவுரவக் குறைவாகவேக் கருதுகின்றார்கள். அன்றியும் ஒரு பார்ப்பனச் சிறுவன் பாடி னாலும், கருவிகளால் வாசித்தாலும் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு பலே பலே பேஷ் பேஷ் என்று கைத்தட்டுவதும், தலையை ஆட்டு வதும் மெய்மறந்ததுபோல் கண்கள் மேலே சொருகும்படி வேஷம் போடுவதும் அதை ஒன்றுக்கு இரண்டாக விளம்பரம் செய்து அவனுக்கு பிரக்யாதி சம்பாதித்துக் கொடுப்பதிலும்  அதிகக் கவலையாய் இருக்கிறார்கள்.
ஆனால், பார்ப்பனரல்லாத வித்வான் களாயிருந்தால் அவர்கள் எவ்வளவு  பெரிய வித்வான்களாயிருந்தாலும் வேண்டுமென்றே கட்டை சாரீரம் என்பதும், கணக்கு போதாது என்பதும், மேல் தாயின் சுகப்படாது என்பதும் மற்றும் ஏதேதோ பொறுத்த மற்றவைகளைச் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வது எங்கும் வழக்கமாக இருக்கின்றது.
இவைகளை நாம் சுமார் 40 வருஷத் திற்கு மேல்பட்ட நமது பிரத்தியட்ச அனுபவத்தில் கண்டு வந்திருக்கின்றோம்.
ஆகவே நாம் சங்கீத மகாநாட்டில் கலந்துகொள்ள ஆசைப்பட்டதின் முதல் காரணம் சங்கீத ஞானத்திற்கு ஆகவோ, சங்கீத கலை வளர்ச்சிக்கு ஆகவோ மாத்திரம் அல்ல என்றும் மேல்கண்ட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்னும் உயர்வு தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு விரோதமாயிருக்கும் கொடுமையை அழிப்பதற்கே ஒழிய வேறில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இதை உத்தேசித்தே சில சங்கீத சம்பந்தமான சபைகளில் நாம் பேச நேர்ந்த போதுகூட சங்கீதத்தில் இச்சை வைத்ததற்காகவும், சங்கீதத்தை தொழிலாகக் கொண்டதற்கு ஆகவும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்திற்காக இவ்வளவு கேவலமாயும், இழிவாயும் நடத்தப்படுவதாயிருந்தால் சங்கீதக் கலையே அடியோடு அழிந்து போவதே மேல் என்றும் அதனால் யாருக்காவது ஜீவனத்திற்கு கேடு வருமானால் அப்படிபட்டவர்கள் இச்சங்கீதத்திற்கு கருமாதி செய்துவிட்டு ரோட்டில் கல் உடைத்து வயிறு வளர்ப்பதே மேல் என்றும், அத்தொழிலும் ஜீவனமும், சங்கீதத்தை விட கவுரவமும், மேன்மையுமான வேலை என்றும் சொல்லி வந்திருக்கிறோம்.
ஆகவே, சமீபத்தில் ஈரோட்டில் நடக்கும் சங்கீத மகாநாட்டில் மற்ற சங்கீத மகாநாடுகளைப்போல் சங்கீத சாதிரம் என்பதைப்பற்றிப் பேசியே காலம் போக்காமல் சங்கீதத்தை கைக் கொண்ட பார்ப்பனரல்லாத மக்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றும் விஷயத்திலும் அதிகமான கவனம் செலுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நிற்க, இன்றைய தினம் தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், பிடில், மிருதங்கம், கஞ்சிரா, ஜலதரங்கம், கடம், கொன்னைக்கோல், நாதசுரம் முதலிய அனேகம் துறைகளில் நிகரில்லாதவர்களும் மிக்க விற்பத்தி பெற்றவர்களுமாக சுமார் 400, 500, பேர்கள் வரையில் பார்ப்பனரல்லாதார்களில் இருந்தும் அவர்களைப் பற்றிய பெயர்கள்கூட அனேகருக்குத் தெரிய முடியாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றது. அவர்களில் சிலரின் பெயர்களையும் திரு. இராமசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த லிடுப்படி மற்றொரு பக்கத்தில் காணலாம். மற்றப் பெயர்களும் பின்னால் வெளிவரும் இந்த சமயத்தில் நாம் இந்த வித்வான் எல்லோரையும் அவசியம் இம்மகாநாட்டுக்கு வரும்படி இதன்மூலம் அழைக்கின்றோம்.. அவர்களில் அனேகர் அவசியம் வரவும் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். அனேக விதமான சிரோன்மணிகள் வருவதாகவும் வந்து பாடவும் வாசிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நாம் மனப் பூர்த்தியான நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்வதோடு பொதுஜனங்களிலும் சங்கீத கலையிலும் சுயமரியாதையிலும் கவலையுள்ள மக்கள் பெருந்திரளாகக் கூடி வந்து இம்மகாநாட்டைச் சிறப்பிக்கச் செய்து அதை கைக்கொண்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு மேன்மையும் சுயமரி யாதையும் ஏற்படுவதற்கு உதவியாய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 20.04.1930 
-விடுதலை,17.5.16

திங்கள், 16 மே, 2016

மூடர்களே! மூடர்களே!! - சித்திரபுத்திரன்-


மூடர்களே! மூடர்களே! ஒரு சின்ன சங்கதி.  கோவிலின் மீதிருக்கும், கலசம் திருட்டு போகின்றன. அம்மன்கள் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன.  விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்ரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது.
இவைகளின் வாக னத்தில் தேரில் நெருப்பு பிடிக் கின்றது.  அச்சு ஒடிகின்றது.  இவை களின் பயனாய் பலர் சாகின் றார்கள்.  மூடர்களே!  இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலி யவைகள் இருக்கின்றதாக நினைக் கின்றீர்கள்?  உங்களிலும் மூடர் கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல் லுங்கள்.
இன்னும் ஒரே குட்டி சங்கதி, வட்டி வாங்குகிறவன் கோடீசுவரனாகிறான், வட்டி கொடுப்பவன் நாசமாய்ப் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருது கின்றீர்கள்?  இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்..
மூடர் : சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.
பதில் : சரி, அப்படியானால் அந்தக் காரணத்தைக் கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அது தான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)
மூடர் : கடவுளைப் படைப் பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள் தனமாகும்.
பதில் : அப்படியானால், உலகப்படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதை விட இரட்டிப்பு முட்டாள்தன மாகும்.
மூடர் : உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில் : சரி நல்ல காரியமாச்சுது. சனியன் தொலைந்தது.  ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.
குடிஅரசு - கற்பனை உரையாடல் - 04.01.1931

-விடுதலை,27.9.14

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

தொட்டால் தீட்டு என்பது உள்ளவரை நாம் சூத்திரர்கள் தானே!

கோயில்களில் இருக்கும் சிலையை நம் மக்கள்
தொட்டால் தீட்டு என்பது உள்ளவரை நாம் சூத்திரர்கள் தானே!

- தந்தை பெரியார்

இது பகுத்தறிவு மாநாடு, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும், புரிந்து கொள்ள வேண்டியதும் என்ன வென்றால், பகுத்தறிவிற்கு ஏற்ற கருத்து களைப் பரப்ப வேண்டியதும் பகுத்தறி விற்கு  மாறானதை ஒழிக்க வேண்டும் என்பதே ஆகும்.
பகுத்தறிவிற்கு விரோதமாக மனித சமுதாயத்திற்குக் கேடாக இருப்பவை நம் கடவுள், மதம், சாஸ்திர, புராண, இதி காசங்கள் என்பவை ஆகும். அவை நம் இழிவை நிலை நிறுத்துவனவாக இருப்ப தோடு, நம்மை அறிவு பெற முடியாமல் முட்டாள்தனம், மூடநம்பிக்கை ஆகிய வற்றை வளர்ப்பனவாகவும் இருப்பதோடு, இவை யாவற்றையும் ஒழித்து மக்கள் பகுத்தறிவு பெறவும், இழிவு நீங்கவுமான தொண்டினைச் செய்கின்றோம். நாம் அறிவு பூர்வமாக ஏற்பட்ட சாதனங்களை ஒழிக்க முற்பட்ட  மக்கள் காட்டுமிராண்டி களாக இருந்து தாய்- அக்காள்- தங் கையைப் புணர்ந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்க்கை என்பதே இன்னது என்று தெரியாமல் வாழ்ந்த காலத்தில், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள் களையும்,  மதங்களையும், புராணங்களை யும் ஒழிக்க வேண்டும் என்று, செய் கிறோம்.  இதை நாம் எப்போதோ  ஒழித் திருக்க வேண்டும். அறிவுக் காலத்தில் ஏற்பட்டவற்றை அழிக்க வேண்டுமென்று சொல்லவில்லை அதற்கு முன் காட்டு மிராண்டித் தன்மையுள்ள கடவுள்- மதம்-சாஸ்திரம் புராணம் போன்ற இவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதைக் கடுகு அளவு அறிவுள்ளவனும் எதிர்க்க மாட்டானே; இவற்றைத் தன் பகுத்தறிவற்ற மடமையால் தன் சுயநலத்திற்காக, அயோக்கியத்தனத்திற்காகப் பாதுகாக்கின் றான் என்பதைத் தவிர வேறு காரணம் அவசியம் எதுவும் கிடையாது. தாயோடு, அக்காள், தங்கையோடு, மிருகத்தோடு புணர்ந்தவன் எல்லாம் உயர்ந்த ஜாதி. ஒழுக்கத்தோடு வாழ்ந்தவன், கீழ்ஜாதி என்று எதற்காக இப்படி இருக்க வேண் டும்?  நம் நாட்டில் தோன்றிய மகான், மகாத்மா, ரிஷி, எவனும் இதைப்பற்றிக் கவலைப்பட வில்லையே!
எதற்காக  இந்த நாட்டில் கோயில்கள்? எந்தக் கடவுள் யோக்கியன்? எந்தக் கடவுளின் மனைவி யோக்கியமாக இருந் தாள்? கடவுளையும், மதத்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? இவற்றை ஏற்றுக் கொள்கிறேன் என்றால் கடவுளைப் போல உன் மனைவியையும் பிறனுக்கு விட்டுக் கொடுக்க சம்மதிக்க வேண்டும். கடவுளை- மதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்கிற எவன் இதற்குச் சம்மதிப்பான்? இதைக் காப்பாற்றிய சுத்தக் களிமண் மண்டைக் காரனெல்லாம் மகான், மகாத்மாவாகிவிட் டான்.  இவற்றை ஒழித்தாக வேண்டும். எந்தவித தாட்சண்யத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது. மடமையால் ஏற்படுத் தப்பட்டு மக்களிடையே புகுத்தப்பட்டவை தான் இவை ஆகும்.
மதங்கள் என்பவை- எந்த மதங்களாக இருந்தாலும், அவை அனைத்தும் மூட நம்பிக்கை நிரம்பியவையே ஆகும். மதத் தலைவர்கள் அத்தனை பேர்களும் அயோக்கியர்களே ஆவார்கள். மதத் திற்கு ஆதாரம் என்னவென்றால் வேதம் என்கின்றான், வேதம் எப்போது உண்டாகி யது? யாரால் உண்டாக்கப்பட்டது? என்ப தற்கு ஆதாரமே இல்லை. முட்டாள்தனத் தையும், மூடநம்பிக்கையையும் புகுத்தித் தான் மதத்தை உண்டாக்கி இருக்கின்றான். வேத- மதத்தை உண்டாக்கியவன்  மனிதனுக்குப் பிறக்கவில்லை, மனிதத் தன்மையோடு இருக்கவில்லை. நாய்க்கும், மானுக்கும், மீனுக்கும் பிறந்ததாகத் தான் ஆதாரங்கள் இருக்கின்றன. இதை ஏற்றுக் கொள்பவன் சுத்த மடையனாக இருக்க வேண்டும். ஒத்துக் கொள்ள வேண்டும், நம்பவேண்டும். ஏன் என்று கேட்கக் கூடாது என்று சொல்லித் தான் ஒத்துக் கொள்ளச் செய்கிறான். கிறிஸ்தவ மதத்தை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றால், கிறிஸ்து, அப்பன் இல்லாமல் பிறந்தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்; இப்படி ஏதாவது முட்டாள்தனத்தை வைத் துத்தான் எந்த மதத்தையும் ஒத்துக் கொள்ள வேண்டும். அறிவிற்கு ஏற்ற மதம் எதுவும் கிடையாது.
மனிதன் பாரதத்தை, இராமாயணத்தை, ஒத்துக் கொள்ள வேண்டுமானால் அதி லுள்ள முட்டாள்தனங்களை, மூடநம்பிக்கை களை ஒத்துக் கொண்டாக வேண்டும்; மனிதன் 60 ஆயிரம் வருஷங்களாக வாழ்ந் தான்; 60 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டான் என்பதை நம்பியாக வேண்டும்; இவற்றை எல்லாம், அவன் ஒத்துக் கொண்டால் தான் இராமனைக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும். கடவுள் எதற்காகத் தம் மனைவியை இன்னொருத் தனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்? நாம் இந்தக் காட்டுமிராண்டித் தன்மையை உடையவற்றைத் தான் ஒழிக்க வேண்டும் என்கின்றோம். மனிதனை மடையனாக்கும் முட்டாள்தன, மூடநம்பிக்கைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
நம்மை ஏய்ப்பதற்குக் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும், காட்டுகின் றானே ஒழிய, சொல்கின்றானே ஒழிய, அதன்படி அவன் நடப்பது கிடையாது. அதில் உள்ள எதையும் அவன் கடைப் பிடிப்பது கிடையாது, நம்புவதும் கிடையாது. அவன் (பார்ப்பான்) உழைக்காமல் உயர்ந்த சாதிக்காரனாக, உயர்வாழ்வு வாழ வேண் டும் என்பதற்காக நாம் இழிமக்களாக, மடை யர்களாக வாழ வேண்டுமா? திருடர்கள் ஏமாந்து போய் விடுவார்களே என்று, நாம் கதவைத்திறந்து வைத்துக் கொண்டு படுத் துக்கொள்ள முடியுமா? இது அறிவு மடை மையாகுமா என்று சிந்திக்க வேண்டுகின் றேன்.
அயோக்கியத்தனங்களை, மடமை களை, முட்டாள்தனங்களை ஒழிக்க வேண் டும் என்றால், துணிய வேண்டும். வயிற்றுப் பிழைப்பிற்காக, சுயநலத்திற்காக, ஒவ் வொருவன் துணிந்து காரியம் செய்யும் போது, நாம் நம் சமுதாய இழிவைப் போக்கிக் கொள்வதற்காகப் போராடுவது தவறில்லையே! பார்ப்பானை விட நாம் எதில் குறைந்தவர்கள். பார்ப்பான் நம்மை விட எதில் உயர்ந்தவன்? அவன் மட்டும் கோவில் சிலைக்கருகில் போகலாம் என்கிற போது நாம் மட்டும் போகக்கூடாது? போனால் என்ன கெட்டுவிடும்? உண்மை யான கடவுள் என்றால் அதற்கு எதற்காகப் பேதம்? எதற்காக சாமிக்குக் கதவு? அரச மரத்தடியில் இருக்கிறச் சிலையை நாய் நக்கி விட்டுச் செல்கிறது, கேட்க நாதி யில்லை. அதே சிலையைக் கோவிலுக்குள் வைத்தால் மட்டும் தீட்டு- தொடக்கூடாது என்றால், என்ன அர்த்தம்? கோயிலிலி ருக்கிற சிலைக்கு என்னென்ன சடங்கு நடக்கிறதோ, அத்தனையும் தான் மரத் தடியில் இருக்கிற சிலைக்கும் நடக்கிறது. மரத்தடியிலிருக்கிற, எந்த சாமிக்கும் மனிதன் தொட்டதால், நாய் நக்கியதால் சக்திபோய்விட்டதாக சொல்லப்படுவது இல்லையே! பார்ப்பான் தன் பிழைப்பிற்காக நாம் தொடக்கூடாது என்றாக்கி வைத்திருக் கின்றானே ஒழிய, மற்றப்படி அதில் ஒன்று மில்லையே. மனிதனுக்கு அறிவு வரும், அவனே உள்ளே செல்வான்- சிலையைத் தொடுவான் என்று எதிர்பார்த்தோம். இதுவரை வரவில்லை. எனவே நாம் தான் செய்யவேண்டும். சாமியைப் பற்றிச் சொன்ன எவனும் அதைத் தொட்டால் தீட்டு என்று சொல்லவில்லை. அதைக் கொண்டு பிழைக்கிறவன், அதனால் உயர் வாழ்வு வாழ்கின்றவன் தான் சொல் கின்றான், நாம் தொட்டால் சாமி  தீட்டாகி விடும்- சூத்திரன் தொடக்கூடாது என்று. எது வரையில் இந்தக் கோயிலும், நாம் அங்குப் போனால் தீட்டு என்பதும் இருக் கின்றதோ அதுவரையில் நாம் சூத்திரர்கள் தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் தானே! நம்மில் சில மடையர்கள் இருக் கின்றார்கள். மானம் போனாலும் சரி யென்றும், வெளியில் நின்று கும்பிட்டு விட்டு வருகின்றார்கள். இவர்களைப் போன்ற மானமற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. அவர்கள் வரு வார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கக் கூடாது. அவன் முகத்தில் காரித்துப்பிவிட்டு நாம் காரியத்தில் இறங்கியாக வேண்டும்; அவனவன் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக, சொந்த சுயநலத்திற்காகப் போராடுகின் றான், கிளர்ச்சி செய்கின்றான். நாம் போராடப் போவது நாமக்காகவோ, நம் சொந்த சுயநலத்திற்காகவோ அல்லவே! இந்நாட்டிலிருக்கிற, நம் சமுதாய மக்கள் அனைவரின் இழிவு, சூத்திரத்தன்மை, மானமற்றத் தன்மை, அறிவற்ற, முட்டாள் தன, மூடநம்பிக்கைளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தானே போராடப் போகின் றோம்.  இதற்கு நாமெல்லாம் தயாராக இருந்தால் தானே முடியும்? விரைவில் இதற்கான போராட்டத்தைத் துவக்கலாம் என்றிருக்கின்றேன். அதற்கு நீங்களெல் லாம் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே, இது போன்ற மாநாடுகள் கூட்டி மக்களுக்கு விளக்கம் செய்கின்றோம்.
முன்னேற்றக் கழகத்தில் கலவரம் வரும் என்று கருதினேன். கட்சி ஒழிந்து போய் விடுமோ, என்று கூடப் பயந்தேன். ஆனால் நம் நல்வாய்ப்பாகத் தலைவர் தேர்தலில் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். தலை மைப் பதவிக்குப் போட்டியிட்ட கருணாநிதி அவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டதோடு, நாவலர் அவர்களும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். இப்போது கருணாநிதி கட்சிக்கு, ஆட்சிக்கு, இயக்கத்திற்குத் தலைவர்.
20 வருஷமாகத் தலைவர் இல்லாமலி ருந்தது, அந்த கட்சி. ஏனில்லாமல் இருந்தது என்றால், அண்ணா அந்தக் கட்சியை ஆரம்பித்த போதே இந்தக் கட்சிக்குத் தலைவர் பெரியார் தான், அவர் வருகிற வரை இந்தத் தலைவர் பதவி யாருக்கும் கிடையாது. அவர் வந்து அமருகிறவரை தலைவர் நாற்காலி காலியாகவே  இருக்கும், என்று சொல்லிப் பொதுச் செயலாளர் என்கின்ற பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு வந்தார். இன்றைக்குத் தான் இந்தத் தலைவர் நாற்காலி பூர்த்தி செய்யப்பட்டது. இந்நிலைக்குத் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்ட நாவலர் அவர் களையும், கலைஞர் அவர்களையும், பாராட்டு கின்றேன். கட்சி இனி எவ்விதக் கலகம் இல்லாமல் நடக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கிருந்த பெரிய கவலை தீர்ந்தது. நம்முடைய வாழ்வும், நம் எதிர் காலமும் இந்த ஆட்சியிடமே இருக்கின்றது. இவர்களால் தான் தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியுமே தவிர மற்ற எவராலும் நம் மக்களுக்கு இவ்வளவு நன்மைகள் செய்ய முடியாது.
குணம் குடி கொண்டார் உயிருக்கு உயிர்தான் இல்லாவிட்டால் என்று சொல்லி, அதை ஒப்பிட்டுக்காட்ட மிக அசிங்கமானதைச் சொன்னான். அது போல் நம் கொள்கைக்கு ஆதரவு காட்டுகிற வரை நாம் உயிருக்கு உயிராக இருப்போம். நம் கொள்கைக்குக் கேடு விளையுமானால், நாம் அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நம் சமுதா யத்திற்கு நன்மை செய்கின்ற இந்த ஆட் சிக்கு நம்மாலான ஆதரவைக் கொடுக்க வேண்டும். எதிரிகளால், அவர்களுக்குத் தொல்லை வராமல் பாதுகாக்க வேண்டும்.
கடவுள் என்பது மடையர்களால், முட்டாள் தனத்தால் உண்டாக்கப்பட்டதே ஆகும். மதம் என்பது சோதாப்பசங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக, உண்டாக்கப்பட் டதே அல்லாமல் அறிவுடைய மக்களுக்கு அல்ல என்பதை உணர வேண்டும். இனிமேல், எவனும் கோயிலுக்குப் போகக் கூடாது. சாம்பல், மண் பூசக்கூடாது. பெண் களைக் கோயில்களுக்கு அனுப்பக் கூடாது, மத விழாக்கள் கொண்டாடக் கூடாது.
இந்தக் கடவுள்-மதத்தால் தான் நம்நாடு இழிநிலைக்கு வந்தது. கிறிஸ்துவ நாடு கிருஸ்துவ மதத்தால் முன்னுக்கு வர வில்லை. கிறிஸ்தவ மதத்தைத் தாக்கிய தால்- அதன் ஆபாசங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தியதால் தான் அறிவுபெற்று பல அதிசய, அற்புதங்களை  அறிவின் பயனால் செய்கின்றனர். அதைப் போன்று நம்நாட்டு மக்களும் அறிவு பெற்று முன்னேற்றமடைய வேண்டும்.
27. 7.1969 அன்று சிதம்பரத்தில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
(விடுதலை,  4.8.1969.)
-விடுதலை,27.12.15

நம் மக்கள் கட்டிய கோயில்களில் அவர்கள் உரிமையோடு செல்ல முடியாமல் பார்ப்பான் தடுப்பதா?


- தந்தை பெரியார்
தந்தை பெரியாரவர்கள் 21.7.1969. அன்று சிதம்பரத்தில் அறிவுரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:
எந்த நிலையில் பேசுகிறேன் என்றால் நீங்களெல்லாம் காலையிலிருந்து உட் கார்ந்து மிகச் சலிப்படைந்திருக்கிறீர்கள். என்னுடைய உடல் நலமானது மிக மோசமான நிலையிலிருப்பதோடு மிக வேதனையோடு இருக்கிறேன்; ஆஸ்பத் திரியில் இருந்து இந்நிகழ்ச்சிக்காகவே வந்திருக்கின்றேன்; முடிந்ததும் நேராக ஆஸ்பத்திரிக்குப் போக இருக்கின்றேன்; இது மாநாடு, என்றாலும் மாநாட்டிற்கு வரும் அளவிற்கு  மக்கள் வரவில்லை. நாளைக்கு நான் தலைமை வகிக்கும் படியான வாய்ப்பு இருப்பதால் நாளைக்கு நிறையப் பேச இருக்கின்றேன். நான் பேசவேண்டியது ஒன்றும் பாக்கியில்லை. நீங்களும் கேட்க வேண்டிய அளவிற்குக் கேட்டிருக்கின்றீர்கள். இனி பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை, செயல் முறையில் ஈடுபட வேண்டும். அதற்கு உங்களை எல்லாம் உற்சாகப்படுத்தவே, இது போன்ற மாநாடுகள் கூட்டுக் கின்றோம். அது தான் இம்மாநாடு கூட்டுவதன் இலட்சியமாகும்.
திராவிடர் கழகம் என்றால் என்ன? அதன் கொள்கை என்ன? அதனால் மக்கள் அடைந்த பலன் என்ன? அது எப்போது எதற்காகத் துவக்கப்பட்டது? என்பது பலருக்குத் தெரியாது. அதை முதலில் விளக்க வேண்டும். 1916- இல் முதன் முதல் தியாகராய செட்டியார், டி எம் நாயர் என்கின்ற இரு கனவான்களால் ஆரம்பிக்கப்பட்டது. காங்கிரஸ், பார்ப் பனர்களின் ஸ்தாபனமாக இருந்து வெள்ளையனுக்குத் துதி பாடியதால் அரசாங்கத்தில் பார்ப்பனர்களுக்கே, பதவி உத்தியோகங்களில் பங்கு பெறுவதைப் பார்த்துப் பார்ப்பனரல்லாதாரும் உரிமைப் பெற வேண்டும் என்பதற்காக, பார்ப்பன ரல்லாதார் இயக்கமாக ஆரம்பிக்கப் பட்டது. இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, பார்ப்பனர் அல்லாதாருக்கு, அரசாங்கம் பதவி உத்தியோகங்களில் பங்குபெற ஆரம்பித்ததும், காங்கிரஸ் தாங்கள் மக்களின் நல்வாழ்விற்காகத் தொண்டு செய்வதற்காகப் பாடுபடுவதாகவும், பார்ப்பனரல்லாதார் கட்சி - ஜஸ்டிஸ் கட்சி பதவி வேட்டைக்காக உள்ள கட்சியாகும் என்றும், மக்களிடையே பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் பலனாக காங்கிரசிற்குச் செல்வாக்கு ஏற்பட்டது. அப்போது நானும், சிலரும் அதன் நிர் மாணத் திட்டங்களை நம்பிக் காங்கிரசில் சேர்ந்து பிரசாரம் செய்து கொண்டிருந் தோம்: மக்களின் செல்வாக்கு அதிக மானதும் அதுவரை தேர்தலுக்கு நிற்ப தில்லை என்றிருந்த, காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தது.  நான் அதை எதிர்த்தேன். என் எதிர்ப்பை இலட்சியம் செய்யாமல் நிற்பது என்று தீர்மானித் தார்கள். அப்போது நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நான் உடனே அதை விட்டு விலகி வெறியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து, மக்களின் பகுத்தறிவற்ற தன்மைக்கும், மூட நம்பிக்கை- முட்டாள் தனத்திற்கும், இழிவிற்கும் அடிப்படையாக இருந்த கடவுள் , மதம் , சாஸ்திரம், பார்ப்பான், காங்கிரஸ் - காந்தி ஆகியவை ஒழிய வேண்டும் என்று பிரசாரம் செய்த தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கமான ஜஸ்டிஸ் கட்சியையும், ஆதரித்துப் பிர சாரம் செய்தேன். அந்தத் தேர்தலில் காங் கிரஸ் தோற்று ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வந்தது.
பிறகு நடைபெற்ற தேர்தலில் காங் கிரஸ்  வெற்றி பெற்று 1937-இல்  பதவிக்கு வந்ததும், 2000 பள்ளிக்கூடங்களை மூடியதோடு, இந்தியைக் கட்டாயப் பாடமாகிற்று; அத்தோடு நில்லாமல் ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்தவர்களின் ஜமீனில் சென்று தொல்லை கொடுத் தார்கள்; தொழில் செய்து கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களின், தொழிலாளர் களைத் தூண்டிவிட்டு ரகளை செய்யும் படிச் செய்தார்கள். ஜமீனுக்கு வரி செலுத் தக்கூடாது என்று விவசாயிகளிடையே பிரசாரம் செய்தார்கள்; இப்படிப்  பல வகையில் தொல்லை கொடுக்க ஆரம் பித்ததும்,  ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த, பலர் அதை விட்டு விலக ஆரம்பித் தார்கள்; இப்படியே ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருந்தால், கடைசியில் கட்சியே அழிந்து விட்டது என்றாகிவிடும். இதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொப்பிலி முதலி யவர்கள் யோசித்து, தலைமைப் பதவியை என்னிடம் கொடுத் தால் கட்சி அழியாமல் நான் பார்த்துக் கொள்வேன் என்று தீர்மானித்து, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் காரணமாக நான் ஜெயிலிலிருந்து கொண்டிருக்கும் போதே, என்னை ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
அதன்பின் 1944- இல் வெள்ளைக் காரன் ஆட்சி இருக்கும் போதே சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நான், ஜஸ்டிஸ் கட்சி தேர்தலில் நிற்பது கூடாது, அரசாங்கப் பதவி- பட்டங் களை ஜஸ்டிஸ் கட்சியை சார்ந்தவர்கள் ஏற்கக்கூடாது என்கின்ற திட்டத்தைக் கொண்டு வருவது என்றிருந்தேன். இதைத் தெரிந்த படித்த பதவி ஆசை கொண்ட வர்கள், எனக்குக் எதிராக கிளம்பி அந்த மாநாட்டிற்கு வேறு தலைவரைத் தேர்ந் தெடுப்பது என்று தீர்மானித்து, எனக்கு எதிராக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருந் தார்கள். இது எனக்குத் தெரிந்ததும் நான் மாநாட்டிற்குப் போவதில்லை என்று தீர்மானித்து  ஈரோட்டிலேயே தங்கி விட்டேன். அப்போது அண்ணாதுரை அவர்கள் என்னிடம் வந்து, மாநட்டிற்கு நான் அவசியம் வர வேண்டுமென்று கேட்டார். நான் அங்குள்ள நிலைமைகளை விளக்கி என் திட்டங்களையும் சொல்லி, இவற்றை மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு வருவதாக இருந்தால் நான் வருகிறேன், என்று சொன்னேன்.
அவர் ஒத்துக்கொண்டு வெளியூர் தோழர்கள் யாவரிடமும்  தீர்மானங்களை அனுப்பி அவர்கள் ஆதரவைப் பெற்றதோடு, பல்லாயிரக் கணக்கான தோழர்களைச் சேர்த்து விட்டார். மாநாடு நடைபெறுகின்ற அன்று எதிரிகளைப் போல 4, 5 மடங்கு களுக்கு மேல் நம்மவர்கள் கூடிவிட்டார்கள்.  இதைக் கண்டதும் வரவேற்புக்குழுத் தலைவர் நம் பக்கம் திரும்பிவிட்டார்.  மாநாட்டுப் பந்தலில் டிக்கெட் இல்லாமலே எல்லோரும் நுழைந்து, எதிரிகளுக்கு ஒரு சிறுவாய்ப்பும் இல்லாமல் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததோடு என் தீர்மானங்கள் யாவற்றையும் அண்ணா துரை தீர் மானங்கள் என்கின்ற பெயரில் எதிர்ப் பில்லாமல் நிறைவேற்றினார்கள்.
அந்த மாநாட்டில் தான் இயக்கத்தின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றினார்கள்; அந்தத் திராவிடர் கழகத் தின் மாநாடுதான் அதாவது ஆதி ஜஸ்டிஸ் கட்சியின் பார்ப்பனரல்லாதாரின் மாநாடு தான் இதுவாகும்: இந்தக் கருத்துகளை 40 ஆண்டுக் காலமாக மக்களிடையே பிர சாரம் செய்ததன் காரணமாக, மக்களி டையே செல்வாக்கு அதிகரித்ததும், இதில் இருந்த சிலர் எத்தனை நாளைக்குப் பிரசாரத்தோடு மட்டும் நிற்பது, தேர்தலில் ஈடுபட்டுப் பதவிக்குப் போக வேண்டும் என்று கருதி, நம்மைப் பின்னேற்றம் என்றும், அவர்களை முன்னேற்றம் என்றும் சொல்லிக் கொண்டு, நம்மை விட்டு விலகிச் சென்றார்கள். நாம் அவர்களைக் கடுமை யாக எதிர்த்தும் கூட பார்ப்பானின் முட் டுக்கட்டையால், வெற்றி பெற்றனர். காங்கிர சிலிருந்து, பார்ப்பானை வெளியேற்றி னாலும், பார்ப்பானைப் போலக் கருத்துள்ள பக்தவத்சலம், காமராசருக்குப் பின் ஆட் சிக்குவந்து காமராசர் செய்த நன்மைகள் எல்லாம் கேடாக நடந்து கொண்டதால்,  நாம் பக்தவத்சலம் ஒழிக  என்று ஒரு பக்கமும், தி.மு.கழகம் ஒழிய வேண்டும் என்றும் பிரசாரம் செய்ததால் இரண்டையும் கேட்ட மக்கள் தி.மு.கழகத்திற்கே ஓட்டுப் போட்டு அவர்களை வெற்றி பெறச் செய்து விட்டார்கள்.
வெற்றி பெற்றதும் தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நம்மைக் கேட்டுக் கொண்டார்கள்; அப்போது நாம் அவர் களை ஆதரிக்கவில்லை என்றால், அவர்கள் பார்ப்பனர்களிடமே சென்று விடுவர்; எனவே, நாம் அவர்களை ஆத ரித்து வருகின்றோம். அதனால் பல நன்மை களை நம் மக்கள் அடைந்து வருகின்றனர்.
நாமடைய வேண்டியதை நம் எண்ணிக் கைப்படி அடைய வேண்டும். பார்ப்பான் 100க்கு 3 பேர்கள்- அவர்கள் 100க்கு 100 பேர்களும் படித்திருக்கின்றார்கள்.  100க்கு 97 பேர்களாக இருக்கிற நாமும் 100க்கு 100 பேர்களும் படித்தவர்களாக வேண்டும், பதவி- உத்தியோகங்களில் நம் விகிதாசாரப் படி உரிமை பெற வேண்டும்.  100க்கு 3 பேர்களாக இருக்கிற பார்ப்பனர் தன் விகிதாசாரத்தைப் போல் 10, 15 பங்குக்கு மேல் அனுபவித்துக் கொண்டிருக்கின் றார்கள். நாம் நமக்குரிய பங்கையே இன்ன மும்  பெறவில்லை, இந்த ஆட்சியின் மூலம் அதைப்பெற வேண்டும்.
கிராமம், நகரம் என்ற பிரிவு இருக்கக் கூடாது; நகரத்தைப் போலவே கிராமமு மிருக்க வேண்டும். நகரத்திலிருக்கிற வசதிகள் அத்தனையும் கிராமத்திலும் இருக்க வேண்டும். முதலாளி, தொழிலாளி என்பது தொழிலில் இருக்க வேண்டுமே தவிர, பொதுவில் இருவருக்கும் பேதம் இருக்கக்கூடாது. இருவருக்கும் சரிசமமான உரிமை இருக்க வேண்டும்.
காந்திக்குப் பின் நாட்டில் ஒழுக்கம், நாணயம், நேர்மை இவை எல்லாம் கெட்டு விட்டது. இப்போது தஞ்சாவூர் ஜில்லா விலே கம்யூனிஸ்ட்கள் டிராக்டரைக் கொண்டு உழுவதைத் தடுக்கின்றனர்.
ஒருத்தன் சொத்திலே ஒருத்தன் போய்ப் புகுவதை அனுமதிக்கின்றான். நமக்கு உரிமையுள்ளதில் போய்ப் புகுவதில் என்ன தவறு? இந்தக் கோயிலைக் கட்டியது நாம்; அதற்கு வேண்டியவை அத்தனையையும் கொடுப்பது நாம். நமக்கு உரிமையான கோயிலுக்குள் நாம் போவது எப்படித் தவறாகும்?  நமக்கும் - கோயிலுக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத பார்ப்பான், உள்ளே இருந்து கொண்டு நம்மை வெளியே நில் நீ சூத்திரன் என்கின்றான். உள்ளே  வந்தால் சாமி தீட்டாகிவிடும் என்கின்றான். இன்னும் எத்தனை நாளைக்கு, நாம் இந்த இழிவைப் பொறுத்துக் கொண்டு சூத்திரனாக இருப்பது? நாம் இதை நீக்காமல் போனால் வேறு யார் வந்து நீக்குவார்கள் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.
திராவிடர் கழகத்தின் இலட்சியம் மனிதன் மனிதத் தன்மையைப் பெற்று மனிதனாக வாழ வேண்டும் என்பது தானாகும். அதற்கு எதிராக உள்ள கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், சாதி ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.
நம் இழிவு பூரணமாக நீக்கப்பட்டு, மற்ற உலக மக்களைப்போல் நாமும் வாழ வேண்டுமானால்,  நாம் நம் நாட்டைப் பிரித்துக் கொள்ள வேண்டும். டில்லிக்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்று பிரிந்து கொள்ள வேண்டும். பிரிந்தால் நம் பிள்ளைகளும் நாளைக்குச் சந்திரனுக்குப் போவார்கள், நம் நாடும் மற்ற, நாடுகளைப் போல பல அதிசய, அற்புதங்களைச் செய்ய முடியும். மற்ற உலக நாடுகளைப் போல முன்னணியில் நிற்க முடியும்.  பிரிந்தால் எப்படி வாழ முடியும் என்று பயப்பட வேண்டிய தேவை இல்லை. துலுக்கன் 100க்கு 5 பேர்; அவன் தன் நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொண்டு வாழ்கின் றான், அவனுக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடவில்லையே! இப்படி நமக்குப் பல இலட்சியங்கள் இருப்பதால் நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அன் போடு நண்பர்களாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர், நட்போடு  பழக வேண்டும்.
நாமெல்லாம், ஒருவர் என்கின்ற இன உணர்ச்சி பெற வேண்டும். நாய், நல்ல விசுவாசமுள்ள பிராணிதான் என்றாலும், அது அதை (நன்றியை) மனிதனிடம்தான் காட்டுகிறதே ஒழிய, தன் இனத்தைச் சார்ந்த வேறொரு நாயைக் கண்டால் குலைக்கும். அது போல் தான் நம் தமிழர்கள் நிலை இருக்கிறது. தங்கள் இனத்தை மாற்றானுக் குக் காட்டிக்கொடுப்பதும், தங்கள் இனத் திற்குத் துரோகம் செய்வதையுமே, கடமை யாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலை ஒழிந்து மாற்றானுக்கு- பார்ப் பானுக்கு இருக்கிற இன உணர்ச்சியை நம் மக்கள் பெற வேண்டும். என்ன செய்தும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்தாலும் இது நம் ஆட்சி என்கின்ற உணர்ச்சி நம் மக்களுக்கு ஏற்பட வேண்டும்: இந்த ஆட்சி நம் இனத் தவர்கள் ஆட்சி, கண்டிப்பாய்ச் சொல் கிறேன், இவர்கள் காலத்திலேயே இந்தக் கோயில்களை எல்லாம் இடிக்கலாம். இன்னும் 10 வருஷம் இந்த ஆட்சி இருந் தால் நிச்சயம் ஒரு பார்ப்பான் இருக்க மாட் டான்; இருக்க நேர்ந்தால் பூணூலையும், குடுமியையும் வெட்டிவிட்டுக் கையிலே மண்வெட்டியோடு வந்துவிடுவானே!
பெண்களுக்கு, உரிமை கொடுக்க வேண்டுமென்று சொல்கிற, நான் ஒரு விஷயத்தில் பெண்களை ஆண்கள் கண்டிக்க வேண்டும் என்று சொல்கிறேன். எதில் என்றால், பெண்கள் கோயிலுக்குப் போவதை ஆண்கள் கண்டிக்க வேண்டும். அவர்கள் கோயிலுக்குப் போகவிடாமல் தடுக்க வேண்டும். சினிமாவிற்கும் அப்படித்தான், கண்டிப்பாய் சாம்பல், மண் பூசக் கூடாது. மத சம்பந்தமான விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடக்கூடாது.
நம் இயக்கத்தைப் பொறுத்தவரை நாம் அனைவரும் பகுத்தறிவு வாதிகள்; பகுத் தறிவுவாதிகள் என்பது அறிவுக்கு மட்டு மல்ல, மனித சமுதாயத் தொண்டிற்கும், முன்னேற்றத்திற்குமே ஆகும். நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவது அதன் மூலம் மனிதனை முன்னேற்றமடையச் செய்யவும், மனிதனின் மூட நம்பிக் கையை ஒழித்து அவனை அறிவைக் கொண்டு சிந்திக்கச் செய்து, அறிவின்படி நடக்கச் செய்ய வேண்டும் என்பதற் காகவுமே ஆகும்.
நம்மைச் சுற்றிலும் நம் எதிரிகள் இருக் கின்றார்கள்; எதிர் கருத்து உடையவர்கள் இருக்கின்றார்கள். நமக்கிருக்கிற மத சம்பந்தமான-அரசியல் சம்பந்தமான - ஜாதி சம்பந்தமான - கடவுள் சம்பந்தமான - பழைமை- வைதிக சம்பந்தமான எதிரிகளோடு பத்திரிகைகள் யாவுமே நம் கருத்துக்கு நேர்மாறான கருத்துகளைப் பரப்புவதாக, இருக்கின்றன என்றாலும், இவற்றை எல்லாம் எதிர்த்து நம் கருத் துகளைப் பரப்பிக்கொண்டு வருகின்றோம். இந்தப் பகுத்தறிவு இயக்கம் ஆரம்பிக் கப்பட்டு 45 வருடங்கள் ஆகின்றன. என்றாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நமது கொள்கைகளை விட்டுவிடவும் இல்லை, மாற்றவும் இல்லை.
அடிக்கடி நம் திட்டங் களை மாற்றியமைத்து இருக்கின்றோமே ஒழிய, கொள்கையில் ஒரு சிறு மாற்றமும் செய்யவில்லை என்பதோடு, நம் கொள் கைகள் வளர்ச்சியடைந்தே வந்திருக்கின்றன.
(விடுதலை, 02.08.1969)
-விடுதலை,20.12.15

இனியாவது புத்தி வருமா?(கோயில் நுழைவு நாடகம்)


தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஆலயப் பிரவேசம், என்னும் பேரில் காங்கிரசு செய்து வந்த கிளர்ச்சியை அப்போதே நாம் கண்டித்து எழுதி வந்ததுடன், உலகில் கோவில்களே இருக்கக் கூடாதென்றும், அதற்கு எவரையும் செல்லவிடக் கூடாதென்றும், சொல்லியும் எழுதியும் வந்தது யாவரும் அறிந்ததாகும். மற்றும் கோவில்களைக் கள்ளர் குகையென்று கிறித்துவும், கோவில்கள் இடித்து நொறுக்கித் தள்ளப்பட வேண்டியது என்று முகம்மதுவும், கோவில்கள் விபசாரி கள் விடுதி என்று காந்தியும் சொல்லியிருப்பதும் யாவரும் அறிந்ததாகும்.
தோழர் காந்தியார் கோவில்களை விபசார விடுதி என்று ஒரு சமயத்தில் சொல்லியிருந்தாலும், இப்பொழுது இரண்டொரு வருஷ காலமாய் அவ்விபசார விடுதிக்கு ஆள் பிடித்துவிடும் வேலையை விரயமாய் செய்து வந்ததுடன் அதற்காகப் பத்து லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி வந்ததும் யாவரும் அறிந்ததாகும்.
தீண்டப்படாதாருக்கு அரசாங்கத்தார் அரசியலிலும், உத்தியோகத்திலும் தனித் தொகுதி பிரதிநிதித்துவம் கொடுத்த பிறகு அதை ஒழிக்கக் கருதிய காந்தியார், தீண்டாதாருக்கு நல்ல பிள்ளையாகக் கருதி அவர்களுக்குக் கோவில் பிரவேசம் ஏற்பாடு செய்து கொடுப்பதாய்  வாக்கு கொடுத்து அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டும் என்று சட்டசபை சங்கத்தினர்களுக்கு உபதேசம் செய்து ஒரு மசோதாவும் கொண்டுவரக் கருதிச் செய்து அதை மற்ற மெம்பர்கள் ஆதரிக்க வேண்டு மென்றும் செய்வதாகவும் சொல்லி, அந்தப்படி ஒரு மசோதா கொண்டு வரப்பட்டதும் யாவரும் அறிந்ததாகும்!
அம்மசோதா பொதுஜன அபிப்பிராயத்துக்கு  சர்க்காரால் அனுப்பப்பட்ட சமயத்தில் காங்கிரசு தலைவர்கள் பண்டித மாளவியா முதற்கொண்டு டாக்டர் ராஜன், சத்தியமூர்த்தி இறுதியாக உள்ளவர்கள் அம்மசோதா இந்து மதத்துக்கு விரோதம் என்று சிலரும், அதன் கருத்து ஒப்புக்கொள்ளப் படுவதாய் இருந்தாலும் சட்டம் செய்யக்கூடாது என்று சிலரும் அபிப்பிராயங்கள் கொடுத்து பிரசாரமும் செய்து வந்ததல் லாமல் கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஒரு அறிக்கை வெளியிட்டு அதை காந்தியாரையும் ஒப்பச் செய்து அம் மசோதாவின் தலையில் ஒரு அடி அடித்து அதை கசகச வென்று நசுக்கித் தள்ளிவிட்டார்கள். அவ்வறிக்கை சாரம் என்னவென்றால் :-
தீண்டாமை விலக்கு விஷயத்தில் காங்கிரசு எவ்வித அபிப்பிராயம் கொண்டிருந்த போதிலும் ஆலயப்பிரவேச விஷயத்தில் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும். 1. இந்துக்களல்லாதார் கலந்து ஓட்டு பெற்று மசோதா நிறைவேறுவதைக் காந்திஜியும், காங்கிரஸ்காரரும் விரும்ப வில்லை.
2. மேல் ஜாதி இந்துக்கள் சம்மதமில்லாமல் மத சம்பந்த மான பழக்க வழக்கங்களையோ, சடங்கு களையோ தொடக் கூடாது.
3. காங்கிரசுக்காரர்கள் இம்மசோதாவுக்கு இப்போது எவ்வித அபிப்பிராயமும் கொடுக்கக் கூடாது. இதைப் பற்றி நன்றாய் தீர்க்காலோசனை செய்ய வேண்டி யிருக்கிறது என்பதாகும்.
இதைக் கண்ட பின்பும் மாளவியா எதிர் கட்சி ஆரம் பித்ததைப் பார்த்த பிறகும் தோழர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் ராஜன் முதலியோர் சட்டம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்த பின்பும், சர்க்கார் இம் மசோதா விஷயத்தில் அலட்சியம் காட்ட ஆரம்பித்ததும், பொது ஜன அபிப்பிராயம் சாதகமாயில்லை என்று சொல்ல வேண்டியிருந்ததும், கடைசியாக இதை இந்து சமுகம் ஆதரிக்காததால் சர்க்கார் எதிர்க்க வேண்டியவர்களாகி விட்டார்கள் என்று சொன்னதும், ராஜபகதூர் கிருஷ்ணமாச்சாரியார் தீண்டப்படாதாருக்கு மத விஷயங்களில் சமத்துவம் கொடுக்கக் கூடாது என்று சொன்னதும் ஆன காரியங்கள் அதிசயமான விஷயமாகாது. காங்கிரசுத் தலைவர்கள் கருப்பு (திருட்டு) பாஷையில் பேசினார்கள். சர்க்காரும் ராஜ்பகதூரும் வெள்ளையான பாஷையில் பேசினார்கள் என்பதை விட இதில் பிரமாத வித்தியாசமெதுவும் இல்லை.
கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் சமாதானமானது, குதிரை கீழே தள்ளினதுமல்லாமல் புதைக்கக் குழியும் பறித்தது என்பது போல் இந்த அறிக்கை காந்தியாரின் சம்மதம் பெற்றதாகும் என்றும் சொல்லிவிட்டார்.
இதிலிருந்து காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை தீண்டாதார் விஷயத்தில் சமூக சீர்திருத்த விஷயத்தில் ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிராயம் என்ன என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள நல்லதொரு சமயம் ஏற்பட்டது என்று தான் கருத வேண்டும்.
எனவே இனியாவது தீண்டப்படாதவர்களாகவும் தீண்டப் படாதவர்களாய்க் கருதப் படுபவர்களாகவும், தீண்டப்படாதார் என்று ஆதாரங்களிலும் சர்க்கார் தீர்ப்புகளிலும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறவர்களாகவும், இருந்து வரும் மக்களுக்கு புத்தி வருமா?  அல்லது இன்னமும் காங்கிரசு காங்கிரசு காந்தி காந்தி என்று கட்டி அழுது ஈன ஜாதிக்காரர்கள் என்று உலகோர் கருதவும் கல் மேலெழுதவும் அனுகூலமாய் நடந்து கொள்வதையே கருமமாய் கருதுவார்களா? என்பதே நமது கேள்வி.
- பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934

சுயராஜ்யக் கட்சி செத்தது,
அது நீடூழி வாழ்க
சுயராஜ்யக் கட்சியாரின் யோக்கியதை நாடறிந்ததென்றும் அதற்கு நல்ல பேரில்லையென்றும் ஒரு வாரத்திற்குள்ளாகவே அதன் தலைவர்கள் என்போர்கள் தெரிந்து கொண்டு விட்டதால், அதை அது பிறந்த தீட்டு வீட்டிற்குள்ளாகவே கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு காங்கிரசே சட்டசபை களுக்குப் போட்டிபோட வேண்டும்.
ஆனால் சுயராஜ்யக் கட்சியின் பிரமுகர்களே சட்டசபை போட்டி கமிட்டியில் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டார்கள். இது மக்களை ஏய்க்கச் செய்த சூழ்ச்சியே ஒழிய, மற்றபடி சட்டசபையில் போய்ச் செய்யப் போகும் காரியத்தில் எவ்வித மாறுதலும் இல்லை என்பதோடு, சட்ட சபைக்கு அபேட்சகர்களாகத் தெரிந்தெடுக்கப் போகும் நபர்களிலும் எவ்வித மாறுதல்களும் ஏற்படப் போவதில்லை.
- புரட்சி - கட்டுரை - 27.05.1934
-விடுதலை,19.12.15

சனி, 13 பிப்ரவரி, 2016

மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே!


‘இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது. எல்லா மதங்களும் செத்துப் போய்விட்டன.
செத்த பிணங்களே சடங்கு ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியைக் கொடுத்ததுடன், அதைப் பெருக்கிக் கொண்டே வருகிறது.
உண்மையில் எந்த மதக்காரனும் அந்தந்த மதக் கட்டளைப் படி  நடந்து கொள்ளுவதில்லை; நடந்து கொள்ள முடிவதில்லை.
உதாரணமாக, பவுத்தர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லா மியர்கள், இந்துக்கள் என்பவர்களான சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனைக் காணமுடிகின்றதா? முதலாவதாக, வேஷத்திலும் சடங்கிலுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை.
மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும், வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் கூட நிர்ணயத்துடன் நடக்கவோ, ஆசைப்படவோ கூட முடிகின்றவர் காணப்படுவது இல்லை.
இந்த நிலையில் உள்ள மக்களேதான் இன்று தங்கள் ‘மதங்களைக் காப்பாற்ற வேண்டும்,’ ‘மதத்திற்கு ஆபத்துவந்து விட்டது; தவிர்க்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டு குழிதோண்டிப் புதைக்காமல், நாற்றத்தில் அழுந்திக் கொண்டிருக்கிறார்கள்.
மலத்தில் இருக்கிற புழுக்கள் எப்படி மலத்தின் நாற்றத்தை வெறுக்க முடியாமலும், உடலிலுள்ள மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அதே போல் எல்லா மனிதர்களுமே மதப் பிண நாற்றத்தில் புரளுகின்றனர்.
இதனால் உண்மை உணரமுடியாமல் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.
- தந்தை பெரியார்


மெய்ஞானம் எது? பகுத்தறிவு எது?

ஞானம் - மெய்ஞானம் என்றிடில் கடவுளைப் பற்றிய அறிவு என்றும், மோட்சம் அடைவதற்கான வழிகளை அறிதல் என்றும் கூறுவர் மதத்தினர்.
அதாவது, உலக நல்வாழ்வுக்கல்லாததும், இல்லாத ஒன்றிற்கான அறிவு பெறுதல் என்பர்.
இல்லாததைப்பற்றி அறிந்து கொள்வதால் நற்பயன் பயக்குமோ? பலனுக்காகாத கற்பனை கனவு போன்றில்லையா இக்கூற்று? மெய்ஞானம் - பலன் பயக்கும் உண்மையறிவு எது என்று திருத்தக்கத் தேவர் சிந்தாமணியில் விளக்குகிறார்;
‘மெய்வழி தெரிதல் ஞானம்
விளங்கிய பொருள்கள் தம்மை
பொய்வகையின்றித் தேறல் காட்சி
அய்ம்பொறியும் வாட்டி
உய்வகை உயிரை தேயாதொழுகுதல்
ஒழுக்கம் மூன்றாம்’
நல்லது கெட்டதைப் பகுத்தறியும் உண்மை வழியைக் கண்டறிதலே ஞானம் (உண்மை - நல்லறிவு).
பொருள்களின் உண்மையை பொய் வகையில்லாத வகையில் கண்டறிதலே நற்காட்சி. அதாவது, ஒரு பொருளை நல்லதா கெட்டதா என்று தெளிந்து அறிதலே அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியும் காட்சிப் பிரமாண மாகும். தகாத வழிகளில் வாழ்த்தும் உடலின் அய்ம்பொறி களையும் (பட்டினியால் தவத்தால்) வாட்டி,
வாழ்க்கைச் சக்தியான உயிரைச் சிறுகச் சிறுக நலிவிக்காமல், உயிரையும் அவ்வழி உடலையும் பேணி வாழ்தலே நல்லொழுக்கமாகும். அதாவது, தகாத முறைகளை விடுத்து, நல்ல முறைகளில் சம்பாதித்து வாழ்தலே நல்லொழுக்கம் (நற்சீலம்)ஆகும்.
கடவுள் என்பதன் அருளைப் பெற என்று கூறிக் கொண்டு தவம் செய்தலையும், உண்ணா விரதமிருப்பதையும், கண்டிக்கிறார்.
இவை பயனற்றவை. உயிரையும் உடலையும் சிறுகச் சிறுக நலிவித்து விரைவில் சாவைத் தேடிக் கொள்ளும் இயற்கை முரண் செயல் இவை என்பதே இதன் தெளி பொருள்.
ஊன் வாட, உயிர் வாட மெய்க் காவலிட்டு தான் வாட வாட தவம் செய்ய வேண்டாம் என்று திருமங்கையாழ்வாரும் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.
மெய்ஞானம் (நல்லறிவு, பகுத்தறிவு), நற்காட்சி (நல்ல பொருள்களைக் கண்டறிதல்), நல்லொழுக்கம் ஆகிய மூன்றுமே மக்கள் நல்வாழ்வு - இன்ப சுகவாழ்வு எய்துவதற்கு முக்கிய மூன்று பண்புகள். இவற்றை புத்தர் முத்திரையம் என்றும், சமணர் ரத்தினத்திரையும் என்றும் கூறுவர்.
இந்தப் பகுத்தறிவு மெய்ஞானத்தை நன்ஞானம், மதி ஞானம், சுருதி ஞானம், அவதி ஞானம், மன மெய்ஞானம், கேவல ஞானம் என்று அய்ந்தாக விரித்துக் கூறுவர்.
அதாவது, பொதுப்படையான நல்லறிவு (பகுத்தறிவு) புத்தியைக் கொண்டு, நல்லது கெட்டதைத் தெளிந்தறியும் ஆககம் அறிவு - தெளிந்த மதிநுட்பம் ஒரு பொருளோ, விஷயமோ பொருந்துமா, பொருந்தாதா என்று கண்டறியும் அறிவுத் தொல்லைகளை - கெடுதிகளைக் கண்டறியும் அறிவு - மனதால் உண்மையைக் கண்டறியும் சிந்தனை அறிவு (சிந்தனைச் சக்தி) இழித்தன்மையைக் கண்டறியும் அறிவு என்பவனவாம்.
இதன் ரத்தினச் சுருக்கக் கருப் பொருள்; பகுத் தறிவு பெறு என்ற தந்தை பெரியார் அவர்களின் நல்லுரை யேயாகும் - பகுத்தறிவே நல்வாழ்வளிக்கும் என்பதாகும்.
- விசித்திர சித்தன்.
-விடுதலை,11.12.15

சைவரும் - வைணவரும்!-சித்திரபுத்திரன்


வைணவதாசன்: என்ன தேசிகர்வாள்! உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல்? விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?
சைவபண்டாரம்: அசிங்கம் என்னய்யா வந்தது? ஒரு சிம்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போக முடியாத படி சைவ நெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாம் என்றால், இதில் உமக்கேன் இத்தகைய பொறாமை?
வைணவர்: மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.
சைவர்: என்ன சந்தேகம்?
வைணவர்: ஒரு சிம்டா சாம்பல்பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போய்விடும் என்கிறீர்களே! மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போய் இருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த இழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்!
-விடுதலை,11.12.15