சனி, 21 மே, 2016

சங்கீதமகாநாடு


ஈரோட்டில் மே மாதம் 24, 25 முதலிய தேதிகளில் நடக்கும் இரண்டாவது சுயமரி யாதை மகாநாட்டின் ஆதரவில் வேறு பல மகா நாடுகளும் நடைபெறும் என்பது நேயர்கள் அறிந்ததாகும். அவற்றுள் சங்கீத மகாநாடு என்பதும் ஒன்றாகும்.
சங்கீத மகாநாடு கூட்டம் விஷயத்தில் நமக்குள்ள ஆர்வமானது, சங்கீதம் என்னும் ஒரு கலையானது மிக்க மேன்மையான தென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமுகத்துக்கு அது மிக்க இன்றியமை யாத தென்றோ கருதியல்ல.
உலகத்தில் மக்களுக்குள்ள அநேக விதமான உணர்ச்சி தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் கிடையாதென்பதே நமதபிப்பிராயம். உதாரணமாக, சங்கீதம் என்பது தேசத்திற்குத் தகுந்த படியும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்த படியும் அவரவர்களது அறிவு வளர்ச்சிக்குத் தகுந்த படியும் இருப்பதே தவிர, ஒரே சங்கீத முறையானது உலகத்திற்கெல்லாம் பொருத்தமான தென்று சொல்ல முடியாது. ஒரு நாட்டு சங்கீத உணர்ச்சிக்காரனுக்கு இன்பமாயிருப்பது மற்றொரு நாட்டு வித்வா னுக்கு புரியாததாகவே இருக்கும். மேல் நாட்டு சங்கீத இன்பம் கீழ் நாட்டான் அனுபவிக்க முடியாது. அதுபோலவே, கீழ் நாட்டு சங்கீத இன்பம் மேல் நாட்டானுக்கு இன்பமாக இருக்க முடியாது. ஆனால் பொதுவில் சங்கீதம் என்னும் ஒரு கலை விஷயத்தில் உலக மக்களுக்கெல்லாம் ஒருவித போக் கிய அனுபவமிருக்கின்றதை மாத்திரம் காணலாம். ஆனாலும் அதை ஒருவர் அதிகமாக அனுபவிக்க ஆசைப்படுவார். மற்றொருவர் அதை சாதாரணமாகக் கருதுவார். எப்படி இருந்தாலும் உலகில் உள்ள பல கலைகளில் அதுவும் ஒன்றாய் இருக்கின்றது.
நம்மைப் பொறுத்தவரை, நாம் இம் மகாநாட்டில் கலந்து கொள்வதானது அக்கலையில் உள்ள மேன்மையை உணர்ந்தல்லவென்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றென்ன வெனில் சங்கீதத்துறையிலும் நமது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகவேதான், சுயமரியாதை மகாநாட்டை அனுசரித்து இதை நடத்த வேண்டுமென்று கருதி நாம் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டதாகும்.
எப்படி நமது நாட்டில் மற்ற எல்லாத் துறைகளையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள்ளாக்கி அத்துறையில் மற்ற மக்களைத் தலையெடுக்க ஒட்டாமல் அழுத்தி வைத்திருக்கிறார்களோ அதுபோலவே சங்கீதத்துறையும் முழுதும் பார்ப்பனராதிக்கமாகி அதன் மூலம் நமது பொருள்கள் கொள்ளை போவதுடன், அதைக் கொண்டிருக்கும் நமது மக்களின் சுயமரியாதையும் கொள்ளை போயிருக்கின்றது; போய்க்கொண்டும் வருகிறது. உதாரணமாக, நமது தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் தேர்ச்சியுள்ள பார்ப்பனரல்லாத வித்வான்கள் அனேகர் இருக்கிறார்கள். அதிலும் சங்கீத சம்பந்தமான பல கலைகளிலும் தமிழ் நாட்டிற்கே சிறந்தவர்கள் முதன்மையானவர்கள் - இணையில்லாதவர்கள்  - என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களே யாவார்கள். இப்படி இருந்தாலும் இவர்களது வாழ்வும், அந்ததும் பெரிதும் மிக்க சுயமரியாதையற்றத் தன்மையாகவே இருந்து வருகின்றது. பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்கள் - அதாவது வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங் குழல், பிடில், நாதசுரம், மிருதங்கம், தவில் முதலாகிய வாத்தியங்களில் முதன்மையான பார்ப்பனரல்லாத வித்வான்கள் தங்களிலும் எவ்வளவோ கீழ்த்தரப் பார்ப்பன வித்வான்களால் மிக்க இழிவாகவே நடத்தப் படுகிறார்கள். அது மாத்திரமல்லாமல், இதன் பயனாய் பிரபுக்கள் என்று சொல்லப்படும் பார்ப்பனரல்லாத பணக்காரர்கள் பலரும்கூட பார்ப்பன ரல்லாத வித்வான்கள் என்றால் மிக்க இழிவாகவே கருதும் உணர்ச்சியைக் கொண்டு இருக்கின்றார்கள்.
உதாரணமாக, சென்ற இரண்டு மூன்று வருஷத்திற்கு முன் நாட்டுக் கோட்டை நகரத்தில் ஒன்றான கானாடுகாத்தானுக்கு நாம் போயிருந்த காலத்தில் தென் இந்தியாவுக்கே முன்மையான நாதசுர வித்வான் திரு. பொன்னுசாமி  அவர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபா கொடுத்து ஒரு பிரபு வீட்டு விஷேசத்திற்கு வாத்தியத்திற்காக வரவழைக்கப்பட்டிருந்தார். அப்படிபட்ட அவர் நின்று வாசிக்கும்போது தனது வேர்வையைத் துடைத்துக் கொள்ள ஒரு சிறு வெள்ளைத் துவாலை தன் தோளின்மேல் போட்டுக் கொண்டு வாசிக்கத் தொடங்கினதும்  அவ்வூர் பிரபுக்கள் சிலர் மேளக்காரன் தோளில் துண்டுப் போட்டுக் கொண்டு வாசிக்கலாமா என்று குற்றம் சொல்லி வாசிப்பதைத் தடுத்தார்கள். அதற்கு அந்த வித்வான் பதில் சொல்லமாட்டாமல் விழித்தார். அப்போது சமீபத்தில் இருந்த நமது நண்பர் ஒருவர்  (பட்டுக் கோட்டை அழகிரிசாமி) அவ்வித் வானை நோக்கி நீங்கள் மேல் துவாலையை எடுக்காதீர்கள் அவர்களுக்கு கேட்கப் பிரியமில்லாவிட்டால் போய்விடட்டும் அல்லது நீங்களாவது போய் விடுங்கள்  என்று சொன்னார். இதைக் கேட்ட வீட்டுக்கார பிரபு தனது விஷேச காலத்தில் இந்தப்படி ஒருசம்பவம் நடந்தது, வாத்தியக்காரர் போய்விட்டார் என்கின்ற கெட்டபெயர் வருமே என்று பயந்து சீக்கிரத்தில் வாசிப்பை முடித்துக் கொண்டார். இம் மாதிரியான சம்பவம் அனேக இடங்களில் இன்றும் நடக்கின்றது. மற்றும் பார்ப்பனரல்லாதப் பெண் வித்வான்களாயிருந்தால் உட்கார்ந்து பாடும்போது சபைக்கு ஒவ்வொரு மனிதன் வரும் போதும் எழுந்து எழுந்து கும்பிட்டு விட்டுத்தான் உட்கார வேண்டியிருக்கிறது. ஆண் பாட்டுக்கார வித்வான்களோ பிரபுக்களிடம் பேசும்போதும் இடுப்பில் மேல் வேட்டியை எடுத்து சுருட்டிக் கட்டிக் கொண்டும், முழங்காலுக்கு மேல் இடுப்பு வேஷ்டியைக் கட்டிக் கொண்டும், இடக்கையை வலக்கக்கத்தில் வைத்து வலக்கையால் வாயைப் பொத்தி குனிந்து, மகாராஜா, எஜமான், வாமி, சமுகம் என்று மேல்மரியாதை வைத்து பேச வேண்டியிருக்கின்றது. இப்பிரபுக்களும், இவ்வித்வான்களிடம் பேசும்போது, நீ, அவன், டேய் என்கின்ற ஒருமை, அடிமை முறையில் பேசுவதும் வழக்கமாய் இருக்கின்றது.
இதே தொழிலிலிருக்கும் பார்ப்பனர்களும் தங்கள் சகோதரத் தொழிலாளிகள் பார்ப்பனரல்லாதவர்களாயிருந்தால் அவர்களிடமும் இப்படியேதான் நீ, அவன், அடே என்கிற வரிசை வைத்துதான் பேசுகிறார்கள். ஒரு இரண்டு மூன்று ஜாண் உயரம் உள்ள பையனாயிருக்கும் பார்ப்பன வித்வானும்கூட எட்டரை ஜாண் இருக்கும் பார்ப்பனரல்லாத வித்வானை ஒருமையிலேயேதான் அவன், நீ, அடே என்று பேசுகிறான். அந்தச் சிறு வித்வானிடம் இந்தப் பெரிய வித்துவான்கள் பேசும்போதும் வாமிகள் என்று மரியாதை வைத்துப் பேசுகின்றார்கள். நிற்க, நமது பிரபுக்கள் என்பவர்கள் பார்ப்பன வித்வான்களிடம் பேசும் போதெல்லாம் மரியாதையாகவே பேசுவதும், தாங்களாகவே முதலில் கும்பிடுவதும், இதற்கு பார்ப்பனர்கள் இடதுகையை தங்கள் இடுப்பிற்கு கீழாகக் காட்டி ஆசிர்வாதம் என்று சொல்லுவதுமான காரியங்கள் தினமும் நடந்து வருகின்றது.
ஆனால், சதுர் முதலிய கச்சேரிகளில் தாசிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு அவர்களை ஆட்டுவிப்பவராயிருந்தாலும், தாளம் போடுகிற வராயிருந்தாலும், அல்லது அப்பெண்களுக்கு மாமாக்களாய்கூட இருப்பவர்களாய் இருந்தாலும் அவர்களைக் கண்டால் நமது பிரபுக்கள் கும்பிடுவதும் சுவாமிகளே என்று கூப்பிடுவதும் ஆன காரியங்கள் முக்கியமாக எல்லா கிராமாந்திரப் பிரபுக்களிடமும் இன்னமும் பார்க்கலாம். இவைகள் ஒருபுறமிருக்க, பார்ப்பன பிரபுக்கள் தங்கள் வீட்டு விஷேசங்களுக்கும், சடங்குகளுக்கும் மேளம் வாசிப்பதற்குத் தவிர மற்றபடி சபைக்கச்சேரிகளுக்கு பாடவோ, கதைகள் செய்யவோ கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களை கூப்பிடுகின்ற வழக்கமே ஒரு சிறிதும் இல்லை. அதுமாத்திரமல்லாமல், பார்ப்பனரல்லாதார் பாடுவதையோ, கதை செய்வதையோ புராணம், உபன்யாசம் முதலியவை செய்வதையோ பார்ப்பனர்கள் கேட்பது மதசம்பிரதாயப்படி தோஷம் என்றே கருதி இருக்கிறார்கள். ஏனெனில், சூத்திரன் வாக்கைக் கேட்கக்கூடாதாம். அன்றியும் பார்ப்பன பக்க வாத்தியக்காரர்களில் அனேகர் பார்ப்பனரல்லாத வித்வான்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதையும் இழிவாய் கருதுகிறார்கள். பார்ப்பனரல்லாத பக்க வாத்தியக்காரர்கள்கூட ஒரு பார்ப்பனச் சிறு வித்வானுக்கு வாசிப்பதைப் பெருமை யாய்க் கருதுகின்றார்களேயொழிய பார்ப் பனரல்லாத வித்வான்களுக்கு வாசிப்பதைக் கவுரவக் குறைவாகவேக் கருதுகின்றார்கள். அன்றியும் ஒரு பார்ப்பனச் சிறுவன் பாடி னாலும், கருவிகளால் வாசித்தாலும் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு பலே பலே பேஷ் பேஷ் என்று கைத்தட்டுவதும், தலையை ஆட்டு வதும் மெய்மறந்ததுபோல் கண்கள் மேலே சொருகும்படி வேஷம் போடுவதும் அதை ஒன்றுக்கு இரண்டாக விளம்பரம் செய்து அவனுக்கு பிரக்யாதி சம்பாதித்துக் கொடுப்பதிலும்  அதிகக் கவலையாய் இருக்கிறார்கள்.
ஆனால், பார்ப்பனரல்லாத வித்வான் களாயிருந்தால் அவர்கள் எவ்வளவு  பெரிய வித்வான்களாயிருந்தாலும் வேண்டுமென்றே கட்டை சாரீரம் என்பதும், கணக்கு போதாது என்பதும், மேல் தாயின் சுகப்படாது என்பதும் மற்றும் ஏதேதோ பொறுத்த மற்றவைகளைச் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வது எங்கும் வழக்கமாக இருக்கின்றது.
இவைகளை நாம் சுமார் 40 வருஷத் திற்கு மேல்பட்ட நமது பிரத்தியட்ச அனுபவத்தில் கண்டு வந்திருக்கின்றோம்.
ஆகவே நாம் சங்கீத மகாநாட்டில் கலந்துகொள்ள ஆசைப்பட்டதின் முதல் காரணம் சங்கீத ஞானத்திற்கு ஆகவோ, சங்கீத கலை வளர்ச்சிக்கு ஆகவோ மாத்திரம் அல்ல என்றும் மேல்கண்ட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்னும் உயர்வு தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு விரோதமாயிருக்கும் கொடுமையை அழிப்பதற்கே ஒழிய வேறில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இதை உத்தேசித்தே சில சங்கீத சம்பந்தமான சபைகளில் நாம் பேச நேர்ந்த போதுகூட சங்கீதத்தில் இச்சை வைத்ததற்காகவும், சங்கீதத்தை தொழிலாகக் கொண்டதற்கு ஆகவும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்திற்காக இவ்வளவு கேவலமாயும், இழிவாயும் நடத்தப்படுவதாயிருந்தால் சங்கீதக் கலையே அடியோடு அழிந்து போவதே மேல் என்றும் அதனால் யாருக்காவது ஜீவனத்திற்கு கேடு வருமானால் அப்படிபட்டவர்கள் இச்சங்கீதத்திற்கு கருமாதி செய்துவிட்டு ரோட்டில் கல் உடைத்து வயிறு வளர்ப்பதே மேல் என்றும், அத்தொழிலும் ஜீவனமும், சங்கீதத்தை விட கவுரவமும், மேன்மையுமான வேலை என்றும் சொல்லி வந்திருக்கிறோம்.
ஆகவே, சமீபத்தில் ஈரோட்டில் நடக்கும் சங்கீத மகாநாட்டில் மற்ற சங்கீத மகாநாடுகளைப்போல் சங்கீத சாதிரம் என்பதைப்பற்றிப் பேசியே காலம் போக்காமல் சங்கீதத்தை கைக் கொண்ட பார்ப்பனரல்லாத மக்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றும் விஷயத்திலும் அதிகமான கவனம் செலுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நிற்க, இன்றைய தினம் தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், பிடில், மிருதங்கம், கஞ்சிரா, ஜலதரங்கம், கடம், கொன்னைக்கோல், நாதசுரம் முதலிய அனேகம் துறைகளில் நிகரில்லாதவர்களும் மிக்க விற்பத்தி பெற்றவர்களுமாக சுமார் 400, 500, பேர்கள் வரையில் பார்ப்பனரல்லாதார்களில் இருந்தும் அவர்களைப் பற்றிய பெயர்கள்கூட அனேகருக்குத் தெரிய முடியாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றது. அவர்களில் சிலரின் பெயர்களையும் திரு. இராமசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த லிடுப்படி மற்றொரு பக்கத்தில் காணலாம். மற்றப் பெயர்களும் பின்னால் வெளிவரும் இந்த சமயத்தில் நாம் இந்த வித்வான் எல்லோரையும் அவசியம் இம்மகாநாட்டுக்கு வரும்படி இதன்மூலம் அழைக்கின்றோம்.. அவர்களில் அனேகர் அவசியம் வரவும் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். அனேக விதமான சிரோன்மணிகள் வருவதாகவும் வந்து பாடவும் வாசிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நாம் மனப் பூர்த்தியான நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்வதோடு பொதுஜனங்களிலும் சங்கீத கலையிலும் சுயமரியாதையிலும் கவலையுள்ள மக்கள் பெருந்திரளாகக் கூடி வந்து இம்மகாநாட்டைச் சிறப்பிக்கச் செய்து அதை கைக்கொண்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு மேன்மையும் சுயமரி யாதையும் ஏற்படுவதற்கு உதவியாய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 20.04.1930 
-விடுதலை,17.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக