திங்கள், 10 அக்டோபர், 2016

இழிவை ஒழிக்க வழி



- தந்தை பெரியார்
இன்று நமக்குள்ள தராசுக் கொடியானது இந்நாட்டில் எங்கும் காணப்படுகின்ற கொடுமைகளையும், அநீதிகளையும், பேத முறைகளையும் ஒழித்து, ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்னும் சமநீதியைக் காட்டுவதற்கு அறிகுறியாக விளங்குகிறது எனலாம். இந்தக் கொடியில்கூட மாறுதல் ஏற்படலாம்.

ஏனெனில், இதுவரையில் நமக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமானது பழைய காங்கிரசைப் போல எங்கள் உரிமை களை எங்களுக்கு வழங்குங்கள், எங்களுக்குப் பட்டம், பதவிகள் அளியுங்கள் என்று வேண்டுகிற முறையில் அமைந்திருந்தது. இப்பொழுதோ அதே சங்கத்தின் பேரால் அந்த நிலைமாறி பிறருக்கு அவரவர்களுடைய உரிமைகளை வழங்குகின்ற முறையில் நாம் திட்டம் வகுத்துக் கொண்டோம்.

நம்மையும், நம் இனத்தையும், நம் நாட்டையும் உணர்ந்து கொண்டோம். அதன் பலன்தான் இன்றைய தினம் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை திராவிடர் கழகம் என்று சொல்லுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கியதானது நம்நாட்டு முழுப் பங்கையும் அடைந்து, மற்றவர்களுக்கு அவரவர் பங்கை தகுதிப் படி வழங்குவதற்குப் போராட்டம் தொடங்கியது என்றே கூறலாம். போராட்டம் என்றதும் சிலர் அஞ்சலாம். ஆனால், போராட்டம் நமக்குப் புதியதல்ல - யாராவது கூறட்டும் - இந்த நாடு எக்காலத்திலாவது போராட்டமின்றி சமாதான மாய் இருந்ததா என்பதை ஆதிமுதல் இன்றுவரை எதிலும் போராட்டந்தான்.

முதலில் உண்டானதாகக் கூறப்படும் ஆரியருடைய நாலு வேதங்கள் என்ன? ஆரிய - திராவிடர் போராட்டம், தேவர் - அசுரர் போராட்டம்தானே! இதிகாசங்களில் கூறுகிற விஷ்ணுவின் பத்து அவதாரக் காரணங்கள்தான் என்ன? அவையும் ஆரிய - அரக்கர் போராட்டம் தானே! கந்த புராண கந்தன் - சூரன் போராட்டமும் அதுபோல்தானே? அவை போகட்டும், இந்த நாட்டுச் சரித்திரத்தின் நிலைதான் என்ன? அதுவும் அப்படியேதான்; அதாவது ஆரியமதம் - புத்த மதம்; பிறகு இந்து - முஸ்லிம்தான். ஆகவே, மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும், நிகழ்ந்து வந்த போராட்டங்கள் எத்தனையோ உண்டு. இன்று காண்பது புதிதல்ல என்கிறோம். இந்தத் தொல்லைகளை ஒழிப்பதற்குப் பழைய முறைகள் அல்லாமல் நாகரிகமான முறையிலே சிந்தனை செய்ததன் பலன்தான் திராவிடர் கழகமாகும்.

சென்ற காலங்களில் இந்தத் தொல்லைகளைத் தொலைத்து உரிமைகளைப் பெறுவதற்காக நம்மவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எத்தனையோ! இன்று மட்டும் அல்ல; எவ்வளவோ காலமாய் நமது முன் னோர்கள் அரும்பாடுபட்டார்கள். காங்கிரசு சபை உண்டாக்கி சத்தியாக்கிரகமும் நடத்தினார்கள். வேளை தவறாது கோவிலுக்குச் சென்று முறைப்படி கும்பிட்டு வந்தார்கள். கவர்ன்மெண்டோ, கடவுளோ இன்று வரை கவனித்ததாகத் தெரியவில்லை.

நாம் பாடுபடும் மக்கள்; நாம் உழைப்பாளிகள்; நம் கையினால் செய்த பொருள்களே இன்று உலகத்தில் உள்ளன. நம் பாடுகளே இன்று உலகமாக இருக்கின்றன. இது மாத்திரமா! நம்மைப் படைத்ததாகக் கருதப்படும் கடவுளைக்கூட நாமே செய்தோம்; செய்கிறோம்; அவைகளைக் காப்பாற்றியும் வருகிறோம். அப்படியி ருந்தும் நம்முடைய நிலைமை என்ன? நம்முடைய உரிமைகள் எங்கே? இன்று நமக்குள்ள இழிவுகள் எவ்வளவு? கொஞ்சமா? இத்தனை காலமாகப் பிறர் நமக்குச் செய்வார்கள் என்று நம்பியிருந்தோம். ஏமாந்தோம்.

ஆகவே இனி நாமே வழங்குவோம் என்று கிளம்புகிறோம் இந்த நாட்டு கடவுள்களைப் போலவே. காங்கிரசும் பாமர மக்களிடையே செல் வாக்கும், மதிப்பும், பெருமையும், நம்பிக்கையும் பெற்றது. ஆயினும், இன்றைய வரையிலே இந்த இரு கூட்டத்தாரும் செய்தவை என்ன என்பதை  யோசிக்கும் பொழுதுதான் இந்த நிலையிலே ஒரு மாறுபாடு வேண்டும், ஒரு புரட்சி தேவை என்கிறோம். எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக. இவைகளுக்கு இருப்பிடங்கள் யாவை? காரணகர்த்தர் யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும். இவைகளைக் கூறினால் நம் பெரியவர்களுக்குக் கோபம் வந்து நமக்கு நாத்திகர், வகுப்புத்துவேஷி என்கிற பட்டமளிக்கின்றனர். நாளைய வரையில் காப்பி ஓட்டலில் உள்ள பேதம் ஒழியவில்லை. உள்ளதைக் கூறினால் இவர்களுக்குக் கோபம் வருகிறது. இவர்களைச் சூத்திரன் என்றும், பார்ப்பனதாசர் என்றும் வைப்பாட்டி மக்கள் என்றும், அவர்கள் கூப்பிடுவதுகூட  இவர்களுடைய விஷ யத்தில் சரிதான் என்றே படுகின்றது.

எங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா? அல்லது கொடுமையா? உலகம் எவ்வளவு விரைவாக முன்னேறி வருகிறது! மணிக்கு  நாலு மைல் நடந்தவன் ஆகாயத்தில் நானூறு மைல் வேகத்தில் பறக்கிறான், மணிக்கு 4 மைல் போன சேதி, மணிக்கு 4000 மைல் பேசுகிறது, மற்றும் பேசும்படம், ரேடியோ முதலிய அதிசயங்கள், அற்புதங்கள் எத்தனை இருக்கின்றன! நாம் மட்டும் நாளடைவில் கண்ணை மூடிக்கொண்டே காட்டுமிராண்டி வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக் கிறோம். இன்னும் சூத்திரனாகவே பறையனாகவே இருக்கிறோம். இதற்குச் சாதகமானவை எதாயிருந் தாலும் ஒழித்தால்தானே முன்னேற முடியும்? இவ்வளவு அறிவும், ஆராய்ச்சியும் நிரம்பிய காலத்தில்கூட தோலைக்கட்டிக் கொண்டு, சாம்பலைப் பூசி, எலும்பை அணிந்து, கையில் அரிவாளுடன் காலின்கீழ் மனிதனை மிதித்துக்கொண்டிருக்கும் ஒரு காட்டுமிராண்டி காலத்துக் கடவுளைக் கும்பிடலாமா? இன்றைய நிலைமைக்கு 6000 மைலுக்கு அப் பாலுள்ள லண்டன், நியூயார்க், பெர்லின், பாரிஸ், டோக்கியோ முதலிய எந்த ஊரையும் ஒரு சிறு பொத்தானைத் திருகுவதன் மூலம் நேரில் கேட்கவைக்கின்ற ரேடியோ வையல்லவா - அதைச் செய்வதனை யல்லவா கடவுளாகக் கும்பிட வேண்டும்? அந்த அறிவைப் பெறவல்லவா முயல வேண்டும்.

காலத்திற்கேற்ப நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா? இதைக் கூறினால் தவறா? இந்த விஷயத்தில் மாத்திரம் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளக்கூடாது; பெரிய புராணம், ராமா யணம், கீதை படிப்பதில் மட்டும் சமயத்திற்கும், இடத்துக்கும் தக்கபடி அர்த்தம் மாற்றிக் கொள்ளலாம் என்றால் என்ன நியாயம்? இதிகாச புராணங்களைக்  குறைகூறியவுடன் இன்றைக்கு நாட்டில் இராமா யணம், கீதை படிப்பது அதிகமாகி வருகிறது. டாக்டர் அம்பேத்கர் கூறிய படி, கீதையை ஒரு மதநூல் என்பதை விட, ஒரு ஜாதியின் ஆதிக்கத் தந்திர நூல் என்று சொல்லலாம். ஒரு பக்கத்தில் நானே எல்லா ஜீவனுக்குள்ளும் பேதமின்றி நிறைந்திருப்பவன் என்றும், மற்றொரு பக்கத்தில், நானே பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரென்ற நால் வருணங்களை உண்டாக்கி, சூத்திரரைப் பிறருக்கு அடிமையாக்கினேன். ஆகையால் அவன் அடிமையாகவே இருக்கவேண்டும் என்றும் கூறுவதுதானே கீதை? இதைப் படிப்பது பக்தியா என்று எடுத்துக் கூறிவிட்டால், அதை தவறு, பாவம் என்று சொன்னால் அது என்ன நீதி என்று கேட்கிறோம்.

இந்த நாட்டு அறிவாளிகள், பக்தர்கள், புலவர்கள் நாளையவரையில் எது கடவுள்? என்பதற்கு என்ன கூறினார்கள்? இவர்களால் என்ன கூற முடியும்? கடவுளைப் பற்றி எல்லாம் அறிந்தவர் போலவும், அவருக்கு நேரான வாரிசுக்காரர் போலவும், பேச வருகின்றனரே, கடவுளையே கேட்டுப் பார்த்திருப் பார்களா? இன்றைய தினம் வரையில், உனது வருஷ வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, எந்த வகையிலே செலவழித்தாய் என்று யாராவது கேட்கிறார்களா? தமிழ்நாட்டில் சுமார் 3000 கோவில் களின் வருஷ வருமானம் 2 கோடி ரூபாய். அதாவது, ஆண்டு ஒன்றுக்கு ரூ.250 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் வரும்படி வருகின்ற கோவில்கள் நம் நாட்டில் சுமார் 3000 என்றால், அவ்வளவு பொருளும் அநாவசியமான முறையில் செலவாகிறது என்றால், இதைப் போன்ற அக்கிரமம் இந்த உலகத்தில் வேறெங்காவது காணமுடியுமா? இதைச் சொன்னால் பொல்லாதவனா? கடவுள் என்றால் நமக்குப் புரியாத, ஆனால் மிகவும் நம்பிக்கை யான இடமாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்று இதுவரையில் நாங்கள் சொன்னதில்லை. எது கடவுள் என்கின்றோம். கடவுள் பெயரால் நடக்கின்ற தீமைகள், அநியாயமான காரியங்கள், இவைகளைச் சரியா என்றும், இந்த அக்கிரமங்களை கடவுள் அனுமதிக்கலாமா என்றும் கேட்கிறோம். இதுதான் நாத்திகமா? நாத்திகம் என்றால் முதலில் உங்களுக்கே புரியுமா என்று கேட்கிறோம்.

உழைப்பாளி மக்கள் உணவு உடை இல்லாமல் கஷ்டப்படுகின்ற நிலையில் புரோகிதர் பூணூலைக் கை முதலாகக் கொண்டு எவ்வளவு சுலபமாக மேன்மையான வாழ்வு வாழ்கின்றார். பிறர் தயவி னால் ஒரு சிறிய ஓட்டலை தொடங்குகிறான் ஒரு பார்ப்பனன். நாளடைவில் சாமியாகவும், ஒரு முதலாளியாகவும் ஆகி விடுகிறார். காப்பிக் கடையில் கணேசர் முதல் காந்தி, சாயிபாபா வரையில் படங்கள் தொங்குகின்றன. பிராமணாளுக்கு மாத்திரம் என்று பலகையும் தொங்கு கிறது. பின்னர் அங்கே இரண்டு, மூன்று பார்ப்பனப் பத்திரிகைகள், ஆகவே அது ஒரு சிறந்த ஆஸ்திக காங்கிரஸ் பிரச்சார நிலையமாகவும், ஜாதி பிரித்துக் காட்டும் ஸ்தாபனமாகவும் ஆகி விடுகிறது. இப்படித்தானே இருக்கிறது இவர்கள் (ஆஸ்திகர்கள்) முன்னேற்றம்! இவர்களுக்குத் துணை யாக உள்ளவைதானே இந்த நாட்டில் உள்ள தேசியப் பார்ப்பனப் பத்திரிகைகளும், எப்படியாவது நம்மீது கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்கி ஒழிக்கப் பார்ப்பதுதானே, இவர்கள் வேலையாகி விட்டது.

ஆதலால், இம்மாதிரியான எதிர்ப்பிரச்சாரங் களாலும், போலிச் செய்திகளாலும் மக்கள் ஏமாந்து போகாமல் நாட்டினுடைய உண்மையான நிலை, நாட்டு முன்னேற்றத்துக்குச் சரியான வழி ஆகியவற்றை உணர்ந்து அதற்கு ஏற்ற வழியிலே முயற்சியுடன் நடந்து வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மேலும், நான் அடிக்கடி கூறி வருவது போல நமது சமுகத்துக்கு நீங்காத மலேரியாக் காய்ச்சல் கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கொசுவென்று அறிந்தவுடன், கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது.
கொசு உண்டாவதற்கு மூலகாரணமான சாக்கடைகள், அழுக்குக் குட்டைகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை அடியோடு ஒழித்துச் சுத்தமாக்கினால்தான் கொசுக்கள் ஒழியும். மலேரியாக் காய்ச்சலும் நீங்கும். அந்த அசுத்த அழுக்குக் குட்டைதான் புராணம், கீதை, புரோகிதம், கோவில்களாய் இருக்கின்றன. அங்கு இருந்துதான் இந்த கொசு பிறக்கிறது. அவைகளை அகற்றுங்கள்.

(17.12.1944 அன்று சேலம் பொத்தனூரில் திராவிடர் கழக கிளைத் திறப்பு விழாவில்
தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

‘குடிஅரசு’  - 23.12.1944
-விடுதலை,24.7.16

புரட்சி என்றால் என்ன? ஏன் பயப்பட வேண்டும்?


சுயமரியாதை உணர்ச்சிக் கொண்ட வாலிபத் தோழர் களே! இன்று நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசார பத்திரத்திற்கு நான் உண்மையாகவே மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இந்த உபசாரப் பத்திரம் உங்களுக்குள் தோன்றித் ததும்பும் சுயமரியாதை உணர்ச்சியை முன்னிட்டே (நீங்கள் இதை) வாசித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் உபசாரப் பத்திர வாக்கியங்களில் இருந்தே உணருகிறேன்.

தோழர்களே! உங்கள் உபசாரப் பத்திரத்தின் தலைப்பில் புரட்சி வாழ்க! பொதுவுடைமை ஓங்குக! என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தையைக் கண்ட அநேகர் எருதுக்கு முன்னால் சிகப்புத் துணியை விசிறினால் மிரண்டு மிரண்டு துள்ளுவது போல் பயப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு பயப்படத் தகுந்த காரண காரியங்கள் ஏதுவும் அவ்வார்த்தையில் அடங்கியிருப்பதாய் நான் கருதவில்லை.

ஆனால்,அவ்வார்த்தையானது, பயப்படத்தக்க முறையில் கற்பிக்கப்பட்டு விட்டது. எது போலென்றால் பூச்சாண்டி என்றால் அதற்கு அர்த்தம் இன்னதுதான் என்று தெரியாமலேயே குழந்தைகளைப் பயப்படுத்தி வைத்திருப்பதைப் போல் உங்களில் அநேகரைப் புரட்சி என்றால் அதன் அர்த்தம் என்ன? பயன் என்ன? என்கின்ற விஷயம் உணராமல் பயப்படும்படி செய்யப்பட்டாய் விட்டது.

புரட்சி 

புரட்சி என்றால் என்ன? அது பயப்பட வேண்டிய விஷயமா? என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பார்ப்போம்.

சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் போவதற்குத் தரையில் ஒரு மணிக்கு 3 -மைல் வீதம் நடந்து கொண்டிருந்த நிலைமை மாறி, ஒரு மணிக்கு 400 மைல் ஆகாயத்தில் பறக்கும் படியான நிலையை அடைய யோசிப்பானேயானால் நடக்கும் விஷயத்தில் அது ஒரு, பெரிய பிரம்மாண்டமான புரட் சியேயாகும். இந்தப்படியான புரட்சியில் வெற்றி பெற்ற ஒருவன் ஆகாயத்தில் ஒரு மணிக்கு 400 மைல் பறக்கும் போது 3 மைல் வீதம் நடையிலேயே இருக்கிற ஒருவன் அதிசயப் பட வேண்டியதுதான். ஆனால் பயப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனால் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் மனிதன் அவனுடைய வெகுநாளைய பழக்கம், வழக்கம், நம்பிக்கை ஆகியவைகளுக்கு விரோதமாக ஆக்க முயற்சித்தால் அதைப் புரட்சி என்று தான் சொல்லுவார்கள். ஆனால், அதனால் அனுகூலம் அடைக்கின்ற வர்கள் காரியம் என்று சொல்லிப் புகழவும், அதனால் தீமையடைகின்றவர்கள் அதைக் கெட்ட காரியம் என்று சொல்லி இகழவும், சரியான முறையில் எதிர்க்க சக்தி இல்லாதவர்கள் தப்பர்த்தம் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அதன்மூலம் எதிர்ப்பு ஏற்படச் செய்வார்கள். ஆனால், மனித சமுகத்தில் புரட்சி என்பது மிகச் சாதாரணமாய் இருந்து காரியத்தில் நடைபெற்று தான் வருகின்றது. மனிதனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும். ஏற்பட ஏற்பட புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாக்கிக் கொண்டேதான் இருக்கும். புரட்சிகள் என்றால் என்ன? ஒரு விஷயம் அதன் பழக்கவழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவதும் அதிலும் அது அடியோடு தலைகீழ் நிலை அடையும் படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப் படுவதாகும்.
அந்தப்படி  இப்போது நம் கண்முன்னாலேயே எவ்வளவோ புரட்சிகளைக் காதால் கேட்டு விட்டோம் கண்ணால் பார்த்து விட்டோம். ஒவ்வொரு  புரட்சியிலும் எந்தெந்த  தேசம் பூமிக்குள் போய் விட்டது? எந்த சமூகம் பூண்டற்றுப் போய் விட்டது மாறுதலேற்படும்போது சற்று தடபுடலாய் மக்கள் மிரளுவதும் சிறிது நாளானவுடன் அது இயற்கையாய் ஆகிவிடுவதும், பிறகு அதிலிருந்து மற்றொரு புரட்சி ஆரம்பிப்பதும் சகஜம்தானே. சாதாரண மாக அரசியல் துறையில் ஏற்பட்ட புரட்சியை எடுத்துக் கொள் ளுங்கள். நமது நாட்டில் அரசர்களெல்லாம் கடவுள் அவதாரங்களல்லவா, கடவுள் அம்சங்களல்லவா? கடவுள் அருள் பெற்றவர்களல்லவா?  கடவுள் கடாட்சம் பெற்றவர்களல்லவா? இது தானே அரசனைப் பற்றிய நமது சாஸ்திரங்கள் என்பவைகளிலும், புராணங்கள் என்பவை கையிலும் சொல்லப்பட்ட சத்தியவாக்கு? சமீபகாலம் வரை நாம் அரசரை விஷ்ணு அம்சம் என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லையா? அரசன் கடவுள் அவதார அம்சம் என்பதாகக் கூறிக்கொண்டும் புராணங்கள் படித்துக் கொண்டும் இருக்கவில்லையா? இன்றும் பலர் அம்மாதிரி படித்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையா? ஆனால் நாம் இப்போது என்ன சொல்லுகிறோம்? மனித சமூகத்திற்கு அரசன் எதற்கு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விடவில்லையா? எங்களுக்கு ஒரு சக்கரவர்த்தியோ, அரசனோ இருப்பது எங்கள் சுய மரியாதைக்கு குறைவு என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? ராஜபக்தி ராஜ வாழ்த்து அடிமைத்தனம் என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? அந்தப்படியே பல தேசங்களில் அரசர்கள் ஒழிந்தும் விட்டார்களா? இல்லையா? ஆகவே, அரசியல் துறையில் இது ஒரு பெரிய புரட்சியா? இல்லையா? என்று உங்களைக் கேட்கின்றேன். இந்த புரட்சியில் என்ன ஆபத்து வந்து விட்டது? எந்த தேசம் மண்ணில் புதைந்து விட்டது யார் வாய்வெந்து போய் விட்டது? யார் தலைபோய் விட்டது, அரசர்கள் ஒழிக்கப்பட்ட தேசம் நெருப்புப் பற்றி எரிந்து விட்டதா? அல்லது பாலை வனமாகி விட்டதா? சுமார் 40, 50 வருஷங்களுக்குமுன் அரசாங்கத்தைக் குறை கூறவோ மாற்றவோ நம் நாட்டில் யாராவது கருதியிருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். எந்தப் புராணத்திலாவது, சாஸ்த்திரத்திலாவது அரசன் வேண்டாம் என்று சொன்ன தாகப் பார்த்திருக்கிறோமா? இன்று எப்படி தைரியமாய்ச் சொல்ல வந்து விட்டோம்? இது ஒரு பெரிய புரட்சியா அல்லவா என்று யோசித்துப் பாருங்கள். இதுபோலவே மக்களில் ஒரு சாராரை பூதேவர்கள் (இந்த உலகக் கடவுள்கள்) என்றும் மற்றொரு சாராரை கண்ணினாலும் பார்க்க முடியாதவர்கள் என்றும், சண்டாளர்கள் என்றும் கருதியிருந்தோமா- இல்லையா? இதற்கு வேத சாஸ்திர புராண ஆதாரங்கள் கடவுள் வாக்குகள் இருக்கின்றது என்று சொல்லி பூதேவர்கள் காலில் விழுந்து கும்பிட்டும் சண்டாளர்களை தெருவில் நடக்கவிடாமல் துரத்தி அடித்தும் வந்தோமா இல்லையா? ஆனால் இன்று அவர்களைத் தெருவில் மாத்திரம் அல்லாமல் கோவிலுக்குள் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லுகின்றோமா? இல்லையா? இப்படிச் சொல்லுகின்றவர்கள் மகாத்மா என்று அழைக்கப்படுகிறார்களா இல்லையா?

மற்றும் இம்மாதிரி சண்டாளர்கள் கண்ணுக்கே தென் படக்கூடாது, கிட்டவே வரக் கூடாது என்று இருந்ததெல்லாம் போய் இப்போது அவர்கள் பக்கத்தில் போய் உட்கார ஆள் மேல் ஆள்கள் போட்டிப் போட்டு அய்யங்கார், சாஸ்திரிகள், ராவ்ஜீக்கள், பண்டார சன்னதிகள், பட்டக்காரர்கள் ஆளுக்கு 10 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய்கள் (தேர்தல்களில்) செலவு செய்து அந்த தானங்களை அடைய முயற்சிக்கிறார்களா இல்லையா? சமூக வழக்கங்களில் 10 வயது பெண்ணை கட்டிக் கொடுக்காவிட்டால் பெற்றோர்கள் நரகத்துக்குப் போய் விடுவார்கள். பெண்ணும் விபச்சார தோஷத்திற்கு ஆளாய் விடும் என்று கூறிய வேத சாஸ்திரங்களையும் ரிஷிகள் வாக்கியங்களையும் பழக்க வழக்கங்களையும், குப்பையில் தள்ளிவிட்டு 14 வயதான பிறகு பெண் ருதுவான பிறகுதான் கல்யாணம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தண்டனை அடையவேண்டும் என்று சொல்லி சட்டம் செய்து விட்டோமா இல்லையா?
எனவே, இவைகள் எல்லாம் சமூகப் புரட்சியேயாகும். இதனால் யாருக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? யார் என்ன கஷ்டப்படுகிறார்கள்?
ஆகவே, அரசியல் துறையிலும் சமூகத் துறையிலும் எவ்வளவு புரட்சிகள் செய்ய முன்வந்து விட்டோம். செய்து விட்டோம். இவைகள் எவ்வளவு சர்வ சாதாரண மான விஷயமாகவும் மிகவும் ஞாயமானதாகவும், அறிவு டைமையாகவும், மக்கள் சமுகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் கருதப்படுகின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.
மற்றும் உலகத்தையே படைத்துக் காக்கும் கடவுள் விஷயம் இன்று உலகில், நம் நாட்டில் என்ன பாடுபடுகின்றது? அக்கடவுளையடையும் மார்க்கமாகிய மத விஷயம் இன்று என்ன பாடுபடுகின்றது? இவைகள் கடவுள் புரட்சி, மதப் புரட்சியல்லவா? இதனால் மக்களுக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? ஆகவே இவ்விஷயங்களில் ஆபத்து, ஆபத்து என்று சொல்லப்படுவதெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தால் அவற்றால் யார் யார் நன்மை அடைந்து வந்தார்களோ அவர்களுக்குத் தான் சிறிது ஆபத்தாய்க் காணப்படுகின்றதே அல்லாமல் வேறு என்ன? இவர்கள் யார்? இவர்கள் மக்கள் சமூகத்தில் 100-க்கு எத்தனை பேர்கள்? என்று பார்த்தால் லட்சியம் செய்யக் கூடிய அளவா என்பது விளங்கும். ஆகவே அரசியல், சமூகஇயல் அறிவியல் ஆகியவற்றில் பெருத்த புரட்சிகள் ஏற்பட்டு அதை சாதாரணமாய் நடந்து வருகின்றதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே, மேற்கண்ட புரட்சிகள் போல் அதாவது அரசன் ஏன்? உயர்ந்த ஜாதி ஏன்? தாழ்ந்த ஜாதி ஏன்? கடவுள் ஏன்? மதம் ஏன்? என்று சொல்லுவது போலவே இப்போது பணக்காரன் ஏன்? பிரபு ஏன்? முதலாளி ஏன்? ஏழை ஏன், அடிமை ஏன் என்று கேட்கிறோம். இந்தப்படி ஏன் கேட்கிறோம்? முதன் முதலில் ஏதோ ஒரு விஷயத்தில் மாறுதலையடைய துணிந்து விட்டோம். அதற்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடு காவல் ஆகியவைகளை அலட்சியம் செய்து விட்டோம். அதே தைரியமும், அதே அறிவும், அதே அவசியமும், அதே முற்போக்கு உணர்ச்சியும் அதற்கு அடுத்த நிலைமைக்கு மக்களைத் தானாகவே கொண்டு போகின்றது.
பட்டாளம் பீரங்கி ஆகாயக் கப்பல், வெடிகுண்டு, 20 மைல் பீரங்கி விஷப்புகை, வெடி முதலிய பலமும் கடவுள் அவதாரமும் உள்ள அரசனே, நீ வேண்டாம் மூட்டை கட்டிக் கொள், என்று சொல்லக் கூடிய நிலை ஏற்பட்டு அது நியாயமும் அவசியமும் என்று தோன்றிப் பல அரசர்கள் ஒழிக்கப்பட்டும் போன பிறகு, அதை விட கஷ்டமானதும் நினைக்க முடியாததுமான காரியமா இந்த பணக்காரன் ஏன்? ஏழை ஏன்? என்று கேட்கும் விஷயம் என்றுதான் கேட்கிறேன். முன்னதைவிட இதற்கு என்ன அதிக தைரியம் வேண்டும்? என்ன அதிக பலம் வேண்டும்? அல்லது இது என்ன ஒரு பெரிய பாவமான காரியமாகும்? அரசன், ஜாதி, கடவுள், மதம் பழக்க வழக்கம் ஆகியவையெல்லாம் பணக்காரனையும், பார்ப்பானையும், காப்பாற்ற ஏற்பாடு செய்து கற்பித்து வைத்த சாதனங்களேயொழிய இவர்கள் இயற்கையா? காற்றைப் போன்று இன்றியமையாததா? எப்பொழுது அவைகளுக்கே ஆபத்து வந்து விட்டதோ அப்பொழுதே பணக்காரர்கள் நிலை காவலில்லா சொத்து காணாமல் போவது போல், மறைவுபட வேண்டியதுதானே? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? உண்மையான நடு நிலைமையும் அறிவும் இருக்கிறவன் இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்? இது சாதாரணமாய் அறிவும் முற்போக்கு உணர்ச்சியும் உள்ள எவனுக்கும் தோன்றக் கூடிய காரியம்தானே? இதை வெளியில் சொல்லுவது  தப்பு சட்ட விரோதம் என்று மிரட்டினால் சிலர் வேண்டுமானால் வாயில் சொல்ல பயப்படுவார்கள். ஆனால் இது அவர்கள் மனதில் உதிக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? ஒரு சமயம் சிலர் இது சாத்தியப்படுமா? என்று கேட்கலாம். இப்படி கேட்பது வேறு விஷயம். ஒரு விஷயம் சரியா தப்பா என்று கவனித்த பிறகு தான் அது சாத்தியப்படுமா என்கின்றதை பற்றி யோசிக்க வேண்டும்.

சாத்தியப்படுமா?

அரசன் வேண்டாம் என்கின்ற விஷயத்தை நாம் அசாத்திய விஷயம் என்றா கருதுகின்றோம்? அரசனுக்கு  உள்ள படை, பட்டாளம், வெடிகுண்டு, பீரங்கிகளை யெல்லாம்விட, இந்த பணக்காரனுக்கும், முதலாளிக்கும் என்ன அவ்வளவு பலமான காவல் இருக்கின்றது? அரசனை விட பணக்காரனுக்கு என்ன அவ்வளவு அதிகமான வேத, சாஸ்திர, புராணப் பாதுகாப்புகள் இருக்கிறது? அவர்கள் நிலைமையே  இப்போது காற்றாய்ப்பறக்கின்றது. பணக்காரர்கள் நிலைமைக்கு என்ன பளுஸ் இருக்கிறது? வரிசைக்கிரமத்தில் இவர்கள் நிலைமையும் மாற்றமடைய வேண்டியதுதானே? சும்மா சமய சந்தர்ப்பம் இல்லாமல் அரசனையும், பார்ப்பானையும் திட்டி, ஊரார் மெச்சும்படி பேசி, கடவுளையும் மதத்தையும் பரிகாசம் பண்ணிக் கொண்டு இருப்பதுதான் சுயமரியாதைக் கட்சியின் லட்சியமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய் காணப்படுகின்றதோ அவைகளையெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும் பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனை பட்டத்தில் வைப்பதும், ஒரு நாளும் சுயமரியாதையாகாது இவையெல்லாம் சுயநல மரியாதையேயாகும்.

அன்றியும், அரசன் வேண்டாம் என்றாலும் பார்ப்பான் வேண்டாம் என்றாலும் பணக்காரன் வேண்டாம் என்றாலும் இதனால் கஷ்டப்படும் மக்கள் 100க்கு 10 பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். இவை ஒழிந்தால் சுகப்படும் மக்கள் 100க்கு 90 பேருக்கு மேல் இருப்பார்கள். ஆகவே யாருடைய நன்மைக்கு ஏற்ற காரியம் செய்யப்பட வேண்டியது அறிவாளியின் கடமை? என்பதை சிந்தித்துப் பாருங்கள். உண்மையான ஜீவகாருண்யம் உள்ளவர்கள் வெறும் கோழியைத் தலைகீழாக கொண்டு போகப்படுவதையும், மாட்டின் கழுத்தில் ஒரு சிறுபுண் இருப்பதையும், ஜீவகாருண்யம் என்று எண்ணமாட்டார்கள். பெரும் பான்மையான மக்கள் வெகு சிறுபான்மையோரின் சுய நலத்தால் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பதைத் தான் கவனிப்பார்கள்.

அய்யோ இந்த புரட்சியால் பணக்காரர்களின் மனம் பதறுமே என்று ஒரு அறிவாளியும் கருதமாட்டான் எப்படி யெனில் ஒரு திருடனுக்காகப் பயந்து 100 பேர்கள் தங்கள் வீட்டுக் கதவைத் தாளிட்டுப் படுத்துக் கொண்டால் திருடன் பாடு பட்டினிதான். அதனால் திருடன் மனம் பதறுமே - ஏமாற்றமடைய நேரிடுமே - அவன் பிள்ளைக் குட்டிகள் பதறுவார்களென்று சொல்லி எல்லோரும் கதவை திறந்து போட்டே படுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் இதை ஜீவகாருண்யமென்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? பெரிய மாறுதல்கள் உண்டாக்கப்பட வேண்டிய அவசி யங்கள் ஏற்பட்டால் குறுகிய  நோக்கக்காரர்களும் சுயநல நோக்கக்காரர்களும் சில சமயங்களில் மனம் கஷ்டப்படத்தான் நேரும். அதற்கு யார் என்ன செய்ய முடியும். எலியும், பூனையும், பாம்பும், தேளும் போகின்ற கோவிலுக்குள் மனிதர்கள் போவதனால் எத்தனை  சங்கராச்சாரிகள் மனம் பதருகிறது? இதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ இருக்க முடியுமா? இதற்காக எவ்வித பலாத்காரமும் செய்துதான் ஆகவேண்டும் என்பது நமது கருத்தல்ல. ஆனால், பலாத்காரத்துக்குப் பலவந்தமாய் வருபவர்களிடமிருந்து எப்படி மீள வேண்டுமோ அதற்குத் தயாராய்த்தான் இருக்க வேண்டும். இதற்காக எந்தப் பணக்காரரும் கஷ்டப்பட வேண்டியிருக்காது. யாரும் பட்டினிகிடக்க நேராது. நல்லுணர்வு ஏற்பட்டு விட்டால் இது ஒரு நொடியில் முடியக் கூடிய காரியமேயாகும்.

உலகில் பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள், தொழிலாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் பணக் காரர்களும் முதலாளிகளும் மாத்திரம் சுகப்படுகிறார்கள், சந்தோஷப்படுகிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா? ஒவ்வொரு கருத்துள்ள பணக்காரனுக்கும் இருக்கின்ற கவலை உங்களுக்குத் தெரியாததா? அவன் அதை சம்பாதிக்கும் வழியில் கஷ்டப்படுவதைவிட, கவலைப்படு வதைவிட அதிகமாகவே அதை காப்பாற்றுவதிலும் கவலைப்படுகிறான். லாப - நஷ்டம் வரும் காலையிலும், அதிக லாபம் வரவில்லையே என்றும் நஷ்டம் வந்து விட்டதே என்றும் தான் கஷ்டப்படுகிறான். எவ்வளவு இருந்த போதிலும் இன்னும் பொருள் சேர வேண்டுமென்றே ஆசைப்படுகிறான். கவலையும் பொறாமையும் அவனுக்குச் சமமாகத்தான் இருந்து வருகின்றது. எவ்வளவோ கஷ்டங்களையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டும் பெருங்கவலைக்கு ஆளாய்க் கொண்டும் தான் தன்னைப் பணக்காரன் என்று பிறர் மதிக்க வேண்டுமென்று கருதுகிறான். இதனால், உண்மையில் லாபம் ஒன்று மில்லை. ஆனால் உலகத்தில் உள்ள பழக்கவழக்கம் பெருமையின் முறை ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டே பணக்காரனாக ஆசைப்படுகிறான்.  ஆகவே பணக்காரத் தன்மை என்பது போய் விடுவதால் மனித சமூகத்துக்கு ஒரு கஷ்டமும் வந்துவிடாது பணக்காரத் தன்மை போய் விட்டால் எல்லா மக்களின் நன்மையை பொருத்த காரியங்களையெல்லாம் கவனிக்க வேண்டிய சமதர்மக் கொள்கை கொண்ட ஆட்சிதான் நடைபெறும்.

மனித சமூகத்தின் கஷ்ட நிலைமைக்கும், இழி தன்மைக்கும், ஒப்பற்ற தன்மைக்கும், சதா கவலைக்கும் காரணமியிருப்பதே இந்த பணக்காரத்தன்மையும் ஏழ்மைத் தன்மையுமேயாகும்.
மனிதப் பிறவி உயர்ந்ததென்றும், அருமை யானதென் றும், மற்ற ஜீவராசிகளைவிட மேம்பட்ட அறிவின் பயனை அனுபவிப்பதென்றும் சொல்லுகிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது. இன்றைய மனித சமுகத் திட்டம் சரியென்று ஒப்புக்கொள்வதனால் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்பது சோம்பேறிகள், பகுத்தறிவற்றவர்கள் ஆகியவர்களின் ஞானம் என்று சொல்ல வேண்டியிருப்பதோடு நான் இழிவு, இழிவு மனிதராய் பிறத்தல் இழிவு என்றுதான் சொல்லுவேன். மனிதப் பிறப்பின் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் அவனது இன்றைய வாழ்க்கைத் திட்டமே காரணமாய் இருக்கிறது. மனிதனை விட மற்ற ஜீவப் பிராணிகளில் தன் இனத்தை அடிமை கொண்டு வருத்தி வதைத்து வாழ்கின்ற ஜீவன் மிக அபூர்வமேயாகும்.

மனிதனை விட மற்ற ஜீவப் பிராணிகளில்  நாளைக்கு என் கதி என்ன? என் பிள்ளை குட்டி பேத்தி பிதிர் ஆகியவர்களுக்கு என்ன கதி? உலகம் உள்ள நாள் வரை நானும் என் சந்ததியும் உலகிலுள்ளவர்களுக்குக்கெல்லாம் மேலாய் வாழ்வதற்கு என்ன மார்க்கம் என்று கருதி, தன் சமூகத்தையோ சகலவித அயோக்கியத்தனங்களாலும் வதைத்து நலம் பெரும் ஜீவன்கள் மிக மிக அருமையாகவே இருக்கும். மனித சமூகத்தாலேயே எதை எதை இழிவான கொடுமையான குணம் என்று கருதுகின்றோமோ அவையெல்லாம் உலகிலுள்ள எந்த இழிவான ஜீவன் என்று சொல்லப்படுவதைவிட மனிதனிடத்திலேயே அதிகமாய் இருக்கின்றது. கழுதை மேல் கழுதை சவாரி செய்கின்றதா? புலிமேல் புலி சவாரி செய்கின்றதா? பாம்பு தேள் ஆகியவை மேல் பாம்பு தேள் சவாரி செய்கின்றதா? ஆனால், மனிதன் மேல் மனிதன் செய்கின்றானா இல்லையா? ஆகவே, மனிதனிடம் என்ன உயர்வான  குணங்கள் இருக்கக் காண்கின்றோம்?
அரசன், ஜாதி, மதம், கடவுள், பணக்காரன் ஆகிய தன்மைகள் எல்லாம் மேல் கண்ட இழி தன்மைக்கும் அக்கிரமத் தன்மைக்கும் மனித ஜீவகாருண்ய மற்றத் தன்மைக்கும் அனுகூலமாய் இருக்கிறதா? இல்லையா?

மனிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்து பகுத்தறிவுள்ள தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்று சொல்லுகிறான். ஆனால் மிருகம், பட்சி ஆகியவைகள் பகுத்தறிவு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்க கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்தவுடன், தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்தி விடுகின்றது. அவற்றைப் பற்றிய கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.
மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம். இறப்பு கடவுளால் என்கின்றோம். இவ்விரண்டுக்கும் காரணமாய் காணப்படுவது. மனிதன் நடப்பாய் இருப்பதால் அந்த நடப்பும் கடவுளால் தான் என்று சொல்ல வேண்டி யதாகின்றது.

ஆகவே, மனிதனின் நடப்பையும் கடவுளால்தான் நடைபெறுகின்றது என்று சொல்லுகிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியது போலவே தான் கவலையும் கொடுமையும் நிறைந்ததாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள். இதன் பயனாகிய பிறப்பு இறப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள் கடவுளை மேன்மைபடுத்தினவர்களா? அல்லது கீழ்மைப் படுத்தினவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

செல்வவான் (சோம்பேறியாயிருந்து வாழ உரிமையு டையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால் கடவுளுக்கும், மதத்திற்கும், ஜாதிக்கும் அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 18.12.1932
-விடுதலை,17.7.16

இந்து மதம் ஒழிய வேண்டும்



'குடிஅரசு' 21.8.1932
இந்துமதம் அழிந்தால் தான் இந்துக்கள் உருப்படமுடியும் என்பதை முக்கியமாக எடுத்துக்காட்டி வருகிறோம். இவ் விஷ யத்தை நாம் சொல்லும் போது தான் நம்மை இந்து மதத் துரோகி கள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் நாதிகர்கள் என்றும் நம்மைப்பற்றி நம் எதிரிகள் பொது ஜனங்களிடையில் துவேஷப் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள். எதற்காக நாம் இந்து மதம் முதலில் அழிந்து தீர வேண்டும், அல்லது அழிக்கப்பட்டு ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்றோம் என்பதை, அறிந்தார்களானால் நம்மைப் பகுத்தறிவுடையவர்கள் அவசரப்பட்டு ஒதுக்கி விட மாட்டார்கள். அல்லது நம்மோடு அவசரப்பட்டுச் சண் டைக்கு வரமாட்டார்கள் என்பது நிச்சயமாகும். ஆகையால், அக்காரணத்தைச் சிறிது கூற விரும்புகிறோம்.
சாதி வித்தியாசம் கடவுள் என்பவராலேயே ஏற்படுத்தப் பட்டது என்பது இந்து மதக் கொள்கை வேதங்கள் என்பவை களிலும், மிருதிகள் என்பவைகளிலும், கடவுள் என்பவரின் முகத்தில் இருந்து பிராமணன் என்னும் சாதியும், தோளி லிருந்து சத்திரியன் என்னும் சாதியும், தொடையிலிருந்து வைசியன் என்னும் சாதியும், பாதத்திலிருந்து சூத்திரன் என்னும் சாதியும், பிறந்ததாகக் கூறுகின்றன. இந்தச் சாதி வேற்றுமையை ஆதார மாகக் கொண்டே உயர்வு தாழ்வுகளும், தொழில்களும் கற்பிக் கப்பட்டன. ஆதியில் ஏற்படுத்தப்பட்ட இந்த நாலு வகையான சாதி வேற்றுமையே இப்பொழுது நாலாயிரக் கணக்கான சாதி வேற்றுமைகள் தோன்றி நிலைத்திருப்பதற்குக் காரணமாக இருந்தன.
அன்றியும் மக்கள் சமுகத்தில் பாதித் தொகையாக இருக் கின்ற பெண்கள் சமுகத்தைக் கொடுமைப்படுத்தி, அடிமைப் படுத்தி அவர்கள் ஒன்றுமறியாத அபலைகளாக வைத்திருப் பதற்கு காரணமும் இந்து மதமேயாகும்.
இன்னும் எண்ணற்ற பண்டிகைகளையும், திரு விழாக் களையும் ஏற்படுத்தி ஏழைமக்களின் பொருளை வீணாகச் செலவழிப்பதற்குக் காரணமாயிருப்பதும் இந்து மதமே யாகும்.
கல்யாணத்திலும் கருமாதியிலும், இன்னும் பலகாரியங் களிலும் பலவகையான அர்த்தமற்ற சடங்குகளை ஏற்படுத்தி, இவைகள் மூலம் ஏழை மக்களின் பொருளைப் பார்ப்பனர் களுக்குப் போய் சேரும்படி செய்வதற்குக் காரணம் இந்து மதமேயாகும்.
காளியென்றும், கருப்பன் என்றும், முனியாண்டி என்றும், சிவன் என்றும், பெருமாள் என்றும் பலவகையான சாமி களையும், அவைகளுக்கு விக்கிரகங்களையும், அவ்விக் கிரகங்களுக்குக் கோயில்களையும் ஏராளமானப் பொருளைச் செலவு செய்து கட்டி வைத்து அவைகளின் பேரால் நாள் தோறும், வாரந்தோறும், வருஷந்தோறும், ஆயிரக் கணக்காக வும், லட்சக்கணக்காகவும், கோடிக்கணக்காகவும், பணத்தை வீணாகச் செலவு செய்து விட்டு இந்திய நாடு வறுமையடை வதற்கு காரணமாய் இருப்பதும் இந்து மதமேயாகும்.
இவ்வாறு எந்த வகையில் பார்த்தாலும் இந்து மதமானது அதை பின்பற்றும் மக்களை நாள் தோறும், அடிமைகளாகவும், தரித்திரர்களாகவும், மூடர்களாகவும், ஒருவரோடு ஒருவர் ஒன்று சேர முடியாதவர்களாகவும் செய்து கொண்டு வருகிறதே யொழிய மற்றபடி கடுகளவு நன்மையையாவது உண்டாக்க வில்லை என்பதை, மதம் என்னும் பாசியினால் மறைக்கப் படாத மூளையை உடையவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்து மதத்தினால் விளையும் இத்தகைய கெடுதிகளை நன்றாய் அறிந்தே காலஞ்சென்ற பெரியார்களாகிய இராமா நுஜர், சைதன்னியர், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் முதலியவர்கள் சாதி வேற்றுமையை ஒழிக் கவும், பெண்களின் அடிமையை அகற்றவும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் இன்று ஏட்டளவிலும், பேச்சளவிலும் நிற்பதைத் தவிர ஒரு பலனையும் தரவில்லை என்பதை நாம் அறிந்துதான் இருக் கின்றோம். இவ்வாறு அவர்கள் முயற்சி பலன் தராமல் போன தற்குக் காரணம் பெரும்பாலும் இந்து மதமே என்பதில் அய்ய மில்லை சாதிபேதம் பெண்ணடிமை ஆகிய அஸ்திவாரங்களின் மேல் கட்டப்பட்டிருக்கும் இந்து மதத்தை வைத்துக் கொண்டே அந்த சாதிபேதத்தையும், பெண்ணடிமையையும் ஒழிக்க வேண்டுமென்றால் எப்படி முடியும்? ஆகையால் நாம் இந்து மதமாகிய வீட்டையே  முழுவதும் இடித்து எறிந்தால்தான் அதன் அஸ்திவாரமாகிய சாதி பேதம், பெண்ணடிமையாகிய இரண்டையும் அடியோடு பெயர்த்தெறிய முடியும் என்று கூறு கின்றோம். ஆகவே நமது நோக்கம் சாதி பேதமும், பெண்ணடி மையும் ஒழிய வேண்டுமென்பது தான் என நாம் எடுத்துக் காட்டுவது மிகையாகும்.
ஆகையால், யார் யார், சாதி வேற்றுமைகளை ஒழித்து மக்களுக்குள் சமதர்மத்தை நிலை நிறுத்தவும், பெண்களுடைய அடிமைத்தன்மைக்கான காரணங்களை எல்லாம் ஒழித்து அவர்களுக்கும் ஆண்களைப்போல் சம உரிமை அளிக்கவும் பாடுபடுகின்றார்களோ அவர்களையெல்லாம் நாம் பாராட்டு கின்றோம். இத்தகைய கொள்கைகளுடன் உழைத்து வரும் இயக்கங்களுக்கும், மக்களுக்கும், சாதிரங்களுக்கும் மதங்களுக் குங்கூட நாம் எதிரிகளல்ல வென்பதைச் சொல்லிக் கொள்ளு கிறோம். 
-விடுதலை,15.7.16

ஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்

-தந்தை பெரியார்

ஈரோடு தேவதான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்துமதம் என்பதைச் சேர்ந்தவர் களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசைவுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும், ஆசார மாகவும் ஆலயத்திற்குச் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டிவிட்டுப் போய்விட்டதும் பிறகு வெகு நேரம் குருக்கள் வராததால் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும், பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந் திருக்கலாம். இப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நட வடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ. 295, 299, 109 பிரிவு களின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈஸ்வரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரஸ்டு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமி னில் விடப்பட்டது. பகலில் மூன்று பேர்களும் மாஜிஸ்ரேட் கோர்ட்டுக்குப் போனவுடன் உடனே விசாரணை தொடங் குவதாய் மாஜிஸ்ரேட் சொன்னதாகவும், எதிரிகள் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னது என்று தெரியக் கூட முடியாதபடி விசாரிப்பதின் இரகசியம் தெரியவில்லை ஆகையால் வாய்தா கொடுத்தா லொழிய விசாரணையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொன்னார்களாம். அதற்கு மாஜிஸ்ட்ரேட் கோபமாகவும், ஆத்திரமாகவும் வாய்தா கொடுக்கப்படமாட்டாது என்றும், பிராதின் விபரம் தெரியவேண்டுமானால் விண்ணப்பம் போட் டால் நகல் உடனே கொடுக்கப்படும் என்றும் நாளையே விசாரணை செய்து கேஸ் முடிக்கப்படும் என்றும் சொன்னாராம். எதிரிகள் மேஜிட்ஸ்ரேட்டைப் பார்த்து நீங்கள் ஒரு பார்ப் பனராயிருப்பதாலும் உங்கள் கோபத்தையும் ஆத்திரத் தையும் பார்த்தால் எங்களுக்கு உங்கள் மனப்பான்மை ஏற்கனவே விரோதமாகக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்றதாலும் உங்களிடம் இந்த வழக்கு நடப்பதன் மூலம் நியாயம் பார்க்க முடியாதென்றும், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டி யிருப்பதால் வாய்தா கொடுங்கள் என்றும் விண்ணப்பம் கொடுத்துக் கேட்டார் களாம். உடனே மேஜிட்ஸ்ரேட்டுக்கு மயக்கமுண்டாகி அந்த விண்ணப்பத்தை ஏதோ சாக்குச் சொல்லி எதிரிகளிடம் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வரை வாய்தா கொடுத்திருப் பதாக தாமே உத்திரவிட்டு விட்டு முச்சலிக்கை வாங்கிக் கொள்ளும்படி சொல்லி விட்டார்களாம். திங்கட்கிழமை தினமும் எதிரிகள் இவ்வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற விண்ணப்பம் போடுவார்கள் என்பதாகத் தெரியவருகின்றது!  ஊர் முழுவதும் எதிரிகளுக்கும் எதிரிகளின் செய்கைக்கும், அனுகூலமாகவும் குதூகுலமாகவும் இருக்கின்றது. கூட்டங் களுக்கு 1000, 2000 ஜனங்கள் வந்தவண்ணமாய் இருக் கின்றார்கள். தினப்படி மீட்டிங்குகள் நடக்கின்றன. வழக்கை எதிர் வழக்காடாமல் விட்டுவிட்டு இதையே சத்தியா கிரகமாகச் செய்து தினப்படி ஜெயிலுக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கலாம் என்பதாகச் சிலரும் எதிர் வழக்காடுவதின் மூலம் உரிமை உண்டா? இல்லையா? என்பதை உணர்ந்து பிறகு வேறு ஏதாவது காரியம் செய்யலாம் என்பதாகச் சிலரும் கருதிக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

எதற்கும் திரு. ஈ.வெ.ராமசாமியார் இவ்விரண்டு வாரமும் வெளி ஊர்களிடையே இருந்திருப் பதால் அதாவது சென்னை, கோயமுத்தூர், பாலக்காடு, கொச்சி, ஆலப்புழை முதலிய இடங்களிலும் கோயமுத்தூர், திருச்செங்கோடு, சேலம் முதலிய இடங்களிலும் மகாநாடு காரியமாகவும் முன்னாலேயே ஒப்புக் கொண்ட படியும் போக வேண்டியிருந்ததால் இக் காரியங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ கலந்து யோசிக்கவோ முடியாமல் போய் விட்டது.

ஆனாலும் சீக்கிரத்தில் கலந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரப்படும். எதற்கும் தக்க முஸ்தீபுகளுடன் முன் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சமயம் தாராளமாகத் தொண்டர்களும் பணமும் வேண்டி இருந்தாலும் இருக்கும். அதோடு இவ் விஷயம் துவக்கப்பட்டுவிட்டால் சட்டசபை தேர்தல்களைப் பற்றி கவனிக்க முடியாமல் போனாலும் போகலாம். ஆதலால் தேர்தல் விஷயமான சகலப் பொறுப்பையும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்கள் எடுத்துக் கொள்ளவிட்டுவிட்டு சுயமரியாதை இயக்கத்தார் களும், மற்றும் சீர்திருத்தக் கொள்கைக் காரர்களும் இதில் முனைந்து நிற்பதின் மூலம் தீண்டாமை விலக்கு பிரசாரம் செய்வதும், பொது ஜனங்களுடைய மனப்பான்மையை இன்னும் அதிகமாக நமக்கு அனு கூலமாக்கிக் கொள்ளும் விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதும் மேன்மையாகும். ஆலயபிரவேச உரிமை யைப் பற்றி நமது நாட்டில் பார்ப்பனர்களின் வர்ணாசிரம மகாநாடு ஒன்று தவிர மற்றபடி எல்லா ஸ்தாபனங்களும் இயக்கங்களும் இது சமயம் அனுகூலமாகவே இருக் கின்றன.  அதாவது சமயசம்பந்தமாக வைணவ சைவ சமய மகாநாடுகளும், அரசியல் சம்பந்தமாக காங்கிரஸ்கள் சுய ராஜிய கட்சி, சுதந்திர தேசிய கட்சி, பூரண சுயேச்சை கட்சி, ஹோம்ரூல் கட்சி, ஜஸ்டிஸ்கட்சி என்னும் தென்னிந்திய நல உரிமைக் கட்சி மற்றும் சமுக சம்பந்தமான எல்லா இயக்கங்கள் மகாநாடுகள் இந்து மகாசபை மார்வாடி சபை மற்றும் அநேக பொது கூட்டங்களும், கடைசியாக எல்லாக் கட்சியும் மகாநாடு என்பதும் நேரு திட்டம் என்பதும் மந்திரிகள் உபன்யாசங்களும் சைமன் கமிஷனுக்கு சமர்ப் பிக்கப்பட்ட யாதாதுக்களும் மற்றும்  எல்லாத் தலைவர்கள் என்பவர்களும் பிராமணன் என்கின்ற பத்திரிகை தவிர மற்றபடி எல்லாப் பத்திரிகைகளும் குறிப்பாக பிரதாப கோவில் சம்பந்தப்பட்ட தேவஸ்தான கமிட்டியும் அனு கூலமாக இருப்பதோடு அல்லாமல் தேவஸ்தான இலாகா மந்திரியினுடையவும் என்டோமெண்ட்போர்ட் மெம்பர் களினுடையவும் அபிப் பிராயமும் கடைசியாக கவர் மெண்டினுடைய போக்கும் இச்செய்கைக்கு அனுகூலமாக இருப்பதுடன் ஆதரிப்பும் இருந்துவருகின்றது. இவ்வளவு ஆதரிப்பும் அனுகூலமும் இருப்பதோடு நமது நாட்டில் பணமும் தொண்டர்களும் தாராளமாய் கிடைக்கத்தக்க வண்ணம் தேசநிலையும் இருந்து வருகின்றது. எனவே இம்மாதிரியான முயற்சிக்கு இனிஇதைத் தவிர வேறு ஒரு தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனவே, இந்தக் காரியம் முக்கியமா அல்லது சட்டசபை தேர்தல் காரியம் முக்கியமா என்று யோசித்தால் தேர்தலைவிட இதுவே முக்கியமென்று அநேகருக்கு தோன்றலாம் என்றே கருதுகின்றோம். ஆதலால் எதற் கும் பணக்காரர்களும் தொண்டர்களும் தயாராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

குடிஅரசு - கட்டுரை - 21.04.1929
-விடுதலை,10.7.16

கடவுள் பற்றி அர்த்தமற்ற அபிப்பிராயங்கள்



20.11.1932- குடிஅரசிலிருந்து
கடவுள் என்பது அர்த்தமும்  குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும் அது மனித சமுகத்தில் 100க்கு  99 மக்களை பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி  ஆதிக்கம்  செலுத்தி வருகின்றது.
கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக் கணக்கான  வருஷங்கள் ஆயிருந்த  போதிலும்கூட, கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்திய வர்களோ  உணர்ந்த வர்களோ இது வரையில்  காணக் கிடைக்கவில்லை.
பொதுவாக  அந்தப் படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர் களைப் பயப்படுத்தி வைக்க  வேண்டும் என்கின்ற  அவசியத் தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத்தையும், பாவ புண்ணிய பயனையும் மோட்ச நரகத்தையும், கற்பித்து அதை பரப்ப பலவித தாபனங்களைச் உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட்டதால் வெகு சுலபமாகவும்,
செல்வாக்காகவும் அதன் பிரச்சாரம் நடக் கவும்,  மக்களை தன் வயப்படுத்தவும்  ஆன காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன.
கடவுள் என்றால் என்ன, என் றாலும், கடவுள் என்றால் என்ன, என்பதை உணருவதற் கில்லாமலும், உணர வேண்டும் என்று  நினைப்பதற்கு இல்லாமலும் இருந்து வருகிறது.
யாராவது  கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையும், செய்கைகளையும் கொண்டிருப்பதும் ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அறிதாகவேயிருக்கிறது.
கடவுள் என்பது சர்வ  வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வசக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப் பட்டு விட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம் இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது.
ஒரு வேடிக்கை
இவற்றுள் மற்றொரு வேடிக்கை என்ன வென்றால் இப்படிப் பட்ட ஒரு கடவுள் தன்மையை அதாவது சர்வ சக்தியும் சர்வ வியாபகமும், உடையதும் கண்ணுக்கும் மனதிற்கும் தென்படாததும், குணமும், உருவமும் இன்ன தன்மை யென்று  குறிப்பிடக் கூடிய தன்மையும் இல்லாதது? மான ஒரு கடவுளை நிலை நிறுத்தவும் அதைப் பற்றி மக்கள் நம்பிக்கை  கொள்ள வும் கடவுளால் உண்டாக்கப்பட்ட மக்களிலேயே பலர் வக்காலத்துப் பெற்று கடவுளை நிருபிக்க ஒழுங்கற்ற முறையிலும் ஒழுக்க ஈனமான முறையிலும் எவ்வளவோ பாடு படவேண்டியிருப்பது மேயாகும்.
மற்றும் அப்படிப்பட்ட வக்காலத்துக்காரர் தங்கள் சொந்த நிலையில் தங்களால் செய்யப் படும் ஒவ்வொரு காரியத்தையும் தாங்களே செய்வதாகவும் தங்களால் சொல்லப் படும் ஒவ்வொரு விஷயமும் தாங்களே அறிந்து சொல்லுவதாகவும், நினைத்தே பேசியும் நடந்தும் வருகிறார்கள்.
அது மாத்திர மல்லாமல் மற்றவர்களால் செய்யப்படும், சொல்லப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்கள் தங்களுக்குச் செய் வதாகவும் சொல்லுவதாகவும், எழுதுவதாகவும் கருதுவதுடன், மற்றவர்கள் மீது துவேஷம், வெறுப்பும், விருப்பும் கொண்டு அவர்களை இன்ன இன்னபடி  நடவுங்கள் என்றும், தங்களுக்கு இன்ன இன்ன காரியங்களைச் செய்து கொடுங்கள் என்றும் கோருகிறார்களேயல்லாமல் இவையெல்லாம் சர்வ வல்லமை உள்ள கடவுள் செயலால்தான் நடக்கின்றது. நடந்து விடும் என்ற நம்பிக்கையும் உறுதியும் தைரியமும் இல்லாதவர் களாகவே இருக்கிறார்கள்.
மற்றொரு சாரார் கடவுளைப் பார்க்கா விட்டாலும், உணரா விட்டாலும் உலகப் படைப்புக்கும் நடப்புக்கும் ஏதாவது ஒரு கர்த்தாவோ காரணமோ இருக்க வேண்டாமா? அப்படிப் பட்ட கர்த்தாவோ காரணமோதான் கடவுள் என்று சொல்லுகிறார்கள். மற்றொரு சாரார் உலகத் தோற்றத்திற்கும் நடப்புக்கும் ஏதாவது ஒரு சக்தி (Force) ஆவது இருக்கு மல்லவா? அதுதான் கடவுள் என்கிறார்கள். மற்றொரு சாரர் இயற்கையே - அழகே - அன்பே - சத்தியமே கடவுள் என்றும் இன்னும் பலவாறாகச் சொல்லுகிறார்கள்.
ஆனால் நமது நாட்டைப் பொருத்தவரை மக்கள் கடவுளுக்கு மனித உருவம் கற்பித்து சாதாரண மனித வாழ்க்கையிலுள்ள பெண்டு பிள்ளை முதலியவைகளை கற்பித்து, செல்வ வானுக்குள்ள குணங்களையும், சுகபோகங்களையும் கற்பித்து, அதற்குக் கோவில் பூசை, உற்சவம், கல்யாணம், சாந்தி முகூர்த்தம் முதலியவைகளைக் கற்பித்து வணக்கத்திற்காக என்று கோடான கோடி ரூபாய்களைச் செலவு செய்யச் செய்து மக்களை அதுவும் ஏழைமக்களை வாட்டித் தொல்லைப் படுத்தியும் வருகிறார்கள்.
இப்படியாகக் கடவுளைப் பற்றி இன்னும் பல விதமாய் அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டும் காரியத்திலும் பல செய்யப்பட்டும் வருகின்றன.  இந்த விதமான கடவுளைப் பற்றி அர்த்தமற்ற - குறிப்பற்ற - பரிகாசத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் இடமான அபிப்பிராயங்களும் மற்றும் பாமர மக்களைத் தந்திரக்காரர்கள் ஏமாற்றுவதற்கான முறைகள் கொண்ட கருத்துகளும்,
விவகாரங்களும் இன்றோ நேற்றோ அல்லாமல் வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அன்றியும் இக்கருத்துக்களை மதக்கொள்கைகள் என்பவற்றின் மூலமாகவும் அரசாங்கச் சட்டங்களின் மூலமாகவும், மறுத்துப் பேச இடங்கொடுக்கப்படாமலும் மீறிப் பேசினால் தண்டித்தும் மதவெறியால் என்றும் கொடுமைப்படுத்தியும் தான் காப்பாற்றப் பட்டும் நிலை நிறுத்தப்பட்டும் வந்திருக்கின்றது.

கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறு பாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத் தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்
- (தந்தை பெரியார்)
-விடுதலை,8.7.16

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கத்தோலிக்கப் பெரியார்கள்

- தந்தை பெரியார்
சுயமரியாதை இயக்கமும், குடிஅரசும், கடவுள் என்று சொல்லப்படும் ஒன்றை ஒழிப்பதற்கு என்றோ, அல்லது அது இல்லையென்று நிலைநாட்டுவதற்கென்றோ அல்லது அது உண்டு யென்று நிலை நாட்டுவதற்கென்றோ தோன்றி யவைகள் அல்ல. குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தின் மீதும் துவேஷம் கொண்டு அதை ஒழிப்பதற்குப் புறப்பட்டவை யுமல்ல. ஆனால், ஜாதியின் பேராலோ, அல்லது மதத்தின் பேராலோ அல்லது சாதிரங்களின் பேராலோ மற்ற எதன் பேராலோ ஜன சமுகத்தில் ஏற்பட்டிருக்கும் எவ்விதமான உயர்வு தாழ்வுகளையும் ஒழித்து மக்களுக்குள் சமத்துவத்தை உண்டாக்கவே இவ்வியக்கம் ஏற்பட்டதாகும். மனிதர்களை மனிதர்கள் பலவகையான அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லிப் பரம்பரையாகக் கொடுமைப் படுத்திவரும் அக்கிர மத்தை - அது எந்த வகையான பரிசுத்தமான பெயரால் நடைபெற்று வந்தாலும் அதை ஒழிக்கவே இவ்வியக்கம் தோன்றியதாகும். இவ்வியக்கத்தின் உண்மைக் கருத்தை உணர்வோர் இதை ஒரு ஜீவரட்சக அறிவியக்கம் என்று ஒப்புக் கொள்ளாமல் போகமாட்டார்கள்.

ஆனால், மக்களுடைய சமவுரிமைக்கு விரோதமாகவும், அவர்களைக் கொடுமைக்கு உட்படுத்துவதாகவும், அவர்களு டைய அறிவையும், சுதந்திரத்தையும், தடைசெய்வதாகவும் உள்ளவை எவையானாலும், அவை, கடவுளோ, மதமோ, சாதிரமே, ஜாதியோ, அரசாங்கமோ, மற்று எவையோ அவை களையெல்லாம் அடியோடு அழிப்பதற்கு இவ்வியக்கம் சிறிதும் பின் வாங்காது.
ஆகையால், இவ்வியக்கத்தைக் கண்டு, மக்கள் அனை வரும் சமவுரிமை பெற வேண்டும் என்று விரும்புகின்ற எவரும் மனிதர்களின் கையில் அகப்பட்டுப் பரம்பரையாகக் கொடுமையனுபவித்து வருகிற மக்களை விடுதலை செய்ய வேண்டு மென்று நினைக்கின்ற எவரும் ஜாதிக் கொடுமையினின்றும், மதக் கொடுமையினின்றும் மக்கள் விடுபட வேண்டும் என்று விரும்புகின்ற எவரும் - சிறிதும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மதத்தினாலோ ஜாதியினாலோ, மூடச் சடங்குகளிளாலோ, சாத்திரங்களி னாலோ ஏழை மக்களை அடக்கி வைத்து, தாமே ஆதிக்கம்  செலுத்த வேண்டும் என்று நினைக்கின்ற வன்னெஞ்சர்கள் அனைவரும் பயப்பட்டுத்தான் ஆக வேண்டும். இத்தகைய வன்னெஞ்சக சுயநல பிரியர்களின் ஜீவாதார உரிமைகளை வேரோடு அறுக்க முனைந்து நிற்பதில் சுயமரியாதை இயக்கத்திற்கு ஒப்பாக வேறொன்றையும் கூற முடியாது.

இந்த உண்மையான காரணத்தை உணர்ந்தே, இப்பொ ழுது இவ்வியக்கத்தைப் பல மதத்தைச் சேர்ந்தவர்களும், பல சாதியைச் சேர்ந்தவர்களும், பல கொள்கைகளை உடைய வர்களும் ஆதரித்து வருகின்றார்கள்.  நமது இயக்கத்தில் கடவுள் இல்லை என்று சொல்வோரும் இருக்கின்றார்கள், கடவுள் உண்டு என்று சொல்லுவோரும்  நம்புவோரும் இருக்கின்றார்கள். இவ்விஷயம் ஒவ்வொருடைய தனிப்பட்ட அபிப்பிராயமாகும். ஆனால் இயக்கத்திற்குக் கடவுளைப் பற்றிய கவலையே இல்லை. இந்த நிலையில், இப்பொழுது நமது இயக்கத்தைப் பகிரங்கமாக எதிர்க்கப் புறப்பட்டிருக் கின்றவர்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பாதிரிமார்களே யாவர்கள். இவர்கள் நமது இயக்கத்தைக் கண்டு பயந்து, இப்பொழுது நமது இயக்கத்தையும், குடிஅரசையும் எதிர்க்கப் புறப்பட்டிருப்பதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. ஏழை மக்களைச் சுதந்தரமின்றிக் கட்டுப் படுத்திக் கொடுமைப் படுத்துங் கூட்டத்தார்க்கு நமது இயக்கமும், குடிஅரசும் விரோதமாகத்தான் காணப்படும் என்ற உண்மையை வைத்துப் பார்க்கும் போது, இந்த கத்தோலிக்க மதப் பாதிரி மார்கள் சுயமரியாதை இயக்கத்தின் விரோதத்திற்கு இலக் கானவர்களாயிருக்கலாமோ என்ற சந்தேகம் தோன்றுவது இயல்பேயாகும்.

கத்தோலிக்க மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிதவர்களின் நிலையை எடுத்துக் கொண்டால், அவர்கள் படும் கஷ்டத்திற்கும், இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வர்கள் படும் கஷ்டத்திற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை என்றே சொல்லலாம். தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு உயர்குலக் கிறிஸ்தவர்கள் செல்லும் மாதா கோயில்களுக்கும் சென்று அவர்களுடன் சமமாக இருந்து  வணங்குவதற்கு உரிமையில்லை. கிறிஸ்து மத சம்பந்தமாக வைக்கப்பட்டிருக்கும் கலாசாலைகளிலும், சாப்பாட்டு விடுதி களிலும், உயர்குலக் கிறிஸ்தவர்களுக்குச் செய்து கொடுக்கப் படும். சவுகரியங்கள் தாழ்த்தப்பட்ட சமுக கிறிஸ்தவர்களுக்குச் செய்து கொடுக்கப்படுவதில்லை; இன்னும் இவை போன்ற பல புகார்கள் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன. ஆனால் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களின் வீடு களில் நடைபெறும் நன்மை தீமை ஆகிய விசேஷங்களில் பாதிரி மார்களுக்கும் கோயில்களுக்கும் சேர வேண்டிய பொருளை மாத்திரம் வாங்குவதில் தவறுவதில்லை. இவ் விஷயங்களெல்லாம் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மகாநாடு களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இக்காரணங்களால் இப்பொழுது கிறிஸ்தவர்களின் பலர் பாதிரிமார்களைப் பகிஷ்கரித்துச் சுயமரியாதை முறைப்படி கல்யாணம் முதலிய காரியங்களை தாங்களே செய்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இம்முறையில் திருச்சி ஜில்லாவில் மாத்திரம்  சுமார் 150  கலியாணங்கள் வரையிலும் பாதிரிமார்களை நீக்கி நடை பெற்றிருக்கின்றன என்று தெரிகின்றது. இதற்கு ஒரு வகையில் சுயமரியாதை இயக்கமும், குடிஅரசும் காரணமாகும் என்பதை அவர்கள் நன்றாய் அறிந்திருக்கிறார்கள். இக்காரணத்தால், தான் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்கப் புறப்பட்டிருக் கிறார்கள் என்பதில் அய்யமில்லை.

அவர்கள், இவ்வியக்கத்தால், தமது மதத்தில் கட்டுண்டு தமது சொற்களுக்கு அடங்கி நடந்து கொண்டு வரும் பாமர மக்கள் அனைவரும் விழிப்படைந்து விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டு, தமது முழு அதிகாரத்தையும் செலுத்திக் கத்தோலிக்கக் கிறிதஸ்வர்கள் மத்தியில்  சுயமரியாதை இயக் கத்தை பரவாமல் தடுக்க முயலுகிறார்கள். சமீபத்தில் கோயம் புத்தூர் ஜில்லாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கெல்லாம், அந்த மதகுருவாகிய மேற்றி ராணியார் என்பவர் குடிஅரசிலும், சுயமரியாதை இயக்கத்திலும் யாரும் சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது, குடிஅரசு வரவழைத்துப் படிப்பவர்கள் 15 நாட்களுக்குள் அதை நிறுத்திவிட வேண்டும் என்று ஒரு சுற்றுத்தரவு அனுப்பி 15 நாட்களில் குடிஅரசை நிறுத்தாத வர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. சென்ற 30. 10. 1932- இல் திருச்சியில் நடந்த கத்தோலிக்க வாலிபர் மகாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டிப் பதாகவும் வாசக சாலைகளிலும், பொது மேடைகளிலும், பத்திரிகைகளிலும் இவ்வியக்கத்தை எதிர்த்துப் பிரசாரம் பண்ணவேண்டும் என்றும் தீர்மானத்திருக்கின்றார்கள்.

இவ்வாறு, பாதிரிமார்களும், அவர்களுடைய பக்தர்கள் சிலரும் செய்யும் வீண் மிரட்டலைக் கண்டு நமது  இயக்கமோ, குடி அரசோ சிறிதும் அஞ்சப் போவதில்லை. ஆனால் ஜன சமுகத்திற்கு நன்மையை உண்டாக்குவதற்கெனத் தோன்றிய இவ்வியக்கத்தைக் கண்டு நடுங்கும் கத்தோலிக்க குருமார் களுக்கும், அவர்களுடைய சீடர்களுக்கும் சில விஷயங் களைச் சொல்ல விரும்புகின்றோம்.

கத்தோலிக்க மதத்தில் உள்ள மக்கள், கத்தோலிக்க குரு மார்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்திருப்பதற்கும், பாதிரிமார் களின் கட்டுப்பாடுகளை மீற ஆரம்பித்திருப்பதற்கும், சுயமரியாதை இயக்கமே முழுதும் காரணமல்ல. மதத்தினாலும், மத குருமார்களின் நடத்தைகளாலும், கட்டுப்பாடுகளாலும், அந்த மக்களுக்கு உண்டாகி இருக்கும் கஷ்டமே காரணமாகும். ஆகையால் மக்களின் சவுகரியத்திற்கு ஏற்றபடி மதக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும் மதக் கொள்கைகளைத் திருத்தி அமைப்பதுமே மக்களைத் திருப்திப்படுத்தக் கூடிய செய்கைகளாகும். இதை விட்டு, மக்களுடைய அறிவையும், சுதந்திரத்தையும் சமத்துவத்தையும், வளர்க்க முன் வந்துள்ள சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விடுவதென்றால் அது ஒருக்காலும் முடியாத காரியம்.

மத குருமார்கள் சொல்லுவதையெல்லாம் உண்மை யென்று நம்பி அவர்களுக்கு அடிமையாக இருக்கும் காலம் மறைந்து வருகிறது. மக்கள் வரவர அறிவு வளர்ச்சி பெற்று வருகின்றனர். நாமும் மனிதர் என்ற உணர்ச்சி எல்லா மனிதர்களிடமும் உண்டாகிக் கொண்டு வருகிறது. ஜாதி வித்தியாசங்கள் எல்லாம் பெயரளவில்இருந்தாலும், சில அறிவில்லாதவர்கள், விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந் தாலும், உண்மையில் அது தானாகவே அழிந்து கொண்டே வருகிறது.

மதங்களும், தற்பொழுது புரோகிதக் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரம் அவர்களால் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகின்றதே ஒழிய, பொது ஜனங்கள் அவற்றைச் சிறிதும் லட்சியம் பண்ணுவதில்லை. பெயரளவில் மதங்கள் உலவி வருகின்றனவேயொழிய உண்மையில் அவைகள் இல்லவேயில்லை. மதக்கட்டளைகளும், மத சாதிரங்களும் பாமர மக்களை ஏமாற்றுவதற்காக மத குரு மார்களால் வாயளவில் சொல்லவும் படிக்கவும் மாத்திரம் உபயோகப்படுகின்றனவேயன்றி, அவைகளின் படி நடப்பவர்கள் யாருமில்லை; அவைகள் தாமாகவே அழிந்து கொண்டுதான் வருகின்றன. இன்னும் ஜன சமுகங்களின் பழக்க வழக்கங் களிலும், அதிதீவிரமாக மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன. இந்த மாறுதல்களை இனி எவராலும் தடுக்க முடியாது. இன்னும் சில ஆண்டுகளில் இம்மாறுதல் காரணமாக, மதங்களும், ஜாதிகளும், சடங்குகளும் புரோகிதக் கூட்டங்களும் கட்டாயம் அடியோடு அழிந்தே போகும். இந்த மாறுதலை ஒட்டியே சுயமரியாதை இயக்கமும் சீர்திருத்தம் செய்ய உழைத்து வருகிறது. ஆகையால் இவ்வியக் கத்தை அடக்கி விடலாம் எனக் கனவு காண்பதில் ஒன்றும் அர்த்தமில்லை என்று கூற விரும்புகின்றோம்.

சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்து எவ்வளவு பிரசாரம் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்தாகி விட்டது.  சைவப்பெரியார்கள் செய்த எதிர்ப்பிரசாரத்தைவிட, வைணவ பெரியார்கள் செய்த எதிர்ப் பிரசாரத்தைவிட, காங்கிர பெரியார்கள் செய்த எதிர் பிரசாரத்தைவிட கத்தோலிக்கப் பெரியார்கள் ஒன்றும் அதிகமான எதிர் பிரசாரம் பண்ணிவிடப் போவதில்லை. அன்றியும், சுயமரியாதை இயக்கமும், குடிஅரசும் எப்பொழுதும் எதிர் பிரசாரத்தைச் சந்தோஷத் தோடு வரவேற் குமேயொழிய அதைக் கண்டு அஞ்சுகின்ற வழக்கமில்லை என்பதை இச்சமயத்தில் நினை வூட்ட விரும்புகின்றோம்.
ஏனெனில், இது வரையில் எதிர்ப் பிரசாரத்தினால் இவ்வியக்கமும் குடி அரசும் செல்வாக்கும், வளர்ச்சியும், வலுவும் பெற்றனவே ஒழிய சிறிதும் குறைவடையவில்லை. ஆகையால், கத்தோலிக்கர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத் தால், இப்பொழுது, தமிழ்நாடு, மலேயா, பர்மா, சிலோன் முதலிய இடங்களில் நன்றாக வேரூன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கமும் குடி அரசும் மற்றைய தேசங்களிலும் சென்று பரவும் என்பதில் அய்யமில்லை. ஆகையால், தாராளமாகக் கத்தோலிக்கப் பெரியார்கள் எதிர் பிரசாரம் செய்ய முன்வரட்டும் என்று அறை கூவி அழைக்கின்றோம்.

ஆனால், உண்மை எப்பொழுதாவது வெளிப்பட்டுத்தான் தீரும். உண்மையை எப்பொழுதும் பின்பற்ற மக்கள் தயாராகத் தான் இருப்பார்கள். பொய்யான கட்டுப் பாடுகளும், மக்களை ஏமாற்றுவதற்கு - அடிமைப்படுத்துவதற்கு என்று ஏற்படுத்தி வைத்துள்ள மதக் கட்டுகளும் இனி நிலைத்து நிற்க முடியாது. அழிந்து தான் தீரும் என்று மாத்திரம் கடைசியாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அன்றியும், தங்கள் கொள்கைகளும் செய்கைகளும் நடத்தைகளும், வார்த்தைகளும், பரிசுத்த மானவை உண்மையானவை; அழிய முடியாத தெய்வீகத் தன்மை பொருந்தியவை என்ற உண்மையான நம்பிக்கை யுடையவர்களாயிருந்தால் அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. உண்மையான - அழியாத - தெய்வீகத் தன்மை பொருந்திய மதத்தைச் சுயமரியாதை இயக்கமோ, மற்ற எதுவோ அழித்து விட முடியாது. ஆதலால் கத்தோ லிக்கப் பெரியார்கள் தங்கள் மதத்திலும் தங்களுடைய கட்டுப்பாடுகளிலும், பழக்க வழக்கங்களிலும் உண்மை யான நம்பிக்கையுடையவர் களாய் இருந்தால்  ஏன் சுயரியாதை இயக்கத்தையும் குடி அரசையும் கண்டு நடுநடுங்க வேண்டும் என்று கேட்கின்றோம்? ஆகவே, அவர்களுடைய கொள் கையில் அவர்களுக்கே நம்பிக்கையில்லையா? என்று கேட்கின்றோம்.

மதக் கட்டுப்பாடுகளினாலும், மதகுருமார்களாலும், தங்கள் அறிவும், சுதந்திரமும், செல்வமும் பாழகின்றன என்ற உணர்ச்சி பெற்ற மக்களை, சுயமரியாதை இயக்கத்தோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று  சொல்லுவ தனாலோ, குடி அரசைப் படிக்கக் கூடாது என்று கூறுவத னாலோ அடக்கி விட முடியாது என்று எச்சரிக்கின்றோம். நாலா பக்கமும் அறிவு வெள்ளமும், சுதந்தர வெள்ளமும், சமத்துவ வெள்ளமும், பெருக்கெடுத்து வந்து பெரிய பெரிய அலைகளுடன் மோதும் போது நடுவில் உள்ள மூடப்பழக்க வழக்கம், அர்த்தமற்ற பயங்கரமான கட்டுப்பாடுகள், அறிவுக்குப் பொருந்தாத கோட்டு பாடுகள் ஆகியவைகள் சேர்ந்த மணல் முட்டு எப்படி நிலைத்து நிற்கும்? என்று யோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம்.
ஆகையால் இனி, எந்த விதமான பிரசாரம் செய்தாலும் ஜாதி பகிஷ்காரம், மதப் பகிஷ் காரம், போன்ற பூச்சாண்டி களைக் காட்டினாலும் பகுத்தறிவுடைய மக்களைப் பயமுறுத்த முடியாது. ஜாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம் என்று சொல்லும் சுயமரியாதை இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் குடிஅரசை படிப்பவர்கள், ஜாதி பிரஷ்டத்திற்கும், மதப் பிரஷ்டத்திற்கும் அஞ்சுவார்களா? ஆகையால் கத்தோலிக்கப் பெரியார்களின் மிரட்டலும், ஆர்ப்பாட்டமும் வீண் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

குடிஅரசு  - தலையங்கம் - 06.11.1932
-விடுதலை,3.7.16

எந்த அபிமானமும் எனக்கு இல்லை மனுஷாபிமானத்தைத் தவிர!



30.101932, குடிஅரசிலிருந்து...
எனக்கு மதாபிமானம் இல்லையென்று நீங்கள் கருத வேண்டாம். 25 வருட காலமாக நான் ஒரு கோவிலில் தர்ம கர்த்தாவாக விருந்து, அக்கோயிலின் கிராமங்களையெல்லாம் ஒழுங்காக நடத்தி வந்தேன். எனக்குத் தேசாபிமானம் இல்லை யென்றும் நீங்கள் சொல்லவேண்டாம். 1 தடவைக்கு 3, 4 தடவை தேசிய விஷயமாக ஜெயிலுக்குச் சென்றேன். ஆனால், இந்த அபிமானமெல்லாம் நம் ஏழை சகோதரருக்கு விமோசனம் கொண்டுவராது.
ஆதலால் தான் அபிமான மொன்றும் நமக்கு வேண்டாம். மனுஷாபிமானமே வேண்டு மென்று ஜனங்களுக்கு நான் எனக்கு தோன்றிய வரை போதிக்கத் தலைப் பட்டேன். சோம்பேறி ஞானமும் மதாபிமானமும் பசி கொண்ட மகனுக்கு அவன் பசியைத் தீர்க்குமா? எண்ணத்துக்குச் சுதந்திரம் கொடுக்க மனுஷாபி மானத்தையும் சுயமரியாதையையும் காப்பாற்றுங்கள். ஏழை களின் கஷ்டத்திற்கு நிவாரணந் தேடுங்கள் .
நான் சாதாரண மனிதனில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். யாவரும் என் அபிப் பிராயப்படி நடக்க வேண்டுமென்று திரு. சாரநாதன் கூறினார். அது என்கொள்கைக்கு முற்றிலும் மாறானது. நீங்கள் கேட்டு நீங்களே சிந்தித்து நன்மையானதைச் செய்ய வேண்டுமேயல்லாமல் ஒருவர் கூறுகிறபடி செய்யக் கூடாது. மனிதர்கள் சுய அறிவில் நம்பிக்கை வைக்க வேண்டும். விஷயங்களை நன்றாய் அலசிப் பார்க்க வேண்டும்.
100-க்கு 99பேர் ஒப்புக் கொண்டாலும் நீங்கள் அலசிப் பார்த்தே அறிய வேண்டும். உலகத்திலுள்ள சகல தேசங் களிலும் தலைவர்களின் கட்டளைப்படி நடந்தவர்கள் கஷ்டத் திலாழ்ந்து வருகிறார்கள். நடுநிலைமையிலிருந்து விஷயங் களைக் கிரகிக்க வேண்டும். என்னில் கடவுளிருக் கிறாரென்று நான் கூறவில்லை. நான் கூறும் விஷயங்களை ஆலோசித்துப் பாருங்கள்.
சகாயத்தைப் பெறுவதற்காகவோ, வேறு சுயநலம் காரணமாகவோ நான் இங்கு வந்திருக்க வில்லை. நாட்டிலே மக்களிடை பல நிலைமைகளைக் காண்கிறோம்.
ஒரு கூட்டத்தார் கஷ்டப்படுகிறார்கள், ஒரு கூட்டத்தார் இன்புற்று சுகபோகங்களை அனுபவித்து வருகிறார்கள். உலகப் பரப்பில் இந்த வித்தியாசமிருக்கிறது. தேசம், மதம், ஜாதி, பாஷை முதலானவற்றின் பேரால் சரித்திரக் கால முதல் மக்கள் கஷ்ட மடைந்து வருகிறார்கள்.
அவதார புருஷர்களும், தலைவர்களும் கூறின விஷயங் களை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். ஆதியில் மனிதர் ஒழிக்க விரும்பின காரியங்கள் இன்று வரை ஒழிக்கப் படவில்லை.
அவதாரக் காலங்களிலும் அன்னியராட்சியில்லாத காலங்களிலும் இதே கஷ்டம் நிலவி வந்தது. அதை மாற்றும் காரணத்தை மனிதர் உணரவில்லை. ஆதிமுதல் நாம் எடுத்துக் கொண்ட நோக்கம் தீர்ந்த பாடில்லை. ஆகையால் புதிய முறைகளைக் கண்டுபிடிக்க நடுநிலைமை வகித்து சிந்திக்க வேண்டும்.
நம்முடைய நாட்டில் பறையரென்றும், பார்ப்பானென்றும் நிழல் படக் கூடாதென்றும் ஒரு பகுதி துவேஷம் வைத்து வருகிறது.
பார்ப்பனரை பூதேவரென்றும் உயர்ந்த ஜாதி யென்றும் சரித்திர காலம் முதல் கருதி வருகிறார்கள். காரணம் மனித சமுக பந்தத்திலில்லாததே உனக்கும் எனக்கும் என்ன வித்தியாச மென்று கேட்டால் மதவிரோதமென்றும், நாத்திக மென்றும் கூறப்படுகிறது. இந்த அக்கிரமங்களை அழிக்க முற்படுகிறவன் தேசத்துரோகியென்றும், மதத்துரோகி யென்றும் கருதப்படுகிறான்.
மனுதர்ம சாஸ்திரங்களையும் வேதங்களையும், ஆதாரமாகக் காட்டி கடவுள் சிருஷ்டி பகவான்செயல், பகவான் வாக்கென்றும் கூறுகிறார்கள். அவற்றைக் குழி தோண்டி புதைக்க நீங்கள் தயாராயிருந்தால் மட்டும் வெற்றி பெற்று விளங்கலாம். தேசாபிமானி உயர்வு தாழ்வை ஒப்புக் கொள்வானாகில் அவனுடைய தேசாபி மானம் நமக்கு வேண்டாம்.
-விடுதலை,2.7.16