ஞாயிறு, 9 அக்டோபர், 2016

எந்த அபிமானமும் எனக்கு இல்லை மனுஷாபிமானத்தைத் தவிர!



30.101932, குடிஅரசிலிருந்து...
எனக்கு மதாபிமானம் இல்லையென்று நீங்கள் கருத வேண்டாம். 25 வருட காலமாக நான் ஒரு கோவிலில் தர்ம கர்த்தாவாக விருந்து, அக்கோயிலின் கிராமங்களையெல்லாம் ஒழுங்காக நடத்தி வந்தேன். எனக்குத் தேசாபிமானம் இல்லை யென்றும் நீங்கள் சொல்லவேண்டாம். 1 தடவைக்கு 3, 4 தடவை தேசிய விஷயமாக ஜெயிலுக்குச் சென்றேன். ஆனால், இந்த அபிமானமெல்லாம் நம் ஏழை சகோதரருக்கு விமோசனம் கொண்டுவராது.
ஆதலால் தான் அபிமான மொன்றும் நமக்கு வேண்டாம். மனுஷாபிமானமே வேண்டு மென்று ஜனங்களுக்கு நான் எனக்கு தோன்றிய வரை போதிக்கத் தலைப் பட்டேன். சோம்பேறி ஞானமும் மதாபிமானமும் பசி கொண்ட மகனுக்கு அவன் பசியைத் தீர்க்குமா? எண்ணத்துக்குச் சுதந்திரம் கொடுக்க மனுஷாபி மானத்தையும் சுயமரியாதையையும் காப்பாற்றுங்கள். ஏழை களின் கஷ்டத்திற்கு நிவாரணந் தேடுங்கள் .
நான் சாதாரண மனிதனில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். யாவரும் என் அபிப் பிராயப்படி நடக்க வேண்டுமென்று திரு. சாரநாதன் கூறினார். அது என்கொள்கைக்கு முற்றிலும் மாறானது. நீங்கள் கேட்டு நீங்களே சிந்தித்து நன்மையானதைச் செய்ய வேண்டுமேயல்லாமல் ஒருவர் கூறுகிறபடி செய்யக் கூடாது. மனிதர்கள் சுய அறிவில் நம்பிக்கை வைக்க வேண்டும். விஷயங்களை நன்றாய் அலசிப் பார்க்க வேண்டும்.
100-க்கு 99பேர் ஒப்புக் கொண்டாலும் நீங்கள் அலசிப் பார்த்தே அறிய வேண்டும். உலகத்திலுள்ள சகல தேசங் களிலும் தலைவர்களின் கட்டளைப்படி நடந்தவர்கள் கஷ்டத் திலாழ்ந்து வருகிறார்கள். நடுநிலைமையிலிருந்து விஷயங் களைக் கிரகிக்க வேண்டும். என்னில் கடவுளிருக் கிறாரென்று நான் கூறவில்லை. நான் கூறும் விஷயங்களை ஆலோசித்துப் பாருங்கள்.
சகாயத்தைப் பெறுவதற்காகவோ, வேறு சுயநலம் காரணமாகவோ நான் இங்கு வந்திருக்க வில்லை. நாட்டிலே மக்களிடை பல நிலைமைகளைக் காண்கிறோம்.
ஒரு கூட்டத்தார் கஷ்டப்படுகிறார்கள், ஒரு கூட்டத்தார் இன்புற்று சுகபோகங்களை அனுபவித்து வருகிறார்கள். உலகப் பரப்பில் இந்த வித்தியாசமிருக்கிறது. தேசம், மதம், ஜாதி, பாஷை முதலானவற்றின் பேரால் சரித்திரக் கால முதல் மக்கள் கஷ்ட மடைந்து வருகிறார்கள்.
அவதார புருஷர்களும், தலைவர்களும் கூறின விஷயங் களை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். ஆதியில் மனிதர் ஒழிக்க விரும்பின காரியங்கள் இன்று வரை ஒழிக்கப் படவில்லை.
அவதாரக் காலங்களிலும் அன்னியராட்சியில்லாத காலங்களிலும் இதே கஷ்டம் நிலவி வந்தது. அதை மாற்றும் காரணத்தை மனிதர் உணரவில்லை. ஆதிமுதல் நாம் எடுத்துக் கொண்ட நோக்கம் தீர்ந்த பாடில்லை. ஆகையால் புதிய முறைகளைக் கண்டுபிடிக்க நடுநிலைமை வகித்து சிந்திக்க வேண்டும்.
நம்முடைய நாட்டில் பறையரென்றும், பார்ப்பானென்றும் நிழல் படக் கூடாதென்றும் ஒரு பகுதி துவேஷம் வைத்து வருகிறது.
பார்ப்பனரை பூதேவரென்றும் உயர்ந்த ஜாதி யென்றும் சரித்திர காலம் முதல் கருதி வருகிறார்கள். காரணம் மனித சமுக பந்தத்திலில்லாததே உனக்கும் எனக்கும் என்ன வித்தியாச மென்று கேட்டால் மதவிரோதமென்றும், நாத்திக மென்றும் கூறப்படுகிறது. இந்த அக்கிரமங்களை அழிக்க முற்படுகிறவன் தேசத்துரோகியென்றும், மதத்துரோகி யென்றும் கருதப்படுகிறான்.
மனுதர்ம சாஸ்திரங்களையும் வேதங்களையும், ஆதாரமாகக் காட்டி கடவுள் சிருஷ்டி பகவான்செயல், பகவான் வாக்கென்றும் கூறுகிறார்கள். அவற்றைக் குழி தோண்டி புதைக்க நீங்கள் தயாராயிருந்தால் மட்டும் வெற்றி பெற்று விளங்கலாம். தேசாபிமானி உயர்வு தாழ்வை ஒப்புக் கொள்வானாகில் அவனுடைய தேசாபி மானம் நமக்கு வேண்டாம்.
-விடுதலை,2.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக