20.11.1932- குடிஅரசிலிருந்து
கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும் அது மனித சமுகத்தில் 100க்கு 99 மக்களை பிடித்து தன்வயப்படுத்தி மடமையாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக் கணக்கான வருஷங்கள் ஆயிருந்த போதிலும்கூட, கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறுபடி இல்லாமல் - தெளிவுபட உணர்த்திய வர்களோ உணர்ந்த வர்களோ இது வரையில் காணக் கிடைக்கவில்லை.
பொதுவாக அந்தப் படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர் களைப் பயப்படுத்தி வைக்க வேண்டும் என்கின்ற அவசியத் தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச) உலகத்தையும், பாவ புண்ணிய பயனையும் மோட்ச நரகத்தையும், கற்பித்து அதை பரப்ப பலவித தாபனங்களைச் உண்டாக்கி அதன் பிரசாரத்தின் பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி விட்டதால் வெகு சுலபமாகவும்,
செல்வாக்காகவும் அதன் பிரச்சாரம் நடக் கவும், மக்களை தன் வயப்படுத்தவும் ஆன காரியங்கள் நடந்து கொண்டே வருகின்றன.
கடவுள் என்றால் என்ன, என் றாலும், கடவுள் என்றால் என்ன, என்பதை உணருவதற் கில்லாமலும், உணர வேண்டும் என்று நினைப்பதற்கு இல்லாமலும் இருந்து வருகிறது.
யாராவது கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளையும், செய்கைகளையும் கொண்டிருப்பதும் ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறுவதுமாய் இருப்பதோடல்லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது அறிதாகவேயிருக்கிறது.
கடவுள் என்பது சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வசக்தியும் கொண்ட ஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப் பட்டு விட்டு உடனேயே அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும் சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம் இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும் சொல்லப்பட்டு விடுகின்றது.
ஒரு வேடிக்கை
இவற்றுள் மற்றொரு வேடிக்கை என்ன வென்றால் இப்படிப் பட்ட ஒரு கடவுள் தன்மையை அதாவது சர்வ சக்தியும் சர்வ வியாபகமும், உடையதும் கண்ணுக்கும் மனதிற்கும் தென்படாததும், குணமும், உருவமும் இன்ன தன்மை யென்று குறிப்பிடக் கூடிய தன்மையும் இல்லாதது? மான ஒரு கடவுளை நிலை நிறுத்தவும் அதைப் பற்றி மக்கள் நம்பிக்கை கொள்ள வும் கடவுளால் உண்டாக்கப்பட்ட மக்களிலேயே பலர் வக்காலத்துப் பெற்று கடவுளை நிருபிக்க ஒழுங்கற்ற முறையிலும் ஒழுக்க ஈனமான முறையிலும் எவ்வளவோ பாடு படவேண்டியிருப்பது மேயாகும்.
மற்றும் அப்படிப்பட்ட வக்காலத்துக்காரர் தங்கள் சொந்த நிலையில் தங்களால் செய்யப் படும் ஒவ்வொரு காரியத்தையும் தாங்களே செய்வதாகவும் தங்களால் சொல்லப் படும் ஒவ்வொரு விஷயமும் தாங்களே அறிந்து சொல்லுவதாகவும், நினைத்தே பேசியும் நடந்தும் வருகிறார்கள்.
அது மாத்திர மல்லாமல் மற்றவர்களால் செய்யப்படும், சொல்லப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்கள் தங்களுக்குச் செய் வதாகவும் சொல்லுவதாகவும், எழுதுவதாகவும் கருதுவதுடன், மற்றவர்கள் மீது துவேஷம், வெறுப்பும், விருப்பும் கொண்டு அவர்களை இன்ன இன்னபடி நடவுங்கள் என்றும், தங்களுக்கு இன்ன இன்ன காரியங்களைச் செய்து கொடுங்கள் என்றும் கோருகிறார்களேயல்லாமல் இவையெல்லாம் சர்வ வல்லமை உள்ள கடவுள் செயலால்தான் நடக்கின்றது. நடந்து விடும் என்ற நம்பிக்கையும் உறுதியும் தைரியமும் இல்லாதவர் களாகவே இருக்கிறார்கள்.
மற்றொரு சாரார் கடவுளைப் பார்க்கா விட்டாலும், உணரா விட்டாலும் உலகப் படைப்புக்கும் நடப்புக்கும் ஏதாவது ஒரு கர்த்தாவோ காரணமோ இருக்க வேண்டாமா? அப்படிப் பட்ட கர்த்தாவோ காரணமோதான் கடவுள் என்று சொல்லுகிறார்கள். மற்றொரு சாரார் உலகத் தோற்றத்திற்கும் நடப்புக்கும் ஏதாவது ஒரு சக்தி (Force) ஆவது இருக்கு மல்லவா? அதுதான் கடவுள் என்கிறார்கள். மற்றொரு சாரர் இயற்கையே - அழகே - அன்பே - சத்தியமே கடவுள் என்றும் இன்னும் பலவாறாகச் சொல்லுகிறார்கள்.
ஆனால் நமது நாட்டைப் பொருத்தவரை மக்கள் கடவுளுக்கு மனித உருவம் கற்பித்து சாதாரண மனித வாழ்க்கையிலுள்ள பெண்டு பிள்ளை முதலியவைகளை கற்பித்து, செல்வ வானுக்குள்ள குணங்களையும், சுகபோகங்களையும் கற்பித்து, அதற்குக் கோவில் பூசை, உற்சவம், கல்யாணம், சாந்தி முகூர்த்தம் முதலியவைகளைக் கற்பித்து வணக்கத்திற்காக என்று கோடான கோடி ரூபாய்களைச் செலவு செய்யச் செய்து மக்களை அதுவும் ஏழைமக்களை வாட்டித் தொல்லைப் படுத்தியும் வருகிறார்கள்.
இப்படியாகக் கடவுளைப் பற்றி இன்னும் பல விதமாய் அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டும் காரியத்திலும் பல செய்யப்பட்டும் வருகின்றன. இந்த விதமான கடவுளைப் பற்றி அர்த்தமற்ற - குறிப்பற்ற - பரிகாசத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் இடமான அபிப்பிராயங்களும் மற்றும் பாமர மக்களைத் தந்திரக்காரர்கள் ஏமாற்றுவதற்கான முறைகள் கொண்ட கருத்துகளும்,
விவகாரங்களும் இன்றோ நேற்றோ அல்லாமல் வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அன்றியும் இக்கருத்துக்களை மதக்கொள்கைகள் என்பவற்றின் மூலமாகவும் அரசாங்கச் சட்டங்களின் மூலமாகவும், மறுத்துப் பேச இடங்கொடுக்கப்படாமலும் மீறிப் பேசினால் தண்டித்தும் மதவெறியால் என்றும் கொடுமைப்படுத்தியும் தான் காப்பாற்றப் பட்டும் நிலை நிறுத்தப்பட்டும் வந்திருக்கின்றது.
கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறு பாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத் தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்
- (தந்தை பெரியார்)
-விடுதலை,8.7.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக