செவ்வாய், 12 ஜூன், 2018

"சாதி ஒழிப்பும் ஆச்சாரியார் கல்வித் திட்ட ஒழிப்பும் ஒன்றே!"



**தந்தை பெரியார்**




மனித சமுதாயத்தின்  மக்கள் பிறவியில் உள்ள பேதத்தை  ஒழிப்பதற்காகவும், மற்ற நாட்டு  மக்களைப்போல் நாமும் நம் நாட்டில் பூரண சுயேட்சை, சம அந்தஸ்து, சம உரிமையோடு வாழ்வதற்காகவும் பாடுபடுவதாகும். சமு தாயத்தின் பேரால், சாஸ்திரங்களின் பேரால், மதத்தின் பேரால், சட்டங்களின் பேரால் நம்  மக்களுக்குள்ள இழிவு களைப் போக்கப் பாடுபட்டு வருகிறது. சமுதாயத்துறையிலே, மதத்துறையிலே, கடவுள் துறையிலே,  திராவிட மக்களுக்கு இழைத்த கேடுகளை  ஒழிக்கவே சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தர் கொள்கைப் பிரசார மாநாட்டில் தீர்மானம் போட்டோம்.

அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் - உலக புத்த மத அய்க்கிய சங்கத் தலைவர் (ஜி. பி. மல்லலசேகரா). மாநாட்டைத் திறந்து வைத்தவர் எல்லா இந்திய தாழ்த்தப் பட்டவர் சங்கக் காரியதரிசியும், பார்லிமெண்டு மெம் பருமான தோழர் ராஜ்போஜ் அவர்கள் ஆவார்கள். இப்போது இங்கு ஷெட்யூல்வகுப்பு ஸ்தாபன சார்பாக மாலையிட்ட நண்பர். நாங்கள் இம்மாநாடுகளின் தீர்மானங் களைஆதரிக்கின்றோம்; ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்புமாத்திரமல்ல, ஜாதி ஒழிப்புக்கும் நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திராவிடர் கழகக் கொள்கை என்ன என்பதை அவர் சரிவர புரிந்துகொள்ள வில்லை என்று கருதுகிறேன்.

ஜாதி ஒழிப்பு என்பதும், ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பு என்பதும்  வேறு அல்ல. ஆச்சாரியார் கல்வித்திட்டம் ஒழியவேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? அவர் கல்வித்திட்டமே தன் சுயஜாதி பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வருணாசிரம பாதுகாப்புத் திட்டம். ஆகையால் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஜாதி என்பது வருணாசிரமத்தின்படி ஏற்பட்டதாகும். ஜாதிகளை எடுத்துக் கொண்டால் அவை அத்தனையும் 3 ஜாதிக்குள் அடங்கி விடும். இன்று செட்டியார், நாயுடு, முதலியார், கவுண்டர், ரெட்டியார், படையாச்சி, பறையன், சக்கிலி என்று சொல்லப் படும் அத்தனை ஜாதிகளும் அந்த 3 ஜாதிக்குள்ளேயேதான் அடங்கிவிடுகின்றன. என்ன அந்த 3 ஜாதி? 1. பார்ப்பான் அதாவது பிராமண ஜாதி என்று ஒருவன் சொல்லிக் கொள்வது; 2. சூத்திரஜாதி நம்மவர்களை - திராவிடர்களைக் காட்டுவது 3. அடுத்தாற்போல் ஆதாரம் இல்லாமல் தந்திர மான முறையில் புகுத்திய பஞ்சம ஜாதி அல்லது சண்டாள ஜாதியாகும். இன்றைய தினம் நாட்டிலே வருணாசிரம  முறைப்படிதான் இந்தப் பார்ப்பனனும், நம்மவர்களான சூத்திரர்களும், பஞ்சமர்களும் இருக்கின்றனர்.

நம்மவர்களில் சிலபேர் அவனை பிராமணன்  என்றே கூப்பிடுகிறார்கள்.

சில பார்ப்பன அடிமைகள் "திராவிடர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?" என்று தெரிந்தோ தெரியாமலோ கேட்கிறார்கள். பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்களெல் லாரும் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள் தான். இதை அவர்கள்  பின்பற்றுகிற கலாசாரப் படி கூறுகிறோம். உதாரணமாக, முஸ்லிம் ஒருவரை இரத்தப் பரிட்சை செய்து பார்த்தால், நமக்கும் அவருக்கும் பேதம் இருக்காது. அவன் முன்பு நம்மவனாக இருக்கலாம். ஆனால் கலாசாரப்படி முஸ்லிம் என்கிறான். பார்ப்பானை ஏன் ஆரியன் என்கிறோம்? ஆரிய கலாசாரம் வேறு; அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான். ஆரியர்கள், மற்றும் ஆரியர் கடவுள்கள், இதிகாசங்கள், சாஸ்திர புராணங்கள் வேறு. ஆனால் இவற்றையெல்லாம் நம் தலைமையில் கட்டினான். அவன் வேறு ஜாதி, பிறப்பு; நாம் வேறு ஜாதி, பிறப்பு என்ற முறையைப் புகுத்தினான்.

ஆச்சாரியார் புதுக் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கமென்ன? அந்தக் கல்வித்திட்டத்தின் அடிப்படை என்ன? நீங்கள் கவனிக்க வேண்டும். சூத்தி ரர்கள் படிக்கக்கூடாது. இதுதான் ரகசியம். வேறு ஒன்று மில்லை. பாதிநேரம் படிக்கச்சொல்லுகிறார். அந்தந்த சாதித் தொழில் சரிவர செய்யும் அளவுக்குப் படிக்கவேண்டும். ஆரியரின் ஜாதிமுறை, வருணாசிரம முறை. வருணாசிரம முறைப்படி, நாம் படிக்கவே கூடாது. ஏதோ வெள்ளைக்காரன் காலத்தில் நாம் 100க்கு 10 பேர் படித்துவிட்டோம். அந்தப் படிப்பைப் படித்ததால் இன்று நாம் பார்ப்பனர்களை மதிப்பது கிடையாது. அவர்கள் என்ன உசத்தி, நாம் என்ன தாழ்வு என்கிறோம். இன்று நகரங்களில் யாரும் பார்ப்பானை "சாமி" என்று கூப்பிடுவது கிடையாது. ஏதோ பட்டிக்காட்டில் தெரியாத காரணத்தால் கூப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். சிலர் மான உணர்ச்சி இல்லாமல் "சாமி" என்கிறார்கள். அதுவும் மாறிக்கொண்டுவருகிறது.

திராவிடர்களாகிய நாம் இங்குக் குடி புகுந்த அந்நியனை "பார்ப்பானை ஒழி; அவனை வெளியேற்று" என்று சொல் கிறோம். சர்க்காரால் (அரசால்) ஒன்றும் செய்ய முடியாது. இந்தியப் பிரதமர் நேருவும் சென்னைப் பிரதமர் ஆச்சாரி யாரும், "பார்ப்பனரே வெளியேறு" என்றால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இவர்களின் கூப்பாட்டினால் பெரிய கிளர்ச்சி உண்டாகிவிடுமே என்று பயப்படுகிறார்கள். ஏன்? "பார்ப்பானே வெளியேறு" என்பதற்கும் "வெள்ளை யனே வெளியேறு" என்பதற்கும் சிறிதும் வித்தியாச மில்லை. பார்ப்பான் மேல்ஜாதிக்காரனாம். உழைத்து உண்பவர்க ளாகிய நாம் கீழ்ஜாதிக்காரர்களாம்; இந்த நிலைமையைச் சகிக்க முடியாமல்தான் மேல்ஜாதிக்காரனே வெளியேறு என்கிறோம். இந்தக் கிளர்ச்சி இன்று நேற்றல்ல. 25 வருடங்களாகவே பார்ப்பானை ஒழிப்பது என்ற கருத்தில் நாம் இயக்கம் நடத்திவந்தோம்.

வெள்ளைக்காரனை வெளியேற்ற நாமும் காலித் தனமாக  ரயிலைக் கவிழ்த்துத் தண்ட வாளத்தைப் பிடுங் கினதாலே வெள்ளையன் "இந்தப் பசங்கள் முட்டாள்கள்; ஆகையால் நாம் பார்ப்பானிடமே அதிகாரச் சாவியைக் கொடுத்து விட்டுப் போவோம். அவன் கிட்டேயிருந்தால் தான் இவனுங்களுக்குப் பார்ப்பனர்கள் தக்க புத்தி கற்பிப்பார்கள்" என்று நினைத்துக் கொடுத்து விட்டுப் போயிட்டான். அதுவும் வெள்ளைக் காரன் இவ்வளவு நாளாக நம்மைச் சுரண்டி நம் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தால், இப்பொழுது முடியாமற் போகும் எனப் பயந்து பார்ப்பானிடம் லேவாதேவி, பாங்க், மில்கள் முதலியவற்றின் மூலம் சுரண்டுவதற்குப் பூரண உரிமை ஒப்பந்தம் செய்துகொண்டு சாவி கொடுத்துவிட்டுப் போய் விட்டான்.

அந்தப்படி சாவி வாங்கின பார்ப்பான் அம்பாரம் அம்பாரமாகப் பதவி, உத்தியோகக் கொள்ளை அடிக்கிறான். கூன், குருடு, செவிடு, கைகால் நடுக்கம் உள்ள தன் இனத்தாருக்கு கவர்னர், மந்திரி, எஞ்சினியர், எலக்ட்ரிக் எஞ்சினியர் முதலிய 1000 கணக்கான ரூபாவுக்கு  மேலும் உள்ள பதவிகளில் அமர்த்துகிறான்.  பிரசிடெண்ட் (குடி யரசுத் தலைவர்) இராசேந்திர பிரசாதுக்கு ரூ. 10000 சம்பளம். ஒரு சாதாரண புரோகிதகுடும்பம்; அவர் தகுதியெல்லாம் காந்திக்கு நல்லபிள்ளை. வெள்ளைக்காரனிடம் சாவி வாங்கியதும் சம்பளம்மாதம் 1-க்கு 10000 ரூபாய். வருடம் ரூ. 400000 படி, இவர்கள்தான் மாதம் 1-க்கு  500க்கு மேல் சம்பளம் வாங்கமாட்டோம் என்ற தீர்மானம் போட்டவர்கள். இன்னும் அந்தத் தீர்மானம் அப்படியே இருக்கிறது. பிரசிடெண்ட் தங்கியிருப்பதற்கு வைசிராய் பங்களா. இவர்கள்தான் தியாகிகளாம்! ஏழை பங்காளர் இவர்கள்! இப்படிக் கொள்ளையடிக்கிறார்கள். சுகவாழ்வு வாழ் கிறார்கள். நம்மவர்கள் பார்ப்பான் காலைக் கழுவிக் கும்பிட்டு மானம் கெடுகிறார்கள். வெள்ளைக்காரன் போனதும் அரையணா கார்டை (அஞ்சல் அட்டையை) முக்காலணா ஆக்கினார்கள். ஓரணா கவரை (அஞ்சல் உறையை) இரண்டணா ஆக்கினார்கள். நாலணா தந்தியைப்  பனிரெண்டணா ஆக்கினார்கள். மைலுக்கு 3 காசு; 4காசு ரயில் சார்ஜ்  (கட்டணம்) 5-6 பைசாவாக ஆக்கினார்கள். ஒன்றையும் குறைக்கவில்லை. எங்களுக்கு இவர்கள் என்ன பண்ணினார்கள்? மாறாக, நம்மை அப்பன் தொழில்செய்யணும்; உத்தியோக வேலை செய்யக்கூடாது; ஜாதிக் தொழில்தான் செய்ய வேண்டும். லு நாள் தான் படிக்கவேண்டுமாம். இதுதான் ஆச்சாரியார் கல்வித்திட்டம். வெள்ளையன் போன பின்பு அவர்கள் எல்லாத்துறையிலும் ஆக்கிரமித்து நம்மைப் பாழாக்கிவிட்டார்கள். ஆகையால் தான் நாம் வருணாசிரம கல்வித்திட்டத்தை எதிர்க்கிறோம். சாதியை மேலும் வளர்க்கின்ற காரணத்தினால் தான் இத்திட்டத்தை எதிர்க்கின்றோம். உண்மையிலேயே இந்த நாட்டில் மாத்திரமல்ல; இந்தியா முழுமைக்குமே சாதி ஒழிய வேண்டும் - அது அழிந்து பட வேண்டும், என்று சொல்லு கின்ற ஒரு ஆள்-ஒரு கழகம் இருக்கிறதென்றால் திராவிடர் கழகமும் நாங்களும்தான். இப்படிப் பேசுவது சும்மா சவடால், புளுகு சொல்லிப் போவதற்காக அல்ல. யாராவது சொல்லட்டுமே என்னைத் தவிர, திராவிடர் கழகத்தைத் தவிர ஜாதி ஒழிய வேண்டும். என்று சொல்பவர்களைக் காட்டுங்கள் பார்க்கலாம் - இந்த 2000 வருடங்களாய் எங்களைத் தவிர? காந்தியாராவது ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னதுண்டா? இன்று தானாகட்டும் யாராவது சொல்லட்டுமே! காந்தியார் "சாதியைக் காப்பாற்ற வேண் டும். அது நீடித்திருக்க வேண் டும். என் மூச்சே வருணாசிரமம் காப்பற்றப் படத்தான்" என்று தானே சொன்னார். தீண்டாமை ஒரு வழக்கம் தீண்டாமை ஒழிந்த தினமே பறையன் மாறிப் போவானா? தீண்டாமை ஒழிந்து விட்டதால் சக்கிலி வேறாய் விட் டானா? நமக்குத் தீண்டாமை இல்லையென்பதாலேயே நமக்குச் சூத்திரப்பட்டம் போய் விட்டதா?

டெல்லி ஆட்சியின் அரச மைப்புச் சட்டத்திலே ஒரு வார்த்தை  "ஜாதி  ஒழிக" என்று இருக்கிறதா? இந்தியாவைத் தவிர, தமிழ் நாட்டைத் தவிர, வேறு எங்காவது ஜாதி இருக் கிறதா? இந்த அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்தானே, ஜாதி ஒழிக்க வேண்டுமென்று அவர் கூட ஒரு வரி எழுதவில்லையே! டாக்டர் அம்பேத்கர் தான் அரச மைப்புச் சட்ட கர்த்தா; கீழ்ஜாதி, தீண்டாதார்களுக்குத் தலைவர். அவர் எழுதின சட்டத்தில் அவர்களுக்குச் "சலுகைகொடு" என்றுதான் கேட்டார். உடனே  பார்ப்பான் சலுகை கொடுத்து விட்டான். அவர்களின் 'விகிதா சாரப் படி 100க்கு 15 பேருக்குப் பதவி கொடுக்கிறேன்' என்று சொன்னான். 2000 மைசூர் ஆனைக்குட்டிகளைக் கொண்டு வந்து பஞ்சமர் கிட்டே உங்கள் விகிதாசாரம் 100க்கு 15 வீதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் அவன் எடுத்துக் கொள்வானா? அவனால் முடியுமா அதைக் காப்பாற்ற? அனுபவிக்க? அவ்வளவு காசுக்கு எங்கே போவான்? அதுபோல் அவர்களில், 15 முனிசீஃபு உத்யோகம் கொடுக்கிறேன் என்றால் ஒரு ஆள்தான்தேருவான். இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் 72 முன்சீஃப் பதவிகளுக்கு ஷெட்யூல் வகுப்பாருக்கு 12 பேருக்கு ஒரு ஆள்தானே விண்ணப்பம் போட்டார். பாக்கி ஆட்கள் வரவேண்டுமென்றால் 18 வருடம் படித்து பாஸ்செய்து, (தேர்ச்சிசெய்து) 3 வருடம் பிராக்டிஸ் செய்தல்லவா வரவேண்டும்? ஆதலால் அந்த 12-ல் ஒன்று தாழ்த்தப்பட்டவனுக்கு. பாக்கியெல்லாம் அவன் சாக்கில்  பார்ப்பானுக்குத்தானே போயிற்று? இது எவ்வளவு பெரிய சூழ்ச்சி? நாங்கள் படித்துவிட்டு தகுதியோடு தயாராய்  இருக்கிறோம். எங்கள் விகிதாசாரப்படி எங்களுக்குப் பதவிகொடு என்றால் அதைப்பார்ப்பான் இது வகுப்புவாதம்; திறமை கெட்டுவிடும்; கொடுக்கமாட்டேன் என்கிறானே? படிக்க முடியாத, படிக்காத, தயாராக வேண்டிய அளவுபடி இல்லாத மக்களுக்கு வகுப்பு நீதி வழங்கி இருப்பதாகப் பித்தலாட்டம் செய்கிறான்.

தோழர் ராஜ்போஜ் தெளிவாக திருப்பத்தூரில் இதை சொல்லிவிட்டாரே! "அரசாங்கத்தார் எங்களை ஏமாற்றி விட்டார்கள். நாங்களும் தெரிந்துதான் ஏமாந்தோம். அதை ஒப்புக்கொள்ளாதிருந்தால் இந்நேரம் எங்கள் அம்பேத் கரைக் கொன்றிருப்பார்கள். அம்பேத்கருக்கு உயிர் மேல் கவலையில்லை யென்றாலும், கொன்று விடுவதாக வந்த கடிதங்களைக் கண்டு பயந்து, ஏதோ நாம் இன்னும் சில காலம் உயிருடன்  இருந்தாலும் ஒன்றிரண்டு நன்மை களாவது செய்யமுடியுமே என்ற எண்ணத்தில், அவர்கள் காட்டின இடத்தில் கையெழுத்துப்போட்டார்" என்பதாக. அதாவது காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மறுத்ததன்  காரணமாக அவரைக் கொல்ல முயற்சிசெய்தார்கள். அதிலிருந்து தப்பி மறுநாள் கையொப்பம் போட்டதனால்தான் அவர் உயிர் தப்பியது என்றார்.

ஆச்சாரியார் கல்வித்திட்டம் சாதியை வளர்க்கும் கல்வித்திட்டம், ஆகையால்தான் சாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். சாதி ஒழிய  வேண்டுமாயின்  சாதிக் குறைபாட்டை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது.  நீங்கள்  நன்றாக  ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி அடிப்படையை ஒழித்தாக வேண்டும். பணக்காரர் களெல்லாரும் 'சூத்திரர்கள்'தானே, ராஜாக்கள் எல்லாரும் 'சூத்திரர்கள்' தானே? பணம் மட்டும் சேர்ந்து விட்டால் 'சூத்திர'ப் பட்டம் போய் விடுமா? தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாங்கூர்- கொச்சி ராஜாக்களெல்லாரும் 'சூத்திரர்'கள் தானே. பணம் இருக்கிறதாலேயே பதவி இருக்கிறதாலேயே, மடாதிபதியாக இருப்பதாலேயே 'சூத்திரப்'பட்டம்  போய் விடுகிறதா? கவர்னராக (ஆளுநராக) இருந்த சர். கே.வி.ரெட்டி, மந்திரியாக இருந்த பி.டி. ராஜன், இவர் களெல்லரும் சூத்திரர்கள் தானே? ஜாதி ஒழிய சூத் திரப்பட்டம் போக நாங்கள் தானே பாடு படுகிறோம்? ஜாதி எதனால் ஏற்பட்டது? சாஸ்திரங்களினால், மதங்களினால், புராணத்தினால், கடவுளால் ஏற்பட்டது. பார்ப்பான் ஆட்சியில் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், பார்ப்பான், இவைகளை ஒழித்தால்தான் ஜாதி ஒழிய முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மந்திரி ஜோதி அம்மையார் உட்பட நான் சொல்லுகிறேன். இவர்கள்  கடவுள், மதத்தை ஒழித்தால்தான், அதிலிருந்து விடுபட்டால்தான் அவர்கள் மனிதர்கள் ஆவார்கள். என்னுடைய  சிநேகிதர்கள்தான் சிவராஜும் அவரது மனைவியாரும். அவர்கள் வீட்டில் இந்துமதம் இருக்கிறது! சாமிபடம் இருக்கிறது. செட்யூல்ட் (ஆதிதிராவிட) வகுப்புத் தோழர்கள் சொல்லட்டுமே, சாமி, சாஸ்திரம், மதத்தில் கைவைத்தால் சர்க்கார் (அரசு) ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று! யாரோ சிலர் தைரியசாலிகள், சட்ட சபைக்குப் போகாதவர்கள் தான் அவற்றை ஒதுக்கி விடுகிறார்கள். நாங்கள் கடவுளை உடைத்து ரோடுக்கு (சாலைக்கு) ஜல்லி போட்டால்தான்  இவைகளை ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம்.  தலையில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறப்பித்த சாமி இருந்தால் எப்படி நமக்கு 'சூத்திரன்' என்ற பட்டத்தைத்  தோளில் போட்டுக்கொண்டு  நம்மக்கள், மந்திரிகள், மடாதிபதிகள் மகான் மற்றும் கடவுள், மதப்பிரச்சாரம் செய்கிறார்களே! ஆகையால் கடவுள், மதம், சாஸ்திரம் இவைகளை ஒழித்தால்தான் சாதி ஒழிய முடியும்.

24-2-1954ஆம் தேதியன்று  சேலம் மாவட்ட பள்ளிப்பட்டியை

அடுத்த அதிகாரப்பட்டியில் தந்தை பெரியார் சொற்பொழிவு

('விடுதலை' 27-2-1954

- விடுதலை நாளேடு, 10.6.18

புதன், 30 மே, 2018

நம்ம நாட்டுக்கு வேண்டியது என்ன? அரசியல் திருத்தமா? சமுகத் திருத்தமா?

தந்தை பெரியார்




இந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்டியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது, 10 வருஷங்களுக்கு ஒரு முறையோ, 20 வருஷங்களுக்கு ஒரு முறையோதான் ஏற்படுகின்றது. அதைத் தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள முடியாமல் பார்ப்பனர்கள் கொடுமை செய்து வருவது ஒரு பக்கமிருந்தாலும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல் பிழைப்புக்காரரும், கோடாரிக் காம்புகளும், முடந்தெங்குகளும் மற்றொரு பக்கமும் இருந்து கொண்டு நாடு முழுவதும் பாழாகும் வண்ணமும், சமுகம் முழுவதும் இழிவுபடும் வண்ணமும் துரோகச் செயல்கள் செய்து வருகின்றார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இதுசமயம் முக்கியமாய் விழித் திருக்க வேண்டியதாய் இருக்கின்றது.


நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி விசாரிப்பதற்கென்றோ எவ்வகை சீர்திருத்தம் வழங்க வேண்டுமென்பதை அறியவோ, இதுசமயம் ஒரு கமிஷன் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள வேண்டியது மக்களின் முக்கிய கடமை. எனவே இப்போது வந்திருக்கும் இந்த கமிஷனிடம் நமது நிலைமைகளையும் தேவைகளையும் சொல்லிக் கொள்வது எவ்வழியிலும் இழிவானதாகாது. ஆதலால் இப்போது நமது நிலை என்ன? நமக்கு இப்போது வேண்டியது என்ன? சுயமரியாதையும் ஒற்றுமையும் தரவல்ல சமுக சீர்திருத்தமா அல்லது நாட்டை இழிவுபடுத்தி பிரித்து வைக்கும் அரசியல் திருத்தமா என்பதுதான் முக்கியமான கேள்வி. அரசியல் சீர்திருத்தம் என்பது நமக்கு இரண்டு மூன்று தடவை வழங்கப் பட்டாய் விட்டது. அதனால் எதிர்பாராப் பதவிகள் எல்லாம் நமக்குக் கிடைத்திருக்கின்றது. மாதம் 5500 ரூ, 6500 ரூ, 7500ரூ கிடைக்கும்படியான உத்தியோகங்கள் கிடைத்துவிட்டன. அதுவும் தெருவில், பிச்சை எடுத்தும், பஞ்சாங்கம் சொல்லி பணம் பறித்தும் முனிசிப்பாலிட்டி விளக்கு வெளிச்சத்தில் படித்தும் வந்தவர்களுக்கு உயர்தர நீதிபதி பதவியும் நிர்வாக பதவியும் கிடைக்கத்தக்க சீர்திருத்தம் வழங்கப்பட்டு இருக்கின்றது. பிரபு பட்டமும் கவர்னர் பதவியும் கிடைத் திருக்கின்றது.

இனி நமக்கு கிடைக்க வேண்டிய பதவி இன்னது பாக்கி இருக்கின்றது என்று சொல்ல மிகவும் கஷ்டப்பட வேண்டி யிருக்கிறது. அரசர் பதவியும், அரசுப் பிரதிநிதி பதவியும், சேனாதிபதி பதவியும்தான் இனிபாக்கி இருக்கின்றது என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும் இது வரை நமக்குக் கிடைத்த மேல்கண்ட பதவிகளை நாம் உபயோகமற்றதென்று சொல்லித் தள்ளிவிடவும் இல்லை. ஒருவர் மேல் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அதை அடைய முயற்சிக்கின் றோமேயொழிய, அடைந்து வருகின்றோமே ஒழிய வேண்டாமென்று ஒருவரும் சொல்லவே இல்லை. அவை களை எந்த அரசியல் இயக்கமும் தள்ளவும் இல்லை. இந்த நிலையில் நாடு என்ன முன்னேற்றமடைந்திருக்கிறது என்று கேட் கின்றோம். ஒருசமயம், பதவியும் சம்பளமும் மாத்திரம் கிடைத்ததேயல்லாமல் அதற்கேற்ற அதிகாரம் கிடைக்க வில்லை என்று யாராவது சொல்லக் கூடுமா? நீதிபதி அதிகாரங்களில் நம்நாட்டு மக்களின் சகல சொத்துகளைப் பற்றியும் அவர்களது உயிரைப் பற்றியும் நீதி வழங்கத்தக்க அதிகாரம் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம்.

அது மாத்திரமல்ல. இந்த நீதியை மக்களுக்கு வாங்கிக் கொடுப்பதற்குப் பாடுபடுகின்றவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 50000 ரூபாய் 100000 ரூபாய் வரையிலும் கூட வரும்படி சம்பாதிக்கத்தக்க நீதி வழங்கும் முறை களையும் நீதி அடையும் முறைகளையும் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம். அநீதிகள் இன்ன விதம் இருக்க வேண்டுமென்று சட்டம் ஏற்படுத்தும் பொறுப்பும் நமக்கே கொடுக்கப்பட்டிருப்பதைக் காட்ட சட்ட நிர்மாண சபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளும் உபயோக மற்றவையென்று யாராலும் வெறுத்துத் தள்ளிவிடப்படவும் இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா விதமான அரசியல் தலைவர்களும் இந்தச் சட்ட நிரூபண சபைகளில் இன்னும் உட்கார்ந்து கொண்டு சட்டமியற்றிக் கொண்டு இருக் கின்றார்கள். அதுவும் தங்களது சொந்த ஓதாவில் அல்லாமல் சீர்திருத்தத்தின் மூலம் ஏற்பட்ட நியதிப்படி பொது ஜனங்களின் வாக்குப் பெற்று பொது ஜனங்களின் பிரதி நிதிகள் என்கின்ற முறையில் உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். அரசாங்க சபை தவிர மற்ற 7, 8 மாகாண சட்ட சபைகளிலும் இந்திய சட்ட சபைகளிலும் ஜனப் பிரதிகளே அதிக எண்ணிக்கை இருக்கத் தக்க விதமாகவே அமைக் கப்பட்டிருக்கிறது. அதுவும் சர்க்காரைத் தோற்கடிக்கத்தக்க அதிகப்படிக்கான எண்ணிக்கையாகவே இருப்பதுடன் பல தடவை சர்க்கார் தோற்கடிக்கப்பட்டும் இருக்கிறது.

நீதி இலாகா, சட்டசபை இலாகா மாத்திரமில்லாமல் நிர்வாக இலாகாவிலும் நமக்கு அதிக எண்ணிக்கை வழங்கப்பட்டி ருக்கிறது. உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்வோம். நிர்வாக சபையில் ஏழு மெம்பர் களும் ஒரு தலைவரும் இருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் அய்ந்து பேர் இந்தியர்களாகவே இருக்கத்தக்க மாதிரி இருக்கின்றது.

இந்த அய்வர்களிலும் மூன்று பேர் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களின் நம்பிக்கையைப் பெற்றே இருக்கத் தக்க வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற இருவர் களும் இந்தியப் பிரமுகர்களாகவே நியமிக்கப்படத் தக்கதாயிருக்கின்றது. அந்தப்படியே நியமிக்கப்பட்டும் வருகிறது. அந்தப்படி நியமனம் பெறுகின்றவர்களும் அற்பத்தனமாய் நடந்து கொள்வதற் கில்லாமலும்; கண்ணிய மாய் நடக்கத்தக்க மாதிரியாகவும் மாதம் 5550 ரூபாய் சம்பளமும்  மாதம் சுமார் 1500 ரூபாய் படித்தரமும் பெறும் படியான சவுகரியங்களும் அமைக்கப்பட்டு இராஜ போகமும் கொடுக்கப்பட்டு அந்தப்படியே அடைந்தும் வருகின்றார்கள்.

இந்திய ஜனப்பிரதிநிதித்துவம் கொண்ட இவ்வளவும் அரசியல் ஸ்தாப னங்கள் என்பது மூலமாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே அரசாங்கத் தாரால் கொடுக் கப்பட்டதாக இருக்கின்றதே யல்லாமல் வேறல்ல. எனவே இவைகளினால் நாட்டிற்கோ நாட்டிலுள்ள பற்பல ஜன சமுகங்களுக்கோ ஏற்பட்ட நன்மைகள் என்ன? ஏழை களுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? கூலிக் காரருக்கு ஏற்பட்ட நன்மை என்ன? வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? தொழி லாளிக்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்று கேட்கின்றோம்.

ஏழைகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கியதைக்குப் பிச்சைக்காரர் களின் தொல்லையும் ஒழுக்கக் குறைவுகள் அதிகப்படுவதும் போதிய சாட்சியாகாதா? என்று கேட் கின்றோம்.

விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கிய தைக்குப் பூமிகள் எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்கே அதுவும் விவசாயம் செய்யத் தெரியாதவனுக்கே போய்ச் சேர்ந்து வருகின்றதும் விவசாயிகள் அவர்களுக்கு உழைத் துப் பட்டினி கிடப்பதும் போதிய சாட்சியாகாதா? என்று கேட்கின்றோம்.

கூலிக்காரர்களுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கிய தைக்குத் தூத்துக்குடி, மண்டபம், நாகப்பட்டினம், சென்னை, காகிநாடா முதலிய துறைமுகங்களில் தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வாரம் ஒன்றுக்குப் பதினாயிரக் கணக்கான மக்கள் கூலிக்காரர்களாக கப்பல் ஒதுக்குகின்ற காட்சி போதாதா? என்று கேட்கின்றோம்.

தொழிலாளிகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக் கியதைக்குத் திடீர் திடீர் என்று ஆயிரக்கணக்கான, பதினா யிரக்கணக்கான தொழிலாளர்களை முதலாளி மார்கள் வேலையிலிருந்து தள்ளுவதும் அவர்களது வேலைகளை இயந்திரங் களைக் கொண்டு சரி செய்து கொள்வதும் அத்தொழிலாளிகள் தெருத்தெருவாய் திண்டாடுவதும்  மாதம் 100 ரூ வரும்படி பெற்ற தொழிலாளி கூலி போதாது என்று கேட்டதற்கு நீக்கப்பட்ட நிமித்தம் ஒற்றை மாட்டு வண்டி ஓட்டுவதும், பால் கறந்து விற்பதுமான வேலையில் கூட ஜீவனம் செய்ய முடியாமல் திண்டாடுவதுமான நிலைமை போதாதா? என்று கேட்கின்றோம்.

மற்றபடி நாடு முன்னேற்ற மடைந்தது என்பதற்குச் சாட்சியாக மக்களின் அரசாங்க நிர்வாகச் செலவுக்காக வரி வசூலிப்பது வருஷத்திற்கு வருஷம் விஷம் ஏறுவது போல வருஷம் ஒன்றுக்கு 40 கோடியிலிருந்து, 165 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதும், நாட்டிலிருந்து வியாபாரத்தின் மூலம் வருஷத்திற்கு வருஷம் மேல்கண்டபடியே கோடிக்கணக் கான ரூபாய்களைக் கொண்டே வெளிநாடுகளுக்குப் போய்க் கொண்டு இருப்பதும் எங்கும் பார்த்தாலும் படித்த மக்கள் முதற் கொண்டு வேலையில்லாமல் திண்டாடுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

வியாபாரிகள் நிலைக்குச் சாட்சியாக நாணயமாற்றுதல் மூலமாகவும் வருமான வரி மூலமாகவும், பத்து லட்சம் கணக்கான ரூபாய்களுக்கு வருஷா வருஷம் நூற்றுக்கணக் கான பெரிய பெரிய வியாபாரிகளும் இயந்திர சாலைகளும் தீபாவளி ஆகிவருவது போதாதா என்று கேட்கின்றோம்.

நாடு ஒழுக்கத்தில் முன்னேறியிருக்கின்றது என்கின்ற யோக்கியதைக்குச் சாட்சியாக கோர்ட்டுகளும், நியாயாதி பதிகளும், நியாயவாதிகளும், காவலாளிகளும், நிர்வாக ஸ்தாபனங்களும் ஜெயில்களும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது போதாதா? என்று கேட்கின்றோம்.

சமுக ஒற்றுமையின் யோக்கியதைக்குச் சாட்சியாக நாளுக்கு நாள் இந்து முஸ்லீம் கலவரங்களும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விவாதங்களும், கீழ்ஜாதி மேல் ஜாதி தொல்லைகளும் புதிய புதிய வகுப்பு உரிமைகளும் வளர்ந்து கொண்டு போவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

நாடு அரசியல் அறிவு பெற்றிருக்கும் யோக்கியதையை அறிய சாட்சியாக எலக்ஷன் கஷ்டங்களும் விவகாரங்களும் வேற்றுமை விரோதங்களும் போதாதா? என்று கேட் கின்றோம்.

சமுக முன்னேற்ற மடைந்திருப்பது என்பதின் யோக்கியதையை அறிய கேவலம் மனிதனுக்கு மனிதன் தொட்டால் பாவம்! பார்த்தால் பாவம் என்பதை ஒழிப்பதில் உள்ள கஷ்டங்களும், காங்கிரசில் இருந்த தீண்டாமை மதத் திட்டமும் மனித சமத்துவத் திட்டமும் எடுத்தெறியப்பட் டிருப்பதும், வீதியில் நடப்பதற்கும், பள்ளியில் படிப்பதற்கும், கிணற்றில் தண்ணீர் மொண்டு குடிப்பதற்கும் நம்மால் ஒப்புக் கொள்ளப்படாமல் சர்க்கார் கோர்ட்டுகளில் நீதி பெற வேண்டியிருப்பதும் பல சந்தர்ப்பங்களில் அங்கும் இந்திய அதிகாரிகளாலேயே இவைகள் மறுக்கப்படுவதும் வருணா சிரம மகாநாடுகள் நடப்பதும் வகுப்பு மகாநாடுகள் பெருகிக் கொண்டு போகவேண்டிய அவசியம் மேற்படுவதும் போதாதா என்று கேட்கின்றோம்.

நாட்டின் பொது நாகரிக முன்னேற்றத்தின் யோக்கி யதையைப்பற்றி அறிவ தற்குச் சாட்சியாக மிஸ். மேயோ போன்ற நூற்றுக்கணக்கான பேர்கள் எழுதி இருக்கும் புஸ்தகங்களும் அதை நாடக ரூபமாக அன்னிய நாடுகளில் நடத்திக் காண்பிக்கப்படுவதும், இன்னும் பலர் இப்போதும் அம்மாதிரி விஷயங்களில் பிரவேசித்து புஸ்தகமெழுதி பணம் சம்பாதிப்பதும், இவ்வளவுமல்லாமல் மதத்தின் பேரால், கோயில்களின் பேரால், சுவாமிகளின் பேரால் விபசாரப் பெண்கள் உற்பத்தியையாவது தடுக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை கொண்ட சட்டம் செய்வதில் மதத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று மதத் தலைவர்களும் உயர்ந்த ஜாதியார் என்பவர்களும், வாதாடுவதும் அறியாக் குழந்தைகளைப் பொம்மைக் கல்யாணம் செய்து பெண்ஜாதி புருஷர்களாக்கி வீட்டிற்குள் தள்ளக் கூடாது என்பதாக சட்டம் ஏற்படுத்த பெண்மணிகள் முயற்சித்தால் அதையும் மதத் தலைவர்களும், உயர்ந்த ஜாதியார் என்பவர்களும், அரசியல் தலைவர்களும் மதத்தின் பேராலும் தேசத்தின் பேராலும், தடுப்பதும், மற்றும் ஒருவரை ஒருவர் தொடுவது பாவம் என்றும், ஒருவர் தொட்ட தண்ணீரைச் சாப்பிட்டால் நரகம் கிடைக்கு மென்றும், ஒருவர் தொழும் இடத்தில் மற்றொருவர் தொழுதால் கடவுள் அருள் போய்விடும் என்றும், ஒருவர் குளிக்கும் இடத்தில் மற்றொருவர் குளித்தால் நதியோ குளமோ கெட்டுப் போகும் என்றும் மதத்தின் பேராலும் கடவுள்கள் பேராலும் நிர்ப்பந்தப்படுத்தி வருவதும் போதாதா? என்று கேட்கின் றோம். அன்றியும் இவைகள் முழுவதும் ஒழிய வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அதற்கு "நாஸ்திகம்" என்றும் தேசத்துரோகமென்றும் பெயர் கொடுத்து அம்முயற்சிகளை ஒழிக்கமுற்படுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.

எனவே அரசியல் சீர்திருத்தத்தால் இந்தியர் இந்திய மக்கள் அடைந்திருக்கும் நன் மைக்கு மேல் கண்டவைகளை விட இனியும் வேறு என்ன உதாரணங்கள் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆதலால் இனியும் அதிகமான அரசியல் சீர்திருத்தம் கிடைத்தால் இந்தியாவுக்கு என்ன பலனைக் கொடுக்கக் கூடும், இந்தியா என்ன கதியை அடையக் கூடும், என்பவைகளை யோசித்துப் பார்த்தால் உண்மையான இந்தி யனுக்கு இப்போது என்ன வேண்டும்? அதாவது அரசியல் திருத்தமா? சமுக திருத்தமா? என்பது புலன் ஆகாமல் போகாது என்று சொல்லுவோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியல் திருத்தத்தால் நமது நாடு முன்னேற முடியவே முடியாது என்பது இதுவரையில் கிடைத்த அனுபவத்தினாலேயே தெரிந்து கொண்டோம். அன்றியும் எந்நாடும் முதலில் சமுக சீர்திருத்தமும் சமுக ஒற்றுமையும் பெறாமல் அரசியல் சுதந்திரம் பெற்றதாக யாரும் கூற முடியாது.

தேசியம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். தேசியம் என்பது தேசிய மக்களின் சுயமரியாதை முன்னேற்றத்தைப் பொறுத்தது. அதைப் பலர் தப்பாக அர்த்தம் செய்து காட்டி பாமர மக்களை ஏமாற்றி உயிர் வாழ்கிறார்கள். அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எம்மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் விஷயமாகும். இப்போதைய அரசியல் வாதிகள் எல்லாம் தங்கள் தங்கள் தனி ஆதிக்கத்திற்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் ஏற்ற முறைகளை வகுக்கின்றார்களே யொழிய தேசத்திற்கும், தேசத்திலுள்ள பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்ற முறைகளை வகுப்பதே இல்லை. அந்தப்படி வகுத்தால் அரசியலில் பிழைப்பவர்களுக்குப் பிழைப்பு போய்விடும். ஏனென்றால் நமது நாட்டில் யோக்கியமான பிழைப்புகள் மறைந்து விட்டதினால் அநேகருக்கு அரசியல் வயிற்றுப் பிழைப்பாய் போய் விட்டது. அதிலும் தேசத்தைக் காட்டிக் கொடுத்தும் தேசமக்களின் சுயமரி யாதையை விற்றும் பிழைக்க வேண்டிய நிலையில் அரசியல் பிழைப்பு அமைக் கப்பட்டு விட்டது. ஆதலால் இப்போதைய அரசியல் இயக்கங்களாலும், இப்போதைய அரசியல் பிழைப்புக்காரர்களாலும் ஏற் படும் அரசியல் சீர்திருத்தத்தால் இந்திய நாடு ஒரு நாளும் முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.... போதிய பலனளித்தாலும், பலனளிக்காவிட்டாலும் சமுக சீர்திருத் தமே இப்போது வேண்டாற்பாலது.

சமுக சீர்திருத்தம் இல்லாத காரணமே இந்திய மக்கள் பல மதங்களாகப் பிரியவும் அவற்றுள் உயர்வு தாழ்வு, உள் சண்டைகள் ஏற்படவும், பல ஜாதிப்பிரிவுகள் உண் டாகவும், அவற்றுள் உயர்வு தாழ்வுச் சண்டைகள் ஏற்படவும், இதன் பலனாய் மக்கள் நிரந்தரமாய் ஒற்றுமைப்பட மார்க்கமில்லாமல் வேற்றுமைப்பட்டு பிரிந்து நிற்கவுமான நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இதை யாரும் மறைக்க முடியாது. இவற்றை உணர்ந்தே அனேக பெரியோர்கள் சமுக சீர்திருத்தத்திலேயே உழைத்து வந்திருக்கிறார்கள். தற்காலம் நமது சமுக நிலையின் பலன் தான் அரசியல் கொடுமைகளேயல்லாமல் வேறல்ல. அரசியல் சீர்திருத்தம் வந்த பிறகு சமுக சீர்திருத்தம் ஏற்பட்டு விடும் என்று சொல்பவர்கள் எல்லாம் முதல் நெம்பர் அயோக்கியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏதாவது ஒன்று இரண்டு யோக்கியர்கள் என்போர்களும் அதில் கலந்திருக் கின்றார்கள் என்று யாராவது சொல்ல வருவார்களானால் அப்படி கலந்திருப் பவர்கள் அயோக்கியர்களாயில்லா விட்டாலும் முட்டாள்களாகவாவது - கண்டிப்பாய் இருந்துதான் ஆகவேண்டும் என்று உறுதி கூறுவோம்.

சுவாமி விவேகானந்தருடைய வாக்கைப் பாருங்கள்! ஸ்ரீமான் காந்தியின் முந்திய வாக்குகளைப் பாருங்கள்! அப்படிப் பார்ப்பீர்களானால் இந்திய நாட்டின் நன்மை யைப்பற்றி இவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாய் விளங்கும்.

எனவே, இச்சமயம் நமது நாட்டிற்கு வந்துள்ள ராயல் கமிஷனை சமுக சீர்திருத்தத்திற்காகவே நாம் உபயோகித் துக் கொள்ள வேண்டும். பகிஷ்கார மானாலும், வரவேற் பானாலும், சமுக சீர்திருத்தத்திற்கும் சுயமரியாதைக்குமே நடத்த வேண்டும். எம்மை சர். ஜான் சைமன் கூப்பிட்டு உமக்கு அரசப் பிரதிநிதி பட்டம் வேண்டுமா? சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண் டுமா? என்று கேட்டால் சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண்டும் என்று சொல்லுவோம். ஏனென்றால் நமக்குக் கவர்னர் பதவியும் சட்ட மெம்பர் பதவியும் மந்திரி பதவியும் கிடைத்தும் இந்தப்பதவி பெற்றவர்களாலாவது ஜனப்பிரதிநிதிகள் சபைகளிலாவது நம்மை சூத்திரன் என்று அழைக்கும் தன்மை மாறவில்லை என்பதை உத்தேசித்துத்தான். பறையர் என்று இழிவாக பேசப்படும் குலத்தில் உதித்தவர் என்று சொல்லப்படும் ஸ்ரீமான் எம்.சி. ராஜாவுக்கு இந்திய சட்ட சபையில் உட்காரும் யோக்கியதை கிடைத்தும் தெருவில் நடக்கும் உரிமையும் சுவாமியைப் பார்த்து கும்பிடும் உரிமையும் கிடைக்கவில்லை; குளத்தில் தண்ணீர் குடிக்கும் உரிமையும் கிடைக்கவில்லை.

இனி எந்த அரசியல் பதவியும் பட்டமும் அதிகாரமும் கிடைத்தால் நாம் சூத்திரனாகாமல் மனிதனாயிருக்கக் கூடும்? ஸ்ரீமான் எம்.சி. ராஜா குளத்தில் தண்ணீர் குடிக்கக் கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். "சுயராஜ்யம் கிடைத்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்" என்கின்ற பித்தலாட்டக்காரர்களை நம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. அதென்னவென்றால் இந்தியா சுயராஜ்ய மடைந்திருந்த காலத்தில்தான், ராம்ராஜ்யத்தில் தான் மனு அதர்ம சாஸ்திரம் உண்டானது. ஆட்சியிலும் இருந்தது, நமக்குச் சூத்திரப்பட்டமும் சண்டாளப் பட்டமும் கிடைத்து தெருவில் நடக்க உரிமை கேட்டவர்களைக் கழுவில் ஏற்றினதும், வேதத்தையும் நீதியையும் படித்தால் நாக்கை அறுக்கவும் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், பார்த்தால் கண்ணைக் குத்துவதுமான, சட்டம் அமுலிலிருந்து வந்தது. இப்போது இந்திய அரசர்கள் ஆளும் ராஜ்யங்கள் அதாவது மைசூர், திருவாங்கூர், கொச்சி முதலிய தேசங்களில் தான் மனுஅதர்மம் தாண்டவமாடுகின்றது. ஆதலால் நமக்கு வேண்டியது, சமுக முன்னேற்றம், சுயமரியாதை. இதை அடையாமல் ராயல் கமிஷன் மாத்திரமல்ல மற்றும் நரகத்தில் இருப்பது என்பதையும் உபயோகித்து கொள்ள வேண்டியது மக்கள் கடமை. எனவே சுயநலக்காரர்கள் வார்த்தையையும் புரட்டர்கள் வார்த்தையை யும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 26.02.1928

-  விடுதலை நாளேடு, 20.5.18