செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

முதலாளி வேலையாளர் தத்துவம்

4.10.1931 - குடிஅரசிலிருந்து...

தற்காலம் இருந்துவரும் வகுப்புச் சச்சரவுகளானது சமுக அமைப்பு களையே அடிப்படையாகக் கொண்டதாக இருந்துவருகின்றன. ஆதியில் எஜமானன் அடிமை சச்சரவும், மேல் மக்கள் கீழ் மக்கள் சச்சரவும் மேஸ்திரிகையாள் சச்சரவும், பிறரை ஒடுக்கினவர்கள் பிறரால் ஒடுக்கப்பட்டவர்கள் சச்சரவும், ஆகிய ஒன்றுக்கொன்று வைரியான இரண்டுவித பிரிவுகள் சதா சச்சரவுகளை உண்டாக்கிக் கொண்டே வந்து இருக்கின்றன.

இந்த சச்சரவுகள் சிலசமயங்களில் மறைமுகமாகவும் சில சமயங்களில் வெளிப்படையாகவும் நடைபெற்று வந்தாலும் அவற்றின் பயனாகவே சில சமயம் சீர்திருத்தம் ஏற்படுவதும் சில சமயம் இரு கூட்டத்தாருக்கும் ஆபத்துகள் ஏற்படுவதும் சகஜமாகயிருந்து வந்திருக்கின்றன.

பூர்வகால சரித்திரத்தில் மனித சமுகத்தில் ஏணிப்படிகள் போல் படிப்படியாக பிரிவுகள் அமைக்கப்பட்டு அதுபோலவே படிப்படியான உரிமைகளும் அவைகளுக்கு அளிக்கப்பட்டிருந்தன.

ரோம் ராஜ்யத்தில் மேன்மக்கள் கீழ் மக்கள் என்றும், மத்திய காலத்தில் ஜமீன்தாரர்கள், பண்ணையாட்கள் என்றும், மேஸ்திரிகள் - கையாள்கள் என்றும், பல பிரிவுகளாகவும் இவ்வொவ்வொரு பிரிவுகளுக்குள்ளும் அநேக உட்பிரிவுகளும் பிரிக்கப்பட்டிருந்தன.

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் முதலாளி வகுப்பானது பழைய ஜமீன்தாரர்கள் வகுப்புகளின் வீழ்ச்சியினாலேயே ஏற்பட்டதாகும்.  அதிலிருந்தே முளைத்ததாகும். தற்காலத்திலும் வகுப்புச் சச்சரவுகள் மேலும் மேலும் இனியும் பெருகிக் கொண்டே போகின்றன.  தற்காலத் திலும் கூட ஒரு வகுப்பார் மற்ற வகுப்பார்களை அடக்கியாள முயற்சிப் பதன் மூலமே சச்சரவுகள் விருத்தியாகிக் கொண்டு வருகின்றன.

எனினும் தற்காலத்திய முதலாளிவகுப்பு தோன்றிய பிறகுதான் வகுப்பு ஆதிக்கத்தில் இருந்து வந்த சூழ்ச்சிகள் எல்லாம் பட்ட வர்த்தனமாய் வெளியாய் விட்டன.   இப்பொழுது சமுகம் முழுவதையும் இரண்டே இரண்டு பிரிவு களாகத்தான் பிரிக்கப்படுகின்றது.  ஆனால் இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று நேர்விரோதமாக இருந்து கொண்டு சதா போராடிக் கொண்டேயிருக்க வேண்டியதாகின்றது.

இந்தப்படி போராடிக் கொண்டி ருக்கும் இரண்டு பிரிவுகளுக்கும் தான் ஒன்றுக்கு முதலாளி வகுப்பு என்றும் மற்றதற்கு வேலையாள் வகுப்பு என்றும் பெயர்.  இந்த இரண்டு பிரிவுகளும் எப்படி ஏற்பட்டது என்கின்ற காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது அவசியமானதாகும்.

சரித்திரத்தின் மத்திய காலத்தில் கிராமாந்தரங்களில் ஜமீன்தாரர் களுக்கு அடங்கி வேலை செய்து வந்த குடியானவர்கள் சிலர் அச்ஜமீன்தாரர்களோடு பிணங்கிக் கொண்டு அவர்களுக்குப் பயந்து பட்டணங்களுக்கு வந்து குடியேறி வசிக்க ஆரம்பித்தார்கள்.  பிறகு இந்தப்படி பட்டணங்களில் வசித்து வந்த குடியான ஆட்களே சில தொழில்களில் ஈடுபட்டு பொருள் தேட ஆரம்பித்தார்கள்.  அக்காலத்தில் புதிதாக அமெரிக்கா கண்டம் கண்டு பிடிக்கப்பட்டதாலும், கேப்முனையைத்தாண்டி இந்தியாவுக்குப் பாதை கண்டு பிடிக்கப்பட்ட தாலும் வியாபாரம் பெருக ஆரம்பித்தது.

- விடுதலை நாளேடு 4. 8 .18

இஸ்லாம் - இந்து வித்தியாசம்



02-08-1931 - குடிஅரசிலிருந்து....

நான் இந்து  மதத்தைப்பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு   மதத்தி னுடையவும்  ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதி விடாதீர்கள்.  அந்த வேலையை ஒரு பரீட்சை மாண வனுக்குக் கொடுத்து விடுங்கள் அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலையில்லை. ஆனால், நான்  பேசுவது  என்பது இரண்டு  மதத்தைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் பெரும் பான்மை யான  மக்களிடை இருந்து வரும் பிரத்தி யட்சக் கொள்கைகள்  சம்பந்த மானக்  காரியங்களையும் அதனால்  அவரவர்கள் பிரத்தியட்சத்தில்  அடைந்துவரும் பலன்களையும் பற்றித் தான் பேசுகிறேன்.

பொதுவாகவே மதத்தின் தன்மையை இதிலிருந்துதான் நிர்ணயிக்க வேண்டுமே யொழிய ஏட்டில்  என்ன இருக்கின்றது என்று பார்ப்பதில்  பயனில்லை. அது போலவே அந்தந்த மதக்காரர்கள் போட்டுக்கொள்ளும் வேஷமே தான்  மதம் என்றாலும்  அதிலும் பயனில்லை.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ளு கிறார்கள்?  மக்கள் எப்படி நடத்தப்படு கின்றார்கள்.  அதனால் அந்த சமுகம் என்ன பலனடைந்திருக்கின்றது? என்பது போன்றவைகள் தான்  மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால் அநேக  விஷயங் களில் இந்து மதத்தைவிட  (கொள்கை களைவிட) இஸ்லாம் மதமே  (கொள்கை களே)  மேன்மை யான தென்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இஸ்லாம் மாணவர்களிடத்தில் இந்துக்களிடம் இல்லாத பல நல்ல கொள்கைகள் இருக்கின்றன. அதனால் இந்து மதத்தில் இல்லாதமேன்மை இஸ்லாம் மதத்தில் இருப்பதாகத்தான் கருதவேண்டும்.

அதாவது இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள்  சமத்துவம், சகோதரத்துவம் ஒற்றுமை அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம்  இருக்கின்றது. வீரம் என்றால்  இலட்சியத்திற்கு உயிரை விட துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில்  ஜாதி உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. கிட்ட இருந்து சாப்பிடக் கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாத, மனிதன் குளத்தில் இறங்கக் கூடாதமனிதன்,  கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங் குவதில்லை. அதற்குப்பெண்டு, பிள்ளை வைப்பாட்டி கற்பிப்பது மில்லை. அதற்குப் பூஜை, நைவேத் தியம்,  உற்சவம், நகை, துணிமணி, முதலியவற் றிற்குக் கோடிக் கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை மற்றும்  அவர்களது பெண்களுக்குச் சொத்துரிமை, கல் யாண ரத்து, விதவை  மணம்  ஆகிய வைகளும் உண்டு. அவர்களுக்குள்ள  அன்பையும் வீரத்தையும்  பார்த்து நாம் அவர்களை முரடர்கள்  என் கிறோம். அது போலவே இந்துக் களுக்குள் ஒருவருக் கொருவர் உள்ள துவேஷத் தையும்  பயங்காளித் தனத்தையும் நாம் பார்த்து அவற்றைச் சாதுத்தன்மை என்று சொல்லிக் கொள்ளுகிறோம். ஒரு கிராமத்தில்   ஒரு இஸ்லாமானவனை ஒரு இந்து அடித்தால் 100 இஸ்லாமானவர்கள் வந்து விழுந்து  விடுகிறார்கள்.  இதைத்தான் நாம் முரட்டுத்தனம் என்கிறோம். ஒரு இந்துவை ஒரு இஸ்லாமானவன் அடித்தால்  மற்ற இந்துக்கள் அவன் யாரோ அடிப்படுகிறான், நமக் கென்ன கவலையென்று சொல்லி சும்மா இருந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் அடிக்குப்பயந்து கொள்ளுகிறார்கள். இதைத்தான்  சாதுத்தனம் என்று பெருமை பேசிக்கொள்ளு கிறோம். அன்பும் சகோதரத் தன்மையும் இந்துவிடம் எங்கிருக்கின்றது?  ஆடுகோழி தின்னாதே  என்று சொல்லுவதில்  மாத்திரம்  இருக்கின்றது. மக்களை இழிவாய்க் கருதுவது பிறவியின் பேரால் தாழ்த்தி இம்சிப்பது, கொடுமைப்படுத்துவது ஆகிய காரியங்களைச் செய்து கொண்டிருப்பவன்தான் அன்பு! அன்பு!! ஜீவகாருண்யம்!!! என்று பேசுகிறான். அன்பின்  உண் மையை அறியவே இல்லை.  இஸ்லாம் கொள்கையில்  வேறு எங்கு எப்படி இருந்தாலும் சமுக வாழ்விலும், ஆண்டவன் முன்னிலை என்பதிலும்  மனிதனை மனிதனாய்க் கருதப்படுகின்றது.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமுக வாழ்விலும்  கடவுள் முன்னிலை என்பதிலும் மனிதனை மிருகத்தைவிட மலத்தை வாயில்  கவ்விக்கொண்டு செல்லும் மிருகத்தை விடக் கேவலமாய்  மதிக்கப்படுகின்றது. இதை நாம் பிரத்தியட்சத்தில்  காண்கின்றோம். இதைத் தான்  அன்புமதம் சமத்துவமதம் என்று இந்துக்கள்  தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத்தத்துவ நூலை வேதம் என்பதை  இஸ்லாம் மார்க்கம்  செருப்புத்தைக்கிற சக்கிலியும் மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும், பார்த்தாக வேண்டும், கேட்டாக வேண்டும்  என்று சொல்லி கற்றுக்கொடுப் பதையும் பார்க்கிறோம். இந்து மார்க்க வேதம்  என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம்  தவிர (பார்ப்பான் தவிர) மற்ற யாவரும் அவன் பிரபுவா னாலும் சரி, ஏழையானானாலும் சரி , யோக்கியனானாலும் சரி,  அயோக்கியனாலும் சரி ஒருவனுமே  பார்க்கவும், கேட்கவும்,  படிக்கவும் கூடாது  என்று இன்னும் நிர்ப்பந்தப்படுத்தி அந்தப்படியே இன்றும் நடந்து வருகின்றது. இதைத்தான்  சமத்துவ நோக்கம்  கொண்ட  மதம் என்று இந்துக்கள் இன்றும் இன்னமும் சொல்லுகின்றார்கள்.

மொண்டி முடம், கூன், குருடு ஆகியவர்களுக்கே உதவி செய் என்று இஸ்லாம்  மதம் பிரத்தியட்சத்தில் சொல்லுகின்றது. சோம்பேறிகளுக்கே ஊரார்  உழைப்பில் உண்டுகளிப்பவர்க்கே உதவி செய்  என்று இந்துக்களின் கொள்கை பிரத்தியட்சத்தில் சொல்லுகின்றது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்றுசேர்க்கின்றது. இந்தியாவில் கொஞ்சகாலத்திற்கு முன் ஒரு கோடியை விட குறைந்த எண்ணிக்கையுள்ள  முஸ்லிம்கள்  இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்து  இருக்கின்றார்கள். இன்றும்  யாவரையும்  எப்படிப்பட்ட இழிவான வரையும்  எப்படிப் பட்ட இழிவானவர் என்று இந்து  மார்க்கத்தாரால்  கருதப் பட்டவர்களையும் தனக்குள்  சேர்ந்துக்கொள்ள கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கை எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவர்களையும் உள்ளே விட மறுத்து வாசல்படியில்   காவல்காக்கின்றது. தன்னவ னையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

கள் குடியைப்பற்றி வாய்த்தப்பட்டை அடிக்காத இஸ்லாம் கொள்கை  முஸ்லிம்களில் 100க்கு 99 பேர்களை குடியிலிருந்து விலக்கியிருக்கின்றது. குடிக்கக் கூடாதென்று சதா வாயில் தப்பட்டை  அடித்துக்கொண்டு ஓட்டு வேண்டியபோது கள்ளுக் கடையில் நின்று மறியல் செய்யும் இந்து  கொள்கையானது இந்துக் களில்  100க்கு 51 பேர்களுக்கு  மேல் குடிக்காரர்களாகச்  செய்திருப் பதோடு இந்து  கடவுளுக்கும் குடி வகைகள் வைத்து கோயில் களில் பெரிய பெரிய ஜாதியார் என்பவர்களால் நைவேத்தியம் செய்து  பிரசாதமாய் சாப்பிடப்படுகின்றது.

இஸ்லாம் கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத் தாலேயே இஸ்லாமியர்கள் அதிகமாயுள்ள நாடுகள் இஸ்லாம் அரசர்களால் ஆளப்படுகின்றன. இந்து கொள் கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இந்துக்கள் அதிகமாயுள்ள நாட்டை அந்நியர்கள் ஆளுகின்றனர். இந்தபடியாக வெளிப்படையாய்த் தெரியும் கொள்கை களாலேயே இந்துக் கொள்கைகளைவிட இஸ்லாம்  கொள் கைகள் எவ்வளவோ மேன்மையானபலன் கொடுத்திருப் பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப்படி நான்சொல்லு வதற்காக கோபிக்கும் சகோதரர்கள் முதலில் நான் சொல்லுவது உண்மையா? அல்லது அடியோடு பொய்யா? என்று பார்த்துப் பேசுங்கள்.  பிறகு கொள்கைக்காக உயிரைவிடுங்கள்.

- விடுதலை நாளேடு 3. 8 .18

பொருளாதாரம்

12.07.1931 - குடிஅரசிலிருந்து...

பொருளாதாரத் துறையில் செல்வவான்களுக்கும், உத்தியோ கஸ்தர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தவிர மற்றவர்களுக்கும் என்ன நன்மை செய்ய  சுயராஜ்யத்தில் திட்டமிருக்கின்றது என்பதைச் சற்று யோசித்துப்பாருங்கள்.

பணக்காரன் பணத்தைப் பிடுங்கி மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. தேசத்துப் பணமெல்லாம் சர்க்காருடையதாவ தானால் ஆகட்டும். இல்லையானால் பணம் ஒரே பக்கம் போய்ச்  சேருவதற்கு மார்க்க மில்லாமலிருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

இன்றைய தினம் பணக்காரன் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பங்கு போட்டுக் கொடுத்துவிட்டால் இந்த ஏழை நாளைக்கு கயாசிரார்த்தமும், மதுரைவீரன் பூஜையும், காவடி, அபிசேகமும், பண்டிகையும் செய்து வீட்டில் உட்கார்ந்து கொண்டே பணத்தைத் தொலைத்து விடுவான் என்பதும், பிறகு பழையபடி புரோகிதனும் தந்திரக்காரனும், ஏமாற்றுக்காரனும் தான் மறுபடியும் பணக்காரன் ஆகிவிடுவான் என்பதும் எனக்குத் தெரியும்.  ஆதலால் தான் நாட்டுச் செல்வம் ஒருபக்கமே போய் குவியாமல் இருக்கும் திட்டமே போட வேண்டும் என்றும், யாருக்கும் எந்தத் தொழிலும் செய்யவும் எல்லோரும் எதையும், படிக்கவும் சவுகரியமும் அனுமதியும் இருக்க வேண்டும் என்றும் தான் சொல்லுகின்றேன். வருணாசிரம சுயராஜ்யத்தில் யார் மனதை யும் புண்படுத்தாத சுயராஜ்யத்தில் இது முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

உபாத்தியாரின் கடவுள் பாடம்

06.09.1931 - குடிஅரசிலிருந்து...

உபாத்தியாயர் :  பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை சமையற்காரன் சமைத்தான், உலகத் தைக்கடவுள் உண்டாக்கினார். தெரியுமா?

மாணாக்கன்: தெரிந்ததுசார். ஆனால், ஒரு சந்தேகம் சார்.

உபாத்தியாயர்: என்ன சொல்?

மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்?

உபாத்தியாயர்: முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர் தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே.

மாணாக்கன்: ஏன் சார்? கேட்டால் என்ன சார்?

உபாத்தியாயர்: அது! நிரம்பவும் பாவம்.

மாணாக்கன்: பாவம் என்றால் என்ன சார்?

உபாத்தியாயர்: சீ! வாயை மூடு. நீ அயோக்கியன். குடிஅரசு படிக்கிறாயோ? ஏறு பெஞ்சிமேல்.

- விடுதலை நாளேடு 3. 8 .18

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

கிளர்ச்சி மூலமே குலக்கல்வி திட்டத்தை முறியடிக்க முடியும்!

தந்தை பெரியார்
திராவிடர் கழகம் முக்கியமான பிரச்சினையாக  எடுத்துக் கொண்டிருப்பது ஆச்சாரியார் புகுத்தியுள்ள குலக்கல்வித் திட்ட ஒழிப்பு வேலையாகும். நான் அப்போதே சொன்னேன்: அது ஜாதியைக் காப்பாற்றுகிற மனுதர்மத் திட்டம் என்று.
அதாவது ஒரு ஜாதியார்தான் படிக்க-வேண்டும். பார்ப்பனர்தான் படிக்க உரிமை-யுண்டு என்ற தத்துவம் கொண்டது ஆகும். இதுதான் மனுதர்ம சாஸ்திரம் கூறுவது. எவன் சூத்திரனுக்குப் படிப்புச் சொல்லித் தருகிறானோ அவனே பாவி; சூத்திரன் படித்தால் ஒழிந்தே போய்விடுவான். இதுதான் மனு தர்மத்தில் காணப்படுவது. ஆனால் வெள்ளைக்காரன் காலத்தில்  மக்களின்  நிலைமையை அறிந்து எல்லோருக்கும் கல்வியளிக்க ஏற்பாடு செய்தான். அதனால் நாலாவது ஜாதி, எனப்பட்டநாம் 100-க்கு ஓரளவுக்கு 10 பேராவது படிக்கிற நிலைமைக்கு வந்தோம். அதனால் பார்ப்பானை சாமி என்று முன்னர் குறிப்பிட்ட காலம்போய், அவனை அந்தப்படி அழைப்பதற்கு வெட்கப்-படும் படியான  நிலைமை ஏற்பட்டுள்ளது. நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. பிராமணன்  என்று கூற கூட வெட்கப்படுகின்றனர்.. ஏதோ பட்டிக்காட்டில் தெரியாத காரணத்தால் கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் சிலர். இன்னுஞ் சிலர் மான உணர்ச்சி இல்லாமல் சாமி என்கிறார்கள். அதுவும் மாறிக்-கொண்டிருக்கிறது.
எனவே இவர்களை இந்தப்படி விட்டுக் கொண்டு போனால் தப்பு; நாம் பிழைக்க முடியாது; இனி வரப்போகிற சமுதாயத்தை அடக்கிப் பழையபடி பார்ப்பானைச்  சாமியாக்கலாம் என்ற உத்தேசத்துடன் தான் ஆச்சாரியார் இந்த அரை நேரக் கல்வித் திட்டத்தைப் புகுத்தியுள்ளார். இவன் (திராவிடன்) அப்பன் தொழிலை மறந்து விட்டு,  ஜாதி முறையை விட்டுவிட்டு, படித்து விட்டு உத்தியோகம் கேட்கிறான். கொடுக்காவிட்டால் ரகளை பண்ணுகிறான். ஆனதினால் சூத்திரன், கிராமத்துக்காரன் பாதிநேரம்தான் படிக்க வேண்டும். மிகுந்தபாதி நேரம் அவனவன் வேலையைச்செய்யணும், உத்தியோக வேலை செய்யக்கூடாது. இதுதான் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம். அவனவன் ஜாதித் தொழிலைச் செய்யாததனால் தொழிலின் பேரில் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார். இரண்டாவதாக இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்குக் காரணம் சூத்திரன் படிப்பதை ஒழித்தால் பழைய வருணாச்சிரமம் தானாக வந்து விடும் என்ற எண்ணம் தான்.
இப்போது ஆச்சாரியார், கிராமங்களில் மட்டுமல்ல, நகரத்தில்கூட இந்தப்பகுதி நேரக் கல்வி என்று சொல்லிவிட்டார். என்ன அவசியம்  இந்தத் திட்டத்திற்கு? மற்றும் ஆசிரியர்-களுக்கு எல்லாம் உத்தரவு; பாதி நேரத்தில் அந்தப் பையன் அப்பன்  வேலையைச் செய்கிறானா? அல்லது மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறானா? - சரி!  அந்த நேரத்தில் பிரைவேட்  (தனிப்படிப்பு) சொல்லிக் கொள்ளுகிறானா? அப்படியானால் நிறுத்து என்றார். ஆசிரியர்கள் கணக்குச் சொன்னார்கள், 100க்கு 30 பேர்தான் வருகிறார்களென்று. ஆச்சாரியார், அப்படியானல் 100க்கு 30 பேர்தான்  வருகிறார்களென்றால் உபாத்தியா-யர்கள் வீட்டுக்குப் போய்விடுங்கள் என்று சொன்னார். ஆனதால் வாத்தியார்கள் தங்கள் வேலை போய்விடுமே என்று பயந்து வராத பையன்களின் பெயர்களை யெல்லாம் அதிகமாக எழுதி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு ஆச்சாரியார் இப்போது அதிகப் பிள்ளைகள் வருகிறார்கள் என்கிறார்.
உத்தியோகத்திற்கு வேண்டுமென்றால் அதிகம் படித்தாக வேண்டுமாம். முன்பெல்லாம் சாதாரணமாக மெட்ரிகுலேஷன் படித்தால் போதும் வேலைக்கு; சாதாரணமாக 8,9 வருடம் படித்தால் வேலைக்குப் போதும் என்றிருந்த படிப்பை 15, 20 வருடமாகச் செய்துவிட்டார்கள். அப்படியும் நம் ஆட்கள் வந்துவிடவே இதை அடக்க வழி என்ன என்று பார்த்து செலக்ஷன் (இடைத்தேர்வு) என்பதாக பத்தாவது வகுப்பில் வைத்தனர். அதுவும் போதாதென்று எஸ். எஸ். எல். சி. பாஸ் செய்து சர்டிஃபிகேட் (உயர்பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி) மட்டும் இருந்தால் போதாது. மேற்கொண்டு படிப்பதற்கு மார்க்கு (மதிப்பெண்) தேவையென்றார்கள். சாதாரண சப் - இன்ஸ்பெக்டர் (காவல்துறை துணை ஆய்வாளர்) வேலைக்கு பி.ஏ. பட்டம் என்று ஆக்கிவிட்டனர். இப்படியெல்லாம் செய்தால் படிக்க மாட்டான் திராவிட மாணவன் என்றுதான். அப்படியும் சமாளித்து வந்தார்கள். நம் ஆட்களுக்கு வேலை கொடுக்காமல் அவர்களே ஏகபோக உரிமையாகச் செய்து கொண்டார்கள்.  நாம் கூச்சல் போட்டவுன் இது பெரிய தலை வேதனையாயிருக்கிறதே என்று ஆச்சாரியார் கவலைப்பட்டார். நாம் 100க்கு 97 பங்கு வரிகொடுக்கிறோம். ஆனால் நாம் மாடு மேய்க்க வேண்டும்; பார்ப்பனர்கள்-தான் உத்தியோகம் செய்ய வேண்டும் என்றால் இது என்ன நியாயம்? ஒண்ட வந்தவன் நம்மை (திராவிடரை) ஆள்வது; நாம் மாடுமேய்ப்பது என்றால் எதற்காக?
நாம் இன்றையதினம் எடுத்துக்கொள்ளும் முயற்சியெல்லாம் நம் மக்கள் மனிதத் தன்மை பெறுவதற்குத்தான். எப்படியாவது இந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டி நம் மக்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அந்தப்படி பார்க்கப் போனால் சட்டப்படி நடந்தால் ஒரு பயனுமில்லை என்றுதானே சொல்ல வேண்டும். ஆச்சாரியார் கையில் தானே சட்டம் இருக்கிறது? இவர்கள் சட்ட சபைக்கு வந்து செய்யட்டுமே என்று ஆச்சரியார் கூறுவார். இப்போது சட்ட-சபைக்குச் சென்றவர்கள்  என்ன சாதித்து இருக்கிறார்கள்? பார்த்தோமே, இந்தக் கல்வித்திட்டம் கொண்டு வந்தது தப்பு என்று பெருவாரியானவர்கள் சொன்னார்கள். என்ன ஆச்சு? இதை நிறுத்திவிட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஜனநாயகப்படி, பார்த்தால் அந்த முடிவுப்படித்தான் நடத்திருக்க வேண்டும் ஆச்சாரியார். ஆனால் இது ஒரு சிபாரிசு என்று சொல்லி மழுப்பிவிட்டார். ஆச்சாரியாரே எலக்ஷனில் (தேர்தலில்) நின்று வந்தவரல்ல. என்ன ஜனநாயகம் மக்களுக்கு, என்ன சங்கதி புரிகிறது? நான்கு அணா கொடுத்தால் ஓட்டுப் (வாக்குப்) போட்டு விடுகிறார்கள். பல இடத்தில் நடந்திருக்கிறது. இல்லையென்று எந்த காங்கிரசுக்காரராவது மறுக்-கட்டுமே? ஆகவே குலக்கல்வித் திட்டத்தைப் பொறுத்த போராட்டத்தில் சட்டத்தை எதிர்பார்த்தால் ஒரு காரியமும் நடக்காது. சட்டசபை மூலம் இதை மாற்றலாம் என்றால் முடியாது. கிளர்ச்சி மூலம்தான் முடியும். அதுவும் சட்டத்தை மீறினால் தான் முடியும். புரட்சி  என்றால் என்ன அர்த்தம்? சட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் என்ன காரியம் நடக்கும்? ஆகவே இந்தக் குலக்-கல்வித் திட்டத்தை எதிர்த்து நடத்தப்-படவிருக்கிற புரட்சி, சட்டத்தை மீறியதாக இருக்கும். ஈரோட்டில் ஆச்சாரியாருக்கு இந்தத் திட்டத்தை வாபஸ் (திருப்பி) வாங்கும்படி 3 மாத நோட்டீஸ்  (அறிவிப்புக் கெடு) கொடுத்-தோம். ஆனால் ஆச்சாரியார் இந்தத் திட்டம் கிராமத்தில் மட்டுமல்ல, நகரத்திலும் வைத்துக்-கொள் என்கிறார். இப்போது நாமென்ன செய்யவேண்டும்? கிளர்ச்சிக்குத் தயாராய் இருக்க வேண்டியதுதான். மானமுள்ள மனிதனென்றால் ஒரு முறையாவது ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போய்வர வேண்டியதுதான். அதுதான் மனிதனுக்கு தற்போது யோக்கியதாம்சம். (தகுதி) நம்முடைய பெரியவர்கள் ஒரு சமயம் பின் வாங்கினாலும். இளைஞர்களாயிருப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாளைக்கு நம் பின் சந்ததியார் மாடுமேய்க்க வேண்டியதுதான். இதுதான் குலக்கல்வித் திட்டத்தைப்  பொறுத்தவரையில் நான்  கூறவேண்டிய சங்கதி.
அடுத்தபடியாக ஈரோட்டில் நடைபெற்ற புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாட்டில் நிவேற்றப்பட தீர்மானங்கள் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றேன்.
28-2-1954 காஞ்சிபுரம் செங்கற்பட்டு மாவட்டத்தில் திராவிடர்கழக முதலாம் ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு (விடுதலை 7-3-1954)
-உண்மை இதழ்,16-31.8.16

தமிழர் கழகம் என்னாது திராவிடர் கழகம் என்றதேன்

தந்தை பெரியார் விளக்கம்
திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங்கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக்காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்தவர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்-படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவ-மாடுகிறது. நோய்நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.
திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கைகளை விளக்கத் தவறும். இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக்களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக்குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட்டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்-தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங்-களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமை-யாததாக இருக்கின்றது.
(01.05.1947 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசார குழு பயிற்சிப்  பாசறையில் நடத்திய வகுப்பின் உரை தொகுப்பு.)
- ‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 03.05.1947
- உண்மை இதழ், 16-30.9.16

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்! இன்றேல் செத்தொழிவோம்!


தந்தை பெரியார்



இந்த நாட்டை முதலில் முகலாயர்கள் ஆண்டார்கள். பிறகு வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள். வெள்ளைக்காரன் இங்கு பார்ப்பானால் வந்தான். பார்ப்பான் பேச்சையே கேட்டான். கடைசியில் வெள்ளைக்காரன் என்ன நினைத்தான் என்றால் பார்ப்பான் எல்லோரையும் ஏய்க்கின்றான். இந்த முட்டாள் ஜனங்கள் அவனுடைய ஏய்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள், என்பதாக. இப்படிப்பட்ட முட்டாள் மக்களை ஏய்த்து வரும் பார்ப்பானிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவனிடம் சாவி கொடுத்து விட்டுப்போனால் தங்களுக்கு லாபம் என்று கருதிப் பார்ப்பனரிடம் ஆட்சியை ஒப்புவித்தான். ஆனால் வெள்ளைக்காரன் கொஞ்சம் ஓரளவுக்குத் தமிழனுக்குப் புத்தி வர வசதி செய்து விட்டுப் போனான். இந்த வெள்ளைக்காரனாலும் சுயமரியாதை பிரச்சாரத்தினாலும் மக்களுக்குக் கொஞ்சம் புத்தி வந்தது.

ராஜாக்களுக்கும் கொஞ்சம் புத்திவந்தது. திருவாங்கூர் மற்ற ராஜ்யங்களில் கோவிலைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடச் சொன்னார்கள். வெள்ளைக்காரன் இங்கு வந்ததும், பார்ப்பனர் தாம் பதவிக்கு வரும் மாதிரியில் ஏற்பாடுசெய்து கொண்டனர். அந்தப் படிக்கே கல்வி முறையையும் உத்தியோகத் தகுதியையும் ஏற்பாடு செய்து கொண்டனர், உதாரணமாக, ஒரு வக்கீல் வேண்டும் என்றால் 18 வருடம் ஆகும்; அதில் பார்ப்பான்தான் வக்கீலாக முடியும். காரணம் அவன் பிச்சையெடுத்தாவது அவன் மக்களைப் படிக்கவைக்க முடியும். அதற்கு அனுசரணை யாகவும், ஆதரவாகவும், அவன் ஜாதி உயர்வு இருக்கிறது. பல அக்கிரமங்கள் செய்து அவனே சகல உத்யோகத்தியோகங்களிலும் அமர்ந்தான்.

இவற்றையெல்லாம் மீறி இரண்டொரு நம்மவர்கள் படித்துவந்தனர். அதுவும் இந்தப் பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை. இதைத்தான் ஆச்சாரியார் அவர்கள் தமது திட்டமாகச் சொல்கிறார். அதாவது கிராம மக்களுக்குப் படிப்பு வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்.

அவன் சிரைக்கணும், வெளுக்கணும், சட்டிப்பானை செய்யணும் என்று சொல்லிவிட்டார். உங்கள் ஊர்ப்பள்ளிக்கூடம் 3 மணிநேரம்தான்; மற்ற நேரமெல்லாம் நம் பிள்ளைகள் கழுதை மேய்க்க வேண்டும், இதற்குப்  பெயர் புது ஆரம்பக் கல்வித் திட்டமாம், இப்படிப்பட்ட திட்டத்தை எதிர்ப்பதற்குத்தான் ஈரோட்டில் மாநாடு கூட்டினோம். அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். சட்டப்படி போராட வேண்டும் என்று சர்க்கார் (அரசு) சொல்லுகின்றது. அதாவது சட்டசபைக்குச் சென்று மந்திரி பதவியைக் கைப்பற்றி இந்தத் திட்டத்தை மாற்றவேண்டும் என்று சொல்லுகிறது. சட்டசபைக்கு நாம் போகமுடியுமா? இன்னும் சொல்கிறேன்; யோக்கியன் சட்டசபைக்குப் போக முடியுமா? தேர்தலில்  நிற்பதற்கே முதலில் 250 ரூபாய் டிபாசிட் கட்ட வேண்டும்; பார்லிமெண்டுக்கு (நாடாளுமன்றம்) 500 ரூபாய் டிபாசிட் கட்டவேண்டும்; 200, 300 போலிங் ஆஃபீஸ்களுக்கு (வாக்குச்சாவடிகளுக்கு) ஆள் வைக்கவேண்டும்; அதற்கு ஆள் ஒன்றுக்கு 1 ரூபாய் கூலி என்றாலும் 300 ரூபாய் போல் வேண்டும்,

இவை எல்லாவற்றையும் விட நம் மக்களுக்கு ஓட்டுப்போடும்  (வாக்கு அளிக்கும்) தகுதியோ, அறிவோ இல்லாததால் நம் ஜனங்களுக்கு எது எப்படி ஆனாலும் சரி என்று 4 அணா கொடுத்தால்போதும் என்று தம் ஓட்டைப் போட்டு விடும் நிலையில் உள்ளவர்கள் ஆவர். இப்படி இருக்கும்போது யார் சட்டசபைக்கு வரமுடியும்? அப்படியும் போனால்தான் அங்கேபோய் என்ன செய்ய முடியும்? எடுத்துக்கொள்ளுங்களேன், சட்டசபையில் ஆச்சாரியாரின் கல்வித்திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேறியது.

ஆனால் ஆச்சாரியார் அவர்கள்.  இது ஒரு சிபாரிசு என்று கூறிவிட்டார். இப்படி இருக்கும்போது சட்டசபைக்குப் போய்த்தான் என்ன செய்யமுடியும்? அதோடு இந்த ஜனநாயகம் சட்டசபை என்பது எல்லாம் தேர்தலில் நிற்காதவர்களும், தேர்தலில் தோற்றவர்கள் எல்லாரும் மந்திரிகளாக வரக்கூடிய கேவலமான தன்மையில் இருக்கிறது. இந்த நிலைமை இருக்கும் போது சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பெரிய புரட்சியின் மூலம்தானே காரியம் சித்தியாகும்? நம்மில் 100, 1000 பேர் பலியாக வேண்டி வந்தாலும் தயார் என்று கச்சைக் கட்டிக்கொண்டு முன் நின்றால்தானே முடியும்!

ஆந்திரா எப்படிப்பிரிந்தது? அங்கே போராடத் தயாராகி விட்டார்கள், எதற்கும். நேரு தாம் இருக்கின்ற வரை ஆந்திராவைப் பிரிக்கமுடியாது என்றார். அதற்குஆக ஆந்திர மக்கள் சும்மா இருக்கவில்லை. ரயிலை நிறுத்தினார்கள்; அதன் டிரைவரை உதைத்தார்கள்; ஒரு மாதம் வரை சரியான நேரத்துக்கு வண்டிபோக முடியவில்லை. பல சட்டத்துக்குப் புறம்பான செயல்களையெல்லாம் துணிந்து செய்து நஷ்டத்தை உண்டாக்கினார்கள், உடனே  ஆந்திராவைச் சட்புட்டென்று பிரித்துக் கொடுத்துவிட்டார்கள்.

மற்றும் காங்கிரஸ்காரர்கள் இம்மாதிரி காரியங்களைச் செய்து, அதாவது தாங்கள் ஆகஸ்டு கிளர்ச்சி செய்துதான் சுதந்திரம் பெற்றதாகக் கூறிவருகின்றனர், இதனால் தான் நானும் 3 மாத நோட்டீஸ் கொடுத்து சுட்டால் சுடட்டும் என்று போராட்டம் ஆரம்பிக்க இருக்கின்றேன்.

எப்படியும் இந்தக் கல்வித்திட்டத்தை ஒழித்துத்தீரவேண்டும். வாத்தியார்கள் எதிர்த்தார்கள்; அதோடு போனமாதம்

பஞ்சாயத்துத்தலைவர்கள் மாநாடு நடந்தது, 400பேர் கூடினார்கள்.

இதில் ஆச்சாரியார் அவர்கள் தந்திரமாக ஒரு ஆளை அனுப்பி அதில் பேசி ஏமாற்றப் பார்த்தார். ஆனால் அங்கே அந்த ஆளை வெளியேற்றச் சொல்லிக் கலவரம் நடந்து அந்த ஆள் வெளியேறும்படியாகிவிட்டது. மற்றும் ஜில்லா போர்டுகளும், முனிசிபாலிட்டிகளும் இதை எதிர்த்து தீர்மானம் போட்டன.  இவ்வளவுக்குப் பிறகும் ஆச்சாரியார் அவர்களும், நகரங்களுக்கும் இக்கல்வித்திட்டத்தை விஸ்தரிக்கின்றேன் என்று கூறுகிறார் என்றால், நம்மை  மடையர்கள் என்று கருதுவதைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஆகவேதான்  கிளர்ச்சிக்குப் படை திரட்டுகின்றோம். இரத்தம் சிந்தத் தயாராயிருக்கின்றோம். இப்போது ஆள்கிறவர்கள் பார்ப்பனர்; உதைப்பார்கள்; சுடுவார்கள்; எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சட்டத்தால் செய்ய வேண்டியதெல்லாம் முடிந்துபோய்விட்டன.

ஆகவே அரசாங்கம் செய்யும் அக்கிரமங்களைச் சட்டத்தைமீறிக் காரியங்களைச் செய்துதான் நாம் போராட வேண்டியுள்ளது. அந்த நிலைமைக்குச் சர்க்காரே (அரசே) நம்மைக் கொண்டுவந்து விட்டுவிட்டது. ஒன்று அந்தப் படிப்புத் திட்டத்தை ஒழித்துக்கட்டு, அல்லது அங்கேயே சாவு என்று சொல்லி உங்கள் இளைஞர்களை அனுப்ப வேண்டும். தாய்மார்களும் களத்தில் குதிக்கவேண்டும்; இந்தப் போராட்டத்தில் இரண்டிலொன்று  பார்த்துவிட வேண்டியதுதான்.

23.2.1954 அன்று மெணசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார்பேருரை: (விடுதலை 26.2.1954)

- உண்மை இதழ், 1-15.6.18