செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

முதலாளி வேலையாளர் தத்துவம்

4.10.1931 - குடிஅரசிலிருந்து...

தற்காலம் இருந்துவரும் வகுப்புச் சச்சரவுகளானது சமுக அமைப்பு களையே அடிப்படையாகக் கொண்டதாக இருந்துவருகின்றன. ஆதியில் எஜமானன் அடிமை சச்சரவும், மேல் மக்கள் கீழ் மக்கள் சச்சரவும் மேஸ்திரிகையாள் சச்சரவும், பிறரை ஒடுக்கினவர்கள் பிறரால் ஒடுக்கப்பட்டவர்கள் சச்சரவும், ஆகிய ஒன்றுக்கொன்று வைரியான இரண்டுவித பிரிவுகள் சதா சச்சரவுகளை உண்டாக்கிக் கொண்டே வந்து இருக்கின்றன.

இந்த சச்சரவுகள் சிலசமயங்களில் மறைமுகமாகவும் சில சமயங்களில் வெளிப்படையாகவும் நடைபெற்று வந்தாலும் அவற்றின் பயனாகவே சில சமயம் சீர்திருத்தம் ஏற்படுவதும் சில சமயம் இரு கூட்டத்தாருக்கும் ஆபத்துகள் ஏற்படுவதும் சகஜமாகயிருந்து வந்திருக்கின்றன.

பூர்வகால சரித்திரத்தில் மனித சமுகத்தில் ஏணிப்படிகள் போல் படிப்படியாக பிரிவுகள் அமைக்கப்பட்டு அதுபோலவே படிப்படியான உரிமைகளும் அவைகளுக்கு அளிக்கப்பட்டிருந்தன.

ரோம் ராஜ்யத்தில் மேன்மக்கள் கீழ் மக்கள் என்றும், மத்திய காலத்தில் ஜமீன்தாரர்கள், பண்ணையாட்கள் என்றும், மேஸ்திரிகள் - கையாள்கள் என்றும், பல பிரிவுகளாகவும் இவ்வொவ்வொரு பிரிவுகளுக்குள்ளும் அநேக உட்பிரிவுகளும் பிரிக்கப்பட்டிருந்தன.

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் முதலாளி வகுப்பானது பழைய ஜமீன்தாரர்கள் வகுப்புகளின் வீழ்ச்சியினாலேயே ஏற்பட்டதாகும்.  அதிலிருந்தே முளைத்ததாகும். தற்காலத்திலும் வகுப்புச் சச்சரவுகள் மேலும் மேலும் இனியும் பெருகிக் கொண்டே போகின்றன.  தற்காலத் திலும் கூட ஒரு வகுப்பார் மற்ற வகுப்பார்களை அடக்கியாள முயற்சிப் பதன் மூலமே சச்சரவுகள் விருத்தியாகிக் கொண்டு வருகின்றன.

எனினும் தற்காலத்திய முதலாளிவகுப்பு தோன்றிய பிறகுதான் வகுப்பு ஆதிக்கத்தில் இருந்து வந்த சூழ்ச்சிகள் எல்லாம் பட்ட வர்த்தனமாய் வெளியாய் விட்டன.   இப்பொழுது சமுகம் முழுவதையும் இரண்டே இரண்டு பிரிவு களாகத்தான் பிரிக்கப்படுகின்றது.  ஆனால் இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று நேர்விரோதமாக இருந்து கொண்டு சதா போராடிக் கொண்டேயிருக்க வேண்டியதாகின்றது.

இந்தப்படி போராடிக் கொண்டி ருக்கும் இரண்டு பிரிவுகளுக்கும் தான் ஒன்றுக்கு முதலாளி வகுப்பு என்றும் மற்றதற்கு வேலையாள் வகுப்பு என்றும் பெயர்.  இந்த இரண்டு பிரிவுகளும் எப்படி ஏற்பட்டது என்கின்ற காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது அவசியமானதாகும்.

சரித்திரத்தின் மத்திய காலத்தில் கிராமாந்தரங்களில் ஜமீன்தாரர் களுக்கு அடங்கி வேலை செய்து வந்த குடியானவர்கள் சிலர் அச்ஜமீன்தாரர்களோடு பிணங்கிக் கொண்டு அவர்களுக்குப் பயந்து பட்டணங்களுக்கு வந்து குடியேறி வசிக்க ஆரம்பித்தார்கள்.  பிறகு இந்தப்படி பட்டணங்களில் வசித்து வந்த குடியான ஆட்களே சில தொழில்களில் ஈடுபட்டு பொருள் தேட ஆரம்பித்தார்கள்.  அக்காலத்தில் புதிதாக அமெரிக்கா கண்டம் கண்டு பிடிக்கப்பட்டதாலும், கேப்முனையைத்தாண்டி இந்தியாவுக்குப் பாதை கண்டு பிடிக்கப்பட்ட தாலும் வியாபாரம் பெருக ஆரம்பித்தது.

- விடுதலை நாளேடு 4. 8 .18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக