செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

பொருளாதாரம்

12.07.1931 - குடிஅரசிலிருந்து...

பொருளாதாரத் துறையில் செல்வவான்களுக்கும், உத்தியோ கஸ்தர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தவிர மற்றவர்களுக்கும் என்ன நன்மை செய்ய  சுயராஜ்யத்தில் திட்டமிருக்கின்றது என்பதைச் சற்று யோசித்துப்பாருங்கள்.

பணக்காரன் பணத்தைப் பிடுங்கி மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. தேசத்துப் பணமெல்லாம் சர்க்காருடையதாவ தானால் ஆகட்டும். இல்லையானால் பணம் ஒரே பக்கம் போய்ச்  சேருவதற்கு மார்க்க மில்லாமலிருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

இன்றைய தினம் பணக்காரன் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பங்கு போட்டுக் கொடுத்துவிட்டால் இந்த ஏழை நாளைக்கு கயாசிரார்த்தமும், மதுரைவீரன் பூஜையும், காவடி, அபிசேகமும், பண்டிகையும் செய்து வீட்டில் உட்கார்ந்து கொண்டே பணத்தைத் தொலைத்து விடுவான் என்பதும், பிறகு பழையபடி புரோகிதனும் தந்திரக்காரனும், ஏமாற்றுக்காரனும் தான் மறுபடியும் பணக்காரன் ஆகிவிடுவான் என்பதும் எனக்குத் தெரியும்.  ஆதலால் தான் நாட்டுச் செல்வம் ஒருபக்கமே போய் குவியாமல் இருக்கும் திட்டமே போட வேண்டும் என்றும், யாருக்கும் எந்தத் தொழிலும் செய்யவும் எல்லோரும் எதையும், படிக்கவும் சவுகரியமும் அனுமதியும் இருக்க வேண்டும் என்றும் தான் சொல்லுகின்றேன். வருணாசிரம சுயராஜ்யத்தில் யார் மனதை யும் புண்படுத்தாத சுயராஜ்யத்தில் இது முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

உபாத்தியாரின் கடவுள் பாடம்

06.09.1931 - குடிஅரசிலிருந்து...

உபாத்தியாயர் :  பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை சமையற்காரன் சமைத்தான், உலகத் தைக்கடவுள் உண்டாக்கினார். தெரியுமா?

மாணாக்கன்: தெரிந்ததுசார். ஆனால், ஒரு சந்தேகம் சார்.

உபாத்தியாயர்: என்ன சொல்?

மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்?

உபாத்தியாயர்: முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர் தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே.

மாணாக்கன்: ஏன் சார்? கேட்டால் என்ன சார்?

உபாத்தியாயர்: அது! நிரம்பவும் பாவம்.

மாணாக்கன்: பாவம் என்றால் என்ன சார்?

உபாத்தியாயர்: சீ! வாயை மூடு. நீ அயோக்கியன். குடிஅரசு படிக்கிறாயோ? ஏறு பெஞ்சிமேல்.

- விடுதலை நாளேடு 3. 8 .18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக