ஞாயிறு, 7 அக்டோபர், 2018

மத உரிமையின் ஆபத்து

தந்தை பெரியார்
இந்தியாவுக்கு அரசியல் சீர்திருத்தம் கொடுப்பதற்கு வேண்டிய திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்ய பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும், மூன்று கமிட்டிகளில் ஒன்றாகிய ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் சில நாட்களாகப் புது டில்லியில் நடைபெற்று வருகின்றது. அக்கமிட்டியில் அரசியல் சீர்திருத்தத்தில் சேர்க்க வேண்டிய அடிப்படையான உரிமைகளைப்பற்றி ஆலோசனை செய்து வருகின்றனர். அவர்கள் முடிவு செய்து ஒப்புக் கொண்டிருக்கும் உரிமை களாலும், அத்தகைய உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சீர்திருத்தத்தாலும் நமது நாட்டின் ஏழைமக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அதிகமான நன்மையுண்டாகப் போவதில்லையென்றுதான் நாம் துணிந்து கூறுகிறோம். இவ்வாறு நாம் கூறுவதற்குரிய காரணங்களை ஆராய்வோம்.
"எந்த சமஸ்தானமாயினும், மாகாண ஆட்சிக்கு உட்பட்ட தானாலும், அய்க்கிய ஆட்சிக்குள் அடங்கியதானாலும், அவ்விடங்களில் சர்க்கார் மதமென்பது ஒன்று இல்லை என்று அறிக்கையிட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது அடுத்தபடியாக மத சுதந்திரம், பொது ஜனங்களின் பழக்க வழக்கங்கள் முதலிய உரிமைகளுக்குச் சம்மதம் அளிக்கிறது" என்பதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்விரு தீர்மானங்களால் இதுவரையிலும் நமது நாட்டு மக்கள் எந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்களோ அந்த நிலையில்தான் அரசியல் சீர்திருத்தம் பெற்றபின்னும் இருந்து தீர வேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
உண்மையிலேயே ஒரு நாட்டு மக்கள், ஜாதி பேதங்கள் இல்லாமல், ஏழை பணக்கார வித்தியாசங்கள் இல்லாமல், தொழிலாளி முதலாளிக்  கொடுமைகள் இல்லாமல் குடியானவர் நிலச்சுவான்தார்கள் வித்தியாசமில்லாமல், உயர்ந்தவர் தாழ்ந்தவன் வித்தியாசம் இல்லாமல் சமத்துவமும், சகோதரத்துவமும், சுதந்திரமும் பெற்று வாழ வேண்டுமானால், முதலில் மதங்களும், தனித்தனிப் பழக்க வழக்கங்களும் ஒழிந்தாக வேண்டும். இவ்வாறு மக்களைப் பிரித்துவைத்துக் கொடுமைப்படுத் துவதற்குக் காரணமான மதங்களையும் அவைகளிலிருந்து முளைத்த பழக்கவழக்க வேறுபாடுகளையும் அரசாங்கமே தைரியமாக முன் வந்து ஒழிக்க வேண்டும். இப்படியில்லாமல், "அரசாங்கத்திற்கு எந்த மதமும் இல்லை," என்று சொல்லு கின்ற அரசாங்கமாயிருந்தாலுஞ்சரி, "நாங்கள் மதத்தில் தலையிட மாட்டோம்" என்று சொல்லுகின்ற அரசாங்கமா யிருந்தாலும் சரி, "ஒவ்வொரு மதங்களுக்கும், கலை களுக்கும், நாகரிகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண் டும்" என்று சொல்லுகின்ற அரசாங்கமாயிருந்தாலுஞ் சரி, சமதர்மக் கொள்கையுள்ள சீர்திருத்தங்கள் எவையும் செய்ய முடியாது. இந்த மாதிரியான கொள்கையுள்ள அரசாங்கங்கள் ஏக நாயக அரசாங்கமானாலும், அல்லது குடியேற்ற நாட்டு அந்தஸ்துள்ள அரசாங்கமானாலும் அய்க்கிய அரசாங்கமானாலும், அல்லது பூரண சுயேட்சை அரசாங்கமானாலும், இவைகளால் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், சுதந்திர மற்ற மக்களுக்கும் கடுகளவாவது நன்மையுண்டாகப் போவதில்லை.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, அதாவது ஏக நாயக அரசாங்கமானாலும் அல்லது ஜனநாயக அரசாங்கமானாலும் அது தேச மக்கள் எல்லோரையும் மக்களாகவே கூறி, அவர்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம் சுதந்திரம் ஆகியவைகள் நிலைத்திருக்கச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தச் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவைகள் வளர்வதற்குத் தடை யாக இருப்பவை மதமானாலும், பொருளா னாலும், ஜாதியானாலும், வேதமானாலும் நாகரிகங்களானாலும், பழக்க வழக்கங்களா னாலும், கடவுள் ஆனாலும் மற்றும் எவை யானாலும் அவைகளைச் சட்டங்களின் மூலம் அடியோடு - ஒழிக்கப் பின்வாங்காத அரசாங் கமாக இருக்க வேண்டும். இத்தகைய அரசாங்கத்தினால்தான் தேசமக்கள் எல்லோருடைய சுயமரியாதையையும் காப்பாற்ற முடியுமென்பதில் அய்யமில்லை.
இப்படியில்லாமல், "அரசாங்கத்திற்கு மதமில்லை" என்று மாத்திரம் ஒப்புக்கொண்டு "மதசுதந்திரம், பொது ஜனங்களின் பழக்க வழக்கங்கள் முதலிய உரிமைகளுக்குச் சம்மதமளிக்கிறது" என்ற கொள்கையை உடைய அய்க்கிய ஆட்சி அரசாங்கத்தால் என்ன நன்மை ஏற்பட்டு விடமுடியும் என்று கேட்கிறோம். இந்தக் கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ள அரசாங்கம், கல்யாணம், சிரார்த்தம் கருமாதி முதலிய பலப் பெயர்களால் பார்ப்பன ரல்லாதார்களிடமிருந்து செல்வத்தைச் சுரண்டுவது எங்கள் மதம், அய்ந்து வயதுப் பெண் குழந்தையை அறுபது வயதுக் கிழவனுக்கு மணஞ்செய்து கொடுத்து அன்றைக்காவது, அல்லாது, மறுநாளிலாவது, மறு மாதத்திலாவது மறு வருஷத்திலாவது தாலி அறுக்கவைப்பதும், இவ்வாறு தாலியறுத்து பெண்களை மொட்டையடித்து கைம் பெண்களாக ஆயுள் முழுதும் இருந்து துன்புறும்படி வைப்பதுதான் எங்கள் மதம், கோயில்கள் என்பவைகளில் உள்ள குழவிக்கல்லுகளுக்கும், பொம்மைகளுக்கும், ஏராளமாக செல்வங்களைப் பாழ்பண்ணி விட்டு மக் களுடைய உழைப்பையும், செல்வத்தையும் காலத்தையும் பயனற்ற வழியில் செலவிடுவதுதான் எங்கள் மதம், இவ்வாறுள்ள கோயில்களின் செல்வங்களைப் பார்ப் பனர்கள்தான் தின்று கொழுக்கலாம். இக்கோயில்களுக்குள் உயர்ந்த ஜாதி இந்துக்கள்தான் போகலாம், தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாது. என்று ஏற்பட்டிருப்பதுதான் எங்கள் மதம்; ஆண்களுக்குத்தான் சொத்துரிமை உண்டு, பெண்களுக்கு எந்த வகையிலும் சொத்துரிமை இல்லை என்பதுதான் எங்கள் மதம்; ஆண்கள் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், பெண்கள் இவ்வாறு செய்து கொள்ளக்கூடாது, கணவன் இறந்து விட்டாலும் விதவையாகத் தனித்திருந்தே உயிர் வாழ வேண்டும் என்ற ஏற்பாடு தான் எங்கள் மதம், என்று சொல்லுகின்ற மதம் சுதந்திரங்களுக்கு எல்லாம் உரிமை கொடுத்து ஆக வேண்டுமல்லவா?
உயர்ந்த ஜாதி இந்துக்களின் பிள்ளைகளும், தாழ்ந்த வகுப்பினரின் பிள்ளைகளும் ஒரு பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிப்பது மதச் சுதந்திரத்திற்கும், பழக்க வழக்க சுதந்திரங்களுக்கும் விரோதம்; உயர்ந்த வகுப்பினர் தண்ணீர் எடுக்கும் கிணறு, குளங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தண்ணீர் எடுப்பது, பழக்க வழக்க சுதந்திரத்திற்கு விரோதம்.
உயர்ந்த வகுப்பினர்கள் வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த வகுப்பினர் நடப்பது பழக்கவழக்க சுதந்திரங்களுக்கு விரோதம்; உயர்ந்த வகுப்பினர் பார்க்கும்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் படிப்பதும் நல்ல வேஷ்டிக் கட்டுவதும், சட்டை போடுவதும், கிராப்பு வைப்பதும், காலில் செருப்பணிவதும், குடை பிடிப்பதும், பெண்கள் மார்பில் துணி போடுவதும் பழக்க வழக்க சுதந்திரங்களுக்கு விரோதம்; என்று கூறி வைதிகர்களும், ஜாதி இறுமாப்புக் கொண்டவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப் படுத்த மேற்கூறிய உரிமை இடங்கொடுக்கின்றதல்லவா? ஆகையால், மதநடு நிலமையும், மத, பழக்க வழக்கம் ஆகிய சுதந்திரங்களுக்கு உரிமையும் வழங்கும் ஆட்சியில் ஏழை மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை யென்று நிச்சயமாகக் கூறலாம்.
இன்னும் ஆலோசனைக் கமிட்டியில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கி மற்றொருத் தீர்மானமும் செய்யப்பட்டிருக்கிறது. அது "குடிமக்கள் தங்கள் நகர உரிமைகளை அனுபவிப்பதற்குத் தடையாக எத்தகைய பழக்க வழக்க வித்தியாசங்கள் ஏற்படுவதாயினும் அவைகள் சட்ட விரோதமானவை எனத் தீர்மானிக்க வேண்டும்" என்பதாகும்.
முதலில் மதம், பழக்க வழக்கம் ஆகிய சுதந்திரங்களுக்கு உரிமை கொடுத்து விட்டு மேற்கூறியவாறு தீர்மானிப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது. முதலில் கூறிய தீர்மானத்தை அரசாங்கம் நடத்தி வைப்பதா? அல்லது இரண்டாவது செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை அரசாங்கம் நடத்தி வைப்பதா? என்று யோசித்துப் பாருங்கள்! வரப்போகின்ற அரசாங்கத்தில் பெரும்பாலும் ஆதிக்கமும், அதிகாரமும் செலுத்தப் போகின்ற பணக்காரர்களும், வைதிகப் பித்தர்களும், ஜாதி இறுமாப்புக் கொண்டவர்களும் "மதம் பழக்க வழக்க சுதந்திரங்களுக்கு உரிமை கொடுக்கும்" தீர்மானத்தை நடைமுறையில் வைத்திருப்பார்களா? அல்லது "குடிமக்கள் தங்கள் நகர உரிமைகளை அனுப விக்கத் தடையாக இருக்கும் பழக்க வழக்க வித்தியாசங்களைத் தடுக்கும்" தீர்மானத்தை நடைமுறையில் வைத்திருப்பார்களா? என்று யோசனை செய்து பாருங்கள்! ஆகவே இரண்டாவது செய்யப்பட்டிருக்கும் தீர்மானம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெறும் வாய்ச்சமாதானம் கூறுவதற்குப் பதிலாகவே செய்யப்பட்டி ருக்கிறதென்று தான் சொல்லலாம்.
இன்னும் "தர்மஸ்தாபனங்கள், மதஸ்தாபனங்கள், சமுக ஸ்தாபனங்கள், கல்வி ஸ்தாபனங்கள் முதலியவற்றைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் தங்கள் சொந்த செலவில் அமைத்து அந்த ஸ்தாபனங்களில் தங்கள் சொந்த மதங் களையும், தங்கள் சொந்த பாஷைகளையும் அநுஷ்டிக்க அவர்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுக்கிறது" என்று ஒருத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்குச் செய்யப் பட்டிருப்பது போலக் காணப்படுவதாயினும் இத்தகைய உரிமை மற்ற உயர்ந்த வகுப்பினர்களுக்கும் இல்லாம லில்லை. எந்த வகுப்பினர்களுக்கும் இத்தகைய உரிமை உண்டு. ஆகவே இதுவும், "மதங்கள், பழக்க வழக்க சுதந் திரங்கள்" ஆகியவைகளுக்கு உரிமை கொடுக்கும் தீர் மானத்தைப் போன்றதேயாகும். இத்தீர்மானம், இன்னும் மக்களின் ஒற்றுமைக்குத் தடையாக இருக்கின்ற மதங் களையும், நாகரிகங்களையும் நிலைத் திருக்கும்படி செய்வதற்குத் துணை புரியக் கூடியதேயாகும்.
இவ்வாறு ஒவ்வொரு தனிப்பட்ட வகுப்பினரும் தங்கள் தங்கள் மதம், கலை, பழக்க வழக்கங்கள் இவைகளைக் காப்பாற்றிக் கொள்ள உரிமையளித்து விட்டு, "அரசாங்க ஆதரவு பெற்ற பள்ளிக் கூடங் களில் எல்லோரையும் சேர அனுமதிக்க வேண்டும், ஜாதி, மதம், சமுகம், பிறப்பிடம் முதலியவற்றைக் கொண்டு தடைப்படுத்தக் கூடாது" என்று தீர்மானத்திருப்பதில் என்ன பயனுண்டு? தனித்தனி ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமையிருக் கின்றதால், உயர்ந்த ஜாதிக்காரர்கள், அர சாங்க ஆதரவு பெற்ற ஸ்தாபனங்களில் தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் சேர்க்கப் படும் பொழுது தாங்கள் அதை பகிஷ்கரித்து விடுவார்கள். ஏனென்றால் ஒவ்வொரு சமுகத்திலும் உள்ள மதப் பித்தர்கள், தங்கள் மதம், பழக்க வழக்கங்களைக் காப்பாற்ற எப்படியேனும் தனிஸ்தாபனங்களை  ஏற் படுத்தாமல் இருக்கமாட்டார்கள். இவ்வாறு தனிப்பட்ட ஸ்தாபனங்கள் அதிகமாக ஏற்படுகின்றபோது அரசாங்க ஆதரவு பெற்ற கல்வி ஸ்தாபனங்களின் எண் ணிக்கைக் குறையும் என்பதில் அய்யமில்லை. ஆகவே இவைகளைக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்கள் பெரிய பயனைப் பெறமுடியாது என்று சொல்கிறோம். ஆனாலும் சிறிதளவாவது நன்மை தரக்கூடிய இத்தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம்.
இது நிற்க, இனி எந்த மாதிரியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட அவைகளெல்லாம் பெரிய நன்மை அளித்துவிடாது என்று சொல்லுகிறோம். ஏனென் றால், மதம், பழக்க வழக்க சுதந்திரம் முதலியவைகளுக்கு உரிமையளிக்கின்ற வரையிலும் அரசாங்கத்திற்கு மதம் இல்லையென்று சொல்லிக் கொண்டு மதத்தில் தலையிடமறுக்கின்ற வரையிலும், நமது நாட்டில் சமதர்மம் பரவமுடியாது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
ஆயினும், "ஒவ்வொரு மதங்களுக்கும், கலைகளுக்கும் நாகரிகங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதையும், எந்தத்தனி வகுப்பினர்களுக்கும் தனிச் செல்வாக்கு இல்லாமலும்" உள்ள சுயராஜ்ஜியம் வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டிருக்கிற காங்கிரசைக் காட்டிலும், வட்டமேஜை ஆலோசனைக் கமிட்டியாரால் முடிவுகள் சிறிதளவு நன்மையானவைகளாயிருக்கின்ற தென்றே நாம் கருதுகின்றோம். "தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பொதுஸ்தாபனங்களில் அவர்களுடைய பங்குக்கு ஏற்றவாறு உரிமையளிக்க வேண்டும்" என்பன போன்ற சில தீர்மானங்கள் அவர்களுக்கு நன்மையளிப்பனவாகும். இந்தச் சிறிய சாதகத்தைக் கொண்டு அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் தங்கள் கையைப் பலப்படுத்திக் கொண்டு, சிறிதளவாவது முன்னேற்றமடைய வழியிருக்கிறது என்ப தனால் கொஞ்சம் திருப்தி அடைய வேண்டியிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு சிறிதும் பாதுகாப்பு அளிக்க விரும்பாத காங்கிரஸ்காரர்களைக் காட்டிலும், ஆலோ சனைக் கமிட்டியார் ஓரளவு சாதகமான காரியங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடைகிறோம்.
இவைகளை எல்லாம் ஆலோசிக்கும் போது சீர்திருத் தக்காரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயமென்ன? அவர்கள் பிரசாரத்தின் மூலம் மக்களுடைய மனத்தில், மாறுதல் உண்டாகுவதனால் தான் ஜாதி, மத பழக்க வழக்கங்களை ஒழிக்க முயலவேண்டியிருக்கிறதேயொழிய தற்கால அரசாங்க அமைப்பைச் சாதகமாகக் கொண்டு ஒன்றும் செய்ய முடிவதற்கில்லை என்பதே. இத்தனை காலமாக பிரிட்டிஷ் அரசாங்கமும் "நாங்கள் மதத்தில் தலையிடுவதில்லை" என்ற பல்லவியைப் பாடிக்கொண்டே சீர்திருத்தங்களைச் செய்வதற்கு  முன் வராமலிருந்தது, காங்கிரஸ் கேட்ட சுயராஜ்ஜியமும் இதைவிட மோச மாகத்தான் இருந்தது. இப்பொழுது நடைபெறும் வட்ட மேஜை ஆலோசனைக் கமிட்டியின் தீர்மானங்களை ஆராயும் போதும், வரப்போகும் அய்க்கிய ஆட்சியும் இப்படித்தானிருக்குமென்று தெரிகின்றது.
ஆதலால் எந்த சுயராஜ்ஜியம் வந்தாலும் படித்த வர்களும், பணக்காரர்களும், உத்தியோகம் பட்டம், பதவி, முதலியவைகளைப் பெற்று ஏழை மக்களின் பொருளைச் சுரண்டுவதற்குத் தான் துணைசெய்யுமே
யொழிய மற்றபடி ஜாதி மத உயர்வு தாழ்வுக் கொடுமைகள் ஒழிந்து, நாட்டு மக்களனைவரும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பெற்று வாழமுடியாது என்பதைத் தான் கூறுகிறோம். உண்மையில் நமது நாட்டு மக்கள் சுயமரியாதை பெறவேண்டுமானால் ஜாதி, மதம், பழக்க வழக்கம் முதலியவைகளை ஒழித்து எல்லோரையும் ஒன்றுபடுத்தக் கூடிய ஆட்சிதான் தேவை என்பதை எடுத்துக் காட்டி முடிக்கின்றோம். அது குடிஅரசானாலும், முடி அரசானாலும் அல்லது வேறு எந்த அரசானாலும் சரி.
- 'குடிஅரசு' - தலையங்கம் - 06. 03. 1932
- விடுதலை நாளேடு, 7.10.18

வெள்ளி, 5 அக்டோபர், 2018

பெரிய தியாகி ஈ.வெ.ரா!



திரு. இராமசாமி நாயக்கரைப்பற்றி, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால் நாயக்கரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்வது?


திரு.நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான்.

அவரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும், ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலைசெய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்தபின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால், நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்துக்குச் செய்து வருகிறேன்.

சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்.

கப்பலோட்டிய தமிழர்

வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் (1928)

தொகுப்பு : தேனீ

- உண்மை இதழ், 1-15.9.18

“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!”

“அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க’’ அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! “நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது.’’ ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணாஅவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்ச நிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார். யானறிந்தவரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4இல், 8இல் ஒரு பங்கு அளவு கூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.

இந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் “மனித வாழ்வில் வேறுயாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்து விட்டார்.’’ எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக் காட்டமுடியாது.

இன்று மக்களுக்கு உள்ள கவலை எல்லாம் நானறிந்த வரை அண்ணா முடிவடைந்து விட்டாரே, இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பது தான். நான் சொல்லுவேன் “அண்ணா இறந்து விட்டார்.’’ “அண்ணா வாழ்க’’ என்பதற்கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும் (திருப்பமும்) இல்லாமல் அவரது கொள்கை வளர்ந்தே வரும். ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக, ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறோம். இயற்கையும் அவர்களை அந்தப்படி நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறேன். அண்ணா நோய்ப் பட்டிருந்த காலத்தில் மேன்மை தங்கிய கவர்னர் பெருமானும், மாண்புமிகு மந்திரிமார்களும் பட்ட கவலையும் காட்டிய ஆறுதல் ஆதரவுகளும் சிகிச்சை செய்வதில் டாக்டர் சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி முதல் வேலூர் டாக்டர்களும் எடுத்துக் கொண்ட மனிதத் தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும், 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஒழுங்காக நடத்தியதில் போலீஸ் அதிகாரிகளும், சிப்பந்திகளும் நடந்து கொண்ட பாதுகாப்புத் தன்மைகளும், ரேடியோ நிலையத்தாரும், பத்திரிகைக்காரர்களும், விஷயங்களை அவ்வப்போது மக்களுக்குக் கூடியவரை தெரிவித்து வந்த நேர்மையும், மிகமிகப் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும். தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமதுமந்திரிகள் எல்லோரிடமும் காட்டி பரிவாய் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொண்டு இதை முடித்துக் கொள்ளுகிறேன்.’’

 04.02.1969 அன்று சென்னை வானொலி மூலம், பேரறிஞர் அண்ணா  மறைவுற்றமைக்கு தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய ஆழ்ந்த இரங்கல் உரை: நூல் - வானொலியில் பெரியார்.


                                                                  ***


“நாமெல்லோரும் அறிஞர் அண்ணா அவர்கள் முடிவெய்தியதை முன்னிட்டு நமது அனுதாபத்தைக் காட்டிக் கொள்வதற்காக இங்கே கூடியிருக்கிறோம். அண்ணா அவர்களைப் பத்தி இரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருத்தமாகும். பெரும்பாலும் அவரைப் புகழ்வதற்காகவே நாம் இங்கே கூடவில்லை. “அவருடைய தொண்டுக்கு நன்றி காட்டவும், அவரைப் பின்பற்றி அவர் கூறியுள்ள கொள்கைகளைப் பரப்பவும் கூடியிருக்கிறோம்.’’ “அண்ணா அவர்கள் மாபெரும் பகுத்தறிவுவாதி. இரண்டாவது அவர் காரியத்திலேயும் அதைக் காட்டிக் கொண்டார். மூன்றாவது அவர் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மூட நம்பிக்கைகள் தனக்கு இல்லை என்று அதைக் காட்டுவதற்கு எங்குமில்லாத திருமண விஷயத்திலே, கடவுள், மதம், ஜாதி, சம்பிரதாயக் காரியங்கள் இருக்கக்கூடாது என்று, அதில் கூடாது என்று, கருத்து கொண்ட ‘சுயமரியாதைத் திருமணம்’, ‘சீர்திருத்த திருமணம்’ என்பதைச் சட்டமாக்கினார். சட்டமாக்கினா ரென்றால், திருமணத்தைச் சட்டமாக்கியதே, முக்கிய கருத்துமல்ல.’’ “அதிலே கொண்டு வந்து கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தைப் புகுத்தக் கூடாது என்ற கருத்திலே.’’ இப்படிப் பல விஷயத்திலேயும் அவர், தான் பகுத்தறிவுவாதி என்பதையும் உண்மையாக அவர் மக்களுக்கு எடுத்துக் காட்டி மக்களை எல்லாம் அந்தப் பக்கத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்று ரொம்பப் பாடுபட்டார். அவ்வளவு செய்த மகானுக்கு இன்று இங்கு இவ்வளவு பெரிய மாபெரும் கூட்டம் அவர் காலமான அன்றைக்கும், “அவரின் இறுதி ஊர்வலத்திலும் 30 லட்சம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள் என்றால் அவர் தன்னுடைய கருத்தை மட்டிலும் காட்டினார் என்பதல்லாமல் இந்த நாட்டு மக்களையே ஓரளவுக்கு அவர் பண்படுத்தி விட்டார் என்பது தான் அதனுடைய கருத்தாகும். முடித்துக் கொள்ளுகிறேன்.’’

(6.2.1969 அன்று நடைபெற்ற அண்ணா இரங்கல் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை - நூல்: பெரியார் சிந்தனை திரட்டு.)

சேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள். அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள்தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே! அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்தானே அவர்கள் செய்தார்கள். மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப்பட்டது! மூவேந்தர்கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள் பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாக கொண்டு இருந்தனர்.

துணிந்து கைவைத்தது அண்ணா ஆட்சி

பறையன் பறையனாகவும், சக்கிலி சக்கிலியாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்தான் ஆட்சி பயன்பட்டது. தவிர மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்று பார்க்கப் பயன்படவே இல்லையே! முடியவில்லையே! தப்பித் தவறி ஒரு ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்தாலும் ஒழித்திருப்பார்களே! முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள் என்றாலும், அவர்களும், பழைய இராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், சம்பிரதாயம் _ இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான் ஆக்கி வைத்துக் கொண்டானே! வெள்ளைக்காரன் சில மாற்றங்களை செய்ய ஆரம்பத்தில் முன்வந்தான் என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டி சரிப்படுத்திக் கொண்டார்கள் அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான்? அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம் தானே இவற்றில் துணிந்து கைவைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறிவாளர் ஆட்சியாக உள்ளது.

- 1970 பம்பாய் சுற்று பயணத்தின்போது தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து...
(‘விடுதலை’ 12.4.1970)

- உண்மை இதழ், 1-15.9.18

நான் யார்?



*              என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச்சக்தி உண்டு என்று நம்புகிறவன்.  

                                                  (‘விடுதலை’, 9.3.1956)

*           எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிடர் சமுதாய நலனையே என் சொந்த நலமாக எண்ணி இருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன்.

                                                       (‘விடுதலை’, 15.1.1955)

*           எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்றுபட்டபடி நடவுங்கள் என்பதேயாகும்.  

(‘குடிஅரசு’ 24.11.1940)

          நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. 

                (‘விடுதலை’, 15.7.1968)

          எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.

(‘விடுதலை’, 8.9.1939)

*           எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லாதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை.

(‘விடுதலை’, 2.10.1967)

          நான் என் ஆயுள்வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன். 

    (‘விடுதலை’, 15.10.1967)

*           நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக்களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டுமென்றுதான் நான் தொண்டாற்றுகிறேன். ஆனதாலே நம் மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்களையும், நம் சமுதாய முன்னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக்கூடிய ஆட்சியாளரையும் சமுதாயத்தின் நலனைக் கருதியே ஆதரிக்கிறேன்.          

  (‘விடுதலை’, 18.7.1968)

*           எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த்துமே வந்திருக்கின்றேன். ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித்தது கிடையாது.

(‘விடுதலை’, 4.3.1968)

          என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன்.

                                                                    (‘குடிஅரசு’, 25.8.1940)

*           நான் நிரந்தரமாக ஒருத்தனை ஆதரித்து வயிறு வளர்க்க வேண்டுமென்கின்ற அவசியமில்லாதவன். எவன் நமக்கு நன்மை செய்கின்றானோ, நமது சமுதாய இழிவு  நீங்கப் பாடுபடுகின்றானோ அவன் அயல்நாட்டுக்காரனாக இருந்தாலும் சரி, அவனை ஆதரிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுபவன் நான்.

                                                                 (‘விடுதலை’, 20.1.1969)

*           தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக்கொடு என்றார் காந்தியார். அப்போதுநான், கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப்படுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல என்றேன்.

                                                 (‘விடுதலை’, 9.10.1957)

*           ஜாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல்ஜாதிக்காரன் மேல் துவேசம் என்றும், வகுப்புவாதம் என்றும் சொல்கிறான். நாங்கள் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு அக்கிரகாரத்துக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனருக்காவது தீங்கு விளைத்திருக்கிறோமா? ஜாதி இருக்கக்கூடாது என்று கூறினால் வகுப்புத் துவேசமா?                                                   

 (‘விடுதலை’, 25.10.1961)

*           இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.

                                                  (‘விடுதலை’, 4.11.1961)

          யாவரும் கடைசியில் சாகத்தான் செய்வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா? எனக்கு உயிர் வாழ்வதற்குச் சிறிதளவு பொருளிருந்தால் போதும். மற்றப் பொருளையெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன்.

  (‘விடுதலை’, 27.7.1958)

*           எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்தபோது என்னிடமிருந்த பணத்தை-சொத்தையெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால், இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். நீங்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும்-மருத்துவமனைக்கும் வழங்கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. எது பொது நன்மைக்கானது என்று பார்த்து, (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.          

 (‘விடுதலை’, 8.8.1968)

          நான் துறவி. துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார்கள். எனக்கு வேந்தன் மாத்திரம் துரும்பல்ல; கடவுளும் துரும்பு, வேத சாத்திரங்கள் துரும்பு, ஜாதி துரும்பு, அரசியலும் துரும்பு. துரும்பு மாத்திரமல்ல; அவைகளை, எல்லா யோக்கியக் குறைவையும் காய்ச்சிச் சுண்டவைத்துப் பிழிந்தெடுத்த சத்து என்று சொல்லுவேன்.

                                                                 (‘விடுதலை’, 15.10.1967)

*           எனக்கு 60 வயதுக்குமேல் ஆகியும் இளைஞர் சகவாசத்தாலேயே எனது உணர்ச்சி முதுமையை அடையவில்லை. ஏதாவது ஒரு காரியம் செய்யாமலிருக்க, எப்பொழுதும் மனம் வருவதில்லை. ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே நான் கருதுகிறேன்.

                                                                  (‘குடிஅரசு’, 19.1.1936)

*           மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.                                                             

  (‘குடிஅரசு’, 7.8.1938)

*           என் தொண்டெல்லாம் நம் மக்கள் உலக மக்களைப்போல் சரிசமமாக வாழவேண்டும்-அறிவிலே முன்னேற வேண்டும் என்பதற்குத்தான்.         

                                                                 (‘விடுதலை’, 24.7.1968)

- உண்மை இதழ், 16-30.9.18

திங்கள், 1 அக்டோபர், 2018

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இனமான தீ பறக்கும் அறிக்கை!

இது தந்தை பெரியார் மண்! திராவிடக் கோட்டை!
பெரியார் சிலையை எங்கள் தலையைக் கொடுத்தேனும் காப்போம்!
மூலகாரணமான எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?
சென்னை, அக்.1 தந்தை பெரியார் பிறந்த திராவிடக் கோட்டையான தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலையைத் தலை கொடுத்தேனும் காப்போம் என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதும், பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும் தான் சுயமரியாதை யையும், அதற்கான சமூக நீதியையும் வலியுறுத்துகின்ற திராவிட இயக்கம்.
ஜாதி - மதப் பாகுபாடுகளால் மனிதர்களை ஒடுக்குவது மட்டுமின்றி, ஆண் -பெண் என்ற பாலின பேதம் காட்டு வதையும் திராவிட இயக்கம் ஏற்பதில்லை. பெண்களுக் குரிய உரிமைகளை வழங்கி, பெண் விடுதலை வேண்டும் எனப் போராடியும், ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில், சொத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை அவர்களுக்கு வழங்கியும், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காகப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் சாதனை புரிந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
வடக்கே அம்பேத்கர் - தெற்கே தந்தை பெரியார்
அந்த வகையில்தான், சபரிமலை கோவிலில் பெண் களின் வழிபாட்டு உரிமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த நல்ல முற்போக்கான தீர்ப்பினைக் கொள்கைப் பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உங்களில் ஒரு வனாக - உங்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் தலைவனாக வரவேற்றுள்ளேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விதைத்த விதை, பேரறிஞர் அண்ணா வளர்த்த நாற்று, தலைவர் கலைஞர் காலமெல்லாம் பாதுகாத்து வளர்த்த மரம் - அதுதான் இன்றைக்கு இந்தியா முழுவதும் சமூக நீதியாக விழுது பரப்பி, ஒடுக்கப்படுகின்ற அனைவருக்கும் நிழல் கொடுக்கிறது. வடக்கே அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். தெற்கே தந்தை பெரியார் போராடினார். வள்ளலார், நாராயணகுரு என ஒவ்வொரு மாநிலத்திலும் சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைப் பரப்பினர். அவற்றின் ஒட்டுமொத்த விளைவுதான் உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கிற பாலின சமத்துவம் மிகுந்த தீர்ப்பு.
கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது ஆற்றிய உரையிலேயே, நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். அவரவர் நம்பிக்கையும், அதற்கான உரிமைகளும் காக்கப் படவேண்டும் எனப் போராடுவதே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாறு. அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராக வேண்டும் என்பதும், பெண்களுக்கு வழிபாட்டு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதும் அவரவர் நம்பிக்கையைக் காக்கின்ற செயல்பாடுகளே!
அனைத்து மதத்தினரும் அவரவருக்குரிய உரிமை களைப் பெற்று இணக்கமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமை சக்திகளுடன் கரம் கோர்த்துச் செயல்பட்டு வருகிறது. அதற்கு மாறாக, மதவெறியைத் தூண்டி, கலவர  நெருப்பைப் பற்ற வைத்து, அமைதியைக் குலைத்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய முடி யுமா என நினைக்கின்ற அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் புதிய வகை ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றன.
அனைத்து தமிழர்களாலும் மதம். - ஜாதி கடந்து போற்றப்படும் தலைவரான தந்தை பெரியாரின் சிலை களைக் குறி வைத்துத் தாக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பெரியாரின் பிறந்த நாளான செப் டம்பர் 17 அன்று சென்னையிலும், திருப்பூர் மாவட்டத் திலும் பெரியார் சிலையை அவமதிப்பு செய்த கயவர் கள்மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறைகூவல் விடுத்து அறிக்கை வெளியிட்டேன்.
ஆட்சியாளர்களின் அலட்சியம் தொடர்கின்ற காரணத் தால், கயமைத்தனம் ஊக்கம் பெற்று, கடந்த 24 ஆம் தேதி திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள பெரியார் சிலையின் கைத்தடி சேதப்படுத்தப்பட்டது. அதேநாளில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவராபட்டில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்ய நினைத்திருக்கிறார்கள்.  இதுமட்டுமல்ல, சேலம் மாவட் டத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையையும் சேதப்படுத்தி யுள்ளனர் மதவெறி தலைக்கேறிய மூடர்கள்.
மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்றவர்
தந்தை பெரியார்
‘‘மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு'' என்ற தந்தை பெரியார் அவர்கள் தன்மானத்தை வலியுறுத்தினார். அந்த தன்மானத்தை விட இனமானம் பெரிது என்றார் அவர். இந்த இனம் தலைநிமிர்ந்து வாழ சொல்லடியும், கல்லடியும் ஏற்று ஓயாது உழைத்து, இனத்தின் மானம் காத்தவர். கடலூரில் எந்த இடத்தில் தன் மீது செருப்பு வீசப்பட்டதோ அங்கேயே சில ஆண்டுகள் கழித்து அவ ருக்கு, அவர் முன்னிலையிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களால் சிலை திறந்து வைக்கப்பட்ட புரட்சி வரலாற்றுக்குச் சொந்தக்காரர். உயிருடன் இருந்த போதே அவரை ஒன்றும் செய்ய முடியாத செருப்புகளால், வரலாறாய் உயர்ந்து நிற்கும் பெரியாரை என்ன செய்துவிட முடியும்?
எச்.ராஜா விதைத்த நச்சு விதை!
இதையறியாத சில மூடர்கள் தொடர்ச்சியாகப் பெரியார் சிலைகளை அவமதிப்பு செய்யும் வேலைகளில் இறங்கி, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க நினைக் கின்றனர். குறிப்பாக திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலை பா.ஜ.க. ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டபோது; அதுபோலவே தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா விதைத்த விஷ விதைக்குப் பிறகே, இந்த நச்சுக் கலாச்சாரம் பற்றிப் பரவத் தொடங்கியிருக்கிறது. அந்த எச்.ராஜாவின் நிழலுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக் கும் தமிழக காவல்துறையின் போக்கினால், தமிழ்நாட்டை வன்முறைக்காடாக மாற்ற மாநில ஆட்சியாளர்கள் மறைமுகமாகத் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் தாளத்திற்கேற்ப ஆடும் ஊழலில் புழுத்த அ.தி.மு.க. ஆட்சி, ‘ரிமோட் கண்ட்ரோலில்’ இயங்கும் பொம்மை கார் போல முன்னும் பின்னுமாகப் போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் குட்டிச்சுவரில் போய் முட்டிக்கொள்ளும் என்ற நிலையில், அதற்கு முன்பாகத் தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விடுமோ என்ற அச்சம் மக்களின் மனதில் எழுந்துள்ளது.
கமிஷன் + கலெக்ஷன் + கரப்சன் =
அ.தி.மு.க. ஆட்சி!
கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன் என கொள்ளையையே கொள்கையாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. ஆட்சி, மத்திய பா.ஜ.க. அரசிடம் மண்டியிட்டு அது சொல்வதற்கேற்ப, முக்கிய பிரச்சினைகளைத் திசை திருப்பிக் கொண்டி ருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஈழப் பிரச்சினை தொடர்பாக தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் எதிராக அ.தி.மு.க. நடத்திய கவர்ச்சி நடன கேலிக்கூத்துப் பொதுக் கூட்டம் அந்த திசை திருப்பலுக்கு ஒரு சான்று. ராஜபக்சே ஏதோ சொல்லிவிட்டார் என்று எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டம் நடத்திய அருவருப்பான அதிசயத்தை அ.தி.மு.க அரங்கேற்றி முடித்த நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா அமெரிக்காவில் ராஜபக்சேவுக்கு நேரெதிரான மற்றொரு அவதூறு கருத்தை தெரிவித்திருக்கிறார். இலங்கை நாட்டின் அரசியலில் இருவருக்கும் நடக்கும் அதிகாரப் போட்டியில் அவர்கள் உளறிக் கொட்டுவதை இங்கே உள்ள அதிமேதாவித்தனமான அ.தி.மு.க.வினர் தங்கள் எஜமானரான பா.ஜ.க. தலை வர்கள் சொல்லுக்கேற்ப அரசியல் செய்து அதிலாவது ஆதாயம் தேடலாம் என நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.
‘‘தலையைக் கொடுத்தேனும்
பெரியார் சிலையைக் காப்போம்!''
பா.ஜ.க.வின் மதவெறி முகத்தையும், அ.தி.மு.க. ஆட்சியின் அடிமைத் தனத்தையும் தமிழக மக்கள் முழு மையாக உணர்ந்துள்ளனர். மக்கள் நலனுக்காகப் போராடு பவர்கள் மீதும், பொதுக்கூட்டங்களில் பேசுகின்றவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, நீதிமன்றத்தையும், காவல் துறையையும் இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாடே கேட்கிறது. மனசாட்சி கொண்ட அ.தி.மு.க. தொண்டர்களும் கேட் கிறார்கள். பா.ஜ.க.வின் பின்னணியில் எச்.ராஜாவின் திட்டமிட்ட வன்முறைச் செயல்களின் விளைவுதான், தந்தை பெரியார் சிலைகள் மீது வைக்கப்படும் குறி. அதனைக் கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால், தி.மு.கழகம் பொறுத்துக் கொண் டிருக்காது. ஏனெனில், இது பெரியார் மண்; திராவிடக் கோட்டை. இங்கே அமைதியைக் குலைக்கும் வெறியுடன் குரோத வால்கள் ஆடினால் கொள்கை வாள்கள் உயரும். பெரியாரின் இலட்சியப் புகழ் காக்க, எங்கள் தலையைக் கொடுத்தேனும் அவரது சிலையைக் காப்போம்.
அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சி யாளர்கள் ஏன் செயல்படாமல் இருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அதனை இன்னும் உரக்க விளக் கிடத்தான் அக்டோபர் 3, 4 ஆகிய இரு நாட்களும் தமிழ் நாடு முழுவதும் 120 இடங்களில் தி.மு.கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எடப்பாடி பழனி சாமியும் அவரது தலைமையிலான கொள்ளைக் கூட்டமும் செய்யும் தகிடுதத்தங்களையும், அதனால் தமிழ்நாடு அடைகின்ற கடும் பாதிப்பையும் விளக்கிட கழகம் களம் இறங்குகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை, - பேரறிஞர் அண்ணாவின் இலட்சியங்களை, - தலைவர் கலைஞரின் கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்திட உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்று திரண்டிடுக!  என உங்களில் ஒருவனாக, இருகரம் கூப்பி அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்!
- இவ்வாறு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விடுதலை நாளேடு, 1.10.18